Print Version|Feedback
Lift the ban on communications! Free Julian Assange!
தகவல்தொடர்புகள் மீதான தடையை நீக்கு! ஜூலியன் அசான்ஜை விடுதலை செய்!
James Cogan
4 June 2018
ஈக்வடோரிய அரசாங்கம் விக்கிலீக்ஸ் ஆசிரியர் ஜூலியன் அசான்ஜை சந்திக்கவரும் தனிப்பட்ட பார்வையாளர்கள் உள்ளடங்கலாக வெளி உலகுடனான அவரது அனைத்து தகவல்தொர்புகளையும் முடக்கி 10 வாரங்கள் ஆனதை ஜூன் 6 ஆம் தேதி குறிக்கின்றது. 2012 இல் அசான்ஜ் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சுவீடன் அரசாங்கங்களது ஒரு சட்டரீதியிலான வேட்டையாடலுக்கு முன்னால் ஈக்வடோர் அவருக்கு தஞ்சம் வழங்கிய அப்போதிருந்து, அசான்ஜ் இலண்டனில் உள்ள ஈக்வடோர் தூதரகத்தில் சிக்கி உள்ளார்.
தேசத்துரோக குற்றச்சாட்டுக்களை முகங்கொடுக்க, இது மரண தண்டனையையே கூட சாத்தியமாக்கும் என்கின்ற நிலையில், அமெரிக்காவிடம் அவரை ஒப்படைப்பதற்கான முதல்படியாக, ஜோடிக்கப்பட்ட பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுக்களின் பேரில் அசான்ஜை சுவீடனிடம் ஒப்படைக்க பிரிட்டன் நகர்ந்து வருகிறது. ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்கா நடத்திய போர் குற்றங்களையும், அத்துடன் மற்ற நாடுகளுக்கு எதிராக அமெரிக்காவினது சதிகளையும் உலகின் முன்னால் அசான்ஜ் அம்பலப்படுத்தியதற்காக அவரை தண்டிக்க வாஷிங்டன் சூளுரைத்துள்ளது.
கடந்த புதன்கிழமை கருத்துக்களில், ஈக்வடோரிய ஜனாதிபதி லெனின் மொரீனோ அசான்ஜை மவுனமாக்குவதைப் பாதுகாக்க முயன்றார். இந்நடவடிக்கையானது அவரது அரசாங்கம் அமெரிக்காவின் அழுத்தத்திற்கும் அச்சுறுத்தல்களுக்கும் அடிபணிந்திருப்பதன் விளைவு என்பதை ஏற்றுக் கொள்ளவியலாதளவுக்கு மறுக்க முயன்றார்.
மொரீனோ பேச்சு சுதந்திரம் குறித்து ஓர்வெல்லியன் பாணியிலான கருத்துரு ஒன்றை முன்வைத்தார், அது முற்றிலுமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மற்றும் ஜனநாயக உரிமைகளின் ஒவ்வொரு எதிரியினது நிலைப்பாட்டுடனும் பொருந்தியிருந்தது. அரசாங்கத்தின் மற்றும் பெருநிறுவன குற்றங்களை வெளியிடும் அல்லது சவால்விடுக்கும் தகவல்களைப் பிரசுரிப்பதற்கான விக்கிலீக்ஸின் உரிமையை —ஒட்டுமொத்த பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்களின் உரிமையையும் கூட— மறுத்து ஈக்வடோரிய ஜனாதிபதி வலியுறுத்தினார்: “இரண்டு விதமான சுதந்திரம் உள்ளன. ஒன்று பொறுப்பான சுதந்திரம், மற்றொன்று, என்ன விரும்புகிறோமோ, எப்போது விரும்புகிறோமோ அதை செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைப்பவர்களின் சுதந்திரம். இது சுதந்திரமல்ல. சுதந்திரத்தை அதிக பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்,” என்றார்.
“அவருக்கு தஞ்சம் வழங்கியதன் மீதான நிபந்தனைகள், அரசியல் குறித்து பேசுவதை அல்லது வேறெந்த நாடுகளின் அரசியலிலும் தலையிடுவதைத் தடுக்கிறது" என்பதில் விக்கிலீக்ஸ் ஆசிரியர் உடன்பட்டிருக்க வேண்டும் என்று மொரீனோ குறிப்பிட்டார். அசான்ஜ் அதுபோன்ற நிபந்தனைகளுக்கு உட்படாவிட்டால், ஈக்வடோர் அவருக்கு தஞ்சம் வழங்குவதைத் திரும்பப் பெற "முடிவெடுக்க" வேண்டியிருக்கும் என்று அச்சுறுத்தினார்.
2006 இல் விக்கிலீக்ஸ் உருவாக்குவதற்கான அசான்ஜின் ஒட்டுமொத்த திட்டமும், இணையத்தின் அளப்பரிய ஆற்றலைப் பயன்படுத்தி, பெருநிறுவன கட்டுப்பாட்டிலான மற்றும் அரசுக்கு சொந்தமான ஊடகங்களில் மேலோங்கியுள்ள "பொறுப்பான" தவறான தகவல்கள் மற்றும் தணிக்கையை உடைத்து மக்களுக்கு உதவ வேண்டும் என்பது தான். அனைத்து விமர்சனபூர்வ மற்றும் சுதந்திரமான பத்திரிகையியலும், அதன் இயல்பிலேயே, “அரசியல் குறித்து பேசத்" தான் செய்யும்.
அசான்ஜ் இப்போது மரணகதியிலான அபாயத்தை எதிர்கொண்டுள்ளார். அசான்ஜ் மீது "எதேச்சதிகார தடுப்புக்காவல்" அமலாக்குவதற்காக, பிரிட்டிஷ் அரசு "அவரின் அடிப்படை மனித உரிமைகளை மீறுகிறது" என்று குறிப்பிட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு செயற்குழு அதை கண்டித்திருந்தது.
அவரது வழக்கறிஞர் ஜெனிஃபர் ரோபின்சனும் ஆதரவாளர் பாமீலா ஆண்டர்சனும் அவரது உடல்நிலைமை மோசமடைந்திருப்பது குறித்து சமீபத்திய வாரங்களில் பகிரங்கமாக எச்சரித்துள்ளனர். ஆறு ஆண்டுகளாக, அவர் சூரிய ஒளிக்கூட படாமல் அல்லது போதுமான மருத்துவ சிகிச்சையின்றி ஒரு சிறிய கட்டிடத்தில் அடைப்பட்டுள்ளார். மொரீனோ அறிவித்துள்ளவாறு தொடர்ந்தும், காலவரையின்றியும் தனிமைப்படுத்தப்படலாம் என்பதால் அவர் 10 வாரங்களாக கூடுதல் மனரீதியிலான அழுத்தத்திற்கு உள்ளாகி உள்ளார்.
விக்கிலீக்ஸ் ஆசிரியரை அழிக்க ஒரு கணக்கிட்ட நடவடிக்கை நடந்து வருகிறது. காத்திருக்கும் பிரிட்டிஷ் போலிஸ் அவரை பிடித்து, வெளியுலகை எந்த விதத்திலும் தொடர்பு கொள்ள முடியாதவாறு பிணை-சம்பந்தமான குற்றச்சாட்டுக்களில் அவரை சிறையில் அடைப்பதற்காக, அவரே "தானே முன்வந்து" ஈக்வடோரிய தூதரகத்திலிருந்து வெளியேறுமாறு அவரை நிர்பந்திப்பதே நோக்கம் என்பதை மட்டுமே மொரீனோ வின் கருத்துக்கள் அடிக்கோடிடுகின்றன. அவரது சட்டப் பாதுகாவலர்கள் அமெரிக்க ஒப்படைப்பு உத்தரவாணைகளுக்கு எதிராக போராடினாலும், அதை தொடர்ந்தும் இன்னும் கூடுதல் மாதங்கள் அல்லது ஆண்டுகளின் சிறையடைப்பு விதிக்கப்படலாம்.
அசான்ஜ் பிறந்த மற்றும் குடியுரிமை கொண்டுள்ள ஆஸ்திரேலியாவில், அந்த அரசாங்கம் அவரின் இந்த நிலைமைக்கு பெரும் பொறுப்பாகிறது. 2010 இன் இறுதியில், ஒரு ஆஸ்திரேலிய பிரஜையின் உரிமைகள் தாக்குதலின் கீழ் இருக்கையில் அதை பாதுகாப்பதற்குப் பதிலாக, பிரதம மந்திரி ஜூலியா கில்லார்டின் தொழிற்கட்சி அரசாங்கம் வாஷிங்டன் பக்கம் அணிசேர்ந்தது. அது விக்கிலீக்ஸின் நடவடிக்கைகளை "சட்டவிரோதமானதாக" முத்திரை குத்தி, தேசதுரோகத்திற்காக அசான்ஜை வழக்கில் இழுப்பதற்கு அதன் ஆதரவை அறிவித்தது. இப்போதைய தாராளவாத-தேசிய கூட்டணி அரசாங்கமோ அவர் மீது நடத்தப்பட்டு வரும் துன்புறுத்தல்களை எதிர்க்க ஒரு சுண்டுவிரலைக் கூட தூக்கவில்லை.
அமெரிக்க அரசும் அதன் கூட்டாளிகளும் விமர்சனபூர்வ மற்றும் சுதந்திரமான ஊடக அமைப்பு ஒவ்வொன்றையும் அச்சுறுத்துவதற்காக, விக்கிலீக்ஸையும் ஜூலியன் அசான்ஜையும் இல்லாதொழிக்க முனைந்து வருகின்றன. அரசாங்கங்களின் குற்றங்கள் மற்றும் பொய்களை அம்பலப்படுத்துவதை ஒடுக்குவதும், ஜனநாயக உரிமைகள் மற்றும் பேச்சு சுதந்திரத்தைப் பாதுகாக்க முனைபவர்கள் அனைவரையும் மவுனமாக்குவதுமே இதன் நோக்கமாக உள்ளது.
அசான்ஜ் மீதான தாக்குதல், அமெரிக்காவும் உலகளாவிய உளவுத்துறை முகமைகளும் சமூக ஊடகங்கள் மற்றும் இணைய நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட்டு, இணையத்தில் இடதுசாரி, போர்-எதிர்ப்பு மற்றும் சோசலிச கண்ணோட்டங்களை ஒடுக்குவதற்காக நகர்த்திய ஆக்ரோஷமான நகர்வுகளுடன் பிணைந்துள்ளது. மனித வரலாற்றிலேயே மிகப் பெரிய ஜனநாயக வடிவமான இணையம் மீது தணிக்கையின் திரை போர்த்தப்பட்டு வருகிறது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI), உலக சோசலிச வலைத் தளமும் (WSWS), எதிர்ப்பை வலியுறுத்தி வருகின்றன. விக்கிலீக்ஸ் மற்றும் ஜூலியன் அசான்ஜைப் பாதுகாப்பதில் சாத்தியமான அளவுக்கு மிகப்பெரியளவில் சர்வதேச அணித்திரள்வைச் செய்ய நாங்கள் அழைப்புவிடுக்கிறோம். இது இணைய சுதந்திரம், பேச்சு சுதந்திரம் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அனைத்து சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாப்பதற்கான ஒரு பரந்த போராட்டத்தின் இன்றியமையா பாகமாகும்.
வரலாற்றில் முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டத்தை எட்டியுள்ளோம். அமைப்புகளும் தனிநபர்களும் ஜனநாயக உரிமைகள் மீதான இந்த அடிப்படை மோதலில் அவர்கள் எங்கே நிற்கிறார்கள் என்பதை தீர்மானித்தாக வேண்டும்.
ICFI இன் ஆஸ்திரேலிய பிரிவான சமூக சமத்துவக் கட்சி சிட்னியில் ஜூன் 17, ஞாயிறன்று சிட்னி நகர அரங்க சதுக்கத்தில் மதியம் 1 மணிக்கு ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இது விக்கிலீக்ஸ், ஜூலியன் அசான்ஜ், ஊடக சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு அசைக்க முடியா பாதுகாவலரான, பத்திரிகையாளரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஜோன் பில்ஜெருடன் இணைந்து கருத்தொன்றி நடத்தப்படுகிறது.
மனித சுதந்திரத்திற்கான பிரபல பிரமுகர்களான அட்டார்னி ஜூலியான் பர்ன்சைடு மற்றும் டெர்ரி ஹிக்கின்ஸூம் இந்த ஆர்ப்பாட்டத்தை ஆதரித்துள்ளனர். டெர்ரி ஹிக்கின்ஸ் அவர் மகனான டேவிட் ஹிக்கின்ஸ் குவாண்டனமோ வளைகுடாவின் நரகத்தனமான அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிராக ஐந்தாண்டு காலம் போராடியவராவார்.
போர் மற்றும் அநீதிக்கு எதிராக பல பத்தாண்டுகளாக பேசி வந்துள்ள பின்க் ஃபியோய்டு (Pink Floyd) புகழ் இசையமைப்பாளர் ரோஜர் வாட்டர்ஸ், விக்கிலீக்ஸைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையை ஆதரித்து WSWS க்கு ஓர் ஆதரவு சேதி அனுப்பியுள்ளார். இந்த வாரயிறுதியில் அவரது பேர்லின் இசைநிகழ்ச்சியின் அரங்கில், அவர், “ஜூலியன் அசான்ஜை மவுனமாக்கும் முயற்சியை எதிர்ப்போம்,” என்ற அழைப்பை ஒளிபரப்பினார்.
சிட்னி ஆர்ப்பாட்டமானது, அசான்ஜை அமெரிக்காவிடம் ஒப்படைக்க செய்வதற்கான எந்தவொரு அமெரிக்க முயற்சிக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க உத்தரவாதம் அளித்து, அவரை நிபந்தனையின்றி ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் அழைத்து வர ஆஸ்திரேலிய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அழுத்தமளிக்கும்.
ஜூலியான் அசான்ஜை விடுவிக்க கோரும் ஒரு விழிப்பு போராட்டம், ஜூன் 19 செவ்வாயன்று இலண்டனில் ஈக்வடோரிய தூதரகத்தின் முன்னால் நடத்தப்பட உள்ளது. பிரதம மந்திரி மே அரசாங்கம் அசான்ஜைத் துன்புறுத்துவதை நிறுத்திவிட்டு, அவருக்கு எதிரான பிணை-சம்பந்தமான குற்றச்சாட்டுக்களைக் கைவிட்டு, அவரை ஈக்வடார் தூதரகம் மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்திலிருந்து வெளியேற அனுமதிக்க வேண்டும். ஜூன் 19 இல் இதேபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் உலகின் ஏனைய பல நகரங்களிலும் நடத்தப்படுகின்றன.
இதற்கு முரண்பட்ட வகையில், 2010 மற்றும் 2011 இல் விக்கிலீக்ஸ் மற்றும் அசான்ஜிற்கு ஆதரவு குரல் கொடுத்த தொழிற்சங்கத்தின் ஒட்டுமொத்த அடுக்கும், பசுமை கட்சி மற்றும் போலி-இடது அமைப்புகளும் அவர் துன்புறுத்தப்படுவதற்கு எதிராக எந்த போராட்டத்தையும் கைத்துறந்துள்ளன. அவர்கள் ஏகாதிபத்தியத்தை ஆதரிக்க மாறியுள்ளனர்.
எவ்வாறிருப்பினும் தொழிலாள வர்க்கமும் இளைஞர்களும் ஆழ்ந்த போராட்டங்களுக்குள் நுழைந்து வருகின்ற நிலையில், அசான்ஜ் மீதும் விக்கிலீக்ஸ் மீதும் அவர்களிடையே அளப்பரிய மதிப்பு உள்ளது. சர்வதேச தொழிலாள வர்க்கம் தனது சமூக உரிமைகளைப் பாதுகாப்பதன் பாகமாக மற்றும், போர், சமத்துவமின்மை மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறையை எதிர்ப்பதன் பாகமாக, அதுவே ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க தலைமை கொடுத்து போராடும் சமூக சக்தியாக விளங்குகிறது.
வேலையிடங்கள், ஆலைகள், வளாகங்கள் மற்றும் உயர்பள்ளிகளில், ஜூலியன் அசான்ஜை விடுவிக்க கோரும் ஆர்ப்பாட்டங்களுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் அதிகபட்ச ஆதரவைப் பெற போராடுமாறு, நாங்கள் WSWS வாசகர்களை வலியுறுத்துகிறோம்.