ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

යාපනයේ පැවති ජනතා විමුක්ති පෙරමුනේ අපකීර්තිමත් මැයි දින රැස්වීම

இலங்கையில் யாழ்ப்பாணத்தில் ஜே.வி.பி. மோசடியான மே தின கூட்டத்தை நடத்தியது

A comment by Subash Somachandran and S. Jayanth
15 May 2018

சிங்கள இனவாத மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), மே 1 அன்று வடக்கில் யாழ்ப்பாண நகரில் மே தின கூட்டத்தை நடத்தியது. இலங்கை தெற்கில் மே தின கூட்டங்களை நடத்த அரசாங்கம் விதித்த தடையை ஏற்றுக்கொண்டு ஜே.வி.பி. கூட்டத்தை யாழ்ப்பாணத்துக்கு மாற்றியது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம், மே தினமானது வெசாக் கொண்டாட்ட வாரத்தில் வந்திருப்பதனால் "புனித பௌத்த மத குருமார்களின் ஆலோசனையின் பேரில்" மே 1 அன்று நடத்தவுள்ள மே தின பேரணிகளை ஒத்தி வைக்க முடிவு எடுத்ததாக அறிவித்தது. அரசாங்கம் எதேச்சதிகாரமான முறையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) உட்பட ஏனைய கட்சிகள் மே தின கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களை நடத்த முன்பதிவு செய்திருந்த இடங்களை இரத்து செய்தது. இந்த தடைக்கான உண்மையான காரணம், கொழும்பில் தொழிலாளர்கள் ஒன்று கூடி வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதலுக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளதையிட்டு அரசாங்கம் அச்சமடைந்துள்ளதே ஆகும்.

அரசாங்கத்தின் முடிக்கு ஜே.வி.பி. தலை வணங்கியதுடன், பெளத்த பிக்குகளின் கோரிக்கையை மதிப்பதாக கூறியது. அதன்படி, கட்சி மே தினத்தை யாழ்ப்பாணத்தில் நடத்த முடிவு எடுத்துள்ளதாக அறிவித்தது.

யாழ்ப்பாணத்தில் ஒரு கூட்டத்தை நடத்துவதன் மூலம், ஜே.வி.பி. தமிழ் மக்கள் மத்தியில் ஒரு ஆதரவைத் திரட்டும் ஒரு நிகழ்வாக இந்தக் கூட்டத்தை பயன்படுத்திக்கொள்ள அவநம்பிக்கையுடன் முனைந்துள்ளது. கூட்டத்தை பெரிதாக்குவதற்காக, நூற்றுக்கணக்கான மக்கள் தெற்கிலிருந்து பஸ்களில் அழைத்து வரப்பட்டனர். ஒரு சிறிய தமிழ் வகுப்புவாத அமைப்பான அகில இலங்கையின் சிறுபான்மை தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் கமலானநாதன், தமிழில் உரையாற்றினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், யாழ்ப்பாணத்தில் ஜே.வி.பி. தலைவர்களுடன் சிவப்பு சட்டை அணிந்து பேரணியில் சென்றார். ஜே.வி.பி.யின் தமிழர்-விரோத இனவாதம் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தத்துக்கு அது ஆதவளித்ததனால் தமிழர்கள் மத்தியில் அது அவப்பேறு பெற்றுள்ளது. இந்த நிலையிலேயே இந்த அமெரிக்க சார்பு தமிழ் முதலாளித்துவக் கூட்டமைப்பு, ஜே.வி.பி.க்கு நற்சான்று கொடுத்துள்ளது. சலுகைகளைப் பெற்றுக்கொள்வதற்கான அதன் கோரிக்கைகளுக்கு ஆதரவை பெறுவதன் பேரில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்விதமான கருவியுடனும் சந்தர்ப்பவாத உறவை வளர்த்துக்கொள்ள தயாராக இருக்கின்றது. எவ்வாறாயினும், ஜே.வி.பி. தமிழ் செல்வந்த தட்டிற்கு எந்தவொரு அதிகாரப் பகிர்வுக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகளுக்கும் எதிராக உள்ளது.

இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) (சிபிஎம்) ஆசீர்வாதத்தை ஜே.வி.பி. பெற்றது. ஜே.வி.பி கூட்டத்தில் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக சி.பி.எம். தமிழ்நாடு தலைவர் ஏ. சவுந்தர்ராஜன் வந்திருந்தார். இந்த வளையும் ஸ்ராலினிசக் கட்சி, தொழிலாள வர்க்க போராட்டங்களை காட்டிக்கொடுப்பதிலும், காங்கிரஸ் கட்சி உட்பட முதலாளித்துவ அமைப்புக்களுடன் அணிசேர்வதிலும் இந்திய ஆளும் வர்க்கத்தின் தேசிய நலன் அடிப்படையில் ஒரு கொள்கையை கடைபிடிப்பதிலும் பேர்போனது.

ஜே.வி.பி. தலைவர் அனுர குமார திசாநாயக்க, "அனைத்து தொழிலாளர்களும் வேறுபாடு இன்றி அடக்கப்படுவதனால், ஒடுக்குமுறைக்கும் அநீதிக்கும் எதிராக போராட" வடக்கில் உள்ள மக்களை ஐக்கியப்படுமாறு அழைப்புவிடுத்தார். போரைப் பற்றி குறிப்பிட்டு அவர் மேலும் கூறியதாவது: "கணவர்கள் மனைவிமார்களை இழந்துள்ளனர். மனைவிமார் தங்கள் கணவன்மார்களை இழந்துள்ளார்கள். அவர்கள் வீடுகளையும் நிலங்களையும் இழந்து வாழ்கின்றனர். வியாபாரம் அழிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கை எத்தியோப்பியாவை ஒத்ததாக இருக்கிறது." திசாநாயக்க முதலைக் கண்ணீர் வடிப்பதைத் தொடர்ந்தார்: "வடக்கில் வாழ்ந்த மக்கள் 30 ஆண்டுகளாக பயங்கரமான போரை எதிர்கொண்டனர். யாரிடம் இருந்து குண்டுகள் விழவில்லை. இராணுவம், இந்திய இராணுவம் மற்றும் தமிழ் ஆயுதக் குழுக்களின் குண்டுகள் விழுந்தன. இராணுவம், இந்திய இராணுவம் மற்றும் தமிழ் ஆயுதக் குழுக்களை எதிர்கொண்டு அனைவரும் பீதியுடன் வாழ்ந்தனர்.”

என்ன பாசாங்குத்தனம்! திஸ்ஸநாயக்கவும் ஜே.வி.பி.யும் மக்கள் மறதி நோயில் இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆளும் வர்க்கம் மற்றும் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் போன்று ஜே.வி.பி,யும் தமிழர்கள் அனுபவித்த பேரழிவிற்கு பொறுப்பாகும். இந்த கட்சி போலி யுத்த நிறுத்தத்தைக் கூட ஈழவாதிகளுக்கு சலுகைகள் கொடுப்பதாக கூறி எதிர்த்தது.

1983 ஜூலை இல் தொடங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை அதன் முடிவுவரை ஜே.வி.பி. ஆதரித்தது. இந்த இனவாத அரசியலில் மூழ்கிப் போயுள்ளதுடன், 2005ல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ ஆட்சிக்கு வர உதவிய பின்னர் 2006ல் இருந்து நேரடியாக போரில் பங்குக்கொண்டது. ஜே.வி.பி., யுத்தநிறுத்த உடன்படிக்கையை இரத்துச் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் இராஜபக்ஷவை ஆதரித்தது. இது யுத்தத்தை மீண்டும் தொடங்குவதை அர்த்தப்படுத்தியது. இராஜபக்ஷ, வடக்கு மற்றும் கிழக்கில் திட்டமிட்ட இராணுவ மற்றும் இனவாத ஆத்திரமூட்டல்களை தூண்டி, 2006 ஜூலையில் போரைத் தொடங்கினார்.

யுத்தத்திற்கான பிரச்சாரத்தை நியாயப்படுத்த ஜே.வி.பி. முன்னணியில் இருந்தது. அதன் ரெட் ஸ்டார் பிரிகேட் என்று அழைக்கப்படும் படை, வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ நிலைகளை பலப்படுத்துவதற்காக பதுங்கு குழிகளை உருவாக்க உதவியது. சிங்களவர்கள் மத்தியில் போரை விமர்சித்த பகுதியினர் “சிங்களப் புலிகள்” என்று முத்திரை குத்தப்பட்டதுடன் அவர்களை கைது செய்ய இராணுவத்துக்கும் பொலிசுக்கும் ஜே.வி.பி. உதவியது.

புலிகளை தோற்கடித்த பின்னர், கிட்டத்தட்ட 300,000 மக்கள் இராணுவத்தால் நடத்தப்பட்ட, முட்கம்பி வேலிகளால் சூழப்பட்ட, சிறை போன்ற நலன்புரி முகாம்களில் அடைக்கப்பட்டிருந்தனர். புலிகளின் சந்தேக நபர்களாக கைதுசெய்யப்பட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களும் யுவதிகளும் கைதுசெய்யப்பட்டு பல வருடங்களாக சித்திரவதை செய்யப்பட்டனர். பாதுகாப்பு படையினரால் கடத்திச் செல்லப்பட்ட, இராணுவத்திடம் சரண்டைந்த நூற்றுக்கணக்கானவர்கள் இன்னமும் காணாமல்போயுள்ளனர் அல்லது சடலங்களாக கண்டெடுக்கப்பட்டனர். ஜே.வி.பி. தலைவர்கள் அந்த முகாம்களை பார்வையிட சென்று இந்த சிறைச்சாலை அவசியம் என்று அறிவித்தனர்.

தமிழர்கள் மீதான இந்திய இராணுவத்தின் தாக்குதல்கள் பற்றிய திசாநாயக்கவின் விமர்சனம் முற்றிலும் போலியானது. விடுதலைப் புலிகளை நிராயுதபாணிகளாக்குவதற்காக வடக்கு மற்றும் கிழக்கில் இந்திய துருப்புக்களை நிலைநிறுத்துவதற்கு இந்திய-இலங்கை உடன்படிக்கையை கையெழுத்திட கொழும்பு அரசாங்கத்தை புது டில்லி கட்டாயப்படுத்தியது. மாகாண சபைகளை அமைப்பதன் மூலம் தமிழ் உயரடுக்கிற்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரத்தை வழங்குவதற்கும் உடன்படிக்கையில் உடன்பாடு காணப்பட்டது. கொழும்பு ஆட்சியின் ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதோடு இலங்கை தமிழர்களுடன் இன உறவு கொண்ட தமிழ்நாட்டு மக்களின் அனுதாபமான எதிர்ப்புக்களை தடுப்பதும் இதன் நோக்கம் இருந்தது.

தொழிலாளர்களுக்கும் அரசியல் எதிர்ப்பாளர்களுக்கும் எதிராக பாசிசக் கலவரங்களை கட்டவிழ்த்து விட்டு தமிழர்-விரோத இந்திய-விரோத அடிப்படையில் இந்த ஒப்பந்தத்தை ஜே.வி.பி. எதிர்த்தது. கிராமப்புற ஏழைகள் மீது மிருகத்தனமான இராணுவ பொலிஸ் தாக்குதலை கட்டவிழ்த்துவிட இதை கொழும்பு அரசாங்கம் பயன்படுத்திக்கொண்டது. இதில் குறைந்தபட்சம் 60,000 பேர் கொல்லப்பட்டனர். மறுபக்கம் இந்திய இராணுவம் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களைக் கொன்று ஒரு ஈவிரக்கமற்ற அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டது.

அவரது உரையின் முடிவில் திசாநாயக்க ஒரு பொய்யான ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க முயன்றார்: "ஒரு அரசியல் கட்சி என்ற வகையில், நாங்கள் தவறுகளை ஏற்றுக்கொள்கிறோம். ஜே.வி.பி. ஏதாவது தவறு செய்திருந்தால், அது தனிப்பட்டது அல்ல, அவை மக்களுக்காக செய்யப்பட்டவை[!]. அது பற்றி தவறான கருத்துக்கள் இருக்கலாம். நாம் அதை பற்றி பேசுவோம்,"

என்ன ஒரு வசதியான ஒப்புதல் வாக்குமூலம் முறை! தமிழ் மற்றும் சிங்கள சாதாரண மக்கள் அவர்களது தவறு என்று அழைக்கப்படுபவதற்கு இரத்தத்தை விலையாக கொடுத்தனர். இந்த கட்சியின் இனவாத மற்றும் தொழிலாள வர்க்க விரோத சாதனைகள் இங்கே பட்டியலிட முடியாதளவு நீண்டது.

இவை தவறுகள் அல்ல. அவை இந்தக் கட்சியின் தோற்றத்தில் இருந்தே அதன் அரசியல் பாதையில் இருந்து தோன்றியவை. 1960ல் ஆரம்பித்த இந்தக் கட்சி, ஸ்ராலினிசம் மற்றும் காஸ்ட்ரோவாதத்தை சிங்கள தேசப்பற்றுவாதத்துடன் சேர்த்த கலவையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அது அதன் கொள்கையின் “ஐந்தாவது பிரிவில்”, தமிழ் தோட்டத் தொழிலாளர்களை சலுகை படைத்தவர்கள் என்றும் இந்திய விஸ்தரிப்புவாதத்தின் ஒரு பகுதி என்றும் முத்திரை குத்தியது. அது தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் பாரபட்சத்தையும் பிளவுகளையும் ஏற்படுத்துவதற்காக இலங்கை ஆளும் கும்பலின் பிரதான ஆயுதமான தமிழர்-விரோத இனவாதத்தை அரவனைத்துக்கொண்டுள்ளது.

கடந்த ஐந்து தசாப்தங்களில், குறிப்பாக முதலாளித்துவத்தின் கீழான பூகோளமயமாக்கத்தில் இருந்தும், தமிழர் விரோத போர் தூண்டப்பட்டதில் இருந்தும், இந்தக் கட்சி துரிதமாக முதலாளித்துவ ஸ்தாபனத்தின் ஒரு கட்சியாக மாற்றம்பெற்று, அமெரிக்கா உட்பட ஏகாதிபத்திய சக்திகளுடன் உறவுகளைப் பேணி வருகின்றது.