Print Version|Feedback
SEP and IYSSE demonstrate against Sri Lankan government’s May Day ban
இலங்கை அரசாங்கத்தின் மே தின தடைக்கு எதிராக சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. மறியல் போராட்டம் நடத்தின
By our correspondents
30 April 2018
சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் (ஐ.வை.எஸ்.எஸ்.இ) அமைப்பும் கடந்த வெள்ளியன்று பிற்பகல் கொழும்பில் உள்ள கோட்டை கோட்டை இரயில் நிலையத்திற்கு முன்பாக, சிறிசி-விக்கிரமசிங்க அரசாங்க மே தினத்துக்கு திணித்துள்ள தடைக்கு எதிராக மறியல் போராட்டம் ஒன்றை நடத்தின.
புனித பெளத்த பண்டிகையான "வெசக்" வாரத்தின் போது மே தின கொண்டாட்டங்கள் இடம்பெறுவதை விரும்பாத முன்னணி பெளத்த துறவிகளின் "வேண்டுகோளுக்கு" இணங்க செயற்படுவதாக கூறியே அரசாங்கம் மே தினத்தன்று கூட்டங்களை தடை செய்துள்ளது. மே 1 அன்று பொது விடுமுறையையும் அரசாங்கம் இரத்து செய்து, மே தினக் கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு மண்டப வசதிகளை கொடுக்க வேண்டாம் என்று கொழும்பு மாநகர சபைக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த திங்களன்று சோசலிச சமத்துவக் கட்சி, மே தினக் கூட்டத்திற்காக ஒதுக்கீடு செய்திருந்த கொழும்பு புதிய நகர மண்டபம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை சோ.ச.க.க்கு அறிவித்திருந்தது. சட்டத்தின் படி, சோ.ச.க. இந்த நிகழ்விற்கான பொலிஸ் அனுமதிக்கு விண்ணப்பித்து அதைப் பெற்றிருந்தது.
சோசலிச சமத்துவக் கட்சியின் மறியல் போராட்டத்தின் ஒரு பிரிவினர்
கிட்டத்தட்ட நூறு சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று அரசாங்க தடை மற்றும் ஏனைய ஜனநாயக விரோத தாக்குதல்களை கண்டனம் செய்தனர். இவர்களில் கணிசமானளவு யுத்தத்தால் சீரழிந்த யாழ்ப்பாண குடாநாட்டில் இருந்து வந்த தமிழ் பேசும் மக்களும் மத்திய மாகாணத்தில் பெருந்ததோட்டத் சேர்ந்த தொழிலாளர்களும் அடங்குவர்.
சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த ஆர்ப்பாட்டம், வேலை மற்றும் கற்கை முடித்து திரும்பிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தது. சோ.ச.க./ஐ.வை.எஸ்.எஸ்.இ. பிரச்சாரகர்கள் சோ.ச.க. அறிக்கையின் நூற்றுக்கணக்கான சிங்கள மற்றும் தமிழ் மொழி பிரதிகளை விநியோகித்தனர்: "இலங்கை அரசாங்கம் மே தினக் கொண்டாட்டங்களுக்கு விதித்துள்ள தடையை எதிர்த்திடுவோம்."
அரசாங்கத்தின் சமூக சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து கோஷங்களை எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள், சோசலிச மற்றும் சர்வதேசியவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தனர். இரயில் நிலையத்திற்கு ஒரு பொலிஸ் குழு அனுப்பப்பட்ட போதிலும், மே தின தடையினால் ஏற்கனவே கோபமடைந்துள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பரந்த எதிர்ப்பை தூண்டிவிடும் என்று அஞ்சி, ஆர்ப்பாட்டத்தை தடுக்க முயற்சிக்கவில்லை.
சிங்கள தினசரியான ரிவிர, தமிழ் நாளேடான விரேகேசரி ஆகியவற்றின் பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிக்க வந்திருந்தனர். சனிக்கிழமை, மற்றொரு தமிழ் நாளேடான தினக்குரல் மறியல் போரட்டம் பற்றியும் சோ.ச.க. மே தின கூட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது பற்றியும் ஒரு முதல் பக்க செய்தியை வெளியிட்டிருந்தது. இந்த நிகழ்வு முகநூலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதுடன் 60 பேர் வரை அதை அப்போதே பார்த்திருந்தனர். ஞாயிற்றுக்கிழமை, பல நூறு பேர் கருத்துக்களைப் பதிவு செய்திருந்தனர்.
சோ.ச.க. அரசியல் குழுவின் உறுப்பினர் மற்றும் உலக சோசலிச வலைத் தள தேசிய ஆசிரியர் கே. ரட்னாயக்க வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றினார். சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் எம். தேவராஜா அவரது உரையை தமிழில் மொழிபெயர்த்தார்.
கே. ரட்னாயக்க ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றுகிறார்
அரசாங்கத்தின் தடைகளை நிராகரித்த ரட்னாயக்க கூறியதாவது: "இந்த அரசாங்கத்துக்கு அல்லது முதலாளித்துவ ஆளும் வர்க்கத்துக்கு மற்றும் பௌத்த அமைப்புக்கோ மே தினத்தை மாற்றுவதற்கு அல்லது மே 1ம் திகதி கொண்டாட்டங்களை தடுக்க எந்த உரிமையும் கிடையாது. இது அவர்களுக்கு அப்பாற்பட்ட விடயம்."
அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு உண்மையான காரணம், அதன் சமூக சிக்கன நடவடிக்கைகளுக்கு பெருகி வரும் வெகுஜன எதிர்ப்பின் ஒரு "கிளர்ச்சியான வெளிப்பாடாக" மே தினம் ஆகலாம் என்ற அச்சமே என ரட்னாயக்க விளக்கினார். "இலங்கையில் ஆளும் வர்க்கமானது தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீன தலையீடு மற்றும் அரசியல் இயக்கத்தை பற்றி பீதியடைந்துள்ளது," என்று அவர் கூறினார்.
உலக முதலாளித்துவத்தின் வளர்ந்து வரும் நெருக்கடி, ஏகாதிபத்திய போர் மற்றும் எதிர் புரட்சிகர சமூக நடவடிக்கைகள் தீவிரமாவதோடு மட்டுமன்றி, சர்வதேச அளவில் தொழிலாள வர்க்க போராட்டங்கள் தலைதூக்குகின்ற ஒரு சூழ்நிலையிலேயே இந்த ஆண்டு மே தினம் வந்துள்ளது என ரட்னாயக்க ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தெரிவித்தார்.
"இலங்கையில் தொழிலாள வர்க்கமும் இளைஞர்களும்" இந்த மே தினத்தை "ஏகாதிபத்திய போரை எதிர்க்கவும், தமது சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் அழிக்கப்படுவதற்கான அவர்களின் சொந்த மூலோபாயம் எது என்பதை தெளிவுபடுத்திக்கொள்ள அர்ப்பணிக்க வேண்டும். இந்த மே தினத்தை தடை செய்வதன் மூலம் இந்த விளக்கத்தைப் பெறுவதை தடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறது."
முன்னணி சோசலிஸ்ட் கட்சி, ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி மற்றும் நவ சம சமாஜ கட்சி போன்ற பல்வேறு சந்தர்ப்பவாத அமைப்புகள் கூறுவது போன்று, ஏகாதிபத்திய சக்திகளுக்கும், இலங்கை மற்றும் இந்தியாவில் உள்ள அதன் விசுவாசிகளுக்கும் அற்ப வேண்டுகோள்கள் விடுப்பதன் மூலம் ஆளும் வர்க்கத்தின் தாக்குதல்களை தடுக்க முடியாது என்று அவர் எச்சரித்தார்.
"இலங்கையில் உள்ள தொழிலாள வர்க்கம் அதன் சர்வதேச வர்க்க சகோதர சகோதரிகளோடு ஐக்கியப்பட்டு, ஏகாதிபத்திய யுத்தத்திற்கும் சமூக உரிமைகளை அழிப்பதற்கும் எதிராக சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் எழுந்து நிற்க வேண்டும்."
சோசலிச சமத்துவக் கட்சியின் மறியல் போராட்டம்
மே 5 அன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச மே தின இணையவழி கூட்டத்திற்காக பதிவு செய்யுமாறு அனைத்து பங்கேற்பாளர்களையும் ஊக்குவித்த ரட்னாயக்க, புதிய நகர மண்டபத்துக்கு அருகே மே 1 அன்று 3 மணிக்கு மே தின தடைக்கு எதிராக சோ.ச.க. நடத்தும் மற்றொரு எதிர்ப்பு கூட்டத்திற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்து உரையை முடித்தார்.
ஹோமாகமவில் இருந்து வந்த பெயின்ட் பூசும் நிறுவன மேற்பார்வையாளர் ஷாசிக, வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் பங்கு பெற்றார். "தொழிலாளர்கள் தினம் மே தினமாக உள்ளது, எனவே இந்தத் தடை தொழிலாளர்கள் மீதான ஒரு பெரும் தாக்குதலாகும்," என அவர் உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறினார். "தற்போதைய பொருளாதார நிலைமைகளின் கீழ், தாக்குதல்களைத் தவிர தொழிலாள வர்க்கத்திற்கு கொடுப்பதற்கு ஆளும் வர்க்கத்திடம் எதுவும் கிடையாது.
"முதலாளித்துவ வர்க்கம் நம்மை அடிமைகள் போல் நடத்துகிறது. ஆனால் அந்த அடிமைகள் முதலாளித்துவ வர்க்கத்தை கீழே தள்ளி வெற்றிபெற முடியும். தொழிலாளர்களின் உழைப்பு மூலம், முதலாளித்துவவாதிகள் தங்களை மேலும் வளப்படுத்திக் கொள்கின்றனர். இந்த நாட்டிலும் உலகம் முழுவதிலும் தொழிலாள வர்க்கம் நிலைமைகளை அபிவிருத்தி செய்துகொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன், எனவே உங்கள் போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறேன், மற்றவர்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன்."