Print Version|Feedback
India’s BJP government creates new category of workers who can be fired at will
விரும்பியபடி பணிநீக்கம் செய்யக்கூடிய புதிய வகை தொழிலாளர்களை இந்தியாவின் பிஜேபி அரசாங்கம் உருவாக்குகிறது
By Kranti Kumara
16 May 2018
இந்தியாவின் பெருவணிக சார்பு கொண்ட இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சி (BJP) அரசாங்கம் அனைத்து பொருளாதார துறைகளிலும் “குறிப்பிட்ட-கால வேலைவாய்ப்பு” என்பதை சமீபத்தில் விரிவுபடுத்தியது, இது முதலாளிகள் விரும்பியபடி தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய வகை செய்யும் ஒரு ஒப்பந்த-வேலை வடிவமாகும்.
இதுவரை, “குறிப்பிட்ட-கால வேலைவாய்ப்பு” என்பது நெசவுத் தொழிலுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த “குறிப்பிட்ட-கால” பணி நியமனத்தின் கீழ், இந்திய வணிகங்கள் “நிரந்தரமில்லா” அடிப்படையில் தொழிலாளர்களை பணி நியமனம் செய்யலாம், அதாவது அத்தகைய பணி நியமன காலம் முதலாளிகளின் தேர்வுப்படி குறிப்பிட்ட நாட்கள், மாதங்கள், வருடங்கள் அல்லது ஒரு திட்டத்திற்குரிய காலம் என எந்தவொரு கால அளவையும் கொண்டிருக்கலாம். இருப்பினும், இந்த “குறிப்பிட்ட-காலம்” என்று குறிப்பிடுவது முற்றிலும் தவறான சொல்வழக்காகும், ஏனென்றால், மாறுபட்ட தொழில் நிலைமைகளை காரணம்காட்டி முதலாளிகள் எந்த நேரத்திலும் தொழிலாளர் ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள முடியும் என்பதுடன், பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளி எந்தவொரு பணி நீக்க ஊதியம் அல்லது நஷ்டஈடு தொகையை பெறுவதற்கு உரிமையற்றவராகவும் ஆக்கப்படுகிறார்.
மார்ச் மாதம் மத்தியில் பிறப்பித்த ஆணையின்படி, பிஜேபி அரசாங்கம் இந்தியாவின் தொழிலாளர் சட்டங்களில் இந்த பெரும் பின்னடைவுமிக்க மாற்றத்தை அமுல்படுத்தியது. இது குறித்து பாராளுமன்ற ஒப்புதலைத் தவிர்த்து, “தொழில்துறை வேறுபாடின்றி அனைத்து துறைகளிலும் குறிப்பிட்ட-கால வேலைவாய்ப்பு முறை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது” என்றும், இதன் மூலம் “தொழில்துறை வேலைவாய்ப்பு (நிலையியற் கட்டளை) சட்டம், 1946 திருத்தம் செய்யப்படுகிறது என்றும் அரசாங்க வர்த்தமானியில் ஒரு அறிவிப்பை இது வெளியிட்டது.
இந்திய பெருவணிகம், அதன் பிரதான கோரிக்கைகளில் ஒன்று இதனால் பூர்த்தி செய்யப்படுகிறது என்ற நற்காரணத்தை முன்னிட்டு இந்த மாற்றத்தை பாராட்டியுள்ளது. இந்திய மற்றும் அந்நிய முதலீட்டாளர்கள், தொழிலாளர்கள் பணி நீக்கம் குறித்து நடைமுறையிலிருக்கும் தொழிலாளர் சட்ட கட்டுப்பாடுகள் பற்றி பல வருடங்களாக புகார் கூறி வருகின்றனர். தற்போது ஒரு அதிரடியாக அவர்களுக்கு ஒரு பொறிமுறை வழங்கப்பட்டுள்ளது, இதன்கீழ் அவர்கள், “குறிப்பிட்ட-கால” ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டாலோ அல்லது பல வருடங்களாக பணியாற்றும் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்தாலோ எதுவானாலும், எதிர்கால நியமனங்களை விருப்பத்தின் பேரில், எந்தவொரு நிதி இழப்பீடும் வழங்கவேண்டிய அவசியமின்றி இரத்து செய்ய முடியும் என்பதாகும்.
இது, உலக வங்கியின் “எளிமையாக வணிகம் செய்தல்” தரவரிசையில் இந்தியாவின் “தரத்தை” மேம்படுத்தும் என்பதுடன் மூதலீடுகளை ஈர்க்கும் என்று கூறி இந்த மாற்றத்தை வலதுசாரி Economic Times பத்திரிகை பாராட்டியுள்ளது.
நிதி மந்திரி அருண் ஜேட்லியும், ஏனைய அரசாங்க செய்தித் தொடர்பாளர்களும் இந்த நடவடிக்கை பற்றி வக்கிரமாக அறம்பாடுவதில் வர்த்தக மற்றும் தொழில்துறை இந்திய சம்மேளனத்தின் கூட்டமைப்பின் (Federation of Indian Chambers of Commerce and Industry – FICCI) தலைவர் ராஷேஷ் ஷா வும் இணைந்து கொண்டனர், ஆனால், வேலைவாய்ப்பை மேம்படுத்தும் என்பதாக, முதலாளிகளின் சக்தியை மேம்படுத்தும் நோக்கத்தை இது கொண்டுள்ளது என்பதுடன், வேலை பாதுகாப்பு போன்ற எதையும் வழங்காமல் ஏமாற்றுகிறது. “தற்போதுள்ள தொழிலாளர் சட்டங்களின் கீழுள்ள ஏற்பாடுகள் இத்தகைய நெகிழ்வுத்தன்மையை வழங்கவில்லை என்பதால்,” “ஏற்றுமதி ஆணைகள் போன்ற குறிப்பிட்ட கால கடமைகளை நிறைவேற்ற கூடுதல் தொழிலாளர்களை நியமிப்பதில் தொழில்துறை தடைகளை கொண்டுள்ளது. இந்த சட்ட திருத்தம் நிச்சயமாக இதுபோன்ற தடைகளை நீக்கும் என்பதுடன், வரும் மாதங்களில் வேலை உருவாக்கம் ஒரு உத்வேகத்தைப் பெறும்” என்று FICCI தலைவர் தெரிவித்தார்.
பெருவணிகத்திற்கான அவரது “இந்தியாவில் தயாரியுங்கள்” என்ற பிரச்சாரத்தை ஊக்கப்படுத்துவதில், இந்திய பிரதம மந்திரியும், புகழ்பெற்ற “இந்து பலசாலி” யுமான நரேந்திர மோடி, முதலீட்டாளர் இலாபங்களை அதிகரிப்பதில் அவரது அரசாங்கம் கொண்டிருக்கும் ஆழ்ந்த ஈடுபாடு பற்றியும், இந்தியா மற்றும் சீனா இடையே தற்போது நிலவுகின்ற பெரும் ஊதிய வேறுபாடு பற்றியும் பெருமையடித்துக் கொண்டார். சீனாவில் தொழில்துறை தொழிலாளர்கள் அவர்களது சக இந்திய தொழிலாளர்களை விட சராசரியாக குறைந்தபட்சம் நான்கு மடங்கு அதிகமாக சம்பாதிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் கூக்குரலுக்கு அஞ்சுகின்ற காரணத்தால், பிஜேபி அரசாங்கம், ஒரு தொழிலாளர்-சார்பு நடவடிக்கையாக இந்தியாவின் அனைத்து பொருளாதாரத் துறைகளிலும் “குறிப்பிட்ட-கால வேலைவாய்ப்பு” முறை விரிவாக்கத்தினை ஊக்கப்படுத்த நேரத்தை சாதகமாக்கி முயன்றுள்ளது. கூடுதலாக, “தொழிலாளர் நெகிழ்வுத்தன்மை” வேலைவாய்ப்பை அதிகரிக்கும் என்று கூறி, வெளிப்புற தொழிலாளர்-ஒப்பந்தக்காரர்களை பயன்படுத்த அவசியமின்றி நிறுவனங்கள் குறுகிய-கால ஒப்பந்தங்களின் பேரில் தொழிலாளர்களை தற்போது நியமிக்க முடியும் என்பதையும், அவ்வாறு “குறிப்பிட்ட-கால” ஒப்பந்தங்களின் மூலம் நியமிக்கப்படும் தொழிலாளர்கள் நிரந்தர தொழிலாளர்கள் பெறும் அதே ஊதியத்தை, அதாவது விகிதாச்சார அடிப்படையில் ஒரே ஊதிய நலன்களை (பணி நீக்க நலன்கள் தவிர்த்து) பெற முடியும் என்பதையும் இந்த அரசாங்கம் பெரிய விஷயமாக பேசுகிறது.
இந்த கூற்றுக்கள் முற்றிலும் போலியானவையே. முதலாவதாக, அரசாங்கம், “தற்காலிக” மற்றும் “தினக்கூலி” தொழிலாளர்களை நியமிக்க தொழிலாளர்-ஒப்பந்தகாரர்கள் மற்றும் தற்காலிக பணி முகமைகளை முதலாளிகள் நாடுவதையும், மேலும் அவர்கள் நிரந்தர தொழிலாளர்களை விட மிகக் குறைந்த ஊதியம் மற்றும் பிற நலன்களை ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வழங்குவதையும் தடை செய்யவில்லை; குறிப்பிட்டு சொல்வதானால், எளிதில் பணி நீக்கம் செய்யும் வகையிலான தொழிலாளர்கள் நியமனத்தில் முதலாளிகளுக்கு உள்ள வழிகளை இது சுலபமாக விரிவாக்கியுள்ளது. இரண்டாவதாக, குறைந்தபட்ச ஊதியம் வழங்கல், ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் பிற வேலை தரங்களை செயல்படுத்த தவறுவதிலும், மற்றும் சம ஊதியம் வழங்கல் குறித்த சட்ட உத்திரவாதங்களை அடிப்படையில் அரத்தமற்றதாக்குவதிலும் இந்திய தொழிலாளர் அமைச்சகம் இழிபுகழ் பெற்றதாக உள்ளது.
பிஜேபி உடன் இணைந்த பாரதிய மஜ்தூர் சங்கம் (இந்திய தொழிலாளர்கள் சங்கம்) உட்பட, தொழிற் சங்கங்கள் அனைத்துமே ஒழுங்குமுறை மாற்றத்தை கண்டனம் செய்துள்ளன. ஆனால், தொழிற்சங்கங்கள் அதற்கு எதிராக எந்தவொரு தீவிர போராட்டத்தையும் நடத்த போவதில்லை. இன்னமும் அரசுக்கு சொந்தமான பெரும் துறைகள் உட்பட, தொழில்துறை முழுவதிலும் ஒப்பந்த-தொழிலாளர் முறை பரவலாக்கப்பட்டது குறித்து எழும் எந்தவொரு எதிர்ப்பையும் அவர்கள் நாசப்படுத்தி விட்டனர்.
தொழிற்சங்கங்களிடம் முறையாக “ஆலோசனை” பெறப்படவில்லை என்பதும், நிரந்தர வேலைவாய்ப்பு முறைக்கு திறம்பட முற்றுப்புள்ளி வைப்பதற்கு “வரத்தமானி-அறிவிப்பை” பயன்படுத்தி அரசாங்கம் ஜனநாயகத்தை காலடியில் போட்டு மிதித்துள்ளது என்பதும் தான் தொழிற்சங்கங்களின் மிகப் பெரிய புகார்களாக உள்ளன.
பிந்தையது நிச்சயமாக உண்மையானதே. தொழிற்சங்கங்களிடம் ஆலோசனை பெறாமை பற்றிய அவர்களது புகார்களைப் பொறுத்தவரை, பிஜேபி அரசாங்கத்துடன் ஒத்துழைக்கும் அவர்களது ஆர்வத்தை மட்டும் அவை அடிக்கோடிட்டுக்காட்டவில்லை. மாறாக, அவர்கள் கபடதாரிகளாகவும் உள்ளனர் என்பதையே அவை காட்டுகின்றன.
அரசாங்கம் இத்தகைய நடவடிக்கைக்கு தயாரிப்பு செய்து வந்ததை தொழிற்சங்கங்கள் உண்மையில் முன்கூட்டியே நீண்ட காலமாக அறிந்திருக்கின்றன. BMS மற்றும் காங்கிரஸ் உடன் இணைந்த இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (Indian National Trades Union Congress) அல்லது INTUC போன்றவை உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் இணைந்து, தொழில்துறை-தொழிற்சங்க கருத்தரங்கு (Industry-Trade Union Dialogue Forum) மூலம் எக்கணமும் செயல்படுத்தப்படவுள்ள குறிப்பிட்ட-கால வேலைவாய்ப்பு முறையின் விரிவாக்கம் பற்றிய ஒரு கூட்டு சமர்ப்பிப்பை முதலாளித்துவ குழுக்களின் மூலமாக அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளன.
தொழிற்சங்க நிர்வாக ஒத்துழைப்பை வளர்க்கவும், மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட அரசாங்கம் மற்றும் முதலாளியின் கூட்டு தாக்குதலுக்கு பிந்தைய தொழிலாள வர்க்க எதிர்ப்பை ஒடுக்கவும் வகை செய்வதாக முந்தைய காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் ஆதரவில் இந்த கருத்தரங்கு அமைக்கப்பட்டது. பின்னர் உச்சகட்டமாக, மாருதி சுசூகி மானேசர், ஹரியானா வாகன ஒருங்கிணைப்பு ஆலையில் பணிபுரிந்த ஒட்டுமொத்த தொழிலாளர்களையும் பணிநீக்கம் செய்வதில் போய் இந்த தாக்குதல் முடிவடைந்தது. இந்நிலையில், நிலையற்ற, மலிவுகூலி உழைப்பு வேலை நிலைமைகள் மீதான எதிர்ப்பு குறித்த ஒரு மையமாக இது உருவாகியதுடன், ஜோடிக்கப்பட்ட கொலைக் குற்றச்சாட்டுக்களின் பேரில் 13 தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை விதிப்பதற்கும் இட்டுச்சென்றது. புதிதாக உருவாக்கப்பட்ட மாருதி சுசூகி தொழிலாளர்கள் சங்கத்தின் ஒட்டுமொத்த தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமையும் இந்த பதின்மூன்று பேரில் அடங்குவர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உடன் இணைந்த இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (Centre of Indian Trade Unions-CITU) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்த அனைத்து இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு (All-India Trades Union Congress-AITUC) போன்ற முக்கிய ஸ்ராலினிச தலைமையிலான தொழிலாளர் கூட்டமைப்புகள் இரண்டும், தொழில்துறை-தொழிற்சங்க கருத்தரங்கின் ஸ்தாபக உறுப்பினர்களாக இருக்கின்றன என்பதுடன், அதில் தொடர்ந்து பங்கேற்று வருகின்றன. இருப்பினும், “குறிப்பிட்ட-கால வேலைவாய்ப்பு” என்பது மிகவும் பிற்போக்குத்தன நடவடிக்கையுடன் அடையாளம் காணப்படுவதால் அச்சமுற்று இது குறித்த கருத்தரங்கு விவாதங்களில் பங்கேற்பதை நிறுத்திக்கொண்டன.
“ஆரம்பத்தில் ஒரு கூட்டத்தில் நான் கலந்துகொண்டேன், ஆனால் அதை ஒரு முதலாளித்துவ-மைய தளமாக நான் கண்டறிந்ததால் பின்னர் கலந்துகொள்ள வேண்டாமெனத் தீர்மானித்தேன்,” என்று CITU பொதுச் செயலாளர் டாபான் சென் Business Standard பத்திரிகைக்கு தெரிவித்தார்.
தொழிலாள வர்க்கத்திற்குள் ஆவேசம் நிரம்பிய அதிருப்தி நிலவுவதை ஸ்ராலினிஸ்டுகள் நன்கறிவர். பெருநிறுவன ஊடகங்களும், அரசியல் ஸ்தாபகமும் இந்தியாவின் திட்டமிட்ட “பொருளாதார எழுச்சி” குறித்து கொண்டாடுகின்ற அதே வேளையில், பெரும்பகுதி மக்கள் மிகப்பெருமளவில் வறுமையையும் அச்சுறுத்தும் பொருளாதார பாதுகாப்பின்மையையும் எதிர்கொள்கின்றனர்.
இந்திய மக்கள்தொகையின் முதல் 1 சதவிகிதத்தினர் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த வருவாயில் கால் பங்கை தங்களுக்காக எடுத்துக் கொள்கின்றனர், மற்றும் நாட்டின் மொத்த சொத்தில் 60 சதவிகிதத்தை சொந்தமாக்கிக் கொண்டுள்ளனர். இதற்கிடையில், அரசாங்கத்தின் மிக சமீபத்திய 2013-14 ஆம் ஆண்டிற்கான “வருடாந்திர வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மை அறிக்கை,” இந்தியாவின் தொழிலாளர்களில் 16.5 சதவிகிதத்திற்கும் மேலானவர்கள் ஒரு முறையான கூலி அல்லது ஊதியத்தைப் பெறக்கூடிய நிலையான வேலையில் இல்லை என்று கண்டறிந்தது.
கடந்த ஒன்றரை தசாப்த காலமாக, ஸ்ராலினிச தொழிற்சங்கங்களும், பாராளுமன்ற கட்சிகளும் ஆளும் உயரடுக்கின் நவ தாராளவாத திட்டநிரலுக்கு எதிராக ஒருநாள் தேசிய எதிர்ப்பு வேலைநிறுத்தங்களுக்கு வழக்கமாக அழைப்பு விடுத்து வந்துள்ளன. ஆனால் இந்த திட்ட நிரலை செயல்படுத்துவதில் அவர்களும் கூட ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளனர். பாராளுமன்றத்தில் ஒரு தொடர்ச்சியான வலதுசாரி அரசாங்கங்களுக்கு ஸ்ராலினிஸ்டுகள் முட்டுக் கொடுத்துள்ளனர் என்பதுடன், “முதலீட்டாளர் சார்பு” கொள்கைகள் என்று தாமே அழைப்பனவற்றை இடது முன்னணி ஆட்சியமைத்த மாநிலங்களில் அமுல்படுத்தியும் உள்ளனர், மேலும் திட்டமிட்டு தொழிலாளர் போராட்டங்களை தனிமைப்படுத்தவும் சேதப்படுத்தவும் செய்தனர்.
தொழிலாளர்கள் மத்தியில் வளர்ந்து வரும் எதிர்ப்பு குறித்து ஸ்ராலினிஸ்டுகளின் உண்மையான அணுகுமுறை எப்படி இருக்கும் என்பது சிறையிலிடப்பட்ட மாருதி சுசூகி தொழிலாளர்களை அவர்கள் முழுமையாக கைவிட்டதன் மூலம் எடுத்துக்காட்டப்பட்டது.
ஏப்ரல் 2 அன்று, ஸ்ராலினிச தலைமையிலான CITU மற்றும் ஏனைய 15 தொழிற்சங்கங்கள், விரும்பியபடி பணி நீக்கம் செய்யும் புதிய முறையை எதிர்த்து போராட தென் இந்திய மாநிலம் கேரளாவில் ஒருநாள் பொது வேலைநிறுத்தம் நடத்தினர். ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான கேரள மாநில அரசாங்கத்தின் செயலூக்கமிக்க ஆதரவுடன் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பத்திரிகை செய்திகளின்படி, இந்த வேலைநிறுத்தம் மாநிலத்தில் பொருளாதார நடவடிக்கைகளையும், போக்குவரத்தையும் ஸ்தம்பிக்கச் செய்தது. ஆனால், தொழிலாளர்களின் எதிர்ப்பு உண்மையானதாக இருந்தாலும், ஸ்ராலினிஸ்டுகளைப் பொறுத்தவரை, அவர்களது மதிப்பிழந்து போன “இடது” நற்பெயரை உயர்த்துவதற்கு நோக்கம் கொண்டதாக இந்த வேலைநிறுத்தம் ஒரு அரசியல் தந்திரமாகவே அவர்களுக்கு இருந்தது.
சில நாட்களுக்கு பின்னர், அதன் மூன்றாண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் கட்சி மாநாட்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம், 2016 தேசிய தேர்தல்கள் உட்பட சமீபகாலம் வரை, இந்திய முதலாளித்துவத்தின் முன்னுரிமை பெற்ற அரசாங்கக் கட்சியாக திகழும் காங்கிரஸ் கட்சியுடன் ஒரு தேர்தல் கூட்டணி அமைப்பதில் இருந்த அனைத்து தடைகளையும் அகற்றுவதற்கு வாக்களித்தது.
இதற்கிடையில், பெருவணிக நிறுவனங்கள், ஒழுங்குபடுத்துதல் என்ற பெயரில் பல டசின்கள் எண்ணிக்கையிலான தேசிய தொழிலாளர் சட்டங்களை வெறும் நான்காக குறைத்து, இந்திய தொழிலாளர்களுக்கு இருக்கும் சிறிய பாதுகாப்புகளை கூட இன்னும் இல்லாதொழிக்க தமது திட்டங்களை முன்னெடுத்துச் செல்லுமாறு பிஜேபி அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றன. மேலும், கடந்த மாதம் வெளிவந்த, ஆண்டிற்கு இருமுறை வெளிவரும் உலக பொருளாதார கண்ணோட்டத்தில், சர்வதேச நாணய நிதியம் (IMF), “தொழிலாளர் சந்தை முரண்பாடுகளை இன்னும் எளிதாக்க” இந்திய அரசாங்கத்தை வலியுறுத்தியது.
ஆசிரியர் பின்வரும் கட்டுரைகளையும் பரிந்துரைக்கிறார்:
இந்திய ஸ்ராலினிச மாநாடு பெருவணிக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை நாடுகிறது
[30 April 2018]
ஜோடிப்பு வழக்கில் சிக்கவைக்கப்பட்ட மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு இந்திய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தண்டித்து இதுவரை ஒரு வருடமாகிறது
[17 March 2018]