Print Version|Feedback
Stop the terror directed against refugees in Germany!
ஜேர்மனியில் அகதிகளுக்கு எதிரான பயங்கரவாதத்தை நிறுத்து
By Ulrich Rippert
11 May 2018
கடந்த வாரம் எல்வாங்கனில் ஒரு அகதிகள் முகாமில் திட்டமிட்ட ஒரு அரசு ஆத்திரமூட்டலாக நூற்றுக்கணக்கான பொலிசாரால் நடத்தப்பட்ட இரவு நேர சோதனை, ஜேர்மன் அரசின் ஆக்கிரோஷமான பெரும்பாலும் சட்டவிரோதமான நாடுகடத்தல் நடவடிக்கைகளை எதிர்க்கும் எவரையும் அச்சுறுத்தும் நோக்கம் கொண்டதாக இருந்தது.
கடந்த வாரம் ஆரம்பத்தில், பாடன் வூட்டன்பேர்க் மாநிலத்தில் எல்வாங்கன் எனும் சிறிய நகரத்தில் உள்ள ஒரு அகதிகள் குடியிருப்பிலிருந்து சுமார் 50 குடியிருப்பாளர்கள், டோகோ இருந்து வந்து தனது வீட்டில் வசித்து வந்த இளம் அகதி ஒருவரை கைது செய்து அவரை நாடுகடத்த பொலிசார் முனைவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர். eyewitnesses (கண்கண்ட சாட்சியங்களின்) ஏகமனதான கருத்துபடி, வன்முறை எதுவும் அப்போது அங்கு நிகழவில்லை.
மூன்று நாட்களுக்கு பின்னர், பெரும் ஆயுதமேந்திய மற்றும் முகமூடி அணிந்த ஐந்தாம் படைப்பிரிவு பொலிசார் மற்றும் சிறப்பு படையினர் என அனைவரும் குடியிருப்புக்குள் உட்புகுந்தனர். மூன்றாம் குடியரசின் இரகசியப்பொலிஸான கெஸ்டாபோ பாணியில், அவர்கள் அதிகாலையில் குடியிருப்புக்குள் புகுந்து கதவுகளைத் தட்டி, அதிர்ச்சியடைந்த மக்களை எழுப்பி, அவர்களுக்கு கைவிலங்கிட்டதோடு குடியிருப்பை விட்டு வெளியேற்றவும் செய்தனர்.
பாதிக்கப்பட்ட நபர்களின் புகைப்படம், வீடியோ காட்சிகள் மற்றும் வாக்குமூலங்கள் அனைத்துமே, காட்டுமிராண்டித்தனமான இந்த பொலிஸ் நடவடிக்கை முக்கியமாக பயத்தையும் பயங்கரவாதத்தையும் பரப்பும் நோக்கம் கொண்டது என்பதை தெளிவுபடுத்தியது. உதவியற்ற இந்த அகதிகளை களத்திற்கு இழுத்து மல்யுத்தம் செய்யும் முகமூடியணிந்த அதிரடி துருப்பினரின் படங்களை காணும் போது, அடைக்கலம் கோருவோரை தடுத்து நிறுத்துவதற்கு மட்டும் அச்சுறுத்தும் நோக்கம் கொண்டதாக அவை இல்லாமல், சமூகத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுடன் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தும் மில்லியன் கணக்கான மக்களையும் சேர்த்து அச்சுறுத்துவதாகவே அவை இருந்தன.
வெளிநாட்டவர் மீதான அச்சங்கள் குறித்து ஊடகங்கள் பரப்புகின்ற செய்தி அலைகள் ஒருபுறம் இருந்தாலும், மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் மிருகத்தனமான நாடுகடத்தல் கொள்கை மீதான எதிர்ப்பு தொடர்ந்து கணிசமானதாக உள்ளது. அகதிகளை பாதுகாக்கும் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புகள் மற்றும் முற்றுகைகள் பொதுவாக அதிகரித்து வருகின்றன. ஃபிராங்பேர்ட் விமான நிலையத்தில் மட்டும், கடந்த ஆண்டு 237 விமான ஓட்டிகள் அகதிகளை நாடுகடத்துவதற்கு மறுத்துள்ளனர்.
நாடுகடத்தலை எதிர்த்து தொடர்ச்சியான தன்னியல்பான பல முயற்சிகள் அங்கு நடைபெற்றுள்ளன. கடந்த ஆண்டு, நூரெம்பேர்கில் 300 மாணவர்கள் தங்களது சக மாணவர் ஒருவரை பொலிஸ் நாடுகடத்த முனைவதை எதிர்த்தனர். கடந்த மாதம், ஹெஸ்ஸவில் உள்ள, விட்ஸ்ஹவுசெனில், உறுதியுடன் எதிர்த்துநின்ற அண்டைவீட்டினர், புகலிட கோரும் வழக்கு முடிவுக்கு வராதிருந்த ஒரு அகதியை கைது செய்து நாடுகடத்தவிருந்த பொலிசின் திடீர் நடவடிக்கையை தடுத்தனர்.
அரசாங்கத்தின் இராணுவ கொள்கை மற்றும் பாரிய மறுஆயுதமயமாக்கலை நோக்கிய அதன் நகர்வுகள் மீதான எதிர்ப்புடன் சேர்த்து அரசாங்கத்தின் கட்டுப்படுத்தப்பட்ட புகலிட கொள்கை மற்றும் மிருகத்தனமான நாடுகடத்தல் நடைமுறைகள் ஆகியவற்றின் மீதான எதிர்ப்பும் அதிகரித்து வருகிறது. பாதுகாப்பு செலவினங்களில் கடுமையான அதிகரிப்புக்கும், சமூக செலவினங்களில் தொடர்புடைய வெட்டுக்களுக்கும் வழிவகுக்கும் அரசாங்கத்தின் திட்டமிடலுக்கு பெரும் எதிர்ப்பு நிலவுகிறது. உலோக மற்றும் மின்சாரத் தொழில்துறை மற்றும் உள்நாட்டு சேவைகளில் விரிவடைந்துள்ள எதிர்ப்பு வேலைநிறுத்தங்கள் தீவிரமயப்பட்ட வர்க்கப் போராட்டத்தின் அறிகுறிகளாகவே உள்ளன.
இந்த அதிகரித்துவரும் எதிர்ப்பு தற்போது அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு முளையிலேயே கிள்ளியெறியப்படவுள்ளது. எல்வாங்கன் அகதிகள் முகாமில் நடத்தப்பெற்ற அரசு நடவடிக்கையின் முக்கியத்துவம் இதுவேயாகும். “மிகுந்த தீவிர வடிவிலான ஆர்ப்பாட்டமும் எதிர்ப்பும் மட்டுமல்ல, சட்டத்திற்கு கீழ்படியாமை என்பது நீண்டகாலத்திற்கு ஏற்கக்கூடியவை அல்ல. அரசு வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுடன் தமது ஒற்றுமையை வெளிப்படுத்தக்கூடிய மற்றும் அதிகாரிகளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாத எவரையும் கருணையின்றி வேட்டையாட வேண்டும்” என்பதே செய்தியாகும்.
டோக்கோவைச் (Togo) சேர்ந்த 23 வயதான அடைக்கலம் கோரும் அகதியை —ஸ்ருட்கார்ட் நிர்வாக நீதிமன்றத்தில் அவரது வழக்கு முடிவு செய்யப்படாமல் நிலுவையில் இருந்த நிலையில்— தடுப்புக் காவலில் வைத்தது சட்டவிரோதமானது. அவர் பாடன்-வூட்டன்பேர்க் அரசுக்கு எதிராக ஒரு அரசியலமைப்பு புகாரை பதிவு செய்ய திட்டமிட்டுள்ளார் என்பது ஸ்ருட்கார்ட்டில் அவரது வழக்கறிஞரால் தெளிவாக்கப்பட்டது.
இருப்பினும், எல்வாங்கனில் பொலிஸ் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகளை நிராகரிக்கின்ற அதேவேளையில் ஒரு சக்திவாய்ந்த அரசிற்கு வெறித்தனமாக அழைப்பு விடுக்கும் அனைத்துக் கட்சிகளின் ஊடகவியலாளர்களையும் அரசியல்வாதிகளையும் தடுப்பதற்கு இது எதையும் செய்யவில்லை.
பவேரியாவில் கிறிஸ்துவ சமூக ஒன்றிய (Christian Social Union-CSU) தலைவர், அலெக்சாண்டர் டோப்ரிண்ட், “சமூக நல்லிணக்கத்தை அச்சுறுத்தும் மற்றும் சட்டத்தின் ஆட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நாடுகடத்தல் விரோத தொழில்துறையின்” ஒரு பாகமாக இருக்கும் அகதிகளுக்கு உதவுபவர்களையும் அவர்களது வழக்கறிஞர்களையும் கண்டனம் செய்துள்ளார். ஜேர்மனியின் உள்துறை மந்திரி ஹோர்ஸ்ட் ஸீஹோஃபர், அகதிகளின் இந்த எதிர்ப்பை, “சட்டத்தை மதிக்கும் மக்களின் முகத்தில் விழுந்த அறை” என்று விவரித்ததோடு, “ஒவ்வொரு இரண்டாவது அடைக்கலம் கோருதல் பற்றிய வழக்கு நீதிமன்றத்தில் சென்றடைவதை” இனியும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என்றும் அறிவித்தார்.
உள்துறை மந்திரி, அடைக்கலம் கோருவோர் ஒன்றாக குவிந்துள்ள மற்றும் சிறைவைக்கப்பட்டுள்ள “நங்கூர மையங்கள்” என்று அழைக்கப்படுவனவற்றின் கட்டுமானத்தை துரிதப்படுத்த முனைகிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு Freitag பத்திரிகை செய்தியின்படி, அத்தகைய முகாம்கள் ஏற்கனவே 1920 களின் ஆரம்பத்தில் வைய்மர் குடியரசில் இருந்தன. அந்த நேரத்தில், அவைகள் “கிழக்கு ஐரோப்பாவிலிருந்து வந்து தஞ்சம் புகுந்த யூத அகதிகளை நாடுகடத்தும் முகாம்களாக” சேவையாற்றின, மேலும் உத்தியோகபூர்வமாக அவை “சித்திரவதை முகாம்கள்” என அழைக்கப்பட்டன. அத்தகைய முகாம்களை நாஜிக்கள் பின்னர் எதற்கு பயன்படுத்தினர் என்பது நன்கு அறியப்பட்டதாகும்.
பாடன்-வூர்ட்டன்பேர்க் மாநில அரசாங்கத்தை வழிநடத்தும் பசுமைக் கட்சி, சமூக ஜனநாயகக் கட்சி, சுதந்திர ஜனநாயகக் கட்சி மற்றும் இடது கட்சி என அனைத்து கட்சிகளும், அதிவலது ஜேர்மன் மாற்றீட்டு (AfD) கட்சி செய்ததைப் போலவே அகதிகளுக்கு எதிராக பிரச்சாரங்களை மேற்கொண்டன.
ஜேர்மன் வரலாற்றில் பெரும்பாலும் நிகழ்ந்துள்ளதைப் போல, இந்த நிகழ்வுகள் நாட்டின் மெல்லிய ஜனநாயக மூடுதிரையின் வரம்புகளை வெளிப்படுத்துகிறது. சிறியளவிலான எதிர்ப்புக்கு முகம்கொடுக்கும் போதே சர்வாதிகார அரசின் அசிங்கமான முகம் தெளிவாக தெரிகின்றது.
சமூகத்தில் பலவீனமானவர்கள் உடனான ஒற்றுமையை வெளிப்படுத்த மாணவர்களுக்கு ஊக்கமளிக்கப்பட்ட நாட்களும் மற்றும் பாசிச எதிர்ப்பாளர்களுக்கு பின்னர் ஸோபி ஸ்ஷோல் (Sophie Scholl) போன்ற சமூக ஆர்வலரின் பெயர், பள்ளிகளுக்கு வைக்கப்பட்டமையும் முடிந்து போயின. மகாத்மா காந்தியும் அவரது அஹிம்சை கொள்கையும் கூட காலாவதியாகி போயின. இந்த போக்கு தொடருமானால், பாடத்திட்டத்தில் இருந்து பெர்டோல்ட் ப்ரெச்ட் (Bertolt Brecht) மட்டும் விரைவில் காணாமற் போகமாட்டார், மாறாக, பிரீட்ரிக் ஷில்லரும் (Friedrich Schiller) காணாமற் போவார். ஷில்லரின் வில்ஹெல்ம் டெல் (Wilhelm Tell) போன்று சர்வாதிகாரி கெஸ்லருக்கு அடிபணியாத எவரும் ஒரு குற்றவாளியாக கையாளப்படுவர்.
ஐரோப்பா மற்றும் அமெரிக்கா எங்கிலும் உள்ள அகதிகளை அவதூறாக பேசுவதும், மேலும் அவர்களை கொடுமைப்படுத்துவதும் அனைத்து அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் பறிப்பதற்கே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆஸ்திரியாவில், கன்சர்வேடிவ் மக்கள் கட்சி இந்த முடிவுக்கு வலதுசாரி தீவிரவாத FPO ஐ ஆட்சிக்கு கொண்டுவந்துள்ளது. ஜேர்மனியில், ஆளும் பெரும் கூட்டணி AfD அரசியலை தனதாக எடுத்துக் கொண்டிருக்கிறது.
வலதை நோக்கிய இந்த மாற்றத்திற்கான காரணம் முதலாளித்துவ சமூகத்தின் ஆழ்ந்த நெருக்கடியாகும். அகதிகளை யுத்தத்தில் அழிவுற்ற அவர்களது கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் திருப்பியனுப்புவதற்கு அதிகமான ஆற்றலை செலவளிக்கும் அதே அரசாங்கம், அடுத்த சுற்று இராணுவ அழிவில் பயன்படுத்த புதிய ஆயுத அமைப்புகளை பெறுவதற்கும் கடுமையாக முனைந்து வருகிறது.
இராணுவவாதமும், வளர்ந்துவரும் சமூக சமத்துவமின்மையும் ஜனநாயகத்துக்கு முரணாக உள்ளன. இந்த பிற்போக்குத்தன கொள்கைக்கு எதிர்ப்பு அதிகரிக்கும் நிலையில், அகதிகளை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தையும் இலக்காக வைத்தே ஒரு பொலிஸ் அரசு ஸ்தாபிக்கப்பட்டு வருகிறது.
ஜேர்மனியில் சோசலிச சமத்துவக் கட்சி (SGP) அகதிகளின் உரிமைகளை பாதுகாப்பதோடு, தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தும் அனைத்து முயற்சிகளையும் எதிர்க்கிறது. தேசியம், தோல் நிறம், மதம் என எதையும் சாராமல், முதலாளித்துவத்தையும் போரையும் எதிர்க்கும் வகையில் தேசிய எல்லைகளைக் கடந்த ஒரு கூட்டு போராட்டத்தில் தொழிலாளர்கள் அனைவரும் ஐக்கியப்பட வேண்டும்.