ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Whither France?

பிரான்ஸ் எங்கே செல்கிறது?

முன்னுரை

பொருளாதார சிக்கல்கள் மற்றும் நிதியியல் மோசடிகளில் சிக்குண்டிருந்த பிரான்சின் ரடிக்கல் (Radical) அரசாங்கம், ஆயுதமேந்திய பாசிச கிளர்ச்சிகளால் பெப்ரவரி 6, 1934 இல் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டது. இது, மே 1936 இல் மக்கள் முன்னணி அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டதும் முன்னுக்கு வரவிருந்த, பிரான்சின் ஆழ்ந்த சமூக மற்றும் அரசியல் மோதல்களின் ஒரு காலகட்டத்திற்கு சமிக்ஞை அளிப்பதாக இருந்தது. நிதியியல் மூலதனம் 1934 நெருக்கடியை முதலில், கஸ்ட்ரோன் டுமேர்க் (Gaston Doumergue) இன் போனபார்ட்டிச அரசாங்கத்தை நிறுவியதன் மூலமாக தீர்க்க முயன்றது, ஆனால் அது குறுகிய காலமே நிலைத்திருந்ததுடன், அதிகரித்தளவில் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பையும் எதிர்கொண்டது. அதற்கு மாற்றீடாக, சோவியத் அதிகாரத்துவத்தால் மக்கள் முன்னணி அறிவுறுத்தப்பட்டது, ஏனெனில் அதிகரித்துவந்த நாஜி ஜேர்மனியின் அச்சுறுத்தலுக்கு எதிரான ஒரு கூட்டாளியாக சோவியத் அதிகாரத்துவத்திற்கு பிரான்ஸ் அவசியப்பட்டது. பொது வேலைநிறுத்தம் ஒரு புரட்சியாக திரும்புவதிலிருந்து தடுப்பதும் மற்றும் புளூம் அரசாங்கத்தின் மூலமாக முதலாளித்துவ வர்க்கத்துடனான கூட்டுறவை பாதுகாப்பதுமே அதன் பாத்திரமாக இருந்தது. ஒரு பாரிய புரட்சிகர கட்சி இல்லாதிருந்தமை, இக்காட்டிக்கொடுப்பை நடத்த அதற்கு உதவியது. அது 1937 இல் இருந்து தொழிலாள வர்க்கத்தை பிற்போக்குத்தனமான எதிர்-தாக்குதலுக்கு உள்ளாக்கியது.

இந்த தொகுப்பில் தொகுக்கப்பட்டுள்ள பிரான்ஸ் குறித்த ட்ரொட்ஸ்கியின் கட்டுரைகள் அத்தகைய கொதிப்பான சம்பவங்களினூடாகத்தான் எழுதப்பட்டிருந்தன. 1848 புரட்சி மற்றும் 1871 இன் பாரீஸ் கம்யூன் ஆகியவற்றைக் குறித்த மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் எழுத்துக்களைப் போலவே, இவை போராட்டத்தின் கண்ணோட்டத்திலிருந்து தொடங்கி தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ வர்க்கத்தின் மேலாளுமையிலிருந்து உடைத்துக் கொள்ளும் வரையில் மற்றும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதை நோக்கி அதை திருப்புவது வரையிலான சம்பவங்களை ஆராய்கின்றன. இதனால் தான் அவர்கள், இடது எதிர்ப்பு, பிரெஞ்சு பிரிவினது நடைமுறைக்கு வழிகாட்டும் தீர்க்கமான தந்திரோபாயங்களை உடைத்தனர், இவ்விதத்தில் தான் ட்ரொட்ஸ்கியால் ரஷ்ய புரட்சியின் படிப்பினைகளையும் மற்றும் கம்யூனிச அகிலத்தின் முதல் நான்கு காங்கிரஸின் படிப்பினைகளையும் விளங்க வைக்க முடிந்தது.

ட்ரொட்ஸ்கி ஜூலை 1933 இல் நாடுகடத்தப்பட்ட நிலையில் பிரான்ஸ் வந்தடைந்தார், முன்னர் நாடுகடத்தப்பட்ட போதே அவர் நன்கறிந்திருந்த மற்றும் அதன் அரசியல் வாழ்வை அவர் விரிவாக பின்தொடர்ந்திருந்த அந்நாட்டுடனான அவரது பரிச்சயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. முதலில், சுமார் ஆறு மாதங்களுக்கு, அவரால் பிரெஞ்சு பிரிவின் வேலைகளில் செயலூக்கத்துடன் பங்கு வகிக்கவும் மற்றும் பிரெஞ்சு அரசியலின் முன்னணி இடதுசாரி பிரபலங்கள் பலருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும் முடிந்தது. இடது எதிர்ப்பாளர்களின் தனிமைப்பாட்டை முடிவுக்குக் கொண்டு வரவும் மற்றும் ஒரு புரட்சிகர கட்சியைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான சக்திகளை புதிதாய் வென்றெடுக்கவும், அந்நேரத்தில் அவர் சோசலிஸ்ட் கட்சிக்குள் நுழையுமாறு இடது எதிர்ப்பாளர்களுக்கு அறிவுறுத்தினார், இது “பிரெஞ்சு திருப்பம்” (French turn) என்று அறியப்பட்டிருந்தது.

1934 இல் பாசிச அச்சுறுத்தலை சந்தித்த தொழிலாள வர்க்க எழுச்சியானது, பாட்டாளி வர்க்க புரட்சிக்குப் பாதையைத் திறந்துவிட்டு வரலாற்றின் போக்கையே மாற்றும் வகையில் ஓர் ஐக்கிய முன்னணியை கட்டியெழுப்புவதற்கு அளப்பரிய சாத்தியக்கூறுகளை உருவாக்கியது. கம்யூனிச அகிலத்தின் ஆரம்பகால ஆண்டுகளில், ஸ்ராலினிச வளர்ச்சிக்கு முன்னதாக, போர் முடிந்து ஜேர்மன் புரட்சியின் முதல் அலை தோல்வியடைந்த பின்னர், பெருந்திரளானவர்களை வென்றெடுக்கும் வகையில் இந்த ஐக்கிய முன்னணி தந்திரோபாயம் அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தது. அதிகாரத்தை கைப்பற்றும் போராட்டத்தின் அடிப்படையில், வேலைகள், கூலிகள் மற்றும் அடிப்படை உரிமைகளுக்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் அமைப்புகளை ஐக்கியப்படுத்துவதே அதன் நோக்கமாக இருந்தது. முதலாவதாக சமூக ஜனநாயகத்தின் திவாலான தலைமைகள் உட்பட அந்த ஐக்கியத்தை உடைக்க முனைந்தவர்களை விட்டுக்கொடுப்பின்றி அம்பலப்படுத்த வேண்டியிருந்தது. ட்ரொட்ஸ்கி ஐக்கிய முன்னணி தந்திரோபாயத்தில் உறுதியாக நின்றார், அதேவேளையில் ஸ்ராலின் 1928 இல் இருந்து "மூன்றாம் காலகட்டத்தில்" (Third period) கம்யூனிச அகிலத்தை குறுங்குழுவாதத்திற்குள் மூழ்கடித்திருந்தார் —அக்காலக்கட்டத்தில் [அதாவது மூன்றாம் காலகட்டத்தில்] ஸ்ராலினிச கட்சிகள் சமூக ஜனநாயகவாதிகளை "சமூக பாசிஸ்டுகள்" என்று சித்தரித்ததோடு, தனிமைப்படுத்தப்பட்ட சாகச நடவடிக்கைகளை அறிவுறுத்தின. இந்த கொள்கையானது, 1933 இல் ஹிட்லர் அதிகாரத்திற்கு எழுகின்ற நிலையில், ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தை நிராயுதபாணியாக்கியது.

பிரான்ஸ் எங்கே செல்கிறது? என்ற நூலில் ட்ரொட்ஸ்கி ஐக்கிய முன்னணி தந்திரோபாயத்தை அதன் நடைமுறை விபரங்கள் வரையில் அடிமட்டத்திலிருந்து, குறிப்பாக பாசிச தாக்குதல்கள் மற்றும் அரசாங்க ஒடுக்குமுறையிலிருந்து தொழிலாள வர்க்க அமைப்புகளை பாதுகாக்க தொழிலாளர்களது குடிமக்கள் படைகளை உருவாக்குவது வரையில், அபிவிருத்தி செய்கிறார். 'பாசிசத்திற்கு எதிரான போராட்டம் அடிப்படையிலேயே ஓர் அரசியல் போராட்டமாகும், வேலைநிறுத்தத்திற்கு மறியல்கள் அவசியப்படுவதைப் போல, அதற்கு, ஒரு குடிமக்கள் படை அவசியப்படுகிறது. அடிப்படையில் மறியல் என்பதே, தொழிலாளர்கள் குடிமக்கள் படையின் ஆரம்பநிலையாகும். உடல் இல்லாமல் உயிர் வாழாது என்பதைப் போல, “உடல் ரீதியான" போராட்டத்தை கைவிடுவதைக் குறித்து சிந்திக்கும் ஒருவர், எல்லா போராட்டத்தையும் கைவிடுகிறார்' என்று ட்ரொட்ஸ்கி வலியுறுத்துகிறார்.

பெப்ரவரி 1934 இல் டலாடியே (Daladier) இன் அரசாங்கத்தை பதவியிலிருந்து கீழிறக்கிய பாசிச குழுக்கள், நிதியியல் மூலதனத்தின் படைப்புகளாகும். பிரான்சில் பெருந்திரளான விகிதத்தில் ஒரு பாசிச இயக்கத்தை கட்டியெழுப்புவதென்பது குட்டி முதலாளித்துவ வர்க்கத்திற்கு ஒரு முறையீடு செய்தால் மட்டுமே முடியக்கூடியதாக இருந்தது, அந்த வர்க்கம் அந்நேரம் சமூகத்தின் ஒரு கணிசமான பாகமாக உள்ளடங்கி இருந்தது. விவசாயிகளும் மற்றும் சிறிய சொத்து உடைமையாளர்களும், கடைமுதலாளிகளும் மற்றும் தொழில் நிபுணர்களும் உள்ளடங்கிய இந்த வர்க்கத்திற்கு முறையீடு செய்யும் பிரதான கட்சியாக, ரடிக்கல் கட்சியே (Radical Party) இருந்தது. மிதவாத போக்கைக் கொண்ட பிழைப்புவாத அரசியல்வாதிகளின் தலைமையில், நாடாளுமன்ற வேலைகளிலும் மற்றும் மூன்றாம் குடியரசின் குணாம்சமாகி இருந்த ஊழல்களிலும் மூழ்கியிருந்த அக்கட்சி, பெரு மூலதனத்தின் ஒரு கருவியாக இருந்தது. 1934இல் இருந்த அந்த காலகட்டத்தில் செய்ததுபோல் தீவிர-போக்கினரில் பலர் பாசிசத்திற்கு முறையீடு செய்ய தொடங்க முன்னர் இந்த வர்க்கத்தினரை [அதாவது குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினர்] தீவிர போக்கினரின் பிடியிலிருந்து முடிந்தவரைக்கும் உடைத்துக் கொள்ளச் செய்தவதே புரட்சியாளர்களின் பணியாக இருந்தது. இது தொழிலாள வர்க்கத்தை அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்கான ஒரு தீர்க்கமான உந்துதல் மூலமாக மட்டுமே செய்யப்படக்கூடியதாகும்.

சோசலிஸ்ட் தலைவர்கள் அதற்கு மாறாக ரடிக்கல் கட்சியின் அருவருப்பான வளர்ச்சி கொண்ட மற்றும் ஊழல்பீடித்த அரசியல்வாதிகளுடன் ஒரு கூட்டணிக்கு முயன்றார்கள் —கம்யூனிஸ்ட் கட்சி இப்போதும் அவர்களுக்குப் பின்னால் முண்டியடித்துக் கொண்டிருந்தது. அப்போது ஸ்ராலினின் இருண்ட களையெடுப்பு காலம் தொடங்கியிருந்த சோவியத் ஒன்றியத்திலேயே கூட வலதுசாரி திருப்பத்தையும் மற்றும் ஜேர்மனியின் தோல்விகளையும் பிரதிபலித்த விதத்தில், மூன்றாம் அகிலம் கூர்மையாக வலதிற்கு நகர்ந்து கொண்டிருந்தது. முதலாளித்துவ ஒழுங்குமுறை தொழிலாள வர்க்கத்தின் மீது மிகவும் வக்கிரமான தாக்குதல்களை நடத்துவதற்கு தயாரிப்பு செய்து வந்த அந்நேரத்தில், ஸ்ராலினிஸ்டுகளுக்கு 'ஐக்கியம்' என்பது, இப்போது முதலாளித்துவ கட்சிகளுடன் ஐக்கியம் என்று அர்த்தமாகிவிட்டது. இந்த சரணடைந்த நிலை, 1933 இல் கம்யூனிச அகிலத்தின் 7வது உலக மாநாட்டில் மக்கள் முன்னணி (Popular Front) 'தத்துவத்தில்' விளக்கம் பெற்றது. 'மூன்றாம் காலகட்டத்தின்' வினோதமான அதிதீவிர-இடது உருவாக்கங்கள் தொடங்கி, பிரெஞ்சு ஸ்ராலினிஸ்டுகள், அவர்களது பொதுச் செயலாளர் மொறிஸ் தொறேஸ் (Maurice Thorez) இன் கீழ், ஒரு சந்தர்ப்பவாத திசையில் வேகமாக சென்றனர். 'எங்கும் சோவியத்துகள்!' என்று முழக்கத்தை ஒரு வெற்று வாசகமாக உச்சரித்துக் கொண்டே, ஸ்ராலினிஸ்டுகள் எங்கேயும் சோவியத்துக்கள் அவசியமில்லை என்றும், ஆனால் நாடாளுமன்றத்தின் மூலமாக மற்றும் ரடிக்கல் கட்சியினருடனான ஒரு கூட்டணி மூலமாக அங்கே முன்னோக்கிய பாதை இருப்பதாக முடிவெடுத்தனர்.

சோசலிஸ்ட் கட்சியும் மற்றும் ஸ்ராலினிஸ்டுகளும் தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ அரசியலுடன் பிணைக்க முனைந்துகொண்டிருந்தனர். அது தோல்விகளுக்கு பாதையை திறந்து விட்டிருந்த அதேவேளை, பெருந்திரளான குட்டி முதலாளித்துவத்தினரை பாசிசத்திற்கு இரையாக்கியது. இந்தவொரு பேரழிவுகரமான போக்கினூடாக அதே கட்சிகளே, முதலாளித்துவத்திற்குள் நாடாளுமன்ற பாதையினூடாக சீர்திருத்தங்களுக்கு வாக்குறுதியளிக்கும் "பொது வேலைத்திட்டம்" (common programme) என்றழைக்கப்படுவதன் ஊடாக, இன்று பிரான்சில் மீண்டும் சென்று கொண்டிருக்கின்றனர்.

ட்ரொட்ஸ்கி வர்க்க சக்திகளின் நிஜமான சேர்க்கை மற்றும் தொழிலாள வர்க்கத்தின் தேவைகளின் வெளிச்சத்தில் சீர்திருத்தவாதிகள் மற்றும் ஸ்ராலினிஸ்டுகளின் வேலைத்திட்டங்களை கடுமையான விமர்சனத்திற்கு உட்படுத்தினார். சீர்திருத்தவாத தலைவர்களுடன் முறித்துக் கொள்ள மறுத்த மற்றும் ஒரு பாரிய புரட்சிகர கட்சியைத் தோற்றுவிப்பதற்குரிய பாதைக்கு தடையாக இருந்த சோசலிஸ்ட் கட்சியின் மார்சோ பிவேர் (Marceau Pivert) மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜாக் டோரியோ (Jacques Doriot) போன்ற மத்தியவாதிகளையும் அவர் பாரபட்சமின்றி விமர்சித்தார்.

ஏப்ரல் 1934 இல் டுமேர்க் இன் அரசாங்கம் ட்ரொட்ஸ்கியை பிரான்சிலிருந்து வெளியேற்ற ஆணை பிறப்பித்தது, ஆனால் அவரை ஏற்றுக்கொள்ள நோர்வே உடன்படும் வரையில் வேறெந்த நாடுமே அவரை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கவில்லை. ட்ரொட்ஸ்கி இறுதியில் ஜூலை 1935 இல் பிரான்சிலிருந்து வெளியேற்றப்பட்டார். இரண்டாவதாக அவர் அங்கே தங்கியிருந்தபோது, ஒரு தொலைதூர கிராமத்தில் வாழ்ந்து வந்தார், அது அரசியல் வாழ்விலிருந்து பெரிதும் விலகி இருந்தது, அத்துடன் ஸ்ராலினிஸ்டுகளும் அவரை வெளியேற்ற அழைப்புவிடுத்து வந்தனர். ஆனால் அவர் பிரெஞ்சு ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் அங்கமாக இருந்த La Vérité இன் பக்கங்களில், அவரது பெயரை வெளியிடாமல், அவரது எழுத்துப் படைப்புகளை தொடர்ந்து வந்தார். 1935 இல் உத்தியோகபூர்வமாக அமைக்கப்பட்ட மக்கள் முன்னணியைக் கண்டித்து, அவர் தொழிலாள வர்க்க போராட்டத்தின் அங்கமாக நடவடிக்கை குழுக்களை அல்லது, அவற்றை அவர் குறிப்பிட்டதைப் போல, 'புரட்சிகர பாராளுமன்றங்களை' தோற்றுவிப்பதற்கு அழைப்புவிடுத்தார். தொழிலாள வர்க்க இயக்கத்தின் அனைத்து போக்குகளின் பிரதிநிதிகளையும் ஒன்றுதிரட்டுவதன் மூலமாக, அத்தகைய அமைப்பு வடிவங்கள், பாரிய பெருந்திரளானவர்களின் பலத்திற்கு ஒரு வெளிப்பாட்டை அளிக்கும் என்பதுடன், துரோகத்தனமான ஸ்ராலினிச மற்றும் சீர்திருத்த தலைவர்களை அம்பலப்படுத்துவதில், புரட்சியாளர்கள் அவர்களின் கொள்கைகளுக்காக போராடுவதில், அவர்களுக்கு உதவி இருக்கும்.

1935-36 இன் போக்கில் தொழிலாளர்களது புரட்சிகர உறுதிப்பாடு அதிகரித்தது, அது கடுமையாக போராடப்பட்ட வேலைநிறுத்தங்களின் எண்ணிக்கையில் எடுத்துக்காட்டப்பட்டது, அவற்றில் அவர்கள் அரசின் ஒடுக்குமுறை சக்திகளுடன் மோதலுக்குள் வந்தனர். குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் மரபார்ந்த தலைவர்களை அம்பலப்படுத்துவதும் மற்றும் தொழிலாள வர்க்கத்தை அடித்தளமாக கொண்ட ஒரு தீர்க்கமான தலைமையை முன்னிறுத்துவதும் மேலதிகமாக தவிர்க்கமுடியாத நிர்பந்தங்களாக ஆன நிலையில், ஸ்ராலினிஸ்டுகளோ தீவிர-போக்கினர் மீது ஆர்வங்கொண்ட ஆதரவாளர்களாக ஆனார்கள்; மே 1, 1936 அன்று லெயோன் புளூம் மற்றும் ரடிக்கல் கட்சி தலைவர் எடுவார்ட் டலாடியே உடன் மொறிஸ் தொறேஸ் அணிவகுத்து சென்றார். இதற்குள் ஸ்ராலின் பிராங்கோ-சோவியத் உடன்படிக்கையில் பிரான்ஸ் மீள்ஆயுதமேந்துவதற்கு அவரது ஒப்புதலை வழங்கி இருந்தார்; கம்யூனிஸ்ட் கட்சி, மூவண்ணக் கொடி மற்றும் Marseillaise (பிரெஞ்சு தேசிய கீதம்) உடன் உடன்பட்டு, தேசியவாதத்திற்கு அழைப்புவிடுவதற்கான அதன் உரிமைக்கு அதிக இடம் கொடுக்க முயன்றது.

மே 1936 தேர்தல்களில் மக்கள் முன்னணியின் கட்சிகள் பெரும் வெற்றி பெற்றன. சோசலிஸ்ட் தலைவர் லெயோன் புளூம் (Léon Blum), ரடிக்கல் கட்சியினரின் பங்களிப்புடன் மற்றும் ஸ்ராலினிஸ்டுகளின் ஆதரவுடன் ஓர் அரசாங்கத்தை அமைத்தார். ஆனால் ஸ்ராலினிஸ்டுகள் மந்திரிசபையில் இடம் கோரி இருக்கவில்லை. அரசாங்கம் பதவியேற்பதற்கு முன்னரே கூட பிரதான தொழில்துறையில் இருந்த தொழிலாள வர்க்கம் தொழில்கருவிகளை போட்டுவிட்டு, சுமார் இரண்டரை மில்லியன் தொழிலாளர் பங்குபற்றிய, அந்நாடு அதுவரையில் பார்த்திராத மிகப்பெரிய பொது வேலைநிறுத்தில் தொழிற்சாலைகளை ஆக்கிரமித்தனர். பிரான்ஸ் ஒரு புரட்சியின் விளிம்பில் நின்றது: அது முதலாளித்துவ வர்க்கத்தின் தீர்க்கவியலாத நெருக்கடியின் மற்றும் தொழிலாள வர்க்கம் அதன் சொந்த தலைவர்களுக்கு எதிராக காட்சிக்குள் வெடித்தெழுந்திருந்ததன் விளைபொருளாக இருந்தது. பெப்ரவரி 1934 இல் இருந்து ட்ரொட்ஸ்கி வலியுறுத்தி வந்திருந்த புரட்சிகர நிலைமை இப்போது வெளிப்பாட்டைக் காண தொடங்கி இருந்தது.

தொழிலாள வர்க்கம் அவர்களது வேலைநிறுத்த நடவடிக்கை மூலமாக, மக்கள் முன்னணியின் சாரமாக என்ன இருந்ததோ, அதாவது முதலாளித்துவ வர்க்கத்துடனான கூட்டணியை நிராகரித்தனர். அந்தக் கொள்கை மேலே இருந்து திணிக்கப்பட்டிருந்தது, அது தொழிலாளர்களிடமிருந்து வந்ததல்ல. அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் நாடாளுமன்றத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதையும், மக்கள் முன்னணியின் வாக்குறுதிகளில் நம்பிக்கை இல்லை என்பதையும் அவர்களது நடவடிக்கையைக் கொண்டு அவர்கள் எடுத்துக்காட்டி இருந்தனர்: அவ்வாறில்லை என்றால், எதற்காக அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு, ஆலைகளை ஆக்கிரமிக்க வேண்டும்?

இப்போது நோர்வேயில் நாடுகடத்தப்பட்டிருந்த ட்ரொட்ஸ்கி, அதிலிருந்த புரட்சிகர குணாம்சத்தை உடனடியாக உள்வாங்கி கொண்டு, அந்நிலைமை கட்டவிழ்ந்து வருவதைக் கருத்தூன்றி பின்தொடர்ந்தார். ஆலைகளிலிருந்து தொழிலாளர்களை எவ்வாறு வெளியேற்றுவது என்பதுதான் மக்கள் முன்னணியின் சீர்திருத்தவாத மற்றும் ஸ்ராலினிச தலைவர்களின் மற்றும் வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்ததில் எந்த சம்பந்தமும் கொண்டிருக்காத தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பிரச்சினையாக இருந்தது. அந்த இயக்கம், ஒரு புரட்சியாக அபிவிருத்தி அடைந்துவிடாமல் தடுக்கும் தீர்மானத்துடன், ஸ்ராலினிச அதிகாரத்துவவாதிகள், வேலைநிறுத்தங்கள் மற்றும் உள்ளிருப்பு போராட்டங்களை அவர்களின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வர இறங்கினர். “ஒரு வேலைநிறுத்தத்தை எப்போது முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதை அறிந்திருப்பது அவசியம்" என்ற வாசகத்தை ஒலித்து, ஆலைகளிலிருந்து தொழிலாளர்களை வெளியே கொண்டு வருமாறும் மற்றும் இயக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருமாறும் தொறேஸ் அவரது ஆதரவாளர்களுக்கு அழைப்புவிடுத்தார். புரட்சிகர சூழ்நிலையைத் தணிப்பதும், புளூம் அரசாங்கத்தின் அதிகாரத்தை ஸ்தாபித்து வைப்பதும் மற்றும் பெரும்பாலும் பீதியுற்றிருந்த ஆலை முதலாளிமார்களிடம் மீண்டும் அவற்றை ஒப்படைப்பதுமே அதன் நோக்கமாக இருந்தது. ஸ்ராலினிஸ்டுகள் அதற்கு உதவியிருந்தமையினால், அங்கே புரட்சி இல்லாமல் போனது. என்ன விலைகொடுத்தாவது முதலாளித்துவ தீவிர-போக்கினருடன் கூட்டணியைப் பேணுவதாக இருந்தது.

கூலி உயர்வுகள், வாரத்திற்கு 40 மணிநேர வேலை மற்றும் சம்பளத்துடன் கூடிய விடுமுறைகள் ஆகிய வாக்குறுதிகளுடன் வேலைநிறுத்தம் முறிக்கப்பட்டபோது, ஜூலையில் தேதியிடப்பட்ட ட்ரொட்ஸ்கியின் கடைசிக் கட்டுரை வெளியானது. ஆனால் இந்த "வெற்றிகள்" ஒரு மிகப்பெரிய தோல்விக்கு விலையாக கொடுக்கப்பட்டன என்பதுடன், ஆளும் வர்க்கம் அடுத்த ஆண்டோ அல்லது இரண்டாடுகளிலோ அதன் உறுதிப்பாட்டை மீளப்பெறுகையில் அதனால் அந்த தோல்வி பின்தொடர்ந்து எடுத்துச்செல்லப்பட இருந்தது, அத்துடன் அது பாசிச குழுக்களின் கஜானாக்களுக்குள் பணத்தைப் பாய்ச்சியது. அவற்றிலிருந்து ட்ரொட்ஸ்கி பிரதான படிப்பினைகளை வரைய வேண்டியதாக இருந்தது. தொழிலாள வர்க்கத்தின் பலம், பாசிச அச்சுறுத்தல்களுக்கு எதிராக அதன் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தீர்மானம் ஆகியவை ஜூன் 1936 பொது வேலைநிறுத்தத்திலேயே அதனால் உணரப்பட்டது. ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் சமூக ஜனநாயகவாதிகளிடமிருந்து அத்தகைய இயக்கத்தின் தலைமையை முன்னெடுக்க போதிய பலத்துடன் கூடிய ஒரு புரட்சிகர கட்சி இல்லாமல் இருந்ததே தீர்க்கமான பலவீனமாக இருந்தது.

இன்று ட்ரொட்ஸ்கியின் கட்டுரைகளின் முக்கியத்துவம் ஒரு வரலாற்று ஆவணம் தொடர்பான ஆர்வம் என்பதையும் கடந்து செல்கின்றன. ஒரு முன்னேறிய நாட்டில் புரட்சிகர கட்சியைக் கட்டுவதற்கு அவை ஒரு மதிப்பில்லா வழிகாட்டியாக உள்ளன. பாசிசத்திற்கு எதிரான போராட்டம்; சீர்திருத்தவாத மற்றும் மத்தியவாத தலைவர்களை அம்பலப்படுத்த ஐக்கிய முன்னணி தந்திரோபாயத்தின் பிரயோகம்; தொழிலாள வர்க்க அமைப்புகளின் பாதுகாப்பு, மற்றும் மத்தியதர வர்க்கத்தின் பிரிவுகள் மீது எவ்வாறு வெற்றி கொள்வது என இவை இன்னமும் பற்றியெரியும் கேள்விகளாக உள்ளன. கம்யூனிச அகிலம் ஸ்ராலினிசமயமாக்கப்பட்டமை, 1930 களில் அதிகாரத்தை எடுப்பதற்காக மற்றும் அதற்கான கொள்கைகளுக்காக போராடுவதற்காக ஒரு பாரிய புரட்சிகர கட்சி இல்லாமல் இருந்தமை, பிரான்சிலும் அத்துடன் ஏனைய நாடுகளிலும் தொழிலாள வர்க்கத்தின் பேரழிவைக் குறித்தது. இதனால் தான், ட்ரொட்ஸ்கியின் நாட்களை விட இன்னும் ஆழமான நெருக்கடிக்குள் முதலாளித்துவம் மூழ்கியுள்ள நிலையில், ஒவ்வொரு நாட்டிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகள் கட்டியெழுப்பப்பட வேண்டி உள்ளது.

 

பிரான்ஸ் எங்கே செல்கிறது?

1936 பிரெஞ்சு பதிப்பின் முகவுரை

கடந்த இரண்டரை ஆண்டுகளின் பல்வேறு கட்டங்களின் போது, அல்லது மிக துல்லியமாக குறிப்பிடுவதாயின், பெப்ரவரி 6, 1934 இல் பாசிசவாத-போனபார்ட்டிச-முடியாட்சி கூட்டுகள் எழுச்சி பெற்றதிலிருந்து மே-ஜூன் 1936 இன் மிகப்பெரிய வேலைநிறுத்தம் வரையில் எழுதப்பட்ட பல கட்டுரைகளை இந்த வெளியீடு உள்ளடக்கி உள்ளது. என்னவொரு பிரமாண்ட அரசியல் ஊஞ்சலாட்டம்! மக்கள் முன்னணியின் தலைவர்கள், உண்மையில், அவர்கள் மேற்கொண்ட இடதுநோக்கிய திருப்பத்தின் ஊஞ்சலாட்டத்தின் அவர்களது கொள்கைகளின் முன்கணிப்பு மற்றும் புத்திசாலித்தனத்தின் மீது நன்மதிப்பைக் கொண்டு வர முயல்கின்றனர். ஆனால் விடயம் அவ்விதமானதல்ல. அந்த மூன்று-கட்சி கூட்டணியானது அரசியல் நெருக்கடியின் அபிவிருத்தியில் ஒரு மூன்றாந்தர காரணியாகவே இருந்தது என்பதை நிரூபித்தது. கம்யூனிஸ்டுகள், சோசலிஸ்டுகள் மற்றும் தீவிரப் போக்கினர் எதையும் முன்னுணரவும் இல்லை, எதையும் வழிநடத்தவும் இல்லை. சம்பவங்கள் அவர்களின் தலையில் விழுந்தன. பெப்ரவரி 6, 1934 இல் (அவர்கள் மீது விழுந்த) எதிர்பாராத அடி, அவர்களை நேற்றைய முழக்கங்கள் மற்றும் சிந்தனைகளை தோண்டியெடுக்க மற்றும் ஒருவரோடு ஒருவரை ஒரு கூட்டணிக்குள் அடைக்கலமடைய செய்ய நிர்பந்தித்தது. அதேயளவிற்கு எதிர்பாராத விதத்தில், மே-ஜூன் 1936 வேலைநிறுத்தமானது இந்த நாடாளுமன்றக் குழு அதிலிருந்து மீளஎழவே முடியாதளவிற்கு ஒரு அடியைக் கொடுத்துள்ளது. மேலெழுந்தவாரியாக பார்த்தால் மக்கள் முன்னணியின் அதியுயர் கட்டமாக தோற்றமளிப்பது யதார்த்தத்தில் அதனது மரணஓலமாகும்.

பிரான்ஸ் கடந்து சென்றிருந்த நெருக்கடியின் பல்வேறு கட்டங்களை பிரதிபலிக்கின்ற இந்த வெளியீட்டினது பல்வேறு பகுதிகள், தனித்தனியாக இருக்கின்றன என்ற உண்மையை பார்க்கையில், வாசகர் அத்தகைய பக்கங்கள் தவிர்க்கவியலாதவாறு மீண்டும் மீண்டும் வருவதைக் காண்பார். அவற்றை தவிர்ப்பதென்பது, ஒவ்வொரு பகுதியின் வடிவத்தையும் இடம்பெயர்த்துவதாக போய்விடும், மேலும் மிக முக்கியமானதென்னவென்றால், அது சம்பவங்களின் இயக்கவியலை பிரதிபலிக்கின்ற அதன் இயக்கவியல் குணாம்சத்தின் பணியை வெட்டிவிடக்கூடும். ஆகவேதான் இதன் எழுத்தாளர் அவ்வாறு கூறியதையே திரும்ப கூறும் விதத்தை பேணுவதைத் தேர்ந்தெடுக்கிறார். அவை அனேகமாக வாசகருக்கு முற்றிலுமாக பயனற்றவை என்று நிரூபணமாகாது. தொழிலாள வர்க்க இயக்கத்தின் உத்தியோகபூர்வ மாநாடுகளில் பொதுவாகவே மார்க்சிசத்தை ஒழித்துக்கட்டும் ஒரு சகாப்தத்திற்குள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கேடுவிளைவிக்கும் மிக மோசமான கருத்தோட்டங்களே, இப்போது, பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்தின் அரசியல் மற்றும் தொழிற்சங்க தலைவர்களுக்கான உத்தியோகபூர்வ கோட்பாடுகளாக சேவை செய்கின்றன. ஆனால் அதற்கு முரண்பட்ட விதத்தில், “பிரிவினைவாத" குரலைப் போல இந்த செயற்கைத்தனமான கூச்சலிடும் தரப்பிற்கு எதிராக, புரட்சிகர யதார்த்தவாதத்தின் குரல் ஒலிக்கிறது. ஆகவே முன்னேறிய தொழிலாள பார்வையாளர்களின் முன்னால் மார்க்சிச கோட்பாடுகளின் அடிப்படை உண்மைகளை மீண்டும் மீண்டும், அதிக வலியுறுத்தலோடு திரும்ப திரும்ப கூறுவது அவசியமாகிவிடுகிறது.

இங்கே, அல்லது எழுத்தாளரின் அவ்வப்போதைய ஏனைய அறிக்கைகளில், ஒருவேளை வாசகர் தனித்தனியான முரண்பாடுகளை காணக்கூடும். நாம் இவற்றை தவிர்த்துக் கொள்வதில்லை. உண்மையில், "முரண்பாடுகள்" என்று கருதப்படும் இவை, நிகழ்ச்சிப்போக்கின் பல்வேறு கட்டங்களில் செய்யப்பட்ட வலியுறுத்தலை மட்டுமே பிரதிபலிக்கின்றன. ஒட்டுமொத்தமாக, இந்த வெளியீடு, சம்பவங்களின் பரிசோதனையைக் கடந்துள்ளது என்றே நாம் கருதுகிறோம், மேலும் இது அவற்றை இன்னும் கூடுதலாக சிரமமின்றி புரிந்துகொள்ள செய்யக்கூடும் என்பதை நிரூபிக்கும்.

பிரமாண்ட வேலைநிறுத்த நாட்கள், இன்னமும் தொழிலாளர் அமைப்புக்குள் இருக்கும் துர்நாற்றமிக்க சூழ்நிலையை சுத்தப்படுத்தும் பெருமையை பெறுவதற்கு ஐயத்திற்கிடமின்றி தகுதியுடன் இருப்பதுடன் அது சீர்திருத்தவாதம் மற்றும் தேசப்பற்றுவாதத்தின், “சோசலிஸ்ட்", “கம்யூனிஸ்ட்" மற்றும் "தொழிற்சங்க" வகையறாக்களின் நச்சாவிகளைத் துடைத்தெறியும். உறுதியான விதத்தில், இது உடனே நடந்துவிடாது, அல்லது அதுவாகவே கூட நடந்துவிடாது. மூர்க்கமான வர்க்கப் போராட்டத்தின் அடித்தளத்தில் ஒரு உறுதியான சித்தாந்த போராட்டம் வரவிருக்கிறது. ஆனால் இந்த நெருக்கடியின் அடுத்தடுத்த போக்கு, சம்பவங்களின் ஒன்றொன்டொன்று பிணைந்ததன்மையைக் குறித்த காலத்திற்குகந்த பகுப்பாய்வையும் மற்றும் அவற்றின் மேலதிக அபிவிருத்தியை குறித்த காலத்திற்குகந்த முன்கணிப்பையும், மார்க்சிசம் மட்டுமே வழங்குகிறது என்பதை எடுத்துக்காட்டும்.

1934 இன் பெப்ரவரி நாட்கள், ஒருங்கிணைந்த எதிர்-புரட்சியின் முதலாவது தீவிர தாக்குதலைக் குறித்தது. 1936 இன் மே-ஜூன் நாட்கள் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் முதல் அளப்பரிய அலையை முன்னறிவிக்கின்றன. இந்த இரண்டு மைல்கற்களுமே இரண்டு சாத்தியமான பாதைகள், அதாவது இத்தாலிய பாதை அல்லது ரஷ்ய பாதை, முன்னால் வரவிருப்பதை காட்டுகின்றன. எதன் பெயரால் புளூம் (Blum) அரசாங்கம் இப்போது செயல்படுகிறதோ, அந்த நாடாளுமன்ற ஜனநாயகம், இந்த இரண்டு மிக பிரமாண்ட மைல்கற்களுக்கு இடையே பொடிப்பொடியாக நசுக்கப்படும். இடைமருவு சேர்க்கைகள் மற்றும் குழுவாக்கங்கள், அரைகுறையான தாக்குதல்கள் மற்றும் பின்வாங்கல்கள், தந்திரோபாய அத்தியாயங்கள் என என்னதான் குறிப்பிட்ட கட்டங்கள் வந்தாலும், இதுமுதற்கொண்டு, அங்கே தேர்ந்தெடுப்பதற்குரிய விருப்புரிமையாக பாசிசம் அல்லது பாட்டாளி வர்க்கப் புரட்சி மட்டுமே உள்ளன. இதுவே இந்நூலின் அர்த்தமாகும்.

லியோன் ட்ரொட்ஸ்கி

June 10, 1936

 

1

Whither France?

பிரான்ஸ் எங்கே செல்கிறது?

Leon Trotsky,
November 9, 1934

எதிர்வரும் ஆண்டுகளில் பிரான்சின் கதி குறித்து முன்னேறிய தொழிலாளர்களுக்கு இந்தப் பக்கங்களில் விளக்குவதற்கு நாங்கள் விரும்புகிறோம். எங்களைப் பொறுத்தவரை, பிரான்ஸ் என்பது பங்குப் பரிவர்த்தனை மையம் அல்ல, வங்கிகள் அல்ல, டிரஸ்டுகள் அல்ல அல்லது அரசாங்கமோ, அரசோ அல்லது திருச்சபையோ அல்ல – இவை எல்லாமே பிரான்சின் ஒடுக்குமுறையாளர்களாவர், மாறாக தொழிலாள வர்க்கமும் மற்றும் சுரண்டப்படும் விவசாயிகளுமே.

1. முதலாளித்துவ ஜனநாயகத்தின் பொறிவு

முதலாம் உலகப் போருக்குப் பின்னதாக, ஒரு தொடர் பிரமாதமான வெற்றிகரமான புரட்சிகள் ரஷ்யாவிலும், ஜேர்மனியிலும், ஆஸ்திரியா-ஹங்கேரியிலும் பின்னதாக ஸ்பெயினிலும் நடந்தன. ஆனாலும் ரஷ்யாவில் மட்டும் தான் பாட்டாளி வர்க்கம் முழு அதிகாரத்தையும் தனது கைகளில் எடுத்தது என்பதோடு, அதன் சுரண்டல்காரர்களிடமிருந்து சொத்துக்களை பறிமுதல் செய்தது, அத்துடன் ஒரு தொழிலாளர்’ அரசினை உருவாக்கி நிர்வகிப்பது எப்படி என்பதையும் அறிந்து வைத்திருந்தது. மற்ற எல்லா இடங்களிலுமே பாட்டாளி வர்க்கமானது, வெற்றி பெற்றிருந்த நிலையிலும் கூட, அதன் தலைமையின் தவறினால், பாதிவழியில் நின்று விட்டது. இதன் விளைவாக, அதிகாரம் அதன் கைகளில் இருந்து நழுவி இடதின் பக்கமிருந்து வலதின் பக்கத்திற்காய் நகர்ந்து விட்டதோடு, பாசிசத்திற்கும் அது இரையாகிப் போனது. இன்னும் ஏனைய நாடுகள் பலவற்றில் அதிகாரம் இராணுவ சர்வாதிகாரத்தின் கரங்களில் சிக்கியது. எந்தவொரு இடத்திலுமே நாடாளுமன்றங்களுக்கு வர்க்க முரண்பாடுகளை சமரசம் செய்து நிகழ்வுகள் அமைதியாக அபிவிருத்தி காண்பதை உறுதியளிப்பது இயலாத ஒன்றாக இருந்தது. கைகளில் ஆயுதங்களுடன்தான் மோதல்கள் தீர்க்கப்பட்டன.

பிரெஞ்சு மக்களைப் பொறுத்தவரை பாசிசத்திற்கு ஆதரவு கிடைக்கப்போவதில்லை என்றுதான் அவர்கள் நீண்ட காலம் நினைத்து வந்திருந்தனர். இறையாண்மை கொண்ட மக்கள் அனைவரும் தமது வாக்குரிமையைச் செலுத்துவதன் ஊடாக பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு காணப்படுகின்றதான ஒரு குடியரசு தங்களிடம் இருக்கிறது என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் 1934 பிப்ரவரி 6 அன்று, கைத்துப்பாக்கிகள், தடிகள் மற்றும் சவரக்கத்திகளின் (razors) துணையுடன் பல்லாயிரக்கணக்கான பாசிஸ்டுகளும் முடியரசுக்கு விசுவாசமானவர்களும் நாட்டின் மீது டுமேர்க் (Doumergue) இன் பிற்போக்கு அரசாங்கத்தை திணித்தனர். அவரது அரவணைப்பின் கீழ் பாசிச குழுக்கள் தொடர்ந்து வளர்ந்தும் தங்களை ஆயுதபாணியாக்கிக் கொண்டும் வருகின்றன. நாளை காத்திருப்பது என்ன?

மற்ற சில ஐரோப்பிய நாடுகளைப் போலவே (இங்கிலாந்து, பெல்ஜியம், ஹாலந்து, சுவிட்சர்லாந்து, ஸ்காண்டிநேவியன் நாடுகள்) பிரான்சில் இப்போதும் நாடாளுமன்றங்கள், தேர்தல்கள், ஜனநாயக சுதந்திரங்கள், அல்லது அவற்றின் மிச்சங்கள் எல்லாம் இருக்கிறது தான். ஆனால் இந்த எல்லா நாடுகளிலுமே வர்க்கப் போராட்டம் என்பது, முன்னதாக இத்தாலியிலும் ஜேர்மனியிலும் நடந்தது போல, கூர்மையடைந்து சென்று கொண்டிருக்கிறது. “பிரான்ஸ் ஜேர்மனி மாதிரி இல்லை” என்ற வாக்கியத்தைக் கொண்டு தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொள்ளும் எவரொருவரும் நம்பிக்கையிழந்தவராய் இருக்கிறார். முதலாளித்துவ வீழ்ச்சியின் விதிகள் என்ற அதே வரலாற்று விதிகள்தான் எல்லா நாடுகளிலுமே இயங்கிக் கொண்டிருக்கின்றன. உற்பத்தி சாதனங்கள் சிறிய எண்ணிக்கையிலான முதலாளிகளின் கைகளில்தான் தொடருமென்றால், சமூகத்திற்கு வெளிவரும் வழியே கிடையாது. ஒரு நெருக்கடியில் இருந்து அடுத்த நெருக்கடிக்கு, அவசியத் தேவையில் இருந்து துயரத்திற்கு, மோசத்தில் இருந்து படுமோசத்திற்குச் செல்ல அது சபிக்கப்பட்டிருக்கிறது. முதலாளித்துவத்தின் முதுமைத்தளர்ச்சியும் சிதைவும் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு வடிவங்களில் மற்றும் சமனற்ற வேகத்தில் வெளிப்படுகின்றன. ஆனால் இந்த நிகழ்ச்சிப்போக்கின் அடிப்படையான அம்சங்கள் எல்லா இடங்களிலும் ஒரேமாதிரியாகவே இருக்கிறது. முதலாளித்துவமானது அதன் சமூகத்தை முழுமையான திவால்நிலைக்கு இழுத்துச் சென்றுகொண்டிருக்கிறது. தனது மக்களுக்கு ரொட்டித் துண்டையும் சரி அல்லது அமைதியையும் சரி உறுதியளிக்க இலாயக்கற்றதாக அது இருக்கிறது. திட்டவட்டமாக இந்தக் காரணத்தினால்தான் ஜனநாயக ஒழுங்கினை இனியும் அதனால் சகித்துக்கொள்ள முடியவில்லை. உடலியல்ரீதியான வன்முறையை பயன்படுத்தி தொழிலாளர்களை அடித்து நொருக்க அது நிர்ப்பந்திக்கப்படுகிறது. ஆனாலும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளது அதிருப்தியை, வெறும் போலிசை மட்டும் வைத்து முடிவுக்குக் கொண்டுவந்து விட அதனால் முடியாது. மேலும் இராணுவத்தை மக்களுக்கு எதிராக அணிவகுக்கச் செய்வதென்பது பலசமயங்களில் சாத்தியமற்றதாகி விடுகிறது. சிதைவுறுதலுடன் தொடங்கி இறுதியில் படைவீரர்களின் ஒரு பெரும் பகுதி மக்களின் பக்கத்திற்காய் சென்று சேருவதுடன் அது முடிவடைவதாய் இருக்கிறது. அதனால் தான், வேட்டை விளையாட்டிற்கென சில வகை நாய்கள் பயிற்றுவிக்கப்படுவது போல தொழிலாளர்களுடன் மோதுவதற்கு என சிறப்பாகப் பயிற்றுவிக்கப்பட்ட சிறப்பு ஆயுதக் குழுக்களை உருவாக்கும் கட்டாயத்திற்கு நிதி மூலதனம் உள்ளாகின்றது. ஜனநாயக நெறிமுறைகளின் உதவியுடன் ஆளுவதற்கும் மேலாதிக்கம் செய்வதற்கும் இயலாத ஒரு நிலையில் முதலாளிகள் தங்களைக் காணுகின்றபோது தொழிலாள வர்க்கத்தை அடித்து நொருக்குவது, அதன் அமைப்புகளை அழிப்பது மற்றும் அரசியல் சுதந்திரங்களை நெரிப்பது இவையே பாசிசத்தின் வரலாற்றுவழியான செயல்பாடாக உள்ளன.

பாசிஸ்டுகள் தமது மனித வளத்தை பிரதானமாக குட்டி முதலாளித்துவத்திடம் காண்கின்றனர். ஏனென்றால் அது பெரு மூலதனத்தால் முழுக்க முழுக்க நாசமாக்கப்பட்டதாய் இருக்கிறது. நடப்பு சமூக ஒழுங்கில் அதற்கு வேறு வழியும் கிடையாது, வேறு எந்த வழியும் அதற்குத் தெரியாது. அதன் அதிருப்தி, சீற்றம் மற்றும் விரக்தியை பாசிஸ்டுகள் பெருமூலதனத்தின் திசையில் இருந்து மாற்றி தொழிலாளர்களுக்கு எதிராகத் திருப்பி விடுகின்றனர். குட்டிமுதலாளித்துவத்தை அதன் மிகக் கடுமையான எதிரிகளது எடுப்பார் கைப்பிள்ளையின் இடத்தில் வைக்கின்ற நடவடிக்கைதான் பாசிசம் என்றும் கூட சொல்லலாம். இந்த வகையில் பெரு மூலதனமானது நடுத்தர வர்க்கங்களை அழிக்கின்றது, பின் கூலிக்கு அமர்த்துகின்ற பாசிச ஆர்ப்பரிப்பாளர்களின் உதவியுடன் வெறுப்படைந்திருக்கும் குட்டி முதலாளித்துவத்தை தொழிலாளிக்கு எதிராய் தூண்டிவிடுகிறது. இதுபோன்ற மரணகரமான வழிமுறைகளின் மூலமாகத்தான் முதலாளித்துவ ஆட்சியானது பாதுகாக்கப்பட முடியும். எத்தனை காலத்திற்கு? அது பாட்டாளி வர்க்கப் புரட்சியால் தூக்கி வீசப்படுகின்ற வரைக்கும்.

2. பிரான்சில் போனபார்ட்டிசத்தின் தொடக்கம்

பிரான்சில் ஜனநாயகத்தில் இருந்து பாசிசம் நோக்கியான நகர்வு தனது முதல் கட்டத்தில் தான் இருக்கிறது. நாடாளுமன்றம் இருக்கிறது, ஆனால் ஒருகாலத்தில் அதனிடம் இருந்த அதிகாரங்கள் இப்போது அதன்வசம் இல்லை, அது ஒருபோதும் அவற்றை மீட்கப் போவதும் கிடையாது. 1934 பிப்ரவரி 6 க்குப் பின்னர் மரண பயத்தில் மூழ்கிய நாடாளுமன்றப் பெரும்பான்மையானது, இரட்சகரும் மத்தியஸ்தருமான டுமேர்க்கை அதிகாரத்திற்கு அழைத்தது. அவரது அரசாங்கம் தன்னை நாடாளுமன்றத்திற்கு மேலாக அமர்த்திக் கொள்கிறது. அது தனக்கான அடித்தளத்தை “ஜனநாயகரீதியாக” தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மையின் மீது அமைத்துக் கொள்ளாமல் மாறாக நேரடியாகவும் உடனடியாகவும் அதிகாரத்துவ அமைப்பின் மீதும், போலிஸ் மற்றும் இராணுவத்தின் மீதும் தான் அமைத்துக் கொண்டிருக்கிறது. திட்டவட்மாக இந்தக் காரணத்தால் தான் டுமேர்க் அரச பணியார்களுக்கு அல்லது பொதுவாகச் சொன்னால் அரசு ஊழியர்களுக்கு எந்த சுதந்திரத்தையும் அனுமதிக்க முடியவில்லை. அவருக்குத் தேவையான அதிகாரத்துவ அமைப்பு என்பது, அவரது வார்த்தைக்கு பணிந்த மற்றும் நன்கு கட்டுப்பாடுடையதாக இருந்து மற்றும் இதன் தலைமையில் தான் இருக்கக்கூடியதாகவும், இதனால் அவர் வீழ்ச்சி அபாயத்தில் இருந்து தன்னைக் பாதுகாத்துக் கொள்ள அவசியமானதாக இருக்கிறது. பாசிஸ்டுகளைக் கண்டும் “பொது முன்னணி” (common front) யைக் கண்டும் அஞ்சிநடுங்கும் நாடாளுமன்றப் பெரும்பான்மையானது டுமேர்க் இன் முன்னால் தலைவணங்க தள்ளப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் பிரதிநிதிகளது அவையைக் கலைக்கும் உரிமை தொடர்பாக வரவிருக்கும் நாடாளுமன்ற “சீர்திருத்தம்” குறித்து ஏராளமாய் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தக் கேள்விகள் எல்லாம் வெறும் நீதித்துறை நலன் குறித்தவையாகவே இருக்கின்றன. அரசியல் அர்த்தத்தில், இந்தக் கேள்வி எல்லாம் ஏற்கனவே தீர்க்கப்பட்டு விட்டது. வேர்சாய்க்கு பயணம் செய்யாமலேயே சீர்திருத்தம் செய்துமுடிக்கப்பட்டு விட்டது. ஆயுதமேந்திய பாசிசக் குழுக்கள் வெளிப்படையாக காட்சியளிப்பதானது, நிதி மூலதனம் தன்னை நாடாளுமன்றத்திற்கும் மேலே உயர்த்திக் கொள்ள வழி செய்திருக்கிறது. இதில்தான் இப்போது பிரெஞ்சு அரசியல்சட்டத்தின் சாரமே இருக்கிறது. மற்ற எல்லாமே பிரமை, வார்த்தை மயக்கம் அல்லது நனவான மோசடிதான்.

டுமேர்க்கின் நடப்புப் பாத்திரம் (அவருக்கு அடுத்து வர வாய்ப்பிருக்கும் தார்டியு (Tardieu) வகையினரது பாத்திரமும்) எதுவும் புதிதில்லை. இது, வெவ்வெறு சூழல்களின் கீழ் முதலாம் நெப்போலியனும் மூன்றாம் நெப்போலியனும் ஆற்றிய பாத்திரங்களுக்கு ஒப்பானதுதான். போனபார்ட்டிசத்தின் சாரத்தில் அடங்கியிருப்பது இதுதான்: இரண்டு தரப்பிடையேயான போராட்டத்தில் தனக்கு அடித்தளம் அமைத்துக் கொள்கின்ற இது, அதிகாரத்துவ-இராணுவ சர்வாதிகாரத்தின் உதவியுடன் “தேசத்தை”, “காப்பாற்று”கிறது. முதலாம் நெப்போலியன் முதலாளித்துவத்தின் உத்வேகமான இளைஞர்களது போனபார்ட்டிசத்தை பிரதிநிதித்துவம் செய்தார். மூன்றாம் நெப்போலியனது போனபார்ட்டிசமோ முதலாளித்துவத்திற்கு ஏற்கனவே இலேசாய் வழுக்கை விழுந்ததற்குப் பின்னர் தான் அபிவிருத்தி கண்டது. டுமேர்க் என்ற மனிதரில் நாம் காண்பது முதலாளித்துவ வீழ்ச்சியின் நாடி தளர்ந்து விட்ட போனபார்ட்டிசத்தையாகும்.

நாடாளுமன்றவாதத்தில் இருந்து போனபார்ட்டிசத்தை நோக்கிய பாதையிலான முதல் அடியையே டுமேர்க் அரசாங்கம் பிரதிநிதித்துவம் செய்கிறது. இந்த சமநிலையை பாதுகாக்க வேண்டுமென்றால் டுமேர்க்கிற்கு தனது வலதுகரமான அவரை அதிகாரத்துக்குக் கொண்டு வந்த பாசிச மற்றும் ஏனைய குழுக்கள் அவசியமாக இருக்கிறது. Patriotic Youth, the Croix de Feu, the Camelots du Roi, மற்றும் ஏனையவையை கலைக்க -காகிதத்தில் அல்ல எதார்த்தத்தில்- அவரிடம் கோருவது என்பது, அவர் உட்கார்ந்திருக்கும் கிளையை வெட்டுவதற்கு அவரிடமே கோருவது போலத்தான்.

ஒருபக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்திற்கு தற்காலிகமாய் ஊசலாடுவது என்பது சாத்தியமே என்பதை மறுப்பதற்கில்லை. இவ்வாறாக காலத்திற்கு முற்பட்ட ஒரு பாசிசத் தாக்குதலென்பது அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் “இடது” பக்கமான ஒரு குறிப்பிட்ட நகர்வைத் தூண்டக் கூடும். டுமேர்க் தற்காலிகமாக தார்டியுக்கு அல்லாமல் ஏரியோ (Herriot) வுக்காய் வழிவிடலாம். ஆனால் முதல் விடயம், பாசிஸ்டுகள் காலத்திற்கு முற்பட்ட ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைக்கு முனைவார்கள் என்பதை எவரொருவரும் சொல்லவில்லை. இரண்டாவது விடயம், உயர்மட்டத்தில் இடதின் பக்கமாய் தற்காலிகமாய் நகர்வதென்பது நிகழ்வுகளின் பொதுவான பாதையை மாற்றி விடப் போவதில்லை. அது இறுதி மோதலை தள்ளிப்போட மட்டுமே செய்யும்.

அமைதியானதொரு ஜனநாயகத்திற்குத் திரும்பிச் செல்லுகின்ற பாதை என்பது இனி எதுவுமில்லை. பாட்டாளி வர்க்கத்திற்கும் பாசிசத்திற்கும் இடையிலான ஒரு மோதலுக்கு நிகழ்வுகள் தவிர்க்கவியலாமலும் தடுக்க முடியாமலும் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.

3. போனபார்ட்டிசம் நீடித்து நிலைக்குமா?

இப்போதைய இடைமருவல் போனபார்ட்டிச ஆட்சி எத்தனை காலத்திற்கு நிற்கமுடியும்? அல்லது வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஒரு தீர்மானகரமான யுத்தத்திற்கு தன்னைத் தயாரித்துக் கொள்ள பாட்டாளி வர்க்கத்திற்கு எவ்வளவு காலம் இருக்கிறது? இயல்பாகவே, இந்தக் கேள்விக்கு துல்லியமானதொரு பதில் சொல்வது சாத்தியமில்லைத்தான். ஆனால் இந்த ஒட்டுமொத்த நிகழ்ச்சிப்போக்கும் என்ன வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை மதிப்பிடும் நோக்கங்களுக்காய் குறிப்பிட்ட காரணிகளை நிறுவிக்காட்ட முடியும். இவ்வாறு செய்வதற்கான மிக முக்கியமான கூறு, ரடிக்கல் கட்சிக்கு (Radical Party) என்ன நிகழும் என்ற கேள்விதான்.

நடப்பு போனபார்ட்டிச ஆட்சியின் தோற்றமே, நாம் ஏற்கனவே கூறியது போல, அதிதீவிர அரசியல் முகாம்களிடையேயான ஒரு உள்நாட்டுப் போரின் தொடக்கத்துடன்தான் தன்னை இணைத்துக் கொள்கிறது. அது, தனது அடிப்படையான பொருள்சார் ஆதரவை போலிஸ் மற்றும் இராணுவத்தில் காண்கிறது. ஆனால் இடதின் பக்கத்தில் -ரடிக்கல் சோசலிஸ்ட் கட்சி- இருந்தும் அதற்கு அரசியல் ஆதரவு இருக்கிறது. நகர்ப்புறத்திலும் நாட்டுப்புறத்திலும் இருக்கும் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தில்தான் இந்த வெகுஜனக் கட்சியின் அடித்தளம் இருக்கிறது. இதன் உயர் மட்டம் என்பது மக்களுக்கு அவ்வப்போது சிறு சீர்திருத்தங்களையும் அடிக்கடி ஜனநாயக வாசகங்களையும் சேர்த்து, பிற்போக்குத்தனத்தில் இருந்தும் மதச்சார்புவாதத்தில் இருந்தும் அன்றாடம் அவர்களைக் காப்பாற்றி (வார்த்தைகளில்) ஆனால் அத்தனை முக்கியமான பிரச்சினைகளிலும் பெரு மூலதனத்தின் கொள்கையையே முன்னெடுத்து வந்திருக்கின்ற நகர்ப்புற மற்றும் நாட்டுப்புற பெரு முதலாளித்துவத்தின் “ஜனநாயக” முகவர்களால் நிரம்பியிருக்கிறது.

பாசிச அச்சுறுத்தலின் கீழ், இன்னும் அதிகமாய் பாட்டாளி வர்க்க அச்சுறுத்தலின் கீழ், ரடிக்கல் சோசலிட்டுகள் போனபார்ட்டிச முகாமில் இருந்து நகரும் நிலைக்கு தாங்கள் நிர்ப்பந்திக்கபட்டிருப்பதைக் காண்கிறார்கள். பாகனின் சவுக்கடிக்குப் பணிந்த ஒட்டகம் போல, இந்த தீவிரவாதமானது (Radicalism) முதலாளித்துவ பிற்போக்குத்தனம் அதனது பிடரியில் ஏறி உட்காருவதற்கு வசதியாக தனது நான்கு கால்களையும் மடக்கிக் குனிகிறது. தீவிரப்போக்கினர்களது அரசியல் ஆதரவு இல்லாமல் இந்த தருணத்தில் டுமேர்க் அரசாங்கம் சாத்தியமற்றதாகும்.

பிரான்சின் அரசியல் பரிணாம வளர்ச்சியை ஜேர்மனியினதுடன் ஒப்பிடுவதாக இருந்தால், டுமேர்க் அரசாங்கமும் அதற்குப் பின்வரும் சாத்தியம் கொண்ட அரசாங்கங்களும் வைய்மார் மற்றும் ஹிட்லருக்கு இடையிலான காலத்தை நிரப்பிய ப்ரூனிங், பாப்பன் மற்றும் ஷ்லைஹர் (Brüning, Papen and Schleicher) தலைமையிலான அரசாங்கங்களை நினைவில் கொண்டு வருகின்றன. ஆனாலும் கூட அரசியல்ரீதியாக மிகப் பிரம்மாண்ட முக்கியத்துவம் படைத்த ஒரு வித்தியாசம் இருக்கிறது. ஜனநாயகக் கட்சிகள் உருக்குலைந்து விட்ட நிலையில் நாஜிக்கள் மிக அசுர வேகத்தில் வளர்ந்து வந்து கொண்டிருந்த சமயத்தில்தான் ஜேர்மன் போனபார்ட்டிசம் காட்சிக்கு வந்தது. ஜேர்மனியின் மூன்று போனபார்ட்டிச அரசாங்கங்களும், தங்களுக்கென சொந்தமாக மிகப் பலவீனமானதொரு அடித்தளத்தையே கொண்டிருந்த நிலையில், பாட்டாளி வர்க்கம், பாசிசம் ஆகிய இரண்டு குரோதமான முகாம்களுக்கு இடையில் இருந்த மிகப்பெரும் பாதாளப் பிளவுக்குக் குறுக்கே சென்றதான ஒரு மெல்லிய கயிறின் மீது சமநிலைப்படுத்திக் கொண்டிருந்தன. இந்த மூன்று அரசாங்கங்களுமே மிக விரைவாக வீழ்ச்சி கண்டன. பாட்டாளி வர்க்கத்தின் முகாமானது அதன் தலைவர்களால் நோக்குநிலை தவறச் செய்யப்பட்டு, ஏமாற்றப்பட்டு மற்றும் காட்டிக் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் பிளவுபட்டும் போராட்டத்திற்குத் தயாரிப்பற்ற நிலையிலும் இருந்தது. நாஜிக்கள் ஏறக்குறைய போராட்டமே இல்லாமல் அதிகாரத்தைக் கைப்பற்ற முடிந்திருந்தது.

பிரெஞ்சு பாசிசம் இன்னும் அப்படியானதொரு பாரிய சக்தியாகி விடவில்லை. இன்னொரு பக்கத்தில் போனபார்ட்டிசமானது தீவிரப்போக்கினர்களில் ஆதரவைக் கண்டது உறுதியாகவும் இல்லை, ஸ்திரமானதாகவும் இல்லை, ஆயினும் பரந்த ஆதரவைப் பெற்றிருக்கவில்லை. இந்த இரண்டு உண்மைகளுக்கும் இடையே ஒரு உள்முகமான இணைப்பு இருக்கிறது. தீவிரவாதமானது அதன் அடித்தளத்தின் சமூக குணாம்சத்தைக் கொண்டு பார்த்தால், அது குட்டி முதலாளித்துவத்தின் ஒரு கட்சி. குட்டி முதலாளித்துவத்தை வெற்றி காண்பதன் மூலமாக மட்டுமே பாசிசம் ஒரு பாரிய சக்தியாக ஆக முடியும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் பிரான்சில் தீவிரப்போக்கினர்களை கபளீகரம் செய்துதான் பாசிசம் அபிவிருத்தி காணமுடியும். இந்த நிகழ்ச்சிப்போக்கு அதன் ஆரம்ப கட்டங்களில் தான் இன்னும் இருக்கிறது என்றாலும் கூட ஏற்கனவே அது நடக்கத் தொடங்கி விட்டது.

4. ரடிக்கல் கட்சியின் பாத்திரம்

கடந்த மாவட்ட தேர்தல்களில் கிடைத்த முடிவுகள் எதிர்பார்க்க முடிந்திருந்தவையாகவும் எதிர்பார்த்திருக்க வேண்டியவையாகவும் இருந்தன. சுற்றுவட்டங்கள், அதாவது பிற்போக்குவாதிகள் மற்றும் தொழிலாளர் தொகுப்புகள் எல்லாம் ஈட்டம் பெற்றன, மத்தியவாதிகள், அதாவது தீவிரப்போக்கினர் இழப்பைக் கண்டனர். ஆனால் வெற்றிகளும் இழப்புகளும் இப்போதும் புறக்கணிக்கத்தக்க அளவுகளிலேயே இருக்கின்றன. இது நாடாளுமன்ற தேர்தல்கள் குறித்த கேள்வியாக இருந்திருந்தால், இந்த நிகழ்வுகள் எல்லாமே சந்தேகமில்லாமல் இன்னும் மிகக் கூடிய குறிப்பிடத்தக்க பரிமாணங்களை எடுத்திருக்கும். கவனத்திற்கு வந்திருக்கும் இடப்பெயர்ச்சிகளில் நமக்கு முக்கியம் அந்த இடப்பெயர்ச்சிகள் அல்ல, மாறாக பரந்த மக்களின் நனவில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களின் அறிகுறிகளாக மட்டுமே அவை முக்கியத்துவம் உடையதாகின்றன.

குட்டி-முதலாளித்துவ மையமானது ஏற்கனவே இரண்டு அதிதீவிர முகாம்களுக்கு பாதையை விட்டுக்கொடுக்கத் தொடங்கி விட்டதை அவை காட்டுகின்றன. அதாவது நாடாளுமன்ற ஆட்சியின் மிச்சங்கள் எல்லாம் நாளுக்கு நாள் விழுங்கப்பட இருக்கின்றன. அதிதீவிர முகாம்கள் வளர்ச்சி காண இருக்கின்றன. அவற்றுக்கு இடையிலான மோதல்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நிகழ்ச்சிப்போக்கு முற்றுமுழுதாய் தவிர்க்கவியலாதது என்பதை புரிந்து கொள்வது கடினமல்ல.

குட்டி முதலாளித்துவம் தனது நிலைமையை முன்னோக்கி அமைதியாக முன்னேற்றுவதற்குக் கொண்டிருக்கும் நம்பிக்கைகளை ரடிக்கல் கட்சியின் துணைகொண்டே பெரு முதலாளித்துவம் பாதுகாக்கிறது. குட்டி முதலாளித்துவத்தின் பொருளாதார சூழல் முட்டுக்கொடுக்கக் கூடியதாகவும் சகிக்கக் கூடியதாகவும் இருக்கும் வரைதான், பாரிய சீரழிவு தவிர்க்கப்பட முடிகின்ற வரை மட்டும்தான், குட்டி முதலாளித்துவம் எதிர்காலத்திலான தனது நம்பிக்கையை காப்பாற்ற முடிகின்ற வரை மட்டும்தான் தீவிரப்போக்கினரின் இந்த பாத்திரம் சாத்தியமாகும். உறுதியாகச் சொல்லலாம், தீவிரப்போக்கினரின் வேலைத்திட்டம் எப்போதும் காகிதத்தில் மட்டும்தான் இருந்து வந்திருக்கிறது. உழைப்பவர்களுக்கான எந்த முக்கியமான சமூக சீர்திருத்தத்தையும் அவர்கள் கொண்டுவந்ததில்லை, கொண்டு வர அவர்களால் முடிந்ததும் இல்லை. வங்கிகள் மற்றும் பங்குப் பரிவர்த்தனை மையம், ஊடகங்கள், உயர் அதிகாரிகள், முக்கிய இராஜதந்திரிகள் மற்றும் பொது ஊழியர்கள் என அதிகாரத்தின் உண்மையான அத்தனை கடிவாளங்களையும் தனது கைவசத்தில் கொண்டிருக்கின்ற பெரு முதலாளித்துவ வர்க்கம் அதனை அனுமதித்தது கிடையாது.

அவ்வப்போது தீவிரப்போக்கினர் தமது வாடிக்கையாளர்களுக்கு அற்ப பிச்சை போடுவதுண்டு, குறிப்பாக மாகாண அளவில். இந்த சொற்ப கையளிப்புகளின் உதவி கொண்டு அவர்கள் பரந்த பொதுமக்களின் நப்பாசைகளை பாதுகாத்தனர். இவ்வாறாக அது கடைசி நெருக்கடி வரை சென்றிருக்கிறது. இது ஒரு சாதாரணமான, இவை போருக்கு முன்னர் போல் ஒரு சில வழக்கமாய் கடந்து செல்கின்ற நெருக்கடி போன்ற பிரச்சினையல்ல, மாறாக ஒட்டுமொத்த சமூக அமைப்புமுறையின் நெருக்கடி என்பது மிகப் பின்தங்கியதொரு விவசாயிக்கும் கூட இப்போது மிகத்தெளிவாகத் தெரிந்து விட்டது. இது, துணிச்சலான தீர்மானகரமான நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கிறது. என்ன நடவடிக்கைகள்? விவசாயிக்கு தெரியாது. அவருக்கு சொல்லப்பட்டிருக்க வேண்டியதை ஒருவரும் அவருக்குச் சொல்லியிருக்கவில்லை.

முதலாளித்துவமானது உற்பத்தி சாதனங்களை எத்தகையதொரு மட்டத்திற்கு கொண்டுவந்திருக்கிறது என்றால், அவை பரந்த வெகுஜனங்களின் துயரத்தால் முடக்கம் காணுகின்ற அளவுக்கு, அதே முதலாளித்துவத்தினாலேயே நாசமாக்கப்படுகின்ற ஒரு அளவுக்கு. அதன்மூலம் ஒட்டுமொத்த அமைப்புமுறையும் வீழ்ச்சி காண்பதற்கும், புழுத்து நாறுவதற்கும் ஆரம்பித்திருக்கிறது. முதலாளித்துவம் உழைக்கும் மக்களுக்கு புதிய சமூக சீர்திருத்தங்களைக் கொடுக்க முடியவில்லை என்பது மட்டுமல்ல, அற்ப பிச்சைகளையும் கூட இட முடியவில்லை. ஒருகாலத்தில் அது கொடுத்தவற்றை இப்போது திருப்பியெடுக்கும் நிலைக்கு அது தள்ளப்பட்டிருக்கிறது. ஐரோப்பா அனைத்துமே பொருளாதார மற்றும் அரசியல் எதிர்-சீர்திருத்தங்களது சகாப்தம் ஒன்றிற்குள் நுழைந்திருக்கிறது. பரந்துபட்ட மக்களை கொள்ளையடிக்கின்ற மற்றும் மூச்சுத்திணறச் செய்கின்ற கொள்கையானது பிற்போக்குவாதத்தின் இயலாமையில் இருந்து தோன்றியதல்ல மாறாக முதலாளித்துவ அமைப்புமுறை அழுகிச் சிதைந்திருப்பதில் இருந்து எழுந்ததாகும். வெற்று வார்த்தைகளால் ஏமாறாமல் இருக்க வேண்டிய ஒவ்வொரு தொழிலாளியும் உட்கிரகித்துக் கொள்ள வேண்டிய அடிப்படையான உண்மை இதுவேயாகும்.

திட்டவட்டமாக இந்தக் காரணத்தால் தான் ஐரோப்பா முழுவதிலும் ஜனநாயக சீர்திருத்தவாதக் கட்சிகள் எல்லாம் சிதறிக் கொண்டிருப்பதோடு ஒவ்வொன்றாக தமது பலத்தை இழந்து கொண்டிருக்கின்றன. இதே கதிதான் பிரெஞ்சு தீவிரப்போக்கினர்களுக்கும் காத்திருக்கிறது. மோசமான பிற்போக்குத்தனத்தின் காலத்தில் டலாடியே இன் சரணாகதி அல்லது ஏரியோவின் துரோகம் என்பது சந்தர்ப்பவசமான, தற்காலிகக் காரணங்களாலோ அல்லது இந்த இரண்டு வருத்தத்திற்குரிய தலைவர்களிடம் போற்றும் குணநலன் இல்லாததினாலோ விளைவதாய் முட்டாள்கள் மட்டுமே சிந்திக்க முடியும். அப்படிக் கிடையாது! மாபெரும் அரசியல் நிகழ்வுகள் எப்போதும் ஆழமான சமூகக் காரணங்களைக் கொண்டிருக்கின்றன. ஜனநாயகக் கட்சிகளின் வீழ்ச்சி என்பது ஒரு உலகளாவிய நிகழ்வு, அதன் காரணங்கள் முதலாளித்துவத்தின் சிதைவில் தான் தங்கியிருக்கின்றன. பெரு முதலாளித்துவம் தீவிரப்போக்கினர்களிடம் சொல்கிறது: “இப்போது சிரித்துக் கொண்டிருக்கும் நேரமில்லை. நீங்கள் சோசலிஸ்டுகளிடம் கொஞ்சுவதையும் மக்களுக்கு விளையாட்டுத்தனமாக மாமலைகளையும் அற்புதங்களையும் வாக்குறுதி அளிப்பதையும் நிறுத்தாவிட்டால், நான் பாசிஸ்டுகளை அழைக்க வேண்டியிருக்கும். 1934 பிப்ரவரி 6 வெறுமனே முதல் எச்சரிக்கை மட்டும் தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்” அதற்குப் பின் தீவிரப்போக்கு ஒட்டகம் தனது நான்கு கால்களையும் மடக்கிக் குனிகிறது. அது செய்வதற்கு வேறொன்றும் கிடையாது.

ஆனால் அந்தப் பாதையில் தீவிரவாதம் விடிவு காணப் போவதில்லை. மக்களின் கண் முன்னே அதன் கதியை பிற்போக்குத்தனத்தின் கதியுடன் அது இணைப்பதன் மூலம், அது தவிர்க்கவியலாமல் தனது சொந்த முடிவை துரிதப்படுத்திக் கொண்டிருக்கிறது. மாவட்ட தேர்தலில் வாக்குகள் மற்றும் தொகுதிகளை இழந்தது என்பது வெறும் தொடக்கம் தான். ரடிக்கல் கட்சியின் உருக்குலைவு நிகழ்ச்சிப்போக்கு என்பது அதிகமான வேகத்தில் கட்டவிழ இருக்கிறது. இந்த தவிர்க்கமுடியாத மற்றும் தடுக்கமுடியாத வீழ்ச்சி யாருக்கு சாதகமாக அமையும்? - பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கா? அல்லது பாசிசத்திற்கா? என்பதை அறிவதே முழுமையான கேள்வி.

புரட்சிகர சோசலிசமா அல்லது பாசிச பிற்போக்குத்தனமா? இதில் எது நடுத்தர வர்க்கங்களுக்கு துணிச்சலாகவும் பரவலாகவும் மிக நம்பிக்கையூட்டுகின்ற ஒரு வேலைத்திட்டத்தை முதலில் கொடுக்கப் போகிறது, இன்னும் மிக முக்கியமானதாக, ஒரு மேம்பட்ட எதிர்காலத்திற்கான பாதையில் இருக்கும் ஒவ்வொரு முட்டுக்கட்டையையும் அடித்து நொருக்க இயலும் தனது திறனை சொல்லிலும் செயலிலும் எடுத்துக் காட்டி அவர்களது நம்பிக்கையை வெல்லப் போகிறது?

இந்தக் கேள்வியில்தான் வரவிருக்கும் பல ஆண்டுகளுக்கான பிரான்சின் கதி தங்கியிருக்கிறது. பிரான்சினுடையது மட்டுமல்ல, ஐரோப்பா அத்தனைக்குமான கதியும் தான். ஐரோப்பா மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்தின் கதியும் தான்.

5. "நடுத்தர வர்க்கங்களும், ரடிக்கல் கட்சியும் பாசிசமும்

ஜேர்மனியில் நாஜிக்கள் வெற்றி பெற்றது முதலாகவே பாசிசத்துக்கான பாதையைத் தடுப்பதற்கு “நடுத்தர வர்க்கங்களுடன்” நெருக்கமாக இருக்கவேண்டியதன் அவசியம் குறித்து, பிரெஞ்சு “இடதின்” கட்சிகள் மற்றும் குழுக்களில் பெரும் பேச்சு இருந்து வருகிறது. தீவிரப்போக்கினர் உடன் நெருக்கமாய் வருகின்ற குறிப்பான நோக்கத்திற்காகவே ருனோடெல் (Renaudel) கன்னையினர் சோசலிஸ்ட் கட்சியில் இருந்து உடைந்து பிரிந்தனர். ஆனால் 1848 இன் கருத்துக்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ருனோடெல் தனது இரண்டு கரங்களையும் ஏரியோவை நோக்கி விரித்த அந்த நேரத்தில், ஏரியோவின் இரண்டு கரங்களுமே, ஒன்று தார்டியு உடனும், மற்றையது லூயி மறான் (Louis Marin) இனாலும் பற்றிக்கொள்ளப்பட்டுள்ளது.

அப்படியானால், தொழிலாள வர்க்கம் குட்டி முதலாளித்துவத்திற்கு தனது முதுகைக் காட்டி விட்டு அதனை அதன் விதிப்படி விட்டு விடலாம் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. அது கூடாது! விவசாயிகள் மற்றும் நகரங்களின் குட்டி முதலாளித்துவத்தை அணுகுவதும், அவர்களை நமது பக்கத்திற்காய் இழுப்பதும் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தின் வெற்றிக்கே அவசியமான நிபந்தனை என்கிற போது, அதிகாரத்தைக் கைப்பற்றும் விடயத்தில் சொல்லவும் தேவையில்லை. என்னவென்றால் பிரச்சினை சரியான வகையில் முன்வைக்கப்பட வேண்டும், அதற்கு இந்த “நடுத்தர வர்க்கங்களின்” இயல்பு குறித்து தெளிவாகப் புரிந்து வைத்திருப்பது அவசியமாகும். பொதுவான சூத்திரங்களின் சமூக உள்ளடக்கத்தை ஆய்வு செய்யாமல் அவற்றையே திரும்ப திரும்ப கூறுவதைப்போல் அரசியலில், அதிலும் குறிப்பாக அதிமுக்கியமானதொரு காலகட்டத்தில், மிக ஆபத்தானது எதுவுமில்லை.

சமகால சமூகம் மூன்று வர்க்கங்களால் ஆனது: பெரு முதலாளித்துவ வர்க்கம், பாட்டாளி வர்க்கம் மற்றும் “நடுத்தர வர்க்கங்கள்” அல்லது குட்டி முதலாளித்துவ வர்க்கம். இறுதிஆய்வில் நாட்டின் அரசியல் நிலைமையை தீர்மானிப்பதே இந்த மூன்று வர்க்கங்களிடையேயான உறவுகள் தான். சமூகத்தின் அடிப்படையான வர்க்கங்கள் என்றால் பெரு முதலாளித்துவ வர்க்கமும் பாட்டாளி வர்க்கமும் தான். இந்த இரண்டு வர்க்கங்களும் மட்டும் தான் தமக்கென சொந்தமாக ஒரு தெளிவான, நிலையான, சுயாதீனமான கொள்கையைக் கொண்டிருக்கின்றன. குட்டி முதலாளித்துவ வர்க்கமானது அதன் பொருளாதாரச் சார்புநிலையாலும் அதன் சமூக பல்வித தன்மையாலும் வேறுபடுகின்றது. அதன் உயர் அடுக்கு நேரடியாக பெரு முதலாளித்துவத்துடன் பிணைந்திருப்பது. அதன் கீழ் அடுக்கோ பாட்டாளி வர்க்கத்துடன் கலக்கக் கூடியது, இன்னும் உதிரிப் பாட்டாளி வர்க்கத்தின் நிலைக்கும் வீழ்ச்சி காணக் கூடியது. அதன் பொருளாதாரச் சூழ்நிலைக்கு ஏற்றதாய், குட்டி முதலாளித்துவ வர்க்கத்திற்கு அதன் சொந்த கொள்கை என்று எதுவும் கிடையாது. அது எப்போதுமே முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் ஊசலாடக் கூடியது. அதன் சொந்த உயரடுக்கு அதனை வலது நோக்கித் தள்ளுகிறது; அதன் கீழ் அடுக்கோ, ஒடுக்கப்படுகின்ற மற்றும் சுரண்டப்படுகின்றதான நிலைமைகளின் கீழ், குறிப்பிட்ட நிலைமைகளில் கூர்மையாக இடது நோக்கித் திரும்பக் கூடியது. “நடுத்தர வர்க்கங்களின்” பல்வேறு அடுக்குகளிடையேயான இந்த முரண்பாடான உறவுகள் தான், தீவிரப்போக்கினரின் குழப்பமான மற்றும் முழுக்க திவாலான கொள்கையையும், அடித்தளத்தை அமைதிப்படுத்த சோசலிஸ்ட் கட்சியினருடன் கூட்டணி சேர்வது, முதலாளித்துவத்தைக் காப்பாற்ற முதலாளித்துவ பிற்போக்குவாதிகளுடன் சேர்ந்து தேசியக் கூட்டு உருவாக்குவது என்ற அவர்களது ஊசலாட்டங்களையும் எப்போதும் தீர்மானிக்கிறது. தீவிரவாதத்தின் இறுதிச் சிதைவானது, பெரு முதலாளித்துவமானது, அதுவே ஒரு முட்டுக்கட்டையான நிலையில் நிற்கின்ற சமயத்தில், இதனை இனியும் ஊசலாட அனுமதிப்பதில்லை என்ற சமயத்தில்தான் தொடங்குகிறது.

நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறத்தின் நாசமாக்கப்பட்ட வெகுஜனங்களான குட்டி முதலாளித்துவ வர்க்கமானது பொறுமையை இழக்கத் தொடங்குகிறது. அது தன் சொந்த உயரடுக்கை நோக்கி மேலும் மேலும் குரோதமானதொரு மனோநிலைக்கு ஆட்பட்டுக் கொண்டிருக்கிறது. தனது அரசியல் தலைமையின் திவால்நிலை மற்றும் துரோகம் குறித்து அது மிக உறுதியான முடிவுகளுக்கு வந்திருக்கிறது. ஏழை விவசாயியும், கைவினைஞரும் மற்றும் சிறு வியாபாரியும் தங்களுக்கும் இந்த அத்தனை நகரசபைத்தலைவர்கள், அத்தனை வழக்கறிஞர்கள் மற்றும் ஏரியோ, டலாடியே, Chautemps and Co. வகையான அரசியல் வர்த்தகர்களுக்கும் இடையில் வாழ்க்கை முறையிலும் சரி பெரு முதலாளித்துவம் குறித்த கருத்தாக்கத்திலும் சரி ஒரு பெரும் பிளவு பாதாளமளவுக்கு நிற்கிறது என்பதை உறுதியாக தெரிந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் இந்த பிரமை விலகலை, அதன் பொறுமையின்மையை, அதன் வெறுப்பைத்தான் பாசிசம் சுரண்டிக் கொள்கிறது. அதன் பிரச்சாரகர்கள், பிழைப்புவாதிகளையும் கையூட்டுவாதிகளையும் ஆதரித்து உழைப்பவர்களுக்கு எதையும் தராத நாடாளுமன்ற ஜனநாயகத்தை காறி உமிழ்கின்றனர், முற்றுமுழுதாய் வெறுக்கின்றனர். இந்த வாய்வீச்சாளர்கள் வங்கியாளர்களுடனும், பெரு வணிகர்களுடனும் மற்றும் முதலாளிகளுடனும் தங்களது கரங்களைக் குலுக்கிக் கொள்கின்றனர். அவர்களது வார்த்தைகளும் உடலசைவுகளும் முட்டுச் சந்தில் சதுப்பாய் நிரம்பியிருக்கும் சிறு உடமையாளர்களது உணர்வுகளுடன் பொருந்திச் செல்கிறது. பாசிஸ்டுகள் துணிச்சலை காண்பிக்கின்றனர், வீதிகளில் இறங்குகின்றனர், போலிசைத் தாக்குகின்றனர், நாடாளுமன்றத்தை பலவந்தமாய் விரட்டியடிக்க முனைகின்றனர். இது விரக்தியுடன் இருக்கும் குட்டி முதலாளித்துவத்திடம் மனதில் நன்கு இடம்பிடித்து விடுகிறது. அவன் தனக்குத் தானே கூறிக் கொள்கிறான்: “தீவிரப்போக்கினர், இவர்களில் மிகப் பலரும் கொள்ளைக்காரர்களாக இருக்கிறார்கள், தம்மை வங்கியாளர்களுக்கு விற்று விட்டார்கள்; சோசலிஸ்டுகளோ சுரண்டலை ஒழிக்கவிருப்பதாக நீண்டகாலமாய் வாக்குறுதி அளித்து வருகிறார்கள் ஆனால் வார்த்தைகளைக் கடந்து செயலுக்கு அவர்கள் வருவதாயில்லை, கம்யூனிஸ்டுகளோ ஒருவனால் புரிந்து கொள்ளவும் முடியாதிருக்கிறது – இன்று ஒன்றாய் இருக்கிறது நாளை இன்னொன்றாய் இருக்கிறது; பாசிஸ்டுகள் நம்மைக் காப்பாற்ற முடியாதா என்றுதான் பார்ப்போமே.”

6. நடுத்தர வர்க்கங்கள்தவிர்க்கவியலாமால் பாசிசத்தை சென்றடையத்தான் வேண்டுமா?

குட்டி முதலாளித்துவம் எல்லாவற்றுக்கும் மேலாக ஜனநாயகத்தை நேசிப்பது, ஆகவே தீவிரப்போக்கினர்களின் வாலைப் பிடித்துப் போவது அவசியம் என்பதாக ருனோடெல், ஃபுரோசார் (Frossard) மற்றும் இவர்களை ஒத்தவர்கள் கற்பனை செய்கிறார்கள். என்ன பெரும் குழப்பம்! ஜனநாயகம் என்பது ஒரு அரசியல் வடிவம் மட்டுமே. குட்டி முதலாளித்துவத்திற்கு புறத்தோற்றம் குறித்த கவலை கிடையாது, அதற்குள் உள்ளிருக்கும் உள்ளுடல் பகுதி குறித்த கவலை மட்டுமே. தன்னை துன்பத்திலிருந்தும் அழிவில் இருந்தும் காப்பாற்றிக் கொள்ள அது விரும்புகிறது. ஜனநாயகம் கையாலாகாதது என்று நிரூபணமாகுமானால், ஜனநாயகம் ஒழிந்து போகட்டும்! இந்த வகையில் ஒவ்வொரு குட்டி முதலாளித்துவவாதியும் சிந்திக்கிறார் அல்லது உணர்கிறார்.

கீழ்மட்டத்தில் இருக்கும் குட்டி முதலாளித்துவ வர்க்கத்திடம் நகராட்சிகளிலும், பிரதிநிதிகள் சபையிலும் மற்றும் நாடாளுமன்றத்திலும் இருக்கும் அதன் சொந்த “படித்த” உயரடுக்குகளுக்கு எதிராக பெருகிக் கொண்டிருக்கும் கலக மனப்பான்மையில்தான் பாசிசத்தின் பிரதானமான சமூக மற்றும் அரசியல் மூலாதாரம் இருக்கிறது. வழக்கறிஞர்கள், பிரதிநிதிகள் மற்றும் தகுதியேயில்லாத அமைச்சர்கள் மீது நெருக்கடியால் உலுக்கப்பட்டிருக்கும் புத்திஜீவித இளைஞர்கள் கொள்ளும் வெறுப்பையும் இதனுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த இடத்திலும் கீழ்மட்டத்தில் இருக்கும் குட்டி-முதலாளித்துவ புத்திஜீவிகள் தங்களுக்கு மேலிருப்பவர்களுக்கு எதிராக கலகம் செய்கிறார்கள்.

அப்படியானால், குட்டி முதலாளித்துவம் பாசிசத்தை நோக்கிச் செல்வது தடுக்கமுடியாததும் தப்பிக்க முடியாததும் என்று அர்த்தமா? இல்லை, அப்படியொரு முடிவுக்கு வருவது அவமானகரமான விதிவசவாதமாகி விடும்.

தீவிரவாதம் மற்றும் அதன் கதியுடன் தங்களை இணைத்துக் கொண்டிருக்கும் அரசியல் குழுவாக்கங்கள் அத்தனையும் மறையப் போவதுதான் உண்மையில் தவிர்க்கவியலாததும் தப்பிக்கவியலாததும் ஆகும்.

முதலாளித்துவ வீழ்ச்சி நிலைமைகளின் கீழ் ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் “அமைதியான” முன்னேற்றத்திற்கான ஒரு கட்சிக்கு எந்த இடமும் இனியும் இல்லை. பிரான்சின் நிகழ்வுகள் எந்தவொரு பாதையை எடுத்தாலும், தீவிரவாதம் அது நிச்சயமாக காட்டிக்கொடுத்த குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினால் நிராகரிக்கப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டு காட்சியில் இருந்து மறைந்து போகும்.

நமது முற்கணிப்பு யதார்த்தத்துடன் பொருந்திப் போவதை ஒவ்வொரு நனவான தொழிலாளியும் கடந்து செல்லும் ஒவ்வொரு நாள் அனுபவத்திலும் உறுதியாகக் காண்பார். புதிய தேர்தல்கள் தீவிரப்போக்கினர்களுக்கு தோல்விகளைக் கொண்டு வரும். வெகுஜனங்கள் கீழேயும், அஞ்சிநடுங்கும் பிழைப்புவாதிகளின் குழுக்கள் மேலேயுமாக ஒட்டுமொத்த பிரிவுகளும் ஒன்றுக்கடுத்து ஒன்றாய் துண்டித்துக் கொண்டு போய்விடும். கட்சியை விட்டு வெளியேறல்களும், பிளவுகளும், காட்டிக்கொடுப்புகளும் இடைவிடாமல் ஒன்றுக்குப் பின் ஒன்றாய் வரும். எந்த உத்தியும் அல்லது எந்தக் கூட்டணியும் ரடிக்கல் கட்சியை காப்பாற்ற முடியாது. அது தன்னுடன் சேர்த்து Renaudel-Deat & Co. இன் “கட்சி” யையும் பாதாளத்திற்குள் இழுத்துக் கொண்டு செல்லும். முதலாளித்துவ சமூகம் தனது சிக்கல்களை ஜனநாயக வழிமுறைகள் என்றழைக்கபடுவனவற்றின் உதவி கொண்டு இனியும் வெல்லமுடியாது என்ற உண்மையின் தவிர்க்கவியலாத விளைவே ரடிக்கல் கட்சியின் முடிவு. குட்டி முதலாளித்துவத்தின் அடித்தளத்திற்கும் அதன் உயர்மட்டத்திற்கும் இடையிலான பிளவு தவிர்க்கமுடியாதது.

அதற்காக தீவிரவாதத்தை பின்பற்றும் வெகுஜனங்கள், தங்களது நம்பிக்கைகளை பாசிசத்தின் மீதுதான் வைத்தாக வேண்டும் என்று அர்த்தம் கிடையாது. மிக விரக்தியடைந்த பிரிவினரும், சமூக நிலையில் கீழ்மட்டத்திலுள்ள, நடுத்தர வர்க்கங்களது இளைஞர்களில் மிக பேராவல்மிக்கவர்களும் ஏற்கனவே அத்திசையில் தங்களது தெரிவைச் செய்து விட்டனர் என்பது உண்மையே. இந்தக் குளத்தில் இருந்துதான் குறிப்பாக பாசிசக் குழுக்கள் எல்லாம் வடிவம் பெறுகின்றன. ஆனால் நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளது அடிப்படையான வெகுஜனங்கள் இன்னும் தங்களது தெரிவை முடிவு செய்துவிடவில்லை. ஒரு மிகப்பெரும் முடிவுக்கு முந்தைய தயக்கம் அவர்களுக்கு இப்போது இருக்கிறது. தயக்கத்தில் இருக்கும் அந்தக் காரணத்தினால் தான் அவர்கள் ஏற்கனவே நம்பிக்கை போய்விட்ட பின்னரும் கூட இன்னமும் தீவிரப்போக்கினர்களுக்கு வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த தயக்கத்தின், தீர்மானமின்மையின் சூழ்நிலையானது பல வருடங்களுக்கு நீடிக்காது, பல மாதங்கள் மட்டுமே நீடிக்கும்.

வரவிருக்கும் காலகட்டத்தில் அரசியல் அபிவிருத்திகள் ஜூர வேகத்தில் நகரும். இன்னொரு பாதையின் எதார்த்தத்தில் நம்பிக்கை வைக்கின்றபோது மட்டுமே குட்டி முதலாளித்துவம் பாசிசத்தின் வாய்வீச்சை நிராகரிக்க முடியும். அந்த இன்னொரு பாதைதான் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான பாதை.

7. குட்டி முதலாளித்துவம் புரட்சியைக் கண்டு அஞ்சுகிறது என்பது உண்மையா?

மக்கள் குறித்த வல்லுநர்களாக தங்களைக் கருதிக் கொள்ளும் மனநலம் குன்றிய நாடாளுமன்றவாதிகள் திரும்பித் திரும்பிக் கூறுகிறார்கள்: “புரட்சியைக் கொண்டு நடுத்தர வர்க்கங்களை ஒருவர் பயமுறுத்தக் கூடாது. அவர்களுக்கு அதிதீவிரங்கள் பிடிப்பதில்லை.” இந்தப் பொதுவான வடிவத்தில், இந்த திட்டவட்ட கூற்றானது முற்றுமுதலான பொய் ஆகும். இயல்பாக, சிறு உடைமையாளர் அவரது வணிகம் நன்றாக நடக்கும் வரை நாளை நல்லபடியாகப் போகும் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கின்ற வரை தான் இந்த ஒழுங்கினை விரும்புகிறார்.

ஆனால் இந்த நம்பிக்கை போய் விடும்போது, அவர் எளிதாகக் கொதிப்புற்று மிகத் தீவிரப்பட்ட நடவடிக்கைகளுக்கும் கூட தன்னை அர்ப்பணிக்கத் தயாராகி விடுகிறார். அப்படி இல்லையென்றால், அவரால் ஜனநாயக அரசைத் தூக்கியெறிந்து இத்தாலியிலும் ஜேர்மனியிலும் பாசிசத்தை அதிகாரத்திற்குக் கொண்டுவந்திருக்க முடியுமா? விரக்தியடைந்திருக்கும் குட்டி முதலாளித்துவம் பாசிசத்தில் எல்லாவற்றுக்கும் மேல் பெரு மூலதனத்துக்கு எதிரான ஒரு போரிடும் சக்தியைக் காண்கிறது, அத்துடன் தொழிலாள வர்க்கக் கட்சிகளைப் போல வெறும் வாய்ப்பேச்சு பேசிக் கொண்டிருக்காமல், பாசிசம் அதிகமாய் “நீதி” யை நிலைநாட்ட வலிமையைப் பயன்படுத்தும் என்று அது நம்புகிறது. ஒருவர் வலிமையை புறக்கணிக்க முடியாது என்று அவர்கள் புரிந்துகொள்கிறார்கள்.

“அதிதீவிர நடவடிக்கைகளை” கண்டு அஞ்சுவதால்தான் இன்று குட்டி முதலாளித்துவம் தொழிலாள-வர்க்கக் கட்சிகளிடம் செல்வதில்லை என்று கூறுவது பொய், மும்மடங்கு பொய். உண்மை அதன் நேரெதிரானதாகும். குட்டி முதலாளித்துவத்தின் பாரிய வெகுஜனங்களாக இருக்கும் அதன் கீழடுக்கினர் தொழிலாள-வர்க்கக் கட்சிகளை நாடாளுமன்ற அமைப்புமுறைகளாக மட்டுமே காண்கின்றனர். அவர்களுக்கு அக்கட்சிகளின் வலிமையிலும் நம்பிக்கையில்லை, போராட்டத் திறனிலும் நம்பிக்கையில்லை, அல்லது இம்முறை போராட்டத்தை இறுதிவரை எடுத்துச் செல்வதற்கு அவை தயாரில்லாமல் இருப்பதாலும் தான் அவை இக்கட்சிகளை நம்பவில்லை.

நிலைமை இவ்வாறு இருக்கையில், தீவிரவாதத்தை இடதின் பக்கத்தில் இருக்கும் அதன் நாடாளுமன்ற சகாக்களை கொண்டு பிரதியீடுசெய்வது பலன் தருமா? இப்படித்தான் பாதி-பறிமுதல் செய்யப்பட்ட, அழிக்கப்பட்ட அத்துடன் அதிருப்தியுடனிருக்கும் உடமையாளர் புரிந்து கொள்கிறார் அல்லது உணர்கிறார். விவசாயிகள், கைவினைஞர்கள், அரச ஊழியர்கள், மற்றும் சிறிய நிர்வாகிகள் மற்றும் இதர பிரிவினரின் இந்த உளவியலைப் புரிந்துகொள்ளாமல் ஒரு சரியான கொள்கையை அபிவிருத்திசெய்வது சாத்தியமில்லாதது. குட்டிமுதலாளித்துவம் பொருளாதாரரீதியில் சார்புடையதாக இருப்பதுடன் அரசியல்ரீதியாக மிகவும் பிளவுபட்டதாக இருக்கின்றது. அதனால் தான் அது ஒரு சுயேச்சையான கொள்கையை முன்னெடுக்க இயலவில்லை. தனக்கு நம்பிக்கை ஊட்டத்தக்க ஒரு “தலைவர்” அதற்குத் தேவையாக இருக்கிறது. இந்த தனிநபர் அல்லது கூட்டுத் தலைமையை அதாவது ஒரு தலைவனது தலைமை அல்லது கட்சியினது தலைமையை அதற்கு பெரு முதலாளித்துவம் அல்லது பாட்டாளி வர்க்கம் என்ற அடிப்படை வர்க்கங்களில் ஏதேனும் ஒன்றுதான் வழங்க முடியும். பாசிசமானது சிதறிக் கிடக்கும் வெகுஜனங்களை ஒன்றுபடுத்தி அவர்களது கைகளில் ஆயுதங்களை வழங்குகிறது. மனிதத் தூசிகளில் இருந்து அது போர்ப் படையணிகளை ஒழுங்கமைக்கிறது. இவ்வாறாக ஒரு சுயாதீனமான சக்தியாகத் திகழும் பிரமையை அது குட்டி முதலாளித்துவத்திற்கு வழங்குகிறது. உண்மையில் தானே அரசுக்கு ஆணையிட்டுக் கொண்டிருப்பதாக அது கற்பனை செய்யத் தொடங்குகிறது. இந்த பிரமைகளும் நம்பிக்கைகளும்தான் குட்டி முதலாளித்துவத்தின் கவனத்தைக் கவர்கின்றன என்பதில் ஆச்சரியமில்லை!

ஆயினும் குட்டி முதலாளித்துவம் பாட்டாளி வர்க்கத்திலும் ஒரு தலைவனைக் காணமுடியும். இதுவே ரஷ்யாவிலும், ஓரளவிற்கு ஸ்பெயினிலும் எடுத்துக்காட்டப்பட்டது. இத்தாலி, ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியாவிலும் குட்டி முதலாளித்துவம் இந்த திசையிலேயே திரட்சி கண்டது. ஆனால் பாட்டாளி வர்க்கக் கட்சிகள் தமது வரலாற்றுக் கடமைக்கு எழுச்சி கண்டிருக்கவில்லை.

குட்டி முதலாளித்துவத்தை தன்பக்கம் கொண்டுவர வேண்டுமென்றால், பாட்டாளி வர்க்கம் அதன் நம்பிக்கையை வெல்ல வேண்டும். அதற்கு அது, தன் சொந்த வலிமை மீது நம்பிக்கை கொண்டிருப்பது கட்டாயம்.

அதற்கு ஒரு தெளிவான செயல்பாட்டு வேலைத்திட்டம் இருக்க வேண்டும் என்பதுடன் சாத்தியமான அத்தனை வழிகளிலும் அதிகாரத்திற்காகப் போராட அது தயாராய் இருக்க வேண்டும். ஒரு தீர்மானகரமான மற்றும் தாட்சண்யமற்ற போராட்டத்திற்காக தனது புரட்சிகரக் கட்சியால் புடம்போடப்பட்டிருக்கும் பாட்டாளி வர்க்கமானது விவசாயிகளிடமும் நகர்ப்புற குட்டி முதலாளிகளிடமும் பின்வருமாறு சொல்கிறது: “நாங்கள் அதிகாரத்திற்காகப் போராடுகிறோம். இதோ எங்களது வேலைத்திட்டம். இந்த வேலைத்திட்டத்திலான மாற்றங்கள் குறித்து உங்களுடன் விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். பெருமூலதனம் மற்றும் அதன் எடுபிடிகளுக்கு எதிராக மட்டுமே நாங்கள் வன்முறையைப் பிரயோகம் செய்வோம், உழைப்பவர்களாகிய உங்களுடன் கொடுக்கப்பட்ட ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு கூட்டணியைக் கொண்டுவருவதே எங்களது விருப்பம்.” இத்தகையதொரு மொழியை விவசாயிகள் புரிந்து கொள்வார்கள். அதிகாரத்தைக் கைப்பற்றும் திறன் பாட்டாளி வர்க்கத்திற்கு இருக்கிறது என்பதில் அவர்களுக்கு நம்பிக்கை வர வேண்டும் என்பது மட்டுமே மீதி விடயம்.

ஆனால் அதற்கு, ஐக்கிய முன்னணியில் இருந்து தெளிவற்ற வார்த்தைப் பிரயோகங்கள், முடிவெடுக்க இயலாமைகள் மற்றும் அத்தனை வெற்று வார்த்தையாடல்களையும் அகற்றுவது அவசியமாகும். சூழ்நிலையை புரிந்து கொண்டு தன்னை புரட்சிகரப் பாதையில் மிக விழிப்புடன் முன்நிறுத்துவது அவசியமாகும்.

8. தீவிரப்போக்கினர் உடனான கூட்டணி என்பது நடுத்தர வர்க்கத்திற்கு எதிரானதொரு கூட்டணியே

ருனோடெல், ஃபுரோசார் மற்றும் இவர்களைப் போன்றவர்கள் எல்லாருமே, தீவிரப்போக்கினருடன் கூட்டணி வைப்பது என்பது, “நடுத்தர வர்க்கங்களுடன்” கூட்டணி வைப்பது என்றும் ஆகவே அது பாசிசத்திற்கு எதிரான ஒரு தடைக்கல்லாக இருக்கும் என்றும் நிஜமாகவே கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த மனிதர்களுக்கு நாடாளுமன்ற நிழலைத்தவிர வேறெதுவும் கண்ணில்படுவதில்லை. வெகுஜனங்களின் உண்மையான பரிணாம வளர்ச்சியை பொருட்படுத்தாத இவர்கள், காலத்திற்கு ஒவ்வாததாகிவிட்டதும் மற்றும் இவர்களுக்கு முதுகையும் காட்டி நிற்கின்ற “ரடிக்கல் கட்சி” ஐ துரத்திக் கொண்டிருக்கின்றனர். ஒரு மாபெரும் சமூக நெருக்கடியின் சகாப்தத்தில் இயக்கத்திற்கு உள்ளாகியிருக்கும் வர்க்கங்களிடையேயான கூட்டணி ஒன்றினை சமரசங்களுக்கு உள்ளாகி அழிந்துபோக விதிக்கப்பட்டிருக்கும் ஒரு நாடாளுமன்ற கன்னையுடன் கூட்டுச் சேர்வதன் மூலம் பதிலீடு செய்துவிட இவர்கள் எண்ணுகிறார்கள். பாட்டாளி வர்க்கத்திற்கும் நடுத்தர வர்க்கங்களுக்கும் இடையிலான ஒரு உண்மையான கூட்டணி என்பது நாடாளுமன்றப் புள்ளிவிவரம் குறித்த ஒரு பிரச்சினையல்ல, மாறாக புரட்சிகர இயக்கவியல் குறித்த பிரச்சினை ஆகும்.

இந்தக் கூட்டணியானது போராட்டத்தில் உருவாக்கப்பட்டு புடம்போடப்பட வேண்டும். அவநம்பிக்கைக்கு உள்ளாகியிருக்கும் குட்டி முதலாளித்துவ வர்க்கமானது நாடாளுமன்ற நெறிமுறையின் கருமையத்தில் இருந்தும் மக்களை எப்போதும் முட்டாளாக்கி வந்திருக்கின்ற மற்றும் இப்போது அதனை திட்டவட்டமாக காட்டிக் கொடுத்திருக்கின்ற பழமைவாத “தீவிரமயப்பட்ட” பிரிவின் அணைப்பில் இருந்தும் முறித்துக் கொள்ள தொடங்கியிருக்கிறது என்ற உண்மையில்தான் நடப்பு அரசியல் சூழ்நிலையின் ஒட்டுமொத்தமான அர்த்தமும் தங்கியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் தீவிரப்போக்கினர் உடன் சேர்வதென்பது ஒருவர் தன்னைத்தானே வெகுஜனங்களின் வெறுப்புக்குள் தள்ளிக்கொண்டு, குட்டி முதலாளித்துவம் பாசிசத்தையே ஒரே இரட்சகராகக் கருதி தஞ்சம் புகத் தள்ளுவதற்கான வழிவகையாகும்.

தொழிலாள வர்க்க கட்சியானது திவாலானவர்களின் கட்சியைக் காப்பாற்றும் ஒரு நம்பிக்கையில்லாத முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல், மாறாக, தனது அத்தனை வலிமையுடனும், தீவிரப்போக்கின் செல்வாக்கில் இருந்து வெகுஜனங்களை விடுதலை செய்கின்ற நிகழ்ச்சிப்போக்கை முடுக்கிவிட வேண்டும். இந்தப் பணியில் அது எத்தனை அதிகமான உத்வேகத்தையும் எத்தனை அதிகமான துணிச்சலையும் கொண்டுவருகிறதோ அத்தனை திட்டவட்டமாகவும் அத்தனை துரிதமாகவும் அது குட்டி முதலாளித்துவத்துடனான தொழிலாள வர்க்கத்தின் ஒரு உண்மையான கூட்டணிக்கு தயாரிப்பு செய்யும். ஒருவர் தன்னை அவர்களின் தலையில் அமர்த்திக் கொள்ள வேண்டுமே தவிர அவர்களின் வாலில் அல்ல. வரலாறு துரிதமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. பின்தங்குபவர்களுக்கு துயரம் தான்!

ரடிக்கல் கட்சியை அம்பலப்படுத்த, பலவீனப்படுத்த மற்றும் அதன் சிதைவை துரிதப்படுத்த சோசலிஸ்ட் கட்சிக்கு இருக்கும் உரிமையை ஃபுரோசார் மறுக்கின்றபோது, ஒரு சோசலிஸ்டாக அவர் வெளிப்படவில்லை, ஒரு பழமைவாத தீவிரப்போக்கு கொண்டவராகவே வெளிப்படுகிறார். தனது சொந்த வேலைத்திட்டத்தில் நம்பிக்கை கொண்டு ஒட்டுமொத்த மக்களையும் தனது பதாகைக்கு அணிதிரட்ட பாடுபடுகின்ற கட்சிக்கு மட்டுமே வரலாற்றில் உயிர்வாழ்கின்ற உரிமை இருக்கிறது. அவ்வாறு இல்லையென்றால் அது ஒரு கட்சி அல்ல, மாறாக நாடாளுமன்றவாத குழுவும், பிழைப்புவாதிகளின் ஒரு கூட்டமும் தான். முதலாளித்துவ வர்க்கத்தின் மரணகரமான செல்வாக்கில் இருந்து உழைக்கும் மக்களை விடுவிப்பது பாட்டாளி வர்க்கக் கட்சியின் உரிமை மட்டுமன்று அடிப்படையான கடமையுமாகும். தீவிரப்போக்கினர் முன்னெப்போதையும் விட அதிகமாக பிற்போக்குத்தனத்தை மூடிமறைக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர், மக்களை தூங்கவைத்து ஏமாற்ற முனைந்து கொண்டிருக்கின்றனர், இவ்வழியில் பாசிசத்தின் வெற்றிக்காகத் தயாரித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதால் இந்த நேரத்தில் இந்த வரலாற்றுக் கடமை ஒரு குறிப்பிடத்தக்க கூர்மையைப் பெற்றிருக்கிறது. அப்படியானால் இடது தீவிரப்போக்கினர்கள்? ஏரியோ எப்படி தார்டியு இடம் மண்டியிட்டாரோ அதேபோல இவர்கள் ஏரியோவிடம் மண்டியிட்டுள்ளனர்.

சோசலிஸ்டுகள் மற்றும் தீவிரப்போக்கினரின் கூட்டானது ஒரு “இடது” அரசாங்கத்தை கொண்டுவந்து அது பாசிச அமைப்புகளைக் கலைத்து குடியரசைக் காப்பாற்றும் என்பது ஃபுரோசார் இன் எண்ணமாக இருக்கிறது. ஜனநாயகப் பிரமைகள் மற்றும் போலிஸ் சிடுமூஞ்சித்தனத்தின் இதைவிடப் பெரியதொரு கலவையை கற்பனை செய்வது கடினம். ஒரு தொழிலாளர் குடிமக்கள் படை (workers’ militia) அவசியமாக இருக்கிறது என்று நாம் பேசினால் –இது குறித்து நாம் விரிவாகக் கீழே பேசுகிறோம்– ஃபுரோசாரும் அவரது சுற்றுவட்டமும் உடனே ஆட்சேபிக்கின்றனர்: “பாசிசத்திற்கு எதிராக ஒருவர் உடல்ரீதியான வலுவைக் கொண்டல்ல, மாறாக தத்துவார்த்த வழிமுறைகளைக் கொண்டே போராட வேண்டும்.” வெகுஜனங்களை துணிச்சலாய் அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே –தீவிரவாதத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தின் வழி மட்டுமே இது சாத்தியம்– பாசிசத்தின் அடித்தளத்தை வேரறுக்க முடியும் என்று நாம் சொன்னால், உடனே இதே கண்ணியவான்கள் நமக்குப் பதில் சொல்கிறார்கள்: “கிடையாது, டலாடியே-ஃபுரோசார் இன் போலிஸ் அரசாங்கம் மட்டுமே நம்மைக் காப்பாற்ற முடியும்.”

என்ன பரிதாபகரமான உளறல்! அதிகாரத்தில் இருக்கும் தீவிரப்போக்கினர் அதை டுமேர்க் வசம் தானாக முன்வந்து ஒப்படைக்கிறார்கள் என்றால் அது ஃபுரோசார் இன் உதவி கிடைக்காமல் போனதால் அல்ல, மாறாக அவர்கள் பாசிசத்தைக் கண்டு அஞ்சியதாலேயே, முடியரசுவாதிகளின் சவரக்கத்திகளைக் கொண்டு அச்சுறுத்திய பெரு முதலாளித்துவத்தைக் கண்டு அவர்கள் அஞ்சியதாலேயே, பாசிசத்திற்கு எதிராக அணிவகுக்கத் தொடங்கியிருந்த பாட்டாளி வர்க்கத்தினைக் கண்டு அவர்கள் இன்னும் அதிகமாய் அஞ்சி நடுங்கியதாலேயே. அனைத்திற்கும் சிகரம் வைத்தாற் போல, ஃபுரோசாரும் கூட, தீவிரப்போக்கினர் இன் எச்சரிக்கையில் மிரட்சி கண்டு, டலாடியேக்கு சரணடைய ஆலோசனையளித்தார்.

ஒருவேளை இப்படி நடக்குமென்று அனுமானிப்போம் –வெளிப்படையாகவே நடக்க வழியில்லாத ஒரு அனுமானம் தான்– அதாவது தீவிரப்போக்கினர்கள் ஃபுரோசார் உடனான கூட்டணிக்காக டுமேர்க் உடன் கூட்டணியை முறித்துக் கொள்ள ஒப்புக் கொள்கிறார்கள் என்று வைப்போம், அப்போது பாசிசக் குழுக்கள், இந்த முறை போலிசுடன் அவர்கள் நேரடியாகவே சேர்ந்து வேலைசெய்து, மும்மடங்கு எண்ணிக்கையில் வீதிகளில் இறங்கியிருப்பார்கள், தீவிரப்போக்கினர்களோ, ஃபுரோசார் உடன் சேர்ந்து கொண்டு உடனடியாக மேசைகளுக்கு அடியில் பதுங்கியிருப்பார்கள் அல்லது அவர்களது அமைச்சரவை கழிப்பறைகளுக்குள்ளாக ஒளிந்து கொண்டிருந்திருப்பார்கள்.

ஆயினும் இன்னுமொரு விநோதமான அனுமானத்தையும் பார்ப்போம்: டலாடியே - ஃபுரோசார் இன் போலிஸ் “பாசிஸ்டுகளை நிராயுதபாணிகளாக்கின்றது”. பிரச்சினை முடிந்து விட்டதா? பாசிஸ்டுகளிடம் இருந்து இடக்கையால் பறிமுதல் செய்த ஆயுதங்களை வலக்கையால் திருப்பிக் கொடுத்துக் கொண்டிருக்கும் அந்த போலிசாரிடம் இருந்து ஆயுதங்களை யார் பறிமுதல் செய்வது? போலிஸை நிராயுதபாணியாக்கும் நகைச்சுவையானது முதலாளித்துவ அரசிற்கு எதிரான போராளிகளாகக் காட்டி பாசிஸ்டுகளின் அதிகாரம் அதிகரிப்பதற்கே வழிசெய்திருக்கிறது. பாசிசக் கும்பல்கள் அரசியல்ரீதியாகவும் தனிமைப்படுத்தப்படுகின்ற மட்டத்திற்கு மட்டுமே இந்தக் கும்பல்களுக்கு எதிரான தாக்குதல்கள் பயனுடையவையாக நிரூபணமாக முடியும்.

இதனிடையே டலாடியே - ஃபுரோசார் இன் அனுமான அரசாங்கமானது தொழிலாளர்களுக்கும் சரி அல்லது குட்டி-முதலாளித்துவ வெகுஜனங்களுக்கும் சரி எதையுமே கொடுக்கப் போவதில்லை, ஏனென்றால் தனியார் உடைமையின் அடித்தளங்கள் மீது தாக்குதல் தொடுப்பதற்கு திறனற்றதாக அது இருக்கிறது. வங்கிகளை, பெரும் வணிக ஸ்தாபனங்களை, தொழிற்துறை மற்றும் போக்குவரத்தின் முக்கிய பிரிவுகளை பறிமுதல் செய்யாமல், வெளிநாட்டு வணிகத்தில் ஏகபோகமில்லாமல், அத்துடன் வரிசையான பல பிற ஆழமான நடவடிக்கைகள் இல்லாமல், விவசாயிக்கோ, கைவினைஞனுக்கோ, சில்லறை வியாபாரிக்கோ அது உதவிக்கு வருவதற்கு எந்த சாத்தியமான வழியும் கிடையாது. அதன் செயலற்ற நிலை காரணமாக, அதன் கையாலாகாத்தனத்தின் காரணமாக, அதன் பொய்களின் காரணமாக டலாடியே - ஃபுரோசார் இன் அரசாங்கம் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தில் ஒரு கலகப் புயலை தூண்டி, அதனை திட்டவட்டமாக பாசிசத்தை நோக்கிய பாதையில் தள்ளும், இப்படியொரு அரசாங்கம் சாத்தியமாகியிருந்த பட்சத்தில். ஆயினும் ஃபுரோசார் தனியாக இல்லை என்பதையும் நாம் அங்கீகரித்துத் தான் ஆக வேண்டும். இந்தக் கூட்டினை புதுப்பிக்கும் ஃபுரோசார் இன் முயற்சிக்கு எதிராக Le Populaire இல் மிதவாத சிரோம்ஸ்கி (Zyromsky) பேசிய அதே நாளில் (அக்டோபர் 24), ரடிக்கல் சோசலிஸ்ட்டுகளுடன் கூட்டணி சேரும் யோசனையை பாதுகாத்து l’Humanité இல் கஷான் (Cachin) பேசியிருந்தார். “பாசிஸ்டுகளை நிராயுதபாணியாக்குவது” குறித்து தீவிரப்போக்கினர் பேசியிருந்தார்கள் என்ற உண்மையை கஷான் உற்சாகத்துடன் வரவேற்றிருந்தார்.

தீவிரப்போக்கினர்கள், தொழிலாளர்’ அமைப்புகள் உட்பட ஒவ்வொருவரும் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்று அவர்களாகவே அறிவித்தனர் என்பது நிச்சயமான உண்மையே. ஒரு போனபார்ட்டிச அரசின் கரங்களில், இத்தகைய நடவடிக்கையானது குறிப்பாக தொழிலாளர்களுக்கு எதிராகத்தான் செலுத்தப்படும் என்பதும் நிச்சயம்தான். பாசிஸ்டுகள் மறுநாளே தமது ஆயுதபலத்தை இரட்டிப்பாக்கிக் கொள்ள முடியும், அதில் போலிசின் உதவியும் இருக்கும். ஆனால் சோர்வூட்டும் பிரதிபலிப்புகளுடன் தொல்லைப்படுவானேன்? ஒவ்வொரு மனிதருக்கும் நம்பிக்கை அவசியம் அல்லவா. அதனால்தான் தங்கள் காலத்தில் Brüning மற்றும் Dollfuss போலிஸ் மூலமாக ஆயுதங்களைக் கீழே போடச்செய்வதில் தீர்வினை எதிர்நோக்கி நின்ற வெல்ஸ் (Wels) மற்றும் ஓட்டோ பௌவர் (Otto Bauer) இன் பாதச்சுவடுகளைப் பின்பற்றி கஷான் பயணம் செய்து கொண்டிருக்கிறார்.

சமீபத்திய 180 பாகை திருப்பத்துடன் கஷான், தீவிரப்போக்கினர்களை நடுத்தர வர்க்கங்களுடன் ஒன்றாக அடையாளப்படுத்துகிறார். அவர் ஒடுக்கப்பட்ட விவசாயிகளை தீவிரவாதத்தின் முப்பட்டகத்தின் வழியாகவே பார்க்கிறார். இறுதியில் சிறு-உடமையாளர்களின் நம்பிக்கையை இழக்கத் தொடங்கியிருக்கும் நாடாளுமன்ற பிழைப்புவாதிகளுடன் கூட்டணி சேருவதைக் காட்டி, வியர்வை சிந்தும் சிறு உடமையாளர்களுடனான கூட்டணியாக அவர் சித்தரிக்கிறார்.

“ஜனநாயக” சுரண்டல்வாதிகளுக்கு எதிராக விவசாயி மற்றும் கைவினைஞரது அரும்புவிடத்தொடங்கும் கிளர்ச்சியை ஊக்குவிப்பதை விட்டு, இந்தக் கலகத்தை பாட்டாளி வர்க்கத்துடனான ஒரு கூட்டணியை நோக்கிய திசையில் வழிநடத்துவதற்கு பதிலாக, கஷான், “பொது முன்னணி” (common front) இன் அங்கீகாரத்தைக் கொண்டு திவாலாகிப் போன தீவிரப்போக்கினர்களை ஆதரிப்பதற்கும், அதன்மூலம் மிக சுரண்டப்படுகின்ற குட்டி முதலாளித்துவத்தின் கலகத்தை பாசிசத்தின் பாதையில் செலுத்துவதற்கும் தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறார்.

தத்துவார்த்த அசட்டைத்தனம் புரட்சிகர அரசியலில் கொடூரமாய் எப்போதும் பழிதீர்க்கத்தக்கதாகும். ஸ்ராலினிஸ்டுகளை பொறுத்தவரை பாசிசத்தை போலவே “பாசிச விரோதமும்” கூட ஸ்தூலமான கருத்துருக்கள் கிடையாது, மாறாக அவர்கள் கைக்குச் சிக்குவதை திணித்துக் காட்டத்தக்க இரண்டு பெரும் வெற்றுக் கோணிப்பைகள்தான் அவை. அவர்களைப் பொறுத்தவரை, முன்னால் எப்படி டலாடியே (Daladier) ஒரு பாசிஸ்டாக இருந்தாரோ அதைப்போலவே டுமேர்க் ஒரு பாசிஸ்ட். உண்மையில் பார்த்தால், எப்படி தீவிரமயப்பட்ட குட்டி முதலாளித்துவத்தை சுரண்டிக் கொண்டவராக ஏரியோ இருந்தாரோ அதைப்போல குட்டி முதலாளித்துவத்தின் பாசிசப் பிரிவின் முதலாளித்துவ சுரண்டல்தாரர் தான் டுமேர்க். இன்றைய காலத்தில் இந்த இரண்டு அமைப்புமுறைகளுமே போனபார்ட்டிச ஆட்சியில் ஒன்றுகூடுகின்றன. டுமேர்க் எப்போதும் தனக்குப் பிடித்தமான “பாசிச-விரோதி” யாக இருக்கிறார், ஏனென்றால் பிரச்சினை நிச்சயமின்றி இருக்கின்ற ஒரு உள்நாட்டுப் போரைக் காட்டிலும் பெரு மூலதனத்தின் ஒரு இராணுவ மற்றும் போலிஸ் சர்வாதிகாரத்தை அவர் தெரிவு செய்கிறார். பாசிசத்தின் மீது கொண்ட அச்சத்தாலும் அதனை விட அதிகமாய் பாட்டாளி வர்க்கத்தின் மீது கொண்ட அச்சத்தினாலும், “பாசிச-விரோதி” டலாடியே, டுமேர்க் உடன் இணைகிறார். ஆனால் பாசிசக் கும்பல்கள் இல்லையென்றால் டுமேர்க் இன் ஆட்சி சிந்திக்கவியலாததாக இருக்கிறது. இவ்வாறாக பாசிசத்துக்கு எதிராக தீவிரப்போக்கினர் உடன் கூட்டணி வைக்கும் யோசனை குறித்த பிரயோசனமற்ற தன்மையை, ஒரு ஆரம்ப மார்க்சிச ஆய்வே எடுத்துக்காட்டி விடுகிறது!

ஃபுரோசார் மற்றும் கஷான் இன் அரசியல் பகல் கனவுகள் எத்தனை விநோதமானது எத்தனை பிற்போக்குத்தனமானது என்பதை தீவிரப்போக்கினர்களே மிகவும் கஷ்டப்பட்டு செயலில் செய்து காண்பிப்பார்கள்.

9. தொழிலாளர்குடிமக்கள்படையும் அதன் எதிர்ப்பாளர்களும்

போராடுவதற்கு அமைப்புகள், ஊடகங்கள், கூட்டங்கள் மற்றும் இன்ன பிற போராட்ட சாதனங்களையும் கருவிகளையும் பாதுகாத்து வைப்பதும் வலுப்படுத்தி வைப்பதும் அவசியமாகும். பாசிசம் இவை அனைத்தையும் நேரடியாகவும் உடனடியாகவும் அச்சுறுத்துகிறது. அதிகாரத்திற்கு நேரடியாக போராடுவதற்கு அது இன்னமும் மிகப் பலவீனமாகத்தான் இருக்கிறது என்றாலும், தொழிலாள-வர்க்க அமைப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக சாய்க்க முனைவதற்கும், தாக்குதல்கள் மூலமாகத் தனது படையணிகளுக்கு உரமூட்டுவதற்கும், அத்துடன் தொழிலாளர்களது படையணிகளிடையே குழப்பத்தையும் சொந்தப் படைவலிமையில் நம்பிக்கையின்மையையும் விதைக்குமளவுக்கும் அது போதுமான அளவு பலம் வாய்ந்ததாக இருக்கிறது.

“உடல்ரீதியான போராட்டம்” அனுமதிக்கப்படாதது அல்லது நம்பிக்கையற்றது என்று கூறி பாசிசக் காவலரை ஆயுதங்களை கீழே போடச் செய்ய டுமேர்க் இடம் கோரிக்கை வைப்பவர்கள் மூலம் பாசிசம் நனவற்று உதவி செய்பவர்களைக் காண்கிறது. பாட்டாளி வர்க்கத்திற்கு பொய்யான நம்பிக்கைகள் என்ற இனிப்புக்கலந்த விஷத்தை காட்டிலும், அதிலும் குறிப்பாக நடப்பு நிலைமையில், மிக ஆபத்தானது வேறொன்றும் இல்லை. தொழிலாளர்’ அமைப்புகளின் தரப்பில் இருந்து முன்வைக்கப்படுகின்ற “நெகிழ்ந்த அமைதிவாத” த்தைக் காட்டிலும் பாசிஸ்டுகளின் ஆணவத்தை அதிகரிப்பது வேறொன்றுமில்லை. இப்போதைக்கு எதையேனும் ஏற்பது, செயல்படாதன்மை, போராட்டத்திற்கு விருப்பமின்றி இருப்பது இவற்றைக் காட்டிலும் நடுத்தர வர்க்கங்களுக்கு தொழிலாள வர்க்கத்தின் மீது நம்பிக்கையை அழிப்பன வேறெதுவுமில்லை.

Le Populaire மற்றும் குறிப்பாக l’Humanité தினந்தோறும் “ஐக்கிய முன்னணி பாசிசத்திற்கு எதிரான ஒரு தடை”, “ஐக்கிய முன்னணி அனுமதிக்காது”; “பாசிஸ்டுகளுக்கு துணிச்சல் வராது” என்றெல்லாம் எழுதுகிறது. இவையெல்லாம் வெற்றுவாக்கியங்கள். தொழிலாளர்கள், சோசலிஸ்டுகள் மற்றும் கம்யூனிஸ்டுகளிடம் ஒரு விடயத்தை பட்டவர்த்தனமாகச் சொல்வது அவசியம்: கற்பனைவளம் செறிந்த பொறுப்பற்ற பத்திரிகையாளர்கள் மற்றும் பிரசங்கவாதிகளின் வார்த்தையாடல்களில் சிக்கி தூக்கத்தில் ஆழ்ந்துவிட உங்களை நீங்கள் அனுமதிக்காதீர்கள். இது நமது தலைகளைக் குறித்ததும், சோசலிசத்தின் வருங்காலம் குறித்ததுமான ஒரு விடயம். நாம் ஐக்கிய முன்னணியின் முக்கியத்துவத்தை மறுக்கிறோம் என்று அர்த்தமல்ல. இரண்டு கட்சிகளின் தலைவர்களுமே அதற்கு எதிராக இருந்த சமயத்தில் நாம் அதைக் கோரினோம். ஐக்கிய முன்னணி எண்ணற்ற சாத்தியக்கூறுகளை திறந்து விட்டாலும் அதற்கு மேல் ஒன்றுமில்லை. தன்னளவில் ஐக்கிய முன்னணி எதனையும் தீர்மானிப்பதில்லை. வெகுஜனங்களின் போராட்டம்தான் தீர்மானிக்கிறது. Le Populaire அல்லது l’Humanité க்கு எதிராக பாசிசப் படைகள் ஏதேனும் தாக்குதல் நடத்தும்போது கம்யூனிஸ்ட் படையணிகள் சோசலிஸ்ட் படையணிகளின் உதவிக்கு வருகிறது அல்லது சோசலிஸ்ட் படையணிகள் கம்யூனிஸ்ட் படையணிகளின் உதவிக்கு வருகிறது என்ற நிலையில் ஐக்கிய முன்னணி தனது பெருமதிப்பை வெளிப்படுத்தும். ஆனால் அதற்கு, பாட்டாளி வர்க்க போராடும் படையணிகள் இருக்க வேண்டும், கல்வியூட்டப்பட வேண்டும், பயிற்சியளிக்கப்பட வேண்டும், ஆயுதபாணியாக்கப்பட வேண்டும். பாதுகாப்புக்கான அமைப்பு ஒன்று அதாவது தொழிலாளர்’ குடிமக்கள்படை இல்லாத பட்சத்தில், Le Populaire மற்றும் l’Humanité ஐக்கிய முன்னணியின் சர்வவியாபகத்தன்மை குறித்து விரும்பும் எண்ணிக்கையில் கட்டுரைகள் எழுதலாம் ஆனால் பாசிஸ்டுகள் நன்கு தயாரித்து தொடுக்கக் கூடிய முதல் தாக்குதலிலேயே இந்த இரண்டு பத்திரிகைகளுமே தற்காத்துக் கொள்ள இயலாத நிலையில் தங்களைக் காணும்.

தொழிலாளர்’ குடிமக்கள்படையை எதிர்ப்பவர்கள் இரண்டு தொழிலாள வர்க்கக் கட்சிகளிலுமே ஏராளமாகவும் மிக செல்வாக்குடனும் இருக்கிறார்கள். அவர்களது “வாதங்கள்” மற்றும் “தத்துவங்கள்” மீதான ஒரு விமர்சனரீதியான ஆய்வினை மேற்கொள்வதற்கு நாம் முன்மொழிகின்றோம்.

“நமக்குத் தேவை வெகுஜனங்களின் தற்பாதுகாப்பே தவிர குடிமக்கள்படை அல்ல” என்று நம்மிடம் அடிக்கடி சொல்லப்படுகிறது. ஆனால் போராடும் அமைப்புகள் இல்லாமல், சிறப்புப் பயிற்சி பெற்ற காரியாளர்கள் இல்லாமல், ஆயுதங்கள் இல்லாமல் இந்த “வெகுஜனங்களின் தற்காப்பு” என்பது என்ன? பாசிசத்திற்கு எதிராக தற்காத்துக் கொள்ளும் விடயத்தை ஒழுங்கமைவற்ற, தயாரிப்பில்லாத வெகுஜனங்கள் தாங்களே கவனித்துக் கொள்ளும்படி விடுவதென்பது பொன்ரியுஸ் பிலாற் (Pontius Pilate) இன் பாத்திரத்தை விட ஒப்பிடமுடியாத அளவு கீழான ஒரு பாத்திரத்தை ஆற்றுவதைப் போன்றதாகும். போரிடும்படையின் பாத்திரத்தை மறுப்பதென்பது முன்னணிப் படையின் பாத்திரத்தை மறுப்பதாகும். பின் எதற்கு ஒரு கட்சி? வெகுஜனங்களின் ஆதரவு இல்லையென்றால், குடிமக்கள்படை என்பது ஒன்றுமே கிடையாது. ஆனால் ஒழுங்கமைந்த போரிடும் படையணிகள் இல்லாமல் போனால், மிகத் தீரமான பரந்த வெகுஜனங்களும் கூட கொஞ்சம் கொஞ்சமாக பாசிச கும்பல்களால் தகர்க்கப்பட்டு விடுவார்கள். குடிமக்கள்படையை தற்பாதுகாப்பிற்கு எதிராக நிறுத்துவது என்பது அபத்தமானது. குடிமக்கள்படை என்பதே தற்பாதுகாப்புக்கான ஒரு அமைப்பாகும்.

"குடிமக்கள் படையை அமைக்க அழைப்புவிடுவது” சில எதிர்ப்பாளர்களை பொறுத்தவரை -நிச்சயமாகச் சொல்லலாம், அவர்கள் அதிக கவனம் கொள்ளாதவர்கள் மற்றும் குறைந்த நேர்மை கொண்டவர்கள் என்பதை- “ஆத்திரமூட்டலில் ஈடுபடுவதாகும்”. இது ஒரு வாதம் அல்ல, மாறாக ஒரு அவமதிப்பு. தொழிலாளர்’ அமைப்புகளைப் பாதுகாப்பதற்கான அவசியம் என்பது முழுமையான சூழ்நிலையில் இருந்து பாய்வதாக இருக்கின்ற பட்சத்தில், தொழிலாளர் குடிமக்கள் படையை உருவாக்குவதற்கு ஒருவர் எப்படி அழைக்காமல் இருக்க முடியும்? ஒரு குடிமக்கள்படை உருவாக்கம் என்பது பாசிசத் தாக்குதல்களுக்கும் அரசாங்க ஒடுக்குமுறைக்குமாய் ”ஆத்திரமூட்டி விடுகிறது” என்பதே அநேகமாக அவர்கள் கூற வருவதாக இருக்கலாம். அப்படியே வைத்துக் கொண்டாலும் கூட, இது முழுமையாக ஒரு பிற்போக்குத்தனமான வாதமாகவே இருக்கிறது. தொழிலாளர்கள் தங்களது வர்க்கப் போராட்டத்தின் மூலமாக எதிர்வினைக்கு “ஆத்திரமூட்டுகிறார்கள்” என்பதையே தாராளவாதம் எப்போதும் கூறிவந்திருக்கிறது.

இதே குற்றச்சாட்டைத்தான் சீர்திருத்தவாதிகள் எப்போதும் மார்க்சிஸ்டுகளை நோக்கியும், மென்ஷிவிக்குகள் எப்போதும் போல்ஷிவிக்குகளை நோக்கியும் கூறி வந்திருக்கிறார்கள். இந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாம், இறுதி பகுப்பாய்வில், ஒடுக்கப்பட்டவர்கள் எதிர்ப்புதெரிவிக்காமல் இருந்தால் ஒடுக்குபவர்கள் அவர்களை ஏன் அடிக்கப் போகிறார்கள் என்ற ஆழ்ந்த சிந்தனையாகவே சென்று முடிகிறது. இது தான் டால்ஸ்டாய் மற்றும் காந்தியின் மெய்யியல், ஆனால் மார்க்ஸ் மற்றும் லெனினின் மெய்யியலாக ஒருபோதும் இது இருந்தது கிடையாது. இனி ”தீமையை வன்முறை கொண்டு எதிர்ப்பதில்லை” என்ற தத்துவத்தை l’Humanité அபிவிருத்தி செய்ய விரும்புமாயின், அது தனது அடையாளச்சின்னமாக இருக்கும் அக்டோபர் புரட்சியின் சின்னமான சுத்தியல் அரிவாளை எடுத்து விட்டு காந்திக்கு பால் கொடுத்துக் கொண்டிருக்கும் கருணை ததும்பும் ஆட்டுக்குட்டியின் சின்னத்தை வைத்துக் கொள்ளலாம்.

“ஆனால் தொழிலாளர்களை ஆயுதபாணியாக்குவதற்கு ஒரு புரட்சிகர சூழ்நிலை மட்டுமே சரியான சந்தர்ப்பமாக இருக்கும், அந்த சந்தர்ப்பம் இன்னும் வரவில்லை அல்லவா.” இந்த ஆழமான வாதத்தின் அர்த்தம் சூழ்நிலை புரட்சிகரமாக ஆகின்ற வரைக்கும் தொழிலாளர்கள் தாங்கள் படுகொலை செய்யப்படுவதை அனுமதிக்க வேண்டும் என்பதாகவே வருகிறது. நேற்று “மூன்றாவது காலகட்டத்தை” உபதேசித்தவர்கள் இப்போது அவர்கள் கண்முன்பாக நடந்து கொண்டிருப்பதை காண விருப்பமில்லாதவர்களாக இருக்கிறார்கள். “அமைதியான”, “இயல்பான”, “ஜனநாயகவயமான” சூழ்நிலை அகன்று ஒரு சூறாவளியான, அதிமுக்கியமான, மற்றும் ஸ்திரமற்ற சூழ்நிலை வந்து சேர்ந்திருக்கிறது, அது தன்னை ஒரு புரட்சிகர சூழ்நிலையாகவோ அல்லது எதிர்-புரட்சிகர சூழ்நிலையாகவோ உருமாற்றிக் கொள்ள முடியும் என்பதால்தானே ஆயுதங்கள் குறித்த பிரச்சினையே முன்னால் வந்திருக்கிறது.

முன்னேறிய தொழிலாளர்கள் தங்கள் மீது தண்டனை பயமின்றி தாக்குதல் தொடுக்கப்படுவதையும் கொஞ்சம் கொஞ்சமாக தாங்கள் தோற்கடிக்கப்படுவதையும் அனுமதிப்பார்களா அல்லது ஒடுக்கப்பட்டவர்களின் தைரியத்தை தட்டியெழுப்பி அவர்களைத் தமது பதாகையைச் சுற்றி ஐக்கியப்படுத்தி ஒவ்வொரு அடிக்கும் தமது சொந்த பதிலடியைக் கொடுப்பார்களா என்பதைப் பொறுத்தே எல்லாவற்றுக்கும் மேலாக இந்த மாற்றீடு அமைந்திருக்கும். ஒரு புரட்சிகர சூழ்நிலையானது வானத்தில் இருந்து குதிப்பதில்லை. புரட்சிகர வர்க்கம் மற்றும் அதன் கட்சியின் செயலூக்கத்துடனான பங்கேற்பைக் கொண்டு அது வடிவமெடுக்கிறது.

குடிமக்கள்படை, ஜேர்மன் பாட்டாளி வர்க்கத்தை தோல்வியில் இருந்து பாதுகாத்து விடவில்லை என்று பிரெஞ்சு ஸ்ராலினிஸ்டுகள் இப்போது வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நேற்றுத்தான் அவர்கள் ஜேர்மனியில் தோல்வி எதனையும் காணவில்லை என்று முற்றிலுமாய் மறுத்ததோடு ஜேர்மன் ஸ்ராலினிஸ்டுகளின் கொள்கையானது ஆரம்பத்திலிருந்து முடிவு வரை சரியாகத்தான் இருந்தது என்று திட்டவட்டமாகக் கூறிவந்தார்கள். இன்றோ அவர்கள் ஜேர்மன் தொழிலாளர்களது குடிமக்கள் படையில் (Rote Front) தான் ஒட்டுமொத்த தீமையும் இருப்பதாகக் காண்கிறார்கள். இவ்வாறாக ஒரு பிழையில் இருந்து அதற்குக் கொஞ்சமும் சளைப்பில்லாத எதிர்முனையில் இருக்கும் இன்னொரு பிழைக்காய் அவர்கள் தாவுகிறார்கள். குடிமக்கள் படை மட்டுமே பிரச்சினையைத் தீர்த்து விடுவதில்லை. சரியான கொள்கையும் அவசியம். இதனிடையே ஜேர்மனியில் ஸ்ராலினிசத்தின் கொள்கை (”சமூக பாசிசமே பிரதான எதிரி”, தொழிற்சங்கங்களின் பிளவு, தேசியவாதத்துடனும், சதிக்கவிழ்ப்பு வாதத்துடனுமான நெருக்கம்) தான் பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப்படை தனிமைப்படுவதற்கும் அது உடைந்து நொருங்குவதற்கும் மரணகரமாக அழைத்துச் சென்றது. முற்றிலும் பிரயோசனமில்லாத ஒரு மூலோபாயத்தைக் கொண்டு எந்த குடிமக்கள் படையும் நிலைமையை பாதுகாத்துக்கொள்ள முடியாது.

குடிமக்கள் படையின் அமைப்பு என்றாலே அது சாகசங்களுக்கு இட்டுச் செல்வது தான், எதிரியை ஆத்திரமூட்டுவதுதான், அரசியல் போராட்டத்தை உடலியல்ரீதியான போராட்டத்தைக் கொண்டு பதிலீடு செய்வதுதான் என்று கூறுவதெல்லாம் அபத்தமானது. இந்த அத்தனை மூன்று கூற்றுகளிலுமே அரசியல் கோழைத்தனத்தை தவிர வேறொன்றும் இல்லை.

உண்மையில், முன்னணிப் படையின் வலிமையான அமைப்பாக, குடிமக்கள் படைதான், சாகசங்களுக்கு எதிராக, தனிநபர் பயங்கரவாதத்திற்கு எதிராக, இரத்தம் தோய்ந்த தன்னிச்சையான வெடிப்புகளுக்கு எதிரான உறுதிபட்ட பாதுகாப்பாக அமைகிறது.

அதேநேரத்தில் பாசிசம் பாட்டாளி வர்க்கத்தின் மீது திணிக்கின்ற உள்நாட்டுப் போரை ஆகக் குறைந்தபட்சமாக குறைப்பதற்கான ஒரே உகந்த வழி குடிமக்கள்படை மட்டுமே. “புரட்சிகர சூழ்நிலை” இல்லாத ஒரு சூழ்நிலையிலும் கூட தொழிலாளர்களை அவ்வப்போது “அப்பாவின் பிள்ளை” தேசப்பற்றுவாதிகளை அவர்களது சொந்த வழியில் திருத்துவதற்கு விட்டுப் பார்ப்போம், அப்போது புதிய பாசிசக் குழுக்களுக்கு ஆள் சேர்ப்பது ஒப்பிடமுடியாத அளவுக்கு மிகக் கடினமானதாக ஆகிவிடும்.

ஆனால் இங்கேயும் மூலோபாயவாதிகள், தமது சொந்த தர்க்க அறிவில் சிக்கிக் கொண்டு, நமக்கு எதிராக இன்னும் மதிகெட்ட வாதங்களை வைக்கிறார்கள்: “பாசிஸ்டுகளின் துப்பாக்கிக்கு நமது துப்பாக்கியைக் கொண்டு நாம் பதிலளிப்போமேயானால்” அக்டோபர் 23 (1934) அன்றான l’Humanité எழுதுகிறது, “பாசிசம் என்பது முதலாளித்துவ ஆட்சியின் விளைபொருள் மற்றும் பாசிசத்திற்கு எதிரான போராட்டம் நாம் முகம்கொடுக்கும் ஒட்டுமொத்த அமைப்புமுறைக்கு எதிராக போராடுவது என்ற உண்மையை நாம் காணத் தவறுகிறோம்.” அதிகமான பிழைகளது மாபெரும் குழப்பத்தை ஒரு சில வரிகளில் திரட்டுவது என்பது எத்தனை சிரமமாக இருக்கிறது. பாசிஸ்டுகள் “முதலாளித்துவ ஆட்சியின் விளைபொருள்” என்ற காரணத்தால் அவர்களுக்கு எதிராக ஒருவர் தன்னையே காத்துக் கொள்வது சாத்தியமில்லையாம். அதாவது சமகால சமூகக் கொடுமைகள் அத்தனையுமே “முதலாளித்துவ அமைப்புமுறையின் விளைபொருட்கள்” என்பதால் ஒட்டுமொத்த போராட்டத்தையும் நாம் கைதுறந்து விட வேண்டும் போலும்.

பாசிஸ்டுகள் ஒரு புரட்சிகரவாதியைக் கொல்லும்போதோ அல்லது ஒரு பாட்டாளி வர்க்க செய்தித்தாளை கொளுத்தும்போதோ, தொழிலாளர்கள் தத்துவார்த்தரீதியாக இப்படி பெருமூச்சு விட்டுக் கொள்ளலாம்: “அடடா! கொலைகளும் தீவைப்புகளும் முதலாளித்துவ அமைப்புமுறையின் விளைபொருட்கள் அல்லவா”, அதன்பின் மன உளைச்சல் குறைந்து வீடு சென்று சேரலாம். வர்க்க எதிரிக்கு ஒட்டுமொத்த அனுகூலத்தையும் வழங்கும் விதமாக, மார்க்சின் போர்க்குண தத்துவத்தை விதிவசவாத மண்டியிடலைக் கொண்டு இடம்பெயர்க்கிறார்கள். குட்டி முதலாளித்துவத்தின் சீரழிவு என்பது முதலாளித்துவத்தின் விளைபொருள் என்பதை யாரும் மறுக்கவில்லை. பாசிசக் குழுக்களின் வளர்ச்சி என்பது, குட்டி முதலாளித்துவத்தின் சீரழிவின் விளைபொருளே. ஆனால் இன்னொரு பக்கத்தில், பாட்டாளி வர்க்கத்தின் துயரமும் கலகமும் அதிகரித்திருப்பதும் கூட வர்க்கப் போராட்டம் கூர்மையடைந்திருப்பதன் விளைபொருள் தான். பின்னர் ஏன், l’Humanité இன் “மார்க்சிஸ்டுகளுக்கு” பாசிசக் குழுக்கள் எல்லாம் முதலாளித்துவத்தின் நியாயமான விளைபொருளாகவும் தொழிலாளர்களது குடிமக்கள்படை மட்டும் ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் முறைதவறிய விளைபொருளாகவும் தெரிகிறது? இதில் பூவா தலையா பார்ப்பது சாத்தியமில்லாதது.

“ஒட்டுமொத்த அமைப்புமுறையையும் நாம் கையாள வேண்டியிருக்கிறது” என்று நமக்கு கூறப்பட்டுள்ளது. எப்படி? மனிதத் தலைகளின் மீதா? பல்வேறு நாடுகளின் பாசிஸ்டுகளும் தமது கைத்துப்பாக்கிகளுடன் தொடங்கி தொழிலாளர்களது அமைப்புகளின் ஒட்டுமொத்த “அமைப்புமுறை’யை அழிப்பதில் தான் வந்து முடிந்தார்கள். ஆயுதந்தாங்கி தாக்குதல் தொடுக்கும் எதிரியை, முறையான ஆயுதம் தாங்கிய தற்காப்பின் மூலமாக அல்லாமல், நமது முறையின் போது, தாக்குதலுக்கு செல்லாமலும் வேறு எப்படித் தடுத்து நிறுத்த முடியும்?

l’Humanité தற்காப்பு என்பதை வார்த்தைகளில் ஒப்புக் கொள்கிறது, ஆனால் “வெகுஜன தற்பாதுகாப்பு” என்ற வடிவத்தில் மட்டுமே. குடிமக்கள்படை தீங்கானதாம், ஏனென்றால் அது போரிடும் படையணிகளை வெகுஜனங்களில் இருந்து பிளவுபடுத்தி விடுகிறதாம். அப்படியானால் பாசிஸ்டுகளிடையே இருக்கும் சுயாதீனமான ஆயுதமேந்திய படையணிகள் எல்லோரும் பிற்போக்குத்தனமான வெகுஜனங்களில் இருந்து துண்டிக்கப்படுவதில்லையே, அதற்கு நேர்மாறாக, தமது நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்கள் மூலமாக வெகுஜனங்களின் துணிவை தட்டியெழுப்பவும் அவர்களை உறுதிப்படுத்துவும் முடிகிறதே, அது எப்படி? ஒருவேளை பரந்துபட்ட பாட்டாளி வர்க்கம், போராடும் தரத்தில் வர்க்கத்தன்மை இழந்த குட்டி முதலாளித்துவ வர்க்கத்தைக் காட்டிலும் தாழ்ந்தவர்களோ?

நம்பிக்கையற்ற வகையில் சிக்கிக் கொண்ட l’Humanité இறுதியாக தயங்கத் தொடங்குகிறது: வெகுஜன தற்பாதுகாப்புக்கு சிறப்பு “தற்காப்புக் குழுக்களை” உருவாக்குவது அவசியமாகவே தோன்றுகிறது. குடிமக்கள்படை நிராகரிக்கப்பட்டு, அதனிடத்தில் சிறப்புக் குழுக்கள் அல்லது படைப்பிரிவுகளுக்கு ஆலோசனையளிக்கப்படுகிறது. பெயரில் தானே வித்தியாசம் என்பது போல் முதல் பார்வையில் தோன்றக் கூடும். நிச்சயமாக l’Humanité பரிந்துரைக்கின்ற பெயர் அர்த்தம் எதுவுமற்றது. ஒருவர் “வெகுஜனத் தற்காப்பு” குறித்து கூட பேசலாம், ஆனால் “சுய பாதுகாப்புக் குழுக்கள்” பற்றிப் பேசுவது சாத்தியமில்லாதது ஏனென்றால் குழுக்களுக்கான நோக்கம் அவை தம்மைப் பாதுகாத்துக் கொள்வது பற்றியதல்ல மாறாக தொழிலாளர்’ அமைப்புகளைப் பாதுகாப்பது பற்றியதாகும். எப்படியிருந்தாலும் இது பெயர் குறித்த பிரச்சினை அல்ல. “ஆட்சிக்கவிழ்ப்புவாத” த்திற்குள் விழுந்து விடாமல் இருக்கும் பொருட்டு “சுய பாதுகாப்புக் குழுக்கள்” ஆயுதங்களைப் பயன்படுத்துவதைக் கைதுறந்து விட வேண்டும் என்று l’Humanité சொல்கிறது. இந்தச் சாமியார்கள் தொழிலாள வர்க்கத்தை ஒரு கத்தியைக் கூட அதன் கையில் கொடுக்கக் கூடாது என்று சொல்லக் கூடிய அளவுக்கு அதனை ஒரு குழந்தை போல் நடத்துகிறார்கள். இன்னும் தவிர, இந்தக் கத்திகள், நமக்குத் தெரியும், Camelots du Roi களின் ஏகபோகமாக இருக்கின்றன, முறைப்படியான “முதலாளித்துவ விளைபொருளான” இவர்கள் கத்திகளின் துணைகொண்டு ஜனநாயக ”அமைப்புமுறை”யை தூக்கிவீசியிருக்கிறார்கள். எது எப்படியோ, “சுய பாதுகாப்புக் குழுக்கள்” தங்களை பாசிச கைத்துப்பாக்கிகளுக்கு எதிராக எப்படி பாதுகாத்துக் கொள்ளப் போகின்றன? “சித்தாந்தரீதியாக”வாம். வேறு வார்த்தைகளில் சொல்வதானால்: அவர்கள் ஒளிந்து கொள்ள மட்டுமே முடியும். கைகளில் அவர்களுக்குத் தேவையானது இல்லை என்பதால், கால்களால் ஓட்டம் பிடித்துத் தான் அவர்கள் “சுய பாதுகாப்பு” தேடிக் கொள்ள முடியும். இதனிடையே பாசிஸ்டுகள் எந்தவித தண்டனைக்குள்ளாகும் பயமும் இல்லாமல் தொழிலாளர் அமைப்புகளை அகற்றுவார்கள். ஆனால் பாட்டாளி வர்க்கம் ஒரு படுபயங்கர தோல்வியைக் கண்டால், எப்படியிருந்தாலும் அது “ஆட்சிக்கவிழ்ப்புவாத” குற்றவுணர்ச்சிக்கு ஆட்பட வேண்டியிருக்காது. “போல்ஷிவிக்” பதாகையின் கீழ் நிற்கும் இந்த மோசடியான வார்த்தைவிளையாட்டு வெறுப்பையும் கோபத்தையும் தான் தூண்டி விடுகிறது.

பசுமையாய் நினைவிலிருக்கும் “மூன்றாவது காலகட்ட”த்தின் போது, l’Humanité இன் மூலோபாயவாதிகள் எல்லாம் முற்றுகைப் பித்துப் பிடித்து, அன்றாடம் வீதிகளை “கைப்பற்றி” தமது படோடாப செயல்களைப் பகிர்ந்து கொள்ளாத அனைவரையும் “சமூக பாசிஸ்ட்டுக்கள்” என்று முத்திரை குத்திய சமயத்திலேயே நாம் முன்கணித்தோம்: “இந்த கண்ணியவான்கள் எல்லோரும் இலேசாக தங்கள் விரல் நுனிகளை சுட்டுக் கொள்ளட்டும், அந்தக் கணமே ஆக மோசமான சந்தர்ப்பவாதிகளாக எப்படி மாறுகிறார்கள் என்பதை நாம் காணப் போகிறோம்”. அந்தக் கணிப்பு இப்போது முழுமையாக ஊர்ஜிதமாகி இருக்கிறது. சோசலிஸ்ட் கட்சிக்குள்ளாக குடிமக்கள்படைக்கு ஆதரவாக கருத்து பெருகி வலுப்பெற்றுக் கொண்டிருக்கின்ற ஒரு நேரத்தில், கம்யூனிஸ்ட் கட்சி என்று அழைக்கப்படுவதன் தலைவர்கள், முன்னேறிய தொழிலாளர்கள் தங்களை போராட்ட அணிவரிசையில் ஒழுங்கமைத்துக் கொள்வதற்கான விருப்பத்தை தணிப்பதற்கு தண்ணீர்க் குழாயை தேடி ஓடுகிறார்கள். இதை விட உத்வேகத்தைக் சீர்குலைப்பதற்கான அல்லது மேலும் கண்டிக்கத்தக்க வேலையை ஒருவர் கற்பனை செய்து பார்க்க முடியுமா?

10. ஒரு தொழிலாளர்குடிமக்கள்படை கட்டாயம் கட்டப்பட வேண்டும்

சோசலிஸ்ட் கட்சியின் அங்கத்தவர்களுக்குள் சில சமயம் இந்த ஆட்சேபத்தைக் கேட்க முடிகிறது: “ஒரு குடிமக்கள்படை உருவாக்கப்பட வேண்டும்தான், ஆனால் அது குறித்து உரக்கக்கூற அவசியமில்லை.” இவ்விடயத்தின் நடைமுறைப் பக்கத்தை ஆர்வக்கோளாறுமிக்க கண்களில் இருந்தும் காதுகளில் இருந்தும் பாதுகாக்க விரும்புவதற்காக தோழர்களைப் பாராட்டுவது சிறந்ததே. ஆனால் ஒரு குடிமக்கள்படையை நான்கு சுவர்களுக்குள்ளாக யாரும் பார்க்காமல் இரகசியமாகக் கட்டிவிடலாம் என்று சிந்திப்பது எத்தனை அப்பாவித்தனம். நமக்கு பத்தாயிரக்கணக்கில் பின்னர் நூறாயிரக்கணக்கில் போராளிகள் தேவைப்படுகின்றார்கள். மில்லியன் கணக்கான ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களும், அவர்களுக்குப் பின்னால் விவசாயிகளும் குடிமக்கள்படையின் அவசியத்தைப் புரிந்து கொண்டு இந்த தன்னார்வமுள்ளவர்களை சுற்றி சிரத்தையான அனுதாபமும் செயலூக்கமான ஆதரவும் கொண்ட ஒரு சூழலை உருவாக்குகின்றபோது தான் அவர்கள் கிடைப்பார்கள். சதித்தொடர்புடைய கவனம் என்பது இந்த விடயத்தின் தொழில்நுட்ப விடயத்தை மட்டுமே சூழ்ந்திருக்க முடியும், சூழ்ந்திருக்க வேண்டும். அரசியல் பிரச்சாரமானது வெளிப்படையாக கூட்டங்களிலும், தொழிற்சாலைகளிலும், வீதிகளிலும் மற்றும் பொதுச் சதுக்கங்களிலும் வெளிப்படையாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.

குடிமக்கள் படையின் அடிப்படைக் காரியாளர்களை பொறுத்தவரை. அவர்கள் தொழிற்சாலை தொழிலாளர்கள் அவரவர் வேலை இடத்திற்கு தக்கபடி குழுவாக்கப்பட்டவர்களாக, ஒருவருக்கொருவர் தெரிந்தவராக, அத்துடன் எதிரி முகவர்களின் ஆத்திரமூட்டல்களுக்கு எதிராக தமது போராட்ட படையணிகளைப் பாதுகாப்பதில் மேல்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளைக் காட்டிலும் மிக எளிதாகவும் மிக உறுதியாகவும் கையாளக் கூடியவர்களாக இருத்தல் வேண்டும். சதித்திட்ட ஆலோசனை அதிகாரிகள் எல்லாம் வெகுஜனங்கள் பகிரங்கமாக அணிதிரட்டப்பட்டிராத பட்சத்தில் அபாயத்தின் தருணத்தில் கையாலாகாத்தனமாக அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு தொழிலாள-வர்க்க அமைப்புமே இந்த வேலைக்குள் ஈடுபடுத்தப்பட வேண்டும். இந்தப் பிரச்சினையில் தொழிலாள வர்க்கக் கட்சிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் பிரிப்புக் கோடே இருக்க முடியாது. இரண்டும் கைகோர்த்து வெகுஜனங்களை அணிதிரட்டியாக வேண்டும். அப்போது மக்களின் குடிமக்கள் படையின் வெற்றி முழுமையாக உறுதி செய்யப்படுவதாய் இருக்கும்.

“ஆனால் தொழிலாளர்களுக்கு ஆயுதங்கள் எங்கே இருந்து வரும்” என ஆட்சேபிக்கிறார்கள் நிதானத்தில் இருக்கும் “எதார்த்தவாதிகள்”, அதாவது, மிரட்சி கொண்ட பிலிஸ்டைன்கள். “எதிரியிடம் துப்பாக்கிகள், பீரங்கிகள், டாங்கிகள், கண்ணீர்புகை மற்றும் விமானம் அனைத்தும் இருக்கிறது. தொழிலாளர்களிடமோ சில நூறு கைத்துப்பாக்கிகளும் சட்டைப்பை கத்திகளும் தானே இருக்கின்றன.” என்கின்றனர்.

இந்த ஆட்சேபத்தில் தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்காக எல்லாமே மிகைப்படுத்தி காட்டப்படுகிறது. ஒருபக்கத்தில், பாசிஸ்டுகளிடம் இருக்கும் ஆயுதங்களை அரசின் ஆயுதங்கள் அளவிற்கு நம் புத்திசாலிகள் அடையாளம் காண்கிறார்கள். இன்னொரு பக்கத்திலோ, அவர்கள் அரசின் பக்கமாய்த் திரும்பி பாசிஸ்டுகளை ஆயுதங்களைக் கீழே போடச் செய்யும்படி கோருகிறார்கள். கவனிக்கத்தக்க தர்க்கம் தான்! உண்மையில் இரண்டு சந்தர்ப்பங்களிலுமே அவர்களது நிலைப்பாடு பிழையானதாக இருக்கிறது. பிரான்சில் பாசிஸ்டுகள் அரசைக் கட்டுப்படுத்துவதற்கு எல்லாம் இன்னும் வெகு தூரத்தில் இருக்கின்றனர். பிப்ரவரி 6 அன்று அவர்கள் அரச போலிசுடன் ஒரு ஆயுத மோதலுக்குள் சென்றனர். அதனால்தான், பாசிஸ்டுகளுடனான உடனடியான ஒரு ஆயுத மோதல் குறித்துப் பேசுகையில் பீரங்கிகள் மற்றும் டாங்கிகள் குறித்துப் பேசுவது தவறானது. பாசிஸ்டுகள் நம்மை விட அதிகமாய் வசதி படைத்தவர்கள் என்பது உண்மையே. அவர்களுக்கு ஆயுதங்கள் வாங்குவது இன்னும் சுலபம் தான். ஆனால் தொழிலாளர்கள் ஒரு உறுதியான புரட்சிகரத் தலைமை குறித்த நனவுடன் இருக்கும்போது அவர்கள் ஏராளமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள், மிகத் தீர்மானகரமானவர்களாக இருக்கிறார்கள், அத்துடன் மிக அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள்.

மற்றைய இடங்களிலிருந்து கிடைப்பதற்கு மேலதிகமாக, தொழிலாளர்கள் பாசிஸ்டுகளை திட்டமிட்டு நிராயுதபாணியாக்கி அதன் மூலமாகவும் தங்களை மேலும் ஆயுதபாணியாக்கிக் கொள்ள முடியும்.

இதுதான் இப்போது பாசிசத்திற்கு எதிரான மிக முக்கியமான போராட்ட வடிவங்களில் ஒன்றாக இருக்கிறது. பாசிஸ்டுகளது ஆயுதக் கிடங்குகளில் இருந்து இடம்மாறி தொழிலாளர்களது ஆயுதக் கிடங்குகளது கையிருப்பு அதிகரிக்கும் பட்சத்தில், வங்கிகளும் ட்ரஸ்டுகளும் அவர்களது கொலைப்படைகளுக்கு ஆயுதம் வாங்க நிதியளிப்பதில் இன்னும் கூடுதலாக கவனமுடையவர்களாகிவிடுவர். இந்த விடயத்தில்இந்த விடயத்தில் மட்டும் தான்– அதிகாரிகள் உஷாராகி தொழிலாளர்களுக்கு கூடுதலாக ஆயுதங்களுக்கான ஒரு மூலவளத்தை வழங்க வேண்டாமெனக் கருதி பாசிஸ்டுகளுக்கு ஆயுதம் வாங்க நிதியாதாரம் செய்வதைத் தவிர்க்கவும் கூட உண்மையிலேயே தொடங்கி விடுவார்கள். ஒரு புரட்சிகர தந்திரோபாயம்தான், அதன் பக்க விளைபொருளாக, அரசாங்கத்திடம் இருந்து “சீர்திருத்த”ங்களை அல்லது சலுகைகளைக் கொண்டுவருகிறது என்பது நமக்கு நீண்ட காலமாகவே தெரிந்த விடயம் தானே.

ஆனால் பாசிஸ்டுகளது ஆயுதங்களை எப்படிப் பறிமுதல் செய்வது? இயல்பாகவே, வெறும் செய்தித்தாள் கட்டுரைகளை மட்டும் கொண்டு அதைச் செய்து விட முடியாது. போரிடும் படைகள் உருவாக்கப்பட்டாக வேண்டும். ஒரு உளவுத்துறை சேவை உருவாக்கப்பட்டாக வேண்டும். விடயம் நம்மால் கையிலெடுக்கப்பட்டு விட்டது என்பதை உணரும்போது ஆயிரக்கணக்கில் துப்புக் கொடுப்பவர்களும் நட்புடன் உதவுபவர்களும் எல்லா திசைகளில் இருந்தும் தன்னார்வத்துடன் முன்வருவார்கள். இதற்கு பாட்டாளி வர்க்க நடவடிக்கைக்கான ஒரு விருப்பம் தான் அவசியமாக இருக்கிறது.

ஆனாலும் பாசிஸ்டுகளது ஆயுதங்கள் மட்டுமே ஒரே ஆதாரவளம் என்றில்லை. பிரான்சில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர்கள் இருக்கிறார்கள். பொதுவாகப் பார்த்தால் இந்த எண்ணிக்கை குறைவு. ஆனால் தொழிலாளர்’ குடிப்படை என்ற அமைப்பின் ஒரு ஆரம்பத்திற்கு இது முற்றிலும் போதுமானதே. கட்சிகளும் தொழிற்சங்கங்களும் தமது உறுப்பினர்களில் பத்தில் ஒரு பங்கினை இதில் சேர்த்தாலே, அதுவே 100,000 பேர் கொண்டதொரு படையாகி விடும். தொழிலாளர்’ குடிமக்கள்படைக்கு “ஐக்கிய முன்னணி” ஒரு அழைப்புவிடுகின்ற அடுத்த நாள், இந்த எண்ணிக்கைக்கு மிக அதிகமானோர் தானாக முன்வந்து முன்நிற்பார்கள் என்பதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை. கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களது பங்களிப்புகளும், சேகரிப்புகளும் மற்றும் நன்கொடை சந்தாக்களுமாக ஓரிரு மாதங்களுக்குள்ளாகவே 100,000 இல் இருந்து 200,000 வரையான தொழிலாள வர்க்கப் போராளிகளை ஆயுதபாணியாக்குவதை உறுதிப்படுத்துவதை சாத்தியமாக்கும். நிகழ்வுகளின் ஒட்டுமொத்தமான முன்னோக்கும் ஒப்பிடமுடியாத அளவுக்கு கூடுதல் சாதகமானதாக மாறும்.

ஒரு குடிமக்கள் படையை உருவாக்குவதற்கு இப்போது வரை ஏன் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்பதற்கு ஆயுதங்கள் இல்லையென்பதையோ அல்லது வேறு ஏதேனும் புறநிலையான காரணங்களையோ ஒருவர் காட்ட முனைந்தால் அது தன்னையும் முட்டாளாக்கி அடுத்தவர்களையும் முட்டாளாக்கும் வேலையாகும். பிரதான முட்டுக்கட்டை என்பது -ஒரே முட்டுக்கட்டை என்றும் கூட சொல்லலாம்- தொழிலாளர் அமைப்புகளது தலைவர்களின் பழமைவாத மற்றும் செயலற்ற சுபாவத்தில் தான் தனது வேர்களைக் கொண்டிருக்கிறது. தலைவர்களாக இருக்கின்ற ஐயுறவுவாதிகளுக்கு பாட்டாளி வர்க்கத்தின் வலிமையில் நம்பிக்கையில்லாது இருக்கிறது. கீழே கொதித்துக் கொண்டிருக்கின்ற ஆற்றல்களுக்கு புரட்சிகர வடிகால் கொடுப்பதற்குப் பதிலாக மேலே இருந்து வரக்கூடிய அத்தனை வகை அதிசயங்களுக்குமாய் அவர்கள் நம்பிக்கை வைக்கிறார்கள். சோசலிஸ்ட் கட்சியின் தொழிலாளர்கள் தங்களது தலைவர்களை, தொழிலாளர்’ குடிமக்கள் படையை உருவாக்குவதற்கு உடனடியாக கவனம் செலுத்துவதற்கோ அல்லது இளம் மற்றும் புது சக்திகளுக்கு வழிவிடுவதற்கோ நிர்ப்பந்திக்க வேண்டும்.

11. பாட்டாளி வர்க்கத்தை ஆயுதபாணியாக்கல்

பிரச்சாரம் மற்றும் கிளர்ச்சி இல்லாமல் ஒரு வேலைநிறுத்தம் என்பது சிந்தித்துப் பார்க்க முடியாதது. மறியல் போராட்டங்கள் —இதில் இயலும்போது பேச்சுவார்த்தை நடக்கும், தேவையேற்பட்டால் வலிமை பிரயோகமாகும்— இல்லாமலும் இது சிந்தித்துப் பார்க்க முடியாதது. “தத்துவார்த்த” வழிமுறைகளுடன் உடல்ரீதியான வழிமுறைகளை பல்வேறு விகிதங்களில் எப்போதும் கலந்து தருகின்ற வர்க்கப் போராட்டத்தின் மிக அடிப்படையான வடிவம்தான் வேலைநிறுத்தம். அடிப்படையாக எப்படி வேலைநிறுத்தத்திற்கு மறியல் அவசியமாக இருக்கிறதோ அதேபோல பாசிசத்திற்கு எதிரான போராட்டம் ஒரு அரசியல் போராட்டம் அதற்கு ஒரு குடிமக்கள்படை அவசியமாகும். அடிப்படையில் மறியல் என்பது தொழிலாளர்’ குடிமக்கள்படையின் மையக்கரு. “உடல்ரீதியான” போராட்டத்தை கைவிடுவது குறித்து சிந்திக்கும் ஒருவர் அனைத்து போராட்டங்களையும் கைவிடவேண்டும், ஏனென்றால் சதை இல்லாமல் ஜீவன் மட்டும் உயிர் வாழ முடியாது.

மாபெரும் இராணுவத் தத்துவாசிரியரான Clausewitz இன் அற்புதமான வாக்கியத்தின் வழி சொல்வதாக இருந்தால், போர் என்பது பிறிதொரு வழியில் அரசியலின் தொடர்ச்சியே. இந்த வரையறை உள்நாட்டு யுத்தத்திற்கும் முழுமையாகப் பொருந்தும். உடல்ரீதியான போராட்டம் என்பது அரசியல் போராட்டத்தின் “இன்னுமொரு வழிமுறை”யே. இதில் ஒன்றை இன்னொன்றுக்கு எதிராக நிறுத்துவதென்பது அனுமதிக்க முடியாதது, ஏனென்றால் அரசியல் போராட்டம் உள் உந்துதலின் விசையால் ஒரு உடல்ரீதியான போராட்டமாக தன்னை மாற்றிக் கொள்கின்ற போது அதனை விருப்பத்திற்கேற்ப தடுத்து நிறுத்தி விடுவது சாத்தியமில்லாதது.

அரசியல் ஒரு பகிரங்க ஆயுத மோதலாக தப்பிக்கமுடியாது உருமாறுவதை காலத்தே முன்கணிப்பதும், அத்துடன் அந்த தருணத்திற்காக ஆளும் வர்க்கங்கள் எப்படித் தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறதோ அதைப் போல தனது அத்தனை சக்தியையும் பயன்படுத்தி தயாரிப்பு செய்வதும் ஒரு புரட்சிகரக் கட்சியின் கடமை ஆகும்.

பாசிசத்திற்கு எதிரான பாதுகாப்புக்காக குடிமக்கள்படையணிகள் என்பது பாட்டாளி வர்க்கத்தினை ஆயுதபாணியாக்குகின்ற பாதையில் முதல் படியே தவிர, கடைசிப் படி அல்ல. நமது முழக்கம்:

பாட்டாளி வர்க்கத்தையும் புரட்சிகர விவசாயிகளையும் ஆயுதபாணியாக்குவோம் என்பதே.

தொழிலாளர்’ குடிமக்கள்படையானது இறுதியாய்வில் அத்தனை உழைப்பாளிகளையும் இணைத்துக் கொண்டாக வேண்டும். உற்பத்தி சாதனங்கள் அனைத்தும் அத்துடன் அதன் தொடர்ச்சியாய் அழிவு சாதனங்கள் அனைத்தும், அதாவது ஆயுதங்கள் மற்றும் அவற்றை உற்பத்தி செய்கின்ற தொழிற்சாலைகள் அனைத்தும், தொழிலாளர்களின் கரங்களில் வந்து சேர்கின்ற ஒரு தொழிலாளர்’ அரசில் மட்டுமே இந்த வேலைத்திட்டம் முழுமையடைவது என்பது சாத்தியமாக முடியும்.

ஆயினும் வெறுங் கைகளைக் கொண்டு ஒரு தொழிலாளர்’ அரசை சாதித்து விடலாம் என்பது சாத்தியமில்லாதது. ருனோடெல் போன்ற அரசியல் செல்லாக்காசுகள் மட்டுமே சோசலிசத்துக்கான ஒரு அமைதியான, அரசியல் சாசன பாதை குறித்துப் பேச முடியும். பாசிசக் குழுக்கள் கொண்டிருக்கும் அகழிகளால் அரசியல்சாசன பாதை துண்டிக்கப்பட்டுக் கிடக்கிறது. நமக்கு முன்னால் இருக்கும் அகழிகள் கொஞ்சமல்ல. பாட்டாளி வர்க்கம் ஆட்சிக்கு வருவதைத் தடுக்கும் பொருட்டு போலிஸ் மற்றும் இராணுவத்தின் உதவியுடன் இன்னும் டசின்கணக்கான ஆட்சிக்கவிழ்ப்புகளில் இறங்குவதற்கும் முதலாளித்துவ வர்க்கம் தயங்காது.

ஒரு வெற்றிகரமான புரட்சியின் மூலமாக மட்டுமே ஒரு தொழிலாளர்’ சோசலிச அரசு உருவாக்கப்பட முடியும்.

ஒவ்வொரு புரட்சியுமே பொருளாதார மற்றும் அரசியல் அபிவிருத்தியின் அணிவகுப்பினால் தயாரிக்கப்படுகிறது என்றபோதிலும் குரோதமான வர்க்கங்கள் இடையிலான பகிரங்கமான ஆயுதமேந்திய மோதல்களில் தான் அது எப்போதும் தீர்மானிக்கப்படுவதாய் இருக்கிறது. ஒரு நெடிய அரசியல் கிளர்ச்சி, நீண்டதொரு காலகட்டத்திற்கு பரந்த மக்களுக்குக் கல்வியூட்டல் மற்றும் ஒழுங்கமைத்தல் இவற்றின் விளைவாக மட்டுமே ஒரு புரட்சிகர வெற்றி என்பது சாத்தியமாக முடியும்.

ஆனால் ஆயுதமேந்திய மோதலும் கூட இதேபோல நெடுங்காலத்திற்கு முன்பே நன்கு தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

ஒரு மரணப் போராட்டத்தை போராடி வெல்ல வேண்டும் என்பதை முன்னேறிய தொழிலாளர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். தமது விடுதலைக்கான ஒரு உத்தரவாதமாக அவர்கள் ஆயுதங்களைப் பெற வேண்டும்.

இப்போதையப்போல மிக முக்கியமானதொரு சகாப்தத்தில், புரட்சியின் கட்சியானது தொழிலாளர்களுக்கு தங்களை ஆயுதபாணியாக்கிக் கொள்வதின் அவசியம் குறித்து இடைவிடாது போதிக்க வேண்டும், அத்துடன் குறைந்தபட்சம் பாட்டாளிவர்க்க முன்னணிப் படையேனும் ஆயுதபாணியாவதை உறுதிசெய்வதற்குத் தேவையான அத்தனையையும் செய்ய வேண்டும். இது இல்லாமல் வெற்றி சாத்தியம் இல்லை.

சமீபத்தில் பிரிட்டிஷ் தொழிற் கட்சி பெற்றிருக்கும் தேர்தல் வெற்றிகள் மேலே கூறப்பட்டவற்றை செல்லாததாக்கி விடாது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சிக்கு முழுமையான பெரும்பான்மை கிடைக்கும் என்று வைத்துக் கொள்வோம்; - இது உறுதி சொல்ல முடியாத விடயம் - அக்கட்சியும் சோசலிச மாற்றங்களுக்கான பாதையைக் கையிலெடுக்கிறது என்றும் வைத்துக் கொள்வோம் - இது நடப்பது அரிது - அப்போதும் கூட அது பிரபுக்கள் சபையில் இருந்தும், வங்கிகளிடம் இருந்தும், பங்குச் சந்தையில் இருந்தும், அதிகாரத்துவத்தில் இருந்தும், ஊடகங்களிடம் இருந்தும் மிகக் கடுமையான எதிர்ப்பை உடனடியாகச் சந்திக்கும். கட்சி உடைவது தவிர்க்கமுடியாததாகி, இடது, கூடுதல் தீவிரமயப்பட்ட பிரிவானது ஒரு நாடாளுமன்ற சிறுபான்மை ஆகிவிடுமளவுக்கு இந்த எதிர்ப்பு இருக்கும். அதேநேரத்தில் பாசிச இயக்கமானது முன்கண்டிராத ஒரு அலையைப் பெறும். தொழிற்கட்சியின் தலைமையில் உள்ளவர்கள் எல்லாம் வெற்றிகளைக் கொண்டு பாட்டாளி வர்க்கத்தைத் தூங்க வைத்துக் கொண்டும், துரதிர்ஷ்டவசமான வகையில், Jean Longuet இன் கண்ணுக்கினிய அற்புதங்களின் வழியாக பிரிட்டிஷ் நிகழ்வுகளைக் காண்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டும் இருக்கின்ற அதேநேரத்தில், உள்ளூராட்சித் தேர்தல்களினால் உஷாராகி, பிரிட்டிஷ் முதலாளித்துவ வர்க்கம் ஒரு நாடாளுமன்றத்திற்கு-வெளியிலான போராட்டத்திற்கு செயலூக்கத்துடன் தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. உண்மையைச் சொல்லப் போனால், எந்த அளவுக்கு தொழிற்கட்சி உள்நாட்டு யுத்தத்திற்கு குறைவாகத் தயாரிப்பு செய்கிறதோ, அந்த அளவு கொடூரமாக பாட்டாளி வர்க்கத்தின் மீது பிரிட்டிஷ் முதலாளித்துவ வர்க்கத்தால் அது திணிக்கப்படுவதாக இருக்கும்.

"ஆனால் ஒட்டுமொத்த பாட்டாளி வர்க்கத்திற்கும் ஆயுதங்கள் எங்கிருந்து கிடைக்கும்?” தங்களுக்குள்ளிருக்கும் இயலாமையை, புறநிலை சாத்தியமின்மையாக தவறாகப் புரிந்து கொள்கின்ற ஐயுறவுவாதிகள் மீண்டுமொரு முறை ஆட்சேபிக்கிறார்கள். வரலாற்றில் ஒவ்வொரு புரட்சியின் முன்னதாகவும் இதே கேள்வி தான் வைக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதை அவர்கள் மறந்து போனார்கள். எல்லாவற்றையும் தாண்டி, வெற்றிகரமான புரட்சிகள் மனிதகுல அபிவிருத்தியில் முக்கியமான கட்டங்களைக் குறித்தன.

பாட்டாளி வர்க்கம்தான் ஆயுதங்களை உற்பத்தி செய்கிறது, அவற்றை வேறு இடங்களுக்கு கொண்டுசெல்கிறது, அவை பராமரிக்கப்படுகின்ற கட்டிடங்களைக் கட்டி எழுப்புகிறது, தனக்கு எதிராகவே இந்தக் கட்டிடங்களை பாதுகாக்கிறது, இராணுவத்தில் சேவை செய்கிறது, அத்துடன் அதன் அத்தனை கருவிகளையும் உருவாக்குகிறது. பாட்டாளி வர்க்கத்தை ஆயுதங்களிடம் இருந்து பிரிப்பது பூட்டுகளோ அல்லது சுவர்களோ அல்ல மாறாக கீழ்ப்படியும் பழக்கமும், வர்க்க மேலாதிக்க மற்றும் தேசியவாத விஷத்தால் உண்டாக்கப்பட்டிருக்கும் மயக்க நிலையும் தான்.

இந்த உளவியல் சுவர்களை உடைத்தாலே போதுமானது - வேறு எந்த கற்சுவர்களும் இடையில் கிடையாது. பாட்டாளி வர்க்கத்திற்கு ஆயுதங்கள் தேவை என்பது தெரிந்தாலே போதும், அது அதனைக் கண்டறிந்து விடும். இந்த நோக்கத்தை தட்டியெழுப்புவதும் அதனை அடைவதற்கு வழிவகை அமைத்துத் தருவதும் தான் புரட்சிகரக் கட்சியின் கடமை ஆகும்.

ஆனால் இங்கேயும் ஃபுரோசாரும் மற்றும் நூற்றுக்கணக்கிலான அச்சமுற்றிருக்கும் நாடாளுமன்றவாதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளும் தங்களது இறுதி வாதத்தை, மிகப் பலமானதை முன்வைக்கிறார்கள்: “ஆஸ்திரியா மற்றும் ஸ்பெயினிலான சமீபத்திய துயரகரமான அனுபவங்களுக்குப் பின்னர் உடல்ரீதியான போராட்டத்தின் வெற்றியின் மீது பொதுவாக கவனமாக சிந்திக்கும் மனிதர்கள் நம்பிக்கை வைக்க இயலுமா? டாங்கிகள், நச்சு வாயு, விமானத் தாக்குதல் என்று இன்றைய தொழில்நுட்பத்தைக் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்!!!” ஏராளமான “கவனமாக சிந்திக்கும் மனிதர்கள்” எதையும் கற்றுக் கொள்ள விரும்புவதில்லை என்பதை மட்டுமல்ல கொஞ்சநஞ்சம் அவர்கள் இதுவரை கற்று வைத்திருந்ததையும் கூட பயத்தில் மறந்து போகிறார்கள் என்பதையே இந்த வாதம் எடுத்துக் காட்டுகிறது.

கடந்த 20 ஆண்டுகளின் வரலாறு குறிப்பான துல்லியத்துடன் எடுத்துக்காட்டுவது என்னவென்றால் தேசங்களுக்கு இடையிலான உறவுகளில் போலவே, வர்க்கங்களுக்கு இடையிலான உறவுகளிலான அடிப்படைப் பிரச்சினைகளும் கூட உடல்ரீதியான பலத்தினால் தான் தீர்க்கப்பட்டுள்ளன. போர் நுட்பத்தின் வளர்ச்சியானது போரை சாத்தியமற்றதாக்கும் என்றே சமாதானவாதிகள் நெடுங்காலமாக நம்பி வந்திருக்கின்றனர். இராணுவ நுட்பத்தின் வளர்ச்சியானது புரட்சியை சாத்தியமற்றதாக்கும் என்பதையே பிலிஸ்டைன்கள் பல தசாப்தங்களாக சொல்லி வந்திருக்கின்றனர். ஆயினும் போரும் புரட்சிகளும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இராணுவ நுட்பத்தின் அத்தனை வலிமையையும் வெளிக்கொண்டுவந்த கடைசியாக வந்த போருக்குப் பிந்திய காலத்தில் போல எண்ணற்ற புரட்சிகள் - வெற்றிகரமான புரட்சிகள் உட்பட - அதற்கு முன்னர் இருந்ததில்லை.

தானியங்கி துப்பாக்கிகளையும், இயந்திர துப்பாக்கிகளையும், டாங்கிகள் மற்றும் குண்டுவீசும் விமானங்கள் என்று பதிலீடு செய்திருக்கிறார்களே தவிர ஃபுரோசார் மற்றும் இத்யாதிகள் பழைய கூற்றுக்களைத்தான் புதிய கண்டுபிடிப்புகளைப் போல கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நமது பதில் இதுதான்: ஒவ்வொரு எந்திரத்திற்கும் பின்னால் தொழில்நுட்பரீதியாக மட்டுமன்றி சமூக மற்றும் அரசியல் பிணைப்புகளின் மூலமாகவும் பிணைப்பு கொண்ட மனிதர்கள் இருக்கிறார்கள். வரலாற்று அபிவிருத்தியானது தள்ளிப்போட முடியாத ஒரு புரட்சிகரக் கடமையை வாழ்வா சாவா பிரச்சினையாக சமூகத்தின் முன்னால் நிறுத்துகின்றபோது, தனது வெற்றியில்தான் சமூகத்திற்கான விடிவும் இருக்கிறது என்கிறதான ஒரு முற்போக்கான வர்க்கம் இருக்கின்றபோது, அப்போது அந்த அரசியல் போராட்டத்தின் அபிவிருத்தியே புரட்சிகர வர்க்கத்தின் முன்னதாக பல தரப்பட்ட சாத்தியக்கூறுகளை - எதிரியின் இராணுவப் படையை முடக்குவதில் இருந்து அதனை குறைந்தபட்சம் பகுதியாகவேனும் வென்றெடுப்பது வரை - திறந்து விடுகிறது. ஒரு பிலிஸ்டைனை பொறுத்தவரை இந்த சாத்தியக் கூறுகள் எல்லாம் திரும்பவும் வர முடியாத “அதிர்ஷ்டகரமான விபத்துகளாக”வே எப்போதும் தெரிகின்றன. உண்மையில் ஒவ்வொரு மாபெரும் புரட்சியிலும், அதாவது ஒவ்வொரு உண்மையான வெகுஜனப் புரட்சியிலும், மிகவும் எதிர்பாராத ஆனால் அடிப்படையில் இயல்பானதான ஒன்றுசேர்க்கைகளின் ஒவ்வொரு வகை சாத்தியத்தையும் திறக்கக் காணலாம். ஆயினும் எல்லாமே இருந்தாலும் கூட வெற்றி என்பது தானாகவே வந்து விடுவதில்லை.

சாதகமான சாத்தியக்கூறுகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்றால் அதற்கு புரட்சிகர விருப்பமும், வெல்வதற்கான இரும்பு போன்ற மன உறுதியும், அத்துடன் ஒரு துணிச்சலான மற்றும் தொலைநோக்குப் பார்வையுடனான தலைமையும் அவசியமானதாகும். “தொழிலாளர்களை ஆயுதபாணியாக்குவது” என்ற முழக்கத்தை l’Humanité வார்த்தையளவில் ஒப்புக்கொண்டாலும் செயலளவில் கைவிட்டு விடுகிறது. இந்தப் பத்திரிகையை பொறுத்தவரை “ஒரு முழுமையான புரட்சிகர நெருக்கடி”யில் மட்டுமே பொருத்தமாக இருக்கக் கூடியதொரு முழக்கத்தை இப்போது முன்வைப்பது ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது. வேட்டை இலக்கு கண்ணுக்குப் புலப்படாத வரை உங்கள் துப்பாக்கிகளை தயார் நிலையில் வைப்பது ஆபத்தானது என்கிறான் “மிக விவேகமான” வேட்டைக்காரன். ஆனால் இலக்கு கண்ணில் தென்படும்போது துப்பாக்கிகளை தயார் நிலையில் வைப்பதற்கான கால அவகாசம் சற்று தாமதித்து விடுகிறதே. எந்த தயாரிப்பும் இல்லாமல் ”முழுமையான புரட்சிகர நெருக்கடி”யின் சமயத்தில் பாட்டாளி வர்க்கத்தை அணிதிரட்டி ஆயுதபாணியாக்க முடியும் என்று தான் l’Humanité இன் மூலோபாயவாதிகள் உண்மையாகவே சிந்திக்கிறார்களா என்ன? ஏராளமான எண்ணிக்கையில் ஆயுதங்கள்பெற வேண்டுமென்றால், குறிப்பிட்ட அளவாவது கையில் இருக்க வேண்டும். இராணுவக் காரியாளர்கள் வேண்டும். ஆயுதங்களைப் பெறுவதற்கு வெகுஜனங்களின் வெல்லமுடியாத விருப்பம் இருக்க வேண்டும். வெறும் உடற்பயிற்சி நிலையங்களில் மட்டுமல்லாது வெகுஜனங்களின் அன்றாடப் போராட்டங்களுடனான கலைக்கமுடியாத தொடர்பாகவும் ஒருவர் இடைவிடாது தயாரிப்பு வேலை செய்ய வேண்டும். இதன் அர்த்தம் இதுதான்:

உடனடியாக குடிமக்கள்படையை கட்டியெழுப்புவதும் அதேசமயத்தில் புரட்சிகரத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளைப் பொதுவாக ஆயுதமயமாக்குவதற்குமான பிரச்சாரத்தை ஒருசேர நடத்துவதும் அவசியமாக இருக்கிறது.

12. ஆனால் ஆஸ்திரியா மற்றும் ஸ்பெயினிலான தோல்விகள்...

தொழிலாளர்களின் பக்கத்தில் இருக்கின்ற கொச்சை ஜனநாயகவாதிகள் (ருனோடெல், ஃபுரோசார் மற்றும் இவர்களது அடியொற்றிகள்) தமது இறுகிப்போன தப்பெண்ணங்களை பாதுகாப்பதற்கு ஒரேயொரு வாதத்தைக்கூட கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமுறையின் நெருக்கடியினது நிலைமைகளில் நாடாளுமன்றவாதத்தின் கையலாகாத்தனம் மிக வெளிப்படையானதாக இருக்கிறது. அதனால் அவர்கள் புரட்சிகரப் பாதையில் நேரக் கூடிய ஒவ்வொரு தோல்வியையும் ஒவ்வொரு இழப்பையும் உடனடியாகப் பிடித்துக் கொள்கின்றனர். அவர்களது சிந்தனை அபிவிருத்தி இவ்வாறு இருக்கிறது: தெளிந்த நாடாளுமன்றவாதத்தினால் எந்த தீர்வையும் காட்ட முடியவில்லை என்றால், ஆயுதமேந்திய போராட்டத்தின் நிலையும் அதைவிடச் சிறப்பாக இல்லை. ஆஸ்திரியா மற்றும் ஸ்பெயினிலான பாட்டாளி வர்க்கக் கிளர்ச்சிகளின் தோல்வி அவர்களது வாதத் தெரிவாக இப்போது ஆகியிருக்கிறது. உண்மையைச் சொல்லப் போனால் கொச்சை ஜனநாயகவாதிகளின் தத்துவார்த்த மற்றும் அரசியல் திவால்நிலையானது இற்றுப் போன முதலாளித்துவ ஜனநாயகத்தின் வழிமுறைகளை பாதுகாப்பதில் வெளிப்படுவதைக் காட்டிலும் அதிகமாக புரட்சிகர வழிமுறை மீதான அவர்களது விமர்சனத்தில் மிகநன்றாகவே வெளிப்படுகிறது.

புரட்சிகர வழிமுறை தானாகவே வெற்றியைக் கொண்டுவந்து விடும் என்று யாரும் சொல்லவில்லை. வழிமுறை மட்டுமே தன்னளவில் தீர்மானிப்பதாக ஆகிவிடாது, அது சரியாக அமுல்படுத்தப்படுவதும், நிகழ்வுகளில் மார்க்சிச நோக்குநிலை கொள்வதும், சக்திவாய்ந்த அமைப்பும், நெடிய அனுபவத்தின் ஊடாகவும் ஒரு தொலைநோக்கும் துணிச்சலும் கொண்ட தலைமையினாலும் வென்றெடுக்கப்பட்ட வெகுஜனங்களின் நம்பிக்கையும் அவசியம். ஒவ்வொரு போராட்டத்தின் விடயமுமே மோதலின் தருணம் மற்றும் நிலைமைகளையும் அத்துடன் சக்திகளிடையேயான உறவுகளையும் பொறுத்ததாகும். ஆயுதமேந்திய மோதல் தான் ஒரே புரட்சிகர வழிமுறை என்றோ அல்லது அத்தனை நிலைமைகளின் கீழுமான சர்வரோக நிவாரணி என்றோ கருதுவதற்கும் மார்க்சிசத்துக்கும் அதிக தொடர்பில்லை. நாடாளுமன்றரீதியானதோ அல்லது கிளர்ச்சிரீதியானதோ எந்தவகையான மோகங்களும் பொதுவாக மார்க்சிசம் அறியாது. ஒவ்வொன்றுக்கும் காலமும் இடமும் இருக்கிறது. ஆரம்பத்தில் ஒருவர் சொல்ல முடிகின்ற ஒரு விஷயம் இதுதான்:

நாடாளுமன்றப் பாதையில் சோசலிசப் பாட்டாளி ஒருஇடத்திலும் ஒருபோதும் அதிகாரத்தை வென்றது கிடையாது அல்லது இன்னும் அதற்கு கிட்ட நெருங்க முடிந்ததும் கூடக் கிடையாது.

Scheidemann, Hermann Müller, MacDonald இன் அரசாங்கங்களுக்கும் சோசலிசத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. முதலாளித்துவ வர்க்கம் தனது எதிரிகளுக்கு எதிராக முதலாளித்துவத்தைப் பாதுகாப்பதற்கான நிபந்தனையின் பேரில் தான் சமூக ஜனநாயகக் கட்சியினரையும் தொழிற்கட்சியினரையும் அதிகாரத்துக்கு வர அனுமதித்திருக்கிறது. இக்கட்சிகளும் சிரத்தையுடன் நிபந்தனையை பூர்த்தி செய்திருக்கின்றன. முழுக்க நாடாளுமன்றவாதத்தைக் கொண்ட, புரட்சிகர-விரோத சோசலிசம் எந்த இடத்திலும் எந்த சமயத்திலும் ஒரு சோசலிச அமைச்சரவையைக் கொண்டுவந்தது கிடையாது. இராஜாங்க பிழைப்பை உருவாக்கிக் கொள்ளும் பொருட்டு தொழிலாளர்களது’ கட்சியைச் சுரண்டிக் கொண்ட வெறுக்கத்தக்க ஓடுகாலிகளை -Millerand, Briand, Viviani, Laval, Paul-Boncour, Marquet- உருவாக்குவதில் தான் அது வெற்றி கண்டிருக்கிறது.

இன்னொரு பக்கத்தில், புரட்சிகர வழிமுறையானது பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்ற இட்டுச் செல்ல முடியும் என்பதை 1917 இல் ரஷ்யாவில், 1918 இல் ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியாவில், 1930 இல் ஸ்பெயினில் வரலாற்று அனுபவம் எடுத்துக் காட்டுகிறது. ரஷ்யாவில் புரட்சிக்காக பல ஆண்டு காலத்திற்கு நீடித்த தயாரிப்பு செய்து அதிகாரத்தைக் கைப்பற்றுவது எப்படி என்பதை ஸ்தூலமாக அறிந்திருந்த சக்திவாய்ந்த போல்ஷிவிக் கட்சி இருந்தது.

ஜேர்மனி, ஆஸ்திரியா, மற்றும் ஸ்பெயினின் சீர்திருத்தவாதக் கட்சிகள் எல்லாம் புரட்சிக்காக தயாரிப்பு செய்யவில்லை, அதற்குத் தலைமை கொடுக்கவில்லை, மாறாக அதனைப் பாதித்தன.

தங்களின் சொந்த விருப்பத்திற்கு எதிராக தங்களது கரங்களுக்கு வந்துசேர்ந்திருந்த அந்த அதிகாரத்தைக் கண்டு மிரண்டு போய் அவை மனமுவந்து அதனை முதலாளித்துவ வர்க்கத்திடம் ஒப்படைத்து விட்டன. இதன்மூலம் பாட்டாளி வர்க்கத்திற்கு தங்கள் மீது இருந்த தன்னம்பிக்கைக்கும், குட்டி முதலாளித்துவ வர்க்கத்திற்கு பாட்டாளி வர்க்கத்தின் மீது இருந்த நம்பிக்கைக்கும் அவை குழிபறித்து விட்டன. இவை பாசிசப் பிற்போக்குத்தனம் பெருகுவதற்கான நிலைமைகளுக்கு தயாரிப்பு செய்து அதற்கு பலியாகின.

Clausewitz ஐப் பின்பற்றி நாம் சொல்லியிருந்தோம், உள்நாட்டுப் போர் என்பது வேறொரு வழிமுறையிலான அரசியலின் தொடர்ச்சி என்பதை. அதன் அர்த்தம் என்ன, பத்தில் ஒரு பங்கினர் என்று சொல்ல வேண்டாம், நான்கில் ஒரு பங்கினர் என்று கூட சொல்வோம், அவர்களுக்கு இந்த உள்நாட்டுப் போரின் முடிவென்பது அது எப்படி அபிவிருத்தி காண்கிறது என்பதையும், தமது தொழில்நுட்ப கருவிகளையும், தமது அர்ப்பணிப்பான இராணுவத் தலைமையையும் பொறுத்த விடயம், எஞ்சிய பத்தில் ஒன்பது பங்கினருக்கு, அப்படிச் சொல்ல வேண்டாமென்றால் நான்கில் மூன்று பங்கினருக்கு, இது அரசியல் தயாரிப்பினைப் பொறுத்த விடயம். இந்த அரசியல் தயாரிப்பு என்பதில் என்ன அடங்கியிருக்கிறது? வெகுஜனங்களை புரட்சிகரரீதியாக ஐக்கியப்படுத்துவது, “ஜனநாயகரீதியான அடிமை-முதலாளிகளது” பெருந்தன்மை, தாராளம் மற்றும் விசுவாசத்தின் மீது அவர்கள் கொண்டிருக்கும் அடிமைத்தனமான நம்பிக்கைகளில் இருந்து அவர்களை விடுதலை செய்வது, உத்தியோகபூர்வ பொதுக் கருத்துகளை எப்படி நிராகரிப்பது என்பதையும் முதலாளித்துவ வர்க்கம் உழைப்பாளிகளை நோக்கிக் காட்டும் இரக்கமின்மையின் பத்தில் ஒரு பங்கினை முதலாளிகளை நோக்கி வெளிப்படுத்தும் விதத்தையும் அறிந்த புரட்சிகரக் காரியாளர்களுக்கு கல்வியூட்டுவது இவை தான் அதில் அடங்கியிருக்கிறது. இந்தப் புடம்போடல் இல்லையென்றால், நிலைமைகள் உள்நாட்டுப் போருக்கு நிர்ப்பந்தமளிக்கும்போது -எப்போதுமே அவை நிர்ப்பந்தத்தினால் தான் முடிவுறவும் செய்கின்றன- அது பாட்டாளி வர்க்கத்திற்கு மிகவும் சாதகமற்ற நிலைமைகளில் நடைபெறுவதுடன் பல்வேறு இடையூறுகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதுடன், இராணுவரீதியாக வெற்றிபெற்று விட்டாலும் கூட அதிகாரம் பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் இருந்து நழுவியும் கூட விடலாம். வர்க்கப் போராட்டம் ஆயுத மோதலுக்கு தவிர்க்கவியலாமல் இட்டுச் செல்வதை முன்னெதிர்பார்க்காமல் இருக்கும் யாரும் குருடரே. இந்த ஆயுத மோதல் மற்றும் அதன் விளைவிற்குப் பின்னால் போராட்டத்தில் இருக்கும் வர்க்கங்களது ஒட்டுமொத்தமான முந்தைய கொள்கை இருப்பதைக் காணத் தவறுபவரும் கூட அதே அளவுக்குக் குருடரே.

ஆஸ்திரியாவில் தோற்கடிக்கப்பட்டது கிளர்ச்சி வழிமுறை அல்ல மாறாக ஆஸ்திரிய வகை மார்க்சிசம் தான், ஸ்பெயினில் தோற்கடிக்கப்பட்டது கோட்பாடற்ற நாடாளுமன்ற சீர்திருத்தவாதமே.

1918 இல், ஆஸ்திரிய சமூக ஜனநாயகக் கட்சியானது, பாட்டாளி வர்க்கம் வென்றெடுத்திருந்த அதிகாரத்தை அதன் முதுகின் பின்னால் முதலாளித்துவ வர்க்கத்திடம் கையளித்து விட்டிருந்தது. 1927 இல் வெற்றிபெற அத்தனை சந்தர்ப்பங்களையும் கொண்டிருந்த பாட்டாளி வர்க்கக் கிளர்ச்சியில் இருந்து அது கோழைத்தனமாக தலையைத் திருப்பிக் கொண்டதோடு நில்லாமல் தொழிலாளர்களது’ Schutzbund (ஆஸ்திரிய தொழிலாளர் குடிமக்கள் படை) ஐ கிளர்ச்சி செய்த வெகுஜனங்களுக்கு எதிராக வழிநடத்தியது. இவ்வாறாக அது Dollfuss இன் வெற்றிக்குத் தயாரிப்பு செய்தது. Bauer அன் கோ கூறினார்கள்: “நாம் அமைதியான பரிணாம வளர்ச்சியை விரும்புகிறோம், ஆனால் எதிரி மதியிழந்து நம்மைத் தாக்கினால், அதன்பின்னர்”

இந்த சூத்திரம் மிக “விவேகமான”தாகவும் மிக “எதார்த்த”மானதாகவும் தோன்றியது. துரதிர்ஷ்டவசமாக இந்த ஆஸ்திரிய-மார்க்சிச மாதிரியின் மீதுதான் மார்சோ பிவேரும் தனது “அவ்வாறு இல்லாவிடின்” என்ற தர்க்கத்தைக் கட்டியெழுப்புகிறார். உண்மையில், இந்த சூத்திரம் தொழிலாளர்களுக்கு ஒரு பொறியாக அமைந்திருக்கிறது. இது அவர்களுக்கு தாலாட்டுப்பாடி அவர்களை ஏமாற்றுகிறது. “அவ்வாறு” என்பதன் அர்த்தம் போராட்டத்தின் வடிவம் முதலாளித்துவ வர்க்கத்தின் நல்லெண்ணத்தைப் பொறுத்ததே அன்றி வர்க்க நலன்களின் முற்றுமுதலாய் சமரசமற்ற தன்மையை பொறுத்ததில்லையாம். ”இல்லாவிடின்” என்பதன் அர்த்தம் நாம் விவேகமாக, புத்திசாலித்தனமாக, ஒத்துழைத்துச் செல்லும் மனப்போக்குடன் இருந்தால் முதலாளித்துவ வர்க்கமும் விசுவாசத்துடன் இருக்குமாம், விடயங்கள் அமைதியாக முன்னேறிச் செல்லுமாம்.

“அவ்வாறு” என்ற அரூப வடிவத்தைப் பின்தொடர்ந்து சென்ற Otto Bauer மற்றும் ஆஸ்திரிய சமூக ஜனநாயகத்தைச் சேர்ந்த பிற தலைவர்கள் பிற்போக்குத்தனத்திற்கு முன்பாக செயலற்று பின்வாங்கினார்கள், ஒரு நிலைக்கு அடுத்து இன்னொன்றாய் வரிசையாய் இழந்தார்கள், வெகுஜனங்களை விரக்தியடையச் செய்தார்கள், மீண்டும் பின்வாங்கினார்கள், இறுதி முட்டுச்சந்தில் அவர்கள் தங்களைக் காணுகின்ற வரை இதுவே தொடர்ந்தது. அங்கே மறுசந்தேகம் எழுந்து அவர்கள் யுத்தத்தை ஏற்றுக் கொண்டார்கள், தோற்றார்கள்.

ஸ்பெயினில் நிகழ்வுகள் வேறுபட்ட பாதையை எடுத்திருந்தன என்றபோதிலும் தோல்வியின் காரணங்கள் அடிப்படையாக ஒன்றுதான். தொழிலாளர்களும் விவசாயிகளும் புரட்சியை அதன் பூர்த்தியானநிலைக்கு எடுத்துச் சென்று விடாத வண்ணம் தடுப்பதற்காக, சோசலிஸ்ட் கட்சியானது, ரஷ்ய சோசலிச புரட்சியாளர்கள் (Russian Socialist Revolutionaries) மற்றும் மென்ஷிவிக்குகள் போல, குடியரசுவாத முதலாளித்துவ வர்க்கத்துடன் அதிகாரத்தை பகிர்ந்து கொண்டிருந்தது. இரண்டு வருடங்களுக்கு அதிகாரத்தில் இருந்த சோசலிஸ்டுகள் சில்லறையான தேசிய, சமூக மற்றும் விவசாய சீர்திருத்தங்களைக் கொண்டு வெகுஜனங்களிடம் இருந்து அவமதிப்பின் பிடியில் இருந்து தப்ப முதலாளித்துவ வர்க்கத்திற்கு உதவி செய்தது. மக்களின் மிகப் புரட்சிகரமான அடுக்கிற்கு எதிராக, சோசலிஸ்ட் கட்சியினர் ஒடுக்குமுறையை பயன்படுத்தினர்.

விளைவு இருமடங்கானதாக இருந்தது. தொழிலாளர்களது கட்சி மட்டும் சரியானதொரு பாதையை பின்பற்றி பாட்டாளி வர்க்கத்தின் போர்க்குணமிக்க அடுக்குகளை தன்னை நோக்கி ஈர்த்து வலுப்பெற்றிருக்குமானால் அராஜகவாத-தொழிற்சங்கவாதம் புரட்சியின் வெப்பத்தில் மெழுகுபோல் உருகி ஓடியிருக்கும். மறுதுருவத்தில், பரந்த மக்களின் அதிருப்தியை முதலாளித்துவ-சோசலிச அரசாங்கத்தினைக் கொண்டு திறமையாகச் சுரண்டுவதில் சோசலிச கத்தோலிக்க வாய்வீச்சு வெற்றி கண்டது.

சோசலிஸ்ட் கட்சி போதுமான அளவு உடன்பாட்டிற்கு உட்பட்டுவிட்ட பின்னர், முதலாளித்துவ வர்க்கம் அதனை அதிகாரத்தில் இருந்து விரட்டி விட்டு ஒட்டுமொத்த முனைகளிலும் தாக்குதலை மேற்கொண்டது. சோசலிஸ்ட் கட்சியானது முந்தைய அதன் சொந்தக் கொள்கையால் தயாரிப்பு செய்யப்பட்டிருந்த மிக சாதகமற்ற நிலைமைகளின் கீழ் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியதானது. முதலாளித்துவ வர்க்கத்திற்கு ஏற்கனவே வலதின் பக்கத்தில் பாரிய ஆதரவு இருந்தது. புரட்சியின் சமயத்தில் தொழிற்முறைரீதியான குழப்பவாதிகளைப் போல அத்தனை தவறுகளையும் இழைத்த அராஜகவாத-தொழிற்சங்க ஆட்சிவாத தலைவர்கள் துரோக “அரசியல்வாதிகள்” தலைமை கொடுத்த கிளர்ச்சிக்கு ஆதரவளிக்க மறுத்தனர். இந்த இயக்கமானது ஒரு பொதுவான குணாம்சத்தைப் பெறவில்லை என்றாலும் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறிக் கிடந்தது. தொழிலாளர்களின் சிதறிக்கிடந்த பிரிவுகளின் மீது அரசாங்கம் தனது தாக்குதலை நடாத்தியது. பிற்போக்குத்தனத்தால் நிர்ப்பந்தம் பெற்ற உள்நாட்டுப் போர் பாட்டாளி வர்க்கத்தின் தோல்வியில் முடிவடைந்தது.

ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தில் சோசலிஸ்ட் கட்சி பங்கேற்றதற்கு எதிரான முடிவுகளை ஸ்பெயின் அனுபவத்தில் இருந்து பெறுவதில் சிரமமிருக்க வாய்ப்பில்லை. இந்த முடிவில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது என்றாலும் கூட அது மட்டுமே முழுமையாகப் போதுமானதல்ல. ஆஸ்திரிய-மார்க்சிசத்தின் போலி “தீவிரவாதம்” எந்த அர்த்தத்திலும் ஸ்பெயினின் அமைச்சரவைவாதத்தை விட மேம்பட்டதல்ல. இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம் என்பது தொழில்நுட்பரீதியானதே தவிர, அரசியல்ரீதியானது அல்ல. இரண்டுமே முதலாளித்துவ வர்க்கம் “விசுவாசத்திற்கு” “விசுவாசத்தை” திருப்பிக் கொடுக்க எதிர்பார்த்தன. இரண்டுமே பாட்டாளி வர்க்கத்தை ஒரு பெரும் அழிவுக்கு இட்டுச் சென்றன.

ஸ்பெயினிலும் ஆஸ்திரியாவில் போலவே தோற்றது புரட்சிகர வழிமுறைகளன்று, மாறாக புரட்சிகர சூழ்நிலையில் சந்தர்ப்பவாத வழிமுறைகளை பயன்படுத்தும் அணுகுமுறை தான். இரண்டும் ஒன்று அல்ல!

ஆஸ்திரியாவிலும் ஸ்பெயினிலும் கம்யூனிச அகிலத்தின் கொள்கை குறித்து நாம் இங்கே விவரிக்கப் போவதில்லை. அதற்கு வாசகர் La Vérité கோப்புகளையும் சமீப வருடங்களில் விநியோகிக்கப்பட்ட தொடர்ச்சியான துண்டறிக்கைகளையும் படிக்க நாங்கள் பரிந்துரைக்கிறோம். அசாதாரணமான அளவுக்கு சாதகமாக இருந்த நிலைமைகளின் கீழ் ஆஸ்திரிய மற்றும் ஸ்பெயின் கம்யூனிஸ்ட் கட்சிகள், “மூன்றாம் காலகட்டம்” மற்றும் “சமூக பாசிசம்” ஆகிய தத்துவத்தினால் கைகட்டப்பட்டு, தங்களை முழுமையான தனிமைப்பட்ட சூழலுக்கு சபிக்கப்பட்ட நிலையில் கண்டன. ”மாஸ்கோ”வின் அதிகாரத்திற்கு மதிப்பளிக்கும் பொருட்டு புரட்சிகர வழிமுறைகளில் சமரசம் செய்து கொண்டதன் மூலம் அவை, ஒரு உண்மையான மார்க்சிச, உண்மையான போல்ஷிவிக் கொள்கைக்கான பாதையைத் தடைசெய்து விட்டன. அத்தனை கோட்பாடுகளையும் அத்தனை வழிமுறைகளையும் துரிதமாகவும் தாட்சண்யமில்லாமலும் ஆய்வு செய்ய உட்படுத்துவது புரட்சியின் அடிப்படையான சிந்தனைவளர்ச்சி முறை ஆகும். இங்கே குற்றத்திற்கு ஏறக்குறைய உடனடியாக தண்டனை கிடைத்து விடுகிறது.

ஜேர்மனி, ஆஸ்திரியா மற்றும் ஸ்பெயினில் பாட்டாளி வர்க்கத்தின் தோல்விகளுக்கு கம்யூனிச அகிலத்திற்கு இருக்கும் பொறுப்பு ஒப்புவமை கூறமுடியாததாகும். வார்த்தைகளில் “புரட்சிகர”க் கொள்கையை கடைப்பிடித்தால் மட்டும் போதாது. ஒரு சரியான கொள்கை அவசியமாகும். வெற்றிக்கு வேறு ஏதேனும் சூட்சுமத்தை இதுவரை வேறெவரும் கண்டதில்லை.

13. ஐக்கிய முன்னணியும் அதிகாரத்திற்கான போராட்டமும்

சோசலிஸ்ட் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினது ஐக்கிய முன்னணியானது செறிந்த சாத்தியக்கூறுகளுக்கு உருவடிவம் கொடுக்கிறது என்பதை நாம் ஏற்கனவே கூறியிருக்கிறோம். இது மட்டும் உண்மையான ஆர்வத்துடன் முன்னெடுக்கப்படுமானால், அது பிரான்சில் நாளையே முன்னிலைக்கு வந்து விடும். ஆனால் அதற்கான விருப்பம் இருக்க வேண்டும்.

யூஹோவும், மற்றும் பொதுவாக CGT இன் அதிகாரத்துவமும் தங்களது “சுயாதீன”த்தைப் பாதுகாத்து ஐக்கிய முன்னணிக்கு வெளியில் இருப்பதானது நாம் சொல்வதற்கு முரண்பட்டிருப்பதைப் போல தோன்றுகிறது. ஆனால் அது முதல் பார்வையில் மட்டும் தான். மாபெரும் கடமைகள் மற்றும் வெகுஜனங்களை விரல்நுனிக்கு கொண்டு வரக் கூடிய மாபெரும் அபாயங்களின் ஒரு சகாப்தத்தில், பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் மற்றும் தொழிற்சங்க அமைப்புகளுக்கு இடையிலான தடைகள் எல்லாம் காணாமல் போகின்றன. தொழிலாளர்களுக்கு தங்களை மூலதனத்தில் இருந்து காப்பாற்றிக் கொள்வது எப்படி என்பது குறித்துத்தான் கவலையே அன்றி, பாட்டாளி வர்க்கக் கொள்கையில் இருந்து யூஹோ “சுயாதீனம்” காப்பதைப் பற்றியெல்லாம் (ஆனால் முதலாளித்துவக் கொள்கையில் யூஹோ, அந்தோ, சார்ந்திருப்பவராக அல்லவா இருக்கிறார்) அவர்களுக்கு அக்கறை கிடையாது. ஐக்கிய முன்னணியில் பிரதிநிதித்துவம் செய்கின்ற பாட்டாளிவர்க்க முன்னணிப்படை போராட்டப் பாதையில் துல்லியமாகப் பயணம் செய்யுமாயின், தொழிற்சங்க அதிகாரத்துவத்தினால் நிறுவப்பட்ட அத்தனை முட்டுக்கட்டைகளும் பாட்டாளிவர்க்கத்தின் உயிர்ப்புடனான நீரோட்டப் பாய்ச்சலில் தூக்கி வீசப்படும்.இப்போதைய சூழ்நிலைக்கு திறவுகோல் ஐக்கிய முன்னணி. அந்தத் திறவுகோலை அது பயன்படுத்தவில்லை என்றால்,1917 இல் ரஷ்யாவில் போல்ஷிவிக்குகள் அவர்களை தடுத்து நிறுத்தவில்லை என்றால் மென்ஷிவிக்குகளும் சோசலிசப் புரட்சியாளர் கட்சியினரும் ஆற்றியிருக்கக் கூடிய அதே வருந்தத்தக்க பாத்திரத்தையே தவிர்க்கவியலாமல் இது ஆற்றுவதாக அமையும்.

குறிப்பாக சோசலிஸ்ட் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து நாம் பேசப் போவதில்லை, ஏனென்றால் இரண்டுமே ஐக்கிய முன்னணிக்கு ஆதரவாக தமது சுயாதீனத்தை கைதுறந்திருக்கின்றன. கடந்த காலத்தில் கூர்மையான போட்டிக்களத்தில் இருந்த இரண்டு தொழிலாள-வர்க்கக் கட்சிகள் எப்போது பரஸ்பர விமர்சனத்தையும் ஒரு கட்சி இன்னொரு கட்சியில் ஆதரவாளர்களை வென்றெடுப்பதையும் கைவிட்டு விட்டனவோ, அதனால் மட்டுமே அவை தனித்தனிக் கட்சிகளாக இருப்பதில் இருந்து மறைந்து விட்டன. “கோட்பாட்டு வித்தியாசங்களை”, அவை இருக்கவே செய்யும், இருப்பது எதையும் மாற்றி விடாது. நடப்புக் காலத்தைப் போல பொறுப்பினைக் கட்டிக்காக்க வேண்டியதொரு தருணத்தில் கோட்பாட்டு வித்தியாசங்கள் வெளிப்படையாகவும் மும்முரமாகவும் வெளிப்படாத உடனேயே, அவை அரசியல்ரீதியாக இல்லையென்றே கூட சொல்லமுடியும். கடலின் அடியில் இருக்கும் புதையல் போன்றது தான் இவை. இணைந்துசெயற்படுவது சங்கமத்தில் முடியுமா என்பதை நம்மால் கணிக்க முடியாது ஆனால் பிரான்சின் தலைவிதியைப் பொறுத்தவரை தீர்மானகரமான முக்கியத்துவம் கொண்டதான நடப்புக் காலகட்டத்திற்கு, ஐக்கிய முன்னணியானது கூட்டாட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் கட்டப்பட்ட ஒரு இன்னும் முழுமைபெறாத கட்சியைப் போலவே செயல்படுகிறது.

ஐக்கிய முன்னணிக்கு என்ன வேண்டும்? இதுவரை அது வெகுஜனங்களுக்கு சொல்லவில்லை. பாசிசத்திற்கு எதிரான போராட்டமா? ஆனால் இதுவரை ஐக்கிய முன்னணி பாசிசத்திற்கு எதிராக எப்படிப் போராடப் போகிறது என்ற யோசனை எதனையும் விளக்கியிருக்கவில்லை. தவிரவும், மற்ற எல்லா விடயங்களிலுமே இரண்டு கட்சிகளும் ஒரு முழுமையான சுயாதீனத்தைப் பாதுகாத்து வைத்திருக்கின்றன என்றிருக்குமாயின், பாசிசத்திற்கு எதிரான ஒரு முழுமையான தற்காப்பு கூட்டு மட்டுமே கூடப் போதும் தான். ஆனால் அவ்வாறில்லையே, நம் முன்னிருக்கும் ஐக்கிய முன்னணி ஏறக்குறைய இரண்டு கட்சிகளது முழுப் பொதுச் செயல்பாடுகளையும் இணைத்துக் கொண்டிருக்கிறது, பாட்டாளி வர்க்கத்தின் பெரும்பான்மையை வென்றெடுப்பதற்கான பரஸ்பர போட்டி மட்டுமே அதில் இல்லை. இந்த சூழ்நிலையில் இருந்துதான் அத்தனை பின்விளைவுகளும் கணக்கிடப்பட வேண்டும். முதலாவதும் மிக முக்கியமானதும் என்னவென்றால் அதிகாரத்திற்கான போராட்டம். ஒரு சோசலிஸ்ட் கட்சி - கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கத்தை, ஒரு புளூம்- கஷான் அமைச்சரவையை உருவாக்குவது தான் ஐக்கிய முன்னணியின் நோக்கமாக இருக்க முடியும்.

இது பகிரங்கமாக கூறப்பட வேண்டும். ஐக்கிய முன்னணி தன்னை முக்கியமான ஒன்றாகக் கருதினால் -அப்போதுதான் பரந்த வெகுஜனங்கள் அதனை முக்கியமானதாகக் கருதுவார்கள்- அது அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்ற முழக்கத்தை ஒதுக்கி வைக்க முடியாது. எந்த வழிமுறையில்? அந்த முனைக்குக் கொண்டு செல்கின்ற ஒவ்வொரு வழிமுறையின் மூலமாகவும்.

ஐக்கிய முன்னணி நாடாளுமன்றப் போராட்டத்தை கைவிடவில்லை மாறாக எல்லாவற்றுக்கும் முதலாய் நாடாளுமன்றத்தின் கையாலாகாத்தனத்தைத் தோலுரித்துக் காட்டுவதற்கும் இப்போதைய அரசாங்கம் ஒரு நாடாளுமன்றத்தை கடந்த அடித்தளத்தைக் கொண்டுள்ளது என்பதையும் ஒரு சக்திவாய்ந்த வெகுஜன இயக்கத்தின் மூலமாகவே அது தூக்கியெறியப்பட முடியும் என்பதையும் மக்களுக்கு விளக்குவதற்கும் அது நாடாளுமன்றத்தைப் பயன்படுத்துகிறது.

அரை-நாடாளுமன்ற போனபார்ட்டிச ஆட்சி ஒரு புரட்சிகர அதிரடி மூலமாக அதனைத் தூக்கியெறிவதற்கும் முதலாளித்துவ அரசை ஒரு தொழிலாளர்’ அரசின் மூலமாக இடம்பெயர்ப்பதற்கும் வழங்குகின்ற அத்தனை சாத்தியங்களையும் பயன்படுத்துவது என்பதுதான் அதிகாரத்திற்கான போராட்டம் என்பதன் அர்த்தம்.

கடந்த மாவட்டத் தேர்தல் சோசலிஸ்ட் கட்சிக்கும் குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வாக்குகள் அதிகரித்திருந்ததைக் காட்டியது. இந்த உண்மை மட்டுமே பிரச்சினையைத் தீர்த்து விடவில்லை. ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியானது அது உருக்குலைந்த சமயத்தில் ஒப்பிடமுடியாத அளவுக்கு இதைவிடவும் மிக வலுவான வாக்கு அதிகரிப்பைக் கொண்டிருந்தது. ஒடுக்கப்பட்ட மக்களின் புதிய மற்றும் பரந்த அடுக்கினர் ஒட்டுமொத்த சூழ்நிலையின் காரணமாக அதிதீவிர கட்சிகளின் கொள்கையிலிருந்தும் கூட சுயாதீனப்பட்டு இடது நோக்கி இயக்கப்படுகின்றனர். பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி இன்று அது பழமைவாத கொள்கையுடன் இருந்தாலும் பாரம்பரியத்தின் படி அது “அதி இடது” ஆக இருப்பதால் அதிகமான வாக்குகளை வென்றிருக்கிறது. வெகுஜனங்கள் அவர்களது கட்சிகளைக் காட்டிலும் அளவிட முடியாத அளவு இடது நோக்கி இருக்கிறார்கள் என்று சொல்லத்தக்க வகையில் தொழிலாள வர்க்கக் கட்சிகளுக்கு இடது நோக்கி உந்துதல் கொடுக்கும் தங்களது மனப்போக்கினைக் கொண்டு அவர்கள் இதனை எடுத்துக்காட்டியிருக்கிறார்கள். சோசலிஸ்ட் கட்சி இளைஞர்களின் புரட்சிகர மனோநிலை இதற்கு இன்னுமொரு சான்று. ஒட்டுமொத்த வர்க்கத்தின் மற்றும் அதன் முன்னணிப் படையின் மனநிலையை துல்லியமாய் அளப்பதற்கான அளவீட்டு சாதனம் இளைஞர்கள் தான் என்பதை மறந்து விடக் கூடாது!

ஐக்கிய முன்னணி தனது செயலின்மையில் இருந்து விழித்தெழாவிட்டால், அல்லது இன்னும் மோசமாய், தீவிரப்போக்கினர் உடன் ஒரு உபயோகமில்லாத ஈர்ப்புக்குள் அது நுழைந்தால், பின் ஐக்கிய முன்னணியின் “இடது” பக்கத்தில் இருக்கும், அராஜகவாதிகள், அராஜகவாத-தொழிற்சங்க ஆட்சிவாதிகள் மற்றும் இதேபோன்ற மற்ற சிதறிக் கிடக்கும் அரசியல் குழுவாக்கங்கள் வலுப்பெறும். அதேசமயம் பேரழிவுக்குக் கட்டியம் கூறும் அக்கறையற்றநிலை முன்னேறிச் செல்லும்.

இன்னொரு பக்கத்தில், ஐக்கிய முன்னணியானது, பாசிசக் குழுக்களுக்கு எதிராக தனது பின்பகுதி மற்றும் பக்க அணிகளுக்கு உறுதி சேர்க்கின்ற அதேசமயத்தில், அதிகாரத்தைக் கைப்பற்றும் முழக்கத்தின் கீழ் ஒரு பரந்த அரசியல் தாக்குதலையும் திறந்து விடுகிறது. மிக நம்பிக்கையூட்டக் கூடிய எதிர்பார்ப்புகளையும் விஞ்சுகிற அளவுக்கு மிகவும் சக்திவாய்ந்த ஒரு எதிரொலியை அது எழுப்பும்.

மாபெரும் வெகுஜன இயக்கங்களை, ஏழு சீல்கள் வைத்து மூடிய ஒரு புத்தகமாகவே கருதுகின்ற வெற்று அரைவேக்காடுகள் மட்டுமே இதைப் புரிந்து கொள்ளத் தவறுவார்கள்.

14. தேவை, செயலின்மைக்கான ஒரு வேலைத்திட்டமல்ல, ஒரு புரட்சிக்கான வேலைத்திட்டமே

முதலாளித்துவத்தின் கீழ் வெகுஜனங்களின் நிலைமை இன்னும் அதிகமாக மோசமடைந்து செல்வதற்கு எதிர்ப்பு காட்டுவது இப்போதும் சாத்தியம் தான் என்ற பட்சத்தில், முதலாளித்துவ சொத்துரிமை மீதான ஒரு புரட்சிகர தலையீடு இல்லாமல் நிலைமையில் எந்த உண்மையான முன்னேற்றமும் சிந்தித்துப் பார்க்க முடியாதது என்ற அடிப்படையான சிந்தனையில் இருந்து தான் அதிகாரத்திற்கான போராட்டம் தொடங்கியாக வேண்டும். ஐக்கிய முன்னணியின் அரசியல் பிரச்சாரமானது ஒரு நன்கு எடுத்துரைக்கப்பட்ட இடைமருவல் வேலைத்திட்டத்தை - அதாவது ஒரு தொழிலாளர்’ மற்றும் விவசாயிகளது அரசாங்கம் இந்த நடவடிக்கைகளது முறையைக் கொண்டு முதலாளித்துவத்தில் இருந்து சோசலிசத்துக்கு மாறுவதை உறுதியளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் - தனக்கு அடித்தளமாகக் கொள்ள வேண்டும்.

இப்போது புரட்சிகர நடவடிக்கைக்கு வழிகாட்டத்தான் ஒரு வேலைத்திட்டம் தேவைப்படுகின்றதே அன்றி மனச்சாட்சிக்கு நிம்மதி அளிப்பதற்காக அல்ல. ஒரு வேலைத்திட்டம் விலாசமில்லாத கடிதமாக இருக்கும் பட்சத்தில் அதனால் என்ன பயன்? உதாரணமாக பெல்ஜியன் தொழிலாளர்’ கட்சி De Man இன் படோடாபமான திட்டத்தை அதன் அத்தனை “தேசியமயமாக்க”ங்களுடனும் சேர்த்து ஏற்றுக் கொண்டது. ஆனால் அதனை அடைவதற்கு கட்சி அதன் சுண்டுவிரலைக் கூட அசைக்கவில்லை என்றால் அதற்கு என்ன அர்த்தம்? பாசிசத்தின் வேலைத்திட்டங்கள் கற்பனை மிக்கதாக, பொய்யானதாக, வாய்வீச்சு கொண்டதாக இருக்கின்றன. ஆனால் பாசிசம் அதிகாரத்திற்கான ஒரு ஆவேசமான போராட்டத்தை முன்னெடுக்கிறது. சோசலிசம் மிக விஞ்ஞானபூர்வமான வேலைத்திட்டத்தை முன்னெடுத்தாலும் கூட பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படை அரசைக் கைப்பற்றுவதற்கான ஒரு துணிச்சலான போராட்டத்தை கட்டவிழ்த்து விடவில்லை என்றால் அதன் மதிப்பு பூச்சியமாகி விடும். சமூக நெருக்கடி அதன் அரசியல் வெளிப்பாட்டில் அதிகார நெருக்கடியாகத் தென்படுகிறது. சமூகத்தின் பழைய தலைமை திவாலாகி விட்டது. ஒரு புதிய தலைவன் தேவைப்படுகிறது.

புரட்சிகரப் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை கையிலெடுக்கவில்லை என்றால், பாசிசம் அதனைக் கையிலெடுப்பது தவிர்க்கவியலாததாகி விடும்!

“நடுத்தர வர்க்கங்களுக்கான” இடைமருவல் கோரிக்கைகளது ஒரு வேலைத்திட்டம், ஒரு பக்கத்தில் நடுத்தர வர்க்கங்களின் உண்மையான தேவைகளுக்கும், இன்னொரு பக்கத்தில் சோசலிசத்தை நோக்கிய அபிவிருத்திக்கான கோரிக்கைகளுக்கும் செவிமடுப்பதாக இருக்குமாயின், அது இயல்பாகவே மிகப்பெரும் முக்கியத்துவத்தைப் பெறும். ஆனால் மீண்டுமொரு முறை ஈர்ப்பு மையமானது இப்போது ஒரு சிறப்பு வேலைத்திட்டத்தில் இல்லை. நடுத்தர வர்க்கங்கள் ஏற்கனவே பல வேலைத்திட்டங்களைப் பார்த்திருக்கின்றன. அந்த வேலைத்திட்டம் யதார்த்தமாக்கப்படக்கூடியது என்ற நம்பிக்கையே அவர்களுக்குத் தேவை. “இந்த முறை தொழிலாள-வர்க்கக் கட்சிகள் பின்வாங்காது போல் தோன்றுகிறது” என்று எப்போது ஒரு விவசாயி சொல்கிறாரோ அப்போதே சோசலிசத்தின் நியாயம் வென்று விட்டிருக்கிறது என்று அர்த்தம்.

ஆனால் அதற்கு, நமது பாதையில் காணும் ஒவ்வொரு தடைக்கல்லையும் உடைத்தெறிய நாம் திடமான தயாரிப்பு செய்திருக்கிறோம் என்பதை நடவடிக்கையில் வெளிப்படுத்துவது அவசியமாகும்.

போராட்ட வழிமுறைகளை புதிதாய் கண்டுபிடிப்பதற்கு அவசியம் ஏதுமில்லை. உலகின் தொழிலாள வர்க்க இயக்கத்தின் ஒட்டுமொத்த வரலாற்றின் மூலம் அவை வழங்கப்பட்டுள்ளன.

ஒரே விடயத்தை தொடர்ந்து வலியுறுத்திப் பதிய வைக்கும் வண்ணம் தொழிலாள-வர்க்க ஊடகங்களில் அழுத்தமான பிரச்சாரம்; நாடாளுமன்றத்தின் மக்கள் உரிமைக் காவலர்களிடம் இருந்தான உண்மையான சோசலிச உரைகள், சத்தில்லாத பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து அல்ல, உண்மையான மக்கள் தலைவர்களிடம் இருந்து; ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரத்தையும் புரட்சிகர நோக்கங்களுக்காய் பயன்படுத்துதல்; வெகுஜனங்கள் வெறுமனே உரையாற்றுபவர்களின் பேச்சைக் கேட்பதுடன் நின்றுவிடாமல் அந்த நேரத்திற்குத் தேவையான முழக்கங்களையும் உத்தரவுகளையும் பெறுவதற்கு இயலுகின்ற வகையில் அடுத்தடுத்த கூட்டங்கள்; தொழிலாளர் குடிமக்கள்படையின் உருவாக்கம் மற்றும் அதனை வலுப்படுத்தல்; பிற்போக்குத்தனமான குழுக்களை எல்லாம் வீதிகளில் இருந்து விரட்டுகின்ற நன்கு ஒருங்கிணைந்த ஆர்ப்பாட்டங்கள்; ஆர்ப்பாட்ட வேலைநிறுத்தங்கள்; தீர்மானமான வர்க்கப் போராட்டப் பதாகையின் கீழ் தொழிற்சங்க பொறுப்பில் இருப்பவர்களை ஐக்கியப்படுத்தி விரிவுபடுத்துவதற்கான வெளிப்படையான பிரச்சாரம்; பரந்த வேலைநிறுத்தங்கள்; கூடுதல் சக்திவாய்ந்த ஆர்ப்பாட்டங்கள்; நகர்ப்புற மற்றும் கிராமப்புற உழைக்கும் மக்களின் பொது வேலைநிறுத்தம்; போனபார்ட்டிச அரசாங்கத்தை எதிர்த்தும் தொழிலாளர்’ மற்றும் விவசாயிகள்’ அதிகாரத்திற்கு ஆதரவாகவுமான ஒரு பொதுவான தாக்குதல்.

வெற்றிக்குத் தயாரிப்பு செய்ய இன்னும் கால அவகாசம் இருக்கிறது. பாசிசம் இன்னும் ஒரு பாரிய இயக்கமாக ஆகி விடவில்லை. எப்படியிருந்தாலும் தீவிரவாதத்தின் தவிர்க்கவியலாத சிதைவானது, போனபார்ட்டிசத்தின் அடித்தளம் சுருங்கி, இரண்டு அதிதீவிர முகாம்கள் வளர்ச்சி பெறுவதையும் அவற்றுக்கு இடையிலான மோதல் நெருங்குவதையுமே அர்த்தப்படுத்துகிறது. எத்தனை வருடங்கள் என்பதல்ல கேள்வி, எத்தனை மாதங்கள் என்பது தான். இந்தக் காலகட்டத்தின் நீளம் என்பது எவரொருவராலும் முடிவு செய்யப்படுவதல்ல மாறாக வாழும் சக்திகளது போராட்டத்திலும் எல்லாவற்றிற்கும் மேலாக பாட்டாளி வர்க்கம் மற்றும் அதன் ஐக்கிய முன்னணியின் கொள்கையிலுமே அது தங்கியிருக்கிறது.

இதுவரையிலும் புரட்சியின் பக்கத்தில் சாத்தியமாக இருக்கக் கூடிய சக்திகளின் வலு பாசிசத்தின் சக்திகளை விட இன்னும் பொதுவாய் ஒட்டுமொத்தமாய் பிற்போக்குத்தனத்தின் ஒன்றுகூட்டிய சக்திகளை விட அதிகமாகவே இருக்கிறது. எல்லாம் முடிந்து விட்டது என்று கருதக்கூடிய ஐயுறவுவாதிகளை தொழிலாளர்களது’ பொறுப்புகளில் இருந்து தாட்சண்யமில்லாமல் துரத்த வேண்டும். ஒவ்வொரு துணிச்சலான வார்த்தைக்கும், ஒவ்வொரு உண்மையான புரட்சிகர முழக்கத்திற்கும் வெகுஜனங்களின் ஆழங்களில் இருந்து உற்சாகமான எதிரொலி கிடைக்கின்றது. வெகுஜனங்கள் போராட்டத்தை விரும்புகிறார்கள்.

வரலாற்றில் இன்று ஒரேயொரு மிக முற்போக்கான காரணியாக இருப்பது, நாடாளுமன்றவாதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் இடையிலான சேர்க்கையின் ஆர்வ எழுச்சி அல்ல, மாறாக ஒடுக்குபவர்கள் மீது ஒடுக்கப்பட்டவர்களுக்கு இருக்கும் நியாயமான மற்றும் ஆக்கபூர்வமான வெறுப்புத்தான். வெகுஜனங்களை நோக்கி, அவர்தம் ஆழமான அடுக்குகளை நோக்கித் திரும்புவது அவசியமாகும். அவர்களது உணர்வுகளுக்கும் அவர்களது பகுத்தறிவுக்கும் கோரிக்கைவிடுவது அவசியமாகும். கோழைத்தனத்திற்கு மறுபெயரான போலிக் “கண்ணியத்தை” - வரலாற்றின் மாபெரும் திருப்புமுனைப் புள்ளிகளில் இது துரோகமாகவும் கருதப்படும் - நிராகரிப்பது அவசியமாகும். Danton இன் சூத்திரத்தை ஐக்கிய முன்னணி தனது இலக்காகக் கொள்ள வேண்டும்: "தைரியம், எப்போதும் தைரியம் மற்றும் இன்னும் தைரியம்." (“De l’audace, toujours de l’audace, et encore de l’audace.”) இறுதி வரையிலும் சூழ்நிலைமையை முழுமையாகப் புரிந்து கொள்வதும் அதிலிருந்து அத்தனை நடைமுறை முடிவுகளையும் துணிச்சலுடனும் அச்சமில்லாமலும் எடுப்பதும் சோசலிசத்தின் வெற்றியை உறுதிசெய்வதாக அமையும்.


 

தொடரும்….