Print Version|Feedback
Billionaires’ wealth grows faster in France than in any other country
வேறெந்த நாட்டையும் விட வேகமாய் பிரான்சில் பில்லியனர்களின் செல்வம் அதிகரிக்கிறது
By Guillaume Garnier and Alex Lantier
25 May 2018
ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் பிரான்ஸ் எங்கிலுமான வேலையிடங்களில் ஊதியங்களையும் வேலைநிலைமைகளையும் வெட்டி வருகின்ற நிலையில், நாட்டின் 13 மிகப்பெரும் செல்வந்தர்கள் 2018 தொடக்கத்தில் இருந்து 27.6 பில்லியன் டாலர்கள் செல்வத்தைப் பெருக்கிக் கொண்டுள்ளனர். இது உலகில் பில்லியனர்கள் தமது செல்வத்தை மிக விரைவாக அதிகரிக்கின்ற நாடுகளில் முதன்மையானதாக பிரான்சை ஆக்கியிருப்பதாக சென்ற வாரத்தில் புளூம்பேர்க் இதழ் வெளியிட்ட ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.
ஜனவரியில் இருந்து மட்டும், பிரெஞ்சு பில்லியனர்களின் செல்வமானது மலைப்பூட்டுமளவில் 12.2 சதவீதம் அதிகரித்துள்ளது. இதேகாலத்தில் ஜப்பானிய பில்லியனர்களின் வளர்ச்சி 7.1 சதவீதமாகவும் சீன பில்லியனர்களின் வளர்ச்சி 6.3 சதவீதமாகவும் அமெரிக்க பில்லியனர்களின் வளர்ச்சி 1.2 சதவீதமாகவும் இருந்தது.
புளூர்ம்பேர்க் அறிக்கையின் தரவுகள் காட்டும் வர்க்கப் பிளவு இதை விடவும் பட்டவர்த்தனமாக இருக்க முடியாது. ஒருபக்கத்தில், மக்ரோன் அவரது கொள்கைகளை எதிர்க்கும் தொழிலாளர்களை ஆணவத்துடன் “சோம்பேறிகள்” என்று கண்டனம் செய்கிறார், காரணம் அவர்கள் மணிக்கு 9.88 யூரோக்கள் (வரிக்குப் பின்னர் 7.83 யூரோக்கள்) சம்பாதிக்கிறார்களாம், சமூக செலவினத்தில் அவர் செய்யும் வெட்டுகளையும் செல்வந்தர்களுக்கு அளிக்கும் வருமான வரி சலுகைகளையும் விமர்சனம் செய்கிறார்களாம். மறுபக்கத்தில் அவர், நிதி ஒட்டுண்ணிகள், பெருநிறுவன கொள்ளையர்கள் மற்றும் ஃபேஷன் வாரிசுகள் கொண்ட ஒரு சிறிய குழுவினரின் சட்டைப்பைகளுக்குள்ளாக ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 900,000 டாலருக்கும் அதிகமான பணம் மாற்றப்படுவதை மேற்பார்வை செய்து கொண்டிருக்கிறார்.
பிரான்சின் இரண்டு மிகப்பெரும் செல்வந்தர்களான பேர்னார் அர்னோல்ட் மற்றும் பிரான்சுவா பினோ இருவரும், இந்த நாள்காட்டி ஆண்டில் மட்டும் 22.3 பில்லியன் டாலர்களை கூடுதலாய் பெருக்கியுள்ளனர். ஆடம்பரப் பொருட்கள் கூட்டுக்குழும நிறுவனமான LVMH Moët Louis Vuitton SE இன் தலைவரான அர்னோல்ட் தான் ஐரோப்பாவின் மிகப்பெரும் பணக்காரராகவும் உலகின் நான்காவது பெரும் பணக்காரராகவும் உள்ளார், இவரது சொத்துமதிப்பு 76.4 பில்லியன் டாலர்கள் இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது.
35.5 பில்லியன் டாலர் சொத்து கொண்டிருக்கும் பினோ, ஆடம்பரப் பொருட்கள் குழும நிறுவனமான Kering இன் நிறுவனர் ஆவார், Gucci மற்றும் Yves Saint Laurent போன்ற வணிகப்பெயர்கள் மற்றும் நிதிக் கையிருப்பு நிறுவனமான Artemis ஆகியவற்றின் சொந்தக்காரர்.
மக்ரோன் பெரும் சொத்துக்கள் மீதான வரியை (ISF) அகற்றியதாலும் பெருநிறுவன வரிகளை வெட்டியதாலும், LVMH மற்றும் Kering இன் பங்குச் சந்தை விலைகளில் ஏற்பட்ட ஏற்றம் நேரடியாக அர்னோல்ட் மற்றும் பினோவின் சட்டைப்பைகளுக்குள் செல்கிறது. புளூம்பேர்க் எழுதியது, “சீனாவில் இருந்து ஆடம்பரப் பொருட்களுக்கு புதுப்பிக்கப்பட்ட தேவை தோன்றியிருப்பது மற்றும் இணைய வணிகம் வளர்ச்சி காண்பது ஆகியவை விற்பனையை உயர்த்தி இந்த இரண்டு குழும நிறுவனங்களையும் பிரான்சின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களின் அந்தஸ்திற்கு உயர்த்தியிருக்கிறது. பினோவின் ஏல நிறுவனம் Christie இல் கலைப் பொருட்கள் விற்பனையில் ஏற்பட்டிருக்கும் அதிகரிப்பும் இதில் பங்களிப்பு செய்திருக்கிறது.”
இதேபோல l’Oréal வாரிசான பிரான்சுவாஸ் பெத்தான்கூர்- மெய்யர்ஸ் இன் செல்வம் 3.7 பில்லியன் டாலர் அதிகரிப்பு கண்டிருக்கிறது, Chanel இன் உரிமையாளர்களான சகோதரர்கள் Alain மற்றும் Gerard Wertheimer இன் சொத்து 2.4 பில்லியன் டாலர் அதிகரித்திருக்கிறது.
மக்ரோன் நிர்வாகத்தின் கொள்கைகள் பொய்களை அடிப்படையாகக் கொண்டவை என்பதையே இந்தப் புள்ளிவிவரங்கள் தெளிவாக்குகின்றன. பணமில்லை ஆகையால், ஊதியங்கள் மற்றும் சம்பளங்களில் வெட்டுக்களை, வேலைவாய்ப்பின்மை நல உதவிகளின் உள்ளீடு அகற்றப்படுவதை, தற்காலிக வேலைகள் பரந்த அளவில் விரிவாக்கப்படுவதை, ஆரோக்கியப் பராமரிப்பு மற்றும் ஓய்வூதியங்களில் திட்டமிடப்படும் வெட்டுகளை, அத்துடன் பொதுத் துறையில் வாழ்நாள் முழுமைக்கான வேலைக்கு முடிவுகட்டுவதை ஆகிய அனைத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பரந்த மக்களிடம் சொல்லப்படுகிறது. ஆனால் இது ஒரு அரசியல் மோசடியாகும்.
உண்மையில், பணம் அபரிமிதமாகவே இருக்கிறது. பிரான்சிலும் சரி உலகின் எஞ்சிய பகுதிகளிலும் சரி, இந்தப் பணமானது ஒரு ஒட்டுண்ணித்தனமான மற்றும் பணவெறி பிடித்த ஆளும் உயரடுக்கின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுக் கொண்டிருப்பதே பிரச்சினையாகும்.
2012 பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக, பொருளாதார அறிஞரான தோமஸ் பிக்கெட்டி 2010 புள்ளிவிவரங்களின் படி பிரான்சில் சொத்து சமத்துவமின்மை குறித்த ஒரு அறிக்கையை வெளியிட்டார். பிரெஞ்சு சமூகத்தின் மேலிருக்கும் 10 சதவீதம் பேர் 62 சதவீத செல்வத்தையும், மேலிருக்கும் 1 சதவீதம் பேர் 24 சதவீத சொத்துக்களையும் கொண்டிருப்பதை அது எடுத்துக்காட்டியது. இதற்கு நேர்மாறாய், பிரெஞ்சு சமூகத்தின் கீழிருக்கும் பாதிப்பேர், வெறும் 4 சதவீத சொத்துக்களையே கொண்டிருந்தனர். எட்டு ஆண்டு கால பொருளாதார நெருக்கடி மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்குப் பின்னர், வர்க்கப் பிளவானது இன்று முன்னினும் அப்பட்டமாய் நிற்கிறது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
இத்தகைய அறிக்கைகளில் வெளிக்கொணரப்பட்டிருக்கும் சமூக சமத்துவமின்மையானது முதலாளித்துவ அமைப்புமுறை மீதான ஒரு கண்டனவாசிப்பு ஆகும். சென்ற ஆண்டில், ஒட்டுமொத்த மனித இனத்தின் கீழ்பாதிப் பேர் கொண்டிருக்குமளவு செல்வத்தை வெறும் எட்டே எட்டு பில்லியனர்கள் கொண்டிருக்கின்றனர் என்ற செய்தியைக் கேட்டு உலகம் அதிர்ச்சியடைந்தது. பிரெஞ்சு முதலாளித்துவமானது, பெருந்தன்மையானதாக, கண்ணியமானதாக மற்றும் மிக நெறிப்பட்ட சமூக ஒழுங்காக இருப்பதான அதன் அத்தனை நடிப்புகள் இருந்தபோதிலும், ஒட்டுமொத்தமாக உலக முதலாளித்துவத்தின் அதே தீர்க்கவியலாத சமூக முரண்பாடுகளால் அதுவும் பின்னப்பட்டே இருக்கிறது என்பதையே புளூம்பேர்க் அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
சமூக அங்கலட்சணம் மற்றும் கண்ணோட்டத்தில், பிரெஞ்சு சமூகத்திலும் பொருளாதார வாழ்க்கையிலும் மேலாதிக்கம் செலுத்துகிற பில்லியனர்களை அவர்களது அமெரிக்க அல்லது பிரிட்டிஷ் சகாக்களிடம் இருந்து பிரித்துக் காட்டத்தக்க அம்சங்கள் அதிகமில்லை.
உள்ளூரில் ஒரு கட்டுமான நிறுவனம் நடத்தி வந்த ஒரு குடும்பத்தில் இருந்து வந்த அர்னோல்ட், தனது அரசியல் தொடர்புகளையும் அரசு மானியங்களையும் பயன்படுத்தி ஜவுளித் துறையை மறுகட்டுமானம் செய்தும் தொழிலாளர்களது எண்ணிக்கையைக் குறைத்தும் தனது செல்வத்தை பெருமளவில் அதிகரித்துக் கொண்டார், இறுதியில் 1980களில் LVMH ஐ கையகப்படுத்தினார். வடக்கு பிரான்ஸ் எங்கிலும் மூடப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் நாசம் செய்யப்பட்ட சமூகங்களின் ஒரு சுவடை அவர் விட்டுச் சென்றார், அப்பகுதி இப்போது நவ-பாசிச தேசிய முன்னணிக்கான வாக்கு வங்கியாக இருக்கிறது. இன்னும் ஏராளமான ஃபேஷன் மற்றும் ஆடம்பரப் பொருள் வணிகப்பெயர்களை மூலோபாயரீதியாக கையகப்படுத்தி தனது குழுமநிறுவனத்துடன் சேர்த்துக் கொண்டதன் மூலம் அவர் வானளாவிய சொத்துக்களுக்கு அதிபதியாகி இருக்கிறார்.
இதேபோல, பினோ 1980களில் ஒரு நிதிவணிகராகவும் பெருநிறுவன முதலையாகவும் புகழடைந்தார், சிக்கலில் இயங்கும் நிறுவனங்களுக்கு உதவுகின்ற அரசின் உதவிகளை பைகளில் போட்டுக் கொண்டு திவாலான மர நிறுவனங்கள் மற்றும் காகித நிறுவனங்களை மறுகட்டுமானம் செய்வது மற்றும் தொழிலாளர் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலமாகப் பெரும் தொகைகளைக் குவித்தார். அர்னோல்ட் போலவே, இவரும் தனது ஆரம்பகால செல்வத்தைக் கொண்டு ஆடம்பரப் பொருட்கள், நிதித் துறை, மற்றும் சில்லறை விற்பனைத் துறை நிறுவனங்களது ஒரு சாம்ராஜ்யத்தை கையகப்படுத்தினார், அதன்மூலமாக அவர் பிரான்சின் மிகப் பணம்படைத்த பில்லியனர்களில் ஒருவராய் ஆனார்.
பெத்தான்கூர்- மெய்யர்ஸ் ஐ பொறுத்தவரை, சென்ற ஆண்டில், மறைந்த அவரது தாயான லில்லியன் பெத்தான்கூர் இடம் இருந்து இந்த சொத்து ஆஸ்தியாக கிடைத்திருந்தது. பெத்தான்கூர் இன் பங்குக் கொள்முதல் நிறுவனம், இரண்டாம் உலகப் போரில் ஒரு முன்னிலை நாஜி-ஒத்துழைப்புவாதியாகவும் பிரான்சின் பாசிசக் குழுக்களுக்கு நிதியாதாரம் வழங்கியவராகவும் இருந்த பெத்தான்கூர்- மெய்யர்ஸ் இன் தாத்தா Eugène Schueller இன் அழகுசாதனப்பொருட்கள் நிறுவனமான L’Oréal இல் பாரிய எண்ணிக்கையிலான பங்குகளைக் கொண்டிருந்தது.
இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பாக பிரெஞ்சு புரட்சியால் தூக்கிவீசப்பட்ட நிலவுடமைக்கால பிரபுத்துவத்திற்கு கொஞ்சமும் சளைக்காத அளவில் வலுவாய் அமர்ந்திருக்கின்ற, ஆணவம் பிடித்த மற்றும் தோல்தடித்த ஒரு நிதிப் பிரபுத்துவம் பிரான்சில் எழுந்திருக்கிறது. பிரான்சில் தொழிலாள வர்க்கம் இருபதாம் நூற்றாண்டில் பல தசாப்த காலப் போராட்டத்தின் மூலமாக வென்றெடுத்திருந்த சமூக உரிமைகளை இல்லாது செய்வதன் மூலமாக இவர்களை மேலும் செல்வவளமானவர்களாக்குவதற்கு இருக்கின்ற அத்தனை தடைகளையும் அகற்ற மக்ரோன் முனைந்து வருகின்ற நேரத்தில், முறையற்ற வழியில் பெற்ற அவர்களது செல்வத்தைப் பறிமுதல் செய்வதற்குப் போராடுவதே தொழிலாள வர்க்கத்தின் ஒரே பொருத்தமான பதிலிறுப்பாக இருக்கும்.