Print Version|Feedback
Rent by crisis, German government adopts far-right refugee policy
நெருக்கடியை பயன்படுத்தி, ஜேர்மன் அரசாங்கம் அதிவலதுகளின் அகதிகள் கொள்கையை ஏற்கிறது
By Johannes Stern
19 June 2018
பேர்லினில் நிலவும் அரசாங்க நெருக்கடி குறித்து, திங்களன்று மாலை, ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்க்கெலும் (CDU), உள்துறை மந்திரி ஹோர்ஸ்ட் சீஹோவரும் (CSU) இரண்டு தனி பத்திரிகையாளர் மாநாடுகளை நடத்தினர். இரண்டு ஒன்றியக் கட்சி தலைவர்களின் அறிக்கைகளும், CDU மற்றும் CSU இடையேயான அகதிகள் கொள்கையில் எந்தவித அடிப்படை வேறுபாடுகளும் இல்லை என்பதை தெளிவுபடுத்தின. ஆனால் ஒட்டுமொத்த பெரும் கூட்டணி அரசாங்கமும் அதிவலது AfD இனது கொள்கைகளை ஏற்றுக்கொண்டிருக்கிறது.
மேர்க்கெல், அகதிகள் பிரச்சினைக்கான அவரது “ஐரோப்பிய தீர்வு” என்றழைக்கப்படுவது சீஹோவரின் “தேசிய தீர்வின்” அதே இலக்கையே முக்கியமாக பின்பற்றுவதாக பேர்லினில் செய்தியாளர்களுக்கு உறுதியளித்தார். நமது நாட்டிற்குள் புலம்பெயர்வை சிறந்த முறையில் ஒழுங்கமைக்கவும் கட்டுபடுத்தவும், மற்றும் இங்கு வந்து சேரும் மக்களின் எண்ணிக்கையை கணிசமான அளவு குறைக்கவும் CDU மற்றும் CSU இரண்டும் பொதுவான இலக்கையே கொண்டுள்ளன என்பதை நாம் நம்புகிறோம், எனவே 2015 போன்ற நிலைமை மீண்டும் ஏற்படாது அல்லது ஏற்பட முடியாது,” என்றும் விளக்கினார்.
அடுத்து சீஹோவரின், “புலம்பெயர்வு குறித்த முக்கிய திட்டத்தை” அவரது கட்சியும் ஆதரித்ததாக மேர்க்கெல் அறிவித்தார். மேலும், இந்த பிற்போக்குத்தன மற்றும் வெளிநாட்டவருக்கு எதிரான திட்டம் பற்றிய கூடுதல் விபரங்கள் நேற்று தெரிய வந்தன. உண்மையில் அகதிகளை பெருமளவில் வெளியேற்றுவதற்கான பாரிய முகாம்களான இந்த “நங்கூர மையங்கள்” என்று அழைக்கப்படுவதை கட்டுவதற்கு மேலதிகமாக அகதிகளுக்கு வழங்கப்படும் பண நலன்கள் கூர்மையாக வெட்டப்பட்டு, அதற்கு பதிலாக உணவுப்பொருட்கள் வழங்கப்பட உள்ளது, மேலும் சமூக உதவி நலன்கள் பெறும் தகுதிக்காக காத்திருக்கும் காலம் 15 லிருந்து 36 மாதங்களாக நீட்டிக்கப்படவுள்ளது. அதுவரையிலான காலகட்டத்தில் புகலிடம் கோருவோருக்கு வெறும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே உதவி செய்யப்படும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்றொரு நாட்டில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள அகதிகளை எதிர்காலத்தில் ஜேர்மன் எல்லையில் கூட்டரசு காவல் துறையினரால் நேரடியாக தடுத்து நிறுத்துவதற்கு சீஹோவர் விடுத்த அழைப்பை மேர்க்கெல் நிராகரிக்கவில்லை. “தேவைப்பட்டால், சீஹோவரின் திட்டத்தை அமல்படுத்துவதற்கான ஒரு கொள்கையை நீங்களும் ஆதரிப்பீர்களா?” என்று ஒரு நிருபர் கேட்டபோது, அவர், “இவ்வாறிருந்தால் எவ்வாறாக இருக்கும் என்ற கேள்விக்கும் நான் பதிலளிக்க மாட்டேன்” என்று அற்பத்தனமாக விடையிறுத்தார். ஆனால், “ஜூலை முதல் தேதியில் நாங்கள் மீண்டும் சந்திப்போம், அதற்கு பின்னரே என்ன நடக்கும் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல முடியும்” என்றும் தெரிவித்தார்.
சீஹோவர் உடனான மேர்க்கெலின் உடன்பாடு அதன் “ஐரோப்பிய தீர்வை” எட்டுவதற்கான காலக்கெடுவான 14 நாட்கள் என்பது ஜூன் மாத இறுதியில் ஐரோப்பிய கவுன்சில் கூட்டத்திற்கு பின்னர் காலாவதியாகிவிடும். ஏனைய ஐரோப்பிய அரசாங்கங்கள் உடனான இருதரப்பு உடன்படிக்கைகள் மூலமாக, மற்றொரு நாட்டில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள அகதிகள் ஜேர்மனிக்கு பயணம் செய்வதிலிருந்து தடுக்கப்பட்டுவதை உறுதி செய்ய மேர்க்கெல் நோக்கம் கொண்டுள்ளார்.
ஒரு மாதிரிக்காக, செய்தியாளர் மாநாட்டில் துருக்கி உடன் எட்டப்பட்ட பேர்லினின் அகதிகள் உடன்படிக்கை பற்றி அவர் குறிப்பிட்டார். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியம் சார்பாக அங்காராவுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஜேர்மன் அரசாங்கம் ஏற்படுத்திக் கொண்ட இந்த இழிவான உடன்பாடு, சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற போர் மண்டலங்களில் இருந்து ஐரோப்பாவிற்குள் அகதிகள் நுழையவில்லை என்பதை உறுதி செய்ய எர்டோகான் ஆட்சியை கடமைப்படுத்துகிறது. மேர்க்கெல் இப்போது, கிரேக்கம் மற்றும் இத்தாலி போன்ற “மூல நாடுகள்” உடனான அதேபோன்ற உடன்பாட்டை எட்டுவதற்கு முனைந்து வருகிறார். நேற்று இரவு, மேர்க்கெல் இத்தாலிய பிரதம மந்திரி ஜியுசெப்ப கொன்ட உடன் பேச்சுவார்த்தை நடத்தினார், இவரது வலதுசாரி உள்துறை மந்திரி மத்தேயோ சல்வீனி நாட்டிலிருந்து “ஒட்டுமொத்த 600,000” புலம்பெயர்ந்தவர்களையும் நாடுகடத்த திட்டங்களை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சீஹோவரின் போக்கு ஒரு பரந்த ஐரோப்பிய சங்கிலித் தொடரான பிரதிபலிப்பை தூண்டக்கூடும் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முறிவை விரைவுபடுத்தக்கூடும் என்றும் அச்சமடைந்து மேர்க்கெல் அவரது “இருதரப்பு” அகதிகள் மூலோபாயத்தை வலியுறுத்துகிறார். மேலும் மேர்க்கெல், “டப்ளின் ஒழுங்குமுறைப்படி, கேள்விக்குறியாக உள்ள அவர்களது நாடுகள் உடனான உடன்பாட்டின் பேரில் முதலில் பதிவு செய்யப்பட்டு ஏற்கனவே அந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்ட அகதிகள் திரும்பவருவதை நீண்டகாலத்திற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்றும் சேர்த்துக் கூறினார்.
ஆனால், “எங்களது ஐரோப்பிய அண்டை நாடுகள் உடனான நல்ல கூட்டணியில் புலம்பெயர்வு குறித்த ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் அடைவது ஜேர்மன் நலன்களுக்காகும். எனவே, ஐரோப்பிய இதய ஸ்தானத்தில் இருக்கும் எங்கள் நாட்டின் எல்லையில் ஒருங்கிணைக்கப்படாத நிராகரிப்பு என்பது எதிர்மறையான தொடர் விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்பதோடு, ஜேர்மனிக்கும் கேடு விளைவிக்கும், மேலும் இறுதியில் ஐரோப்பிய தீர்வு பற்றிய கேள்விகளுக்கு இட்டுச்செல்லும் என்பதை நாங்கள் நம்புகிறோம்” என்றும் அவர் தெரிவித்தார்.
பெரும் கூட்டணியை தகர்க்கப் போவதாக அச்சுறுத்துவதன் மூலம் சீஹோவர், மேர்க்கெல் வலதை நோக்கி பாரியளவில் திரும்புதற்கான நிலைமைகளை உருவாக்கினார் என்பதுடன், அவரது “பெரும் திட்டத்தின்” “63 விடயங்களில் 62½ விடயங்களுக்கு” CDU தற்போது ஆதரவளிப்பதாக பெருமையடித்துக் கொண்டார்.
அவரும் கூட “ஐரோப்பிய தீர்வுக்காக” காத்திருப்பதாக கூறினார். மேலும், “இருதரப்பு உடன்படிக்கைளுக்காக சான்சலர் மேற்கொண்ட முயற்சிகளுக்கும்” மற்றும் “ஆஸ்திரியாவின் எதிர்கால தலைமைக்கான முயற்சிகளுக்கும்” அவரது ஆதரவை வெளிப்படுத்தினார். “ஐரோப்பிய மட்டத்திலோ அல்லது இருதரப்பு உடன்படிக்கைகள் மூலமாகவோ, அகதிகளை எல்லையில் நிராகரிப்பதனால் அடையக்கூடிய அதே விளைவை அடைய முடியும், அப்போது இது பற்றி நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.” ஆனால், ஒருவேளை இது வெற்றி பெறவில்லை என்றால், “எல்லையிலேயே உடனடியாக நிராகரிப்பது சாத்தியப்பட வேண்டும் என்ற நமது நிலைப்பாட்டில் CSU உறுதியாக இருக்கும்.”
மேர்க்கெல் மற்றும் சீஹோவர் இடையேயான மோதலில், அகதிகள் கொள்கையில் உள்ள வேறுபட்ட மூலோபாயங்களை விட அதிகமாக விடயங்கள் உள்ளன. கடந்த வாரம் நிகழ்ந்த ஜி7 உச்சிமாநாட்டின் முறிவு மற்றும் அமெரிக்காவுடன் வளர்ந்து வரும் வர்த்தகப் போர் இவற்றைத் தொடர்ந்து, ஐரோப்பாவில் அதன் மேலாதிக்க பாத்திரத்தை சிறந்த முறையில் செயல்படுத்தவும், மற்றும் சர்வதேச அளவில் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் புவிசார் மற்றும் பொருளாதார நலன்களை பின்பற்றவும் ஆளும் வர்க்கம் வழிகளைத் தேடுகிறது.
Frankfurter Allgemeine Zeitung இன் திங்கட்கிழமை பதிப்பில் விருந்தினர் பங்களிப்பில், சீஹோவர் தானே இதை தெளிவுபடுத்தினார். “ஏற்கனவே உள்ள ஒழுங்கை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம் மேலும் நேசிக்கிறோம், தற்போது அது முடிவுக்கு வருவதுடன் ஒரு புதிய ஒழுங்கை உருவாக்குகிறது,” என்று அவர் விளக்கமளித்தார். பின்னர் அவர், வலதுசாரி பழமைவாத வரலாற்றாசிரியரும் மற்றும் பத்திரிகையாளருமான மைக்கேல் ஸ்ரூமர் என்பவரை மேற்கோள் காட்டி, இதை அறிவித்தார்: “அமெரிக்காவின் நூற்றாண்டு இன்னும் நிறைவடையவில்லை, சீனாவின் நூற்றாண்டு இன்னும் தொடங்கப்படவில்லை. இச்சூழ்நிலையில் ஒரு இடைவெளி ஏற்படுகின்றது. இத்தகைய நேரங்கள் முழு அளவில் அபாயம், சூழ்ச்சி மற்றும் மோதல் நிறைந்தவையாக உள்ளன என்பதையே அனைத்து அனுபவங்களும் காட்டுகின்றன. அதிகாரத்தின் ஒரு பொருத்தமான சிநேகிதபூர்வமான அதிகார மாற்றம் என்பது உலக வரலாற்றில் ஒரு புதுமையாக இருக்கும்.”
ஒரு “புதிய ஒழுங்கை” தயார் செய்வதில், இத்தாலி, ஆஸ்திரியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் தீவிர வலதுசாரி அரசாங்கங்களுடன் நெருக்கமாக இயங்க சீஹோவர் விரும்புகின்ற அதே வேளையில், மேர்க்கெலும் CDU இன் பெரும் பகுதியும், பிரான்ஸ் உடனான நெருக்கமான ஒத்துழைப்புக்கு ஆதரவாக உள்ளன. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிரான ஒரு இராணுவ அணியாக ஐரோப்பிய ஒன்றியத்தை மாற்றுவதே அவர்களது குறிக்கோளாகும்.
ஜி7 உச்சிமாநாடு முறிவுற்று சில மணி நேரங்களில் ஒரு தொலைக்காட்சி உரையாடலில் பேசிய போது, மேர்க்கெல், “பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் முன்மொழிந்த தலையீட்டு படைக்கு” ஆதரவளிப்பதாக தெரிவித்தார். “முக்கியமான கேள்வி” என்னவென்றால்: “ஐரோப்பிய ஒன்றியம் ஒரு கூட்டு வெளியுறவுக் கொள்கையை ஆதரிக்க முடியுமா? அல்லது ஏதோவொரு ஐரோப்பிய நாடு அமெரிக்கா உடனான, சீனா உடனான மற்றும் ஒருவேளை மற்றொரு நாடு மூன்றாவது நாடு உடனான ஏதோவொரு விவாதத்தில் எப்போதும் பங்கேற்க முடியுமா?” “விசுவாசத்திற்கு கட்டுப்பட்ட ஒரு வலுவான துருவமாக” மாறுவதற்கு ஐரோப்பா தவறுமானால், “சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா போன்ற மிக வலுவான துருவங்கள் உள்ள இந்த உலகில் அது நசுக்கப்பட்டுவிடும்,” என்றும் சேர்த்துக் கூறினார்.
கடந்த சில நாட்களாக, அரசியலிலும் வர்த்தகத்திலும் மற்றும் செய்தி ஊடகங்களிலும் செல்வாக்கு மிக்க குரல்கள், ஜேர்மனியின் பெரும் வல்லரசாகும் அபிலாஷைகளை பாதிப்படையச் செய்யும் அரசாங்க நெருக்கடியை தூண்டிவிடக் கூடாதென CDU மற்றும் CSU களை எச்சரித்து வருகின்றன. Tagesspiegel க்கு கருத்து தெரிவிக்கையில், முன்னாள் சமூக ஜனநாயக வெளியுறவு அமைச்சர் சிக்மார் காப்ரியல், சீஹோவரின் நிலைப்பாட்டை தான் விளங்கிக்கொண்டிருப்பதாக வெளிப்படுத்தினார், ஆனால், “எதிர் கட்சிகள் போல நடந்துகொள்வதற்கு" ஒன்றிய கட்சிகளை எச்சரித்தார். “ஐரோப்பா ஒரு பெரும் நெருக்கடிக்கு மத்தியில் உள்ள நிலையிலும், மற்றும் முன்னெப்போதும் இல்லாத சவால்களை எதிர்கொள்ளும் நிலையிலும், ஜேர்மனியை ஒரு அரசாங்க நெருக்கடிக்குள் இட்டு செல்வதில் நம்பமுடியாத அளவிற்கு பொறுப்பற்றதாக” இது உள்ளது […] மேற்கு உலகின் முடிவு நாம் இதுவரை அறிந்ததே…. மேலும் புதிய சக்திகள் பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ ரீதிகளில் நம்முடன் சவால் செய்கின்றன.”
இடது கட்சி மற்றும் பசுமைக் கட்சி அதிகாரிகளும் கூட இதேபோன்ற முறையில் தங்களை வெளிப்படுத்தினர். “நாங்கள் இதுவரை அனுபவிக்கவில்லை என்பது ஒரு வகையான பொறுப்பற்ற தன்மையாக உள்ளது,” என்று பசுமைக் கட்சி தலைவர் ரோபர்ட் ஹாபெக் கூறினார். தங்களது சொந்த நலன்களுக்காக ஒரு கட்சி நாட்டையும், அதனால் ஐரோப்பாவில் ஸ்திரப்பாட்டையும் தனது விளையாட்டுப் பொருளாக்குகின்றது. இது கூட்டாட்சி அரசாங்கத்தின் செயல்படும் திறனை குறைத்து மதிப்பிடுகிறது” மற்றும், “ஜேர்மன் அரசியலின் பெரும் பலவீனமாகவும் இது உள்ளது.” இடது கட்சித் தலைவரான டீட்மார் பார்ட்ஸ், CSU இல் உள்ள “குழப்பம்” பற்றி புலம்பினார். அனைத்தையும் சேர்த்து பார்க்காமல், “பவேரியாவில், தங்கள் தேர்தல் குறிக்கோள்களை மட்டுமே, CSU நினைத்துப் பார்ப்பது என்பது மிகவும் மோசமான” ஒன்றாக இருந்தது.
பெரும் கூட்டணியின் வலதுசாரி தாக்குதல்களை இடது நிலைப்பாட்டில் இருந்து எதிர்க்கும் மற்றும் இராணுவவாதம், அகதிகளுக்கு எதிரான தேசியவாதம், ஜனநாயக உரிமைகள் மற்றும் சிக்கன நடவடிக்கைகள் குறித்த கொள்கைகளுக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே வளர்ந்து வரும் எதிர்ப்பை அரசியல் ரீதியாக அபிவிருத்தி செய்யும், ஒரே கட்சியாக Sozialistische Gleichheitspartei (சோசலிச சமத்துவக் கட்சி) மட்டுமே உள்ளது. கடந்த நூற்றாண்டில், ஐரோப்பாவை மூழ்கடித்த மற்றும் இரண்டு கொடூரமான உலகப் போர்களுக்கு உலகை இட்டுச் சென்ற முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்திற்கு அவசியமான பதில் என்பது, ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு சக்திவாய்ந்த இயக்கத்தை கட்டியெழுப்புவதாகும்.