ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan workers and students defend Julian Assange

இலங்கை தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் ஜூலியான் அசான்ஜை பாதுகாக்கின்றனர்

By our correspondents 
7 June 2018

சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சமூக சமத்துவத்துகான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பும் ஜூலியான் அசான்ஜை பாதுகாப்பதற்காக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்னெடுக்கும் பிரச்சாரத்திற்கு தொழிலாளர்கள், மாணவர்கள், கலைஞர்கள் மற்றும் கல்வியாளர்களிடமிருந்தும் ஆதரவை வென்றுள்ளன.

இலங்கை ட்ரொட்ஸ்கிஸ்டுகள், விக்கிலீக்ஸ் ஆசிரியரின் விடுதலைக்காக ஜூன் 19 அன்று மத்திய கொழும்பில் உள்ள கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் ஒரு மறியல் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர். இந்திய நகரான சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூரிலும் ஒரு மறியல் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்)

ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மற்றும் இலங்கையில் உள்ள ஏனைய தொழிலாளர்களிடம் இருந்தும் பெறப்பட்ட பேட்டி மற்றும் அறிக்கைகளை இங்கு பிரசுரிக்கின்றோம்.


சசாங்க

நான்காண்டுகால சமூகவியல் மாணவரான சசாங்க கூறியதாவது: "ஜூலியான் அசான்ஜின் விடுதலைக்காக சோசலிச சமத்துவக் கட்சி முன்னெடுக்கும் பிரச்சாரத்தை நான் உறுதியாக ஆதரிக்கிறேன். அமெரிக்க ஏகாதிபத்தியம் அசான்ஜ் போன்றவர்களை பிடிக்க முயற்சிப்பதற்கு காரணம், அதன் போர்க்குற்றங்கள் அம்பலத்துக்கு வருவது மக்களை தீவிரமயமாக்கும் என்று அது அஞ்சுவதே ஆகும்.

"முதலாளித்துவ அரசாங்கங்களின் ஜனநாயக விரோத வேலைத்திட்டங்களை அம்பலப்படுத்த முற்படும் மற்றவர்களை அச்சுறுத்துவதற்காகவே அசான்ஜ் வேட்டையாடப்படுகிறார். இலங்கை அரசாங்கமும் சமூக ஊடகங்களுக்கு எதிராக தணிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது, அதனால் இந்த பிரச்சாரம் இலங்கை மக்களுக்கு மிகவும் பொருத்தமானதாக உள்ளது."

மூன்றாம் ஆண்டு விஞ்ஞான மாணவரான ஹெஷான்: "நான் யுத்தத்தை எதிர்த்து உலக அமைதிக்காக முன்நிற்கிறேன். போர் நம் வாழ்வுரிமையை அழிக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம் இன்னொரு உலக யுத்தத்தை நோக்கி செல்கிறது, அதனால் அது இது பற்றிய உண்மைகள் அம்பலப்படுவதை விரும்பவில்லை. எமது பேச்சு சுதந்திரத்தை மீற எந்த நாட்டையும் அனுமதிக்க கூடாது. அசான்ஜை விடுதலை செய்வதற்கான இந்த பிரச்சாரத்தையும் முதலாளித்துவத்திற்கும் அதன் அழிவுகரமான செயற்பட்டியலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு சோசலிச இயக்கத்தை அபிவிருத்தி செய்வதையும் நான் வரவேற்கிறேன்."


தரிந்து

அசான்ஜ் துன்புறுத்தப்படுவது "ஊடக சுதந்திரத்தின் மீதான தாக்குதிலின்" ஒரு பகுதியாகும் என்று இறுதி ஆண்டு மாணவர் தரிந்து கூறினார். அரசாங்கத்தை விமர்சித்த பல இலங்கை ஊடகவியலாளர்களின் "காணாமற் போனது" பற்றி அவர் சுட்டிக்காட்டினார். "சமீபத்திய ஆண்டுகளில் காணாமல் போன ஒரு பத்திரிகையாளர் கடூ கண்டுபிடிக்கப்படவில்லை," என்று தரிந்து கூறினார்.

"இந்தத் தாக்குதல்கள் முதலாளித்துவத்தின் பூகோள நெருக்கடியுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப் போராடும் பத்திரிகையாளர்களை பயமுறுத்தி, மௌனிக்க வைப்பதே அவர்களின் நோக்கமாகும். ஏகாதிபத்தியத்தின் சில குற்றங்களை அம்பலப்படுத்தியதால் தான் அசான்ஜ் துன்புறுத்தப்படுகிறார். அசான்ஜைப் பாதுகாப்பதற்கான பிரச்சாரத்துக்கு இலங்கை மாணவர் சங்கங்கள் மற்றும் இளைஞர் அமைப்புக்களும் பரந்தளவில் ஆதரிக்க வேண்டும்."


ஹசிதா

சோசலிச விஞ்ஞான மாணவியான ஹசிதா, "ஜூலியன் அசான்ஜை விடுதலை செய்" என்ற சுலோகத்தைக் கண்ட பின்னர் சோ.ச.க. பிரச்சாரகர்களிடம் பேசுவதற்கு முடிவு செய்தார்.

"அசான்ஜ் ஒரு ஆஸ்திரேலிய பத்திரிகையாளராகவும் விக்கிலீக்ஸின் நிறுவனராகவும் உள்ளார் என்று எனக்குத் தெரியும், ஆனால் லண்டனில் ஈக்குவடோர் தூதரகத்தில் அவர் கிட்டத்தட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று எனக்கு தெரிந்திருக்கவில்லை. அவருக்கு எந்தவொரு வெளித் தொடர்பும் இல்லாமல் வைக்கப்பட்டுள்ளார் என்றும் எனக்குத் தெரியாது. இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளை நான் எதிர்க்கிறேன்."

இலங்கையில் கொழும்பிற்கு வடக்கே பிரதான சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையத்தில் (சு.வ.வ.) உள்ள தொழிலாளர்களிடம் சோ.ச.க. பிரச்சாரகர்கள் பேசினர். கிட்டத்தட்ட 40,000 தொழிலாளர்கள், பெரும்பாலும் கிராமப்புறங்களில் இருந்து வந்த பெண்கள், இந்த மலிவான உழைப்பு ஏற்றுமதி உற்பத்தி நிலையங்களில் வேலை செய்கின்றனர்.


வசந்த

இலங்கையின் வட மத்திய மாவட்டமான அனுராதபுரத்தில் இருந்து வந்த ஒரு ஆடைத் தொழிலாளி வசந்த தெரிவித்ததாவது: "அசான்ஜ் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று நான் கூறுகிறேன். இது வெறுமனே அவர் மீதான தாக்குதல் மட்டும் அல்ல என்பது தெளிவாக உள்ளது.

"உலகப் போரின் ஆபத்திற்கு எதிராகப் போராடுவது எல்லா இடங்களிலும் உள்ள தொழிலாளர்களுக்கும் முக்கியம், ஏனென்றால் அத்தகைய மோதலின் அழிவு மிகப்பெரியது. எனவே யுத்தத்திற்கான அரசாங்க தயாரிப்புக்களைப் பற்றி முடிந்தவரை அதிகமானளவு தகவல்களை வெளியிடுவது அவசியம்."

காலை 7.30 மணி தொடக்கம் இரவு 7.30 மணி வரை தான் தொழில் செய்வதாகவும் வேறு எதையும் பற்றி யோசிக்க சிறிது நேரம் தான் உள்ளதாகவும் வசந்த கூறினார். அவருடைய மாத சம்பளம் 35,000 ரூபாய்கள் (220 அமெரிக்க டாலர்) மற்றும் ஒரு மணித்தியால மேலதிக வேலை நேரத்திற்கு 150 ரூபாவும் கிடைக்கும். இதை வைத்துக்கொண்டு அவரால் சமாளிக்க முடியாது. ஒரு ஊழியர் இரண்டு நாட்களுக்கு மேல் வேலைக்கு வராவிட்டால் 2,500 ரூபாய் மாதாந்த கொடுப்பனவு கிடைக்காது, என அவர் கூறினார்.

"உங்களிடம் பேசுவதன் மூலம் மட்டுமே சர்வதேச அரசியலைப் பற்றி நான் கற்றுக் கொள்ள முடிகிறது. சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும் என்ற உங்களது பிரசுரத்தை படித்தேன், மேலும் இதைப் பற்றி கலந்துரையாட வேண்டும்."

மற்றொரு சு.வ.வ. தொழிலாளி மகேஷ், உலக யுத்தத்தின் ஆபத்தை பற்றி கருத்து தெரிவித்ததோடு அசான்ஜின் விடுதலைக்கு அழைப்பு விடுத்தார்.

"நான் போருக்கு எதிரானவன்," என்று அவர் கூறினார். "அமெரிக்கா பல ஆண்டுகளாக யுத்தம் செய்து வருகிறது, மத்திய கிழக்கில் பெரும் அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு உலகப் போரின் சாத்தியம் உள்ளது."

2017 ஏப்ரலில், 30க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட குப்பை மலை பேரழிவு நடந்த மீதொடமுல்ல பகுதியைச் சேர்ந்த பாதணி தொழிற்சாலை தொழிலாளியான கௌசல்யா, "அரசியல்வாதிகள் பகிரங்கமாக ஊழல் மற்றும் குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர், அவர்களை அம்பலப்படுத்துவது சட்டவிரோதமானதாக இருக்கக் கூடாது,” எனத் தெரிவித்தார்.

"இந்த ஊழலை அம்பலப்படுத்துகின்ற எவரும் மக்களின் உரிமைகளுக்காக நிற்கிறார்கள். அதிகாரத்தில் உள்ளவர்களின் வழிமுறையானது இவற்றை அம்பலப்படுத்துவோரை வேட்டையாடி கொல்வதாகும்."

குப்பை மலை சரிந்தமை அரசாங்கம் மற்றும் ஆளும் ஸ்தாபனத்தின் மீது இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் இல்லாமல் ஆக்கியுள்ளது. என கௌசல்யா தெரிவித்தார். சோசலிச சமத்துவக் கட்சி உலக சோசலிச வலைத் தளம் ஆகியவை மட்டுமே இந்த மைய அரசியல் பிரச்சினைகளை விளக்குவதற்கு தலையிட்டன.

"இது ஜூலியன் அசாஞ்ச் செய்ததைப் போல அரசாங்கத்தின் குற்றங்களுக்கு எதிராக நிற்கும் வெளிப்படையான பத்திரிகையாளர்களின் முக்கியத்துவத்தை இது காட்டுகிறது. அசான்ஜ் விடுதலை செய்யப்பட வேண்டும். நாங்கள் அவருடன் உடந்தையாக நிற்கிறோம். "

இளம் கணக்காளர் அமில கூறியதாவது: "பல ஆண்டுகளுக்கு முன்பு ஜூலியன் அசான்ஜ் தனது அடிப்படை மனித உரிமைகளை இழந்து லண்டனில் உள்ள ஈக்குவடோர் தூதரகத்தில் தஞ்சம் கோரியபோது நான் மிகவும் கவலைப்பட்டேன். இப்போது அவர் பாதுகாத்துக்கொள்வதற்கான உரிமை பறிப்புடன் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.

"அதிகாரத்திற்கு எதிராக உண்மையைப் பேசியதால் அசான்ஜ் ஏற்கனவே ஒரு அரசியல் கைதிதான். அவரது மனித உரிமைகளை அபகரிப்பதானது அமெரிக்கா அதன் பல்வேறு குற்றங்களைப் பற்றிய உண்மையை மறைப்பதற்கு மேற்கொள்ளும் ஒரு முயற்சியே ஆகும்."

ஒரு கட்டுமானத் தொழில் பொறியாளர் இன்துனி தெரிவித்ததாவது: "அமெரிக்க போர்க்குற்றங்கள் தொடர்பான தகவல்களை அம்பலப்படுத்திய ஜூலியான் அசானஜ் ஒரு துணிச்சலான பத்திரிகையாளர் ஆவார். அவரது நடவடிக்கைகள் பென்டகன் ஆவணங்களை வெளியிட்டமைக்கு மிகவும் ஒப்பானது. ஏனைய அனைத்து தொழிலாளர்கள் போலவே, நாங்களும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்களாக இருக்க வேண்டும்."

அசான்ஜை தனிமைப்படுத்த, பார்வையாளர்களைத் தடுக்க அல்லது இணையத்தை அணுகுவதை தடுக்க ஈக்குவடோர் எடுத்துள்ள முடிவை அவர் எதிர்த்தார். "இது தொழிலாள வர்க்கம் மற்றும் சாதாரண மக்கள் நேர்மையான தகவலை அணுகுவதை தடுக்க முற்படும் முதலாளித்துவ முறையாகும்... நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரச்சாரத்தையும் அசான்ஜை விடுவிப்பதற்கு சிட்னியில் நடத்தப்படும் ஜூன் 17 பேரணியையும் நான் முழுமையாக ஆதரிக்கிறேன்."


ஜீவிதன்

கொழும்பில் ஒரு ஊடகவியலாளர் ஜீவிதன், அசான்ஜிற்கு எதிரான ஜனநாயக விரோத பிரச்சாரத்தை கண்டனம் செய்தார். நேர்மையான மற்றும் உண்மையான ஊடகவியலாளர்களை தாக்குவதில், அமெரிக்கா தனது சதித்திட்டங்களையும் குற்றங்களையும் மூடி மறைக்க முயற்சிக்கிறது, என தெரிவித்தார். "அமெரிக்கா மத்திய கிழக்கில் வளங்களுக்கான யுத்தங்ளை நடத்துவதுடன், இந்த உண்மையைச் சொல்லும் நபர்களை சிறையில் அடைக்கும் அல்லது கொல்லும். நாம் உறுதியாக அதை எதிர்க்க வேண்டும்."

இலங்கையின் தமிழ் சிறுபான்மையினரான ஜீவிதன், நாட்டின் உள்நாட்டுப் போரின்போது ஊடகங்களுக்கு எதிராக இதேபோன்ற தாக்குதல்களை அரசாங்கம் நடத்தியதாக தெரிவித்தார். "சர்வதேச செய்தியாளர்கள் யுத்த வலயத்திற்கு சென்று உண்மையை செய்தியாக்குவதில் இருந்து தடுக்கப்பட்டனர்," என அவர் தெரிவித்தார். "உண்மையை வெளிப்படுத்தும் துணிச்சலான உள்ளூர் ஊடகங்கள் அச்சுறுத்தப்பட்டன, சிலர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். அரசாங்கம் மாறியிருந்தாலும் இந்த பிரச்சினைகள் நிறுத்தப்படவில்லை."