Print Version|Feedback
Strikes mount as National Assembly opens debate on French rail privatization
தேசிய நாடாளுமன்றம் பிரெஞ்சு இரயில்வே தனியார்மயமாக்க விவாதத்தை ஆரம்பிக்கையில் வேலைநிறுத்தங்கள் பெருகுகின்றன
By Alex Lantier
10 April 2018
ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக இரயில்வே தொழிலாளர்கள் நேற்று சுழற்சி வேலைநிறுத்தத்தில் நான்காவது நாள் போராட்டத்தை நடத்திய நிலையில், ஏர் பிரான்ஸ் தொழிலாளர்கள் இன்று ஊதியக் கோரிக்கைகள் தொடர்பாக வேலைநிறுத்தம் செய்கிறார்கள். தேசிய நாடாளுமன்றத்தில் பிரெஞ்சு தேசிய இரயில்வேயை (SNCF) தனியார்மயமாக்கும் திட்டம் தொடர்பான இரண்டு வார கால விவாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், தொழிற்சங்க நிர்வாகிகளும், கடுமையான தேர்வு நடைமுறைகளை திணிப்பதற்கான மக்ரோனின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழகங்களில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்ற மாணவர்களும், நாடாளுமன்றத்திற்கு வெளியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இரயில்வே வேலைநிறுத்தம் தொடர்ந்தது, இரயில் ஓட்டுநர்களில் 75 சதவீதத்தினரும் கட்டுப்பாட்டுத் தொழிலாளர்களில் 71 சதவீதம் பேரும் உள்ளிட இரயில்வே தொழிலாளர்களில் நான்கில் ஒரு பங்கினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ளனர். உயர் வேக இரயில்களில் (TGV) ஐந்து இரயில்களுக்கு ஒன்றும், பிராந்திய விரைவு இரயில்களில் மூன்றுக்கு ஒன்றும், நகரங்களுக்கு இடையிலான இரயில்களில் ஆறுக்கு ஒன்றும் ஓடின. இந்த வேலைநிறுத்தத்தால் நிறுவனத்திற்கு ஏற்கனவே 100 மில்லியன் யூரோக்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக SNCF நிர்வாகம் தெரிவித்தது.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதாக முறைப்படி பட்டியலிடப்பட்டிருக்கின்ற இரயில்வே தொழிலாளர்களின் எண்ணிக்கை நேற்று சற்று குறைந்தது, ஆனால் தொழிலாளர்களிடையே போர்க்குணமும் மற்றும் நாடாளுமன்றம் இரயில்வே மசோதாவுக்கு ஒப்புதலளிக்க எதிர்பார்க்கப்படும் ஜூன் வரையில் வாரம் இரண்டு நாட்களுக்கு சுழற்சி முறையில் வேலைநிறுத்தம் செய்கிறதான தொழிற்சங்கங்களின் மூலோபாயம் மீதான சந்தேகமும் பெருகுவதன் பல அறிகுறிகள் தென்படுகின்றன.
பாரிஸின் Gare du Nord மற்றும் Saint Lazare நிலையங்களில் தொழிற்சங்க நிர்வாகிகளும் தொழிலாளர்களும் காலவரையற்ற புதுப்பிக்கத்தக்க வேலைநிறுத்தங்களை அங்கீகரித்து வாக்களித்தனர், இதன்மூலம் மக்ரோனுடன் வெட்டுகளுக்கு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே மட்டுப்பட்ட சுழற்சி முறை வேலைநிறுத்தங்களை நடத்துகின்ற தொழிற்சங்க தலைமையின் மூலோபாயத்தை அவர்கள் திறம்பட மறுதலித்தனர். குறிப்பாக நேற்று காலை Europe1 வானொலியில் பேசுகையில் தான் “ஒரு நீடித்த தொழிலாளர் மோதலை விரும்பவில்லை” என்று கூறிய ஸ்ராலினிச CGTயின் தலைவரான பிலிப் மார்ட்டினேசுக்கான ஒரு மறுப்பாக அது இருந்தது.
தொழிலாளர்கள் வேலைநிறுத்தக் கூட்டங்களில் இருந்து விலகியிருப்பதாக வழக்கமாய் தொழிற்சங்க நிர்வாகிகள் கூறி வருகின்ற போதும், நேற்று Gare du Nord நிலைய கூட்டத்திற்கு ஏராளமான தொழிலாளர்கள் வந்திருந்தனர், அவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாரிஸ் பல்கலைக்கழகத்தின் Tolbiac மற்றும் Saint Denis வளாகங்களது மாணவர்களும் கலந்திருந்தனர். “எல்லாரும் அங்கே இருந்தனர்” என்று Libération இடம் தெரிவித்த ஒரு தொழிற்சங்க நிர்வாகி, கூட்டத்தில் ஒரு இரயில்வே தொழிலாளி பின்வருமாறு கூறியதாக தெரிவித்திருந்தார்: “அவர்கள் எங்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். நாம் இப்போது முழு மூச்சாய் இறங்கியாக வேண்டும். நாம் மக்ரோனை முறியடித்தாக வேண்டும்.”
Gare du Nord நிலையத்தில் இருந்த CGT இன் ஒரு அங்கத்தவர் அதன் கொள்கையை ஏற்றுக்கொள்ள மறுத்தார்: “நான் CGTக்காரன் தான், ஆனால் நான் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை கோருகிறேன். எனக்குத் தெரிவதெல்லாம், நாம் இப்போதே அதில் இறங்கியாக வேண்டும், இவ்வாறு பல வாரங்களுக்கு காத்துக் கொண்டே உட்கார்ந்திருக்கக் கூடாது.”
பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய சமூகத்தின் பரந்த அடுக்குகளின் தீவிரமயப்படலானது துரிதமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது, மக்ரோன் நிர்வாகத்துடனும் ஐரோப்பிய ஒன்றியத்துடனும் ஒரு மோதலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. தொழிலாளர்களும் இளைஞர்களும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இராணுவவாதம் மற்றும் போர் திட்டநிரலுக்கு எதிராக நடவடிக்கையில் இறங்கும் வேளையில் போராட்டத்துடன் சம்பந்தப்பட்டவைகளை முழுமையாக புரிந்துவைத்திருப்பதே அவர்கள் முகம் கொடுக்கும் மையமான சவாலாய் இருக்கிறது. ஆளும் உயரடுக்கு அமைதியான விதத்தில் இந்தத் திட்டநிரலை கைவிடுவதற்கு உடன்படக் கூடிய விதத்திலான எந்த அமைதியான, பேசித்தீர்க்கின்ற உடன்பாட்டுக்கும் வரப் போவதில்லை.
ஐரோப்பாவெங்கிலும் பாரிய போலிஸ் கட்டியெழுப்பல், அவசரநிலை ஷரத்துகளை பிரான்சின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் நிரந்தரமாக எழுதுவது, மற்றும் சிரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் எதிரான தொடர்ச்சியான போர் அச்சுறுத்தல்கள் ஆகியவை, ஆளும் உயரடுக்கு ஒரு ஒடுக்குமுறையையும் இராணுவ நடவடிக்கை அதிகரிப்பையும் பரிசீலித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கான கூர்மையான எச்சரிக்கைகள் ஆகும். உலக முதலாளித்துவத்தின் அதிகரித்துச் செல்லும் இராணுவ மற்றும் பொருளாதார நெருக்கடியால் உந்தப்பட்டு, சர்வதேச அளவில் அதிகரித்துச் செல்கின்ற போர் முனைப்பு மற்றும் இலாபங்களுக்கான பங்கு பிரிப்பில் பிரெஞ்சு ஏகாதிபத்தியம் போட்டி போடத்தக்க வகையில், அவர்கள், தாக்குதல்களைத் திணிப்பதற்கும் ஐரோப்பாவிலான வர்க்க உறவுகளை எதேச்சாதிகார வரிசையில் மறுகட்டுமானம் செய்வதற்கும் உறுதிபூண்டிருக்கின்றனர்.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் மக்ரோனுக்கும் எதிரான போராட்டத்தில் நுழைகின்ற தொழிலாளர்கள் மக்ரோன் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கும் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவெங்கிலும் அரசு அதிகாரத்திற்கான ஒரு போராட்டத்தில் தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்கும் போராடத் தள்ளப்படுவார்கள்.
நாடாளுமன்றத்தில் இரயில் தனியார்மயமாக்கம் குறித்து விவாதம் தொடங்கிய நிலையில், பாரிஸில் தேசிய நாடாளுமன்றத்திற்கு அருகில் CGT மற்றும் SUD தொழிற்சங்கங்கள் நடத்திய ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு உலக சோசலிச வலைத் தளத்தின் செய்தியாளர்கள் சென்றிருந்தனர். இந்த பேரணியில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு நெருக்கமான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது என்றபோதும், அதில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களில் சிலர் சிக்கன நடவடிக்கை மற்றும் போருக்கான அவர்களின் பெருகிச் செல்லும் எதிர்ப்பு குறித்து உலக சோசலிச வலைத் தளத்திடம் (WSWS) பேசினர்.
பெஞ்சமின் WSWS யிடம் கூறினார்: ”நான் அஞ்சலகத் தொழிலாளி; அவர்கள் அஞ்சல் துறையிலும், இன்னும் மோசமாய் ஆரஞ்சு/பிரான்ஸ் டெலிகாமில் இருக்கும் எனது நண்பர்களுக்கும் செய்ததை இப்போது SNCF இல் செய்துகொண்டிருக்கின்றனர். அதன் அர்த்தம் ஆபத்தான வேலை நிலைமைகள் என்பதாகும், அதிக போட்டி என்பதன் அர்த்தம், வேலைநிலைமைகளைக் கொஞ்சம்கொஞ்சமாக கீழிறக்குவது, ஊதியங்களை உயரவிடாமல் நிறுத்துவது, அதே நிலைமைகளில் வேலைசெய்யாத தற்காலிகத் தொழிலாளர்களை ஒட்டி நீங்கள் வேலை செய்யும்படியான வேலைகள் ஆகியவையாகும்.”
பெஞ்சமின் தொடர்ந்தார்: “மருத்துவமனைகளுக்கும், பள்ளிகளுக்கும், எந்த பொது சேவைகளுக்கும் பணமில்லை என்றே அரசாங்க அதிகாரிகள் எப்போதும் நம்மிடம் கூறுகிறார்கள். ஆனால் ரஃபால் போர் விமானங்கள் வாங்குவதற்கு அவர்களிடம் எப்போதும் பணமிருக்கிறது. வெளிப்படையாகவே, அது எனக்குப் பிடிக்காததாகும்.”
பொய்களை அடிப்படையாகக் கொண்டு ஈராக்கிலும் சிரியாவிலும் நடத்தப்படுகின்ற போர்களுக்கு நிதியாதாரம் அளிப்பதற்காக உழைக்கும் மக்களின் மீதான சமூகத் தாக்குதல்களைப் பயன்படுத்துவதை தான் எதிர்ப்பதாக பெஞ்சமின் தெரிவித்தார். “சதாம் உசைன் மற்றும் பேரழிவு ஆயுதங்கள் விடயத்தில் அவர்கள் ஏற்கனவே இதை நமக்கு செய்திருக்கின்றனர். சிரிய அரசியலில் நான் பெரிய நிபுணனில்லை, ஆனாலும், இங்கே பிரான்சில் தொழிலாளர்களை நசுக்கி துயரத்தைப் பரப்ப விரும்புபவர்கள் தான் அந்த நாடுகள் அத்தனையிலும் குண்டுவீசுவதற்கும் விரும்புகிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்.”
பாரிஸ் பல்கலைக்கழக ரொல்பியாக் வளாகத்தில் இருந்து வந்திருந்த இரண்டு மாணவர்களிடத்திலும் WSWS பேசியது. இரயில்வே தொழிலாளர்களுடன் ஆதரவாய் நின்று போராடுவதற்காக வந்திருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். “நாங்கள் அவர்களுடன் நிற்க விரும்புகிறோம், குறிப்பாக டோல்பியாக்கில் நாங்கள், அவர்களது வேலைநிறுத்த நிதிக்கு எங்களது ஆதரவைக் கொண்டுவரும் பொருட்டு டோல்பியாக் வளாகத்தில் சனிக்கிழமையன்று ஒரு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்கிறோம். மாணவர் திட்டத்தின் கீழ் நாங்கள் தாக்குதல்களுக்கு முகம்கொடுக்கின்ற அதேசமயத்தில் இரயில்வே தொழிலாளர்களும் தாக்குதல்களுக்கு ஆளாகியிருப்பதாக நாங்கள் கருதுகிறோம், இதற்கு எதிராக ஒரு வலிமையான இயக்கத்தை கட்டியெழுப்ப நாங்கள் விரும்புகிறோம்.”
மக்ரோனின் தாக்குதல்கள் மாணவர்களின் மீது ஒரு பரந்த பாதிப்பைக் கொண்டிருக்கும் என்று அவர்கள் கூறினர். “தனியார்மயமாக்கம் என்றால் அங்கே வேலைநீக்கங்கள் இருக்கும், அது வேலைகளையும் ஊதியங்களையும் பாதிக்கும் என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் விரைவில் வேலை தேடிக் கொண்டிருப்போம், வெகு விரைவில், ஆகவே எங்களது சமூக உரிமைகள் தேய்ந்து போவதை, ஒரு ஓய்வூதியத்திற்கான உரிமையை இழப்பதை நாங்கள் விரும்பவில்லை. அவர்கள் இரயில்வே தொழிலாளர்கள் மீது தாக்குதலை முடித்து விட்டால், அடுத்து பொதுச் சேவைகள் மீது கைவைப்பார்கள், இறுதியில் அத்தனை வகையான தாக்குதல்களுக்கும் கதவு திறந்துவிட்டதான நிலை வரும் என்பதை நாங்கள் அறிவோம்.”
தொழிற்சங்கங்களில் தங்களுக்கு நம்பிக்கையில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். “தொழிற்சங்க அமைப்புகள், SUD-Rail, இவர்கள் வாரத்திற்கு இரண்டு நாள் சுழற்சி முறை வேலைநிறுத்தம் செய்ய அழைப்பு விடுக்கிறார்கள், அரசாங்கத்தை பின்வாங்கச் செய்ய இதெல்லாம் போதாது. இரயில்வே தொழிலாளர்களது சமூக உரிமைகளை உடைப்பதற்கு மக்ரோன் விரும்புகிறார், அதை முறியடிக்குமளவுக்கான திட்டம் எதுவும் தொழிற்சங்கங்களிடம் இல்லை.”
மக்ரோனின் தனியார்மயமாக்கத் திட்டங்கள் தொடர்பான ஆரம்ப விவாதத்தில், நேற்று தேசிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சூழ்ச்சிகள், அரசியல் ஸ்தாபகமானது மக்ரோனின் திட்டத்திற்கான எதிர்ப்பு பெருகிச் செல்வதை ஒப்புக் கொள்வதற்கும் சிடுமூஞ்சித்தனத்துடன் அதை திசைதிருப்புவதற்கும் முயற்சி செய்து கொண்டே மசோதாவைத் திணிப்பதற்கு முயலுவதைப் பிரதிபலித்தது.
கிட்டத்தட்ட அவை காலியாக இருந்தவொரு நேரத்தில் போக்குவரத்து அமைச்சரான எலிசபெத் போர்ன் இந்த மசோதாவைப் பாராட்டி அறிமுகக் கருத்துகள் அளித்ததற்குப் பின்னர், மக்ரோன் SNCF மீது தாக்குதல் நடத்துவதற்கு அடிப்படையாக இருக்கின்ற தொழிலாளர் சட்டத்தை அறிமுகப்படுத்திய சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த Olivier Faure ஒரு சில சிடுமூஞ்சித்தனமான விமர்சனங்களை வைத்தார். முன்மொழியப்படும் மசோதாவில் PS க்கு “மாற்றுக்கருத்துகள்” இருக்கிறது என்று தெரிவித்த அவர், மக்ரோன் “இரயில்வே தொழிலாளர்களின் விரோதத்தை மட்டுமல்லாது” பிரான்சின் “பயணம் செய்யும் மக்களின் விரோதத்தையும்” எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்தார்.
வலது-சாரி குடியரசுக் கட்சி (LR) தனியார்மயமாக்க நடவடிக்கை மசோதா மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் இருப்பதா அல்லது “வேண்டாம்” என்று வாக்களிப்பதா -இரயில்வே தொழிலாளர்களின் மீதான தாக்குதலில் உடன்பாடில்லை என்பதால் அல்ல, மாறாக மக்ரோன் அதை நிறைவேற்ற உத்தரவாணைகளை நம்பியிருப்பது மசோதாவை நம்பகத்தன்மை இழக்கச் செய்து விடும் என்பதால்- என்பதை இன்று முடிவுசெய்யவிருப்பதாக சுட்டிக்காட்டியது. “தொழிலாளர் உத்தரவாணைகள் எதற்கு? தேசிய நாடாளுமன்றத்திலும் செனட்டிலும் மக்ரோனுக்கு நம்பிக்கை இருந்திருக்க வேண்டும்” என்று LR இன் ஒரு பிரதிநிதி Le Parisien இடம் தெரிவித்தார்.