Print Version|Feedback
The Maruti Suzuki workers and the re-emergence of class struggle across South Asia
மாருதி சுசுகி தொழிலாளர்களும் தெற்காசியா முழுவதும் வர்க்கப் போராட்டத்தின் மறு எழுச்சியும்
By Wije Dias
7 May 2018
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியின் பொதுச் செயலாளரும் 50 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட ட்ரொட்ஸ்கிசவாதியுமான விஜே டயஸ் கொழும்பிலிருந்து உரையாற்றினார்.
இன்றிலிருந்து 200 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த வல்லமைமிக்க சிந்தனையாளரும் புரட்சியாளருமான கார்ல் மார்க்ஸ், முதலாளித்துவத்தின் பாரபட்சங்களுக்கு எதிரான தொழிலாள வர்க்க போராட்டத்தின் புறநிலை அடித்தளத்தையும் தர்க்கத்தையும் வெளிப்படுத்தியதன் மூலம் அதன் சோசலிச விடுதலைக்கான பாதையை வகுத்துக்கொடுத்தார்.
பிரிட்டிஷ் முதலாளித்துவம் தனது பேரரசின் கிரீட இரத்தினமான இந்தியத் துணைக் கண்டத்தை அல்லது சமகாலத்தில் தெற்காசியா என அழைக்கப்படுவதை கைப்பற்றி பொருளாதார ரீதியில் சீர்குலைத்து மேற்கொண்ட வன்முறை, கொள்ளையடிப்பு மற்றும் வஞ்சிப்பை அம்பலப்படுத்திய மார்க்சின் எழுத்துக்களே அவரின் படைப்பில் மிகவும் விமர்சனப்பூர்வமானவையாக காத்திரமானவையாக இருக்கின்றன. "முதலாளித்துவ நாகரீகத்தின் ஆழ்ந்த பாசாங்குத்தனம் மற்றும் உள்ளார்ந்த காட்டுமிராண்டித்தனமானது, நம் கண்களுக்கு முன்னால் அம்பலப்பட்டுள்ளது. தனது சொந்த நாட்டில் மரியாதைக்குரிய வடிவங்களைப் பெற்ற அது, காலனிகளுக்கு திரும்பும் போது நிர்வாணமாக செல்கிறது," என மார்க்ஸ் எழுதினார்.
மார்க்சின் எழுத்துக்களில் இருந்து எதிர்பார்த்த மற்றும் அரசியல் ரீதியாக தயாரிக்கப்பட்ட 1917 ரஷ்யப் புரட்சி –அதன் நூற்றாண்டை நாம் கடந்த வருடம் கொண்டாடினோம்- தெற்காசியாவில் முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு பெரும் தூண்டுதலாக அமைந்தது. முதல் உலகப் போரின் முடிவில் இருந்து 1947 வரையான மூன்று தசாப்த காலங்களில், தெற்காசியாவானது ஏகாதிபத்திய-விரோத எழுச்சியில் அதிர்ந்து போனது.
ஆனால், லியோன் ட்ரொட்ஸ்கியும் நான்காம் அகிலமும் முன்னெச்சரித்தபடி, ஏகாதிபத்தியத்தின் நிழலில் வளர்ந்த காலனித்துவ முதலாளித்துவம் தெற்காசிய தொழிலாளர்களின் புரட்சிகர அணிதிரள்வுக்கு விரோதமானதாக இருந்தது.
தனது சொந்த சொத்துக்களையிட்டு பீதியடைந்த மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்துவரும் போர்க்குணம் பற்றி அச்சமடைந்த, ஆரம்பநிலையில் இருந்த போட்டி இந்திய மற்றும் பாக்கிஸ்தான் முதலாளித்துவமும் இலங்கை முதலாளித்துவமும், 1947-48ல் அதிகாரத்தை கைமாற்றும் பேச்சுவார்த்தையை நடத்தின. இதில் அவை பிரிட்டிஷ் காலனித்துவ நிலை எந்திரத்தின் கட்டுப்பாட்டை மரபுரிமையாக்கி, தெற்காசியாவை வகுப்புவாத மற்றும் இனவாத அடிப்படையில் பிளவுபடுத்தினர். நிலப்பிரபுத்துவத்தையும் சாதியத்தையும் அழிப்பது உட்பட ஜனநாயகப் புரட்சியில் தீர்க்கப்பட வேண்டிய எரியும் பிரச்சினைகளில் எதுவும் தீர்க்கப்படவில்லை. ஒரு பிற்போக்கு அரச கட்டமைப்பு திணிக்கப்பட்டது. அது பகுத்தறிவார்ந்த பொருளாதார அபிவிருத்தியை தடுத்து, வகுப்புவாதத்தை ஸ்தாபித்து, இந்திய மற்றும் பாக்கிஸ்தான் அரசுகளுக்கு இடையில் ஒரு பிற்போக்கு இராணுவ-மூலோபாய போட்டியை தூண்டிவிட்டதுடன் ஏகாதிபத்தியம் தனது ஆதிக்கத்தைச் செயல்படுத்துவதற்கான ஒரு வழிவகையாக செயல்பட்டது.
ஏழு தசாப்தங்களாக, தெற்காசியா ஒரு புவிசார் அரசியல் மற்றும் சமூக வெடிபொருள் களஞ்சியமாக இருந்து வருகிறது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முந்தைய மே தினக் கூட்டங்களில், தெற்காசியா மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகள் ஏகாதிபத்திய மற்றும் பெரும் வல்லரசு மோதல்களின் சுழிக்குள் இழுக்கப்பட்டு வருகின்றது என நாங்கள் எச்சரித்துள்ளோம். இதற்கு, அமெரிக்க ஏகாதிபத்தியம் முக்கிய பொறுப்பாளி ஆகும். அது கடந்த பதினேழு ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் ஒரு கொடூரமான நவ-காலனித்துவ போரை நடத்தி வருவதுடன், சீனாவிற்கு எதிரான அதன் ஈவிரக்கமற்ற இராணுவ-மூலோபாய தாக்குதலுக்காக, முயற்சிக்காமலேயே இந்தியாவை அரவனைத்துக்கொள்ளக் கூடியதாக இருந்தது. இந்த வழிவகையில், வாஷிங்டன் அதன் பாரம்பரிய பிராந்திய நட்பு நாடான பாக்கிஸ்தானுடன் தனது உறவுகளை மிகப் பாரியளவில் குறைத்துக்கொண்டதன் மூலம், தெற்காசியாவின் போட்டி அணுவாயுத சக்திகளுக்கு இடையேயான பிராந்திய "பேரச்ச சமநிலையை" புரட்டிப் போட்டது.
தனது சொந்த சூறையாடும் குறிக்கோளை யதார்த்தமாக்கும் பொருட்டு பாக்கிஸ்தான் மற்றும் சீனாவை விஞ்சுவதில் ஆர்வமாக உள்ள இந்திய முதலாளித்துவம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிராந்திய ஆட்சியாளராக சேவை செய்வதற்காக வாஷிங்டன் வழங்கிய வாய்ப்பை உத்வேகத்துடன் ஏற்றுக்கொண்டது.
இந்த செயல்முறையானது, பிராந்தியத்திற்கும் உலகிற்கும் மிகவும் அச்சுறுத்தலான விளைவுகளுடன், நரேந்திர மோடி மற்றும் அவரது இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சி ஆட்சியின் கீழ் துரிதப்படுத்தப்பட்டது. கடந்த இரு ஆண்டுகளில் இரண்டு முறை, அதாவது 2016 இலையுதிர் காலத்தில் பாகிஸ்தானுடனும் பின்னர் கடந்த கோடையில் சீனாவுடனும்- இந்தியா எல்லைப் போரின் விளிம்புக்கே சென்றது. இது விரைவாக அமெரிக்கா மற்றும் பிற பெரும் வல்லரசுகளை உள்ளே இழுத்துப் போடும் ஒரு ஒட்டு மொத்த இராணுவ மோதலாக தீவிரமடையக் கூடியதாக இருந்தது.
தெற்காசியாவானது பூகோள முதலாளித்துவ உற்பத்திச் சங்கிலிகளுக்குள் முன்னெப்போதையும் விட இறுக்கமாக சிக்கிக்கொண்டுள்ள நிலையில், அதன் பொருளாதார மாற்றத்துக்கு மேற்கத்தைய கூட்டுத்தாபன ஊடகம் அதிக பங்களிப்பு செய்துள்ளது. உண்மையில், முதலாளித்துவ வளர்ச்சியின் பலன்கள் ஒரு சிறிய முதலாளித்துவ உயரடுக்குக்கும் அவர்களது அரசியல் ஆதரவாளர்களுக்கும் போய்ச் சேருகின்றன. வெகுஜனங்களுக்கோ வறுமை, பொருளாதார பாதுகாப்பற்ற நிலை மற்றும் சீரழிவும் அதிகரிக்கின்றன.
பங்களாதேஷில் நான்கு மில்லியன் ஆடைத் தொழிலாளர்கள் ஒரு வாரத்திற்கு ஆறு மற்றும் ஏழு நாட்களாக கடுமையாக உழைக்கிறார்கள், பலர் மாதத்திற்கு 65 அமெரிக்க டொலர் என்ற ஆக குறைந்த வருமானத்தை பெறுகின்றனர். வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கிலான தனது "இந்தியாவில் உற்பத்தி செய்யும்" பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, மோடி, இந்தியாவின் தொழில்துறை ஊதியங்கள் சீனாவில் கொடுக்கப்படுவதில் கால் பகுதியை விட அதிகமானது அல்ல, என்று பெருமையடித்துக் கொண்டார்.
1990 களின் நடுப்பகுதியில் இருந்து, இந்திய பில்லியனர்களின் எண்ணிக்கையானது ஐம்பது மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது இரண்டு வீதம் முதல் நூறு சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. அத்துடன் உயர் மட்டத்தில் உள்ள 1 சதவிகிதத்தினர் சேகரித்துக்கொண்டுள்ள வருமானத்தின் பங்கு, 23 சதவீதம் வீங்கியுள்ளது.
எவ்வாறாயினும், தொழிலாள வர்க்கமானது சுரண்டலுக்கான ஒரு பகுயினர் மட்டும் அல்ல. தெற்காசியாவில் கோடிக்கணக்கான உழைப்பாளிகள், புதிய உலகளவில் இணைக்கப்பட்ட தொழில்துறையில் வேலை செய்வதுடன், அங்குள்ள பரந்த வெகுஜனங்கள் மத்தியில் சமூக எதிர்ப்பு பெருகி வருகின்றது.
சமீப மாதங்களில், இந்தியாவில் தமிழ்நாடு பேரூந்து சாரதிகள் மற்றும் ஆசிரியர்கள், வட இந்தியாவில் கிராமப்புற சுகாதார ஊழியர்கள், மற்றும் 1.5 மில்லியன் யுபர் மற்றும் ஓலா சாரதிகளும் மேற்கொண்ட வேலை நிறுத்தங்கள், அதே போல் மீனவர்கள், விவசாயிகள் மற்றும் தலித்துகளும் நடத்திய பெரிய போராட்டங்களும் உள்ளடங்களாக இந்தியாவில் வேலைநிறுத்த அலை தொடர்ந்தது.
இந்த வாரம் ஒரு எச்சரிக்கை கட்டுரையில் இந்திய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், சமூக அமைதியின்மையை கரைத்துவிட, மற்றும் தேவையெனில் நசுக்குவதற்கு "முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை" எடுக்க வேண்டும் என அரசாங்கத்தையும் மற்றும் அதன் வெளிப்படையான எதிர்ப்பாளர்களிடமும் வலியுறுத்தினார். நாராயணன் எழுதியதாவது: “நாட்டில் உள்ள நிலைமை மறு நம்பிக்கை அளிப்பதாக தோன்றவில்லை. ... எதிர்ப்புகள் மற்றும் கிளர்ச்சிகள் அவற்றுக்கே உரிய வாழ்வைக் கொண்டுள்ளதுடன் அவற்றின் திறனை குறைத்து மதிப்பிடுவதானது வருத்தத்திற்கு காரணமாக இருக்கலாம். எனவே, ‘கோபுரத்தின் ஊடாக கடந்து செல்லும் காற்று மலையில் எழுந்து கொண்டிருக்கும் புயலுக்கு கட்டியம் கூறும்’ என்ற பண்டைய சீன பழமொழிக்கு நாட்டின் தலைவர்கள் செவிசாய்ப்பது பெறுமதியானதாக இருக்கும்.”
இதே போல் இலங்கையிலும் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகளும் சிறிசேன-விக்கிரமசிங்க கூட்டணி அரசாங்கத்தால் அமுல்படுத்தப்படும் சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட கொடூரமான சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்துள்ளனர்.
முதலாளித்துவத்துக்கும் அதன் போர் செயற்பாட்டிற்கும் எதிரான போராட்டமும் எதிர் நடவடிக்கையும் எத்தகைய புறநிலை சக்தியை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்ற விடயத்தை வர்க்கப் போராட்டத்தின் எழுச்சி வெறுமையாக விட்டுள்ளது.
இந்த இயக்கத்தை, புரட்சிகர சோசலிச முன்னோக்கு, வேலைத்திட்டம் மற்றும் தலைமைத்துவத்தைக் கொண்டு அரசியல் ரீதியாக ஆயுதபாணியாக்க வேண்டியிருப்பதே மிகப் பெரிய பிரச்சினை ஆகும்.
தொழிலாள வர்க்கத்தை ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக அணிதிரட்டுவதற்கு, போலித்தனமான ஸ்தாபக இடது கட்சிகள், தொழிற்சங்க எந்திரங்கள் மற்றும் அவற்றின் போலி-இடது கூட்டாளிகளுக்கு எதிரான ஒரு இடைவிடாத போராட்டம் அவசியப்படுகின்றது.
இந்தியாவில் ஸ்ராலினிஸ்டுகள், தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துக்கு அடிபணியச் செய்வதற்கான அவர்களின் முயற்சிகளை இரட்டிப்பாக்குவதன் மூலமே தீவிரமடைந்து வரும் வர்க்கப் போராட்டதுக்கு பிரதிபலிக்கின்றனர். இந்த ஸ்ராலினிஸ்டுகள் பா.ஜ.க.க்கு எதிராக போராடுவதாக கூறிக்கொண்டு, இந்திய முதலாளித்துவத்தின் பாரம்பரிய ஆளும் கட்சியும் உலக மூலதனத்திற்காக இந்தியாவை மலிவு உழைப்பு களமாக ஆக்கவும் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் "பூகோள மூலோபாய பங்கான்மையை" ஏற்படுத்திக்கொள்ளும் அதன் உந்துதலில் முன்னணியில் இருக்கின்றதுமான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டுச் சேர்வதற்கான தமது தயார் நிலையை பிரகடனம் செய்துள்ளனர்.
தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள் மற்றும் முயற்சிகளை நோக்கிய ஸ்ராலினிஸ்டுகளின் மனோபாவம், சோடிக்கப்பட்ட கொலை குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மாருதி சுசூகி கார் தொழிற்சாலையின் 13 தொழிலாளர்களை முழுமையாக கைவிட்டதன் மூலம் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள முதலாளிமார், “மாருதி சுசூகியில் போர் செய்வதாக” தொழிலாளர்களை அச்சுறுத்தி வருகின்றனர். இது பொலிஸ், நீதிமன்றங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபனங்களும் இணைந்து, வறிய மட்டத்திலான ஊதியங்கள் மற்றும் கொடூரமான வேலை நிலைமைகள் சம்பந்தமாக எழும் எதிர்ப்புக்களை மூர்க்கத்தனமாக நசுக்குவதாகும். இருப்பினும், சிறை வைக்கப்பட்டுள்ள மாருதி சுசூகி தொழிலாளர்கள் தொழுநோயாளர்கள் போல் நடத்தும் ஸ்ராலினிஸ்டுகள், அவர்களது தலைவிதி மற்றும் போராட்டத்தை பற்றி குறிப்பிடுவதை தணிக்கை செய்துகொண்டுள்ளனர். அவர்களைப் பற்றி பேசினால், அது முதலாளிகளுடனும் காங்கிரஸ் கட்சியுடனும் தாம் கொண்டுள்ள வசதியான உறவுகளை சீர்குலைத்து விடும் என ஸ்ராலினிஸ்டுகள் அஞ்சுகின்றனர்.
இலங்கையில், போலி-இடதுகளின் பங்கு பெருங்கேடு விளைவிப்பதாகும். சீனாவிற்கு நெருக்கமானவராக கருதப்பட்ட ஒரு வலதுசாரி ஜனாதிபதியிடம் இருந்து விடுபடுவதற்காக, "பொது எதிர்ப்பை" ஒரு ஜனநாயக மாற்றீடாக வரவேற்று, மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் வாஷிங்டன் திட்டமிட்ட "ஆட்சி மாற்ற" நடவடிக்கைக்கு ஆதரவாக அவர்கள் அணிதிரண்டனர். இப்பொழுது அவர்களால் அதிகாரத்திற்கு கொண்டுவரப்பட்ட, சிக்கன நடவடிக்கை சார்பு, ஏகாதிபத்திய சார்பு அரசாங்கத்திற்கு எதிராக வெடிக்கும் வெகுஜனப் போராட்டங்களை தனிமைப்படுத்தவும் முட்டுச் சந்துக்குள் தள்ளவும் தம்மால் முடிந்த அனைத்தையும் அவர்கள் செய்கின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக, தொழிலாள வர்க்கம் தன்னை ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக உருவாக்கிக்கொண்டு, சமூக நெருக்கடிக்கு தனது சொந்த சோசலிச தீர்வை அபிவிருத்தி செய்துகொண்டு, தொழிலாளர்களின் அரசாங்கத்திற்கான போராட்டத்தில் தம் பின்னால் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களையும் அணிதிரட்டிக்கொள்வதை அவர்கள் தடுக்க முயல்கின்றனர்.
இந்த 2018 மே தின கூட்டத்தில், மாருதி சுசுகி வர்க்கப்-போர் கைதிகளின் விடுதலையை வெல்வதற்கான பிரச்சாரத்தை தீவிரப்படுத்துமாறு உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு வலியுறுத்துகிறது.
ஏகாதிபத்திய வன்முறை மற்றும் சகல நலன்கள் மற்றும் போரினதும் தோற்றுவாயான முதலாளித்துவத்திற்கு எதிரான, உலகத் தொழிலாள வர்க்க தலைமையிலான இயக்கத்தின் பாகமாக, தெற்காசியாவின் பிற்போக்கு எல்லைகளை கடந்து ஒரு போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்ப எம்முடன் இணையுமாறு தொழிலாளர்களையும் இளைஞர்களையும் நாம் கேட்டுக்கொள்கிறோம்.
முடிவாக, இன்று கூட்டத்தைக் கேட்டுக்கொண்டிருக்கும் அனைவரையும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் சேருமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் அடிப்படையில் ஒரே விதமான பிரச்சினைகளையும் மற்றும் எதிரிகளையும் எதிர்கொள்கின்றனர், மேலும் எல்லையிலும் கண்டங்களிலும் கடந்து விரிவடையும் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போருக்கும் எதிரான போராட்டங்களில் அவர்கள் ஈர்க்கப்படுவர். ஆனால் தொழிலாள வர்க்கத்தின் புறநிலை ஐக்கியமானது உலக சோசலிசப் புரட்சிக்கான ஒரு கட்சியை கட்டியெழுப்புவதில் நனவுபூர்வமான வெளிப்பாட்டைக் காண வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு அத்தகைய ஒரு கட்சி ஆகும்.