Print Version|Feedback
උතුරු පලාතේ ස්වේච්ඡා ගුරුවරුන් ස්ථීර පත්වීම් ඉල්ලා සටන් කරයි
இலங்கையின் வடக்கில் தொண்டர் ஆசிரியர்கள் நிரந்தர நியமனம் கோரி போராட்டம் நடத்தினர்
By R. Sutharsan and Vimal Rasenthiran
30 March 2018
இலங்கையில் யுத்தத்தால் நாசமாக்கப்பட்ட வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் கடந்த 10 வருடங்களுக்கு அதிகமாக கற்பிக்கும் தொண்டர் ஆசிரியர்கள், கடந்த செவ்வாயன்று நிரந்தர நியமனம் கோரி வட மாகாண சபையின் வாயிலை முற்றுகையிட்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆசிரியர்கள் கடந்த பல வருடங்களாக அடிக்கடி மேற்கொண்ட போராட்டங்களில் இது அண்மையதாகும்.
வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் சங்கம் ஒழுங்கு செய்திருந்த இந்தப் போராட்டத்தில் சுமார் 60 பேர் வரை உண்ணா விரதத்தில் ஈடுபட்ட அதேவேளை, மேலும் பலர் அங்கு வந்து தமது ஆதரவை வெளிப்படுத்திச் சென்றனர்.
அரசாங்கம் போராட்டக்காரர்களை கலைப்பதற்கு பொலிசை அனுப்பியிருந்த போதிலும், அவர்கள் நகராமல் உறுதிப்பாட்டுடன் போராட்டத்தை நடத்தி முடித்தனர்.
வடக்கு மாகாணத்தில் மட்டும் 1040 தொண்டர் ஆசிரியர்கள் அரசாங்க பாடசாலைகளில் சம்பளமின்றி கற்பித்து வருகின்றனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கமும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கமும் அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதாக வாக்குறுதி கொடுத்த போதிலும் அதை நிறைவேற்றவில்லை.
கடந்த மார்ச் 16 அன்று, 200கும் அதிகமான தொண்டர் ஆசிரியர்கள் கொழும்பு சென்று கல்வி அமைசின் செயலாளரை சந்தித்து தமது நியமனம் தொடர்பாக வலியுறுத்தியிருந்தனர். அதன் தொடர்ச்சியாகவே இந்த உண்ணாவிரதத்தை இவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
கடந்த வருடம் அமைச்சரவைத் தீர்மானத்தில், 2013 டிசம்பர் 31ம் திகதிக்கு முன்னர் மூன்று வருட சேவையை பூர்த்தி செய்த, க.பொ.த. உயர் தரத்தில் 3 பாட சித்தியடைந்த 676 தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த தீர்மானம் தொடர்பாக ஆசிரியர்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்ட நிலையிலேயே கடந்த ஜூன் மாதக் கடைசியில் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு, வெறும் 182 பேருக்கு மட்டும் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது, மிகுதிப் பேருக்கு கட்டம் கட்டமாக வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தொண்டர் ஆசிரியர்கள்
குறிப்பிடப்பட்ட கால அளவை பூர்த்தி செய்யாத, கல்வித்தகமை குறைந்த, அனேகமானோர் இந்த 182 பேரில் உள்ளடக்கப்பட்டு முறைகேடு இடம்பெற்றுள்ளதாக குற்றம் சாட்டிய தொண்டராசிரியர்கள், இதனை கண்டித்து சகலருக்கும் நிரந்தர நியமனம் வழங்குமாறு கோருகின்றனர்.
இது சம்பந்தமாக 25 பேர் வவுனியாவில் உள்ள மனித உரிமைகள் ஆணைக் குழுவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளனர். இவ்வளவு காலமாக முறைப்பாட்டை ஓரங்கட்டி வைத்திருந்த ஆனைக் குழு, இப்போது சீற்றமடைந்துள்ள தொண்டர் ஆசிரியர்களை கட்டுப்படுத்துவதற்காக, இந்த முறைப்பாட்டைப் பற்றி கலந்துரையாட எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 10 திகதியை ஒதுக்கியுள்ளது.
வடக்கைத் தளமாகக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு, வட மாகாண சபையை கைப்பற்றிக்கொண்டால் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என வாக்குறுதியளித்து, 2013 நடந்த தேர்தலில் வடமாகாண சபையைக் கைப்பற்றிக் கொண்டது. எனினும், வேலை வாய்ப்பின்மை போன்ற அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலாயக்கற்று இருக்கும் அதேவேளை, அது ஆட்சிக்கு கொண்டுவந்த அமெரிக்கச் சார்பு அரசாங்கம் கல்வியைத் தனியார்மயமாக்குவது உட்பட நலன்புரி சேவைகளை வெட்டித் தள்ளும் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஆதரவளித்து வருகின்றது.
கடந்த மார்ச் 28 அன்று, அலரிமாளிகையில் நடந்த வடக்கு மாகாணத்தின் 324 பேருக்கு நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போது, “வடக்கில் ஒட்டு மொத்த கல்வி முறையும் வீழ்ச்சியடைந்துள்ளது” என நீலிக் கண்ணீர் வடித்த பிரதமர் விக்கிரமசிங்க, அதை “புதுப்பிப்பதற்கு குறைந்த பட்சம் இன்னும் பத்து ஆண்டுகள் தேவை” என்றார். பிரதமர் இந்த பத்தாண்டுகளைக் கேட்பது, யுத்தம் முடிந்து கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளை நெருங்கியுள்ள நிலையிலேயே ஆகும். அவரது அரசாங்கம் நாடு பூராவும் கல்வி உட்பட உழைக்கும் மக்களின் உரிமைகளை நசுக்கி வரும் நிலைமையில், வடக்கில் கல்வியை மேம்படுத்துவது பற்றிய அவரது உரை ஏமாற்று வித்தை மட்டுமே.
தொண்டர் ஆசிரியர்களின் இந்தப் போராட்டம் வடக்கிலும் கிழக்கிலும் நிலவும் வறிய சமூக நிலைமை மட்டுமன்றி வேலைவாய்ப்பின்மை பிரச்சினையினதும் ஒரு வெளிப்பாடாகும். தொண்டர் ஆசிரியர்களுக்கும் மேலாக, மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் வடக்கிலும் இன்னும் ஆயிரக்கணக்கானவர்கள் கிழக்கிலும் கடந்த ஆண்டு மாதக் கணக்காக கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். வடக்கில் நகர சபைகளிலும் சுகாதார சேவையிலும் இவ்வாறு நிரந்தர நியமனமின்றி நூற்றுக்கணக்கான தற்காலிக தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.
பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் 2009ல் கொடூரமாக முடிவுக்கு கொண்டுவந்த பின்னர், நூற்றுக்கணக்கான முன்னாள் புலி போராளிகள் வேலையின்மை காரணமாக இலங்கை இராணுவத்தின் சிவில் பாதுகாப்பு படையில் இணைந்துகொண்டு, இராணுவத்தின் கட்டுப்பாட்டிலான பண்ணைகளில் வேலை செய்கின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பல தொண்டர் ஆசிரியர்கள் உலக சோசலிச வலைத் தள நிருபர்களுடன் உரையாடினர்:
கிளிநொச்சி மாவட்டத்தில் அக்கராயன் மகா வித்தியாலயத்தில் கற்பிக்கும் 34 வயதான ஒரு ஆசிரியர், ஒரு வருடத்திற்கும் மேலாக புலிகளின் கட்டுப்பாட்டில் பலாத்காரமாக வைக்கப்பட்டிருந்தார். பின்னர் போரின் முடிவில் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு, “புனர்வாழ்வு” என்ற பெயரில் இரண்டரை ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்து, 2012ல் விடுவிக்கப்பட்டுள்ளார். 2013 காலப்பகுதில் நியமனம் கிடைப்பதற்கானோர் பட்டியலில் தனது பெயரும் இடம்பெற்றிருந்ததாக கூறிய அவர், அப்போதைய இராஜபக்ஷ ஆட்சியில் பங்காளியாக இருந்த இராணுவத்தின் துணைப் படைக் குழுவாகவும் இயங்கிய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் (ஈ.பி.டி.பி.) தனது பெயரையும் இன்னொரு ஆசிரியையின் பெயரையையும் நீக்கிவிட்டு தமக்கு சார்பானவர்களுக்கு நியமனம் வழங்கிவிட்டதாக, குற்றம் சாட்டினார்.
அவர் கூறியதாவது: “நான் கடந்த 2004ல் இருந்து கற்பிக்கின்றேன். நாங்கள் 5 பேர் கொண்ட குடும்பம். அப்பா இறுதி யுத்தத்தின் போது ஷெல் வீச்சில் கொல்லப்பட்டதில் இருந்து நான்தான் குடும்ப பொறுப்பை சுமக்கிறேன். எனக்கு வலது கை மற்றும் உடலிலும் யுத்தப் பாதிப்பு உள்ளது. எனக்கு நியமனம் வழங்கப்படவில்லை, ஆனால் என்னிடம் கல்வி கற்ற மாணவர்கள் சிலர் பல்கலைக்கழகத்தில் வேலை செய்வதுடன் சிலர் நான் கற்பிக்கும் அதே பாடசாலைக்கு நியமன ஆசிரியராக வந்துள்ளானர். எமக்கு நியமனம் வழங்க அவர்கள் குறிப்பிடும் 13 ஆவணங்கள் தேவை என்கின்றனர். நாங்கள் யுத்தத்தில் உயிரை பாதுகாக்க இடம் பெயர்ந்து ஓடிய சந்தர்ப்பங்களில் சொத்துக்களுடன் அவற்றையும் இழந்து விட்டோம். இருப்பினும் அவற்றை தம் வசம் வைத்துள்ளவர்களுக்கு கூட நியமனம் வழங்கப்படவில்லை.
“நாங்கள் வாக்களித்து பதவியிலுள்ள தமிழ் அரசியல் தலைவர்களோ தென்னிலங்கையில் உள்ள சிங்கள அரசியல்வாதிகளின் சம்பந்திகளாகவுள்ளனர். அவர்களுக்கு தங்களது சொந்த நலன்தான் முக்கியமாகவுள்ளது. அதற்கே எம்மை பயன்படுத்துகின்றனர். இங்குள்ள அரசியல் கட்சிகளுக்கு பெயர்தான் வேறுபாடாக உள்ளதே தவிர அவற்றின் நிலைப்பாடு ஒன்றாகவே உள்ளது. 34 வயதாகியும் எனக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. வேலையில்லாதவனுக்கு யார் பெண் கொப்பார்? எங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கி எமது வாழ்வை சுபீட்சமாக்கும் எண்ணம் இங்கு யாருக்குமே கிடையாது.”
முல்லைத்தீவு குமுழமுனையைச் சேர்ந்த 38 வயது யசோ 18 ஆண்டுகளாக தொண்டராசிரியையாக பணியாற்றி வருகின்றார். 2013ல் தான் உட்பட 9 பேருக்கு வந்த நியமனத்தை ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா தனக்கு சாதகமானவர்களுக்கும் பணம் வாங்கிக்கொண்டும் வேறு ஒன்பது பேருக்கு மாற்றிக் கொடுத்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். யசோவின் குடும்பத்தில் பலர் போரினால் சரீர பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். “அப்பாவின் வருமானத்தை நம்பி வாழ்ந்த எங்களுக்கு இறுதி யுத்தத்தில் அவர் கொல்லப்பட்டது பேரிழப்பாகியது. அம்மா படுகாயமடைந்தார், ஒரு தம்பி கண்ணை இழந்தள்ளார். இன்னொரு தம்பி கால் முடமாகி நடக்க முடியாதுள்ளார்,” என யசோ தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்: “எங்கள் குடும்பத்தில் 7 பேர். அப்பா ஒரு கடற் தொழிலாளி. அவரது வருமானத்திலேயே வாழ்க்கை நடத்தி வந்ததால்தான் நான் சம்பளமின்றி தொண்டராசிரியராக கற்பித்து வருகின்றேன். உயர்தரம் படித்து முடித்ததுமே ஆசிரியர் பற்றாக்குறையால் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி அதிபர் என்னை அழைத்து கற்பிக்க சொன்னார். ஆனால் இன்றுவரை எனக்கு நியமனம் வழங்கப்படவில்லை. வருமானம் இல்லாத காரணத்தால் நான் பகுதி நேரமாக பிளாஸ்டிக் பூக்கள் செய்து கடைகளுக்கு போட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் எமது தேவைகளை நிறைவு செய்ய முயற்சிக்கின்றேன். நியமனம் கிடைத்தால்தான் திருமணம் நடக்கும்.
தனது சக தொண்டர் ஆசிரியர்கள் சம்பந்தமாக யசோ தெளிவுபடுத்திய விடயங்கள் மனதை உலுக்குபவையாக உள்ளன. கடந்த 16 அன்று கல்வி அமைச்சிற்கு சென்று வந்த பின்னர், கர்பிணியாக இருந்த ஒரு ஆசிரியைக்கு பயணக் களைப்பு மற்றும் தொடர்ச்சியான மனவுழைச்சல் காரணமாக கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது.
ஒட்டிசுட்டானைச் சேர்ந்த கணேஸ்வரன் தவரஞ்சினிக்கு நியமனம் கிடைக்காத காரணத்தால் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த ஆசிரியையின் இழப்பை எவருமே கண்டுகொள்ளவில்லை. மாறாக, அவர் வேறு பிரச்சனையால்தான் தற்கொலை செய்துகொண்டதாக ஒரு பொய்யான பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது என போராட்டக்காரர்கள் கூறினர்.
வவுனியாவை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான ஒரு தொண்டர் ஆசிரியை கண்ணீருடன் பேசினார். “676 பேருக்கு நியமனம் வழங்குவதாகவும் அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ஆனால் தற்போது 182 பேருக்கு நியமனம் வழங்குவது வடமாகாண முதலமைச்சர் மற்றும் வடமாகாண கல்வியமைச்சரினதும் முடிவாகவுள்ளது. இது மிகுதிப்பேரின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது. ஏனையோருக்கு ஏப்ரலில் நியமனம் வழங்கப்படும் என்கின்றனர். ஆனால் ஊழல் நிறைந்த இவர்களது பொய்களை இனியும் நம்ப நாங்கள் தயாராக இல்லை.”
தொண்டர் ஆசிரியை நிசாந்தினி யுத்தத்தில் பெற்றோரையும் சகோதரனையும் இழந்துள்ளார். “பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தொண்டர் ஆசிரியராக உள்ளேன். சுற்றுநிரூபத்தில் பெயர்கள் வந்திருந்தும் எங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கவில்லை. எப்போது கிடைக்கும் என்பது பற்றிய இதுவரை அதிகாரிகள் எதுவும் கூறவில்லை. நாங்கள் தொடர்ந்து போராடுவோம். கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் போன்ற மாவட்டங்களில் கடமையில் இருந்த தொண்டர் ஆசிரியர்களின் பதிவுப் புத்தகங்கள் யுத்த இடம்பெயர்வுகளால் காணாமல் போயுள்ளது. லொக் என்றி எனப்படும் இந்ந்த பதிவுப் புத்தகம் இல்லாதோருக்கு நிரந்தர நியமனம் வழங்க முடியாது என அரசாங்கம் கூறுகின்றது.
கிளிநொச்சி கனகபுரத்தைச் சேர்ந்த குணபாலசிங்கம் மதிவதனன் மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார். அவர் கூறியதாவது: “நான் 2003ல் இருந்து கற்பிக்கின்றேன். ரூபா. 1,000, 800, மற்றும் ரூபா. 2,000 என சம்பளம் கிடைத்தது. போரினால் 2007ல் இருந்து விசுவமடு, உடையார்கட்டு, சுதந்திரபுரம், இரணைப்பாலம், மாத்தளன், வலைஞர்மடம், முள்ளிவாய்கால் என தொடர்ந்து இடம்பெயர்ந்தோம். 2009ல் முகாமில் அடைபட்டிருந்த போது, அருணாசலம் முகாமில் கற்பித்தேன்.
“2010ல் மீள் குடியமர்ந்த பின்னர், பாரிய சேதத்துக்கு உள்ளாகியிருந்த வீடு ஒன்றை புனரமைக்காக அரசாங்கம் ஒன்றரை லட்சம் தந்தது. நாங்களும் கடன்பட்டு பகுதி புனரமைப்புக்கு மூன்றரை லட்சம் செலவு செய்துள்ளோம். வாழ்கை செலவுக்காக தனியார் கல்வி நிலையத்தில் கற்பிப்பதன் மூலம் கிடைக்கும் வருமானங்களைக் கொண்டு மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் வாழ்கின்றோம். எங்களிடம் கற்ற மாணவர்கள் அரச துறைகளில் பணியாற்றுகின்றனர். எங்களது கல்வி வளர்ச்சிக்காக பயிற்சியும் பெற்றுள்ளோம். எனது வாழ் நாளில் பெரும் பகுதி கற்பிப்பதிலேயே கழிந்துள்ளது.”