Print Version|Feedback
Indian Stalinist congress opts for alliance with big business Congress Party
இந்திய ஸ்ராலினிச மாநாடு பெருவணிக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை நாடுகிறது
By Deepal Jayasekera and Keith Jones
30 April 2018
இந்தியாவின் முக்கிய ஸ்ராலினிசக் கட்சியான, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம், காங்கிரஸ் கட்சியுடன் ஒரு கூட்டணிக்கான தளங்களை திறந்து விட்டுள்ளது. சமீபகாலம் வரை இந்திய முதலாளித்துவத்தின் முன்னுரிமை பெற்ற அரசாங்க கட்சியாக இது இருந்து வந்தது என்பதுடன், பல தசாப்தங்களாக ஒரு அழிவுகர நவ-தாராளவாத திட்ட நிரலை பின்பற்றுவது குறித்து சிபிஎம் கூட கண்டனம் செய்யும் ஒரு கட்சியாகவும் இது இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாக இணைந்து சிபிஎம் எப்படி வேலை செய்ய முடியும் என்பதும், அவ்வாறு செய்வதற்கு இது பகிரங்கமாக ஒப்புக்கொள்ள வேண்டுமே என்பதும்தான் கசப்பான விடயமாக இருந்த நிலையில், சிபிஎம் தலைமைக்குள் பல மாதங்கள் நீடித்த விவகாரமாகவே இவை இருந்தன. இந்த விவகாரம், கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியை அவரது முன்னோடி பிரகாஷ் காரத்திற்கு எதிராக மோதலுக்கு நிறுத்தியதோடு, சிபிஎம் இன் பிரதான மாநில அமைப்புகளான மேற்கு வங்கம் மற்றும் கேரள பிரிவுகளும் கூட ஒன்றுக்கொன்று எதிராக மோதிக்கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கியது.
ஏப்ரல் 18 முதல் 22 வரை ஹைதராபாத்தில் நடத்தப்பட்ட கட்சியின் 22வது மாநாட்டில், யெச்சூரி தலைமையிலான கன்னை, காங்கிரஸ் கட்சி உடனான ஒரு வெளிப்படையான தேர்தல் கூட்டணியை ஆதரிக்கிறது.
கட்சியின் முக்கிய அரசியல் தீர்மானம் மீதான விவாதத்தின் மூன்றாவது மற்றும் இறுதி நாளில், காரத்தும் அவரது கன்னையின் ஏனைய தலைவர்களும், இந்தியாவின் இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சி (BJP) அரசாங்கத்தை தோற்கடிப்பதே சிபிஎம் இன் பிரதான உடனடி இலக்காக இருக்கின்ற அதே நேரத்தில், “காங்கிரஸ் கட்சியுடன் ஒரு புரிதல் அல்லது தேர்தல் உடன்பாடு எதுவுமின்றி” இது நிறைவேற்றப்பட வேண்டும் என்பதாக தீர்மானத்தின் உட்கூறுகளின் இரண்டாவது பாதியை மாற்றுவதற்கு ஒப்புக்கொண்டனர். இந்த திருத்தப்பட்ட தீர்மானம் தொடர்ந்து ஒருமனதாக மாநாட்டின் ஆதரவைப் பெற்று, சிபிஎம், காங்கிரஸ் உடன் “ஒரு அரசியல் கூட்டணியை அமைத்துக்கொள்ள” கூடாது என வெறுமனே உறுதிகொள்ள செய்கிறது.
கடந்த காலத்தில், சிபிஎம் உம் சிபிஎம் ஆதிக்கத்திலான இடது முன்னணியும், அனைத்து நேரங்களிலும் காங்கிரசுடன் ஒரு “அரசியல் கூட்டணி” இல்லை என கூறிக் கொண்டே, காங்கிரசுக்கு தேர்தல் ஆதரவை வழங்கியுள்ளதோடு, பாராளுமன்றத்தில் வலதுசாரி காங்கிரஸ் கட்சி தலைமையிலான சிறுபான்மை அரசாங்கங்களுக்கு முட்டுக் கொடுத்துள்ளன.
சிபிஎம் மாநாட்டின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், யெச்சூரி, கட்சியின் மாநில பிரிவுகள் தங்களது மாநிலங்களில் நிலவும் “கள யதார்த்தங்கள்” மற்றும் கட்சியின் புதிய அரசியல் வழிமுறை ஆகியவற்றின் அடிப்படையில், 2019 வசந்த காலத்தில் நடைபெறவுள்ள தேசிய தேர்தல்களை முன்னிட்டு அவர்களது “தேர்தல் தந்திரோபாய வழியை” அவர்களே செயற்படுத்த அவர்களுக்கு சுதந்திரம் உண்டு என தெரிவித்தார். மேலும், ஸ்ராலினிச இரண்டு விதமான பேச்சைப் பயன்படுத்தி, “காங்கிரசுடன் நாம் எந்தவித அரசியல் கூட்டணியையும் அமைக்க போவதில்லை. ஆனால், வகுப்புவாதத்தை தடுத்து நிறுத்த (பாராளுமன்றத்திற்கு) உள்ளும் புறமும் ஒரு புரிதலை நாம் கொண்டிருப்போம்” என அறிவித்தார்.
இவையனைத்தும் மேற்கு வங்க சிபிஎம் தலைமையின் காதுகளுக்கு இசை போன்று ஒலித்தன, அங்கே “முதலீட்டாளர் சார்பு” கொள்கைகளாக தானே அழைத்துக்கொண்டவற்றை இடது முன்னணி பின்பற்றத் தொடங்கிய பின்னர் 2011 இல் அதன் அதிகாரம் வீழ்ச்சியுற்றது, மற்றும் தற்போது பிஜேபி மற்றும் வலதுசாரி ஜனரஞ்சக திரிணாமூல் காங்கிரஸ் இடையேயான அரசியல் துருவமுனைப்பிற்கு மத்தியில் இது ஒரு சிறிய ஆட்டக்காரராக தரம் தாழ்த்தப்படுவதாக அச்சுறுத்தப்பட்டும் நிலையில் உள்ளது. 2016 இல், மேற்கு வங்க சிபிஎம், யெச்சூரியின் ஆதரவுடன் சிபிஎம் இன் அரசியல் குழு மற்றும் மத்திய குழுவின் உத்திரவுகளை மீறி, அந்த வருட மாநிலத் தேர்தல்களில் போட்டியிட காங்கிரஸ் உடன் ஒரு “மகா கூட்டணியை” அமைத்தது.
காங்கிரஸ் குறித்த சிபிஎம் இன் இந்த பிரஸ்தாபம் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஆளும் வர்க்கத்தை பலப்படுத்தும் என கணக்கிட்டு, பெருநிறுவன ஊடகங்கள் கிட்டத்தட்ட சர்வ வியாபகமாக அதை வரவேற்றுள்ளன.
பிஜேபி அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள், “பெரும் வெடிப்பான” முதலீட்டாளர் சார்பு சீர்திருத்தங்கள் மற்றும் வகுப்புவாத தூண்டுதல் அனைத்துமே எப்போதும் விரிவடையும் சமூக எதிர்ப்பைத் தூண்டுகிறது, இவ்வாறான நிலைமைகளின் கீழ், இந்திய ஆளும் உயரடுக்கு, தேர்தல் அரசியலின் கடையிறுதி காலத்திற்குள் அதனை வழிப்படுத்தி திருப்பவும் மற்றும் “மக்கள் சார்பு” கொள்கைகளை இயற்றும்படி முதலாளித்துவ ஸ்தாபகத்திடம் பயனற்ற விண்ணப்பங்களை வைப்பதற்கும் அது ஸ்ராலினிஸ்டுகளையே சார்ந்துள்ளது. இது, பெருகிவரும் எதிர்ப்பை பிஜேபி ஆல் கட்டுபடுத்த முடியவில்லை என்ற நிலை வரும்போது, சிபிஎம் ஒரு “மதச்சார்பற்ற” மாற்று பெருவணிக அரசாங்கத்தை அமைப்பதிலும் மற்றும் அதை தாங்கிப் பிடிப்பதிலும் அதன் முன்னணிப் பாத்திரத்தை நிலைநாட்டுவதையும் மேலும் அப்படியான ஒன்று அதன் “பழம்பெரும் கட்சியான” காங்கிரசினால் தலைமை தாங்கப்படுவதற்கு முன்னுரிமை வழங்கப்படுவதை உள்ளடக்கியதாகவும் இருக்கும்.
மே 2004 இல், ஒரு முந்தைய பிஜேபி தலைமை வகித்த அரசாங்கத்திற்கு எதிராக எதிர்பாராத தேர்தல் பின்னடைவு நிகழ்ந்த போது, ஒரு அரசாங்கத்தை உருவாக்கும் காங்கிரஸின் முயற்சிக்கு பின்னால், பிராந்திய மற்றும் சாதி அடிப்படையிலான எதிர்க்கட்சிகளை அணிவகுக்க செய்வதில் சிபிஎம் ஒரு முக்கிய பங்கு வகித்தது. அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (United Progressive Alliance) அரசாங்கத்திற்கு தேவையான பாராளுமன்ற பெரும்பான்மையை , ஸ்ராலினிஸ்டுகள் வழங்கினர்.
எவ்வாறாயினும், இன்றைய நெருக்கடி நிறைந்த காங்கிரஸ் கட்சி ஸ்ராலினிஸ்டுகளுடன் இணைந்து வேலை செய்ய மிகுந்த ஆர்வமாக உள்ளது. சிபிஎம் மாநாட்டிற்கு முந்தைய மாதங்களில், முன்னாள் பிரதம மந்திரி மன்மோகன் சிங் உட்பட, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், ஒரு பிஜேபி விரோத “ஐக்கிய முன்னணி” கட்சியில் இணையுமாறு ஸ்ராலினிஸ்டுகளை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினர். “இடதின்” உதவியுடன், பூகோள மூலதனத்திற்கான மலிவு உழைப்பு புகலிடமாக இந்தியாவை மாற்றவும் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு “பூகோள மூலோபாய” கூட்டணியை உருவாக்குவதற்குமான முதலாளித்துவ வர்க்கத்தின் உந்துதலில் காங்கிரஸ் கொண்டிருந்த பங்கை மக்களுக்கு மறக்கடிக்கச் செய்ய முடியுமென அது நம்புகிறது.
போட்டி ஸ்ராலினிச கன்னைகளுக்கு இடையே எந்தவித கொள்கை ரீதியான வேறுபாடுகளும் இல்லை. காரத் பொதுச் செயலாளராக இருந்தபோது சிபிஎம், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியை ஆட்சியில் வைத்திருந்தது, மேற்கு வங்க சிபிஎம் தலைமை அரசாங்கம் தகவல் தொழில்நுட்ப மற்றும் தகவல் தொழில்நுட்ப இயக்கம் சார்ந்த துறைகளில் வேலைநிறுத்தங்களை சட்டவிரோதமானவை என அறிவித்தது, மேலும் பெரும்வணிக அபிவிருத்தி திட்டங்களுக்காக நில அபகரிப்பு செய்யப்பட்டது குறித்த விவசாயிகளின் எதிர்ப்பை நசுக்க பொலிஸ் மற்றும் குண்டர்களை பயன்படுத்தியது போன்றவை அதற்கு உதாரணமாகும்.
காரத் மற்றும் யெச்சூரி இருவரின் கூட்டுத் தலைமையின் கீழ் சிபிஎம், 2000 முதல் உருவாக்கப்பட்டுவரும் இந்திய அரசாங்கத்தின் மிகப்பெரும் இராணுவ கட்டமைப்பு குறித்தும் அல்லது பொதுவாக இந்திய முதலாளித்துவத்தின் சூறையாடும் பெரும் வல்லரசாகும் அபிலாஷைகள் குறித்தும் எந்தவொரு விமர்சனத்தையும் கொண்டிருக்கவில்லை. இந்திய-அமெரிக்க இராணுவ-மூலோபாய கூட்டணியை ஸ்ராலினிஸ்டுகள் இகழ்ந்துரைத்தாலும், அது, போர் அச்சுறுத்தல் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான நிலைப்பாட்டிலிருந்து எழவில்லை. மாறாக, இந்திய முதலாளித்துவம் அதன் “மூலோபாய சுயாட்சியை” மீள்உறுதிப்படுத்தவும், மேலும் வாஷிங்டனிடம் இருந்து அதனை விலக்கி வைத்துக்கொண்டால் தான் அதன் சொந்த “தேசிய நலன்களை” சிறப்பாக முன்னெடுக்க முடியும் என்பதற்காகவும் தான் அவர்கள் அதனிடம் விண்ணப்பம் செய்கின்றனர்.
மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும் கட்சி எதிர்கொள்ளும் வெவ்வேறான தேர்தல் நிர்பந்தங்கள் தான் சிபிஎம் கன்னைப் போராட்டத்தில் ஒரு பிரதான காரணியாக உள்ளது. இந்நிலையில் மேற்கு வங்க மாநில தேர்தல் அரசியலில் குறிப்பிடத்தக்க காரணியாக அவர்கள் தொடர்ந்து இருக்க வேண்டுமானால், காங்கிரஸ் உடன் ஒரு கூட்டணி வைத்துக்கொள்வது அவசியமென ஸ்ராலினிஸ்டுகள் நம்புகின்றனர், கேரளாவில் காங்கிரஸ் கட்சிதான் அவர்களது முக்கிய போட்டியாளனாக உள்ளது.
இருப்பினும், கடந்த கால் நூற்றாண்டு காலமாக, அடுத்தடுத்த வலதுசாரி காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கங்களுக்கு சிபிஎம் அளித்த ஆதரவினால் அது ஆழமாக மதிப்பிழந்துவிட்டது என்ற அவர்களது அச்சத்தின் காரணமாகத் தான் தங்களை தாமே காங்கிரஸ் கட்சியின் உறுதியான எதிராளிகளாக காண்பிப்பதற்காக ஸ்ராலினிஸ்டுகளை முன்தள்ள காரத் கன்னை உந்துதல் கொடுக்கிறது. கேரளாவின் பெயர் குறிப்பிடாத சிபிஎம் அரசியில் குழு உறுப்பினர் ஒருவர், கட்சி மாநாட்டின் ஒருபுறமாக India Today பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “சில” பிரதிநிதிகள் “காங்கிரஸ் உடனான எந்தவொரு உறவையும் எதிர்க்கின்றனர்… மேலும் காங்கிரஸின் “பி டீம்” (இரண்டாவது அணி) போன்று செயலாற்றுவது, கட்சியை நீண்ட காலப்போக்கில் அழித்துவிடும் என எச்சரித்ததாகவும்” கூறினார்.
கட்சி மாநாட்டிற்கான அரசியல் குழு மற்றும் மத்திய குழுவின் முன்னேற்பாட்டு கூட்டங்களில், காங்கிரஸ் கட்சி உடனான உறவுகளின் மீதான காரத் கன்னையின் நிலைப்பாடு வென்றது. ஆனால், மேற்கு வங்க கட்சித் தலைமையினால் தூண்டப்பட்டு, யெச்சூரி, சிபிஎம் வரலாற்றில் அநேகமாக முன்னெப்போதும் எடுக்கப்படாத ஒரு நடவடிக்கையாக, கட்சி மாநாட்டில் அவரது “சிறுபான்மை” கருத்தை முன்வைக்க தனக்குள்ள உரிமையை நிலைநாட்டுவதற்கு வலியுறுத்தினார்.
மார்ச் மாத தொடக்கத்தில் திரிபுரா மாநிலத் தேர்தல்களில் சிபிஎம் தலைமையிலான மாநில அரசாங்கத்தை, பிஜேபி படுதோல்வியுறச் செய்தமை அக்கட்சிக்குள் கன்னை மோதல்களை இன்னும் தீவிரப்படுத்தியது.
அடித்தளம் மாறுவதை உணர்ந்து, காரத்தும் அவரது ஆதரவாளர்களும் காங்கிரசுடன் ஒரு “புரிதலை” ஆதரிக்கும் நபர்களை சமாதானப்படுத்த முனைந்தனர். 2019 இல் “பிஜேபி அல்லாத எந்தவொரு கட்சியுடனும்” என்ற பிரச்சாரத்தின் ஒரு பாகமாக, பிஜேபி இன் பிரதான தேர்தல் போட்டியாளனாக காங்கிரஸ் இருக்கும் மாநிலங்களில் அதற்கு ஆதரவாக வாக்காளர்களை இயக்குவதற்கு அவர்கள் தயங்க மாட்டார்கள் என்பதும் இதில் அடங்கியுள்ளது, அதே வேளையில், காங்கிரசுடன் ஏற்கனவே கூட்டணி வைத்துள்ள தமிழகத்தை தளமாகக் கொண்ட திமுக (DMK) போன்ற கட்சிகளுடன் தேர்தல் கூட்டணிகளை சிபிஎம் அமைப்பதை அவர்கள் எதிர்க்கவும் இல்லை என்பதையும் அவசரமாக சேர்த்துக் கூறினார்கள்.
அனைத்திற்கும் மேலாக, தேர்தலுக்கு பிந்தைய இந்திய அரசாங்கத்தை அமைக்க காங்கிரஸ் ஒரு முயற்சி எடுக்குமாயின் அதற்கு ஆதரவளிக்க இரு கன்னைகளுமே தயாராக இருக்கும் என்பதில் ஒருபோதும் சந்தேகம் இருக்க முடியாது, பிஜேபி அல்லாத ஒரு நிலையான அரசாங்கத்தை அமைக்க ஒரே அல்லது சிறந்த வழியாக அது மட்டுமே இருக்குமாயின், சிபிஎம் அதன் பாராளுமன்ற ஆதரவை அதற்கு வழங்குவது மற்றும் பிற கட்சிகளையும் அதனுடன் இணையும்படி கோரி சமாதானப்படுத்த பாடுபடுவதும் அதில் உள்ளடங்கும்.
ஆனால் யெச்சூரிக்கும் அவரது கன்னைக்கும் இந்த சலுகைகள் போதுமானதாக இல்லை. காங்கிரஸ் உடன் கூட்டணி ஏற்படுத்துவதற்கு இருக்கும் எந்தவித தடைகளையும் அகற்றிட மற்றும் அதற்காக கட்சியின் தலைமைக்குள் பிளவுகளை ஆழப்படுத்த நேரிட்டாலும் கூட அதை செய்ய அவர்கள் தீர்மானமாக உள்ளனர்.
காரத் கன்னை அதன் நிலைப்பாட்டை மாநாடு ஏற்றுக்கொள்ளும் வகையில் போட்டிருக்கும் திட்டங்களை முறியடிப்பதற்காக, பிரதான அரசியல் தீர்மானத்தில் திருத்தம் செய்யும் முக்கிய நடவடிக்கை குறித்த ஒரு வாக்கெடுப்பை நடத்த இரகசிய வாக்களிப்பு முறைக்கு அழைப்பு விடுக்க, யெச்சூரி கன்னை குறைந்தபட்சம் 16 மாநிலங்களில் இருந்து வந்த பிரதிநிதிகளை ஏற்பாடு செய்திருந்தது. இது குறித்து, முன்னாள் பொதுச் செயலாளர் செய்தி ஊடகத்திடம் பேசுகையில் கட்சி அரசியலமைப்பில் இரகசிய வாக்கெடுப்பு நடத்த எந்தவித ஒதுக்கீடும் இல்லை என்று கூறி ஆரம்பத்தில் காரத்தும் அவரது ஆதரவாளர்களும் அதை எதிர்த்தனர். உண்மையில், இந்த இரகசிய வாக்கெடுப்பில் கேரளாவின் பிரதிநிதிகள் உட்பட, அவர்களது சில ஆதரவுகள் கரைந்து இல்லாமல் போய்விடக் கூடுமென்று அவர்கள் தெளிவாக அஞ்சினர்.
இத்தகைய நிலைமைகளின் கீழ்த்தான், காரத் கன்னை இறுதியில் மறுபக்கமாக முகத்தை திருப்பி, காங்கிரஸ் உடனான ஒரு “புரிதல் அல்லது தேர்தல் கூட்டணியை” தடுக்கும் நிபந்தனைகளை அகற்றுவதற்கு அனுமதித்தது.
அதேபோல, மாநாட்டின் கடைசி நாளன்று உயர்மட்ட தலைமைகளின் கூட்டத்தில், இரண்டாவது முறையாக கட்சியின் பொதுச் செயலாளராக யெச்சூரியின் தேர்வுக்கு சவால் விடுவதிலிருந்து காரத் கன்னை பின்வாங்கியது. திரிபுராவின் முன்னாள் முதலமைச்சர் மானிக் சர்க்கார் உட்பட, காரத் ஆதரவாளர்கள் பல சாத்தியமான போட்டியாளர்களை பரிந்துரைத்திருந்தாலும், பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்கும் பண்புக்கூற்றுக்களாக இல்லாமல், இறுதியில் மத்திய குழுவின் முன்னால் யெச்சூரியின் பெயர் எதிர்ப்பின்றி முன்வைக்கப்பட்டது.
எல்லாவற்றையும் சொல்லி முடித்தபோது, தற்போது நிறைவுற்ற அதன் கட்சி மாநாட்டில் சிபிஎம் ஏற்றுக்கொண்ட கொள்கை, கடந்த கால் நூற்றாண்டு காலமாக அது பின்பற்றி வந்த கொள்கையின் இன்னும் வெளிப்படையான வலதுசாரி வகையறாவாகத் தான் இருக்கிறது. வகுப்புவாத பிஜேபி யை தோற்கடிக்கும் பெயரில், அது வர்க்கப் போராட்டத்தை முறையாக ஒடுக்கியுள்ளது, அதேவேளை தொழிலாள வர்க்கத்தை காங்கிரஸ் கட்சி மற்றும் முன்னாட்களில் பிஜேபி யின் கூட்டணியினராக இருந்த பிராந்திய மற்றும் சாதி அடிப்படையிலான பல கட்சிகளுடன் முடிச்சுப் போட்டது.
ஸ்ராலினிச ஆதரவிலான “மதச்சார்பற்ற அரசாங்கங்கள்” பின்பற்றிய நவ தாராளவாத கொள்கைகளின் விளைபொருட்களான, பரந்த சமூக சமத்துவமின்மை, கடுமையான வறுமை, மற்றும் ஆழமடைந்துவரும் பொருளாதார பாதுகாப்பின்மை போன்றவற்றின் மீதான பொதுமக்கள் கோபத்தை சுரண்டவும் மற்றும் நாட்டின் மேலாதிக்க அரசியல் சக்தியாக உருவெடுக்கவும் பிஜேபி க்காக ஒரு பாதையை திறந்துவிட்டுள்ளது என்ற வகையில் இது அதன் துரோகக் கொள்கையாகும்.
இந்த ஆபத்தான முட்டுக்கட்டையை உடைத்து வெளியேற, இந்தியாவின் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களுக்கு முற்றிலும் ஒரு புதிய மூலோபாயம் தேவை – அதாவது அது முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டலை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும், அது வகுப்புவாத பிற்போக்குக்கு எதிர்ப்பு மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கின்ற போராட்டத்தை தொழிலாளர்களின் அரசாங்கம் அமைப்பதற்கான மற்றும் சமுதாயத்தை சோசலிச மறுசீரமைப்பு செய்யும் போராட்டத்துடன் ஒருங்கிணைப்பதாக இருக்க வேண்டும்.