Print Version|Feedback
Italian president considers installing neo-fascist government
இத்தாலிய ஜனாதிபதி நவ-பாசிசவாத அரசாங்கத்தை நிறுவ பரிசீலிக்கிறார்
By Alex Lantier
31 May 2018
இத்தாலிய ஜனாதிபதி செர்ஜியோ மத்தரெல்லா பிரதம மந்திரி கார்லோ குத்தரெல்லி (Carlo Cottarelli) இன் கீழ் ஒரு தொழில்வல்லுனர்களின் அரசாங்கத்திற்கு ஒப்புதல் வழங்கிய இரண்டு நாட்களுக்குப் பின்னர், புதனன்று, அவர் அப்போக்கை மாற்றிக் கொண்டு, அதற்கு பதிலாக அவர் ஓர் அதிவலது அரசாங்கத்தை நிறுவக்கூடும் என்பதற்கு சமிக்ஞை செய்தார். மார்ச் தேர்தல்களில் இரண்டு முன்னணிக் கட்சிகளான ஐந்து நட்சத்திர இயக்கம் (M5S) மற்றும் அதிவலது லீகா ஆகியவற்றின் ஓர் அரசாங்கம் இத்தாலியை யூரோ நாணயத்திலிருந்து வெளியேற்றி விடக்கூடும் என்று எச்சரித்த அவர், சிறப்பு அதிகாரத்தின் கீழ் அதை தடுக்கும் உத்தரவைப் பிறப்பித்தார்.
எவ்வாறிருப்பினும் சாத்தியமான அரசாங்கங்கள் அல்லது புதிய தேர்தல்களுக்கான போட்டி மிகுந்த சூழலில் நேற்று Lega மற்றும் M5S உம் அமளிதுமளியில் ஈடுபட்டன. தேர்தல்கள் ஏறக்குறைய செப்டம்பருக்கு முன்னதாக நடத்தப்படலாம் என்று செய்திகள் வந்தன. ஆனால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அனைத்து முன்மொழிவுகளும், இத்தாலியில் ஆளும் வட்டாரங்களில் அதிவலது வேகமாக அதன் இடத்தைப் பிடித்து வருவதை தெளிவுபடுத்துகின்றன.
Giuseppe Conte தலைமையில் M5S-Lega அரசாங்கத்திற்கு மத்தரெல்லா உடன்பட்டால், தாம் யூரோ-எதிர்ப்பு பொருளாதாரவாதி பாவுலோ சவோனாவை பொருளாதார அமைச்சராக முன்நிறுத்துவதைக் கைவிடுவதாக முன்னதாக M5S தலைவர் Luigi di Maio அறிவித்தார். “முன்னால் இரண்டு பாதைகள் உள்ளன. ஒரு நியாயமான தீர்வுடன் Conte அரசாங்கத்தை தொடங்கலாம் அல்லது இப்போதே வாக்களிக்க செல்லலாம்,” Di Maio தெரிவித்தார்.
Lega தலைவர் மத்தேயோ சல்வீனி (Matteo Salvini) இந்த முன்மொழிவை நிராகரித்ததுடன், அதற்கு பதிலாக புதிய தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்தார், யூரோ செலாவணி விவகாரத்தில் di Maio மத்தரெல்லாவிடம் சரணடைந்துவிட்டதாக கேலி செய்தார்: “Di Maio உடன்பாட்டிற்கு தயாராகி விட்டாரா? நாம் சந்தையில் இல்லை. இப்போதே வாக்கெடுப்புக்குச் செல்வோம். நாம் அரசாங்கம் அமைக்க முயன்றோம், ஆனால் அது மத்தரெல்லாவுக்கு திருப்தியாக இல்லை, அதன் பின் நீங்கள் விட்டுக்கொடுக்கிறீர்கள். இந்த முட்டுச்சந்திலிருந்து எவ்வாறு வெளி வருவதென்று ஜனாதிபதி தான் விவரிக்க வேண்டும்,” என்றார்.
ஆனால் மத்தரெல்லா உடனடியாக ஒரு தேர்தலை நடத்தவோ, பொருளாதார மந்திரியாக சவோனா இருந்தாலும் இல்லாவிட்டாலும் Conte அரசாங்கத்திற்கு ஒப்புதல் வழங்கவோ, அல்லது Lega ஐ விட M5S அதிக வாக்குகள் பெற்றுள்ள போதும் கூட, சல்வீனி தலைமையில் M5S-Lega அரசாங்கத்திற்கு ஒப்புதல் வழங்கவோ பரிசீலித்து வருவதாக நேற்று மாலை செய்திகள் வெளியாயின.
சல்வீனி, இதற்கு ஒப்புக் கொள்ளலாம் அல்லது Lega, M5S மற்றும் ஜோர்ஜியா மெலோனியின் பாசிசவாத Fratelli d’Italia கட்சியின் ஒரு கூட்டணிக்கோ ஒப்புக்கொள்வதற்கு சமிக்ஞை காட்டி, ஏதேனும் விதத்தில் தீர்வுகாண விரும்புகிறார். தொழில்வல்லுனர்கள் Cottarelli ஐ பதவியிலிருந்து கீழிறக்க வாக்களிக்காமல் அவரை பதவியில் இருக்க அனுமதிப்பதன் மூலம், சிறிது காலத்திற்கு அவர் “தொழில்வல்லுனர்கள் மீதான அவநம்பிக்கை-இன்மையின்" பிம்பத்தை ஏற்கக்கூடும் என்பதையும் அவர் அறிவுறுத்துகிறார்.
நிதியியல் சந்தைகளில் யூரோ நெருக்கடி அச்சங்களைத் தணிக்க, மத்தரெல்லாவும் குத்தரெல்லி உம் ஒரு இடைக்கால தீர்வை முயலக்கூடும், அதன்படி Lega மற்றும் M5S உறுப்பினர்கள் குத்தரெல்லி தலைமையிலான தொழில்வல்லுனர்களின் அரசாங்கத்திற்குள் உள்ளிணைக்கப்படுவார்கள் என்ற செய்திகளும் உலவுகின்றன.
இந்த நெருக்கடியின் உடனடி விளைவு என்னவாக இருந்தாலும், இத்தாலி கூட்டுப்படைகளது படையெடுப்பின் போது முசோலினி வீழ்ந்து 75 ஆண்டுகளுக்குப் பின்னர், இத்தாலிய ஆளும் வர்க்கம் ஒரு நவ-பாசிசவாத அரசாங்கத்தை ஏற்க பரிசீலித்து வருகிறது என்பது தெளிவாகிறது. இது இத்தாலியில் மட்டுமல்ல, மாறாக சர்வதேச அளவில் தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஓர் எச்சரிக்கையாகும்.
இத்தாலியில் முதலாளித்துவ வர்க்கம் அதிவலதை நோக்கி திரும்புவது ஐரோப்பிய முதலாளித்துவத்தின் தீர்க்கவியலாத நெருக்கடிக்கான விடையிறுப்பு மட்டுமல்ல, மாறாக வர்க்க போராட்டம் வளர்வதற்கு எதிரான விடையிறுப்பும் ஆகும். ஐரோப்பாவில் பல ஆண்டுகால சமூக நெருக்கடிக்குப் பின்னர், தொழிலாளர்கள் தீவிரமயப்பட்டு வருகிறார்கள். ஜேர்மன் உலோகத்துறை தொழிலாளர்கள், தனியார்மயமாக்கலை எதிர்க்கும் பிரெஞ்சு இரயில்வே தொழிலாளர்கள், பிரிட்டனில் ஆசிரியர்கள் மற்றும் போர்-எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மற்றும் கட்டலோனியாவில் ஸ்பானிய அரசு ஒடுக்குமுறையின் எதிர்ப்பாளர்கள் ஆகிய அனைத்து போராட்டங்களும் பாரிய வேலைநிறுத்தங்களும் அதிகரித்து வரும் சமூக கோபம் மற்றும் போர்குணத்தை வெளிப்படுத்துகின்றன.
பிரான்சில் அவசரகால நிலைமை, கட்டலோனியாவில் அமைதியான வாக்காளர்கள் மீது போலிஸ் ஒடுக்குமுறைகள், ஜேர்மனியில் "இடதுசாரி தீவிரவாதத்திற்கு" எதிரான பிரச்சாரங்கள் ஆகியவை உட்பட ஐரோப்பிய ஒன்றியம் போலிஸ்-அரசு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் இணையத்தைத் தணிக்கை செய்ய பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்களுடனும் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது. இப்போதைய சர்வதேச பதட்டங்கள் மற்றும் உள்நாட்டு சமூக மோதல்களுக்கு இடையே, ஆளும் வர்க்கம் அதிக வெளிப்படையாக வலதுசாரி மற்றும் இராணுவவாத ஆட்சி வடிவங்களுக்குத் திரும்பி வருகிறது.
2008 வோல் ஸ்ட்ரீட் நிதியியல் பொறிவின் அதிர்ச்சிகளுக்குப் பத்தாண்டுகளுக்குப் பின்னர், யூரோ மண்டலத்தின் ஆழ்ந்த பொருளாதார மற்றும் வர்க்க முரண்பாடுகள் அம்பலமாயின. யூரோ மண்டல நாடுகளில் அரசு திவாலாகும் சாத்தியக்கூறு குறித்து நிதியியல் சந்தைகள் பதட்டமானதும், இது அரசு கடன்கள் மீது ஊகங்களுக்கு இட்டுச் சென்றது, கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் அதற்கு அங்காலும் முன்னொருபோதும் இல்லாதளவில் சிக்கன நடவடிக்கைகளுக்கு அழுத்தமளிக்க அரசாங்கங்கள் இந்த அரசு கடன்களைப் பயன்படுத்தி கொண்டன. பத்தாண்டுகளுக்குப் பின்னரும், அடியிலிருக்கும் இந்த முரண்பாடுகளில் எதுவுமே தீர்க்கப்படவில்லை.
இதிலிருந்து Lega மற்றும் M5S ஆதாயமடைந்துள்ளன என்ற உண்மை, ஜனநாயக கட்சி (PD) மற்றும் அதன் கூட்டாளிகளான Rifondazione Comunista போன்ற போலி-இடதுகள் மீதான ஒரு பேரழிவுகரமான குற்றப்பத்திரிக்கையாக உள்ளது. இக்கட்சிகளாலும், அத்துடன் வலதுசாரி அரசாங்கங்களாலும், பல ஆண்டுகளாக சிக்கன நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார மந்தநிலைமை மேற்பார்வை செய்யப்பட்ட பின்னர், இத்தாலியில் சமூக நிலைமைகள் நாசகரமாக உள்ளன. பத்து மில்லியன் கணக்கானவர்கள் வறுமையில் வாழ்கின்றனர், 7.5 மில்லியன் பேர் வேலைவாய்ப்பின்றி உள்ளனர், 10 மில்லியன் பேர் மருத்துவ கவனிப்பின்றி உள்ளனர். இத்தாலிய மக்களில் மிகப் பணக்கார 1 சதவீதத்தினர் ஏறத்தாழ 20 சதவீத மிக வறிய ஏழைகளை விட 240 மடங்கு சொத்துக்களைக் கொண்டுள்ளனர்.
மிகப் பெரும் அபாயகரமான நிலைமை மேலெழுந்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இத்தாலியின் அனைத்து பிரதான முதலாளித்துவ கட்சிகளுக்கும் எதிரான பெருந்திரளான மக்களின் கோபத்திற்கு இடையே, Lega மற்றும் M5S உம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக இத்தாலிய நலன்களின் மிகத் தீவிர பாதுகாவலர்களாக காட்டிக் கொண்டு, ஒரு தேசியவாத வாய்வீச்சு முறையீட்டைச் செய்ய இடதிலிருக்கும் அரசியல் வெற்றிடத்தைச் சாதகமாக்கி வருகின்றன. அதேநேரத்தில், அவை 500,000 புலம்பெயர்ந்தவர்களைச் சுற்றி வளைக்கவும் மற்றும் நாட்டை விட்டு வெளியேற்றவும் இனவாதம் மற்றும் பாசிசவாதத்திற்கு அப்பட்டமான முறையீடுகளுடன் அழைப்பு விடுக்கின்றன.
இந்த அச்சுறுத்தல்கள் இத்தாலியில் பாரிய எதிர்ப்பைத் தூண்டியுள்ளது, மார்ச் தேர்தல்களுக்கு சற்று முன்னர் ரோமில் புலம்பெயர்ந்தோர்-விரோத இனவாதத்திற்கு எதிரான போராட்டங்களில் 100,000 க்கும் அதிகமானவர்கள் இணைந்தனர்.
M5S-Lega அரசாங்கத்திற்கான di Maio இன் ஆரம்ப திட்டத்தை மத்தரெல்லா சிறப்பதிகாரம் கொண்டு தடுத்தபோது, அவர் அவற்றின் போலிஸ் அரசு கொள்கைகளையோ அல்லது புலம்பெயர்ந்தோர்-விரோத இனவாதம் குறித்த அவர்களின் முறையீடுகளையோ நிராகரிக்கவில்லை. இத்தகைய கொள்கைகள் ஐரோப்பிய ஆளும் உயரடுக்கில் ஒருமனதான ஆதரவைப் பெற்றுள்ளன. M5S-Lega அரசாங்கம் யூரோ குழுமத்திலிருந்து வெளியேறி ஒரு பலவீனமான இத்தாலிய தேசிய நாணயத்தை அறிமுகப்படுத்தி, போட்டியைச் சமாளிக்க நாணய மறுமதிப்பீட்டு கொள்கைக்குத் திரும்புக்கூடும் என்ற அறிகுறிகளை மட்டும் தான் மத்தரெல்லா சாடியிருந்தார்.
Lega இப்போதும் கூறிவரும் அதுபோன்ற முன்மொழிவுகள், யூரோவின் பொறிவு குறித்தும் மற்றும் இத்தாலியின் 2.3 ட்ரில்லியன் யூரோ அரசு கடன் மீதான சர்வதேச நிதியியல் நெருக்கடி குறித்தும் நிதியியல் சந்தைகளின் அச்சங்களை எரியூட்டி வருகின்றன. நேற்று பிசாவில் நடந்த ஒரு கூட்டத்தில், சல்வீனி கூறினார்: “எங்களின் வேலைத்திட்டத்தை ஆதரிப்பவர்களுடன் ஒன்றுசேர்ந்து நாங்கள் வாக்களிக்க செல்வோம், ஏனென்றால் இத்தாலி எப்போதுமே ஐரோப்பாவுக்கு "ஆமாம் சாமி,” போடும் ஒரு நாடாக இனியும் இருக்கக்கூடாது,” என்றார்.
சல்வீனியின் 2016 பேட்டி ஒன்றின் காணொளி நேற்று காலை இத்தாலிய சமூக ஊடங்களில் பரவியதாக Ouest France அறிவித்தது. சல்வீனி அக்காணொளியில், அவரது கட்சி இத்தாலியை யூரோவிலிருந்து வெளியேற்றும் என்றும், 1990 களில் பிரிட்டிஷ் பவுண்டுக்கு எதிராக நிதியாளர் ஜோர்ஜ் சோரோஸ் செய்ததைப் போல இத்தாலிய கடன் சம்பந்தமான ஊகங்களைத் தடுக்க அதை இரவோடு இரவாக செய்யும் என்றும் கூறியிருந்தார்.
சல்வீனி கூறினார், “நான் என்ன கூறுகிறேன் என்றால், Lega அரசாங்கம் அமைத்தால், நாம் (யூரோவிலிருந்து) வெளியேறுகிறோம். ஆனால் இதுபோன்றவொரு நிலைமையில் அது மாதிரியான விடயத்தை நீங்கள் மிகவும் வேகமாக செய்ய வேண்டியிருக்கும், இல்லையென்றால் ஒரு கருத்து வாக்கெடுப்புக்காக மூன்று மாதகால பிரச்சாரம் செய்தால், சோரோஸ் வகையறாக்கள் உங்களை சாகடித்துவிடும். நம் இடுப்பு கோமணத்தைத் தவிர அவர்கள் வேறெதையும் விட்டு வைக்க மாட்டார்கள். நம் நாட்டில் இன்னமும் ஆரோக்கியமாக உள்ள இத்தாலிய தொழில்துறையின் எஞ்சிய பகுதிகளையும் அவர்கள் விலைக்கு வாங்கிவிடுவார்கள். ஆகவே இந்த விடயத்தில் நீங்கள் நடுவில் நிற்க முடியாது: ஒன்று உள்ளே இருக்கலாம் அல்லது வெளியே இருக்கலாம்.”
Europe1 இல், பொருளாதார கட்டுரையாளர் Axel de Tarlé யூரோ கலையக்கூடும் என்று எச்சரித்தார். 56 சதவீத இத்தாலியர்கள் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவத்திலிருந்து இத்தாலிக்கு எந்த பயனும் இல்லையென்று கருதுவதாக குறிப்பிட்ட அவர், எதிர்கால இத்தாலிய தேர்தல்கள் "யூரோ மீதான ஒரு கருத்து வாக்கெடுப்பாக" இருக்குமென எச்சரித்தார்.
அவர் இதையும் சேர்த்துக் கொண்டார், “யூரோ முடிவுக்கு வருவதாக மக்கள் நினைக்கத் தொடங்கினால், வங்கியில் பணம் வைத்திருப்பவர்கள் அவரவர்களின் வங்கிகளிலிருந்து தங்களின் சேமிப்புகளை யூரோவில் பெற ஓடுவதையும், (ஸ்பானிஷ்) பெசேட்டா, (இத்தாலிய) லிரா மற்றும் (போர்ச்சுகீஸ்) எஸ்குடோ என உள்நாட்டு செலாவணிகளுக்குத் திரும்புவதை உள்ளடக்கிய பலவந்தமான மறுமதிப்பீட்டுக்கு முன்னதாக அவற்றை பாதுகாப்பான இடங்களில் வைப்பதையும் நீங்கள் பார்ப்பீர்கள். நாம் இன்னும் இந்த பேரழிவுகரமான சூழலுக்குள் இல்லை. ஐரோப்பா நெருக்கடிகளுக்குள் சென்று கொண்டிருப்பதாக அவர்கள் தெரிவிப்பதை, நாம் பார்க்கிறோம். 'அவரவர் அவரவருக்காக' என்று தற்போது மிகத் தெளிவான ஒரு கொள்கை வைத்திருக்கும் ஜேர்மனி குறிப்பாக ஒரு மென்மையான அணுகுமுறை எடுக்குமா என்பதை நாம் பார்க்க இருக்கிறோம்,” என்றார்.
ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தின் எந்த கன்னையிடமும் தொழிலாளர்களுக்கு வழங்க முற்போக்கானது எதுவுமில்லை. இராணுவவாதம் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான ஒரு போராட்டத்தில் ஐரோப்பா எங்கிலுமான தொழிலாள வர்க்கத்தின் ஓர் ஐக்கியப்பட்ட சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டி இருப்பதே அவசர அவசியமாகும், இதுவே சல்வீனி மற்றும் di Maio உடனான மத்தரெல்லாவின் உரையாடல்களில் இருந்து எடுக்க வேண்டியிருக்கும் தீர்மானமாக உள்ளது.