ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Indian workers and students demand freedom for Julian Assange

இந்திய தொழிலாளர்களும் மாணவர்களும் ஜூலியான் அசான்ஜை விடுதலை செய்யக் கோருகின்றனர்

By our reporters 
15 June 2018

ஜூலியான் அசான்ஜை பாதுகாக்க உலக சோசலிச வலைத் தளம் நடத்தும் பிரச்சாரத்திற்கு தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடமிருந்து முக்கிய ஆதரவை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) இந்திய ஆதரவாளர்கள், பெற்றுள்ளனர்.

இந்திய ட்ரொட்ஸ்கிஸ்டுகள் அசான்ஜை விடுதலை செய்யக்கோரி, ஜூன் 19 அன்று மாலை 5 மணிக்கு, தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையிலிருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள ஒரு சர்வதேச வாகன மற்றும் மின்னணு உற்பத்தி மையமான ஸ்ரீபெரும்புதூரிலுள்ள மத்திய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். அதே நாளில் மாலை 4 மணிக்கு, இலங்கையில், சோசலிச சமத்துவக் கட்சியும் (SEP), சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பும் (IYSSE) இணைந்து கொழும்பு கோட்டை இரயில் (புகையிரத) நிலையத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.

சமீபத்திய ஆண்டுகளில் விக்கிலீக்ஸின் ஆசிரியர் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் பற்றி இந்தியாவில் பெருநிறுவன ஊடகங்களும், போலி இடதுகளும் செய்தி எதையும் வெளியிடவில்லை, அதிலும் குறிப்பாக, 2014 இல் பிரதம மந்திரி நரேந்திர மோடியின் இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதாக் கட்சி (BJP) ஆட்சிக்கு வந்த பின்னரும், வாஷிங்டனுடன் புது தில்லியின் உறவு பலப்படுத்தப்பட்ட பின்னரும் அது நிகழவில்லை. அதன் விளைவாக, அசாஞ்ச் எதிர்கொள்ளும் அபாயங்கள் பற்றி பலரும் அறிந்திருக்கவில்லை, மேலும் இந்திய ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மூலமாக மட்டும் தான் அது பற்றி அறிந்து கொண்டுள்ளனர்.

மேற்கு வங்க மாநில தலைநகரான கொல்கத்தாவில், பிரச்சாரகர்கள் ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்களுடன் பேசினர்.

சாயன் என்ற மாணவர், மக்கள் “தங்கள் குரலை உயர்த்த வேண்டும்” என்பதுடன், அசான்ஜின் “நிபந்தனையற்ற விடுதலை” குறித்தும் போராட வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், “அமெரிக்க இராணுவம் ‘ஜனநாயகம்’ மற்றும் ஸ்திரத்தன்மையை ஸ்தாபிக்கும் பெயரில் மத்திய கிழக்கு முழுவதிலும் எண்ணற்ற அட்டூழியங்களையும் அழிவுகளையும் நிகழ்த்தியுள்ளது” என்றும், “உண்மையான காரணம் இப்பிராந்தியத்தில் அமெரிக்க மேலாதிக்கத்தை திணிப்பது தான்” என்றும் கூறினார்.

“விக்கிலீக்ஸூம் அசாஞ்சேயும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பாத்திரம் பற்றியும், சிரியா, லிபியா மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் உயிர்களை அழிக்கும் அதன் பொறுப்பற்ற நாசவேலைகள் பற்றியும் அம்பலப்படுத்தியுள்ளனர். ஆனால், இந்த மிகப்பெரிய உண்மையை அம்பலப்படுத்தியதற்காக, ஆறு ஆண்டுகளாக சிறை போன்ற நிலைமைகளில் வாழ அசாஞ்ஜ் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.

“உண்மையை பேசிய காரணத்திற்காக கலிலியோவை மௌனமாக்கி சிறையிலிட்டது போல, ஜூலியானும் சிறை வைக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் பிரபல செய்தி ஊடகம், பேச்சுரிமை மற்றும் அடிப்படை மனித உரிமைகள் மீதான இந்த அத்துமீறலுக்கு எதிராக எதையும் பேசவில்லை, மாறாக அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு ஆதரவாக மட்டும் பேசுகின்றன.”

அசாஞ்ஜ் மீதான அடக்குமுறை என்பது “ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வு அல்ல” என்று சாயன் கூறியதோடு, இந்தியாவிலுள்ள அரசியல் நிலைமை பற்றியும் குறிப்பிட்டார். “இந்து தீவிரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்தவரும், மேலும் இந்து தேசியவாத பிஜேபி க்கு பெருநிறுவன வணிகர்கள் நிதியளித்தது பற்றிய உண்மையை அம்பலப்படுத்தியவருமான பத்திரிகையாளர் திருமதி கௌரி லங்கேஷூக்கு (பெங்களூரில்) என்ன நிகழ்ந்தது என்பது பற்றி மக்கள் நினைவுகூர வேண்டும். உண்மையை பேசிய ஒரே காரணத்திற்காக அவரது வீட்டில் வைத்து அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.”

“ஹரியானா மாநிலத்தில் மானேசரில் மாருதி சுசூகி வாகன உற்பத்தி ஆலையில் தொழிலாளர்கள், குறைவூதிய ஒப்பந்த தொழிலாளர் முறையை எதிர்த்தும், மேலும், சிறந்த ஊதியம் பெற மற்றும் சுயாதீன தொழிற்சங்கத்தை ஸ்தாபிக்க உரிமை கோரியும் போராட தொடங்கிய போது, அவர்களை ஒரு உதாரணமாக்கவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களை மகிழ்விக்கவும் எண்ணி, அவர்களில் 13 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.

“உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளும், எதிர்த்து கண்டனம் செய்யும் ஒவ்வொரு குரலையும் மௌனமாக்க முயற்சிக்கின்றன, முதலாளித்துவத்திற்கும் அவர்களது புவிசார் நலன்களுக்கும் ஆதரவளிக்க அவை உடந்தையாக இருப்பது குறித்த ஆதாரங்களை அழிக்கவும் தமது அதிகாரங்கள் அனைத்தையும் பயன்படுத்துகின்றன. எனவே, ஜூலியான் அசாஞ்சேக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதற்கு நாம் அனைவரும் சேர்ந்து குரல் எழுப்ப வேண்டும்.”

ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் மற்றொரு மாணவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “அதே விடயங்கள் தான் இந்தியா முழுவதிலும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன, ஊடகவியலாளர்கள் அரசாங்கங்களை எதிர்ப்பதற்காக தாக்குதலுக்கு உள்ளாகின்றனர், மேலும், எந்தவொரு வகையான இடதுசாரி சிந்தனையுடன் இருக்கும் எவர் மீதும் ‘தேச எதிர்ப்புவாதி’ என முத்திரை குத்தப்பட்டு தாக்கப்பட்டு வருகின்றனர்.” 


ஷார்மன் மற்றும் ஷௌநாக்

ஷார்மன் மற்றும் ஷௌநாக் என்ற இருவரும், அசான்ஜின் உரிமைகள் மீதான தாக்குதல்கள் பற்றி அவர்கள் கொஞ்சம் அறிந்திருப்பதாக தெரிவித்தனர் என்றாலும், பிரச்சாரத்திற்கு ஆதரவளித்ததுடன், “இந்த ஒடுக்குமுறையை எதிர்த்து நாம் எப்படி போராடுவது” என்பது பற்றி அறிய விரும்பினர். 

மேலும், பிற மாணவர்களான சோஹம் மற்றும் மோன்சிஜ் இருவரும், அசான்ஜை பாதுகாக்கும் ICFI இன் பிரச்சாரத்தை பாராட்டியதோடு, இது “ஒரு உன்னதமான காரியம்” என்றும் கூறினர்.

மைத்திரேயி என்பவரும் சேர்ந்து குரல் கொடுத்து, இவ்வாறு அறிவித்தார்: “அசாஞ்ஜ் மற்றும் லங்கேஷ் போன்றவர்கள் முக்கியமானவர்கள். உண்மையை வெளிப்படுத்த அவர்கள் மேற்கொண்ட செயல்கள் தைரியமானவை. பல பத்திரிகையாளர்களும் எதிர்ப்பாளர்களும் தங்களது உயிரையே இழந்துள்ளனர், ஏனென்றால் அவர்கள் அரசாங்கங்கள் பற்றிய உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளனர் என்பது தான் காரணம்.”

தமிழ்நாட்டில், சென்னையிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வாகன மற்றும் மின்னணு உற்பத்தி ஆலைத் தொழிலாளர்களுடன் பிரச்சாரகர்கள் பேசினர். அந்த பகுதியிலுள்ள வாகன மற்றும் மின்னணு உற்பத்தி நிறுவனங்களில் வேலை செய்பவர்களில் பலரும் தமிழ்நாட்டையும், மற்றும் பீகார், ஒரிசா மற்றும் மேற்கு வங்கம் போன்ற பிற இந்திய மாநிலங்களையும் சேர்ந்த வறிய கிராமங்களிலிருந்து வந்தவர்களாவர்.


ஆரோக்கியா

ஆரோக்கியா, வயது 20, Rocco Parryware நிறுவனத்தில் பணிபுரியும் இவர், அசான்ஜேக்கு இழைக்கப்பட்டிருக்கும் கொடுமையை முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்கும் இந்த பிராச்சாரத்துடன் உடன்பட்டு இவ்வாறு தெரிவித்தார்: “ஒரு உலகக் கட்சியிலிருந்து வரும் உங்களை சந்திப்பது குறித்தும், ஜூலியான் அசான்ஜ் க்கு முழு ஆதரவளிப்பது குறித்தும் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர் மீதான இந்த தாக்குதல்கள் பேச்சுரிமை மீதான தாக்குதல்களாகவே உள்ளன. இந்நிலையில், தொழிலாளர்கள் மத்தியிலான ஒரு சர்வதேச பிரச்சாரம் மற்றும் கிளர்ச்சியின் மூலமாக மட்டும் தான் அசான்ஜை விடுவிக்க முடியும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.”

இந்திய ஆளும் உயரடுக்கினரால் எடுக்கப்படும் ஜனநாயக எதிர்ப்பு நடவடிக்கைகளையும், மற்றும் மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு எதிரான சதி வேட்டையையும் குறிப்பிட்டு, அவர் இதையும் சேர்த்துக் கூறினார்: “சிறையிலடைக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஐந்து ஆண்டுகளாக பிணை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பதை நம்ப முடியவில்லை. நாம் இந்தியாவை ஒரு ஜனநாயக நாடு என்று அழைக்கிறோம், ஆனால், அந்த தொழிலாளர்களுக்கோ பிணை அனுமதி கூட வழங்கப்படவில்லை என்பதுடன், மாருதி சுசூகி தொழிலாளர்கள் வெளிநாட்டு முதலீட்டை பாதிக்கக்கூடும் என்ற நீதிபதியின் கருத்துக்களோ இன்னும் மூர்க்கத்தனமானவையாக உள்ளன.

“இந்த அரசியலமைப்பில், சட்டத்திற்கு முன்பாக அனைவரும் சமமாக கருதப்பட வேண்டும், ஆனால் நீதிபதியின் கருத்துக்களும் பிணை மறுப்பும், மாருதி சுசூகி நிறுவனத்தால் தொடங்கப்பட்ட ஜோடிப்பு வழக்கிற்கு அவர் உடந்தையாக இருப்பதை வெளிப்படுத்துகின்றன. பொலிஸ், நீதிமன்றங்கள் மற்றும் இராணுவமும் செல்வந்தர்களின் நலன் பற்றியே அக்கறை கொண்டுள்ளன என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். நீங்கள் ஒரு உலகக் கட்சி என்பது பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன், அத்துடன், உண்மையில் உங்களது சமத்துவக் கொள்கையை நான் விரும்புகிறேன். நான் நிச்சயமாக உங்களது இணையத் தளத்தை வாசிப்பேன்.”


தாமோதரன்

Wheels India நிறுவனத்தின் ஒரு பொறியாளரான தாமோதரன் என்பவர், அசாஞ்ஜ் க்கு எதிரான சூழ்ச்சி என்பது அடிப்படை உரிமைகள் மீதான ஒரு தாக்குதலாகவே உள்ளது என்று தெரிவித்தார். மேலும், மத்திய கிழக்கில் அமெரிக்க போர் குற்றங்கள் பற்றி அவர் கருத்துத் தெரிவித்தார். “ஜனநாயகத்திற்காக ஈராக் மீது அமெரிக்கா படையெடுக்கவில்லை என்பது எனக்கு ஆரம்பத்திலிருந்தே தெரியும். அதன் முக்கிய நோக்கம் எண்ணெயை கொள்ளையடிப்பதாகும்.”

Lumax நிறுவன பொறியாளரான வினோத் என்பவர், பின்வருமாறு கூறினார்: “அனைத்து அரசாங்கங்களும் அவர்களது நாடுகளில் இயங்கி வரும் நாடுகடந்த நிறுவனங்களின் சார்பாகவே தலையீடு செய்கின்றன என்பதுடன், அந்த நிறுவனங்கள் எந்த நாட்டிலும் வணிகம் செய்ய அனுமதிக்கப்படுகின்றன என்ற உங்களது கருத்தை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், ஒரு ஆஸ்திரேலிய குடிமகனான ஜூலியான் அசாஞ்சே மட்டும் எந்தவொரு நாட்டையும் அணுகக்கூடாது என்பது நியாயமில்லை. எனவே, ஆஸ்திரேலியாவில் அவரது குடியுரிமையை அசாஞ்ச் பயன்படுத்துவதற்கான அவரது உரிமையை நான் ஆதரிக்கிறேன்.

“உங்களது உலகக் கட்சியை நான் ஆதரிப்பேன் என்பதுடன், உங்களது இணைய தளத்தையும் வாசிப்பேன். மேலும், ஜூன் 19 அன்று ஸ்ரீபெரும்புதூரில் நடைபெறவுள்ள உங்களது ஆர்ப்பாட்டத்திலும் நான் பங்கேற்பேன், அத்துடன், உங்கள் இயக்கத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கவும் நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன்.” 

 


தாமு

Royal Enfield தொழிலாளியான 22 வயது தாமு என்பவர் இவ்வாறு கூறினார்: “ஒரு ஆஸ்திரேலிய குடிமகனாக இருக்கும் அசாஞ்ஜ் ஆஸ்திரேலிய அரசாங்கத்தால் பாதுகாக்கப்படவில்லை என்பது பரிதாபகரமாக உள்ளது. அமெரிக்க போர் குற்றங்களுக்கு எதிரான அவரது தைரியமான நிலைப்பாட்டை நான் ஆதரிக்கிறேன்.”

அதேபோல, தமிழ்நாட்டில் கூட, ஆளும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (All India Anna Dravida Munnetra Kazhagam-AIADMK) மாநில அரசாங்கம் இதை ஒத்த அடக்குமுறை நடவடிக்கைகளையே பிரயோகித்ததைக் குறிப்பிட்டு, தாமு இவ்வாறு கூறினார்: “தூத்துக்குடியில் சமீபத்தில் 13 ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிசார் கொன்று குவித்ததை நான் கண்டனம் செய்கிறேன், ஏனென்றால் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு சொந்தமான தாமிர உருக்காலை மூலம் உள்ளூர் நிலத்தடி நீர் விஷமாக்கப்படுவதை அவர்கள் எதிர்க்க துணிந்தனர் என்பது மட்டும் தான் அதற்கு காரணம். AIADMK, பிரதம மந்திரி மோடியின் இந்தியாவின் மத்திய அரசாங்கத்துடனான நெருங்கிய ஒத்துழைப்பில் செயலாற்றுகிறது.”

வேலை வழங்குநர்கள் விரும்பியபடி பணிநீக்கம் செய்ய வகைசெய்வதாக, தொழிலாளர் சட்டங்களில் மோடி அரசாங்கம் ஏற்படுத்திய திருத்தங்கள் குறித்து தாமு கண்டனம் தெரிவித்தார். “240 நாட்கள் தொடர்ந்து வேலை செய்த தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டும். இதுவொரு பாராளுமன்ற சட்டமாக இருந்தது, ஆனால் மோடி அதை நீக்கிவிட்டு, விரும்பிய படி தொழிலாளர்களை வேலைக்கு சேர்ப்பதும் நீக்குவதும் என்ற புதிய கொள்கையை (a new hire-and-fire policy) நிறைவேற்றியுள்ளார். மோடி ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு பட்டதாரியும் வேலைவாய்ப்பை பெற முடியும் என்றும் நாட்டில் பெரும் வளர்ச்சி ஏற்படும் என்றும் ஊடகங்கள் முன்பு கூறின, ஆனால் அது எதுவும் நடக்கவில்லை. எல்லாம் ஒரு கேலிகூத்தாக உள்ளது. எனவே, மாநில மற்றும் மத்திய அரசாங்கங்கள் இரண்டையும் நான் வெறுக்கிறேன்.”

ஆசிரியர் பின்வரும் கட்டுரையையும் பரிந்துரைக்கிறார்:

ஜூலியான் அசான்ஜை விடுதலை செய்யக்கோரும் கூட்டங்களுக்கு இலங்கை மற்றும் இந்தியாவில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது!
[7 June 2018]