Print Version|Feedback
India: Modi government accelerates anti-worker privatization drive
இந்தியா: மோடி அரசாங்கம் தொழிலாளர் விரோத தனியார்மயமாக்கல் உந்துதலை விரைவுபடுத்துகின்றது
By Kranti Kumara
9 April 2018
இந்திய பெரு வணிக, “முதலீட்டாளர் சார்பு சீர்திருத்தத்தை” மேலும் புது அழுத்தம் கொடுத்து முன்னெடுத்து செல்வதன் ஒரு பாகமாக, இந்து மேலாதிக்கவாத பாரதீய ஜனதா கட்சி (BJP) அரசாங்கம், மத்திய அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களை பகுதியளவில் அல்லது முழு அளவில் தனியார்மயமாக்குவதன் பேரில் அதன் முதலீடுகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கையை தீவிரமாக விரைவுபடுத்துகின்றது.
கனரக தொழில்கள் மற்றும் பொதுத்துறை நிறுவன அமைச்சகத்தின் கருத்துப்படி, 2017 இல் இருந்த 331 நிறுவனங்கள் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது பொறுப்பேற்பு நிறுவனங்கள் (Central Public-Sector Enterprises or Undertakings - CPSEs or CPSUs) என்று அழைக்கப்படுகின்றன. அவை, இரயில்வே, கப்பல் வணிகம், தொலைத்தொடர்பு, ஆயுத உற்பத்தி, சுரங்கத் தொழில், வங்கிகள், பெட்ரோகெமிக்கல், விமானப் போக்குவரத்து மற்றும், மின் உற்பத்தி மற்றும் பரிமாற்றம் போன்ற பொருளாதார தொடர்புடைய பெரும்பாலான துறைகள் வரை விரிவடைந்து செல்கின்றன.
இந்தியாவில், ஒரு சட்டம் போல வேலை நிலைமைகள் மிருகத்தனமாகவும், ஊதியங்கள் மிகக் குறைவானதாகவும் உள்ள நிலையில், அங்கு CPSE வேலைகள் தான் பாரம்பரியமாகவே ஒப்பீட்டளவில் பாதுகாப்பான வேலையாகவும், சராசரி ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகளையும் விட சிறந்தவையாகவும் இருந்து வருகின்றன. இத்தகையதொரு சூழ்நிலையில் தான், இந்திய அரசு நடத்தும் இரயில்வே துறையில், இரயில் ஓட்டுநர் மற்றும் தச்சு வேலை பணியிடங்களில் இருந்து இரயில் பாதை பரிசோதகர்கள் பணியிடம் வரையிலான காலியிடங்களுக்கு போட்டியிடுவதற்கு கடந்த மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டதன்படி, 90,000 காலியிடங்களுக்கு 25 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இந்திய ஆளும் உயரடுக்கு, சர்வதேச மூலதனத்திற்கு இந்தியாவை ஒரு மலிவு உழைப்பு புகலிடமாக மாற்றும் அதன் முன் அழுத்திச்செல்லும் ஒரு பாகமாக, கடந்த கால் நூற்றாண்டு காலமாக முதலீடுகளைத் திரும்பப் பெறும் செயல்பாட்டை பின்பற்றி வருகிறது. ஆனால், நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி அரசாங்கமோ, பொருளாதாரத்திற்கான மூலோபாய துறைகளாக முன்பு கருதப்பட்டுவந்த மிகுந்த இலாபகரமான நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை இலக்கு வைப்பது உட்பட, இது தொடர்பான செயல்பாடுகளில் அதன் முன்னோடிகளை காட்டிலும் பலமடங்கு விஞ்சிவிட்டது.
இதில், இரண்டு நீண்டகால இலக்குகளை இது கொண்டுள்ளது. அவற்றில் ஒன்று CPSE களை முற்றிலுமாக அகற்றுவது, ஏனென்றால், அவை ஒருபோதும் தொழிலாள வர்க்கத்தினால் நடத்தப்படவில்லை அல்லது அவர்களது நலன்களை முன்னிட்டும் நடத்தப்படவில்லை என்றாலும், பலதலைமுறை தொழிலாளர்களின் கூட்டு உழைப்பின் விளைபொருளாக இருக்கின்ற அவைதான் பேராசைமிக்க தனியார் முதலீட்டாளர்களும் நிறுவனங்களும் வணிகம் செய்தல் என்ற பெயரில் மொத்த நிறுவன இலாபத்தையும் விழுங்குவதற்கு வழிசெய்யும். இரண்டு, ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமையை இன்னும் கீழறுப்பது, மேலும் அதன் மூலமாக முதலீட்டாளர்களை இன்னும் அதிகளவு கவரக்கூடியதாக இந்தியாவை மாற்றும் நோக்கத்தில், குறைவூதியங்கள், பரந்தளவிலான பணிநீக்கம் மற்றும் மிகமோசமான வேலை நிலைமைகள் ஆகியவற்றிற்கு எதிராக CPSE வழங்கிய அனைத்து சமூக பாதுகாப்புகளையும் படிப்படியாக அகற்றுவதாகும்.
மேலும், சிக்கலுக்குள்ளாகியுள்ள அரசுக்கு சொந்தமான வங்கிகளில் பெரும் தொகைகளை முதலீடு செய்தாலும் கூட, இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதத்திற்கு ஏற்ப அதன் பற்றாக்குறையை குறைப்பதற்கு அழுத்தம் கொடுத்துவந்த சர்வதேச அளவிலான பங்கு மதிப்பீட்டு நிறுவனங்களை திருப்திப்படுத்தும் வகையில், வருவாயை அதிகரிப்பதை முன்னிட்டு அரசாங்கத்திற்கான ஒரு குறுகிய கால தேவை குறித்த வலியுறுத்தலும் அங்கு உள்ளது.
கடந்த இரண்டு தசாப்தங்களாக, CPSE களில் உள்ள வேலை நிலைமைகள் ஒருங்கிணைந்த தாக்குதலின் கீழ் உள்ளன. Coal India Ltd. (CIL) இன் விவகாரத்தில், அரசாங்கம் ஏற்கனவே 20 சதவிகித உரிமையை விற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் 2020 ஆம் ஆண்டிற்குள், அதன் 30 சதவிகித தொழிலாள சக்தியை குறைப்பதற்கு திட்டமிடுவதாகவும் அது அறிவித்துள்ளது. இருந்தபோதிலும், CIL இல் பணிபுரியும் 500,000 சுரங்கத் தொழிலாளர்களில் குறைந்தபட்சம் பாதிபேர் ஒப்பந்தத் தொழிலாளர்களாக உள்ளனர், அதிலும், அவர்கள் நிரந்தர தொழிலாளர் பெறும் ஊதியத்தில் பாதியளவாக, வெறும் 8,500 ரூபாயை (130 அமெரிக்க டாலரை) மாத ஊதியமாக பெறுகின்றனர் என்பது தான் உண்மை.
சுதந்திரத்திற்கு பின்னர் முதல் நான்கு தசாப்தங்களாக அரசு தலைமையிலான முதலாளித்துவ அபிவிருத்தியை முன்னிலைப் படுத்திய காங்கிரஸ் கட்சி உட்பட, அரசியல் உயரடுக்கின் அனைத்து பிரிவுகளும், CPSE ஐ ஒட்டுமொத்தமாக தனியார்மயமாக்கல் செய்வது இந்திய பொருளாதாரத்தை மிகவும் “வலுப்படுத்தும்” என்று கூறி அந்த இலக்கை நிறைவேற்ற உடன்பட்டுள்ளன. இதன் மூலம் அவர்கள் கூறுவது என்னவென்றால், வேலைகள், ஊதியங்கள், நலன்கள் மற்றும் வேலை நிலைமைகள் மீதான ஒரு ஒட்டுமொத்த தாக்குதலூடாக, அவர்கள் தொழிலாளர் சக்தியிடமிருந்து மாபெரும் இலாபத்தை பிழிந்தெடுக்கும் அசைக்கமுடியாத நிர்வாகமாக இது செயல்படும் என்பதாகும்.
(2004-14 வரை) கடைசியில் அதிகாரத்தில் இருந்தபோது, காங்கிரஸ் கட்சி தனியார்மயமாக்கம் உட்பட, பரந்த அளவிலான நவ-தாராளவாத சீர்திருத்தங்களை செயல்படுத்திய போதும், அரசுக்கு சொந்தமான ஆயுத உற்பத்தி நிறுவனங்களையும் மற்றும் “நவரத்னங்கள்” என்றழைக்கப்பட்ட, எண்ணெய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு போன்ற மூலோபாய துறைகளில் உள்ள ஒருசில இலாபகரமான நிறுவனங்களையும் விற்பதை எதிர்த்து அவை உலகத் தலைமைகளாக இருப்பதற்கு தகுதிபடைத்திருந்ததாக வாதிட்டு தம்பட்டம் அடித்தது.
காங்கிரஸ் இப்போது இந்த நிலைப்பாட்டை முற்றிலும் கைவிட்டுள்ளது, அது பகிரங்கமாக பிரகடனப்படுத்தப்பட்ட அமெரிக்க தலைமையிலான சீன-விரோத கூட்டணியில் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன், இந்தியா சேர்வதை தவிர ஏனைய அனைத்திலும் மோடி அதனை சேர்த்திருப்பதற்கு இசைவான நிலைப்பாட்டை கொண்டுள்ளது.
ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (CPM) மற்றும் சிறிய கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) இரண்டுமே தனியார்மயமாக்கலை எதிர்க்கின்றன என்றாலும், தேசியவாதம் மற்றும் இந்திய முதலாளித்துவத்திற்கு ஒரு மாற்று மூலோபாயம் என்ற நிலைப்பாட்டில் இருந்து மட்டுமே அவை அதைச் செய்கின்றன. அரசுக்கு சொந்தமான வங்கிகள் மற்றும் பிற வணிக நிறுவனங்களை தக்கவைத்து கொள்வது என்பது, இந்திய முதலாளித்துவத்தை ஏகாதிபத்திய நிதி மூலதனத்திற்கு எதிராக நேரடியாக வலுப்படுத்தும் என்றும், இந்திய ஆளும் உயரடுக்கிற்கு, உலக அரங்கில் மிகப்பெருமளவில் சமாளித்து செயல்படுவதற்கு வகை செய்யும் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.
நிதியமைச்சர் அருண் ஜேட்லி பிப்ரவரி 1 அன்று வழங்கிய அவரது “2018-19 வரவு செலவுத் திட்ட உரையில்”, மார்ச் 31 உடன் நிறைவுற்ற கடந்த நிதியாண்டு 2017-18 இல், அரசாங்கம் முதலீடுகளைத் திரும்பப் பெற்றுகொண்ட வருமானத்தின் மதிப்பு 1 டிரில்லியன் ரூபாயை (15.6 பில்லியன் அமெரிக்க டாலரை) விஞ்சிவிடும் என்ற உண்மையை பெருமையுடன் குறிப்பிட்டுக் காட்டினார்.
கடந்த ஆண்டு வரவு செலவுத் திட்ட உரையின் போது அவர் வகுத்து வைத்திருந்த இலக்கான 720 பில்லியன் ரூபாய் (11.3 பில்லியன் டாலர்) என்பதை விட இது ஒரு கணிசமான அதிகரிப்பாகவே இருந்தது.
மே 2014 இல் அதிகாரத்திற்கு வந்த பிஜேபி அரசாங்கத்தின் கீழ், ஒட்டுமொத்தமாக முதலீடுகளைத் திரும்பப் பெற்றுகொண்டதற்கான வருமானத்தின் மதிப்பு, 2.3 டிரில்லியன் ரூபாயை விட அல்லது 36 பில்லியன் டாலரை விட அதிகமாக இருந்தது. மேலும் நடப்பு நிதியாண்டிற்கு, ஜேட்லி, 800 பில்லியன் ரூபா (12.3 பில்லியன் டாலர்) முதலீடுகளைத் திரும்பப் பெறுவதற்கான இலக்கை நிர்ணயித்துள்ளார்.
அனைத்து 331 CPSE களில் -அதன் பங்குகள் குறித்து- அரசாங்கத்தின் 2017 ஆம் ஆண்டு மதிப்பீடான 12.5 டிரில்லியன் ரூபாய் அல்லது 195 பில்லியன் டாலர் என்பதை, கீழேயள்ள pie விளக்கப் படத்தின் படி, தற்போது தனது முதலீடுகளைத் திரும்பப் பெற்றுக்கொண்ட 36 பில்லியன் டாலருக்கு அதிகமாக ஒட்டுமொத்த வருமான மதிப்புடன் ஒப்பிடும்போது தான் அரசாங்கத்தின் தனியார்மயமாக்க உந்துதல் எந்த மட்டத்திற்கு உயர்ந்துள்ளது என்பது தெரியும்.
வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையை குறைப்பதோடு மட்டுமல்லாமல், மோடி அரசாங்கம், முதலீடுகளைத் திரும்பப் பெறுவதால் கிடைக்கும் எதிர்பாராத பணவரவை, வருடத்திற்கு கிட்டத்தட்ட 55 பில்லியன் டாலருக்கு இராணுவ செலவினத்தை தீவிரமாக அதிகரிப்பதற்கு பயன்படுத்தியுள்ளது.
பெரும் நிறுவனங்களில் ஒன்றான தேசிய விமான நிறுவனம் Air India தான் மோடி அரசாங்கத்தின் தனியார்மயமாக்கலின் முக்கிய இலக்காக தற்போது உள்ளது. கடந்த பதினைந்து ஆண்டுகளில், காங்கிரஸ் கட்சி தலைமையிலானவை உட்பட, ஆட்சியமைத்த அடுத்தடுத்த அரசாங்கங்கள், 2015 இல் Air India நிறுவனத்தை அப்போது நிலவிய பரிமாற்ற விலை மதிப்பீட்டின்படி, 700 பில்லியன் ரூபாய் அல்லது 16 பில்லியன் டாலருக்கு நெருக்கமான விலையில் 111 புதிய விமானங்களை வாங்குமாறு வலியுறுத்திய அதேவேளையில், அந்நிறுவனத்திற்கு நிதியளிக்காமல் அதனை திவாலாக்க தீவிரமாக செயலாற்றின.
பல ஆண்டுகளாக, Air India நிறுவனம் அதன் அன்றாட செயல்பாடுகளுக்கே கடன் பெறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தமையால், அதன் கடன் சுமை 500 பில்லியன் ரூபாய் (கிட்டத்தட்ட 8 பில்லியன் டாலர்) க்கு அதிகமாகும் நிலை உருவாகியது. பெருநிறுவன ஊடக வலைத் தளம் FirstPost இல் வெளியான ஒரு கட்டுரையின் கருத்துப்படி, விமானத்துறை அதன் கடன்கள் மீது 165 மில்லியன் ரூபாயை (2.5 மில்லியன் டாலரை) தினசரி வட்டியாக செலுத்தவேண்டிய நிலையிலுள்ள அதேவேளையில், 100 மில்லியன் ரூபாய் (1.5 மில்லியன் டாலர்) தினசரி இழப்புடன் வேறு இயங்கிவருகிறது.
இந்த ஆண்டு பிற்பகுதியில் Air India நிறுவனத்தை ஏலத்திற்கு விடுவதற்கு முன்பு, இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த கடன் சுமையையும் இந்திய கருவூல கணக்கிற்கு மாற்றுவதற்கும், அதன் மூலம் கடன் சுமையில்லாத, ஒரு தொகை விமானங்களை தனியார் முதலீட்டாளர்களுக்கு திறமையாக பரிசளிக்கவும் மோடி அரசாங்கம் திட்டமிடுகிறது. இந்நிலையில், Air India நிறுவனத்தின் 27,000 ஊழியர்களும் அவர்களது வேலைகள், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் குறித்த பெரும் அச்சுறுத்தலின் கீழ் உள்ளனர் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.
இது குறித்து, தொழிற்சங்கங்களோ அரைமனதுடன் கூடிய எதிர்ப்பு பிரச்சாரத்துடன் பதிலிறுத்துள்ளன. மோடி அரசாங்கத்தின் மீதான வாய்மொழி கண்டனங்களை தெரிவித்ததைத் தவிர, இந்திய தொழிற்சங்கங்களின் மையமும் (Centre of Indian Trade Unions-CITU), அந்த தொழிற்சங்கம் இணைந்துள்ள ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யும், Air India வை தனியார்மயமாக்கும் மோடி அரசாங்கத்தின் திட்டங்களை எதிர்க்க எதையும் செய்துவிடவில்லை.
இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளும் தனியார்மயமாக்கத்திற்கான தீவிர பரிசீலனையின் கீழ் உள்ளன. அரசாங்கமும் பெருநிறுவன ஊடகங்களும், அரசியல் ரீதியாக தொடர்புடைய இந்திய பில்லியனர்களும் பலகோடி-மில்லியனர்களும் அவர்களது தற்போதைய கடன் தொகைகளை திரும்பச் செலுத்தாமல் கூட கூடுதல் கடன்களை பெறுகின்றனர் என்பதால், அரசுக்கு சொந்தமான வங்கிகளை தனியார் கைகளில் “உறுதியாக” கொடுக்க வேண்டிய தேவை இருப்பதாக வாதிட்டு, அவர்களைப் பற்றிய சமீபத்திய ஊழல் முறைகேடுகளை பயன்படுத்தியுள்ளனர்.
உண்மையில் இந்தியாவின் பின்புலம், “செயல்படா சொத்துக்கள்” அதாவது திரும்பவராக் கடன்களுடன் இணைந்து பெரும் சுமையுடன் தடுமாறுகிறது, ஏனென்றால், பிஜேபி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கங்கள் ஒரு பலமிழந்துசெல்லும் பொருளாதாரத்தை முடுக்கிவிடும் முயற்சியில், இந்திய வர்த்தக நிறுவனங்களுக்கு தொடர்ந்து கடன் கொடுக்க அழுத்தம் கொடுத்து வந்ததால் தான் இந்நிலை உருவானது. ஆனால், பிஜேபி அரசாங்கம், வங்கிகளின் இருப்புநிலை குறிப்புகளை வலுப்படுத்த தேவைப்படும் பண உள்ளீடுகளை ஏற்படுத்தவும், மேலும் பெரு வணிகத்திற்கு அவற்றை விற்றுவிட தயாரிப்பு செய்யவும், இந்திய தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளிகளை அதிக வரி செலுத்தச் செய்வது மற்றும் சமூகநல செலவினங்களை குறைப்பது போன்றவற்றின் மூலமாக, தற்போது இந்த கடன்களை “சமூகமயப்படுத்த” நோக்கம் கொண்டுள்ளது.
பேராசைமிக்க பெருவணிக நலன்கள், மோடி அரசாங்கத்தின் தனியார்மயமாக்க உந்துதலை ஊக்குவிப்பவையாக இருப்பதற்கான உதாரணமாக, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு லிமிடெட் (Oil and Natural Gas Ltd.-ONGC), இந்திய எரிவாயு ஆணையம் (Gas Authority of India Ltd.-GAIL), இந்திய எண்ணெய் நிறுவனம் (Oil India Ltd.), இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் (Indian Oil Corporation-IOC), இந்திய நிலக்கரி நிறுவனம் (Coal India Limited) மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (Bharat Electronics Limited) போன்ற பெரும் நிறுவனங்கள் உள்ளிட்ட பத்து மிகப்பெரிய மற்றும் மிகுந்த இலாபகரமான CPSE களின் விரைவான, பகுதியளவிலான அல்லது முழு அளவிலான தனியார்மயமாக்கம் குறித்து மேற்பார்வையிடும் ஒரு “ஆலோசகர்” மற்றும் “நிபுணராக” சேவையாற்ற, பில்லியனர் அனில் அம்பானிக்கு சொந்தமான முதலீட்டு நிதியான Reliance Mutual Exchange Trade Fund என்பதன் நியமனம் உள்ளது. அனில் அம்பானியின் சகோதரர் முகேஷ் அம்பானி ஆசியாவிலேயே பெரும் பணக்காரர் ஆவார். தொழிலாள வர்க்கம் மீதான தீவிரப்பட்ட சுரண்டலை மிகக் கடுமையாக பின்பற்றும் தன்மையினாலும் மற்றும் உலக அரங்கில் சூறையாட முனையும் பெரும் வல்லமைமிக்க அதன் அபிலாஷைகளாலும், இந்திய ஆளும் உயரடுக்கின் கருவியாக கருதப்பட்டவரான, இந்துமத “தீவிரவாதி” மோடி தலைமையிலான அரசாங்கம் குறித்து அம்பானி சகோதரர்கள் முன்பே ஆர்வம் கொண்டிருந்தனர்.