Print Version|Feedback
Israel marks 70th anniversary amid war crimes and deepening social crisis
போர்க் குற்றங்கள் மற்றும் ஆழமடையும் சமூக நெருக்கடியின் மத்தியில் இஸ்ரேல் 70வது ஆண்டுதினத்தை அனுசரிக்கிறது
Bill Van Auken
14 May 2018
முதல் உலகப் போரின் போது ஒட்டோமான் சாம்ராஜ்ஜியத்தின் தோல்வியைத் தொடர்ந்து நிறுவப்பட்ட பிரிட்டிஷ் ஆணையின் முடிவுடன், பாலஸ்தீனத்தில் ஒரு யூத அரசை ஸ்தாபிப்பதற்கான அறிவிப்பின் 70 வது ஆண்டு தினத்தை இஸ்ரேல் இன்று கொண்டாடுகிறது.
இந்த ஆண்டில், இந்த ஆண்டுதினமானது காஸா எல்லையில் பாலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்கள் இஸ்ரேலியத் துருப்புகளால் சுடப்படுவதன் மூலமும் ஈரானுக்கு எதிராக போர்க் காய்ச்சல் தூண்டிவிடப்படுவதன் மூலமும் குறிக்கப்படுவதாக இருக்கிறது.
இந்த ஆண்டுதினமானது, ஜெருசலேமில் ட்ரம்ப் நிர்வாகத்தினால் உத்தரவிடப்பட்டிருக்கும் சர்வதேச சட்ட மீறலான ஒரு புதிய அமெரிக்கத் தூதரகத்தின் உத்தியோகபூர்வ திறப்பின் மூலம், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையிலான “சமாதான முன்னெடுப்புகள்” என்பதாகச் சொல்லப்பட்டதற்கும் “இரண்டு-அரசு தீர்வு” குறித்த பிரமைக்கும் சவப்பெட்டி மீது அடித்த கடைசி ஆணியாக ஆகியிருக்கிறது.
ஆறு வாரத்திற்கும் அதிகமான காலத்தில் ஆயிரக்கணக்கிலான பாலஸ்தீனியர்கள், “மாபெரும் திரும்பல் பேரணி” என்று அறிவிக்கப்பட்டிருக்கிற ஒன்றின்படி ஆர்ப்பாட்டம் செய்து வந்திருக்கக் கூடிய, பெருமளவில் இராணுவமயப்பட்டதான காஸாவின் பாதுகாப்பு எல்லையில் இன்னுமொரு சுற்று இரத்தக்களரிக்கான சந்தர்ப்பமாகவும் இது ஆகவிருக்கிறது. இந்தக் காலத்தின் போது, நிராயுதபாணியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராய் கொல்வதற்காக சுடுவதற்கான உத்தரவுகள் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், சுமார் 50 ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர், பல ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். திங்களன்று, இஸ்ரேலியப் படைகள் மேலும் ஒரு 37 ஆர்ப்பாட்டக்காரர்களைக் கொலை செய்தனர், 500 க்கும் அதிகமானோரைக் காயமாக்கினர்.
இந்த ஆர்ப்பாட்டங்கள், இஸ்ரேல் அரசின் மூலங்கள் மற்றும் அவற்றின் வரலாற்றுப் பின்விளைவுகளுடன் பிணைந்தவையாகும். 70 ஆண்டுகளுக்கு முன்பாக பாலஸ்தீன மக்கள் நக்பா (Naqba) அல்லது பெருந்துயரம் என்று குறிப்பிடுகின்ற ஒன்றின்போது அவர்கள் வெளியேற்றப்பட்டிருந்த அவர்களது வீடுகள் மற்றும் கிராமங்களுக்குத் திரும்புவதற்கு உரிமை கொண்டுள்ளதை ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரி வருகின்றனர். இனம் மற்றும் மதத்தின் அடிப்படையில் ஒரு யூத அரசை உருவாக்கும் பொருட்டு வடிவமைக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான “இனச் சுத்திகரிப்பு” நடவடிக்கையில், பயங்கரம் மற்றும் அச்சுறுத்தலின் ஒரு திட்டமிட்ட பிரச்சாரத்தின் மூலமாக சுமார் கால் மில்லியன் பாலஸ்தீனியர்கள் அவர்களது மண்ணில் இருந்து விரட்டப்பட்டனர்.
தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றியது மற்றும் பெரும் உலக சக்திகளுக்கும் ஈரானுக்கும் இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தது ஆகிய வாஷிங்டனின் இரண்டு நடவடிக்கைகளுமே பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவின் வலது-சாரி இஸ்ரேல் அரசாங்கத்தால் பாராட்டப்பட்டு வருகிறது. பாலஸ்தீன மக்கள் மீது வன்மையான ஒடுக்குமுறையை இரட்டிப்பாக்குவதற்கும் மற்றும் பிராந்தியமெங்கிலுமான பேரழிவுகரமான ஒரு பற்றவைப்பாக உருமாறக் கூடிய ஈரானுடனான ஒரு மோதலை தூண்டுகின்ற நோக்கத்துடன் சிரியா மீது இராணுவத் தாக்குதல்களைத் தொடுப்பதற்கும் பச்சைக் கொடி காட்டுவதற்கு நிகரான ஒன்றை அவர்கள் இந்த ஆட்சிக்கு வழங்கியிருக்கின்றனர்.
இஸ்ரேலின் சமூகத்திற்குள்ளாக பெருகி வரும் தீவிரமான சமூகப் பதட்டங்களை வெளிநோக்கித் திருப்பிவிடுவதற்கும், அத்துடன் நெத்தனியாகு தொடக்கம் கீழ்மட்டம் வரைக்கும் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் சம்பந்தப்பட்டிருக்கின்ற வரிசையான ஊழல் மோசடிகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்குமான ஒரு வழிமுறையாக இஸ்ரேலின் ஆட்சியாளர்கள் திட்டமிட்டு போர்க் காய்ச்சலை விசிறி விட்டுக் கொண்டிருக்கின்றனர்.
தூதரக இடமாற்ற நடவடிக்கை அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் அதிகாரிகளால் குற்றவியல்தனமாகக் கொண்டாடப்படுவது, மற்றும் காஸா-இஸ்ரேல் எல்லையில் படுகொலையின் புதியதொரு சுற்று ஆகிய இன்று கட்டவிழ்கின்ற நிகழ்வுகளைக் கொண்டு பார்த்தால், இஸ்ரேலின் மூலங்களுடனும் வளர்ச்சியுடனும் பிணைந்ததும், இருபதாம் நூற்றாண்டில் தொழிலாள வர்க்கத்தின் தலைவிதியுடனும் புரட்சிகரத் தலைமைக்கான வரலாற்று நெருக்கடியுடனும் பிரிக்கவியலாமல் பிணைந்திருந்ததுமான மாபெரும் உலக வரலாற்றுப் பிரச்சினைகள் மீது மிகக் குறைந்த கவனமே கொடுக்கப்படுவதாக இருக்கிறது.
1998 இல், இஸ்ரேல் அரசு ஸ்தாபிக்கப்பட்ட 50 வது ஆண்டின் போது, உலக சோசலிச வலைத் தளம் இந்த அத்தியாவசியமான வரலாற்றுக் கேள்விகளை சுட்டிக்காட்டியது:
“இஸ்ரேலின் பிறப்பு மற்றும் பரிணாம வளர்ச்சிக்குள்ளாக, இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் தீர்க்கப்படாத முரண்பாடுகள் குவிந்திருக்கின்றன. அதன் அடிப்படையான மூலங்கள், வரலாற்றில் மனிதகுலத்திற்கு எதிரான மாபெரும் குற்றங்களில் ஒன்றான, நாஜி யூதப்படுகொலையில் அமைந்திருக்கின்றன. ஆறு மில்லியன் ஐரோப்பிய யூதர்களது அழித்தொழிப்பானது, சோவியத் ஒன்றியத்தின் மற்றும் கம்யூனிச அகிலத்தின் ஸ்ராலினிசச் சீரழிவால் கொண்டுவரப்பட்டிருந்த தொழிலாள வர்க்க இயக்க நெருக்கடிக்கு கொடுக்கப்பட்ட படுபயங்கரமான விலையாக இருந்தது. ஸ்ராலினிசத்தின் குற்றங்களும் தொழிலாளர் இயக்கத்தின் மீதான அதன் மேலாதிக்கமும், தனது கடைசி அடுக்கு பாதுகாப்பை பாசிசத்தில் கண்ட நெருக்கடி-முற்றிய முதலாளித்துவ அமைப்புமுறைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதில் இருந்து தொழிலாள வர்க்கத்தைத் தடுத்து விட்டது.
“தொழிலாள வர்க்கத்தின் தோல்விகளும், ஸ்ராலினிசத்தின் குற்றங்களும் மற்றும் யூதப்படுகொலையின் பெருங்குழப்பத்தின் கொடூரங்களும் இஸ்ரேலின் உருவாக்கத்திற்கும், அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் ஸ்ராலினிசம் இரண்டின் உதவியுடனும் நடந்த சியோனிசத்தை (Zionism) உலக யூதத்துடன் (world Jewry) அடையாளம் காணுகின்றதான சியோனிச இயக்கத்தின் பெருமளவுக்கு வெற்றிகரமான முயற்சிக்குமான வரலாற்று நிலைமைகளை உருவாக்கின. இறுதியாக இது மனச்சோர்வு மற்றும் திக்கற்ற நிலை ஆகியவற்றின் மீது ஸ்தாபிக்கப்பட்ட ஒரு இயக்கமாகவும் அரசாகவும் இருந்தது. ஸ்ராலினிசத்தின் குற்றங்கள், சோசலிச மாற்றீட்டிற்கு மிகவும் சக்திவாய்ந்த வகையில் ஈர்க்கப்பட்டிருந்த சர்வதேச யூத தொழிலாள வர்க்கத்தை ஏமாற்றின. ஐரோப்பாவில் அல்லது வேறெங்கிலும் யூத-விரோதத்தை (anti-Semitism) வெல்வது சாத்தியமில்லாதது என்பதற்கான இறுதிச் சான்றாக ஜேர்மன் பாசிசத்தின் குற்றங்கள் முன்வைக்கப்பட்டன. ஒரு அரசையும் இராணுவத்தையும் பெற்று, யூத மக்களை வரலாற்றுப் பாதையில் ஒடுக்கியிருந்தவர்களை அவர்களது சொந்த முறையில் தோற்கடிப்பதே சியோனிசத்தின் (Zionism) பதிலாய் இருந்தது.
“பாரம்பரிய வழியிலும் வரலாற்று வழியிலும் சகிப்புத்தன்மை மற்றும் சுதந்திரத்துக்கான போராட்டத்துடன் இணைப்புக் கொண்டிருந்த யூத மக்களை, இன்னொரு ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான கொடூரமான ஒடுக்குமுறையுடன் இஸ்ரேல் தொடர்புபடுத்தியதுதான், தீர்வாக சொல்லப்படும் இதன் துயரகரமான நகைமுரணாக இருக்கிறது.”
உலக சோசலிச வலைத் தளம் 1998 அறிக்கையை வெளியிட்டதற்குப் பிந்தைய 20 ஆண்டுகளில், இஸ்ரேலிய சமூகத்திற்குள்ளான தீங்கான முரண்பாடுகள் ஆழமடைய மட்டுமே செய்திருக்கின்றன. மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலேம் மற்றும் சிரியாவின் கோலன் குன்றுகள் (Golan Heights) ஆகிய 1967 போருக்குப் பின்னர் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலான சட்டவிரோத சியோனிச குடியேற்றங்களிலான வசிப்பவர் எண்ணிக்கை 160,000 இல் இருந்து 600,000க்கு அதிகரித்திருக்கிறது.
இஸ்ரேல் காஸா பகுதியில் இருந்து தனது துருப்புகளையும் குடியமர்த்தல்களையும் திரும்பப்பெற்ற அதேசமயத்தில், அது இன்னும் கூட ஒரு ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியமாகவே, எல்லைகள், வான் பகுதி மற்றும் கடல்பகுதி விடயத்தில் டெல் அவிவ் அதன் நேரடிக் கட்டுப்பாட்டை செலுத்துகின்ற கிட்டத்தட்ட திறந்தநிலை சிறைச்சாலையாகவே தொடர்ந்தும் இருந்து வருகிறது, அதேநேரத்தில் தோராயமாய் கொங்கோவின் அளவுக்கே சராசரி வருமானம் கொண்ட ஒரு பிராந்தியத்தில் பாரிய வேலைவாய்ப்பின்மை மற்றும் வறுமையின் நிலைமைகளை அது கட்டளையிட்டுக் கொண்டிருக்கிறது. பிராந்தியத்திற்கு எதிராக IDF தொடர்ச்சியாக நடத்தி வந்திருக்கின்ற போர்கள் அடிப்படை உள்கட்டமைப்பை சீரழித்திருக்கிற அதேநேரத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களைக் காவு வாங்கியிருக்கிறது. இந்த கிட்டத்தட்ட இனப்படுகொலையை ஒத்த பிரச்சாரமானது காஸா எல்லையிலான ஆர்ப்பாட்டக்காரர்களின் படுகொலையுடன் இன்று வரை தொடர்ந்து வருகிறது.
பாலஸ்தீன அதிகாரத்தின் -இது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கான துணை போலிஸ் படையாக செயலாற்றி வந்திருக்கிறது, ஊழலடைந்த PLO அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்களது ஒரு மெல்லிய அடுக்கு மட்டுமே தன்னை வளப்படுத்திக் கொண்டிருக்கிறது- சுமாரான ஆட்சியின் கீழ் மேற்குக் கரையில் 2000 ஆம் ஆண்டு முதலாக உண்மையான ஊதியங்கள் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வந்திருக்கின்றன.
OECD (பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைப்பு) இன் சமூகரீதியாக மிகவும் சமத்துவமின்மை கொண்ட உறுப்பு நாடாகவும் இதில் அமெரிக்காவுக்கு மட்டுமே அடுத்ததாகவும் இருக்கின்ற இஸ்ரேலுக்கு உள்ளாகவும் —வறுமை விகிதம் 22 சதவீதமாக, இஸ்ரேலிய பாலஸ்தீனியர்களில் 55 சதவீதமாகவும் நாட்டின் சிறுவர்களில் மூன்றில் ஒரு பங்காகவும் இருக்கிறது— வர்க்கப் பதட்டங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன.
எய்லாத், ஹைஃபா மற்றும் ஆஷ்தோத் ஆகிய துறைமுகங்களை மூடியதற்குப் பின்னர் இஸ்ரேலின் துறைமுகத் தொழிலாளர்கள் நீதிமன்றத்தின் வேலைக்குத் திரும்பக் கூறும் உத்தரவைத் தொடர்ந்து தமது மூன்றுநாள் வேலைநிறுத்தம் ஒன்றை ஞாயிறன்று முடித்துக் கொண்டனர். சென்ற டிசம்பர் மாதத்தில் பொதுமருந்து பெருநிறுவனமான Teva தனது தொழிலாளர்களில் கால்வாசிப் பேரை வேலையிழப்புக்கு ஆளாக்க முடிவெடுத்ததற்கு எதிராக தேசிய அளவிலான ஒரு வேலைநிறுத்தம் நடந்தது, ஜெருசலேமின் நகராட்சித் தொழிலாளர்கள் பாரிய வேலையிழப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் ஊதியம் கிடைக்காமை ஆகியவை தொடர்பாக ஜனவரியில் ஒரு வேலைப்புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினர், குப்பை வண்டிகளை நாடாளுமன்றத்திற்கு (Knesset) வரவிடாமல் முடக்கினர்.
இஸ்ரேலிய அரசு ஸ்தாபிக்கப்பட்ட எழுபது ஆண்டுகளின் பின்னர், இஸ்ரேல் எங்கிலும் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிராந்தியங்களிலும் தொழிலாள வர்க்கத்தின் எந்தப் பிரிவு முகம்கொடுக்கின்ற பிரச்சினைகளுக்கும் எந்த தேசியரீதியான தீர்வும் கிடையாது என்பது முன்னெப்போதினும் இப்போது தெளிவாய் இருக்கிறது. ஒரு சோசலிச மற்றும் சர்வதேசியவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில் பிராந்தியமெங்கிலும் யூத மற்றும் அரபுத் தொழிலாளர்கள் ஐக்கியப்படுத்தப்படுவது மட்டுமே இன்றைய இரத்தக்களரியான மற்றும் அபாயம் அதிகரித்துச் செல்கின்ற முட்டுக்கட்டையான நிலையில் இருந்து வெளிவருவதற்கான ஒரு வழியை வழங்கக் கூடியதாகும்.
ஆசியர் பரிந்துரைக்கும் கட்டுரை :
Israel’s crisis and the historic contradictions of Zionism
[16 May 2008]