ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

“We need to stop putting profits above pupils”
As Oklahoma strike enters fourth day, students speak out in support of teachers

"மாணவர்களுக்கு மேலாய் இலாபங்களை வைப்பதை நாம் நிறுத்தியாக வேண்டும்”

ஒக்லஹோமா வேலைநிறுத்தம் நான்காவது நாளை எட்டும் நிலையில், ஆசிரியர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் பேசுகின்றனர்

By Jerry White
5 April 2018

ஒக்லஹோமாவின் 40,000 ஆசிரியர்கள் பங்குபெறும் சக்திவாய்ந்த வேலைநிறுத்தம் நாளாவது நாளை எட்டியிருக்கிறது, ஆசிரியர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் கணிசமான ஊதிய உயர்வுகளுக்கும் அரசின் 700,000 பொதுப் பள்ளி மாணவர்களுக்கான நிதியாதாரத்தை கணிசமாக அதிகரிப்பதற்குமான கோரிக்கைகளுடன் நெருக்குதலளித்து வருகின்றனர். புறக்கணிப்புப் போராட்டம் தொடர்பாக பல மாவட்டங்களில் இன்று பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன, இன்னும் பல பள்ளிகளில் வெள்ளிக்கிழமைக்கான வகுப்புகள் இரத்து செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆளுநரும் மாநில சட்டமன்றமும் குரோதத்துடன் பார்க்கின்ற நிலை, அத்துடன் இந்தப் போராட்டத்தை பெரு-நிறுவனக் கட்டுப்பாட்டிலான இரண்டு கட்சிகளுக்கும் கையாலாகாத விண்ணப்பங்கள் செய்வதுடன் மட்டுப்படுத்துவதற்கு ஆசிரியர் சங்கங்கள் செய்கின்ற முயற்சி ஆகியவற்றையும் தாண்டி ஆசிரியர்கள் பின்வாங்குவதற்கான எந்த அறிகுறியையும் காட்டியிருக்கவில்லை.

புதனன்று ஒக்லஹோமா சிட்டியில் இருக்கும் மாநிலத் தலைமையகக் கட்டிடத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் மற்ற தொழிலாளர்களும் குவிந்தனர், ஆயிரக்கணக்கான மற்றவர்கள் கட்டிடத்திற்கு வெளியில் பேரணி நடத்தினர். உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் நடுநிலைப் பள்ளி மாணவர்களும் தங்களுடைய ஆசிரியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பேரணி நடத்தினர்.


பேரணியில் மாணவர்கள்

அத்துடன் புதனன்று, துல்சாவில் இருந்து 50க்கும் அதிகமான ஆசிரியர்கள் 110 மைல் பாதயாத்திரையாக மாநிலத் தலைநகர் கிளம்பினர். நாளுக்கு 15-18 மைல்கள் நடப்பதற்கும், இடையில் எரிபொருள் நிலையங்களில் இளைப்பாறுவதற்கும் இரவுகளில் உயர்நிலைப் பள்ளி உடற்பயிற்சி மையங்களில் தங்குவதற்கும் அவர்கள் திட்டம் கொண்டுள்ளனர். பொதுக் கல்விக்கான இந்த ஏழுநாள் பாதயாத்திரையின் போது வழியில் அவர்களுடன் இன்னும் ஆயிரக்கணக்கானோர் இணைந்து கொள்ளவிருக்கின்றனர்.

ஒக்லஹோமா போராட்டமானது மேற்கு வேர்ஜினியாவில் நடந்த ஒன்பது நாள் வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து அமெரிக்காவெங்கிலும் ஆசிரியர்கள் நடத்தி வருகின்ற போராட்ட இயக்கத்தின் ஒரு பகுதியாகும். கடந்த தசாப்தத்தில் செய்யப்பட்ட ஆழமான வெட்டுக்களை திரும்பப் பெறுவதற்கும், பொதுக் கல்வியை தனியார்மயமாக்கவும் அகற்றவுமான பெருநிறுவன-உந்துதலிலான பிரச்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் கோரி அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.

மற்ற மாநிலங்களில் போலவே, ஒக்லஹோமா போராட்டமும், வாழ்க்கைத் தரங்களும் வகுப்பறை நிலைமைகளும் தேயச்செய்யப்படுவதில் ஒத்துழைத்து வந்திருந்த ஆசிரியர் சங்கங்களால் பலவருடங்களாக காட்டிக்கொடுக்கப்பட்டு வந்திருந்ததற்குப் பின்னர், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி எதிர்ப்பை ஒழுங்கமைத்துக் கொண்ட சாமானிய ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டதாகும்.


மாநிலத் தலைமையகம் அருகே இருக்கும் எண்ணெய் கிணறை டஸ்டி சுட்டிக்காட்டுகிறார்

 “எல்லா சங்கங்களும் அமைதியை விரும்புகின்றன என்பதால் தான் நாங்கள் தீப்பற்றச் செய்ய வேண்டியதாயிருந்தது” என்று ஒக்லஹோமா சிட்டி அரசுப் பள்ளி ஆசிரியையாக 21 வருட அனுபவம் கொண்ட டஸ்டி ஹேண்டன், புதன்கிழமையன்று தலைமையகக் கட்டிடத்தின் வெளியே உலக சோசலிச வலைத் தளத்திடம் தெரிவித்தார். “OEA அதுதான் இந்தப் போராட்டத்தை தொடக்கியதைப் போல நடந்து கொள்கிறது, ஆனால் ‘ஒக்லஹோமா ஆசிரியர்களே வெளிவாருங்கள்-இதுவே சமயம்!’ என்பன போன்ற முகநூல் பக்கங்களில் ஒழுங்கமைந்திருந்த சாதாரண ஆசிரியர்கள் தான் இதனைத் தொடக்கினார்கள்.

“எங்களது பிள்ளைகளுக்கான நிதிகளுக்காய் நாங்கள் போராடுகிறோம். வகுப்பறைகளில் சொல்லித் தருவதற்கு வேண்டிய ஆதாரவளங்கள் இல்லை, அவர்கள் எங்களுக்கு உதவுவதில்லை, எங்களுக்கு செவிகொடுப்பதில்லை. இது நாடெங்கிலும் நடந்து கொண்டிருக்கிறது, கல்விக்கு அதற்கு அவசியமான ஆதாரம் கிடைக்காதிருக்கிறது.

“மாநில அரசாங்கங்களின் முன்னுரிமைகள் தவறாய் இருக்கின்றன. எண்ணெய் நிறுவனங்களுக்கும் மற்ற பெருநிறுவனங்களுக்கும் வரிகளை வெட்டுவதுதான் அவர்களுக்கு முக்கியமாய் இருக்கிறது.” மாநிலத் தலைமையகத்தின் முன்னால் இருக்கும் பிலிப்ஸ் 66 எண்ணெய் கிணறைச் சுட்டிக்காட்டி அவர் கூறினார், “மாநில சட்டமன்றத்தினருக்கு இதுதான் முக்கியமாய் இருக்கிறது, பொதுக் கல்வி அல்ல.”

போராட்டத்தை சங்கங்களின் கைகளில் இருந்து மீட்பதற்கு சாமானியர் கமிட்டிகளை தேர்ந்தெடுக்க WSWS ஆசிரியர் நியூஸ்லெட்டர் விடுத்திருந்த அழைப்புக்கு பதிலிறுத்த டஸ்டி கூறினார், “ஆசிரியர்களின் ஒரு தேசிய அளவிலான ஒழுங்கமைப்பு நமக்கு அவசியமாக இருக்கிறது; உலகளாவியதாய் இருந்தால் இன்னும் சிறப்பு.”

ஒக்லஹோமாவின் ஆசிரியர்கள் ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்திற்காக அரிசோனா, கென்சக்கி, ஃபுளோரிடா மற்றும் பிற மாநிலங்களில் இருக்கும் தங்களது சகாக்களுடன் ஒன்றிணைந்து விடுவதைத் தடுப்பதற்காக தேசிய கல்விக் கழகம் (NEA) மற்றும் அமெரிக்க ஆசிரியர் கூட்டமைப்பு (AFT) ஆகியவற்றின் மாநில இணைப்புகள் பெரும் பிரயாசையுடன் வேலைசெய்து கொண்டிருக்கின்றன. அதற்குப் பதிலாக, ஆசிரியர்களின் 10,000 டாலர் ஊதிய உயர்வுக்கான கோரிக்கை மற்றும் நிதிஒதுக்கீட்டை 2008க்கு முந்தைய மட்டங்களுக்கு மீட்சி செய்வது ஆகிய கோரிக்கைகளை சங்கங்கள் கைவிட்டிருக்கின்றன. மாநில சட்டமன்றத்தினர் ஒரு கண்துடைப்பான நிதி அதிகரிப்புக்கு ஏதாவது சமிக்கையளித்தாலும் கூட வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு முன்வர அவை ஆயத்தமாய் உள்ளன.

சங்கங்கள் என்ன செய்யப் போகின்றன என்பது குறித்தெல்லாம் வெகு முன்பே அறிந்து கொண்டு விட்டிருக்கின்ற குடியரசுக் கட்சியின் ஆளுநரான மரி ஃபலினும் (Mary Fallin) மற்றும் இரண்டு கட்சியைச் சேர்ந்த மாநில சட்டமன்றத்தினரும் அவமதிப்பான ஊதியத்தில் இருந்தும், சிகரெட்டுகள் மற்றும் எரிபொருள் மீது பிற்போக்கான வரிகள் விதிக்கின்ற சங்கங்களின் முன்மொழிவை அடிப்படையாகக் கொண்ட சென்ற வாரத்தில் நிறைவேற்றப்பட்ட பள்ளி-நிதி மசோதாவில் இருந்தும் அசைந்து கொடுக்க மறுக்கின்றனர். இந்த மோசடிச் சட்டத்தை “வரலாற்றுச் சிறப்பானது” என்று தொடர்ந்தும் சங்கங்கள் அழைத்து வருகின்ற போதிலும், அது ஆசிரியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கோ ஒரு மாணவருக்கான நிதியை அமெரிக்காவின் மிக அடிமட்ட அளவுகளில் இருந்து உயர்த்துவதற்கோ எதுவொன்றும் செய்யக் கூடியதில்லை.

CBS News யிடம் பேசிய ஃபலின் ஆணவத்துடன் கூறினார், “ஆசிரியர்கள் இன்னும் வேண்டுமென்கிறார்கள், ஆனால் இது ஒரு பதின்வயது பிள்ளை இன்னும் நல்லதொரு கார் வேண்டுமெனக் கேட்பதைப் போன்றதாக இருக்கிறது.” பின் மாநிலத் தலைமையகத்தில் ஏற்பட்டிருக்கும் அமைதியின்மையாக சொல்லப்படுவதற்கு  Antifa உள்ளிட்ட “வெளிக் குழுக்கள்” மீது அவர் அச்சுறுத்தும் விதத்தில் பழிகூறினார். “சிக்காகோ மற்றும் கலிபோர்னியா”வில் இருந்தான ஊதியத்திற்குப் போராடுபவர்களிடம் இருந்து தங்களுக்கு “கொலை மிரட்டல்கள்” வந்ததாக முந்தைய நாளில் குடியரசுக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களால் கூறப்பட்ட பொய்யான கூற்றுக்களைத்  திரும்பக் கூறுவதாக இது இருக்கிறது. ஆர்ப்பாட்டத்தைக் குற்றமாக்குவதற்கும் அதிருப்தியை வாய்மூடச் செய்வதற்கும் இந்தப் பொய்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மாநில மட்டத்திலும் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா உள்ளிட கூட்டரசாங்க மட்டத்திலும் ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரின் அதே அளவுக்கு தாட்சண்யமற்று பொதுக் கல்வி மற்றும் பிற சேவைகளை வெட்டியிருக்கின்றனர் என்கிற நிலையிலும், மாநிலத்தின் ஜனநாயகக் கட்சியினர், தமது பங்காக, ஆசிரியர்களுக்கான போராளிகள் போல காட்டிக் கொள்கின்றனர். மாநிலத்தின் ஜனநாயகக் கட்சியினர், குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் அவையில் ஒருபோதும் நிறைவேறப் போவதில்லை என்பதைத் தெரிந்து கொண்டு, வருடாந்திர வருவாயில் 100 மில்லியன் டாலர் சேர்க்கத்தக்க விதத்தில், மூலதன ஆதாய வரியில் விதிக்கப்பட்ட வெட்டினை திரும்பப் பெற அழைப்பு விடுத்திருக்கின்றனர். ஆனால் இந்த வெட்டும், அத்துடன் உயர் வருமான விகிதத்திற்கான வரியளவிலான குறைப்பும், ஃபலினுக்கு முன்னாலிருந்த ஜனநாயகக் கட்சியை சேர்ந்த பிரார் ஹென்றியால் முன்னிலை கொடுக்கப்பட்டவையாகும். 


NEA செயலாளர்-பொருளாளர் பிரின்சஸ் மோஸ்

தெளிவாக ஆசிரியர்களை விரக்தியுறச் செய்யும் முயற்சியாக இருந்த ஒன்றில், OEAவின் தலைவரான அலிசியா பிரிஸ்ட் மற்றும் வேர்ஜினியா கல்வி அமைப்பின் தலைவரும் NEAவின் நிர்வாகக் குழு உறுப்பினருமான பிரின்சஸ் மோஸ் ஆகியோர் புதனன்று ஆசிரியர்களிடம் பேசுகையில், தங்களால் முடிந்தது பெருவணிக அரசியல்வாதிகளிடம் “அவர்களது வேலைகளை சரிவர செய்யும்படி” கெஞ்சுவதைத் தொடர்வதும் அதனுடன் நவம்பரில் ஜனநாயகக் கட்சியினருக்கு வாக்களிப்பதும் மட்டுமேயாகும் என்று தெரிவித்தனர்.

“உங்களை ஆதரிக்கின்ற ஒரு வேட்பாளருக்காக கதவுகளைத் தட்ட, உங்களை ஆதரிக்கின்ற ஒரு வேட்பாளருக்காக உங்களது பைகளில் கைவிட்டு எடுத்துத் தர உங்களில் எத்தனை பேர் தயாராய் இருக்கிறீர்கள்?” என்று புதனன்று மாலையில் தலைமையகத்துக்கு வெளியில் நடந்த ஒரு பேரணியில் பிரிஸ்ட் ஆசிரியர்களிடம் கேள்வி எழுப்பினார். “ஒக்லஹோமாவில் மாற்றத்தை ஏற்படுத்த இந்நாட்களில் வருகின்ற நம்மை விடவும் இன்னும் அதிகம் பேர் தேவை. நாம் தொடர்ச்சியாக ஒரு முன்னோக்கிய பாதையைக் கொண்டிருக்க வேண்டும்.”

“தொடர்ச்சியான முன்னோக்கிய பாதை” என்பதற்கெல்லாம் வெகுதூரத்தில், ஆசிரியர்களை ஜனநாயகக் கட்சிக்கான வாக்கு பிரச்சாரகர்களாக மாற்றுவது ஆசிரியர்களின் கிளர்ச்சியை நொருக்கி, அவர்களை வரவிருக்கும் ஆண்டுகளில் பள்ளிகளுக்கான நிதியாதாரத்தை வெட்டவிருக்கும் ஒரு பெருவணிக அரசியல் கட்சிக்கு கீழ்ப்படியச் செய்வதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

ஒக்லஹோமா ஆசிரியர்கள் “சங்கங்கள்” என்று தங்களை அழைத்துக் கொள்கின்ற தொழிலாள வர்க்க விரோதமான அமைப்புகளிடம் இருந்து முறித்துக் கொண்டு ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கான தயாரிப்பில் நாடெங்கிலும் உள்ள மற்ற ஆசிரியர்கள் மற்றும் பிற தொழிலாளர்களுடன் தமது போராட்டத்தை நனவுடன் ஏன் இணைக்க வேண்டும் என்பதை இது தெளிவுபடுத்துகிறது.  

தலைமையகத்தில் புதனன்று பேசிய நடுநிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஒரு உண்மையான போராட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் பிற தொழிலாளர்களுடன் கரம் கோர்ப்பதற்கு தாங்கள் தீர்மானத்துடன் உள்ளதை உணர்ச்சிபூர்வமாக வெளிப்படுத்தினர்.


அலெக்சிஸ்

மிட்வெஸ்ட் சிட்டி ஹை ஸ்கூலில் ஒரு சீனியர் மாணவரான அலெக்சிஸ் புரோடெரிக் தெரிவித்தார்: “இந்த உலகத்தை மாற்ற நான் விரும்புவதால் நான் இங்கே நிற்கிறேன். என்னுடைய 12 வயது தங்கைக்கு ஒரு மேம்பட்ட உலகமாக இருக்க வேண்டும் என்பதற்காக அதனை நான் மாற்ற விரும்புகிறேன். அவளுக்கு என்று சொந்தமாக புத்தகங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். பல வருடங்களாக உடைந்து போய் கிடக்கும் வகுப்பறை மேசைகளின் கூர்மையான விளிம்புகள் பட்டு அவளின் ஜீன்ஸ் கிழியா வண்ணமான ஒரு நல்ல மேசையில் அவள் உட்கார்ந்து படிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கருந்திட்டுக்கள் நிரம்பியிராத ஒரு ஹாலின் வழியாக அவள் நடந்து செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். இதெல்லாம் அத்தனை ஆடம்பரமான விடயங்களா?

"எங்களது ஆசிரியர்களின் உலகத்தை மாற்ற விரும்புகிறேன். மாலையில் அவர்கள் வீட்டுக்குத் திரும்ப வேண்டுமே தவிர, இரண்டாவது அல்லது மூன்றாவது வேலைக்கு செல்லும்படி இருக்கக் கூடாது என்று விரும்புகிறேன். அவர்களுக்கு ஊதிய உயர்வு கிடைத்தது என்று தெரியும், அது எனக்கு மகிழ்ச்சியே, ஆனால் அது இன்னும் அவர்கள் தகுதிக்குரியதாக இல்லை.

“ஒட்டுமொத்தமாய் இந்த உலகத்தை மாற்றுவதற்கு விரும்புகிறேன். துப்பாக்கி வன்முறை, இனவாதம் மற்றும் புற்றுநோய் இவையெல்லாம் ஒழிக்கப்பட்ட ஒரு உலகத்தில் வாழ விரும்புகிறேன், ஒவ்வொரு பொது இடத்திலும் கூட்டத்திலான ஒரு துப்பாக்கி சூடு சம்பவத்துக்காய் நான் தயாரிக்க வேண்டியில்லாத ஒரு உலகத்தில் வாழ விரும்புகிறேன். மக்களின் குரலே தேசத்தின் குரலாய் இருக்கின்ற ஒரு உலகத்தில் வாழ நான் விரும்புகிறேன்.”

ஒரு ஆசிரியையின் மகளான இன்னுமொரு மாணவி சொன்னார், “தனது மாணவர்களுக்கு முறையான கல்வி கிடைக்க வேண்டும் என்று விரும்புகிற என் அம்மா பேராசை கொண்டவரென்று ஏன் சொல்லப்படுகிறார்? இந்த புறக்கணிப்புப் போராட்டத்துக்கு மாணவர்களின் ஆதரவு அத்தியாவசியமானதாகும். இந்த புறக்கணிப்பு எங்களுக்கானதாகும். எங்களது ஆசிரியர்கள் அதற்கு தலைமை மட்டுமே கொடுக்கிறார்கள்.”


ஜில்

பேத்தனி உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஜில் ஓவர்ஸ்ட்ரீட் கூறினார், “ஒக்லஹோமா பள்ளியில் படிக்கையில், கிழிந்த பாடப்புத்தகங்களும், அதிக கடனுக்கு பொருட்களை வாங்கி வருவதும் இயல்பு தான் என்றே நினைத்தேன். 30 பேருடன் வகுப்பில் அமர்வதும் இயல்பு என்றே நினைத்தேன்.

ஆசிரியர்கள் முகம்கொடுக்கின்ற போராட்டங்களைக் குறித்து பின்னர் தான் தெரிய வந்தது: அவர்களது பிள்ளைகளுக்கு ஷூக்கள் வாங்கவும், எரிவாயுக்கு பணம் கொடுக்கவும் இரண்டாவது வேலைக்குமாய் அவர்கள் நடத்துகிற போராட்டங்கள். கால்பந்து மைதானம் புதுப்பிக்க வேண்டியதிருப்பதால் புதிய கலைப் பொருட்களுக்கு பணம் செலுத்துவதற்கான போராட்டம். அவர்கள் வேலையின் மீது கொண்ட நேசத்தைப் பாதுகாப்பதற்காக ஒவ்வொரு சம்பளத் தேதிக்கு மத்தியிலும் அவர்களது செலவுகளை சமாளிப்பதற்கு நடத்துகிற போராட்டம். எங்களால் இதை ஏற்க முடியாது. ஆசிரியர்களுக்கு அவர்களுக்குரியது கிட்டுவதில் உதவுவதற்காக அவர்களுடன் போராட நாங்கள் இங்கே நிற்கிறோம். வரலாறு எங்களை உற்றுக் கவனிக்கிறது.”


ரவி

சவுத்மூர் உயர்நிலைப் பள்ளியில் சீனியரான ரவி பட்டேல் கூறினார், “நாங்கள் பதின்வயதினராக இருந்த போதிலும் கூட, எங்களது ஆசிரியர்கள் ஒரு சமத்துவமான கல்விக்காக போராடுவதற்காக தண்டிக்கப்படுகின்ற சமயத்தில் அதைப் பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மாயிருக்கப் போவதில்லை என்பதை நிரூபித்திருக்கிறோம். ஒரு சரியான உலகத்தில், எந்த ஆசிரியரும் போதுமான சம்பளத்திற்காக ஒவ்வொருநாளும் போராடும்படி இருக்கக் கூடாது.

“கல்விபெற்ற வாக்காளர்களும் மற்றும் பொதுக் கல்வியும் நமது தேசத்தின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் செலுத்தக் கூடிய செல்வாக்கு குறித்து தோமஸ் ஜெபர்சனும் கூட குறிப்பிட்டிருக்கிறார், அதுவும் 200க்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்பாக. ஆகவே நிதிகள் இல்லை என்று அவர்கள் உங்களிடம் சொல்ல நீங்கள் விடக் கூடாது. அவற்றின் மீது அவர்கள் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒக்லஹோமாவின் கேபிடல் ஹில்லில் இருப்பவர்கள் (Capitol Hill) தங்களுக்கு மூலதனத்தின் ஒரு மலையை எழுப்பிக்கொள்ளக் கூடாது. மாணவர்களுக்கு மேலாய் இலாபங்களை வைப்பதை நாம் தடுத்து நிறுத்தியாக வேண்டும். மிக முக்கியமாக, நமது எதிர்காலத்திற்கு மேலாய் நிதிகளை அமர்த்துவதை நாம் தடுத்து நிறுத்தியாக வேண்டும்.”