Print Version|Feedback
The United States of America: Land of internment camps
ஐக்கிய அமெரிக்க அரசு: தடுப்புக்காவல் முகாம்களின் தேசம்
Eric London
20 June 2018
அமெரிக்க அரசாங்கம் புலம்பெயர்ந்த பெற்றோர்களிடம் இருந்து ஆயிரக் கணக்கான புலம்பெயர்ந்த குழந்தைகளைப் பிரித்து, அவர்களைப் பாலைவன நகரங்களில் தற்காலிக கூண்டுகளில் அடைத்து வைக்கும் ஒரு கொள்கையை நடைமுறைப்படுத்துகிறது. அமெரிக்க குழந்தைகள் நல ஆணையம் இதை "குழந்தைகள் மீதான வன்கொடுமை" என்றும், சர்வதேச பொதுமன்னிப்பு சபை "இதுபோன்ற சித்திரவதை வேறொன்றும் இருக்காது" என்றும், ஐக்கிய நாடுகள் சபை இதை "இழிவார்ந்த" மற்றும் "முட்டாள்தனமான" மனித உரிமைகள் மீறல் என்றும் கூறுகின்றன.
ஆனால் மனிதத்தன்மையற்ற துன்புறுத்தல் மற்றும் குழந்தைகள் துன்புறுத்தலுக்கான தற்போதைய கொள்கை அரசியல் ஒழுக்கக்கேடெனும் மற்றும் அறம்சார் தரக்குறைவு குறித்த நிலை பிரதிபலிக்கிறது என்று கிட்டத்தட்ட பொருந்தாத்
அமெரிக்க வரலாற்றில் அருவருக்கத்தக்க அத்தியாயங்கள் பஞ்சமில்லாமல் இருக்கின்றன—பூர்வீக குடியினரை பலவந்தமாக வெளியேற்றியமை (Trail of Tears), தப்பியோடிய அடிமைகளை சிறையில் அடைத்தமை, முதலாம் உலக போருக்குப் பின்னர் தீவிர கொள்கையினர் என்று சந்தேகிக்கப்பட்டவர்களை நாடு கடத்தியமை, இரண்டாம் உலக போரின் போது ஜப்பானிய-அமெரிக்கர்களை சிறையில் அடைத்தமை என இவையெல்லாம் மிகவும் இழிவார்ந்தவைகளில் உள்ள ஒருசிலவை மட்டுமே. ஆனால் மனிதத்தன்மையற்ற துன்புறுத்தல் மற்றும் குழந்தைகளைப் பழிவாங்கல் ஆகிய தற்போதைய கொள்கையானது அரசியல் சீரழிவு மட்டத்தையும், ஏறக்குறைய வரையறைகளை மீறிய தார்மீக தரக்குறைவையும் பிரதிநிதித்துவப் படுத்துகிறது. இது இந்த இருப்பதோராம் நூற்றாண்டில், அமெரிக்க ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் மதிப்பதாக முடிவின்றி பாசாங்குத்தனமாக பெருமிதம் கொள்ளும் தலைவர்கள் வாழும் ஒரு நாட்டில், நடந்து வருகிறது.
அமெரிக்கா எங்கிலும், ஆயிரக் கணக்கான குழந்தைகள் தற்போது விலங்குகளைப் போல கூண்டுகளில் அடைக்கப்பட்டு சிமெந்து திண்ணைகளில் உட்கார்ந்திருக்கிறார்கள். பலருக்கு அவர்களின் பெற்றோர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியாது, அவர்கள் மற்றவர்களுடன் பேசுவதில் இருந்தும் தடுக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் அதற்கு முந்தைய நாள் அடைக்கப்பட்டவர்களை விட 250 க்கும் அதிகமானவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்படுகிறார்கள்.
கொத்துகொத்தாக அமைக்கப்பட்டுள்ள முகாம்களும், கூடார நகரங்களும் நாடெங்கிலும் முளைத்து வருகின்றன, கைது செய்யப்படுபவர்களின் அதிகரித்து வரும் எண்ணிக்கையைக் கையாள, இவற்றில் சில, 100 டிகிரிக்கு அதிக வெப்பநிலை உள்ள பாலைவன பகுதிகளில் அமைக்கப்படுகின்றன. நெரிசலான இந்த சிறைக்கூடங்கள், மிரட்சியோடு குழந்தைகளின் அழுகை சத்தத்தால் நிறைந்துள்ளன. பாதுகாவலர்களோ, பல குழந்தைகளை வார்த்தையளவிலும், உடல்ரீதியிலும், பாலியல்ரீதியிலும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி உள்ளனர்.
அதன் ஈவிரக்கமற்ற உச்சக்கட்ட மூர்க்கத்தன மட்டத்தில், குடும்பங்களைப் பிரிக்கும் இந்த கொள்கை நாஜி கெஸ்டாபோ கொள்கைகளுக்கு ஒத்திருக்கின்றன. இது அமெரிக்க வரலாற்றில், திரும்புதற்கு இடமற்ற, ஒரு தொடக்க புள்ளியாகும்.
அமெரிக்கா உலகெங்கிலும் "ஜனநாயகம்" மற்றும் "மனித உரிமைகளை" பிரதிநிதித்துவம் செய்கிறது என்ற வாதம் தூள்தூளாக சிதறடிக்கப்பட்டுவிட்டது.
பத்து மில்லியன் கணக்கானவர்கள் உயிர்பிழைப்பதற்காக எந்த பகுதிகளில் இருந்து இப்போது தப்பி வர முயன்று வருகிறார்களோ, உலகின் அப்பகுதிகளின் மீது படையெடுக்கவோ அல்லது தலையீடு செய்யவோ அதுபோன்ற வாதங்கள் தான் பயன்படுத்தப்பட்டன. 1970 கள் மற்றும் 1980 களில், மத்திய அமெரிக்கா முழுவதிலும், தங்களின் படுகொலை படைகளைக் கொண்டு நூறாயிரக் கணக்கானவர்களைச் சித்திரவதை செய்து படுகொலை செய்த சர்வாதிகாரிகளை அமெரிக்கா ஆதரித்தது. இன்றோ அந்த ஒட்டுமொத்த சமூகங்களும் சிதைந்து சீரழிந்து நிற்கின்றன. அமெரிக்கா, 1960 கள் மற்றும் 1970 களில், வியட்நாம், கம்போடியா மற்றும் லாவோஸில் சுமார் 3 மில்லியன் மக்களையாவது கொன்றது. அமெரிக்க ஏகாதிபத்தியம் மில்லியன் கணக்கானவர்களின் படுகொலைகளோடு சேர்ந்து, வட ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் பெரும்பகுதிகளைத் தொடர்ந்து தரைமட்டமாக்கி வருகிறது. இப்போது, இந்த போர்களில் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் முன்பு அவர்கள் மீது படையெடுத்தவர்களாலேயே கூண்டுகளில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
மக்களின் கோபத்திற்கு முன்னால், ட்ரம்ப் நிர்வாகம் குழந்தைகளது கூடார நகர வலையமைப்புகளை விரிவுபடுத்தியும், புலம்பெயர்ந்தவர்கள் மீதான அவரது பாசிசவாத தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியும் விடையிறுத்துள்ளது.
“சட்டவிரோத புலம்பெயர்ந்தோர்கள், அவர்கள் எவ்வளவு மோசமானவர்களாக இருந்தாலும் பாரபட்சமின்றி, நம் நாட்டிற்குள் வெள்ளமென புகுந்து, தொந்தரவு [படுத்துகிறார்கள்],” என்று ட்ரம்ப் நேற்று ட்வீட் செய்தார். திங்களன்று ஒரு பேட்டியில், அட்டார்னி ஜெனரல் ஜெஃப் செஸ்சன்ஸ் கூறுகையில் புலம்பெயர்ந்தோர் மீதான ஒடுக்குமுறைக்கும் மற்றும் நாஜி ஜேர்மனிக்கும் இடையிலான முக்கிய வேறுபாடு, "நாஜி ஜேர்மனியில் யூதர்கள் நாட்டை விட்டு வெளியேறாமல் தடுத்தனர்." என்றார்.
நேற்று வாஷிங்டன் டி.சி. இல் சிறுவணிகர்களது ஒரு கூட்டத்தில் பேசுகையில், ட்ரம்ப் புலம்பெயர்ந்த பெற்றோர்களை "குழந்தை கடத்தல்காரர்கள்" என்று சாடினார். புலம்பெயர்ந்தவர்களை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்கள் மற்றும் குற்றவாளிகள் என்ற அவர் வாதத்தைச் சுட்டிக்காட்டி கூறுகையில், “அவர்களின் நேசத்திற்குரியவர்களை அவர்கள் அனுப்பாதபோது,” “நான் 100 சதவீதம் சரியாக செய்கிறேன் என்றாகிறது,” என்றார்.
ட்ரம்ப் இந்த வெறிச்செயலுக்கு ஓர் ஆதரவு வட்டத்தை கட்டமைத்து வருகிறார். “நாம் ஆயிரக் கணக்கானவர்களை வெளியேற்றி வருகிறோம்!” என்று ட்ரம்ப் அறிவித்த போது, வணிகர்களின் அந்த கூட்டம், ஆரவாரத்துடன் கூப்பாடு போட்டு கைதட்டியது.
இந்த உரை, முதல்முறையாக, புலம்பெயர்ந்தவர்கள் மீதான முறையான விசாரணையை நடைமுறையளவில் கைவிடுவதற்கு ட்ரம்ப் அழைப்புவிடுத்ததையும் குறிக்கிறது. “எங்களுக்கு நீதிபதிகள் வேண்டியதில்லை, எங்களுக்கு எல்லையில் பாதுகாப்பு வேண்டும்,” என்றார். “மக்கள் உள்ளே வருவதை நாங்கள் விரும்பவில்லை,” என்றார்.
நீதிமன்றத்திற்கு செல்லக்கூடிய புலம்பெயர்ந்தோரது உரிமை குறித்து அவர் எள்ளி நகையாடினார்: “மக்கள் உள்வர முயற்சிப்பதை நான் விரும்பவில்லை, மக்கள் உள்வருவதை நான் விரும்பவில்லை, உங்களால் அவர்களை ஒருபோதும் வெளியேற்ற முடியாது.” புலம்பெயர்ந்தோரின் வழக்கறிஞர்கள், “மோசடியாளர்கள்" அவர்கள் "ஏமாற்றுகிறார்கள்", அவர்கள் "இவர்களிடம் என்ன கூற வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்கிறார்கள்,” என்றார்.
இத்தகைய கருத்துக்கள், புலம்பெயர்ந்தவர்கள் மீது கடுமையான புதிய தாக்குதல்களுக்கு, இவை அவர்களின் உரிமைகளை மட்டுமல்ல மாறாக அவர்களின் உயிர் வாழ்வையே ஆபத்திற்குட்படுத்தலாம் என்ற அளவுக்கு, ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குள் திட்டங்கள் வெகுவாக முன்நகர்த்தப்பட்டு வருகின்றன என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன, இவற்றை பாசிசவாத ஸ்டீபன் மில்லர் இக்கொள்கையை முன்நகர்த்தி வருகிறார்.
மில்லியன் கணக்கானவர்கள் தெரிந்து கொள்ள விரும்புவது இது தான்: இதை எவ்வாறு நிறுத்துவது?
முதலாவதாக ஜனநாயகக் கட்சி உடந்தையாய் இருப்பதையும், திராணியற்று இருப்பதையும் உணர வேண்டியுள்ளது, எரிச்சலூட்டும் விதத்தில் அது குடும்பங்களைப் பிரிக்கும் இத்திட்டத்தை எதிர்ப்பதாக அறிவிக்கிறது. பில் கிளின்டனின் கீழ், முக்கியமாக பராக் ஒபாமாவின் கீழ், இவர் 2.7 மில்லியன் பேரை நாடு கடத்தியதோடு சிறைகள் மற்றும் தடுப்புக்காவல் மையங்களின் ஒரு வலையமைப்பைக் கட்டமைத்தவர் என்ற நிலையில், இவர்களின் கீழ் இயற்றப்பட்ட தடுப்புக்காவல் கொள்கைகள் மற்றும் நாடு கடத்தும் கொள்கைகளின் ஒரு நீட்சியே ட்ரம்பின் கொள்கைகள்.
ட்ரம்ப் அதிகாரத்திற்கு வந்த போது, ஓர் ஓய்வுபெற்ற தளபதியான ஜோன் கெல்லியை உள்நாட்டு பாதுகாப்புத்துறையின் செயலராக உறுதிப்படுத்த ஜனநாயகக் கட்சி 37 க்கு 11 என்றளவில் வாக்களித்தது. கெல்லி, சில வாரங்களிலேயே, குடும்பங்களைப் பிரித்துவிடும் கொள்கையை நடைமுறைப்படுத்த முதன்முதலில் முன்மொழிந்தார்.
2017 இறுதியில், ஜனநாயகக் கட்சி செனட் பெரும்பான்மை தலைவர் சார்லஸ் ஷ்சூமர், அமெரிக்கா-மெக்சிகோ எல்லையை ஒட்டி ஒரு சுவர் எழுப்புவதற்கான ட்ரம்பின் முன்மொழிவுக்கு அவர் ஆதரவை வழங்கினார். கெல்லியை உறுதிப்படுத்த வாக்களித்த ஜனநாயகக் கட்சி செனட்டர் சாண்டர்ஸ், ஜனவரி 2018 இல், ட்ரம்பின் புலம்பெயர்வு-விரோத கொள்கைக்கு ஒத்துழைப்பதற்கான அவர் விருப்பத்தை அறிவித்தார், “நமக்கு பலமான எல்லை பாதுகாப்பு அவசியம் என்பதில் உடன்படாதவர்கள் யாரும் இருப்பார்களென நான் நினைக்கவில்லை. நமது பலமான எல்லை பாதுகாப்பை உறுதிப்படுத்த ஜனாதிபதி எங்களுடன் இணைந்து செயலாற்ற விரும்புகிறார் என்றால், அதை நாம் இணைந்து செய்யலாம்,” என்றார்.
இந்நெருக்கடிக்கு அடியில் இதற்கு காரணமாக இருக்கும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு போராட்டத்தின் அடிப்படையில், தொழிலாள வர்க்க எதிர்ப்பை ஒழுங்கமைப்பதே புலம்பெயர்ந்தவர்களைப் பாதுகாக்கும் இப்போராட்டத்திற்கு அவசியப்படுகிறது.
இந்த ஒட்டுமொத்த அமெரிக்க அரசியல் அமைப்புமுறையும் அதன் மையத்திலேயே அழுகிப் போயுள்ளது. அமெரிக்க ஆளும் வர்க்கம் ஒரு கால் நூற்றாண்டாக ஏகாதிபத்திய சூறையாடலை நடத்தி உள்ளதுடன், கடிவாளமற்ற பெருநிறுவன சுரண்டலையும், மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்படுவதையும், பத்து மில்லியன் கணக்கானவர்கள் அகதிகளாக்கப்படுவதையும் மற்றும் முன்னொருபோதும் இல்லாதளவில் ஒடுக்குமுறை, கண்காணிப்பு, தணிக்கை மற்றும் உள்நாட்டு வாழ்வில் பிற்போக்குத்தனத்தை அறிமுகப்படுத்துவதையும் மேற்பார்வை செய்துள்ளது. ட்ரம்பும், அவரது பாசிசவாத உதவியாளர்களும் மற்றும் அவர்களின் ஜனநாயகக் கட்சி உடந்தையாளர்களும் இந்த அரசியல் சீரழிவு நிகழ்ச்சிப்போக்கின் விளைபொருளாகும்.
புலம்பெயர்வோர்களது பாதுகாப்புக்கான போராட்டமானது, வெளிநாட்டவர் விரோத மனோபாவம் மற்றும் தேசியவாதத்திற்கு எதிராக உலகெங்கிலுமான தொழிலாளர்களை ஒருங்கிணைக்க முயல வேண்டும். அமெரிக்காவில் குழந்தை முகாம்கள் ஸ்தாபிக்கப்பட்டமை ஒரு பரந்த சர்வதேச நிகழ்வுபோக்கின் பாகமாகும்.
ஒவ்வொரு இடத்திலும் ஆளும் வர்க்கமானது இனவாதத்தையும் தேசிய பேரினவாதத்தையும் தூண்டிவிட்டு வருகிறது எதற்காக என்றால் (1) வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் மற்றும் போராட்டத்திற்கு வரும் இளைஞர்களை ஒடுக்குவதற்காக நீதித்துறை கட்டமைப்பு மற்றும் சடரீதியிலான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்காக (2) இனம் மற்றும் தேசியத்தின் அடிப்படையில் தொழிலாளர்களை ஒருவருக்கு எதிராக ஒருவரை எதிர்நிறுத்தி போர்-எதிர்ப்புணர்வைத் தணிக்கவும் மற்றும் தொழிலாள வர்க்கத்தைப் பலவீனப்படுத்துவதற்கும் ஆகும்.
இத்தாலியில், உள்துறை அமைச்சர் மத்தேயோ சல்வீனி ஒட்டுமொத்த ரோமா மக்களுக்குமான ஒரு தேசிய பதிவேட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளார். புலம்பெயர்ந்த 500,000 பேரை நாடு கடத்துவதற்கான இந்த வலதுசாரியின் கோரிக்கை உருவாக்கி விட்டுள்ள ஒரு சூழலில், புலம்பெயர்ந்தவர்கள் மீது அடிக்கடி வன்முறையான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
ஜேர்மனியில், பிரதம மந்திரி அங்கேலா மேர்க்கெல் பெருந்திரளான நாடு கடத்தல்களுக்கான அழைப்புகளை அவரது சொந்த கட்சிக்குள்ளேயும் மற்றும் நவ-பாசிசவாத ஜேர்மனிக்கான மாற்றீட்டிடம் (Afd) இருந்தும் முகங்கொடுக்கிறார். பிரெஞ்சு அரசாங்கமோ தஞ்சம் கோரும் உரிமைக்கு ஏப்ரலில் கடுமையாக தடைவிதித்தது.
உலகெங்கிலும், புலம்பெயர்ந்தவர்கள் மீது அதிகரிக்கப்பட்டிருக்கும் தாக்குதலுக்கு இணையாக தொழிலாள வர்க்கத்தின் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் ஓர் அலை உள்ளது. லியோன் ட்ரொட்ஸ்கி 1934 இல் அவரது தேசியவாதமும் பொருளாதார வாழ்வும் என்ற கட்டுரையில் எழுதியதைப் போல,முதலாளித்துவத்தின் கீழ், ஆளும் வர்க்கம் ஒரு வரி சுவர்கள் மூலமும் துப்பாக்கி வேலிகள் மூலமும் [தன்னை] பாதுகாத்துக் கொள்ள" முயல்கிறது.
புலம்பெயர்ந்தவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களுக்கு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது. நாங்கள் கோருகிறோம்:
* அமெரிக்காவில் காவலில் வைக்கப்பட்ட அனைத்து குழந்தைகளையும், அத்துடன் உலகெங்கிலும் முகாம்கள் மற்றும் தடுப்புக்காவல் மையங்களில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து புலம்பெயர்ந்தோரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்
* அமெரிக்க கெஸ்டாபோவை—அதாவது புலம்பெயர்வு மற்றும் சுங்க அமலாக்க ஆணையம் (ICE), சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு ஆணையம் (CBP) ஆகியவற்றை கலைக்க வேண்டும்
* நாடுகடத்தும் அமைப்புடன் செயலூக்கம்மிக்க ஒத்துழையாமையை காட்ட வேண்டும்
* அமெரிக்காவில் ஆவணமின்றி உள்ள அனைத்து புலம்பெயர்ந்தோருக்கும் உடனடியாக பொது மன்னிப்பு வழங்கி, பயணிப்பதற்கும் வேலை செய்வதற்குமான உரிமைக்கு உத்தரவாதமளிக்க வேண்டும்
* அனைத்து தொழிலாள்களுக்கும், புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் புலம்பெயராதவர்கள் அனைவருக்கும் பொதுச்சேவைகள் மற்றும் வேலை பயிற்சி திட்டங்கள் ஒன்றுபோல கிடைக்க செய்ய ட்ரில்லியன் கணக்கிலான டாலர்களை வழங்க வேண்டும். அங்கே அனைவருக்கும் செலவிடும் அளவுக்கு போதுமானளவில் செல்வம் உள்ளது.
புலம்பெயர்ந்தோர்களை பாதுகாப்பதற்கான போராட்டத்தில் இறங்குவதன் மூலமாக, தொழிலாள வர்க்கம் அதன் சமூக பலத்தை முன்கொணர வேண்டும். புலம்பெயர்ந்த சக-தொழிலாளர்கள் மற்றும் அண்டைஅயலார்களைப் பாதுகாக்க, வேலையிடங்கள் மற்றும் சமூகங்களை அமெரிக்க கெஸ்டாபோ பயங்கரமயப்படுத்துவதற்கு எதிராக ஆதரவு மற்றும் உதவி வழங்க, வேலையிடங்கள் மற்றும் அண்டைபகுதிகளில் குழுக்களை அமைக்க வேண்டும். அவர்களின் வேலைகளில் இருந்து தொழிலாளர்களை வெளியேற்றவும் மற்றும் அவர்களின் குடும்பங்களிடம் இருந்து நேசத்திற்குரியவர்களை பிரிக்கவும் அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது.
இதை முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு புரட்சிகர போராட்டத்தின் அடிப்படையில் மட்டுமே நடத்த முடியும்.