Print Version|Feedback
වතු කම්කරුවන් මත සූරාකෑමේ නව ක්රමය පැටවීමට වෘත්තීය සමිති නායකයන්ට අල්ලස් දෙයි
இலங்கை: புதிய சுரண்டல் முறையை தோட்டத் தொழிலாளர்கள் மீது திணிப்பதற்கு தொழிற்சங்கத் தலைவர்களுக்கு இலஞ்சம் கொடுக்கப்பட்டது
M. Thevarajah
11 April 2018
இலங்கை பெருந்தோட்டங்களில், ஒரு தொகை தேயிலைச் செடிகளுடன் வேலைசெய்வதற்காக தொழிலாளர்களை கட்டிப்போடும் வகையில், தோட்டத் தொழிலாளர்களை “ஒப்பந்தக்காரர்” அல்லது “குத்தகை விவசாயிகளாக” மாற்றும் நடவடிக்கையில் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பதற்கு பிரதியுபகாரமாக, தொழிற்சங்கத் தலைவர்களுக்கு ஒப்பிட்டளவில் பெரிய நிலப்பகுதியை வழங்கப்பட்டுள்ளது.
களனிவெலி பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு சொந்தமான பெரும்பான்மையான தோட்டங்களில் இந்த முறையை அமுல்படுத்துவதற்கு, ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா), பி. திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம் (தொ.தே.ச) உட்பட சகல தொழிற்சங்கங்களும் தோட்ட நிர்வாகத்துடன் ஒத்துழைத்து வருகின்றன.
தொழிலாளர் செலவை குறைத்து, உலக சந்தையில் போட்டியாளர்களுடன் போட்டியிடுவதற்கு மலிவான தேயிலை உற்பத்திகளை வழங்குவதற்கும், தோட்டக் கம்பனிகள் இந்த புதிய சுரண்டல் முறையை அமுல்படுத்துகின்றன.
இந்த “குத்தகை விவசாய” முறையின் கீழ் தொழிலாளர்கள் தற்போது அனுபவித்துவரும் சிறியயளவிலான சமுக நலன்களான ஊழியர் சேமலாப நிதி, வீடு மற்றும் மருத்துவ வசதிகளும் கூட நீக்கப்படும். இத் திட்டத்தை அரசாங்கம் அங்கீகரித்துள்ளதுடன், 2016ல் கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் தொழிற்சங்கங்கள் இந்த வருடத்துக்குள் இதனைத் திணிப்பதற்கு உதவி செய்ய உடன்பட்டுள்ளன. பெருந்தோட்ட நிர்வாகங்கள் தோட்டங்களில் சில பகுதிகளில் இந்த முறையை அமுல்படுத்தியுள்ளதுடன் தொழிலாளர்கள் வார இறுதியிலும் விடுமுறை நாட்களிலும் இந்த பாகங்களில் வேலை செய்கின்றார்கள்.
டிக்கோயாவுக்கு அருகில் என்பீலட் தோட்டத்தின் ஸ்டம்போர்டில் பிரவில், தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தளத்திற்கு கூறியதாவது: “தொழிற்சங்கத் தலைவர்கள் இந்த புதிய திட்டத்தின் கீழ் பெரும் பங்கு தேயிலைக் காணிகளைப் பெற்றுள்ளனர். கடந்த வருட இறுதியில் இது இங்கு அமுல்படுத்தப்பட்டது. எமது தோட்டத்தில் நாற்பத்தி இரண்டரை ஹெக்டர் நிலப்பரப்பில் நல்ல ரக தேயிலைச் செடிகள் இருக்கின்றன.
“இவற்றில் 22 ஹெக்டர் தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் 9 ஹெக்டர்கள் இ.தொ.கா., தொ.தே.ச. ஆகியவற்றைச் சேர்ந்த ஏழு தலைவர்களுக்கு பகிரப்பட்டுள்ளது. மிகுதி 13 ஹெக்டர்களே 49 தொழிலாளர்களுக்கு பகிரப்பட்டுள்ளது. எல்லாத் தொழிற்சங்கத் தலைவர்களும் நிர்வாகத்துடன் கூட்டுச் சேர்ந்துகொண்டு இத்திட்டத்தை திணிப்பதற்கு செயல்படுகின்றனர்.
“நாங்கள் பாரிய சிரமங்களை எதிர்கொள்கிறோம். வாரத்தில் ஐந்து நாட்கள் தோட்டத்தில் வேலை செய்துவிட்டு மிகுதி இரண்டு நாட்கள், அதாவது சனி, ஞாயிறு தினங்களில் எமக்கு ஒதுக்கப்பட்ட தேயிலை செடிகளில் வேலை செய்ய வேண்டும். இதனால் எமக்கு ஓய்வு கிடையாது. அத்துடன் எமது பிள்ளைகளின் படிப்பும் பாதிக்கப்படுகின்றது. வேலை நாட்கள் குறைவாகவும் வேலைக்கான நிலபகுதி குறைவாக இருப்பதாலும் எமது சம்பளம் குறைந்து வருகின்றது. எம்மால் 18 கிலோ நாளாந்த கொழுந்து பறிக்கும் இலக்கை எட்ட முடியவில்லை. அதனால் மேலதிகக் கொடுப்பனவான 140 ரூபாவை நிர்வாகம் வெட்டுகின்றது. நாங்கள் இந்த புதிய திட்டத்தை எதிர்க்கின்றோம்.
போராடுவதற்கான பதிலீடு இல்லாத காரணத்தால் தொழிலாளர்கள் இத்திட்டத்தை ஏற்றுக்கொண்டார்கள். தொழிற் சங்கங்களிலிருந்து சுயாதீனமாக அமைக்கப்படும் நடவடிக்கை குழுக்கள் இந்த முறைக்கு எதிராக போராடுவதற்கு அவசியம்.
இந்த ஒடுக்குமுறை திட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு அனைத்து தொழிற்சங்கத் தலைவர்களும் வெளிப்படையாக தொழிலாளர் மத்தியில் பிரச்சாரம் செய்கின்றனர். சில தோட்டங்களில் தொழிற்சங்கத் தலைவர்கள், இத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால் வேலையை இழக்க வேண்டிவரும் என தொழிலாளர்களை பயமுறுத்துகின்றனர்.
2016ம் ஆண்டிலேயே இத்திட்டம் முதலில் வலபனையில் உள்ள மாஹா ஊவா தோட்டத்தில் அமுல்படுத்தப்பட்டது. இப்பொழுது ஏனைய பல தோட்டங்களிலும் படிப்படியாக தொழிற்சங்களின் ஆதரவுடன் இந்த முறை அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. ஏப்ரல் 4 அன்று ஸ்டெம்போர்டில் தோட்ட நிர்வாகத்திற்கும் அட்டன் உதவி தொழில் ஆணையாளருக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தொழிலாளர்களுக்கு காணிகளை சமமாக பங்கிட தீர்மானிக்கப்பட்டது.
டிக்கோயா, சாஞ்சிமலை மேற்பிரிவு தோட்டத்தின் இ.தொ.கா. தொழிற்சங்கத் தலைவர் சங்கிலித்தேவன் தோட்டங்களை துண்டாடுவதை நியாயப்படுத்தி கூறியதாவது, “தோட்டங்களில் தொழிலாளர் பற்றாக்குறை இருப்பதனால் இ.தொ.கா. இத்திட்டத்தை அடிப்படையில் ஆதரிக்கின்றது. ஆனால் இப்பொழுது தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலம் தொழிலாளர்களுக்கே புதிய ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டு கொடுக்கப்பட வேண்டும்.” தொழிலாளர்களை தாக்கிப் பேசிய சங்கிலித்தேவன், அவர்கள் தோட்டங்களில் வேலை செய்ய அக்கறை காட்டுவதில்ல என்றும் தொழிலாளர்கள் சோம்பேறிகளாகிவிட்டனர் என்றும் குற்றம் சாட்டினார். “ஏன் எங்களால் நிலச் சொந்தக்கார்களாக ஆக முடியாது? நகரத்தில் உள்ளவர்கள் மட்டும் தான் நிலச் சொந்தக்கார்களாக ஆக முடியுமா?” என அவர் கேட்டார்.
தொழிலாளர்களுக்கு நிலம் சொந்தமாக வழங்கப்படவில்லை. எனினும் அவர்கள் வேலை இழந்து தோட்டத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். தரமான வாழ்க்கைக்கு போதிய சம்பளம் கிடைக்காத காரணத்தால் இளைஞர்கள் தோட்டத்தில் வேலை செய்ய விரும்பவில்லை. சங்கிலித்தேவன் சாஞ்சிமலை தோட்ட நிர்வாகத்திடமிருந்து ஒரு ஹெக்டர் நிலத்தைப் பெற்றுள்ளார்.
இந்த முறையின் உண்மையான பிரச்சனை, தற்போது தொழிலாளர்கள் அணுபவிக்கும் உரிமைகளை பறித்து அவர்களை “ஒப்பந்தக்காரர்களாக” மாற்றுவதாகும். இந்த வேலை தோட்டத் தொழிலாளர்களின் முதுகெலும்பை உடைப்பதாகும். சிறுவர்கள், ஓய்வு பெற்ற பெற்றோர்கள் ஆகியோர் உட்பட அவர்களின் குடும்ப அங்கத்தவர்களை ஊதியம் இன்று சுரண்டும் வேலையாகும்.
இந்த வருமான பங்கீட்டு முறைக்கு எதிராக தோட்டத் தொழிலாளர் மத்தியில் எதிர்ப்பு வளர்ந்து வருகின்றது. நூற்றுக்கு மேற்பட்ட சாஞ்சிமலை தோட்ட கீழ்பிரிவு தொழிலாளர்கள் மார்ச் 14 அன்று தோட்டத் தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
ஸ்டம்போர்டில் தோட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் தொழிலாளி கூறியதாவது: “நாங்கள் இந்த வருவாய் பங்கீடு முறையை எதிர்க்கின்றோம். இதன் கீழ் நாம் பெரும் துன்பங்களை அனுபவிக்கின்றோம். எல்லாத் தொழிற் சங்கங்களும் இதற்கு ஆதரவாக கம்பனிகளுடன் சேர்ந்துகொண்டுள்ளன. ஆயிரம் தேயிலை செடிகள் அல்லது அதற்கும் குறைவாகவே தொழிலாளர்களுக்கு கிடைத்துள்ளது. நாளாந்த செலவுகளை சமாளிக்கவே இதில் கிடைக்கும் வருமானம் போதாது. இதனை நான் ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்தேன், அதனால் நிர்வாகம் எனக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு செய்தது.
“எதிர்காலத்தில் நாம் பலவற்றை இழக்கவேண்டி வரும். எங்களுடைய தோட்டத்தின் சண்லீஸ் பிரிவின் சிறுவர் பராமரிப்பு நிலையம் ஏற்கவே மூடப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் தொழிற் சங்கங்களிலிருந்து பிரிந்து ஐக்கியப்பட்டு நடவடிக்கை குழுக்களை அமைக்க வேண்டும் என்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன்.”
அதே தோட்டத்தை சேர்ந்த மற்றுமொரு மூன்று பிள்ளைகளின் தாயான தொழிலாளி கூறியதாவது: “எனக்கு பத்து மாத குழந்தை ஒன்று இருக்கின்றது. குழந்தை பிறந்ததை தொடர்ந்து தொடர்ச்சியாக நான் சுகயீனமுற்றிருந்தேன். இதனால் பலமாதங்களாக வேலைக்கு செல்லவில்லை. ஆனால் இப்பொழுது வேலைக்கு செல்ல தயாராக இருக்கின்றேன். ஆனால் நிர்வாகம் எனக்கு வேலை வழங்க மறுப்பதுடன், புதிய முறையின் கீழ் ஏனைய தொழிலாளர்களுக்கு காணியை ஒதுக்கியது போல் எனக்கு ஒதுக்க மறுத்துள்ளது. நான் இ.தொ.கா. தொழிற் சங்கத்தில் அங்கம் வகிக்கின்றேன். ஆனால் அவர்கள் அதைப் பற்றி பேசவே இல்லை. தொழிற்சங்கள் பிரயோசனமற்றவை.”
அதே தோட்டத்தை சேர்ந்த மற்றுமொரு பெண்தொழிலாளி, “இன்று என்னால் 18 கிலோ கொழுந்தை பறிக்க முடியவில்லை, அதனால் உற்பத்திக்கான மேலதிக கொடுப்பனவு 140 ரூபாயை இழக்க வேண்டிவரும்,” என கூறினார். “நாம் வேலை செய்யும் பெரும்பான்மையான நிலப்பரப்பு தனித் தனி தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்டள்ளது. இதனால் நாம் நாளாந்த சம்பளத்திற்கு வேலை செய்யும் நிலப்பரப்பு சிறியது. அப்போது எப்படி இலக்கை அடைய முடியும்? இந்த தேயிலைக் காணிகள் ஒதுக்கப்படும் போது, தொழிற்சங்கத் தலைவர்கள் பெரும் பங்கை பெற்றார்கள். எங்களுக்கு சிறிய பங்குதான் கிடைத்தது. இதனால் எமது வருமானம் வீழ்ச்சியடைகின்றது, நாங்கள் பெரும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கின்றோம். இந்த புதிய திட்டத்தை நாம் எதிர்க்கிறோம். எங்களுக்கு தரமான சம்பளத்துடன் பழைய முறைப்படியே வேலை செய்ய விரும்ப்பம்”.
தொழிற்சங்கங்கள் வெளிப்படையாகவே தோட்ட நிர்வாகத்தினதும், தோட்டச் சொந்தக்காரரினதும் அடிவருடிகாளாகவே தொழிற்படுகின்றன என்பதையே இந்த அபிவிருத்திகள் எடுத்துக்காட்டுகின்றன. இந்த மாற்றங்கள் தோட்டத்துறையில் மாத்திரமின்றி, உலகம் பூராவும் ஏனய பகுதி தொழிலாளர்கள் மத்தியிலும் நடைபெறுகின்றது.
இலாப பசிகொண்ட முதலாளித்துவ தேசியவாத சீர்திருத்தவாத வேலைத்திட்டத்துடனும் அதனுடன் கூட்டாக தொழிற்படுகின்ற தொழிற்சங்களுடனும் தொழிலாளர்கள் முன்செல்ல முடியாது. தோட்டத் தொழிலாளர்கள் நடவடிக்கை குழுக்களை அமைத்துக்கொள்ள முன் வருவதோடு இலங்கையிலும் சர்வதேச ரீதியாகவும் தமது சகோதரர்களுடன் ஐக்கியப்பட வேண்டும். நெருக்கடிமிக்க மிக்க முதலாளித்துவ தோட்டத்துறைக்கு பலியாகுவதற்கு பதிலாக, தோட்டத் துறை உட்பட உற்பத்தியை தொழிலாளர் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரக்கூடிய தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்திற்காக போராட வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சி தோட்டத் தொழிலாளர்களின் நடவடிக்கை குழுக்களில் இந்த வேலைத் திட்டத்திற்காகவே போராகிறது.