Print Version|Feedback
Italy: Immigrant harvest worker shot dead
இத்தாலி: புலம்பெயர்ந்த அறுவடை தொழிலாளி சுட்டுக் கொல்லப்பட்டார்
By Marianne Arens
9 June 2018
மாலியில் இருந்து புலம்பெயர்ந்திருந்த ஒரு இளைஞர் ஜூன் 2 அன்று இத்தாலிய மாகாணம் கலாபிரியாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். சௌமாலியா சாக்கோ என்ற அந்த 29 வயது இளைஞர் தனது மனைவி மற்றும் 5 வயது மகளை மாலியிலும் மற்றும், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களை தெற்கு இத்தாலியிலும் விட்டுப்பிரிந்துள்ளார். அவர் அறுவடை தொழிலாளியாக வேலை செய்ய வந்திருந்தார் என்பதுடன், ஆபிரிக்க தினக்கூலி தொழிலாளர்களுக்காக போராடும் Grass roots (USB) அமைப்பின் ஒரு ஆர்வலராகவும் இருந்தார்.
ஜியோயா டாவுரோ இன் பின்கடற்கரைப் பகுதிகளிலுள்ள காய்கறி மற்றும் வேளாண் பண்ணைகளின் பழத்தோட்டங்களில் மிகக் குறைந்த சம்பாத்தியத்தைப் பெறும் அறுவடை தொழிலாளர்களாகவும் தினக்கூலி தொழிலாளர்களாகவும் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களில் சௌமாலியா சாக்கோ வும் ஒருவராக இருந்தார். இந்த தொழிலாளர்கள் கூடாரங்கள் மற்றும், மரக்கட்டைகள் மற்றும் பிளாஸ்டிக் தகடுகளால் உருவாக்கப்பட்ட முகாம்கள் அல்லது தொடர்குடிசைகளில் வசிக்கின்றனர்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை, அதே நாளில் ரோமில் பதவியேற்ற அரசாங்கத்தின் வலதுசாரி கொள்கைகளின் விளைவாகவே பார்க்கப்பட வேண்டும். லெகா மற்றும் ஐந்து நட்சத்திர இயக்கம் இணைந்த கூட்டணி 18 மாதங்களுக்குள் அரை மில்லியன் அகதிகளை நாடுகடத்தும் எனவும், தடுப்புக் காவல் மையங்களில் முறையான அனுமதியில்லாத அனைத்து அகதிகளையும் சிறையிலடைக்கும் எனவும் அறிவித்துள்ளது. அத்துடன், உள்துறை மந்திரியாகவும் மற்றும் துணை பிரதம மந்திரியாகவும் உள்ள லெகா கட்சித் தலைவர் மத்தேயோ சல்வீனி, ஒருசில மணி நேரங்களுக்கு முன்பாக இவ்வாறு அறிவித்தார்: “அவர்கள் அனைவரும் சட்டவிரோதமானவர்கள் என நாங்கள் சொல்கிறோம்: விருந்து முடிந்துவிட்டது!” அவர்கள் “பொதிகளை கட்ட வேண்டியது தான்.”
அதே சனியன்று இரவில், சௌமாலியா சகநாட்டினர் இருவருடன் தற்காலிக தங்கும் விடுதிக்குத் தேவையான கட்டிட பொருட்களை தேடுவதற்காக பயணித்துக் கொண்டிருந்தார். கைவிடப்பட்ட ஒரு முன்னாள் செங்கல் தொழிற்சாலை தளத்தில், அவர்கள் உலோகத் தகடுகளை தேடிக் கொண்டிருந்த போது, தெரியாத நபர் ஒருவர் அவரது ஃபியட் பான்டா காரை நிறுத்திவிட்டு அவர்களை நோக்கி சுடத் தொடங்கினார். தங்களை மறைத்துக்கொள்ள முனைந்த போது சௌமாலியா தலையில் சுடப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்றொரு அகதிக்கு காலில் காயம் ஏற்பட்டது.
திங்களன்று காலையில், சௌமாலியா வசித்துவந்த சான் ஃபெர்னாண்டினோவில் 2,000 க்கும் அதிகமான அறுவடை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். மேலும், நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்ட அணிவகுப்பில் பங்கேற்றனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தங்குமிடத்தினுள் பத்திரிகையாளர் செல்வதை தடுப்பதன் மூலம் பொலிஸ் பதிலிறுத்தது.
சௌமாலியாவின் நண்பர் ஒருவர், “முழுமையான அடிமைத்தனம் மற்றும் சுரண்டலை” கண்டனம் செய்து ஒரு உரையாற்றினார். “சௌமாலியா போல, ஒருசில யூரோக்களுக்கு நாள் முழுவதும் கஷ்டப்பட்டு உழைக்கும் பல தொழிலாளர்கள் இங்கு உள்ளனர்… அவர் ஒரு தொழிலாளியும் மனிதனுமாவார். இத்தாலியில் உள்ள ஆயிரக்கணக்கான அறுவடை தொழிலாளர்கள் போல இவரும் ஒருவராக இருந்தார். எங்களுக்கு முழு உண்மையும் தெரிய வேண்டும் என்பதுடன், எங்களுக்கு நீதி வேண்டும். மேலும், அனைத்து தொழிலாளர்களுக்கும் நியாயமான தங்குமிடத்தை நாங்கள் கோருகிறோம்.”
இந்த கொடூரமான சம்பவம், தெற்கு இத்தாலிக்கு புலம்பெயர்ந்து, ஆரஞ்சு, எலுமிச்சை, மன்டரின்ஸ், தக்காளி மற்றும் கீவி போன்ற பழங்களை அறுவடை செய்து ஐரோப்பா முழுவதிலும் விற்பனை செய்துவரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் அச்சுறுத்த வைக்கும் வாழ்க்கை நிலைமைகள் பக்கம் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர்கள் நாளொன்றுக்கு சுமார் 25 யூரோக்களை பெறுகின்றனர், அதிலிருந்து மேற்பார்வையாளர் Pizzo (பாதுகாப்பு பணம்) வாக 5 யூரோக்களை வழமையாக குறைத்து விடுகிறார். இந்த தொழிலாளர்களில் பெரும் பகுதியினர் வேலை ஒப்பந்தமின்றி வேலை செய்கின்றனர் என்பதோடு, அவர்களை ஒருசில மணி நேரங்களுக்காக தினக்கூலி தொழிலாளர்களாக வாடகைக்கு அமர்த்தப்பட்டு, அவர்களது கூலிக்கு பதிலாக பெட்டியில் பழங்களும் காய்கறிகளும் நிரப்பி கொடுக்கப்படுகின்றன.
Medu எனும் மருத்துவ அமைப்பு, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக மகப்பேறு மருத்துவ பிரிவுகளை பராமரித்து வருவதுடன், அவர்களது மிக மோசமான வாழ்க்கை நிலைமைகள் பற்றிய அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு முதலாளிகள் குடிநீர், வேலை கையுறைகள் அல்லது பாதுகாப்பு காலணிகள் போன்றவற்றை வழங்குவதில்லை என்றும் மருத்துவர்கள் புகார் கூறுகின்றனர். அத்துடன், அங்கு பொது போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால், தொழிலாளர்கள் நீண்ட தூரம் நடக்க வேண்டியுள்ளது. கடுமையான உடல் உழைப்பின் காரணமாக, தொழிலாளர்கள் பெரும்பாலும் நோய்வாய்படுவதுடன், பலர் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாகின்றனர். மின்சாரம் மற்றும் தண்ணீர் வரத்து இல்லாத பாரிய தங்குமிடங்களில் நெரிசல்களுக்கு மத்தியில் தொழிலாளர்கள் ஒன்றாக வசிக்கின்றனர். கழிவறைகளை பொறுத்தவரையில் நிலைமை மிகவும் பேரழிவுகரமானது என்பதுடன், முற்றிலும் சுகாதாரமற்றது.
சான் ஃபெர்னாண்டினோ நகரம், எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் பரந்த மக்கள் அமைதியின்மை ஏற்பட்ட ரோசார்னோவின் மிக அருகாமையில் உள்ளது. அந்த நேரத்தில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான வீட்டுவசதி மற்றும் நிலைமைகளை மேம்படுத்த அரசியல்வாதிகள் முழுமையான வாக்குறுதிகளை அளித்தனர், ஆனால் அடிப்படையில், இரண்டு விடயங்கள் மட்டும் மாறிவிட்டன: பொலிஸ் பிரசன்னம் அதிகரித்துள்ளது, மற்றும் ரோசார்னாவுக்கு வெளியே பெரிய கூடார நகரங்கள் அமைக்கப்பட்டுள்ளன, அங்கு தொழிலாளர்கள், முன்னர் கிட்டங்கிகளில் தங்கியிருந்தது போலவே மிக மோசமான நிலைமைகளில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.
மாலி, புர்கினா பாசோ, கானா, ஐவொரி கோஸ்ட் அல்லது செனகல் ஆகிய பகுதிகளிலிருந்து பெரும்பாலான இளைஞர்கள் புலம்பெயர்ந்துள்ளனர். அவர்களில் பலரும் முறையான ஆவணங்களை கொண்டிராத நிலையில், அடிமைகள் போல நடத்தப்படுகிறார்கள்.
குறிப்பாக, பல பத்திரிகைகள் ஆரம்பத்தில் சௌமாலியா திருட முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டதாக எழுதின. அது நிச்சயமாக இல்லை, ஏனென்றால் இந்த குற்றவியல் சம்பவம் பல ஆண்டுகளாக கைவிடப்பட்ட ஒரு செங்கல் தொழிற்சாலைப் பகுதியில் நடந்துள்ளது. உண்மையில் சௌமாலியா ஒரு தீவிர தொழிற்சங்கவாதி என்ற காரணத்தால் வேறுபட்ட நோக்கங்கள் இதனுடன் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்பதையே இது காட்டுகிறது. எவ்வாறாயினும், ஆபிரிக்க தொழிலாளர் மீதான இரத்தக்களரியான தாக்குதலுக்கு நோக்கம் வைத்து, யாரோ ஒருவர் வேண்டுமென்றே சுட்டுக் கொலை செய்தார் என்பது தெளிவாக உள்ளது.
செவ்வாயன்று, பொண்டோரியெரோ என்ற 43 வயது விவசாயி கொலையில் சம்பந்தப்பட்டிருப்பார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். இரண்டு உயிர்தப்பியவர்களின் உதவியுடன் உருவாக்கப்பட்ட பொலிசின் ஒரு மாதிரி வரைவும் மற்றும் சம்பந்தப்பட்ட கார் தொடர்பான துப்புக்களும் அவரது ஈடுபாட்டை சுட்டிக் காட்டின. இது குறித்து Corriere della Sera செய்தித்தாள், பொண்டோரியெரோ குடும்பம், கலாபிரியன் பிராந்தியத்தில் பெரும்பகுதி காய்கறி மற்றும் சிட்ரஸ் வியாபாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் Ndrangheta என்ற மாஃபியா குழுவுடன் இணைந்து செயல்படுவதாக கூறப்படுகிறது என எழுதியது.
செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில், விபோ (காலாபிரியா), மெல்ஃபி (பாஸிலிகாட்டா), தெராமோ (அப்ருஸோ), காக்லியாரி (சார்டினியா) மற்றும் வின்சென்ஸா (வெனேட்டோ) போன்ற பகுதிகள் சார்ந்த பிற தொழிலாளர்கள் குழுக்களின் மூலம் வேலைநிறுத்தங்களும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன. USB ஒன்றியம், பல அரசு சாரா அமைப்புகள் மற்றும் பிற அமைப்புகள் இன்னும் ஆர்ப்பாட்டங்களுக்கு அறிவித்துள்ளன. மேலும் இந்த எதிர்ப்புகள், புதிய அரசாங்கம் மற்றும் அதன் வெளிப்படையான இனவாத செயற்பட்டியல் ஆகியவற்றிற்கு எதிராகவும் இயக்கப்பட்டு வருகின்றன.
புதிய பிரதம மந்திரி ஜியுசெப்ப கொன்தே, அவரது தொடக்க உரையின் போது இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பதிலளிப்பதற்கு நிர்பந்திக்கப்பட்டார். கொன்தே இது பற்றி, “நாங்கள் உணர்ச்சியற்றவர்கள் அல்ல” என்று கூறி, சௌமாலியாவின் கொலை ஒரு “துயரமான மற்றும் குழப்பமான சம்பவம்” என்று விவரித்தார். மேலும், அரசியல்வாதிகள் “இந்த மக்களின் கவலைக்கிடமான நிலைமையை கவனித்துக்கொள்வார்கள்” என்றும் கொன்தே தெரிவித்தார்.
இந்த புதிய அரசாங்கம், வடக்கில் நடைபெறும் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுடன் தெற்கில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்புபடுத்தப்படக்கூடுமென வெளிப்படையாக கவலைப்படுகிறது. இந்நிலையில், ஜூன் 9 சனியன்று, மிலானில், இனவாதம் மற்றும் சுரண்டலுக்கு எதிராக ஒரு பெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.