Print Version|Feedback
Macron and the democracy of class war
மக்ரோனும் வர்க்கப் போரின் ஜனநாயகமும்
Peter Schwarz and Andre Damon
20 April 2018
பிரான்சின் ஜனாதிபதியும் முன்னாள் ரோத்ஸ்சைல்ட் வங்கியாளருமான இமானுவல் மக்ரோன், செவ்வாய்கிழமையன்று, ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் முன்பாக ஜனநாயகத்திற்கான ஒரு உருக்கமான விண்ணப்பமாக மேற்கத்திய ஊடகங்களால் புகழப்பட்ட ஒன்றை வழங்கினார்.
“தாராளவாதமற்ற கற்பனையோட்டங்கள் அன்றாடம் பெருகிச் செல்வதும்” அத்துடன் “உலகின் எஞ்சிய பகுதிக்கு முன்னால் நம்மை ஐக்கியப்படுத்திக் காட்டுவதைவிட நமது தேசிய தன்னலமானது சிலசமயங்களில் மிகவும் முக்கியமானதாகி விடுவது”மான ஒரு ஐரோப்பாவைக் குறித்து அவர் எச்சரித்தார்.
“நம்மைச் சுற்றி எதேச்சாதிகாரவாதத்தை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என்று அறிவித்தார் பிரெஞ்சு ஜனாதிபதி. “அதற்கான பதிலிறுப்பு எதேச்சாதிகார ஜனநாயகமாக இருக்கக் கூடாது, மாறாக ஜனநாயகத்தின் அதிகாரமாக இருக்க வேண்டும்.” மக்ரோனைப் பொறுத்தவரை, “உலகின் ஒரு தனித்துவமான ஜனநாயக மாதிரி”யை பிரதிநிதித்துவம் செய்கின்றதும், “சுதந்திரத்தை கருத்தில் கொண்ட ஜனநாயகமும்” ஆன ஐரோப்பிய ஒன்றியம் தான் இந்த ஜனநாயகத்தின் உருவடிவாம்.
இந்த உரை அமெரிக்க, பிரிட்டிஷ், மற்றும் பிரெஞ்சு அரசியல் ஸ்தாபகங்களிடம் இருந்து ஆரவாரமான வரவேற்பைப் பெற்றது, மக்ரோனைக் கொண்டாடும் முன்னிலைத் தலையங்கங்களை நியூ யோர்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், மற்றும் பைனான்சியல் டைம்ஸ் ஆகியவை பிரசுரித்திருந்தன.
“ஐரோப்பிய ஜனநாயக”த்தை காவல்காக்கும் “அரண்களுக்கு” காவலாய் நிற்கும் ஒரு ”பைபிள்கால தீர்க்கதரிசி” உடன் நியூ யோர்க் டைம்ஸ் மக்ரோனை ஒப்பிட்டது.
ஆனால் மக்ரோன் ஒரு பைபிள்கால தீர்க்கதரிசியானால், அவர் அணிந்து கொண்டிருப்பது அதன் கிழிந்து தொங்குகின்ற மற்றும் அழுக்கடைந்த ஆடைகளையாகும்.
மக்ரோன் அவரது இந்த உரைக்கு வெறும் நான்கு நாட்களுக்கு முன்பாகத்தான், டமாஸ்கஸ் மற்றும் ஹோம்ஸ் ஆகிய சிரிய நகரங்களின் மீது, போலியான சாக்குப் போக்குகளை அடிப்படையாகக் கொண்டு, எந்தவித நாடாளுமன்ற வாக்களிப்பும் இல்லாமல் அத்துடன் பெரும்பான்மை பிரெஞ்சு மக்களின் எதிர்ப்பையும் மீறி, வான் தாக்குதல்களுக்கு உத்தரவிட்டிருந்தார். ஒரு வலது-சாரி மற்றும் பாசிச வாய்வீச்சாளரான டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரிட்டனை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிக்கின்ற முயற்சியால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசாங்கத்தை நடத்துகின்ற பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே ஆகியோருடன் கூட்டணி வைத்துத்தான் பிரெஞ்சு ஜனாதிபதி கிழக்கு மத்தியதரைக்கடல் நாட்டில் அவரது இராணுவ சாகசத்தை நடத்தினார்.
2017 பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றில் கால்வாசிக்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற இந்த “தீர்க்கதரிசி” மக்ரோன், அவரது பதவிக்காலத்தின் முதலாவது ஆண்டில், பிரான்சின் எதேச்சாதிகாரமான “அவசரகாலநிலை” நடவடிக்கைகளை அரசியல்சட்டத்தில் ஏற்றினார், சமூகத்திற்கான அரசின் சேவைகளை வெட்டுவதற்கு வேலை செய்தார், அத்துடன் பிரான்சின் பொதுத் துறை தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் மீது ஒரு நேரடியான தாக்குதலைத் தொடுத்தார்.
அவரது உரைக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக, மக்ரோன், ஒரு சூழலியல் முகாமில் இருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது 3,000 கலகத் தடுப்பு போலிசார் ஒரு பாரிய தாக்குதல் தொடுப்பதை மேற்பார்வை செய்தார், அத்துடன் பிரெஞ்சு குடியரசின் மதசார்பற்ற பாரம்பரியங்களின் மீது ஒரு பெரும் தாக்குதலைத் தொடுக்கும் விதமாக பிரான்ஸ் “திருச்சபைக்கும் அரசுக்கும் இடையிலான பிணைப்பை” “திருத்தியமைக்க” வேண்டும் என்று அழைப்புவிடுத்தார்.
இத்தனையிருந்தும் மக்ரோனை ஜனநாயகத்திற்கான கடைசியான ஆகச் சிறந்த நம்பிக்கை எனக் கூறி மேற்கத்திய ஊடகங்கள் தூக்கிப்பிடிக்கின்றன. வாஷிங்டன் போஸ்ட் கூறியது, “செவ்வாய்கிழமையன்று பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் எடுத்துரைத்த உண்மைகள் ஒட்டுமொத்த உலகத்திற்கும் பொருந்தக் கூடியதாகும்.”
மக்ரோனின் உரையிலும் சரி ஊடகங்களில் அதற்குக் கிடைத்த ஆரவாரமான வரவேற்பிலும் சரி இல்லாதிருந்தது என்னவென்றால், ஐரோப்பா முழுவதிலும் அதிவலது ஏன் வலுப்பெற்றுக் கொண்டிருக்கிறது? என்பதை விளக்குவதற்கோ, அல்லது, அதே அளவுக்கு முக்கியமானதாய், ஐரோப்பாவின் “தாராளவாத” அரசாங்கங்கள் பாசிச ஆட்சிகளில் இருந்து பிரித்தறிய முடியாத அளவிலான கொள்கைகளைப் பின்பற்றுவது அதிகரித்துச் செல்வது ஏன்? என்பதை விளக்குவதற்கோ அங்கே எந்த முயற்சியும் இருக்கவில்லை.
எல்லாவற்றையும் விட, ஐரோப்பிய ஒன்றியத்தில் மக்ரோனின் முக்கிய கூட்டாளியான ஜேர்மனி, ஒரு மிகப்பெரும் கூட்டணி அரசாங்கத்தினால் தலைமை கொடுக்கப்படுகின்றது, அது அதி-வலது ஜேர்மனிக்கான மாற்றின் (AfD) புலம்பெயர்ந்தோர் விரோத அரங்கை பெருமளவுக்கு ஏற்றுக் கொண்டிருக்கிறது, ஜேர்மன் இராணுவத்தின் இராணுவவாத (வெளிப்படையாக, பாசிச) பாரம்பரியங்களை மீண்டும் நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது, அத்துடன் ஐரோப்பாவின் மிகவும் அரக்கத்தனமான இணைய தணிக்கை ஆட்சிகளில் ஒன்றைத் திணித்திருக்கிறது.
அதிவலதுகளின் வளர்ச்சியை சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சியுடனும், நலன்புரி அரசின் அகற்றத்துடனும், அல்லது இராணுவவாதத்தின் வளர்ச்சியுடனும், அதாவது முதலாளித்துவ அமைப்புமுறையின் அடிப்படை குணாம்சங்களுடன் தொடர்புபடுத்திப் பார்ப்பதற்கு மக்ரோனோ அல்லது அவரது புகழ்பாடுபவர்களோ எந்த முயற்சியும் செய்யவில்லை.
உண்மையில், ஐரோப்பாவில் அதி-வலதுகளின் வளர்ச்சிக்கான மாபெரும் பொறுப்பு, ஐரோப்பிய வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் சார்பாக ஐரோப்பிய ஒன்றியத்தால் பின்பற்றப்பட்ட தொழிலாள-வர்க்கத்திற்கு விரோதமான கொள்கைகளிலேயே அமைந்திருக்கிறது. ஒரு முதலீட்டு வங்கியாளராக மக்ரோன் ஆதரவளித்த, அத்துடன் பிரான்சின் நிதி அமைச்சராக அவர் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகள், அதி-வலது கட்சிகள் பெருகும் ஆதரவை வெல்வதற்கு இட்டுச் சென்றிருக்கிறது. தொழிலாள வர்க்கம் ஐரோப்பிய ஒன்றியத்தை சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் உருவடிவாகக் காணவில்லை, மாறாக பெரும் செல்வந்தர்கள் மற்றும் வங்கிகளின் நலன்களை இரக்கமற்று முன்னெடுக்கும் கருவியாகவே கண்டனர்.
சமூக ஜனநாயகக் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மற்றும் கிரீசில் சிரிசா, பிரான்சில் NPA மற்றும் ஜேர்மனியில் Die Linke போன்ற போலி-இடது கட்சிகள் ஆகியவை தொழிலாள வர்க்கத்தின் ஒரு உண்மையான இயக்கம் எழுவதைத் தடுப்பதற்கு தமது சக்திக்குட்பட்ட அனைத்தையும் செய்ததோடு சிக்கன நடவடிக்கை வேலைத்திட்டங்களை நிபந்தனையின்றி ஆதரித்தன மற்றும் அமல்படுத்தின என்ற காரணத்தினால்தான் அதிவலதுகள் தம்மை ஒரு ஊழலடைந்த ஸ்தாபகத்தின் விமர்சகர்களாக காட்டிக் கொள்வதற்கும் சமூகக் கோபத்தை ஒரு தேசியவாதப் பாதையில் திருப்பி விடுவதற்கும் இயலுகிறது.
இதன் விளைவாகத்தான், பிரான்சில் தேசிய முன்னணி (FN) இரண்டாவது பெரும் கட்சியாக வளர்ந்திருக்கிறது, ஜேர்மனியில் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் கூட்டரசாங்க நாடாளுமன்றத்தில் நுழைகின்ற முதல் அதி-வலது கட்சியாக AfD ஆகியிருக்கிறது, ஆஸ்திரியாவில் அதிவலது தீவிரவாத சுதந்திரக் கட்சி அரசாங்கப் பொறுப்பை ஏற்றது, வெளிநாட்டவர்வெறுப்பு Lega மற்றும் Five Star இயக்கம் இத்தாலியில் நாடாளுமன்ற பெரும்பான்மையைக் கொண்டிருக்கிறது, போலந்து, செக் குடியரசு மற்றும் ஹங்கேரியில் அதி-வலது கட்சிகள் அதிகாரத்திலுள்ளன.
இந்த நிலைமைகளின் கீழ் ஐரோப்பிய ஒன்றியத்தில் மக்ரோன் எதிர்பார்க்கும் “சீர்திருத்த”ங்களுக்கும் ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் சமத்துவத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஐரோப்பாவை ஒரு போலிஸ் அரசாகவும், உலகின் ஏகாதிபத்திய மறுபங்கீட்டில் போட்டியிட இயலும் விதமாக பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியால் மேலாதிக்கம் செய்யப்படுகின்ற ஒரு இராணுவப் பெரும் சக்தியாகவும் உருமாற்றுவதற்கே அது நோக்கம் கொண்டிருக்கிறது.
இரண்டாம் உலகப் போருக்கு முன்வந்த காலத்தில், ஆங்கில-அமெரிக்க முதலாளித்துவத்திற்கான வக்காலத்துவாதிகள், உலகத்தின் அடிப்படையான பிரிவினையும் அத்துடன் உலகளாவிய மோதலுக்கான மூலகாரணமும், “ஜனநாயக”த்திற்கும் “பாசிச”த்திற்கும் இடையிலானதாக இருந்ததாக கூறிக் கொண்டனர். ஆனால், 1930களில், இப்போது போலவே, “ஜனநாயக” மற்றும் “எதேச்சாதிகார” அரசாங்கங்கள் இரண்டுமே உலக நெருக்கடியின் காரணத்தால் அடிப்படையில் ஒரே இராணுவவாத மற்றும் எதேச்சாதிகாரக் கொள்கைகளைப் பின்பற்றுவதற்கு நெருக்குதல் பெற்றன.
1917 அக்டோபர் புரட்சியின் இணைத்தலைவரும் நான்காம் அகிலத்தின் ஸ்தாபகருமான லியோன் ட்ரொட்ஸ்கியை விடவும் வேறெவரும் இந்த நிகழ்ச்சிப்போக்கை மிகத் தெளிவாக விவரித்ததில்லை, முதலாளித்துவவாதிகளின் “ஜனநாயக” நடிப்புகளில் தொழிலாளர்கள் எந்த பிரமையும் கொள்ளக் கூடாது என்று அவர் வாதிட்டார். “நமது காலத்தில் மார்க்சிசம்” என்ற அவரது 1939 ஆம் ஆண்டுக் கட்டுரையில், ட்ரொட்ஸ்கி எழுதினார்:
எதிர்வரவிருக்கும் போரை ஜனநாயகம் மற்றும் பாசிசத்தின் சிந்தனைகளுக்கு இடையிலான ஒரு மோதலாகக் காட்டுவதற்கான அத்தனை முயற்சிகளும் ஏமாற்றுவேலை அல்லது முட்டாள்தனத்தினைச் சேர்ந்ததாகும். அரசியல் வடிவங்கள் மாறுகின்றன, முதலாளித்துவ வேட்கைகள் அப்படியேதான் இருக்கின்றன... உலகத்தின் ஒரு புதிய பங்கீட்டுக்கான ஆவேசமான மற்றும் நம்பிக்கையில்லாத போராட்டமானது முதலாளித்துவ அமைப்புமுறையின் மரண நெருக்கடியில் இருந்து தவிர்க்கவியலாமல் பின்தொடர்ந்து வருவதாகும்.
மக்ரோன் பிரதிநிதித்துவம் செய்கின்ற இராணுவ மறுஆயுதபாணியாகல் மற்றும் சமூக சிக்கன நடவடிக்கைகளது கலவையினை துல்லியமாக விவரிக்கின்றதொரு மொழியில், ட்ரொட்ஸ்கி பின்வருமாறு கூறினார்:
இத்தாலியின் தொழிலாளர்கள் தமது கறுப்புச் சட்டையின் பெல்டுகளை இறுக்கிக் கொள்வதற்கு கற்றுக் கொள்ள வேண்டும் என்று முசோலினி அறிவுறுத்தினார். ஆனால் ஏகாதிபத்திய ஜனநாயகங்களிலும் கணிசமான அளவுக்கு இதுவே தான் நடைபெறவில்லையா? எல்லா இடங்களிலுமே வெண்ணெய் துப்பாக்கிகளுக்கு கிரீஸ் போடத் தானே பயன்படுத்தப்படுகிறது. பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவின் தொழிலாளர்கள் கறுப்புச் சட்டைகள் இல்லாமலேயே தங்களது பெட்டுகளை இழுத்துக் கட்ட கற்றுக் கொள்கின்றனர். உலகின் மிகப் பணக்கார நாட்டில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் ஓட்டாண்டிகளாக மாற்றப்பட்டுள்ளனர்.
அவர் தொடர்ந்தார்,
தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகளில் ஏற்பட்டிருக்கும் கட்டுப்படுத்தமுடியாத சீரழிவானது, முதலாளித்துவ நாடாளுமன்றவாதத்தின் மட்டுப்படுத்தப்பட்ட கட்டமைப்பிற்குள் கூட, முதலாளித்துவம் பரந்த மக்களுக்கு அரசியல் வாழ்வில் உரிமை வழங்குவதை மிக மிகக் குறைந்த சாத்தியமுடையதாக ஆக்குகிறது. ஜனநாயகம் பாசிசத்தால் இடம்பெயர்த்தப்படுவதை எடுத்துக்காட்டும் நிகழ்ச்சிப்போக்கிற்கு வழங்கப்படும் வேறெந்தவொரு விளக்கமும், ஏமாற்றாகவோ அல்லது சுய-ஏமாற்றாகவோ, விடயங்களின் கருத்துவாதப் பொய்மைப்படுத்தலாகவே இருக்கும்.
ஒரு விதத்தில், “முதலாளித்துவ”த்தின் ஒரு செய்தித்தொடர்பாளராக மக்ரோனை மேற்கத்திய ஊடகங்கள் சரியாகவே கொண்டாடுகின்றன. உண்மையில் முதலாளித்துவ ஜனநாயகத்தின் சிதறலின் சகாப்தத்தில், அதாவது வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் கட்டுப்பாடற்ற மேலாதிக்கத்தின் சகாப்தத்தில் அவர் அதன் செய்தித்தொடர்பாளராக இருக்கிறார்.
உலகம் இரண்டு சர்வாதிகார வடிவங்களுக்கு முகம்கொடுத்து நிற்கிறது, முதலாளித்துவ வர்க்கத்தின் சர்வாதிகாரம், இல்லையேல் பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம் -அதாவது ஆட்சியதிகாரம் தொழிலாள வர்க்கத்தினால், மக்களின் பரந்த பெரும்பான்மையால் கைப்பற்றப்பட்டு, சமூகம் சமூகத் தேவைகளின் அடிப்படையில் மறுஒழுங்கு செய்யப்படுவது.
தொழிலாள வர்க்கம் சிக்கன நடவடிக்கை மற்றும் போரை நோக்கிய ஐரோப்பிய ஒன்றியத்தின் முனைப்புக்கு எதிராக போராடுவதற்கு தான் ஆயத்தமாக உள்ளதைக் காட்டியிருக்கிறது. பிரான்சில் இரயில்வே தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் போர்க்குணமிக்க போராட்டங்கள், ஜேர்மனியின் தொழிற்துறை மற்றும் பொதுச் சேவைகளில் வீச்சுடனான வேலைநிறுத்தப் போராட்டங்கள், கிரீசில் மீண்டும் மீண்டும் பொது வேலைநிறுத்தங்களின் வெடிப்பு, கிழக்கு ஐரோப்பாவில் தொழிலாளர் போராட்டங்களின் மறுஎழுச்சி, மற்றும் இன்னும் பல வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களால் இது எடுத்துக்காட்டப்படுவதாக உள்ளது.
எதிர்வரும் காலகட்டம், கடுமையான வர்க்கப் போராட்டங்கள் மற்றும் போர் மற்றும் அரசு ஒடுக்குமுறைக்கு பெருகும் எதிர்ப்பு ஆகியவற்றால் குணாம்சப்படுவதாக இருக்கும். ஆனால் இந்தப் போராட்டங்களுக்கு ஒரு அரசியல் முன்னோக்கு அவசியமாக உள்ளது. தொழிலாள வர்க்கம் சமூக ஜனநாயகக் கட்சியினர், தொழிற்சங்கங்கள், மற்றும் போலி-இடது கட்சிகளுடன் முறித்துக் கொண்டு, சர்வதேச அளவில் ஐக்கியப்பட்டு, போர் மற்றும் சிக்கன நடவடிக்கைக்கு எதிரான போராட்டத்தை முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான போராட்டத்துடன் இணைக்கின்ற போது மட்டுமே இப்போராட்டங்கள் வெற்றிகாண முடியும். இந்த வழியில் மட்டுமே ஆளும் உயரடுக்கின் கொள்கைகள் எதிர்க்கப்பட முடியும், அதிவலதுகளின் எழுச்சி தடுத்து நிறுத்தப்பட முடியும்.
லியோன் ட்ரொட்ஸ்கி 1938 இல், பாசிச எழுச்சியின் சகாப்தத்தில், நான்காம் அகிலத்தை ஸ்தாபித்தார். அது புரட்சிகர பாட்டாளி வர்க்க சோசலிசத்தின் பதாகையின் கீழ் போர், சமத்துவமின்மை, மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்ததோடு, தேய்ந்து போனதும் காலாவதியானதுமான முதலாளித்துவ அமைப்புமுறையை தூக்கிவீசுவதற்கான போராட்டத்தின் ஒருங்கிணைந்த ஒரு பாகமாக பாசிசத்தை அது எதிர்த்தது.
ட்ரொட்ஸ்கி கூறியதைப் போல உலகத்தை ஒரு “நாற்றமெடுக்கும் சிறைச்சாலை”யாக மாற்றுவதற்கு ஆளும் உயரடுக்கினர் மறுபடியும் முனைகின்ற நிலையில், தொழிலாளர்களும் இளைஞர்களும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் அதன் பிரிவுகளான சோசலிச சமத்துவக் கட்சிகளைக் கட்டியெழுப்புவதன் மூலம் சோசலிசத்திற்கான போராட்டத்தை மீண்டும் கையிலெடுக்க வேண்டும்.