Print Version|Feedback
US-British-French missile strikes on Syria heighten danger of a catastrophic war
சிரியா மீதான அமெரிக்க-பிரிட்டிஷ்-பிரெஞ்சு ஏவுகணைத் தாக்குதல்கள் ஒரு பேரழிவுகரமான போரின் அபாயத்தை அதிகரிக்கின்றன
Barry Grey
16 April 2018
சென்ற வார இறுதியில் சிரியா மீது அமெரிக்கா தலைமையில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலின் பின்னர், ஒரு அணுப் பேரழிவைத் தூண்டக் கூடிய ஒரு விரிவான போருக்கான தயாரிப்புகள் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அமெரிக்கக் கொள்கையின் பொறுப்பற்ற தன்மையானது அதிகரிக்க மட்டுமே செய்திருக்கிறது. 100க்கும் மேற்பட்ட கப்பல்தள ஏவுகணைகளில் இருந்தான நாசத்தின் புகை முழுதும் இன்னும் தெளிவதற்குள்ளாக, ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதரான நிக்கி ஹேலி, அமெரிக்கா தொடர்ந்தும் “தாக்குதல் தயார்நிலை”யில் இருந்ததாக பெருமையடித்துக் கொண்டார். ஞாயிறன்று “Face the Nation” நேர்காணல் நிகழ்ச்சியில் ஹேலி, அமெரிக்கத் துருப்புகள் தொடர்ந்தும் சிரியாவில் இருக்கும் என்று கூறியதோடு டமாஸ்கஸ் உடன் வணிகம் செய்கின்ற ரஷ்ய நிறுவனங்களுக்கு எதிராக திங்களன்று ட்ரம்ப் நிர்வாகம் புதிய தடைகளை விதிக்க இருப்பதாகவும் அறிவித்தார்.
ரஷ்யா, அது சிரியாவின் ஏவுகணைத் தாக்குதல் பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்துவதாக அறிவித்து பதிலடி கொடுத்தது.
ஊடகங்களில் வந்த ஏராளமான கருத்துக்கள் அமெரிக்க, பிரிட்டிஷ், மற்றும் பிரெஞ்சு கடற்படை மற்றும் விமானப் படைகளது “வரம்புபட்ட” தாக்குதல் போதுமானதல்ல என்று விமர்சனம் செய்ததோடு ஒரு கூடுதல் விரிவான மற்றும் நீடித்த இராணுவத் தாக்குதலுக்குக் கோரின. குடியரசுக் கட்சியின் செனட்டரான லிண்ட்சே கிரஹாம் கூறியதாக நியூ யோர்க் டைம்ஸ் இவ்வாறு பிரசுரித்திருந்தது: “தூசி அடங்கியதும் பார்க்கும்போது, இந்தத் தாக்குதல் ஒரு பலவீனமான இராணுவப் பதிலிறுப்பாக பார்க்கப்படும், அசாத் ஒரு மிகச் சிறிய விலையே கொடுத்திருப்பார் என்று நான் அஞ்சுகிறேன்...”
வாஷிங்டன் போஸ்ட் ஞாயிறன்றான அதன் முன்னிலைத் தலையங்கத்தில் சிரியாவில் இருந்து அமெரிக்கத் துருப்புகளை அகற்றவிருப்பதாக சூசகம் செய்ததற்காக மறுபடியும் ட்ரம்ப்பின் மீது தாக்கியது. கிழக்கு சிரியாவில் அமெரிக்க துருப்புகளும் அமெரிக்காவின் பினாமிப் படைகளும் பெருமளவிலான பகுதிகளை ஆக்கிரமித்திருப்பதை சுட்டிக்காட்டி, சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தை பலவந்தமாக அகற்ற வேண்டுமானால் ட்ரம்ப் களத்தில் அமெரிக்க நிலையை “இன்னும் வலுப்படுத்த” வேண்டும் என்று கோரியது.
நியூ யோர்க் டைம்ஸின் டேவிட் சாங்கேர் மற்றும் பேன் ஹப்பார்டு ஞாயிறன்று வெளியாகியிருந்த ஒரு முன்பக்கக் கட்டுரையில், இந்தத் தாக்குதல்கள் அசாத்தின் இரசாயன ஆயுதத் திட்டமாக சொல்லப்பட்டதற்கு கடும் சேதம் விளைவித்திருந்ததான பென்டகனின் கூற்றுக்களுக்கு எதிராக வாதிட்டனர். அவர்கள் எழுதினர்: “அசாத்தின் இரசாயன மையங்களைத் தகர்ப்பது எளிது என்ற அதேநேரத்தில், அவருக்கும் அதை இன்னொரு இடத்தில் மீண்டும் உருவாக்குவதோ, அல்லது ஒரு நஞ்சைத் தயாரிப்பதற்கு எந்த நாடும் வைத்திருக்க அனுமதிக்கப்படுவதாக இருக்கின்ற குளோரின் போன்ற வர்த்தகரீதியாக கிடைக்கத்தக்க ஒரு பொருளை நோக்கித் திரும்புவதோ மிக எளிதானதாக இருக்கிறது.”
புதிய ஆத்திரமூட்டல்களுக்கான அடிப்படைகளும் இராணுவ மூர்க்கத்தனத்துக்கான புதிய சாக்குகளும் ஏற்கனவே உருவாக்கப்பட்டாகி விட்டது. இன்னொரு அரங்கேற்றப்பட்ட இரசாயனத் தாக்குதல் இல்லாது போனால், போருக்கான அடுத்த போலிக்காரணமாக ஒரு பயங்கரவாதத் தாக்குதலோ அல்லது மத்திய கிழக்கில் அமெரிக்கத் துருப்புகள் மீதான ஒரு தாக்குதலோ அசாத்தினால் விளைந்ததாக சொல்லப்படலாம்.
25 ஆண்டுகளுக்கும் அதிகமான காலமாய் அமெரிக்கா தொடர்ச்சியான போரில் ஈடுபட்டு வந்திருக்கிறது, ஒவ்வொரு மோதலுக்குமே இலக்கு வைக்கப்பட்ட நாடு அட்டூழியங்களை இழைத்ததான அல்லது இழைக்கவிருந்ததான போலியான கூற்றுகளைக் கொண்டு நியாயம் கற்பிக்கப்பட்டு வந்திருக்கிறது: ஈராக்கிற்கு எதிராக “பேரழிவு ஆயுதங்கள்”, லிபியாவுக்கு எதிராக அப்பாவி மக்களுக்கு எதிராய் ஒரு படுகொலை நிகழ்த்தும் அபாயம் விஸ்வரூபமெடுத்துக் கொண்டிருந்ததாக சொல்லப்பட்டது, இப்போது சிரியாவுக்கு எதிராக இரசாயன வாயுத் தாக்குதல்கள்.
நச்சுவாயுத் தாக்குதல்கள் தொடர்பாக ரஷ்யா மற்றும் சிரியாவுக்கு எதிரான சமீப வாரங்களிலான ஊடகப் பிரச்சாரமானது, உண்மையில் பல மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டு விட்ட ஒரு இராணுவத் தாக்குதலுக்கான ஒரு பொருத்தமான சாக்கினை வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நடவடிக்கையாக இருந்தது. ஊடகப் பிரச்சாரமானது, முன்னாள் இரட்டை முகவரான சேர்ஜி ஸ்கிரிபால் மற்றும் அவரது மகளுக்கு ரஷ்ய அரசாங்கம் நஞ்சூட்டியதாய் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாகப் பின்வந்த காலத்தில் டூமா நகரில் அசாத் ஆட்சியால் நச்சுவாயுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக சொல்லப்பட்டதற்கு நகர்ந்து, அதன்பின் ஈரானிய மற்றும் ரஷ்ய ஆதரவு ஆட்சியைத் தூக்கிவீசுவதற்கு அமெரிக்க-ஆதரவு இஸ்லாமிய போராளிப்படைகள் நடத்தும் சண்டையை பிடித்துக் கொண்டது.
முற்றிலும் ஊழலடைந்தும் நேர்மையற்றதாகவும் இருக்கின்ற மேற்கத்திய ஊடகங்கள், அரசாங்கத்தின் கூற்றுகளை அவற்றை ஊர்ஜிதப்படுத்துவதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லாமலேயே ஊக்குவித்துக் கொண்டிருக்கும் அதேநேரத்தில் இந்த கூற்றுகளை பொய் என அம்பலப்படுத்திய ரஷ்யா மற்றும் சிரியா வைத்த ஆதாரங்களைக் குறிப்பிடுவதும் கூட அரிதாய் இருந்தது. வார இறுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் ஒரு வாரத்துக்கு முன் நடந்ததாக சொல்லப்பட்ட இரசாயன வாயுத் தாக்குதலுக்கான ஒரு பதிலிறுப்பு அல்ல. செங்கடல், வடக்கு பேர்சிய வளைகுடா மற்றும் மத்திய தரைக்கடலில் இருந்த அமெரிக்க, பிரெஞ்சு, மற்றும் பிரிட்டிஷ் கடற்படை மற்றும் வான்படை தளங்களில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்ட ஒரு ஒருங்கிணைந்த கூட்டுத் தாக்குதலாய் இது இருந்தது. இப்படியான ஒரு நடவடிக்கை ஒரு சில நாட்கள் திட்டமிடலில் நடக்க முடியாது.
இப்போது, அதன் பிந்தைய சமயத்தில், சர்வதேச புவியரசியல் சூழலும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சக்திகளது உள்முக அரசியல் நெருக்கடியும் இன்னும் அதிக வெடிப்பாகவே வளர்ந்திருக்கின்றன.
அமெரிக்காவில், மத்திய கிழக்கில் ஒரு பரந்த போருக்கான தயாரிப்புகளும் ஆளும் வர்க்கத்தின் மற்றும் அரசின் பிரிவுகள் ட்ரம்ப்புக்கு எதிராக நடத்துகின்ற அரசியல் போரும் ஒரே நிகழ்முறைக்குள் இணைந்து விட்டிருக்கின்றன.
பாதுகாப்புச் செயலர் ஜேம்ஸ் மாட்டிஸும் இராணுவ உயர்தலைமைகளும் இப்போதைக்கு ரஷ்யாவுடனான ஒரு மோதலைத் தவிர்ப்பதற்கு முடிவெடுத்தன என்றால், அதற்கு இராணுவரீதியான பரிசீலனைகள் மட்டுமல்ல, அரசியல்ரீதியான பரிசீலனைகளும் காரணமாய் உள்ளன. பெருநிறுவனமயப்பட்டிருக்கின்ற தொழிற்சங்கங்களுக்கு எதிராக ஆசிரியர்களின் வேலைநிறுத்தங்களும் கிளர்ச்சிகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன, அத்துடன் வாஷிங்டனில் அரசியல் நெருக்கடியும் ஆழமடைந்து கொண்டிருக்கிறது. போருக்கு எதிரான மனோநிலை தொழிலாள வர்க்கத்தில் பரவலாய் இருக்கிறது. இந்த நிலைமைகளின் கீழ் இராணுவத்திற்கு, அசாத்தைத் தூக்கியெறிந்து ரஷ்யாவுடன் மோதலில் இறங்குவதற்கு அவசியமானதாக அது கருதுகின்ற நடவடிக்கைகளை வெளிநாட்டிலும் சொந்த நாட்டிலும் மேற்பார்வை செய்கின்ற ட்ரம்ப்பின் திறனின் மீது நம்பிக்கையில்லாமல் இருக்கிறது.
நவபழமைவாத அறிஞர் மக்ஸ் பூட் ”ஊழல்களின் மத்தியில் வான்தாக்குதல்கள்” என்ற தலைப்பில் வாஷிங்டன் போஸ்டின் தலையங்கப் பக்க பத்தியில், சிரியாவில் பெருமளவில் போர் விரிவாக்கப்படுவதற்கும் ட்ரம்ப்பு அகற்றப்படுவதற்கும் இடையில் வெளிப்படையாக தொடர்புபடுத்தினார். “எப்படி 2003 வசந்தகாலத்தின் சமயத்தில் புஷ்ஷுக்கு ஈராக் திட்டம் இருந்திருக்கவில்லையோ, அதைப் போலவே இன்று ட்ரம்புக்கு சிரியா திட்டம் இல்லாதிருக்கிறது” என்று அவர் மேலும் சேர்த்துக் கொண்டார்: “அமெரிக்கா ஒரு நாடாளுமன்ற அரசாங்கத்தைக் கொண்டிருந்து, நாடாளுமன்றம் ஒரு “நம்பிக்கையில்லாத் தீர்மானம்” கொண்டுவந்திருக்குமாயின், ட்ரம்ப் அரசாங்கத்தை நடத்தும் கவனச்சிதறல் இன்றி தனக்கு எதிராக பெருகிச் செல்லும் குற்றச்சாட்டுகளை எதிர்த்துப் போராடுவதற்கு தனது 100 சதவீத கவனத்தை அர்ப்பணிக்க அது அனுமதித்திருக்கும்.”
இராணுவ வலிமையைப் பயன்படுத்துவதற்கு ஒரு புதிய அதிகாரத்தினை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்கு அழைப்பு விடுக்கின்ற ஒரு தலையங்கம் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு சற்று முன்னர் எழுதப்பட்டு நியூ யோர்க் டைம்ஸால் பிரசுரிக்கப்பட்டிருந்தது. போருக்கான புதிய சட்டபூர்வ நியாயப்படுத்தல் ஒன்றுக்கான இந்த நெருக்குதல் ஆளும் வர்க்கம் இன்னும் விரிவானதொரு இராணுவத் தலையீட்டுக்காகத் தயாரித்துக் கொண்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. அங்கே பெருகிய எதிர்ப்பு இருக்கும் என்பதை அறிந்து வைத்திருக்கும் அது போருக்கான அதிருப்தியை குற்றமாக்குவதற்கும் போருக்கு எதிரான பேச்சை தடை செய்வதற்குமான ஒரு சட்ட சுற்றுவரையை உருவாக்க விரும்புகிறது.
ஐரோப்பாவிலும், இந்த ஏவுகணைத் தாக்குதல்கள் உள்முக அரசியல் மற்றும் சமூக நெருக்கடியையும் அத்துடன் அமெரிக்காவுடனான பதட்டங்களையும் தீவிரப்படுத்தியிருக்கிறது. பரவலான போர் எதிர்ப்பு மனோநிலையும் அசாத் இரசாயனத் தாக்குதல் நடத்தியதாகச் சொல்லப்படுவதைக் குறித்த பரவலான சந்தேகமும் நிலவுவதை கருத்துக்கணிப்புகள் காட்டுகிற நிலையில், பிரிட்டிஷ் பிரதமரான தெரசா மே சிரியத் தாக்குதல் தொடர்பான ஒரு நாடாளுமன்ற விவாதத்திற்கான கோரிக்கைகளுக்கு முகம்கொடுத்திருக்கிறார். பிரான்சில் இரயில் துறை வேலைநிறுத்தங்களுக்கும் தீவிரப்பட்டுச் செல்கிற மாணவர் ஆர்ப்பாட்டங்களுக்கும் முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுக்கு எதிரான மக்களின் கோபத்தை இந்த வான் தாக்குதல்கள் இன்னும் அதிகப்படுத்தி விட்டிருக்கின்றன.
ஜேர்மனியில் -சான்சலர் அங்கேலா மேர்க்கெல் இத்தாக்குதல்களை ஆதரித்தார் ஆனால் நேரடியாக இணையவில்லை- ஊடகத்தின் பிரிவுகள் இத்தாக்குதல்களை சாக்காகப் பயன்படுத்திக் கொண்டு ஜேர்மனி முழு வீச்சில் மறுஆயுதபாணியாக வேண்டும் என்றும் அமெரிக்காவை அதிகம் சார்ந்திராத ஒரு வெளியுறவுக் கொள்கை வேண்டும் என்றும் கோருகின்றன.
ஜேர்மன் ஆளும் வர்க்கத்தை பற்றிக் கொண்டிருக்கும் போர் ஜூரத்தை சுட்டிக்காட்டும் விதமாய் Frankfurter Allgemeine Zeitung ஆசிரியரான Berthold Kohler வெளியிட்ட ஒரு கருத்து அமைந்திருந்தது, அவர் எழுதியிருந்தார்: “ஓவல் அலுவலகத்தில் சுயநலமான குழந்தை அமர்ந்திருப்பது வெளியுறவுக் கொள்கை விடயத்தில் ஜேர்மனி ஒருவழியாக வளர்ந்த பிள்ளையாவதற்கு நிர்ப்பந்திக்கிறது. ஜேர்மன் கடற்படை விமானந்தாங்கிக் கப்பல்களையும் Luftwaffe கப்பல் ஏவுகணைகளையும் பெறுவது அத்தனை விரைவாக நடந்துவிடாது. ஆனால் ட்ரம்ப்வாதத்திற்கு முகம்கொடுத்து நிற்கும் உலகத்தில் கூடுதல் பொறுப்பை ஏற்பதற்கான ஜேர்மனியின் விருப்பமானது... பிரான்ஸ் மற்றும் பிரிட்டனைப் பாராட்டுவதுடன் மட்டுப்பட்டு நின்றுவிட முடியாது... உயர்ந்த தார்மீக மற்றும் மனிதாபிமான அளவீடுகளைக் கொண்டிருப்பது ஆனால் ஒரு அவசரகாலத்தில் அவற்றை அமலாக்குவதற்கு மிகக் குறைந்த அளவிலேயே தயாராய் இருப்பது என்ற ஜேர்மன் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையான முரண்பாடானது, எந்தவிதத்திலும் ஆயுதங்களற்ற தேடுதல் விமானங்களைக் கொண்டு தீர்க்கப்பட்டு விட முடியாது.”
சிரியாவில் இப்போதைக்கு ரஷ்யப் படைகளுடன் ஒரு நேரடி மோதலைத் தவிர்ப்பதற்கு அமெரிக்க இராணுவம் மேற்கொண்ட ஒரு தந்திரோபாய முடிவினை சிரியாவில் இன்னும் விரிவான ஒரு போருக்கும் ஈரான் மற்றும் ரஷ்யாவுடனான ஒரு இராணுவ மோதலுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் கொண்டிருக்கும் மூலோபாய நோக்குநிலையில் ஏற்பட்ட ஒரு மாற்றமாகக் குழப்பிக் கொள்வது மரணகரமான பிழையாக முடியும். வார இறுதித் தாக்குதல்களின் முன்னெச்சரிக்கையான தன்மையானது சிரியாவில் எந்தவொரு இராணுவத் தாக்குதலும் கொண்டுவரத்தக்க பின்விளைவுகளைக் குறித்து அமெரிக்க இராணுவம் நன்கு அறிந்து வைத்திருப்பதைப் பிரதிபலிக்கிறது.
ரஷ்யப் படைகள் மீது தாக்கப்பட்டிருந்தால், ரஷ்யா பதிலடியில் இறங்கியிருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஆயினும் வருங்காலத்தில் ஒரு இராணுவத் தாக்குதலானது உலகின் இரண்டு பெரும் அணுஆயுத சக்திகளுக்கு இடையிலான ஒரு நேரடி மோதலைத் தூண்டுவது என்பது தேதி மட்டுமே கூற முடியாததாகும். சிரியா மீதான மேற்கிலிருந்தான மேலதிகத் தாக்குதல்கள் தவிர்க்கவியலாமல் “சர்வதேச உறவுகளிலான குழப்பத்திற்கு” இட்டுச் செல்லக் கூடியதாகும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஞாயிறன்று எச்சரித்திருந்தார்.
பேரழிவான பின்விளைவுகளைக் கொண்ட ஒரு பாரிய போரின் அபாயம் எத்தனை உண்மையாக முன்னால் நின்று கொண்டிருக்கிறது என்பதையே இத்தகைய ஒவ்வொரு தாக்குதலும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. அமெரிக்க மற்றும் உலக ஏகாதிபத்தியத்தின் ஒரு வெடிப்பு மனித நாகரிகத்தையே அழிக்க அச்சுறுத்துவதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. முதலாளித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர அணிதிரட்டலின் மூலமாக மட்டுமே அது தடுத்துநிறுத்தப்பட முடியும்.