Print Version|Feedback
In act of state terror
Indian police kill 12 protesting industrial pollution in Tuticorin, Tamil Nadu
அரசு பயங்கரவாத நடவடிக்கையில்
இந்திய போலிஸ், தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் தொழில் சார்ந்த மாசுபடலை எதிர்த்த 12 பேரைக் கொன்றது
By Deeepal Jayaskera
24 May 2018
தாமிர உருக்காலைக்கு எதிரான மக்கள் எதிர்ப்பு மீது நடத்திய ஒரு காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறையில், குறைந்தபட்சம் 12 பேரை தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் போலிஸ் கொன்றுள்ளது. இந்த ஆலை தசாப்தங்களாக அப்பகுதியில் அபாயகரமான தொழிற்சாலை கழிவுகளைக் கலந்துவிட்டிருந்தது என்பதோடு, இவை எண்ணற்றவர்கள் உயிரிழப்பதற்கும் காரணமாகி இருந்தன.
நான்கு நபர்களுக்கு மேல் ஒன்றுகூடக்கூடாது என்று அரசாங்கம் தடை விதித்திருந்தது என்றாலும் அதை மீறி, 20,000 பேர் ஒன்றுகூடிய ஒரு கூட்டத்தை நோக்கி போலிஸ் துப்பாக்கி சூடு நடத்திய போது இரண்டு பெண்கள் உட்பட பத்து போராட்டக்காரர்கள் செவ்வாயன்று கொல்லப்பட்டனர், 60 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். அந்த உருக்காலை எதிர்ப்பார்கள் அரசின் செவ்வாய்கிழமை வன்முறையைக் கண்டித்து தூத்துக்குடி வீதிகளில் இறங்கிய போது, போலிஸ் மீண்டும் துப்பாக்கிச்சூட்டை நடத்தியது, அதில் இன்னும் ஒரு போராட்டக்காரர் கொல்லப்பட்டார்.
தமிழ்நாட்டின் மாநில அஇஅதிமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி இரத்தந்தோய்ந்த அந்த போலிஸ் ஒடுக்குமுறையை நியாயப்படுத்தி உள்ளார். பழனிச்சாமி இவ்வாறு அறிவித்தார்; “மக்களின் உயிரை மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க தவிர்க்கவியலாத சூழலில்,போலிஸ் நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது.”
இந்திய தேசிய அரசாங்கத்தில் மேலாளுமை கொண்ட இந்து மேலாதிக்கவாத கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் (பிஜேபி) தேசிய செயலாளர் எச். ராஜா, தூத்துக்குடி மக்களின் வாழ்க்கைக்கும் மற்றும் இந்தியாவின் பரந்த தென்கிழக்கு கடற்கரையைப் பகுதியை ஒட்டிய மீனவர்களின் வாழ்க்கைக்கும் நாசகரமாக விளங்கிய, அந்த ஆலையை மூடக் கோரிய மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை ஆமோதித்தார், அது ஒரு பெரும் கோடீஸ்வர இந்திய தொழிலதிபருக்குச் சொந்தமானது. அந்த போராட்டக்காரர்கள் "வன்முறைக்குத் திரும்பிய,” காரணத்தினால் போலிஸிற்கு "வேறு வழி இருக்கவில்லை,” என்று ராஜா கூறினார். அஇஅதிமுக அதிகாரப்பூர்வமாக பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பாகமாக இல்லையென்றாலும், அது பிஜேபி இன் ஒரு நெருங்கிய கூட்டாளியாக உள்ளது.
இந்த படுகொலைகள் இந்தியா எங்கிலும் மனக்குமுறலையும் கோபத்தையும் தூண்டியுள்ளன. மிகப் பெருமளவிலான சமூக கிளர்ச்சிக்குப் பயந்து, தமிழ்நாடு அரசாங்கம் தூத்துக்குடி மாவட்டத்திலும் (தூத்துக்குடி நகரம் அமைந்துள்ள மாவட்டம்), திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய அண்டை மாவட்டங்களிலும் ஐந்து நாட்களுக்கு மொத்தமாக இணைய சேவையை முடக்கி உள்ளது.
மாநில உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி இணையத்தை முடக்குமாறு சேவை வழங்குனர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், செவ்வாய்கிழமை " பிரதானமாக சமூக ஊடகங்கள் வழியாக தகவல் பகிர்ந்து கொள்ளப்பட்டதன் மூலமாகத் தான் மிகப் பெருமளவில் மக்களை ஒன்றுதிரண்ட முடிந்தது’ என்று குறிப்பிட்டார். “ஆத்திரமூட்டும் செய்திகளை" அனுப்புவதன் மூலமாக “சமூகவிரோதிகள்" இப்போதைய "நிலைமையைச் சாதகமாக்கிக் கொள்ள" முயன்று வருவதாக அவர் தெரிவித்தார்.
சென்னையை மையமாக கொண்ட இந்து பத்திரிகை செய்தியின்படி, “தமிழ்நாடெங்கிலும் உயர்மட்ட எச்சரிக்கை ஒலிக்கப்பட்டுள்ளது, அரசியல் கட்சிகள், மீனவர்கள் மற்றும் ஏனையோரால் மாநிலந்தழுவிய போராட்டங்களுக்குத் திட்டமிடப்பட்டுள்ள பின்புலத்தில், பொது போக்குவரத்து மீது தாக்குதல் நடத்தப்படலாம், ரயில்வே தண்டவாளங்கள் சேதப்படுத்தப்படலாம் என்று உளவுத்துறை அமைப்புகள் எச்சரிக்கை அளித்துள்ளன.”
இன்னும் கூடுதலாக அரசு வன்முறை தயார் செய்யப்பட்டு வருகின்றன என்பதையே இந்த "எச்சரிக்கைகள்" பலமாக எடுத்துக்காட்டுகின்றன. பிஜேபி மத்திய அரசாங்கம், அதன் பங்கிற்கு, துணை-இராணுவ மத்திய ரிசர்வ் போலிஸ் படையை, தமிழ்நாட்டில் குவிப்பதற்கான சாத்தியம் கருதி, தயாராக வைத்துள்ளது.
தமிழ்நாடு அரசாங்கமும் போலிஸூம், "வெளியிலிருந்து ஆத்திரமூட்டுபவர்கள்" மற்றும் "இடதுசாரிகள்" தான் போராட்டக்காரர்களை வெறியூட்டி தூண்டிவிடுகிறார்கள் என்று கூறி, செவ்வாய்கிழமை படுகொலை வன்முறைக்கு அவர்கள் மீது பழிபோட்டுள்ளது. உண்மையில், ஒவ்வொரு விடயமும், ஓர் இரத்தந்தோய்ந்த மோதலை வேண்டுமென்றே அதிகாரிகள் தான் தூண்டிவிட்டிருந்ததை எடுத்துக்காட்டுகின்றன.
தூத்துக்குடி தாமிர உருக்காலைக்கு சொந்தமான பன்னாட்டு பெருநிறுவனமான வேதாந்தா ரிசோசர்ஸ் தாக்கல் செய்த ஒரு புகாரின் கீழ் செயல்பட்டு, மெட்ராஸ் உயர்நீதிமன்ற நீதிபதி கடந்த வெள்ளியன்று அறிவிக்கையில், செவ்வாய்கிழமை போராட்டம்—அந்த உருக்காலையை நிரந்தரமாக மூடுவதற்கான போராட்டத்தின் 100 ஆம் நாளைக் குறித்த அன்றைய போராட்டம்—"சட்டம் ஒழுங்கு பிரச்சினையைத் தூண்டலாமென" அறிவித்தார். பின்னர் அவர், எதேச்சதிகார பிரிட்டிஷ் காலனித்துவத்தில் இயற்றப்பட்ட குற்றவியல் நடைமுறை தொகுப்புச் சட்டம் பிரிவு 144 ஐ பயன்படுத்தி அப்போராட்டத்தைச் சட்டத்திற்குப் புறம்பானதாக அறிவிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்கும் அளவுக்குச் சென்றார். அதை மாவட்ட ஆட்சியர் அப்படியே நிறைவேற்றினார்.
அஇஅதிமுக அரசாங்கம், செவ்வாய்கிழமை "சட்டவிரோத" போராட்டத்தை வன்முறையாக ஒடுக்கும் நோக்கத்துடன், தூத்துக்குடிக்கு வெளியிலிருந்து பாதுகாப்புப் படைகளை வரவழைத்து, 1,500 போலிசாரைத் திரட்டியது. திட்டத்தின்படி செயல்பட்ட, போலிஸ், நடைமுறையளவில் ஆரம்பத்திலிருந்தே, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதலில் இறங்கி, அவர்களை லத்திகள் (கைத்தடிகள்) கொண்டும் கண்ணீர் புகை குண்டுகள் கொண்டும் தாக்கியது. போராட்டக்காரர்கள் திரும்பி தள்ளியபோது, போலிஸ், அவர்களின் சொந்த "நிலையாணைகள் மற்றும் வழிமுறைகளை" மீறி, நிஜமான தோட்டக்களைப் பயன்படுத்தியது, அதுவும் உயிர்பறிக்கும் நோக்கத்துடன் எந்தவித எச்சரிக்கையும் வழங்காமல் அதைச் செய்தது.
மனித உரிமைகளுக்கான மக்கள் சங்கம் தலைவர், வி. சுரேஷ், போலிஸ் வேண்டுமென்றே போராட்டக்காரர்களைக் கொல்ல முனைந்ததைக் காட்டும் காணொளிகள் மற்றும் நேரில் பார்த்தவர்களின் சாட்சியங்களைச் சுட்டிக்காட்டினார். “போலிஸ் வாகனங்களின் மேலிருந்து,” குறிபார்த்து தொலைவிலிருந்து சுடும் போலிஸ்காரர்கள் "அவர்களைக் கொல்லும் நோக்கத்துடன், நேரடியாக பேரணியின் முன்னிலையில் இருந்தவர்களை" சுட்டனர் என்று சுரேஷ் நேற்று குற்றஞ்சாட்டினார்.
காயப்பட்டவர்களை மேலும் அவமதிக்கும் விதமாக, செவ்வாயன்று போலிஸ் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசாங்கம் இப்போது கேலிக்கூத்தான "நஷ்டஈடு" வழங்குகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 1 மில்லியன் ரூபாயும் (15,000 அமெரிக்க டாலருக்கும் குறைவாக), “கடுமையாக காயமடைந்தவர்களுக்கு" சுமார் 4,400 டாலரும், காயமடைந்த மற்றவர்களுக்கு 100,000 ரூபாய் அல்லது சுமார் 1,460 டாலரும் வழங்கப்படுமாம்.
அஇஅதிமுக அரசாங்கம் போலிஸ் நடவடிக்கைகளை உச்சபட்சமாக பாதுகாக்கின்ற அதேவேளையில், ஒரு நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் அந்த செவ்வாய்கிழமை சம்பவங்கள் குறித்து ஒரு போலி விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் ஏனைய அரசு எந்திரம் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தைப் போலவே, இந்திய நீதிமன்றங்களும், ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையிலிருந்து நச்சுக்கழிவுகளை வெளியேற்றுவதற்கு தசாப்தங்களாக, வேதாந்தா மற்றும் அதன் பல மடங்கு கோடீஸ்வர முதலாளியான அனில் அகர்வாலுக்கு பச்சைக்கொடி காட்டி வந்துள்ளன.
உள்ளூர் மக்கள், 1990 களின் மத்தியில் அது தொடங்கப்பட்டதில் இருந்தே அந்த ஸ்டெர்லைட் உருக்காலையின் மோசமான சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து உரக்க புகார் அளித்து வந்துள்ளனர், என்றாலும் அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் எதிர்ப்பு சுவரை மட்டுமே முகங்கொடுக்க வேண்டியிருந்தது..
உண்மையில், இந்திய அதிகாரிகள் அந்த உருக்காலையின் உற்பத்தித்திறனை ஆண்டுக்கு 400,000 டன்னில் இருந்து 800,000 டன்களாக இரட்டிப்பாக்கும் வேதாந்தாவின் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.
அந்த உருக்காலையிலிருந்து வெளியேற்றப்படும் நச்சார்ந்த ஆர்சனிக் இரசாயனம், ஈயம், சல்பர் டைஆக்சைடு, இதர பிற வெளியேற்றங்கள் உள்ளூர் நிலத்தடி நீரை விஷமாக்கி இருப்பதுடன், இந்த உருக்காலையின் மிக அருகிலுள்ள பகுதிகளில் சுவாச நோய்களைப் பெருமளவில் அதிகரித்திருந்தது, மேலும் தென்கிழக்கு தமிழ்நாட்டு கடலோரங்களில் முத்துக் குளித்தல் மற்றும் மீன்பிடிப்பு தொழில்களின் மீது நாசகரமான தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தன.
மிகப்பெரும் சான்றுகளை ஏளனமாக நிராகரித்து, வேதாந்தாவும் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களும் இந்த உருக்காலையால் எந்த சுற்றுச்சூழல் பாதிப்பும் இல்லை என்று வலியுறுத்தி உள்ளன. ஆனால் அந்த உருக்காலையைச் சுற்றி 5 கிலோமீட்டருக்குள் வாழும் 80,000 க்கும் அதிகமானவர்களிடம் செய்யப்பட்ட 2008 ஆய்வு ஒன்று, “இரசாயன வாயு இருப்பதாலும், இரசாயன வாயுக்கள் மற்றும் நுண்துகள்கள் கலந்திருப்பதாலும்" அவர்களில் 13.9 சதவீதத்தினர் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டிருந்ததாக கண்டறிந்தது.
ஸ்டெர்லைட் உருக்காலையின் சல்பர் டைஆக்சைடு வெளியேற்றங்கள் வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச சுற்றுச்சூழல் விதிமுறைகளை விஞ்சி அதிகளவில் அதிகரித்திருந்ததை எடுத்துக்காட்டிய பின்னர், 1996, 1999 மற்றும் 2013 இல், ஸ்டெர்லைட் உருக்காலையை மூட உத்தரவிடப்பட்டது. ஒவ்வொரு முறையும், அதிகாரிகள் மீண்டும் உற்பத்தியை விரைவாக தொடங்க வேதாந்தாவுக்கு இரகசியமாக உடந்தையாய் இருந்தார்கள்.
உற்பத்தியை நிறுத்தி வைக்குமாறு ஒரு கீழ் நீதிமன்றம் வழங்கியிருந்த உத்தரவை இந்தியாவின் உச்சநீதிமன்றம் 2013 இல் தள்ளுபடி செய்து, அதற்கு பதிலாக ஸ்டெர்லைட்டை 1 பில்லியன் ரூபாய், அல்லது சுமார் 15 மில்லியன் அமெரிக்க டாலரை குறைந்தபட்ச அபராதமாக செலுத்துமாறு உத்தரவிட்டது.
மலிவு கூலிகள் மற்றும் இந்தியாவின் தளர்வான மற்றும் பெரிதும் நடைமுறைப்படுத்தப்படாமல் கிடக்கும் சுற்றுச்சூழல் விதிமுறைகள் காரணமாக, ஸ்டெர்லைட் ஆலை உலகின் மிகவும் இலாபகரமான தாமிர உருக்காலைகளில் ஒன்றாக கூறப்படுகிறது.
ஸ்டெர்லைட் உருக்காலைக்கு எதிரான கிளர்ச்சியானது, பூகோள அளவில் இணைக்கப்பட்ட இந்தியாவின் புதிய வாகனத்துறை மற்றும் பிற தொழில்துறை தொழிலாளர்கள், நகர்புற மற்றும் கிராமப்புற ஏழைகள், மாணவ இளைஞர்களை உள்ளடக்கிய, இந்தியா எங்கிலும் அதிகரித்து வரும் சமூக போராட்டங்கள் அலையின் பாகமாகும்.
இந்திய உயரடுக்கு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் மேற்கத்திய ஊடகங்கள் இந்தியாவின் "வளர்ச்சி" குறித்து பீற்றிக் கொள்கின்ற அதேவேளையில், இந்நாட்டின் 1.3 பில்லியன் மக்களில் மிகப் பெரும்பான்மையினர் 2 டாலர் அல்லது அதற்கும் குறைவான தொகையில் உயிர் வாழ விடப்பட்டுள்ளனர். ஒரு கால்நூற்றாண்டு "சந்தை-சார்பு" சீர்திருத்தம் இந்தியாவை உலகின் மிகவும் சமத்துவமற்ற மற்றும் சமூகரீதியில் துருவமுனைப்பட்ட சமூகங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது. இந்திய மக்களில் உயர்மட்ட 1 சதவீதத்தினர் மொத்த வருவாயில் ஏறத்தாழ ஒரு கால்பகுதியைக் கையகப்படுத்தி, நாட்டின் மொத்த செல்வ வளத்தில் 60 சதவீதத்தை உடைமையாக கொண்டுள்ளனர்.
ஆனால் இந்தியாவின் முதலாளித்துவ உயரடுக்கு, உலகெங்கிலும் உள்ள அதன் சமதரப்பினரைப் போலவே அடிமட்டத்திலிருந்து எழும் எதிர்ப்பு மற்றும் அதன் சொந்த அமைப்புமுறையின் அதிகரித்த நிலைகுலைவைக் கண்டும் நடுங்கி பீதியுறுகிறது, அது சந்தை, இலாபங்கள் மற்றும் புவிசார்அரசியல் ஆதாயங்களுக்காக முன்பை விட அதிக வெறியோடு மற்றும் வன்முறையான போராட்டத்திற்கு எரியூட்டுகிறது.
தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக இன்னும் அதிக மோதல்தன்மையிலான கொள்கையைப் பின்பற்றவும் மற்றும் அதன் வல்லரசு அபிலாஷைகளை இன்னும் ஆக்ரோஷமாக வலியுறுத்தவும், அது, நான்காண்டுகளுக்கு முன்னர் இந்து "பலசாலி" நரேந்திர மோடி தலைமையில், பிஜேபி அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டு வந்தது.
சுற்றுச்சூழல் நெறிமுறைகளைக் குறைப்பது உட்பட முதலீட்டாளர் சார்பு சீர்திருத்தங்களை முடுக்கிவிட்ட மோடி அரசாங்கம், ஒரு புதிய "காலவரம்பு-வேலைவாய்ப்பு" வகையை அறிமுகம் செய்தது, இதன்படி முதலாளிகள் எந்தவித இழப்பீடும் வழங்காமல் அவர்கள் விருப்பம் போல் தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்க முடியும். இந்த அரசாங்கம் நடைமுறையளவில் இந்தியாவைச் சீனாவுக்கு எதிரான அமெரிக்க இராணுவ-மூலோபாய தாக்குதலில் ஒரு முன்னிலை அரசாக மாற்றியுள்ளதுடன், அதன் அதிதீவிர வலதுசாரி திட்டநிரலுக்கு எதிரான தொழிலாள வர்க்க எதிர்ப்பைப் பிளவுபடுத்தி பலவீனப்படுத்தும் முயற்சியில் திட்டமிட்டு இந்து வகுப்புவாதத்தை ஊக்குவிக்கிறது.
இம்மாத தொடக்கத்தில், முன்னாள் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோகசர் எம். கே. நாராயணன், அபிவிருத்தி அடைந்து வரும் ஒரு சமூக எதிர்ப்பு "புயல்" குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தினார். “போராட்டங்களும் கிளர்ச்சிகளும் அவற்றின் சொந்த வாழ்வைக் கொண்டுள்ளன,” என்று எழுதிய நாராயணன், “அவற்றின் ஆற்றலை குறைமதிப்பீடு செய்தால் வருத்தப்பட வேண்டியிருக்கும்,” என்றார்.
இந்த அதிகரித்து வரும் எதிர்ப்பு, மோடி அரசாங்கம் மற்றும் இந்திய முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு தொழிலாள வர்க்க அரசியல் சவாலாக வடிவமெடுப்பதிலிருந்து எது தடுக்கிறது என்றால், ஸ்ராலினிச நாடாளுமன்ற கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் பின்பற்றும் துரோகத்தனமான கொள்கைகளாகும். தசாப்தங்களாக ஸ்ராலினிசவாதிகள் இந்த அரசியல் ஸ்தாபகத்தின் பாகமாக செயல்பட்டு, திட்டமிட்டு வர்க்க போராட்டத்தை ஒடுக்கி வந்துள்ளனர். முதலாளித்துவ வர்க்கம் பிஜேபி மற்றும் பிற்போக்குத்தனத்தை அரவணைத்ததற்கு அவர்கள் இன்னும் கூடுதலாக வலதுக்கு நகர்ந்ததன் மூலமாகவும், கடந்த கால் நூற்றாண்டாக நவ-தாராளவாத சீர்திருத்தம் மற்றும் வாஷிங்டன் உடனான இந்தியாவின் "பூகோள மூலோபாய பங்காண்மையை" முன்னெடுத்த இந்திய முதலாளித்துவத்தின் பாரம்பரிய அரசாங்க கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்ததன் மூலமாகவும் விடையிறுத்தனர்.
ஸ்ராலினிசவாதிகள், தூத்துக்குடி சம்பவங்களுக்கு விடையிறுப்பாக, காங்கிரஸ் கட்சி, அதன் பிராந்திய கூட்டாளியான திமுக மற்றும் இதர வலதுசாரி முதலாளித்துவ கட்சிகளுடன் சேர்ந்து கூட்டு போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர், இந்த கட்சிகள்தான் தென்கிழக்கு தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதார தொழில்களை அழிக்கும் அதேவேளையில் வேதாந்தா ஒரு பெரும் செல்வ வளத்தைக் குவிக்க அனுமதிப்பதற்கு உடந்தையாக இருந்தன.