Print Version|Feedback
Oppose the brutal police crackdown on refugees in Germany
ஜேர்மனியில் நடத்தப்பட்ட அகதிகள் மீதான மிருகத்தனமான பொலிஸ் அடக்குமுறையை எதிர்ப்போம்
By Christoph Vandreier
9 May 2018
ஜேர்மன் மாநிலம் பாடன்-வூட்டன்பேர்க்கில் எல்வாங்கனில் ஒரு அகதிகள் முகாமை பொலிஸ் மிருகத்தனமாக தாக்கியது என்பது பொலிஸ் அரசின் திசையில் ஒரு படி முன்னேறிச் செல்வதையும், அடிப்படை ஜனநாயக உரிமைகள் கீழறுக்கப்படுவதையும் குறிக்கிறது. பொலிஸ் வன்முறையையும், பிரச்சாரம் மற்றும் பொய்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஒருமுகப்பட்ட பிரச்சாரத்தையும் மேற்கொண்டு அகதிகளையும் அவர்களது ஆதரவாளர்களையும் அச்சுறுத்துவதே இதன் நோக்கமாகும்.
பொலிசாரால் கொடூரமாக தாக்கப்பட்ட அகதிகள் கூறிய விளக்கங்கள் ஜேர்மன் வரலாற்றின் இருண்ட அத்தியாயங்களை நினைவுகூருகின்றன. மே 3 அன்று, நூற்றுக்கணக்கான முகமூடி அணிந்த பொலிஸ் அதிகாரிகள், அவர்களில் பெரும்பாலானோர் கடுமையான ஆயுதமேந்தி, எச்சரிக்கையின்றி முகாம் மீது தாக்குதல் நடத்தினர். அவர்கள் கதவுகளை உடைத்து சென்று, அப்பாவி குடியிருப்பாளர்களை அவர்களது படுக்கையிலேயே வைத்து கடுமையாக தாக்கி, அவர்களுக்கு கைவிலங்கிட்டு, வலுக்கட்டாயமாக அவர்களை முகாமை விட்டு வெளியேற்றினர். பொலிஸ் வட்டார தகவல்படி, இராணுவ பாணியிலான இந்த தாக்குதலில் 11 பேர் காயமடைந்தனர்.
இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் குறித்து அனைத்து முக்கிய ஊடகங்களும், பல அரசியல்வாதிகளும் கொண்டாடினர் என்பதுடன், வெறுப்பூட்டும், பொய்யான ஒரு பிரச்சாரத்தையும் நடத்தினர். ஏப்ரல் 29 அன்று இரவு முகாமில் இருந்த அகதிகளால் அதிகாரிகள் கொடூரமாக தாக்கப்பட்டனர் என்று கூறி இந்த தாக்குதலை பொலிசார் நியாயப்படுத்தினர். 23 வயது அகதி ஒருவரை தடுப்புக்காவலில் வைத்து டோகோவில் (Togo) இருந்து அவரை இத்தாலிக்கு நாடுகடத்த நான்கு அதிகாரிகள் முயன்றனர். இருப்பினும், 50 முகாம் குடியிருப்பாளர்கள், அவர்களது “ஆக்கிரோஷமான நடத்தை” மற்றும் “வன்முறை” இன் மூலம் அவரை விடுவிக்குமாறு கட்டாயப்படுத்தினர். ஏனைய விடயங்களுக்கு மத்தியில், பொலிஸ் வாகனம் ஒன்று சேதப்படுத்தப்பட்டதாகவும் காவல் துறையின் உத்தியோகபூர்வ செய்தி வெளியீடு ஒன்று தெரிவிக்கிறது.
ஆலன் பொலிஸ் தலைமையின் துணைத் தலைவர் பேர்னார்ட் வேபர், “ஆக்கிரோஷமான அவசர சூழ்நிலையையே” அதிகாரிகள் எதிர்கொண்டனர் என்று தெரிவித்தார். மேலும், அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதை தடுக்கும்விதமாக ஒரு ஆபிரிக்க குழுவினர் மத்தியில் “கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன” என்றும் வேபர் கூறினார். இது உண்மையில் ஒரு “சட்டவிரோத பிராந்தியத்தை உருவாகுவதில்” முடிவடைந்தது, என்றார்.
அதனைத் தொடர்ந்து, குடியிருப்பாளர்களும் ஆயுதங்களை வைத்திருந்ததாக பொலிசார் தெரிவித்தனர். பொலிசாரின் கூற்றுப்படி, குடியிருப்பாளர்களின் “ஆக்கிரோஷமான ஒன்றுகூடலில்” தான் “அடுத்த பொலிஸ் தலையீட்டிற்கான தயாரிப்பில் ஆயுதங்களை ஏந்திச் செல்லும் ஒரு உந்துதல்” பற்றி “தீவிரமான அறிக்கைகள்” வெளியிடப்பட்டன. பாடன்-வூட்டன்பேர்க்கின் உள்துறை மந்திரி தோமஸ் ஸ்ட்ரோபிள் (கிறிஸ்துவ ஜனநாயகவாதிகள்- CDU), “எதிர்கால நாடுகடத்தல்கள் ஆயுதமேந்திய அகதிகளின் எதிர்ப்பின் மூலமாக தடுக்கப்படும்” என்ற ஒரு முழுவீச்சிலான அச்சுறுத்தலைக் குறிப்பிட்டார்.
இவையனைத்தையும் ஊடகங்கள் எந்தவித விமர்சனமுமின்றி ஏற்றுக்கொண்டன என்பதுடன், இன்னும் அதிகமான பொய்களையும் மிகைப்படுத்துதல்களையும் சேர்த்து அலங்கரித்தன. பெரும்பாலான ஊடக அறிக்கைகள் குற்றவாளிகள் எனக் கூறப்படுபவரின் எண்ணிக்கையை 150 வரை மிக வேகமாக அதிகரித்து காட்டின, கைதிகளின் விடுவிப்புக்கு பின்னர் நடந்த குடியிருப்பாளர்கள் கூட்டம் பற்றிய பொலிஸ் அறிக்கையில் இந்த எண்ணிக்கை குறிப்பிடப்பட்டிருந்தாலும் கூட.
மத்திய உள்துறை மந்திரி ஹோர்ஸ்ட் ஸீஹோஃபர் (கிறிஸ்துவ சமூக ஒன்றியம், CSU) இதனை மதிப்பிட்டு, இந்த சம்பவத்தை “மூர்க்கத்தனமான நடவடிக்கை” என விவரித்தார். கடந்த வியாழனன்று பேர்லினில் ஸீஹோஃபர், “சட்டத்தை மதிக்கும் குடிமக்களின் முகத்தில் அறைவதாகவே” இது இருந்தது என்றும் “விருந்தோம்பல் உரிமையை இந்த வகையில் காலடியில் போட்டு நசுக்க முடியாது” என்றும் தெரிவித்தார். ஸீஹோஃபர் இதன்மூலம், அதிவலது ஜேர்மன் மாற்றீட்டுக் கட்சியின் (Alternative for Germany-AfD) செய்தித் தொடர்பாளர் அலீஸ் வைடெல் செய்த ட்வீட்டை கிட்டத்தட்ட வார்த்தை பிசகாமல் ஏற்றுக்கொண்டார்.
உண்மையில், “ஆக்கிரோஷமான அவசர சூழ்நிலை” உருவாவதற்கு ஒருபோதும் அகதிகள் பொறுப்பாகவில்லை. ஒரு நண்பரை நாடுகடத்துவதற்கு எதிரான ஒரு சட்டபூர்வமான எதிர்ப்பாகவே அது நிகழ்ந்தது என அனைத்து ஆதாரங்களும் தெரிவிக்கின்றன.
ஆரம்பகட்ட நடவடிக்கையின் போது, அல்லது வியாழனன்று நடந்த சோதனையின் போது பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக எந்தவித வன்முறையும் பயன்படுத்தப்படவில்லை. பொலிஸ் வாகனம் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது ஒரு சிறிய பொருளற்ற விடயமாக திசை திரும்பியது. தினசரி நாளிதழ் TAZ, ஆலன் பொலிஸ் தலைமையின் செய்தித் தொடர்பாளரால் வாகனம் சேதமடைந்தது குறித்த புள்ளிவிபரத்தை தெளிவாக முன்வைக்க முடியவில்லை என்றும், இந்த செய்தி “மிக உறுதியானதில்லை” என்று அவர் செய்தித்தாளுக்கு தெரிவித்தார் என்றும் அறிக்கை வெளியிட்டது. மேலும், வாகனம் பற்றிய செய்தி “பொய்த்து” போனதாகவும் செய்தித் தொடர்பாளர் சேர்த்துக் கூறினார்.
வியாழக்கிழமை நடந்த சோதனையின் போது மூன்று அதிகாரிகள் காயமடைந்தனர் என்ற DPA இன் அறிக்கை பொலிசாரால் பின்னர் ஒருவர் காயமடைந்ததாக திருத்தப்பட்டது. ஆலன் பொலிஸை பொறுத்தவரை, இந்த காயம் “மூன்றாம் தரப்பினர், மற்றும் வெளிப்புற குறுக்கீடு இல்லாமல்” ஏற்படுத்தப்படவில்லை என்பதாகும்.
குடியிருப்பாளர்கள் தங்களை ஆயுதபாணிகளாக்கி கொண்டிருந்தனர் என்று பொலிஸ் எப்படி முடிவு செய்தனர் என்பதை செய்தித் தொடர்பாளரால் TAZ பத்திரிகைக்கு விளக்க முடியவில்லை. “தொழில்நுட்பம் சார்ந்த அல்லது தொழில்நுட்பம் சாராத எந்தவித ஆயுதங்களும்” கண்டறியப்படவில்லை, என்றே செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இதன் அர்த்தம் என்ன? “தினசரி வாழ்வில் பயன்படுத்தப்படும் பொருட்களே தாக்குதலுக்குரிய ஆயுதங்களாக பயன்படுத்தப்பட்டிருக்கக் கூடுமென கண்டறியப்பட்டது” என்பதாகும்.
பொலிஸ் கூறிய பொய்களையும் மிகைப்படுத்தல்களையும் ஊடகங்கள் மேலும் பல மடங்காக ஊதிப் பெரிதாக்கியதோடு, ஒரு தவறான இனவெறி பிரச்சாரத்தை தொடங்குவதற்கும் பயன்படுத்தின. Leipziger Volkszeitung நாளிதழ், இந்த சம்பவம் “நாட்டின் உண்மையான மற்றும் உணரப்பட்ட அதிகாரமற்றத் தன்மைக்கான ஒரு அடையாளமாக” இருக்கும் எனத் தெரிவித்தது. Stuttgarter Nachrichten சோதனை வியாழனன்று மட்டுமே நடந்திருந்த போதிலும், இந்த சம்பவம் “பல நாட்களாக மறைக்கப்பட்டு” இருந்தது என்று குறை கூறி பொலிசை வலதுபுறத்தில் இருந்து தாக்கியது. இந்த வழியில், “அடைக்கலம் கோரும் உரிமை அதிகரித்தளவில் கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது.”
Frankfurter Allgemeine Zeitung பத்திரிகை வெள்ளியன்று அதன் முன்னணி கட்டுரையில் பொலிஸ் சோதனையை வரவேற்றது, ஆனால் அதே நேரத்தில், இந்த மோதல்கள் முகாம் அமைப்பு முறை பற்றி குற்றம்சாட்டி வந்தனவேயன்றி, “தேவைப்பட்டால் வன்முறையைப் பயன்படுத்தி ஜேர்மனியில் அவர்கள் குடியேற முடியும்” என்ற அகதிகளின் நம்பிக்கை பற்றியது அல்ல என்று குறைகூறியது.
முன்னர் ஒரு தாராளவாதியாக கருதப்பட்ட மற்றும் அவ்வப்போது பொலிஸ் நடவடிக்கைகளை விமர்சித்த ஈவன் ஹெரிபபேர்ட் பிராண்ட்ல், Süddeutsche Zeitung இல் பொலிசின் பொய்களை பாதுகாத்ததோடு, அகதிகளால் நிகழ்த்தப்பட்ட “வன்முறை” என்பதாக குறிப்பிட்டார். “அரசாங்கம், விதிகளை உருவாக்கவும் தொடர்ந்து செயல்படுத்தவும் விரும்புகிறது என்ற செய்திகளை மூடிமறைத்து செயல்படுத்த அது அனுமதிக்கப்பட வேண்டும்” என்றும் தெரிவித்தார்.
அனைத்து கட்சி அரசியல்வாதிகள் கூட இந்த பரப்புரை பிரச்சாரத்திற்கு இன்னும் எரியூட்டினர். பாடன்-வூர்ட்டன்பேர்க்கின் பசுமைக் கட்சி மந்திரி வின்ஃப்ரிட் கிரெட்ச்மான், பொலிஸ் நடவடிக்கையைப் பாதுகாத்தார் என்பதுடன், அவரது அரசாங்கமும் இதை தயாரிக்க உதவியது. அகதிகளின் நடத்தை “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும் தெரிவித்தார். “சட்டவிரோத பிராந்தியங்களை சகித்துக்கொள்ள வேண்டியதில்லை, மேலும் பொலிஸ் அதிகாரிகள் மீதான இந்த தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றும் சேர்த்துக் கூறினார். இந்த தலையீடு “தர்க்க ரீதியானது மற்றும் தேவையானது” என்று கூறிய பசுமைக் கட்சித் தலைவர் ராபர்ட் ஹேபேக்கிடமிருந்தும் அவர் ஆதரவைப் பெற்றார்.
சுதந்திர ஜனநாயக கட்சி (Free Democrats-FDP) தலைவர் கிறிஸ்டியான் லிண்ட்னெர், அரசின் மீதான நம்பிக்கை இழப்பு பற்றி குறிப்பிட்டார். “நாடுகடத்தல்களை தடுக்க முனையும் ஒரு கிளர்ச்சிக் கும்பல் மூலமாக அரசு தன்னையே அச்சுறுத்திக்கொள்வதற்கு அனுமதிக்க முடியாது” என்று தெரிவித்தார். கூட்டாட்சி நீதித்துறை அமைச்சர் காத்தாரினா பார்லி (சமூக ஜனநாயகவாதிகள் SPD) கூட கடுமையான அடக்குமுறைக்கு கோரிக்கை விடுத்ததுடன், “சட்டத்தை மீறும் மற்றும் பொலிசை எதிர்த்து நிற்கும் எவரும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிட வேண்டும்” என்றும் அறிவித்தார்.
இடது கட்சி பிரதிநிதிகளின் பொலிஸ் நடவடிக்கைகள் குறித்த தனிமைபடுத்தப்பட்ட விமர்சனங்கள் முற்றிலும் பாசாங்குத்தனமானவை. உண்மையில், பேர்லின், பிராண்டன்பேர்க் மற்றும் துரிங்கியா மாநிலங்களில் நாடுகடத்தல் எந்திரத்தின் சக்கரங்களுக்கு இந்த கட்சி எண்ணெய் ஊற்றியது. இடது கட்சி பாராளுமன்ற குழுவின் தலைவர் சாஹ்ரா வாகன்க்னெக்ட், வியாழனன்று FAZ இல், அகதிகளின் வருகையினால் பிரச்சினைகள் மேலும் தீவிரமடைந்துள்ளதை உணர்ந்துகொள்ள வேண்டியது அவசியமென குறிப்பிட்டு எல்லைகளை மூடுவது பற்றி இடது கட்சி வாதிடுகிறது எனத் தெரிவித்தார். மேலும், “குறைவூதிய வேலைகள் மற்றும் மலிவு வீட்டு வசதிக்கான போட்டி, பொது பாதுகாப்பின்மை, தீவிர இஸ்லாமியத்தை பரப்புகின்ற இணை உலகங்களின் எழுச்சி” போன்ற பிரச்சினைகள் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.
எல்வாங்கென் மீதான இந்த பிரச்சாரம், அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்களால் அகதிகளுக்கு எதிராக நடத்தப்படும் ஒரு தொடர்ச்சியான மற்றும் ஒருங்கிணைந்த பிரச்சாரத்தின் ஒரு பாகமாகவே உள்ளது. திசை திருப்பும் தொழில்நுட்பங்கள் மற்றும் பாலியல் ஆத்திரமூட்டல்களில் பெரும்பாலும் ஈடுபடும் சிறு திருடர் கும்பல்களின் நடவடிக்கைகள் கொலோன் நகர புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகளில் பெரியளவில் மிகைப்படுத்தப்பட்ட போது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே இது தொடங்கப்பட்டது. இது தொடர்பாக ஊடகங்களால் வழங்கப்பட்ட திகில் காட்சிகள் அனைத்தும், பின்னர் இனவெறி உணர்ச்சிகளைத் தூண்டுவதற்காக வேண்டுமென்றே பயன்படுத்தப்பட்ட கண்டுபிடிப்புகளாக மாறின.
அகதிகள் அடைக்கலம் கோருவதற்கு அதிகாரிகளுக்கு பெரியளவில் இலஞ்சம் கொடுத்து வருகிறார்கள் என்பதைக் கருத்துரைத்த வகையில், கடந்த மாதம் தான் Bremen நகரில் அடைக்கலம் கோருவது குறித்து முடிவெடுக்கும் செயல்முறைக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் சமன் செய்யப்பட்டன. கூட்டாட்சி இடம்பெயர்வு அமைச்சகம் “ஒட்டுமொத்த மீறல்கள்” காரணமாக 2,000 மொழிபெயர்ப்பாளர்களை பணிநீக்கம் செய்தது என்ற தொடர்ந்து வந்த கூற்றுக்களுக்கு நிகழ்ந்தது போல, இந்த அறிக்கையும் பொய்யாகிப் போனது.
இந்த பிரச்சாரங்கள் அரசாங்கத்தின் அடக்குமுறை இயந்திரத்தை வலுப்படுத்துவதுடன் நீண்டகாலமாக தொடர்புபட்டுள்ளன. ஆனால், எல்வாங்கெனில் நடத்தப்பட்ட கொடூரமான பொலிஸ் நடவடிக்கையின் மூலம் இது புதிய பரிமாணங்களை எட்டியிருப்பதாக கருதப்படுகிறது. களத்தில் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் அகதிகளுடன் மல்யுத்தம் செய்யும் முகமூடி அணிந்த பொலிஸ் அதிகாரிகளின் படங்களைப் பார்க்கும் போது, தஞ்சம் கோருவோரை அச்சுறுத்தும் நோக்கத்தினால் மட்டுமல்லாமல், சமுதாயத்தில் மிகவும் நலிவடைந்த உறுப்பினர்கள் உடனான தங்களது ஒற்றுமையை அறிவிக்கும் மில்லியன் கணக்கான மக்களையும் அச்சுறுத்தும் நோக்கத்திலேயே அது நிகழ்த்தப்பட்டது.
நாடுகடத்தல்களை தடுப்பதற்கு முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. உதாரணமாக, நூரெம்பேர்க்கில் கடந்த ஆண்டு 300 மாணவர்கள் ஒரு சக மாணவனை பொலிஸ் நாடுகடத்த முயன்றதை எதிர்த்தனர். ஏப்ரலில், ஹெஸ்ஸே மாநிலத்தில் விட்ஸன்ஹௌசனில் தைரியமான அண்டைவீட்டினரால், ஒரு நாடுகடத்தல் முயற்சி தடுக்கப்பட்டது. இது குறித்து ஆர்ப்பாட்டங்களும், எதிர்ப்புகளும் மற்றும் முற்றுகைகளும் அடிக்கடி நிகழ்கின்றன. கடந்த ஆண்டில், ஃபிராங்க்பேர்ட் விமான நிலையத்தில் மட்டும் தனியாக, நாடுகடத்தல் நடவடிக்கை எடுப்பதற்கு 237 முறை விமானிகள் மறுத்துவிட்டனர். எல்வாங்கனில் நிகழ்த்தப்பட்ட இந்த சம்பவத்தின் மூலம் இத்தகைய மக்கள் அனைவரையும் பயமுறுத்துவதும் அச்சுறுத்துவதும் தான் நோக்கமாகும்.
அகதிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் மீது எப்போதும் இருந்துவரும் இந்த கடுமையான அடக்குமுறை, ஆளும் உயரடுக்கிற்கும், மிகப் பரந்த தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான அடிப்படை மோதல் குறித்து பறை சாற்றுகிறது. சமூக சமத்துவமின்மை, மறு ஆயுதமயமாக்கல் மற்றும் போர் ஆகியவற்றின் மீதான அவர்களது செல்வாக்கற்ற கொள்கைகளை செயல்படுத்துவதற்கு, ஆளும் வர்க்கம் சர்வாதிகார ஆட்சி வடிவங்களையே அதிகரித்தளவில் சார்ந்திருக்கிறது. அதனால் தான் அவர்கள் அடக்குமுறை அரசு இயந்திரத்தை பலப்படுத்தி வருகின்றனர் என்பதோடு, வெளிநாட்டவர்களுக்கு எதிரான பிரச்சாரங்களுடன் சமுதாயத்தை அலையென திரட்ட முனைகின்றனர். ஆரம்பத்தில் இந்த நடவடிக்கைகள் சமூகத்தின் மிகவும் பலவீனமடைந்த பிரிவுகளுக்கு எதிராக இயக்கப்பட்டு வந்தன என்றாலும், சாராம்சத்தில் இவற்றின் நோக்கம் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தையும் குறிவைப்பதாகவே இருக்கின்றன.