Print Version|Feedback
Wealth-X report shows billionaires gained $1.8 trillion in 2017
2017 இல் பில்லியனர்கள் 1.8 டிரில்லியன் டாலர்கள் குவித்ததை Wealth-X அறிக்கை காட்டுகிறது
Eric London
21 May 2018
இந்த வார இறுதியில் பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹரிக்கும் அமெரிக்க மணமகள் மெகான் மார்க்கெல் க்கும் இடையிலான இராஜபோகத் திருமணம் குறித்த பதாகைத் தலைப்புகள் மற்றும் இடைவிடாத செய்தியளிப்புகளால் அமெரிக்க தொலைக்காட்சிப் பார்வையாளர்களும் செய்தித்தாள் வாசகர்களும் மூழ்கடிக்கப்பட்டிருந்தனர்.
இந்த கல்யாணத்தை ஒரு வரலாற்று நிகழ்வு போல் காட்டுவதற்காக பெரும் செய்தி நிறுவனங்கள் செய்தியாளர்களின் ஒரு படையையே அங்கு நிறுத்தியிருந்தன. “நினைவில் நீண்ட காலம் வாழவிருக்கும் ஒரு சுவாரஸ்யமான விடயம்” என்று சிஎன்என் இதனை அழைத்தது. ABC இந்த திருமணத்தை “ஒரு காதல் வாகனம்” என்று அழைத்தது, “ஒரு நவீன கனவுலகக்கதை” என்ற சொற்றொடர் திரையில் பதாகையாக காட்சியளித்துக் கொண்டிருந்தது. பிரிட்டிஷ் முடியாட்சிக்கு எதிரான ஒரு வன்முறையான போராட்டத்தில் இருந்து, பிரபுத்துவ பதவிகளைத் தடைசெய்கின்ற ஒரு அரசியல்சட்டத்தை உருவாக்கிய ஒரு புரட்சியில் இருந்துதான் அமெரிக்கா பிறந்தது என்ற எந்தக் குறிப்பையும் இந்த செய்தியளிப்புகள் வழங்கவில்லை.
அமெரிக்க ஊடக ஸ்தாபகங்களால் பிரபுத்துவத்திற்கு வாலாட்டும் இந்த புகழ்ச்சியை எவ்வாறு விளக்க முடியும்?
உலகெங்கிலும் வெகுசிலராட்சியை செலுத்துகின்ற நவீன-கால நிதிப் பிரபுத்துவத்தை தொடர்ந்து வளப்படுத்தி வருகின்ற சமூக சமத்துவமின்மையின் ஒரு மலைக்க வைக்கின்ற வளர்ச்சியில் அது வேர்கொண்டிருக்கிறது. சமூகத்தின் மிக உச்சத்தில் வரலாற்றில் முன்கண்டிராத அளவுக்கு செல்வம் குவியச் செய்யப்பட்டிருப்பதானது, அமெரிக்க “குடியரசின்” ஆளும் உயரடுக்கு மற்றும் அதன் நன்கு-ஊதியமளிக்கப்படுகின்ற வக்காலத்துவாதிகளுக்குள்ளாக பிரிட்டிஷ் பிரபுத்துவத்தின் மீது தவிர்க்கவியலாமல் பொறாமையை வளர்த்தெடுக்கிறது.
பில்லியனர்களுக்குள்ளான சொத்து அடுக்குகள் 2017, உபயம்: Wealth-X
அரச குடும்பத்தின் மீதான இந்த ஏக்கத்திற்கான பொருள்ரீதியான மற்றும் சமூகரீதியான அடிப்படை என்பது சென்ற வாரம் வெளியான Wealth-X “பில்லியனர் கணக்கெடுப்பு” இல் புதிய ஆவணப்படுத்தலைக் காண்கிறது. பில்லியனர்களது ஒரு சிறிய எண்ணிக்கையிலான குழுவானது உலகெங்கிலுமான பில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களின் இழப்பில் அது குவித்திருக்கின்ற செல்வங்களின் செறிந்த அளவினை, தொடர்ந்து அதிகரித்துச் சென்றிருப்பதைக் காட்டுகிறது.
2016 முதலாக உலக பில்லியனர்களின் எண்ணிக்கைத்தொகை 15 சதவீதம் வளர்ந்து, 2,754 பேராக ஆகியிருப்பதையும், இந்த பில்லியனர்களின் சொத்து மதிப்பு “24 சதவீதம் அதிகரித்து 9.2 டிரில்லியன் டாலர் என்ற இதுவரையில்லாத அளவுக்கு” –—ஒட்டுமொத்த பூகோளத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12 சதவீதத்திற்கு நிகரானது— அதிகரித்திருப்பதையும் Wealth-X அறிக்கை காட்டுகிறது.
உலகெங்கும் பில்லியனர்கள் தமது செல்வத்தை அதிகரித்து விட்டிருக்கின்றனர், என்றாலும் அமெரிக்கா மற்றும் ஆசியாவில் போல வேறெங்கிலும் அவர்கள் பணத்தை இந்தளவுக்கு வாரிக்குவித்திருக்கவில்லை. வட அமெரிக்காவில் 727 பில்லியனர்களின் சொத்து 22.8 சதவீதம் அதிகரித்து 3.3 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்தது, இந்த விகிதத்தை விஞ்சியது ஆசியாவின் 784 பில்லியனர்கள் —இவர்கள் 2018 இல் கூட்டாக 2.4 டிரில்லியன் அளவுக்கான செல்வம் கொண்டிருந்தனர்— மத்தியிலான 49.4 சதவீத சொத்து அதிகரிப்பு மட்டுமே.
பெரும்-செல்வந்தர்கள் பெரும்பாலும் ஊகவணிகர்களாக இருக்கிறார்கள். அவர்கள் உற்பத்தி நிகழ்ச்சிப்போக்கிற்கு பங்களிப்பு செய்வதன் மூலமாக வருவாய் ஈட்டவில்லை, மாறாக சூதாட்டத்தின் மூலமாக, திருடுவதன் மூலமாக, மற்றும் ஏமாற்றுவதன் மூலமாக சம்பாதிக்கின்றனர். அனைத்து பில்லியனர்களது மத்தியில், சந்தைப்பங்குகள் மூலமாக வந்த மொத்த செல்வத்தின் பகுதி 2016 இல் 32.9 சதவீதமாக இருந்ததில் இருந்து 2017 இல் 41.5 சதவீதமாக அதிகரித்தது.
செல்வப் பிரமிடின் உச்சியில், மிகப் பணம்படைத்த 10 பில்லியனர்கள் மொத்தமாக 663 பில்லியன் டாலர் சொத்தை கொண்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரும் “சராசரியான பில்லியனர்” கொண்டிருப்பதை விட 20 மடங்கு அதிகமாய் சொத்து கொண்டிருக்கின்றனர். பில்லியனர்களின் பெரும்பகுதியினர் (413) தமது செல்வத்தை நிதி, வங்கித் துறை அல்லது முதலீடு ஆகியவற்றில் இருந்து பெறுகின்றனர், தொழிற்துறை கூட்டுக்கள் (380), ரியல் எஸ்டேட் (173), உற்பத்தித் துறை (167) மற்றும் தொழில்நுட்பம் (143) ஆகியவை அதன்பின் வருகின்றன.
பில்லியனர்களின் சொத்து அதிகரிப்பு உலகெங்கிலும் அரசாங்கங்களினால் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் கொள்கைகளது விளைவாக இருக்கிறது. அமெரிக்காவில் போல வேறெங்கிலும் பெரும்-செல்வந்தர்கள் இத்தனை அப்பட்டமாக அரசியல் அமைப்புமுறையைக் கட்டுப்படுத்தவில்லை, அங்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வோல் ஸ்ட்ரீட்டின் குற்றவியல் தன்மைக்கு சிகரம் வைத்தது போலிருக்கிறார்.
“உற்சாகமான பங்குச் சந்தைகள் மற்றும் சுறுசுறுப்பான பெருநிறுவன வருவாய்களின்” காரணத்தால் அமெரிக்காவில் “அதீத செல்வ உருவாக்கத்தில் ஒரேயடியான முன்னேற்றம்” இருப்பதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. “ஆண்டின் பின்பகுதியில் முக்கியமான அமெரிக்க வரிச் சீர்திருத்த தொகுப்பு நிறைவேற்றப்பட்டதன் மூலமாக”, அதாவது ஜனநாயகக் கட்சியிடம் இருந்து எந்த உருப்படியான எதிர்ப்பும் இல்லாத நிலையில் ட்ரம்ப் நிர்வாகத்தால் நிறைவேற்றப்பட்ட செல்வந்தர்களுக்கான மலைபோன்ற வரிவிலக்கு மூலமாக, அமெரிக்க பில்லியனர்கள் ஆதாயமடைந்தனர்.
2021 வரைக்கான உலகளாவிய சொத்து நிலவர மதிப்பீடுகள்: உபயம்: Wealth-X அறிக்கை
உலகின் எந்த நாட்டிலும் விட அதிக பில்லியனர்களைக் கொண்ட நாடாக அமெரிக்கா இருக்கிறது, உலகெங்கிலுமான பில்லியனர் சொத்துமதிப்பில் 34 சதவீதத்தை இது கொண்டிருக்கிறது. நியூ யோர்க் தலைமையான பில்லியனர் நகரமாக தனது நிலையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது, இங்கு 103 பில்லியனர்கள் இருக்கின்றனர். 2017 இல், நிகர சொத்துமதிப்பு 30 மில்லியன் டாலருக்கும் அதிகமாய் கொண்ட தனிமனிதர்களையும் உள்ளடக்கிய, உலகின் “அதி உயர் சொத்துமதிப்பு” எண்ணிக்கைத்தொகை குறித்த ஒரு அறிக்கையை Wealth-X வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, உலகின் “அதி செல்வந்தர்கள்” —உலகெங்கிலும் சுமார் 250,000 பேர்— மொத்தமாய் 25 டிரில்லியன் டாலர் செல்வம் கொண்டிருந்தனர், இதில் 9.6 டிரில்லியன் டாலர் மதிப்பிலான ரொக்கப் பணமும் அடங்கும்.
அதி செல்வந்தர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமது செல்வத்தை இன்னுமொரு 8.5 டிரில்லியன் டாலர் அதிகரித்து 35 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாய் —Credit Suisse Bank இன் 2017 புள்ளிவிவரத்தின்படி இது உலகின் மக்கள்தொகையில் கீழிருக்கும் 90 சதவீதத்தினரின் மொத்த நிகர செல்வத்திற்கு இணையானதாகும்— செல்வதற்கு எதிர்பார்க்கின்றனர்.
இந்த விண்ணைமுட்டும் தொகைவிவரங்களும் கூட பில்லியனர்கள் மற்றும் பெரும்செல்வந்தர்களது உண்மையான சக்திக்கு —இவர்களது செல்வமானது உலகின் அரசாங்கங்கள் மீது, ஊடகப் பெருநிறுவனங்கள் மீது, தொழிற்சங்கங்கள் மீது, அரசியல் கட்சிகள் மீது, பல்கலைக்கழகங்கள் மீது, நீதிமன்றங்கள் மீது, இராணுவங்கள் மீது மற்றும் உளவு முகமைகள் மீதான கட்டுப்பாடாக மொழிமாற்றம் பெறுகிறது— முகமூடியிடுவதாகவே இருக்கின்றன.
தொழில்நுட்பத் துறை வளர்ச்சியின் மூலமாக பில்லியன் கணக்கான டாலர்கள் வருவாய் ஈட்டிவிட்டதன் பின்னர், பெரும் சக்திகளது ஆளும் வர்க்கங்கள், பெருநிறுவன ஊடகங்களால் வடிகட்டப்படாத செய்திகள் மற்றும் தகவல்களுக்கு ஏழைகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தைச் சேர்ந்த பில்லியன் கணக்கானோருக்கு அணுகல் கிடைக்க செல்போன்களும் இணையமும் உதவுகின்றன எனும் அச்சத்தில், இடது-சாரி கண்ணோட்டங்களைத் தணிக்கை செய்வதற்கு, இப்போது கூகுள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற தொழில்நுட்பப் பெருநிறுவனங்களுடன் இணைந்து செயற்படுகின்றன.
மூலதனம் முதல் தொகுதியில் காரல் மார்க்ஸ் எழுதினார்: “ஒரு துருவத்தில் செல்வப் பெருக்கமானது, அதேசமயத்தில் மறுதுருவத்தில், அதாவது தனது சொந்த உற்பத்திப்பொருளை மூலதனத்தின் வடிவில் உற்பத்தி செய்கின்ற வர்க்கத்தின் பக்கத்தில், துன்பம், உழைப்பின் வேதனை, அடிமைத்தனம், அறியாமை, மிருகத்தனம், மனச் சிதைவு ஆகியவற்றின் பெருக்கமாக இருக்கிறது.” இன்றைய உலக நிலைமையை சாலப் பொருத்தமான விதத்தில் குணாம்சப்படுத்துவதாக இது இருக்கிறது.
வயதுவந்தோர் பிரிவு கொண்டிருக்கும் மொத்த நிகர சொத்து குறித்த Credit Suisse இன் தரவு
உலகெங்கிலும், அது வளர்ச்சியடைந்த நாடானாலும், வளர்ச்சி குன்றிய நாடானாலும், பாதி-வளர்ச்சியடைந்த நாடானாலும், தொழிலாள வர்க்கமானது அரசாங்கத்தின் முடிவெடுக்கும் நிகழ்ச்சிப்போக்கில் இருந்து முழுமையாக வெளித்தள்ளப்பட்ட நிலையில் இருக்கிறது. அரசாங்கங்கள் பில்லியனர்களது சொத்துக்களை அதிகரிக்கின்றதான கொள்கைகளை நடைமுறைப்படுத்துகின்ற நிலையில், சுத்தமான நீருக்கும், போதுமான மருத்துவப் பராமரிப்புக்கும், கட்டுபடியாகும் ஆரோக்கியப் பராமரிப்பு, கல்வி, உணவு, வீட்டுவசதி, பொதுப் போக்குவரத்து, உள்கட்டமைப்பு மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றுக்குமான பில்லியன் கணக்கான மக்களது தேவைகள் பூர்த்திசெய்யப்படுவதில்லை. உலகின் 10 பெரும் செல்வந்தர்களது மொத்த செல்வத்தில் வெறும் ஐந்தில் ஒரு பகுதியைக் கொண்டு, பின்வரும் சமூகத் தேவைகள் உடனடியாக பூர்த்தி செய்யப்பட முடியும்:
* அமெரிக்காவில் இருக்கும் 634,000 வீடற்ற மக்கள் அனைவருக்கும் வீட்டுவசதி வழங்குவது: 20 பில்லியன் டாலர்
* உலகெங்கிலும் ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட 862 மில்லியன் மக்களுக்கு உணவளிப்பது: 30 பில்லியன் டாலர்
* சுத்தமான நீருக்கு அணுகல் இல்லாமல் இருக்கும் மொத்த எண்ணிக்கையை பாதியாகக் குறைப்பது: 11 பில்லியன் டாலர்
* கல்விக்கு அணுகல் இல்லாமல் இருக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி: 26 பில்லியன் டாலர்
* வளரும் நாடுகளில் ஒவ்வொரு தாய்க்கும் மகப்பேறு கால பாரமரிப்பு: 13 பில்லியன் டாலர்
* 4 மில்லியன் மலேரியா மரணங்களைத் தடுப்பதற்கு சிகிச்சை மற்றும் தடுப்பூசி: 6 பில்லியன் டாலர்
* மிச்சிகன் மாநிலத்தின் நச்சு நீர் உள்கட்டமைப்பை ஒரு பாதுகாப்பான மற்றும் சுத்தமான அமைப்பைக் கொண்டு இடம்பெயர்த்துவது: 1.5 பில்லியன் டாலர்
* அமெரிக்காவில் உள்ள 3.1 மில்லியன் ஆசிரியர்கள் அனைவருக்கும் உடனடியாக 20,000 டாலர்கள் ஊக்கத்தொகை வழங்குவது: 62 பில்லியன் டாலர்
மொத்தச்செலவு: 169 பில்லியன் டாலர்
சொத்துக் குவிப்பும் சமத்துவமின்மையும் இத்தகைய மட்டங்களில் நிலவுகின்ற நிலைமைகளின் கீழ் எந்த சமூகமும் ஜனநாயக ஆட்சி வடிவங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது என்ற உண்மையையே அரச குடும்பத்தின் மீதான போற்றிப்புகழ்தல் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அதேபோல, தொழிலாள வர்க்கத்தாலும் உலகின் இயற்கை வளங்களாலும் உற்பத்தி செய்யப்படுகின்ற செல்வமானது பெரும்-செல்வந்தர்களது தணியாத பெருவேட்கையைத் திருப்தி செய்வதற்காக சமர்ப்பிக்கப்படுகின்ற போது எந்த சமூக பிரச்சினைகளும் நிவர்த்தி செய்யப்படவும் முடியாது.
முதலாளித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் சோசலிசத்தை ஸ்தாபிப்பதற்கும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கு வெளியில் இன்று உண்மையான எந்த ஜனநாயகமும் கிடையாது.