Print Version|Feedback
Trump’s secret diplomacy with North Korea
வடகொரியாவுடன் ட்ரம்ப்பின் திரைமறைவு இராஜதந்திரம்
Peter Symonds
19 April 2018
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வட கொரியாவை அணு ஆயுதங்களைக் கொண்டு அழித்தொழிக்க இருப்பதாக மிரட்டி சில மாதங்களே ஆகியிருக்கும் நிலையில், நிகழவிருக்கும் ட்ரம்ப்-கிம் சந்திப்புக்கான தயாரிப்பில் சிஐஏ இயக்குநரான மைக் பொம்பியோ ஈஸ்டர் தின சமயத்தில் பியோங்கியாங் பயணம் செய்ததையும் அங்கு வட கொரியத் தலைவர் கிம் ஜோங்-உன் உடன் சந்தித்ததையும் ஊர்ஜிதம் செய்தார். வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் “நேரத்தை விரயம்” செய்து கொண்டிருந்ததாக முன்னாள் வெளியுறவுச் செயலரான ரெக்ஸ் டில்லர்சனை கிண்டல் செய்த ட்ரம்ப், இப்போது “குட்டி ராக்கெட் மனிதர்” என்று அவர் கேலி செய்த அதே தலைவருடன் நேருக்கு நேர் சந்திப்பு நிகழ்த்துவதற்கு தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறார்.
இந்த திடீர் பல்டியானது, சிரியா மீது இப்போதுதான் சட்டவிரோத ஏவுகணைத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்ட ட்ரம்ப்பின் தரப்பில் எந்த அடிப்படையான மனமாற்றமும் ஏற்பட்டிருப்பதை வெளிப்படுத்தவில்லை. மாறாக, வட கிழக்கு ஆசியாவில் பிரதான எதிரிகளான ரஷ்யா மற்றும் சீனா, அத்துடன் போட்டியாளராகும் சாத்தியம் கொண்ட ஜப்பான் போன்ற நாடுகளுக்கு எதிராய் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களை முன்தள்ளுவதற்கும் அமெரிக்க நிலையை வலுப்படுத்திக் கொள்வதற்குமான சாத்தியத்தை ட்ரம்ப் நிர்வாகம் உணர்கிறது என்பதையே வெளிப்படுத்துகிறது.
பியோங்கியாங் ஆட்சி விடயத்தில் ட்ரம்ப்பின் பல்டிகள், சீனாவை நோக்கி வலது-சாரி அமெரிக்க ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சன் அடித்த திடீர் பல்டிக்கு இணையானதாக இருக்கிறது. 1972 பிப்ரவரியில் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான மாவோ சேதுங் உடன் நிக்சன் சந்திப்பதற்கான அடிப்படையை ஸ்தாபிப்பதற்காக நிக்சனின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான ஹென்றி கிஸ்ஸிங்கர் 1971 இல் வரிசையாக பெய்ஜிங்கிறகு பல இரகசியப் பயணங்கள் மேற்கொண்டார். முன்னாள் சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான நோக்கத்தைக் கொண்டிருந்த சீனாவுடனான நிக்சனின் நெருக்கம், சீனாவில் முதலாளித்துவ மீட்சிக்கும் உலகின் முன்னிலை மலிவு உழைப்புக் களமாக அது உருமாற்றப்படுவதற்குமான அடிப்படையை அமைத்தது.
ட்ரம்ப்-கிம் சந்திப்பு இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஒரு உடன்பாட்டை உருவாக்கிவிடும் என்பது எந்த விதத்திலும் நிச்சயமானதல்ல. செவ்வாய்கிழமையன்று ஜப்பானிய பிரதமர் சின்ஸோ அபேயை சந்தித்துக் கொண்டிருந்த சமயத்தில், ட்ரம்ப், இந்த சந்திப்பு “ஒரு உலகப் பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரு பெரும் வாய்ப்பாக அமையும்” என்று ஊடகங்களிடம் தெரிவித்தார். “அது மிக நல்ல சந்திப்பாக ஆகலாம், நல்ல சந்திப்பாக ஆகாமலும் போகலாம். நிலைமையைப் பொறுத்து, நாங்கள் சந்திக்க முடியாமலேயும் போகலாம்” என்று அவர் மேலும் சேர்த்துக் கொண்டார்.
நிக்சன்-மாவோ சந்திப்புக்கு சுமார் 50 ஆண்டுகளின் பின்னர், அமெரிக்கா சீனாவை தனது உலக மேலாதிக்கத்திற்கான மிகப்பெரும் முட்டுக்கட்டையாகக் கருதுகிறது. ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கீழும் இப்போது ட்ரம்ப்பின் கீழும், அமெரிக்கா, சீனாவின் செல்வாக்கை பலவீனப்படுத்தவும் போருக்கு தயாரிப்பு செய்யவும் கணக்கிட்டு, இந்தோ-பசிபிக் எங்கிலும் சீனாவுக்கு எதிரான திறம்பட்டதொரு இராஜதந்திர மற்றும் பொருளாதாரத் தாக்குதலை தொடுத்து வந்திருக்கிறது. கடந்த பல மாதங்களில், வர்த்தகப் போர் மிரட்டல்கள் சகிதமாய் பெய்ஜிங் உடனான உறவுகளில் ஒரு துரிதமான சரிவு இருந்து வந்திருக்கிறது, அத்துடன் சிரியா விவகாரத்தில் ரஷ்யாவுடனான உறவுகளிலும் இது நடந்திருக்கிறது, அங்கு மாஸ்கோவின் கூட்டாளியான சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தை பதவியிறக்க அமெரிக்கா முனைந்து வருகிறது.
1991 இல் முன்னாள் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது முதலாக, அமெரிக்கா வட கொரியாவை படிப்படியாக இராஜதந்திர ரீதியாக தனிமைப்படுத்தி வந்திருப்பதோடு அதன் பொருளாதாரத்தின் மீது முடக்கும் தடைகளை விதித்து வந்திருக்கிறது. அந்த நாட்டின் மிகச்சிறிய அணுஆயுத வல்லமையால் முன்நிறுத்தப்பட்டதாக சொல்லப்பட்ட ஆபத்தை முடிவுக்குக் கொண்டு வருவதல்ல இந்த மூலோபாயத்தின் முக்கிய நோக்கம், மாறாக ஏதேனும் ஒரு வழியில் அதனை அமெரிக்காவின் செல்வாக்கு வட்டத்திற்குள் கொண்டுவருவது தான் அதன் நோக்கமாய் இருந்தது. அத்துடன், பியோங்கியாங்கில் இருக்கும் ஒடுக்குமுறையான இராணுவ/போலிஸ்-அரசு ஆட்சியின் மனித உரிமைகள் மீறல்களைக் குறித்தெல்லாம் அமெரிக்காவுக்கு நிச்சயமாக எந்த அக்கறையும் கிடையாது.
சீனாவை, அதன் கூட்டாளியை நோக்கி பொருளாதாரப் பிடியை திடீரென்று பெருமளவில் இறுக்கும்படி செய்துவிட்ட பின்னர், இப்போது, வட கொரியாவை அமெரிக்காவின் எதிரியாக இருப்பதில் இருந்து சீனா மற்றும் ரஷ்யாவுடனான அமெரிக்காவின் மோதலில் ஒரு கூட்டாளியாக மாற்றிவிட முடியும் என்று ட்ரம்ப் கணக்குப் போடலாம். வட கிழக்கு ஆசியாவில் ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கான போட்டியில், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளையும் எல்லையில் கொண்டிருக்கும் கொரிய தீபகற்பம், எப்போதும் மூலோபாயரீதியாக முக்கியத்துவம் மிக்கதாக இருந்து வந்திருக்கிறது. மில்லியன் கணக்கான உயிர்களைப் பலிகொண்ட அமெரிக்க தலைமையிலான 1950-53 கொரியப் போர், கொரியாவை மேலாதிக்கம் செய்வதற்காக நடைபெற்றதாகும். இது சீனாவுடன் ஒரு விரிந்த மோதலுக்கான முன்னோட்டமாக வாஷிங்டனில் பார்க்கப்பட்டது, இந்த மோதலில் சீனாவின் நுழைவு அமெரிக்காவின் நம்பிக்கைகளைத் தகர்த்தெறிந்தது.
2012 இல் கிங் ஜோங்-உன் பதவிக்கு வந்தது முதலாக, சீனாவுடனான வட கொரியாவின் உறவுகள் கணிசமாக மோசமடைந்திருக்கின்றன. சென்ற மாதத்தில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உடன் சந்திக்க கிம் பெய்ஜிங் சென்றபோது அதுதான் அவருடைய முதல் சந்திப்பாக இருந்தது என்பதுடன், ட்ரம்ப்புடனான சந்திப்பு எதிர்வரும் நிலையில் தனக்கிருக்கும் தெரிவுகளுக்கு முட்டுக்கொடுக்கும் நோக்கம் கொண்டதாக அச்சந்திப்பு இருந்தது என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இரண்டு தசாப்த கால தோல்வியடைந்த பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தங்களில் சுயபாதுகாப்பு —கொரியப் போரை முறைப்படி முடிவுக்குக் கொண்டுவருகின்ற ஒரு அமைதி ஒப்பந்தம் மற்றும் வாஷிங்டனிடம் இருந்தான பாதுகாப்பு உத்தரவாதங்கள்— தான் வடகொரிய ஆட்சியின் பிரதான நோக்கமாக இருந்து வந்திருக்கிறது. செவ்வாயன்று கருத்துக்கூறிய ட்ரம்ப், இந்த மாதத்தின் பின்பகுதியில் கிம் மற்றும் தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் இடையேயான பேச்சுவார்த்தைகளில் ஒரு அமைதி ஒப்பந்தத்தை விவாதிப்பதற்கு தென் கொரியாவுக்கு தனது “ஆசி”யை வழங்கியிருந்ததாகக் கூறினார்.
ஜப்பான் பிரதமர் அபே உடனான சந்திப்புகளுக்கு இடையில் பொம்பியோவின் பியோங்கியாங் விஜயம் குறித்து வெளிப்படுத்த ட்ரம்ப் முடிவு செய்தமை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 1972 இல் நிக்சன் எப்படி தனது பெய்ஜிங் விஜயம் குறித்து ஜப்பானுக்கு வெளிப்படுத்தாமல் இருந்து வந்திருந்தாரோ, அதைப் போலவே ட்ரம்ப்பும், முதலில் கிம் உடனான அவரது சந்திப்பு குறித்த அறிவிப்பையும், இப்போது அவரது “மிக உயர்நிலை” இரகசிய இராஜதந்திர நடவடிக்கைகளையும் அபே க்கு தெரியாமலேயே வைத்திருந்திருக்கிறார். வட கொரியாவின் ஏவுகணை சோதனையை, மறுஇராணுவமயமாக்கலுக்கு சாக்குபோக்காக பயன்படுத்தி, ட்ரம்ப்பின் அதே அளவுக்கு வடகொரியாவை நோக்கி மூர்க்கத்தனமாக இருந்து வந்திருக்கின்ற அபே, ஜப்பானின் மூலோபாய நலன்களுக்கு முட்டுக்கட்டை போடக் கூடிய ஒரு பியோங்கியாங்-வாஷிங்டன் உடன்படிக்கைக்கான சாத்தியத்திற்கு முகம்கொடுக்கிறார்.
வடகொரியா விடயத்தில் ட்ரம்ப்பின் மாற்றமானது சொந்தநாட்டில் கூர்மையான அரசியல் நெருக்கடி நிலவுவதுடனும், அத்துடன் வெளியிலான புவியரசியல் பரிசீலனைகளுடனும் பிணைந்திருக்கிறது. பல ஊழல் புகார்களுக்கும், ரஷ்யாவுக்கு எதிராய் ஒரு கடுமையான நிலைப்பாடு எடுக்கத் தவறியதற்காக அவர் மீது தொடுக்கப்படுகின்ற தாக்குதல்களுக்கும் முகம்கொடுக்கின்ற ட்ரம்ப், ஒரு “உலகப் பிரச்சினை”யை அமெரிக்காவுக்கு அனுகூலமான விதத்தில் தீர்ப்பதற்காக ஒரு இராஜதந்திரரீதியான புரட்டிப்போடலை ஏற்பாடு செய்வதன் மூலமாக தனது விமர்சகர்களுக்கு பதிலளிக்க வாய்ப்பு இருப்பதாக காணக்கூடும். அவரது நடவடிக்கை ஆளும் வட்டாரங்களில் இருக்கும் ட்ரம்ப்பின் கன்னை எதிரிகளிடம் இருந்து தீர்மானகரமான எதிர்ப்பைத் தூண்டப் போவது நிச்சயம், பொம்பியோவின் இரகசியப் பயணத்திற்கு நியூ யோர்க் டைம்ஸ் காட்டியிருக்கும் ஆரம்பகட்ட குரோத எதிர்வினையில் இது ஏற்கனவே அறிகுறி காட்டப்பட்டிருக்கிறது.
ட்ரம்ப்-கிம் சந்திப்பால் என்ன விளையப் போகிறது, அல்லது அது நடக்குமா என்பதையும் கூட இப்போது கூறுவது மிகவும் அவசரகதியிலானதாக இருக்கும். 1930களின் பெருமந்தநிலை மற்றும் போரின் பெருகிய அபாயங்களது மத்தியில் சர்வதேச இராஜதந்திரம் என்பது முழுமையாக ஆச்சரியமளிக்கத்தக்க திருப்பங்களையும் எதிர்பாராத நிகழ்வுகளையும் கொண்டதாய் இருந்தது. நாஜி தலைவர் அடோல்ப் ஹிட்லர் 1934 இல் போலந்துடனும் அதன்பின் 1939 இல் சோவியத் ஒன்றியத்துடனும் ஒரு முதலில்-தாக்காத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், பின் இவை இரண்டையுமே அவர் முறித்தார்.
வடகொரியத் தலைவருடன் ஒரு உடன்பாட்டை எட்ட ட்ரம்ப்புக்கு முடியாது போகுமேயானால், அந்த சந்திப்பானது கணக்கிட முடியாத விரிந்த பின்விளைவுகளுடன் கொரிய தீபகற்பத்தில் ஒரு அழிவுகரமான மோதலைத் தூண்டத்தக்க அமெரிக்காவின் இராஜதந்திர ஆத்திரமூட்டலுக்கான அமைவாக துரிதமாய் மாற்றம் காணும். படுகொலையின் மூலமாக கிம்மை அவரது அணுஆயுத வல்லமையில் இருந்து “பிரிப்பதற்கான” திட்டங்களை சிஐஏ கொண்டிருந்ததாக சென்ற ஆண்டில் தான் குறிப்பு காட்டியிருந்த பொம்பியோவை ட்ரம்ப் தேர்வு செய்திருக்கிறார் என்ற உண்மையே, ஊசலாட்ட பெண்டுலம் போரை நோக்கி துரிதமாக நகரக் கூடும் என்பதற்கான ஒரு எச்சரிக்கையாகும்.
ட்ரம்ப் ஒரு இராஜதந்திர புரட்டிப்போடலை நடத்த முடிந்து பியோங்கியாங் உடன் ஒரு உடன்பாட்டை எட்டி விட்டாரென்றாலும் கூட, அது அமைதி மலர்வதற்கு இட்டுச் செல்வதற்கான வாய்ப்பு மிகக் குறைவேயாகும். சீனா மற்றும் ரஷ்யா ஆகிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரதான இலக்குகளுடன் மோதல் துரிதமாகத் தீவிரமடைவதற்கான களத்தை அது அமைத்துக் கொடுப்பதற்கான சாத்தியமே மிக அதிகமாய் இருக்கும்.