Print Version|Feedback
වැඩකරන ජනතාවගේ ජීවන කොන්දේසි තලා දමමින් ආන්ඩුව බඩු මිල පිම්මේ නංවයි
அரசாங்கம் உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரங்களை நசுக்கி விலைவாசியை உயர்த்தியுள்ளது
By Saman Gunadasa
13 May 2018
கடந்த சில நாட்களாக அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிக்கத் தொடங்கிய அரசாங்கம், சகல பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் வகையில் மே 10 அன்று எரிபொருள் விலையை அதிகரித்தது.
ஏப்ரல் 27 அன்று 12.5 கிலோ சமயல் எரிவாயு விலையை 1,676 ரூபா வரை 17 சதவீதம் அதிகரித்த அரசாங்கம், பின்னர் உழைக்கும் மக்களின் அன்றாட உணவுகளான பால் மாவின் விலையை கிலோவுக்கு 50 ரூபாவும் உருளைக்கிழங்கு 40 ரூபாவும் வெங்காயம் 1 ரூபாயில் இருந்து 40 ரூபாய் வரையும் பருப்பு 3 முதல் 12 ரூபா வரை ஒன்றன்பின் ஒன்றாக வரிகளை உயர்த்தி அவற்றின் விலைகளை உயர்த்தியது.
உழைக்கும் மக்களின் பிரதான போக்குவரத்தில் ஒன்றான முச்சக்கர வண்டி கட்டணத்தை முதலாவது கிலோமீட்டருக்கு 10 ரூபா அதிகரிப்பதாக முச்சக்கர வண்டி சங்கம் உடனடியாக அறிவித்தது. பஸ் மற்றும் பாடசாலை மாணவர்களைக் கொண்டு செல்லும் வான் உட்பட அனைத்து போக்குவரத்து கட்டணங்களும் அதிகரிக்கப்பட உள்ளன.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையே ரூபா 137 மற்றும் 109 ரூபா என்றளவில் 15 சதவீதம் மற்றும் 17 சதவீதம் அதிகரித்துள்ள அரசாங்கம் மண்ணெண்ணெய் விலையை 101 ரூபா வரை 130 சதவீதம் அதிகரித்துள்ளது.
அத்துடன் நின்றுவிடாமல், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை விலை திருத்தப்படும் வகையில், சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் படி, ஒரு விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் ப்லட்ச் என்ற குறியீட்டின் படி விலைகள் அடிப்படையாகக் கொள்ளப்படும் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறினார். அவர், உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரிப்பதற்கு ஏற்ப இலங்கையிலும் விலையில் மாற்றம் ஏற்படும் என்றும் கூறினார்.
அமெரிக்க ட்ரம்ப் அரசாங்கம் ஆத்திரமூட்டும் வகையில் ஈரான் மீது கட்டுப்பாடுகளை விதித்து, இஸ்ரேலுக்கு ஒத்துழைப்பு கொடுத்து உலகின் முக்கிய எண்ணெய் கிணறுகளை கொண்ட மத்திய கிழக்கு பூராவும் பற்றிக்கொள்ளும் ஒரு போருக்கு வழிவகுத்து வரும் சூழலில், உலக எண்ணெய் விலை எதிர்வரும் வாரங்களில் தீவிரமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலையை நேரடியாக உழைக்கும் மக்கள் மீது திணிப்பதே இந்த விலை சூத்திரத்தின் இலக்காகும். எவ்வாறெனினும், அனைத்து மானியங்களையும் வெட்டித் தள்ளுமாறு சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள கட்டளையின் அடிப்படையிலேயே இந்த விலை உயர்வு இடம்பெறுகிறது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்கள், கிராமப்புற, தோட்டப்புற மற்றும் மீன் பிடியில் ஈடுபடும் மக்கள், அதிகளவில் பயன்படுத்தும் மண்ணெண்ணையின் விலை அதிகரிக்கப்படுவது அவர்களது வாழ்க்கை நிலைமைகள் மீதான பாரிய தாக்குதலாகும்.
கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட மண்ணெண்ணெய் விலை உயர்வுடன் ஏற்பட்ட மீன்பிடி எதிர்ப்பானது இராணுவத்தைப் பயன்படுத்தியே முறியடிக்கப்பட்டது. அத்தகைய மீனவர்கள் எதிர்ப்பை தடுக்கும் சூழ்ச்சியாக சமுர்த்தி பெறுநர்கள் மற்றும் மீனவர்களுக்கு முன்னைய விலையிலேயே மண்ணெண்ணெய் வழங்குவதாக கூறப்பட்டிருந்தாலும் அதற்கு ஒரு வழிமுறை வகுக்கப்படவில்லை.
எரிபொருள் விலை அதிகரிப்பு சம்பந்தமாக அறிவிக்க நிதியமைச்சர் மங்கள சமரவீர அழைப்புவிடுத்த ஊடகவியலாளர்கள் முன் அவர் பின்வருமாறு உளறினார்: “இதை (எரிபொருள் விலை உயர்வை) மேற்கொள்ளுமாறு சர்வதேச நாணய நிதியம் திகதி குறித்திருந்தது என கூறினால் அது நியாயமற்றது ஆகும். இந்த நாட்டின் மக்கள் மற்றும் பொருளாதாரத்தின் நன்மைக்காகவே இதை செய்தோம்."
இப்போதிருந்து மூன்றே வாரங்களுக்கு முன்னர், இலங்கையின் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவரான மனுவெலா கொரெட்டி விடுத்த ஊடக அறிக்கையில், இத்தகைய கடைசி நிபந்தனையை தெளிவாகவே விதித்துள்ள சூழ்நிலையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறுகின்றார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணைகள் சம்பந்தமாக “2018 ஜூனில் மேற்கொள்ளப்படவுள்ள நான்காவது ஆய்வை முடிவுக்கு கொண்டுவருமாறு (கடனை கொடுக்குமாறு) இலங்கை விடுத்துள்ள வேண்டுகோளானது, தெளிவுபடுத்தப்பட்டுள்ள நிதி வசதியை வழங்கும் (கடனை திருப்பிச் செலுத்தும்) வேலைத் திட்டத்துக்கு ஏற்றவாறு, அமைச்சரவை அனுமதியின் கீழ், தானியங்கி எரிபொருள்விலை முறையை ஏற்படுத்தினால் மட்டுமே கிடைக்கும்.”
இந்த விலை உயர்வை நியாயப்படுத்துவதற்காக, அரசாங்கம் முந்தைய விலைக்கே எரிபொருள் விநியோகித்தால், நாட்டின் வளர்ச்சிக்கும் சுகாதார மற்றும் கல்வித் துறைகளுக்கும் ஒதுக்கப்படும் நிதியை குறைக்க வேண்டிவரும் என சமரவீர மேலும் கூறினார். இது ஒரு அப்பட்டமான பொய் ஆகும்.
இந்த வழியில், தொழிலாளர் ஏழைகளை எலும்புவரை சுரண்டி உறிஞ்சப்படும் பணம், கடன்கொடுக்கும் ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களுக்கும் கடன் கொடுக்கும் தனியார் பெரு வணிகர்களுக்கும் கடன்களை செலுத்தவும் வட்டி கட்டுவதற்குமே செலவிடப்படும். இந்த கடன் கடந்த காலத்தில் இனவாதப் போரை முன்னெடுப்பதற்காக பெறப்பட்ட கடன் தொடக்கம், 2008ல் உலகளாவிய பொருளாதார நெருக்கடியில் வெடித்த பொருளாதார சுருக்கத்தினுள் நாட்டின் ஏற்றுமதி வீழ்ச்சியடைந்ததால் ஏற்பட்ட அந்நிய செலாவனி நெருக்கடியை சமாளிப்பதற்காகவும், வெளிநாட்டு முதலீட்டின் வீழ்ச்சி நிலைமையின் கீழ் பெரும் வணிகர்களை ஈர்ப்பதற்காக கட்டியெழுப்பப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளுக்காகவும், அரசாங்கத்தின் தினசரி செலவுகளுக்காகவும் பெறப்பட்ட கடன்களாகும்.
2017ல் மத்திய வங்கி அறிக்கையின் படி, 2017 இறுதிக்குள் நாட்டின் கடன் அளவு 10,313 பில்லியன் ரூபாவாக உள்ளதோடு, அதில் 4,718 பில்லியன் ரூபா, அதாவது 51.8 பில்லியன் அமெரிக்க டாலர் வெளிநாட்டுக் கடன் ஆகும். கடன் செலுத்துவதற்காக கடன் பெறும் ஒரு தீய சுழற்சியை வெளிப்படுத்தி, வெளிநாட்டு கடன் அளவு 2016 இருந்ததை விட நூற்றுக்கு சுமார் 10 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அறிக்கையில் காட்டப்பட்டுள்ளது. இந்த கடனுக்காக தவணை மற்றும் வட்டி செலுத்துவதற்கான கடன் சேவைகள் மட்டும் 17.8 பில்லியன் அமெரிக்க டாலர் இந்த ஆண்டு முதல் 2022 வரை தேவை என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
எரிபொருள் மானியங்கள் வெட்டு, அதேபோல், சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் படி, சுகாதாரம் மற்றும் கல்விக்காக அரசாங்கம் ஒதுக்கீடு செய்யும் நிதி, முறையே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5 மற்றும் 1.9 சதவீதம் என்ற அளவுக்கு வெட்டிக் குறைத்துள்ள அரசாங்கம், இந்த எல்லா துறைகளிலும் தனியார்மயமாக்கல் திட்டத்தை அமுல்படுத்தி, அரச திறைசேரியில் உழைக்கும் மக்களுக்கான சேவைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி இருந்தால், அவை அனைத்தையும் நீக்குவதில் ஈடுபடுகின்றது.
2017 மத்திய வங்கியின் அறிக்கையின்படி, தற்போது நாட்டில் 181 தனியார் மருத்துவமனைகள் உள்ளதுடன், ஒட்டு மொத்தமாக 5,792 படுக்கைகள் உள்ளன. மக்கள் தொகையில் 1,000 பேருக்கு, அரசாங்க மருத்துவமனைகளில் 3.6 படுக்கைகளே உள்ளன. 2017ல் 10 க்கும் குறைவான ஆசிரியர்கள் உள்ள அரசாங்கப் பாடசாலைகள் 3,148 இருப்பதாக கூறும் மத்திய வங்கி அறிக்கை, மறுபக்கம், 245 தனியார் பள்ளிகளில் 81,103 சிறுவர்கள் கற்பதாக குறிப்பிடப்படுகின்றது.
2020ல், வரவு-செலவு திட்ட பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவிகிதமாக குறைப்பது சர்வதேச நாணய நிதியத்தின் பிரதான நிபந்தனை ஆகும். இவ்வாறு தீவிரமான முறையில், இந்த இலக்குக்காக அனைத்து நலன்புரி சேவைகளும் வெட்டப்படுகின்றன. எரிபொருள் கூட்டுத்தாபனம், அதே போல் மின்சார சபை, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, அரசு வங்கிகள் மற்றும் துறைமுகங்களும் தனியார்மயமாக்கல் மற்றும் வணிகமயமாக்கலுக்கு உட்படுத்தப்பட உள்ளன. மின்சார கட்டணத்துக்காக எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் ஒரு விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் அடங்கும்.
கடந்த ஏப்ரல் 1ம் திகதி முதல் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் படி திட்டமிடப்பட்ட கொடூரமான வரிச் சட்டத்தின் மூலம், தொழிலாளர்கள், சுயதொழில் செய்வோர், தொழில் வல்லுனர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் உட்பட சமூகத்தின் அனைவர் மீதும் வரி வலை வீசப்பட்டுள்ள நிலைமையிலேயே தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தின் மீது இந்த தாக்குதல்கள் திட்டமிடப்படுகின்றன. 18 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொரு நபருக்கும் ஒரு வரிக் கோப்பு திறக்கப்பட உள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தத்தின் கீழ், ரூபாயை சந்தை சக்திகளுக்கு விட்டுக்கொடுத்ததன் காரணமாக, இப்போது ரூபாவின் மதிப்பு கடுமையான வீழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளதோடு இந்த நிலைமை அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது. இந்த ஆண்டில் மாத்திரம் ரூபாவானது அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் 3.3 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளதுடன் ஏப்ரல் மாதத்தில் 1.1 சதவிகிதம் சரிந்துள்து.
மத்திய வங்கியின் 2017 அறிக்கையின்படி, 2017ம் ஆண்டில் முறைப்படுத்தப்பட்ட தனியார் துறையின் உண்மையான ஊதியம் 5.9 சதவீதம் சரிந்துள்ளதுடன், 2016ல் இந்த வீழ்ச்சி 3.6 சதவீதமாகும். 2015 முதல் அரசாங்கத்துறை சம்பளம் சுருக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த அரசாங்கத்தின் கீழ், சுமார் பத்து இலட்சம் அரச மற்றும் தனியார் துறையின் வாழ்க்கைத் தரங்கள் நசுக்கப்பட்டிருக்கின்ற விதத்தை தெளிவுபடுத்துகின்றது.
கடந்த பல மாதங்களாக போக்குவரத்து, சுகாதார, எரிசக்தி, உயர் கல்வி, தபால் போன்ற பல துறைகளில் வெடித்த தொழிலாள வர்க்க போராட்டங்களில், அரசாங்கத்தின் இந்த கடுமையான தாக்குதல்களுக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தின் உக்கிரமடையும் எதிர்ப்பு வெளிப்பாட்டைக் கண்டுள்ளது. உக்கிரமாக்கப்பட்டுள்ள தாக்குதல்கள், தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகளை அரசாங்கத்துக்கு எதிராக சமரசமற்ற போராட்டங்களுக்கு தள்ளி விடும்.