Print Version|Feedback
Washington and Tel Aviv lurching toward a war with Iran
வாஷிங்டனும் டெல் அவிவ்வும், ஈரானுடன் போரை நோக்கி செல்கின்றன
Bill Van Auken
2 May 2018
அமெரிக்க ஏகாதிபத்தியம்—மத்திய கிழக்கில் அதன் பிரதான கூட்டாளியான இஸ்ரேலுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட்டு ஈரானுடன் நேரடியான ஓர் இராணுவ மோதல் போக்கில் சென்று கொண்டிருப்பதை கடந்த சில நாட்களின் சம்பவங்கள் தெளிவுப்படுத்துகின்றன.
2015 ஈரானிய அணு உடன்படிக்கையின் பாகமாக வழங்கப்பட்ட ஒருதலைபட்சமான அமெரிக்க தடையாணைகளின் விட்டுக்கொடுப்புகளை ட்ரம்ப் நிர்வாகம் புதுப்பிக்குமா இல்லையா என்பதன் மீது அவர் முடிவெடுத்து அறிவிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு மே 12 இறுதிநாளுக்கு வெறும் ஒன்றரை வாரங்களே இருக்கையில், இஸ்ரேலிய பிரதம மந்திரி பென்ஜமின் நெத்தனியாகு ஈரானின் அணுத்திட்டம் மீது "ஈரான் பொய்யுரைத்து" இருப்பதற்கு "ஆதாரம்" இருப்பதாக கூறி, ஓர் போலி விளக்க காட்சியை நடத்தினார். ட்ரம்ப் "சரியானதை செய்வார்,” அதாவது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, சீனா மற்றும் ரஷ்யா ஆகியவற்றுக்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்ட அணுசக்தி ஒப்பந்தமான விரிவான கூட்டு நடவடிக்கை திட்டம் அல்லது JCPOA என்பதை கலைத்து விடுவார் என்பதில் அவர் நம்பிக்கை வெளியிடும் அளவுக்கு சென்றார்.
நெத்தனியாகுவின் போலி விளக்கவுரை அந்த அணுசக்தி ஒப்பந்தத்தை “படுமோசமான உடன்படிக்கை” என்று அவர் கண்டிப்பதில் அவர் "100 சதவீதம் சரியாக" இருப்பதற்கான உறுதிப்படுத்தலே என்று ட்ரம்ப் பாராட்டினார்.
யதார்த்தத்தில், சர்வதேச அணுசக்தி வல்லுனர்களும், ஐரோப்பிய பிரதிநிதிகளும் மற்றும் முன்னாள்-இஸ்ரேலிய உளவுத்துறை அதிகாரிகளே கூட நெத்தனியாகுவின் விளக்கத்தை ஒரு கேலிக்கூத்து என்று நிராகரித்தனர். ஈரானில் இருந்து நூறாயிரக் கணக்கான கோப்புகளைக் களவாடி இருப்பதாக கூறிக்கொள்ளும் இஸ்ரேலிய அரசாங்கம், கடந்த 15 ஆண்டுகளில் எந்த வடிவத்தில் ஈரான் அணுஆயுத திட்டத்தில் ஈடுபட்டிருந்தது என்பதற்கோ, குறைந்தபட்சம் அது கூட்டு நடவடிக்கை திட்டத்தின் நிபந்தனைகளை மீறியதற்கோ ஒரேயொரு ஆதார துணுக்கைக் கூட முன்வைக்கவில்லை. மிக சமீபத்தில் பெப்ரவரியில் வந்த ஓர் அறிக்கை உள்ளடங்கலாக சர்வதேச அணுசக்தி ஆணையத்தின் தொடர்ச்சியான அறிக்கைகள், யுரேனியம் செறிவூட்டல் மீதான கடுமையான கட்டுப்பாடுகளுக்கும், அந்த உடன்படிக்கையின் கீழ் திணிக்கப்பட்ட ஊடுருவிய சோதனை முறைகளுக்கும் தெஹ்ரான் கட்டுப்பட்டு இருந்துள்ளதை நிறுவிக் காட்டியுள்ளன.
நெத்தனியாகுவின் நடவடிக்கை 2003 இல் கொலின் பாவெலின் விளக்கவுரையை தவிர வேறைதையும் நினைவூட்டவில்லை, அதில் அவர், ஒரு மாதத்திற்கு பின்னர் ஈராக்கிற்கு எதிராக தொடங்கப்பட இருந்த அமெரிக்க ஆக்கிரமிப்பு போரை நியாயப்படுத்த, ஈராக்கில் இருந்திராத "பேரழிவுகரமான ஆயுதங்கள்" பயன்படுத்தப்பட்டதற்கு "அனுமானங்கள் அல்ல, ஆதாரங்கள்" இருப்பதாக விவரித்தார். ஈராக்கிய தவறான நடவடிக்கைகள் குறித்த அமெரிக்க பொய் வாதங்களுக்கு ஆதாரம் காட்டுவதற்காக பாவெல் குறைந்தபட்சம் பொய்களையாவது கூறினார்; ஆனால் நெத்தனியாகு எதையும் முன்வைக்கவில்லை.
ஆங்கிலத்தில் வழங்கப்பட்ட இஸ்ரேலிய விளக்கவுரை, ட்ரம்புடன் நேரடியாக கலந்தாலோசிக்கப்பட்ட நாடகபாணியிலான அரங்கேற்றமாக இருந்தது. அது ஒளிபரப்பாவதற்கு சற்று முன்னர் தான் நெத்தனியாகு ட்ரம்புடனும், ஒரு நாளைக்கு முன்னர் அவரையும் பிற அதிகாரிகளையும் டெல் அவிவ்வில் சந்தித்து வந்திருந்த புதிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோவுடனும் பேசியிருந்தார்.
ட்ரம்ப் நிர்வாகத்தின் அனைத்து குழப்பங்கள் மற்றும் மோசடிகளுக்குப் பின்புலத்தில், வாஷிங்டனில் தெளிவாக என்ன உருவெடுத்துள்ளது என்றால், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு ஜோன் போல்டன் மேலுயர்த்தப்பட்டமை மற்றும் ஜனநாயகக் கட்சியினரின் இன்றியமையா ஆதரவுடன் செனட்டால் வெளியுறவுத்துறை செயலராக பொம்பியோ பதவி உறுதிப்படுத்தப்பட்டமை ஆகியவற்றுடன் சேர்ந்து, ஒரு போருக்கான மந்திரிசபை உருவெடுத்துள்ளது. இவர்கள் இருவருமே ஈரானுக்கு எதிரான போருக்கு ஆக்ரோஷமாக வக்காலத்து வாங்குபவர்கள்.
ஈரான் உடனான 2015 அணுசக்தி உடன்படிக்கையை ஒரு "மிகப்பெரிய மூலோபாய மடைத்தனமாக" போல்டன் வர்ணித்துள்ளார். அடுத்த பெப்ரவரியில் "ஈரானின் 1979 இஸ்லாமிய புரட்சியின் நாற்பதாம் ஆண்டு நினைவுதினத்திற்கு முன்னதாக அதை முடிவுக்கு கொண்டு வரும்" ஒன்றாக அமெரிக்க கொள்கை இருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார். அந்த புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் கருத்துப்படி, தெஹ்ரானில் ஆட்சி மாற்றம் நேரடியான இராணுவ நடவடிக்கை மூலமாக நடத்தப்பட்டதாக இருக்க வேண்டுமாம். “ஈரான் குண்டுவீசுவதை நிறுத்த, ஈரான் மீது குண்டுவீசுங்கள்,” என்பது தான் JCPOA உடன்படிக்கை எட்டப்படுவதற்கு சற்று முன்னதாக அவர் நியூ யோர்க் டைம்ஸில் எழுதிய ஒரு கருத்துரையின் தலைப்பாக இருந்தது.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய போர் ஏற்கனவே தொடங்கிவிட்டது. ஞாயிறன்று இரவு சிரிய இராணுவ தளங்கள் மீது அமெரிக்காவினால் வினியோகிக்கப்பட்ட இஸ்ரேலிய F-15 போர்விமானங்களால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஏறக்குறைய டஜன் கணக்கான ஈரானியர்களைக் கொன்றது. அது செப்டம்பருக்குப் பின்னர் இருந்து சிரியா மீது நடத்தப்பட்ட இதுபோன்ற ஐந்தாவது சுற்று இஸ்ரேலிய தாக்குதல்களைக் குறித்தன. அவை அனைத்துமே ஈரானின் உடைமைகளைக் குறி வைத்திருந்தன. ஆட்சி மாற்றத்திற்கான ஏழாண்டு கால பழைய போரில் வாஷிங்டனும் அதன் கூட்டாளிகளும் கவிழ்த்த முனைந்து வருகின்ற அசாத் அரசாங்கத்திற்கு, ரஷ்யாவுடன் சேர்ந்து, தெஹ்ரான் முக்கிய கூட்டாளியாகும்.
இஸ்ரேலில் இருந்து வரும் செய்திகளும் கூட சிரியா மற்றும் லெபனானை ஒட்டியுள்ள அந்நாட்டின் வடக்கு எல்லைகளில் டாங்கிகளும், துருப்புகளும் மற்றும் கவசந்தரித்த இராணுவ சிப்பாய்களும் மிகப் பெரியளவில் மறுநிலைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பதாக சுட்டிக் காட்டுகின்றன.
“உலகத்திலேயே நேரடியான விரோதம் நிலவும் சாத்தியக்கூறுகள் உள்ள பட்டியலில், சிரியாவில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான சண்டையே இப்போதைக்கு முதலிடத்தில் உள்ளது,” என்று செவ்வாயன்று ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி NBC செய்திகளுக்குத் தெரிவித்தார்.
இதுபோன்றவொரு போருக்கு தயாரிப்பு செய்வதில் வாஷிங்டன் மற்றும் டெல் அவிவ் க்கு இடையிலான நெருங்கிய கூட்டுறவு, அவ்விரு நாடுகளின் தலைநகரங்களுக்கு இடையே சென்று வந்து கொண்டிருக்கும் உயர்மட்ட அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இராணுவ பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு இடையிலான பல்வேறு அசாதாரண சந்திப்புகளால் வெட்டவெளிச்சமாகின்றன. இதை குறைநிரப்புவதைப் போல, வெளியுறவுத்துறையில் கால் பதிப்பதற்கு முன்னரே பொம்பியோ மத்திய கிழக்குக்கு அனுப்பப்பட்டார், அங்கே அவர் நெத்தனியாகு மற்றும் அவர் அதிகாரிகளுடன் மட்டும் கலந்தாலோசிக்கவில்லை, மாறாக பிற்போக்குத்தனமான முடியாட்சி அரபு ஆட்சிகளின் ஓர் அணியை அமெரிக்க-இஸ்ரேலிய போர் முனைவுக்கு பின்னால் உறுதிப்படுத்தி வைக்கும் ஒரு முயற்சியில் சவூதி மற்றும் ஜோர்டான் அதிகாரிகளையும் சந்தித்து வந்தார்.
இந்த போர் முனைவுக்குப் பின்னால் ஈரானிய அணுசக்தி அச்சுறுத்தல் மீதான கவலை என்று கூறப்படுவதெல்லாம் ஒன்றும் இல்லை. தெஹ்ரானிடம் அணுகுண்டுகளே இல்லை என்பதோடு, அது அதுபோன்றவொன்றை தயாரிக்க ஒருபோதும் எந்த திட்டத்தையும் தொடங்கி இருக்கவும் இல்லை, அதேவேளையில் இஸ்ரேலோ மதிப்பிடப்பட்ட 200 இல் இருந்து 400 அணுஆயுத குண்டுகள் உள்ளடங்கலாக அதன் சொந்த ஆயுத தளவாடங்களைக் கொண்டுள்ளது. அதற்கு பதிலாக, அங்கே வெளிப்படையாக இருப்பது அப்பட்டமான ஏகாதிபத்திய நலன்களாகும்.
ஒரு பிராந்திய சக்தியாக, ஈரான் எண்ணெய் வளம் மிக்க மற்றும் மூலோபாயரீதியில் முக்கியமான மத்திய கிழக்கில் அதன் மேலாதிக்கத்தை வலியுறுத்த அமெரிக்க ஏகாதிபத்திய முனைவுக்கு ஒரு தடையாக நிற்கிறது.
ஐரோப்பிய சக்திகள் அதிகரித்தளவில் வாஷிங்டனுடன் முரண்படுகின்றன. பிரான்சின் மக்ரோன் மற்றும் ஜேர்மனியின் மேர்க்கெலின் பணிவுகள் இருந்தாலும், ஈரானிய அணு உடன்படிக்கையை முறித்துக் கொள்ளாமல் இருக்க ட்ரம்ப் நிர்வாகத்தை இணங்குவிப்பதில் அவர்களின் விஜயங்கள் வெளிப்படையாகவே தோல்வியடைந்த பின்னர், இவ்வாரயிறுதியில் அவர்களுக்கும் பிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரேசா மே க்கும் இடையிலான விவாதங்கள், அமெரிக்கா இல்லாமல் அந்த உடன்படிக்கையைக் காப்பாற்றி வைப்பதற்கு ஏதேனும் சாத்தியக்கூறு இருக்கிறதா இல்லையா என்பதில் வெளிப்படையாகவே மையமிட்டிருந்தன. ஒரு மிகப்பெரிய பிராந்திய போரானது, ஐரோப்பாவுக்குள் வன்முறை, அரசியல் நெருக்கடி மற்றும் புதுப்பிக்கப்பட்ட அகதிகள் வருகையின் வடிவில் அங்கே பரவும் என்ற அச்சமும், அத்துடன் பணயத்தில் இருக்கும் தீர்க்கமான இலாப நலன்களும் இரண்டுமே அங்கே காணப்படுகின்றன.
அமெரிக்க வங்கிகளும் பெருநிறுவனங்களும் அணுசக்தி சாராத அமெரிக்க பொருளாதார தடையாணைகளைத் தொடர்ந்ததால் ஈரானிய சந்தையில் அவற்றிற்கு பெரிதும் கதவடைக்கப்பட்டுள்ள நிலையில், பிரெஞ்சு எண்ணெய் பெருநிறுவனம் டோட்டல் உட்பட ஐரோப்பிய நலன்கள் ஆதாயமான உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டுள்ளன. இருப்பினும் அந்நிறுவனங்களில் பெரும்பாலானவை, வாஷிங்டன் அந்த அணுசக்தி ஒப்பந்தத்தைப் புரட்டி போட்டுவிட்டு, ஈரானில் வணிகம் செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தடைவிதிக்க தொடங்குமோ என்ற அச்சங்களால், இதுவரையில் குறைவாகவே உற்பத்தி செய்துள்ளன.
சீனா இந்த வெற்றிடத்தை நிரப்பி, மின்னாலைகள், அணைகள் மற்றும் போக்குவரத்து மையங்கள் உட்பட உள்கட்டமைப்பு திட்டங்களைத் தொடங்க சீன நிறுவனங்களுக்கு பெய்ஜிங் அரசு வழங்கிய 10 பில்லியன் டாலர் சமீபத்திய கடன் வசதி உள்ளடங்கலாக, ஈரானுடன் சீனா கணிசமானளவுக்கு பொருளாதார உறவுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. சீனாவை ஐரோப்பாவுடன் இணைப்பதற்கு, பெய்ஜிங் அதன் "இணைப்பு பாதை" பெருந்திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாக ஈரானைப் பார்க்கிறது, மேலும் வாஷிங்டனுடன் அணி சேர்ந்துள்ள சவூதி அரேபியா போன்ற பிராந்திய எண்ணெய் உற்பத்தியாளர்களிடம் இருந்து அதன் எண்ணெய் இறக்குமதிகளின் பங்குகளை அதிகரித்தளவில் கைமாற்றுவதிலும் ஆர்வமுடன் உள்ளது. 2016 இல், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் ஈரானிய ஜனாதிபதி ஹசான் ருஹானியும் அடுத்த தசாப்தத்திற்குள் இருதரப்பு வர்த்தகத்தை 600 பில்லியன் டாலராக அதிகரிக்க திட்டங்களை அறிவித்தனர்.
ஏனைய இடங்களில் போலவே, ஈரானிலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் பொருளாதார மேலாதிக்க வீழ்ச்சியை இராணுவ ஆக்கிரமிப்புக்குத் திரும்புவதன் மூலமாக எதிர்கொள்ள முனைகிறது. ஐரோப்பிய முதலாளித்துவ சக்திகள் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளில் இணைந்துள்ளனர் என்றாலும், குறிப்பாக சிரியா மீதான ஏப்ரல் 14 ஏவுகணை தாக்குதலில் பிரிட்டனும் பிரான்சும் பங்கெடுத்திருந்தன என்றாலும், அமெரிக்க நாயின் வாலாக சேவையாற்றுவதன் மூலமாக ஏகாதிபத்திய தலையீட்டு கொள்ளையிலிருந்து அவர்களுக்கான ஒரு பங்கை அறுவடை செய்யும் நம்பிக்கைகளைக் கைவரப்பெற முடியாது. தவிர்க்கவியலாமல் அவை அனைத்தும் உலகின் மறுபங்கீட்டிற்காக ஒருவருக்கு எதிராக ஒருவரின் போராட்டத்தில் தங்களின் சொந்த மீள்ஆயுதமயதாதலுக்கு திரும்ப வேண்டியிருக்கும். இந்த நிகழ்ச்சிப்போக்கு ஏற்கனவே சிறப்பாக முன்னேறி வருகிறது.
வர்த்தகப் போர் தீர்வைகளை நடைமுறைப்படுத்துவதைத் தள்ளிப்போட்டு ஐரோப்பாவைச் சாந்தப்படுத்த வாஷிங்டன் முனைந்துள்ளது என்பதைப் பொறுத்த வரையில், மற்றும் கொரிய தீபகற்ப பதட்டங்களைத் தற்காலிகமாக அது குறைத்துள்ளது என்பதைப் பொறுத்த வரையில், அது மத்திய கிழக்கில் போர் தயாரிப்புகளுக்கு சிறப்பாக ஒருமுனைப்பட வேண்டியுள்ளது என்பதால் ஆகும்.
சிரியாவில் தொடங்கியுள்ள, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான ஒரு போர் முனைவு, அந்நாட்டில் தொடர்ந்து கொண்டிருக்கும் அமெரிக்க இராணுவ தலையீட்டுடன் கைகோர்த்து கட்டவிழ்ந்து வருகிறது, இது ஈரான் மற்றும் ரஷ்யாவால் ஆதரிக்கப்பட்ட அரசு-சார்பிலான படைகளுடன் ஒரு மோதலுக்குள் பரிணமித்து வருகிறது.
பாதுகாப்புத்துறை செயலர் ஜெனரல் ஜேம்ஸ் மாட்டீஸ் திங்களன்று கூறுகையில், தற்போது சிரியாவினுள் நிலைநிறுத்தப்பட்டுள்ள 2,000 க்கும் அதிகமான அமெரிக்க துருப்புகள் விரைவிலோ எந்நேரத்திலோ வேறெங்கும் செல்லப் போவதில்லை என்பதை சுட்டிக்காட்டினார். “இராஜாங்க அதிகாரிகள் அமைதியை சாதிக்கும் வரையில் நாங்கள் அவர்களை வெளியேற்ற விரும்பவில்லை,” என்றார். “நீங்கள் சண்டையில் வெல்லுங்கள்—பின்னர் சமாதானத்தில் வெல்லுங்கள்.”
சிரிய குர்திஷ் YPG போராளிகள் குழுவை அடிப்படையாக கொண்ட பினாமி தரைப்படைகளைப் பெருக செய்துள்ள அமெரிக்க இராணுவப் படைகள், துருக்கி மற்றும் ஈராக்கை ஒட்டிய சிரியாவின் வடக்கு எல்லையில் அண்மித்து மூன்றில் ஒரு பங்கு பகுதிகளை உள்ளடக்கி அமெரிக்க செல்வாக்கு மண்டலத்தைப் பாதுகாப்பதற்காக நிறுத்தப்பட்டுள்ளன. அப்பகுதியில் தான் அந்நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் நிறைந்துள்ளன. ISIS ஐ எதிர்த்து போராடும் நடவடிக்கை என்று கூறப்பட்டதில் இருந்து, இப்போது இந்த அமெரிக்க படைகள் இப்பகுதியிலும் அதன் ஆதாரவளங்கள் மீதும் கட்டுப்பாட்டை மீளப்பெறுவதற்காக, ரஷ்யா மற்றும் ஈரானால் ஆதரிக்கப்பட்ட சிரிய அரசாங்கத்தின் முயற்சிகளை எதிர்ப்பதை நோக்கி திரும்பி வருகின்றன.
சிரியாவுக்கு அதிநவீன வான்வழி பாதுகாப்பு அமைப்புகளை வழங்குவதன் மீது ரஷ்யாவும் டமாஸ்கஸ் உடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்ற நிலையில், ரஷ்ய படைகளுக்கும் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் இடையே ஒரு மோதலுக்கான சாத்தியக்கூறு ஒரே சீராக அதிகரித்து வருகிறது.
சிரியாவில் நடந்து வரும் அபிவிருத்திகளும் மற்றும் ஈரானுடன் மோதலுக்கான அச்சுறுத்தல்களும் அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உழைக்கும் மக்களுக்கு ஒரு பாரிய ஆபத்தான எச்சரிக்கையாகும். உலக முதலாளித்துவம், அதன் அமைப்புமுறையின் நெருக்கடியால் உந்தப்பட்டு, அமெரிக்க ஆளும் வர்க்கம் மற்றும் அதன் இராணுவம் முன்னிலையில் நிற்க, அணுஆயுதங்களைக் கொண்டு சண்டையிடக் கூடிய ஒரு உலக போருக்கு தயாரிப்பு செய்து வருகிறது.