ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lanka: SEP organizes public lecture series – “Way forward to working class”

இலங்கை: சோசலிச சமத்துவக் கட்சி பகிரங்க விரிவுரைத் தொடரை ஏற்பாடு செய்துள்ளது – "தொழிலாள வர்க்கத்திற்கு முன்னோக்கிய பாதை"

 4 April 2018

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பும், இலங்கை பெருந்தோட்ட பகுதியின் பிரதான நகரான ஹட்டனில் பகிரங்க விரிவுரை தொடரை ஏற்பாடு செய்துள்ளன. இந்த விரிவுரைகளில் தீர்க்கமான பூகோள அரசியல் நிலைமைகள் பற்றியும் தொழிலாள வர்க்கத்திற்கான முன்நோக்கிய பாதை பற்றியும் கலந்துரையாடப்படும்.

வட மற்றும் தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆபிரிக்காவில் தொடங்கி உலகெங்கிலும் முதலாளித்துவ அரசாங்கங்கள் பொதுக் கல்வியை அழிப்பதற்கு எதிராக ஆசிரியர்களால் நடத்தப்படும் போராட்டங்களின் தற்போதைய பூகோள அலை, தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் போர்க்குணம் தலைதூக்குவதை காட்டுகின்றன.

தெற்காசியா இதற்கு விதிவிலக்கல்ல. இந்தியாவில் கடந்த மாதம் பதினைந்து இலட்சத்துக்கும் அதிகமான உபர் மற்றும் ஓலா வாடகை வாகன சாரதிகள் முதலாளிகளிடமிருந்து வருமான அதிகரிப்பு கோரி வேலை நிறுத்தம் செய்திருந்தனர். நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்திய தலைநகரான புதுதில்லியிலும் ஏனைய இடங்களிலும் இந்தியாவில் பொதுக் கல்வி வணிகமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கலுக்கு எதிராக போராடுகின்றனர். இலங்கையில் ஒரு மாதத்திற்கும் மேலாக 15,000க்கும் அதிகமான பல்கலைக்கழக கல்விசாரா தொழிலாளர்கள் வழங்கப்பட வேண்டிய சம்பள உயர்வைக் கோரி வேலைநிறுத்தம் செய்து வரும் அதேவேளை, பல்கலைக்கழக மாணவர்கள் மருத்துவ கல்வி தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம் ஆணையிட்டுள்ள சிக்கன திட்டத்தை உழைக்கும் மக்கள் மீது திணிக்கின்ற நிலையில் மின்சாரம், தபால், புகையிரதம், எரிபொருள், சுகாதாரம், நீர் வழங்கல், துறைமுகம் மற்றும் பெருந்தோட்டத் துறைகளிலும் தொழிலாளர்களின் போராட்டங்கள் எந்த நேரத்திலும் வெடிக்கக் கூடும்.

2008 பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் முதலாளித்துவ அமைப்பு முறையின் தீவிர நெருக்கடியின் பின்னணியிலேயே கண்டங்கள் முழுவதும் தொழிலாள வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி மீண்டும் வெடித்துள்ளது. சந்தைகள், இலாபங்கள் மற்றும் மூலோபாய நலன்களுக்கான தீவிரமான போராட்டத்தின் மூலமே இந்த நெருக்கடிக்கு ஏகாதிபத்திய மற்றும் பெரும் வல்லரசுகள் பிரதிபலிக்கின்றன.

அமெரிக்கா மற்றும் பிரித்தானியா தலைமையிலான மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகளால் ரஷ்யாவிற்கு எதிராக மேற்கொள்ளும் தற்போதைய ஆத்திரமூட்டல்கள், உலக மேலாதிக்கம் மற்றும் பொருளாதார மேலாதிக்கத்தை அடைவதற்கான ஆக்ரோஷமான முயற்சிகளில் எதிரிகளை அடிபணிய வைக்க ஏகாதிபத்திய மையங்களில் முன்னெடுக்கப்படும் தீவிரமான திட்டங்களை காட்டுகின்றன. இந்த ஆத்திரமூட்டல்களோடு, அமெரிக்காவில் ட்ரம்ப் நிர்வாகத்தால் முன்னெடுக்கப்படும் தற்போதைய வர்த்தகப் போர் நடவடிக்கைகள் சீனா மற்றும் ரஷ்யாவை மட்டுமன்றி, ஜேர்மனி மற்றும் ஜப்பான் போன்ற ஏகாதிபத்திய போட்டியாளர்களையும் மோதலுக்குள் இழுத்துப் போட்டுள்ளது. இந்த பகைமைகள் மூன்றாம் உலகப் போரை நோக்கி விரைவாக தள்ளிச் செல்கின்றன.

இந்த பின்னணியில், புரட்சிகர சோசலிச தலைமைத்துவத்துடன் வர்க்கப் மோதல்களுக்கு தொழிலாள வர்க்கத்தை தயாரிப்பது உடனடித் தேவையாக உள்ளது.

எனவே, ஹட்டன் மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் தோட்டத் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் தொடர்ச்சியான அடக்குமுறை நிலைமைகளுக்கு மாற்றீடு தேடும் அனைவரையும் இந்த விரிவுரைத் தொடரில் பங்கேற்குமாறு அழைக்கிறோம்.

 

 

1. முதலாளித்துவத்தின் மரண ஓலமும் மூன்றாம் உலகப் போர் ஆபத்தும் –ஏப்பிரல் 22, ஞாயிறு.

 

2. உற்பத்தியின் பூகோளமயமாக்கமும் தொழிற்சங்கங்களின் பொறிவும் – மே 13, ஞாயிறு.

 

3. என்ன செய்ய வேண்டும்? புரட்சிகர கட்சியின் அவசியத்தை விளக்கும் லெனினின் இன்றியமையாத நூல் -மே 20, ஞாயிறு.

 

4. வரலாற்று சடவாதமும் அக்டோபர் புரட்சியும் –மே 27, ஞாயிறு.

 

5. கலையும் சோசலிசமும் –ஜூன் 3, ஞாயிறு.

 

சகல விரிவுரைகளும் காலை 10 மணிக்கு ஆரம்பமாகும்.

 

இடம்: தொழிலாளர் பொழில் மண்டபம், டன்பார் வீதி ஹட்டன்.

 

சோசலிச சமத்துவக் கட்சி

சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்