Print Version|Feedback
Merkel calls for EU militarism, financial austerity in reply to Macron
மக்ரோனுக்கு பதிலளிக்கையில் மேர்க்கெல் ஐரோப்பிய ஒன்றியத்தின் இராணுவமயமாக்கத்துக்கும், நிதி வெட்டுக்களுக்கும் அழைப்பு விடுக்கிறார்
By Alex Lantier
6 June 2018
ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் ஞாயிறன்று Frankfurter Allgemeine Zeitung (FAZ) பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், கடந்த செப்டம்பரில் பாரீசின் சோர்போன் பல்கலைக்கழகத்தில் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் பேசிய ஒர் உரையில் முன்மொழிந்த ஐரோப்பிய ஒன்றியத்திற்கான முன்மொழிவுகளுக்கு பதிலளித்தார். இந்த முன்மொழிவுகள் இம்மாதம் இறுதியில் புரூசெல்ஸ் ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன.
ஜேர்மனியின் பிரதான முதலாளித்துவ கட்சிகள் எவ்வாறு அரசாங்கம் அமைப்பது என பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்ததால், அந்த உரைக்குப் பின்னர் அரை ஆண்டுகளாக, பேர்லின் பதிலளிக்காமல் இருந்தது. இதற்கிடையே, ஐரோப்பிய ஒன்றியத்தின் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை வாஷிங்டன் சாத்தியமானளவுக்கு பேரழிவுகரமான வர்த்தக போரைக் கொண்டும், ஈரான் அணுசக்தி உடன்படிக்கையைக் கைவிட்டு மத்திய கிழக்கு எங்கிலும் முற்றுமுதலான போரைக் கொண்டும் மட்டும் அச்சுறுத்திக் கொண்டிருக்கவில்லை, மாறாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உடைவை அது தீவிரப்படுத்தி கொண்டிருக்கிறது. பிரிட்டன் வெளியேற்றத்தின் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரமான இத்தாலியில் யூரோவுக்கு விரோதமான ஒரு அதிவலது அரசாங்கம் பதவியேற்றுள்ளது.
அதேநேரத்தில், பிரான்சில் மக்ரோனின் வெட்டுக்களுக்கு எதிரான பாரிய போராட்டங்கள், ஐரோப்பா எங்கிலும் விமானச்சேவை நிறுவனங்களிலும், அத்துடன் அமெரிக்க வர்த்தக தீர்வைகளால் அச்சுறுத்தப்பட்டிருக்கும் உலோக தொழிற்துறை மற்றும் வாகனத் துறைகளிலும் சம்பள குறைப்புகளுக்கு எதிரான வேலைநிறுத்தங்கள் ஆகியவற்றுடன், ஐரோப்பா எங்கிலும் போராட்டங்களும் வேலைநிறுத்தங்களும் தீவிரமடைந்து வருகின்றன.
இவ்விதத்தில், மேர்க்கெலின் FAZ பேட்டியினூடாக, அவ்விரு மிகப்பெரிய ஐரோப்பிய ஒன்றிய சக்திகளும் 1992 இல் ஐரோப்பிய ஒன்றியம் ஸ்தாபிக்கப்பட்டதற்குப் பின்னர் ஏற்படக்கூடிய மிகப்பெரிய பொருளாதார அதிர்வுகள், வர்க்க போராட்டங்கள் மற்றும் போர்களின் ஒருங்கலந்த கலவைக்கான ஒரு விடையிறுப்பில் ஒருமித்து செயல்பட முயன்று வருகின்றன. ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் அரசியல்ரீதியாக திவாலாகிப் போயுள்ளது. புதிய இராணுவ செலவுகளுக்கும் மற்றும் பழிதீர்க்கும் புலம்பெயர்வோர்-விரோத கொள்கைகளுக்கும் நூறு பில்லியன் கணக்கான யூரோக்களுக்கு அழைப்புவிடுத்த மக்ரோனின் அழைப்பை மேர்க்கெல் ஆதரித்தாலும், 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பின்னர், கிரேக்க இறையாண்மை கடன் நெருக்கடியில் பத்தாண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தினுள் வெடித்த கடுமையான மோதல்களை அவர் தீர்த்துவிடவில்லை.
சோர்போனில், மக்ரோன் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஒரு பொதுவான இராணுவ வரவு-செலவு திட்டக்கணக்கை, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஓர் இராணுவ தலையீட்டு படையை, யூரோ மண்டல இறையாண்மை கடன் நெருக்கடிகளுக்கான ஒரு பொதுவான ஐரோப்பிய நாணய நிதியத்தை (EMF) மற்றும் நூற்றுக் கணக்கான பில்லியன் யூரோ மதிப்பில் ஒரு பொதுவான ஐரோப்பிய முதலீட்டு நிதியத்தை முன்மொழிந்தார்.
மேர்க்கெல் ஓர் இராணுவ கட்டமைப்பிற்கான மக்ரோனின் அழைப்புகளை ஆதரித்தார்: “ஒரு தலையீட்டு படைப்பிரிவுக்கான ஜனாதிபதி மக்ரோனின் முன்மொழிவை நான் ஆதரிக்கிறேன். ஆனால், அதுபோன்றவொரு ஒரு தலையீட்டு படையானது, ஒரு பொதுவான இராணுவ-மூலோபாய கலாச்சாரத்துடன் இராணுவ கூட்டுறவு கட்டமைப்புடன் பொருந்தியதாக இருக்க வேண்டும்,” என்றார். வெளிநாட்டு கொள்கைகள் மீது, குறிப்பாக போர் குறித்து முடிவெடுப்பதில், அதிகளவில் "ஐரோப்பிய ஒருமித்த செயல்முறைக்கு" அவர் அழைப்புவிடுத்தார்.
எவ்வாறிருப்பினும் பாரீஸ் வாஷிங்டனிடம் இருந்து விலகி பேர்லினை நோக்கி மறுநோக்குநிலை கொள்ள வேண்டும் என்பதையே இது அர்த்தப்படுத்தும் என மேர்க்கெல் சமிக்ஞை செய்தார். 2011 இல் லிபியாவில் போருக்குச் செல்வதில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனுடன் இணைவதென்று பிரான்ஸ் எடுத்த முடிவை, அவர் அரசாங்கம் அவ்வாறு செய்யவில்லை என்பதால், விமர்சித்து மேர்க்கெல் கூறினார்: “லிபியாவில் 2011 தலையீட்டிலும், சிரியா மீதான தாக்குதல்களின் போது அந்நேரத்திலும், பிரான்ஸ் அதன் நெருங்கிய பங்காளிகளை விட பிரிட்டிஷ்காரர்களையும் அமெரிக்கர்களையும் கையாள முன்னுரிமை அளித்தது. அதுதான் தலையீடுகள் செய்வதற்கான பிரான்சின் கலாச்சாரமாக இருப்பதாக தெரிகிறது. ஆனால் நெருங்கிய பங்காளிகளுடன் நீங்கள் இணைந்து செயல்பட விரும்பினால், நீங்கள் ஒருங்கிணைந்து முடிவெடுக்க வேண்டும்,” என்றார்.
மேர்க்கெல் மக்ரோனின் புலம்பெயர்வோர் மீதான கொள்கையை ஆதரித்தார். தஞ்சம் கோருவதற்கான நடைமுறைகளில் போலிஸ் க்கு நடைமுறையளவில் வீட்டோ தடுப்பதிகாரங்கள் வழங்கி மக்ரோன் ஒரு கடுமையான தஞ்சம் கோரும் சட்டத்தை நிறைவேற்றியவர் என்பதுடன், ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஒரு பொதுவான அகதிகள் கொள்கை மற்றும் புலம்பெயர்வு ஆணையத்திற்கு அழைப்புவிடுத்தவராவார். மேர்க்கெல் தெரிவித்தார், “நமக்கு பொதுவான ஒரு தஞ்சம் கோரும் முறை வேண்டும், யாருக்கு தஞ்சம் வழங்கப்படுகிறது, யாருக்கு வழங்கப்படவில்லை என்று முடிவெடுப்பதில் அதேபோன்ற விதிமுறைகளும் வேண்டும்,” என்றார்.
மத்தியதரைக்கடலில் ஆயிரக் கணக்கான அகதிகள் நீரில் மூழ்கி இறப்பதற்கு காரணமாக உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் ஃப்ரொன்டெக்ஸ் எல்லை போலிஸை மீளப்பலப்படுத்த மேர்க்கெல் அழைப்புவிடுத்தார்: “ஐரோப்பிய ஒன்றிய எல்லை பாதுகாப்பு முகமை ஃப்ரொன்டெக்ஸ், ஐரோப்பிய அளவிலான வல்லரசுகளுடன் ஒரு இடைப்பட்ட காலத்திற்குள் நிஜமான ஐரோப்பிய எல்லை போலிஸாக ஆக முடியும். இதன் அர்த்தம், ஐரோப்பிய எல்லை போலிஸ் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளி எல்லைகளில் சுதந்திரமாக செயல்படும் உரிமை பெற்றிருக்கும்,” என்றார்.
எவ்வாறிருப்பினும் மக்ரோனின் நிதி சார்ந்த கோரிக்கைகள் மீது, மேர்க்கெல் மிகவும் குறைவாகவே பேசினார். “பத்து பில்லியன் கணக்கான" யூரோக்களை —இது மக்ரோன் விரும்பியதைக் காட்டிலும் 10 மடங்கிலும் குறைவு— கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் ஒரு ஐரோப்பிய முதலீட்டு நிதியத்திற்கு அப்பெண்மணி முன்மொழிந்தார்.
அவர் அமெரிக்கா-தலைமையில் இருக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) ஒரு மாற்றீடாக ஐரோப்பிய நாணய நிதியத்தைக் (EMF) கட்டமைப்பதற்கான அழைப்பை ஆதரித்தார்: “ஒரு வெற்றிகரமான பொருளாதாரத்தை எட்ட, நாம் யூரோவை ஸ்திரப்படுத்த வேண்டும். நாம் கொண்டிருக்கும் தற்போதைய அமைப்பு வடிவங்கள் எமக்கு இன்னும் போதுமானதாக இல்லை, ஆகவே நமக்கு ஒரு வங்கி ஆணையம் மற்றும் மூலதன சந்தை ஆணையம் அவசியம். சர்வதேச நாணய நிதியத்திலிருந்து நம்மைநாமே குறிப்பிடத்தக்களவில் அதிகமாக சுதந்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்றார்.
ஜேர்மன் நாடாளுமன்றம் வீட்டோ தடுப்பதிகாரத்திற்கான அதன் உரிமையை தக்க வைத்திருக்க வேண்டும் என்றும், 2009-2015 இல் கிரேக்க கடன் நெருக்கடியின் போது முன்மொழியப்பட்ட EMF வங்கி பிணையெடுப்புகளுக்காக கூடுதல் சிக்கன நடவடிக்கைகளைத் திணிக்க வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். “தேசிய நாடாளுமன்றங்களுக்கான அதன் உரிமைகளுடன், நாடுகளுக்கு இடையிலான அடிப்படையில் EMF ஒழுங்கமைக்கப்பட்டிருக்க வேண்டும்,” என்று மேர்க்கெல் தெரிவித்தார்.
மக்ரோனின் முன்மொழிவுகள் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் கட்டமைப்பை மாற்றியமைக்கும் என்று மக்ரோனின் ஆதரவாளர்களிடையே என்னென்ன நப்பாசைகள் நிலவியதோ, மேர்க்கெலின் பதில்களால் அவை கலைந்து போயின. வோல் ஸ்ட்ரீட் பொறிவு மற்றும் கிரேக்க கடன் நெருக்கடியின் வெடிப்புக்கு பத்தாண்டுகளுக்குப் பின்னர், உள்நாட்டில் ஆழமாக சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களையும், வெளிநாடுகளில் இராணுவவாதத்தையும் தவிர முன்மொழிவதற்கு அதனிடம் வேறெதுவும் இல்லை.
அனைத்திற்கும் மேலாக ஐரோப்பிய தொழிலாளர்களின் நிலைப்பாட்டிலிருந்து பார்க்கையில், மக்ரோனின் பொருளாதார முன்மொழிவுகள் பேர்லின் கட்டளையிடும் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஒரு மாற்றீடு அல்ல. அவை முக்கிய துறைகளில் விருப்பமான புதிய தொழில்கள் தொடங்குவதற்கும் பலவீனமான ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரங்கள் ஜேர்மனியுடன் அதிகமாக போட்டியிடுமாறு செய்யவும், முதலீடுகளுக்கு நிதி வழங்க அதீதளவில் இலகுவான ஐரோப்பிய நாணய கொள்கையைப் பயன்படுத்துவதற்கான ஒரு முயற்சிக்கு ஒத்திருந்தது. அது ஆழ்ந்த சிக்கன நடவடிக்கைகளை எதிர்நோக்குகிறது.
பிரான்சில், மக்ரோன் சம்பளங்களையும், பொதுத்துறையில் பணியாளர்களின் எண்ணிக்கையையும் குறைத்து வருகிறார் மற்றும் இலாபங்களை அதிகரிக்க தற்காலிக வேலைகளைச் சார்ந்திருப்பதை அதிகரித்து வருகிறார். இரயில்வேயை தனியார்மயமாக்குதல், மருத்துவ பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியங்களில் திட்டமிட்ட வெட்டுக்கள் ஆகியவற்றிற்கு அப்பால், பிரெஞ்சு பத்திரிகைகள் நேற்று அறிவிக்கையில், மக்ரோன் அரசாங்கம், அரசு வரவு-செலவு திட்டக்கணக்கில் கூடுதலாக 30 பில்லியன் யூரோ வெட்டுக்களைச் செய்ய தயாராகி வருவதாகவும், இந்த வெட்டுக்கள் அதிகளவில் சமூக செலவினங்கள் மீது ஒருங்கிணைந்திருக்கும் என்றும் அறிவித்தன.
மக்ரோனின் நிதி கோரிக்கைகளுக்கும் மேர்க்கெலின் பெரிதும் மிதமான விடையிறுப்புக்கும் இடையிலான முரண்பாடு பத்திரிகைகளில் நிரம்பியிருந்தன, அவை, இத்தாலியில் ஒரு புதிய யூரோ நெருக்கடி வெடித்தால், மேர்க்கெலின் கொள்கை வங்கிகளைப் பாதிக்குமே என்று கவலை வெளியிட்டன.
மேர்க்கெலின் "மிதமான பதில்" மூலம் இப்போது மக்ரோன் “ஜேர்மனியர்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்க முடியாது என்பதை புரிந்து கொண்டிருப்பார்" என்று ஜேர்மனியின் FAZ குறிப்பிட்ட அதேவேளையில், பிரான்சின் Le Monde எழுதியது: “ஜேர்மன் சான்சிலர் அவரது பிரெஞ்சு பங்காளியின் நம்பிக்கை அளவுக்கு பொருந்திய வகையில் விடையிறுப்பதற்காகவே இவ்வளவு காலம் காக்க வைத்தார் என்று நினைத்தவர்கள் நொருங்கி போயிருப்பார்கள். ஜேர்மனியில் எந்த புரட்சியும் இருக்கப் போவதில்லை.” மேர்க்கெல் முன்மொழிந்தவாறு ஐரோப்பிய நாணய நிதியம் (EMF), இறையாண்மை கடனின் மதிப்பையும் மற்றும் பிணையெடுக்கப்பட்ட நாடுகளில் தனிநபர்களின் வங்கி கையிருப்புகளையும் குறைக்கும், “இந்த குறிப்பை, பிரான்ஸ் எதிர்க்கிறது,” என்று அது எச்சரித்தது.
இந்த முன்மொழிவு "பாரீஸ், ரோம் மற்றும் மாட்ரிட்டை நடுநடுங்க வைக்கிறது. திருமதி. மேர்க்கெல் தனியார்த்துறையில் கடனை வெட்டுவது போல் வெட்டி-கூடுதலாக வளரவிட்டு வசூலிக்கும் முறையையும், எந்தவொரு விடுவிப்புக்கும் முன்னதாக இறையாண்மை கடன் சீரமைப்புகளையும் அமல்படுத்த விரும்புகிறார். முன்னாள் இத்தாலிய நிதி மந்திரி Pier Carlo Paduan, அதுபோன்றவொரு திட்டம் நடக்குமென எதிர்பார்க்கப்படும் ஒரு நிதி நெருக்கடியை உருவாக்குமென தெரிவித்தார்,” என்று Daily Telegraph இல், Ambrose Evans-Pritchard குறிப்பிட்டார்.
ஜேர்மனுக்கும் தெற்கு ஐரோப்பிய முதலாளித்துவத்திற்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்து வருவதை பைனான்சியல் டைம்ஸ் கட்டுரையாளர் வொல்ஃப்காங் முன்சௌவ் சுட்டிக்காட்டினார். அவர் முன்மொழிந்தார், “ஜேர்மனின் 'முடியாது' என்பதற்கு அளவுகடந்து விலைகொடுக்க வேண்டியிருக்கும் என்று ஜேர்மன் சான்சிலருக்கு பதிய வைக்க,” ரோம், “பிரெஞ்சு ஜனாதிபதியை ஆதரிக்க பரிசீலித்து வருகிறது. சனிக்கிழமை ஸ்பெயினின் பிரதம மந்திரியாக பதவியேற்ற சோசலிஸ்ட் கட்சி தலைவர் பெட்ரோ சான்சேஸ் அதுபோன்றவொரு கூட்டணியைப் பலப்படுத்த உதவக்கூடும்.”
TF1 கருத்துரையாளர் ஜோன்-மார்க் சில்வெஸ்ட் எழுதினார், மக்ரோனுடனான மேர்க்கெலின் பிடிவாதம், பேர்லின் தெற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு குழிபறிக்கக்கூடும் என்பதையே அர்த்தப்படுத்துகிறது, “யூரோ மண்டலத்திலிருந்து வெளியேற நடவடிக்கை எடுங்கள், அதைச் சுற்றி சிக்கன நடவடிக்கை சார்ந்த வடக்கு ஐரோப்பிய நாடுகளின் ஒரே இயல்பான அணியைக் கட்டமையுங்கள்.”
இதுபோன்ற மோதல்கள், அனைத்திற்கும் மேலாக, ஐரோப்பிய முதலாளித்துவத்தின் உடைவு மிகவும் முன்னேறிய நிலையில் இருப்பதையும், வர்க்கப் போராட்டத்தின் புதிய மேலெழுச்சிக்கு இடையே, திவாலான ஐரோப்பிய முதலாளித்துவத்தின் அனைத்து கன்னைகளுக்கு எதிராகவும் ஐரோப்பா எங்கிலுமான தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக்காட்டுகிறது.