Print Version|Feedback
US and imperialist allies launch strikes against Syria
அமெரிக்காவும் அதன் ஏகாதிபத்தியக் கூட்டணியினரும் சிரியாவுக்கு எதிராய் தாக்குதல்களைத் தொடுத்தன
The World Socialist Web Site editorial board
14 April 2018
வெள்ளியன்று இரவு அமெரிக்க, பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் படைகள் சிரியாவுக்கு எதிராக நடத்திய தாக்குதல்களை உலக சோசலிச வலைத் தளம் கண்டனம் செய்கிறது. இந்த தாக்குதல் மோசமான மற்றும் சட்டவிரோதமான வலிந்துதாக்கும் செயலாகும். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மேயின் நிர்வாகங்கள், அணு ஆயுத வல்லமை கொண்ட ரஷ்யாவுடன் ஒரு மோதலைத் தூண்டும் அபாயத்தை முன்நிறுத்துகின்ற ஒரு போர்க்குற்றத்துக்கு பொறுப்பாளிகள் ஆகின்றன.
டூமா நகரத்தில் அமெரிக்க பினாமி கிளர்ச்சிப் போராளிப் படைகளுக்கு எதிராக சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின் இராணுவப் படைகள் தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதான நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகள் தான் சிரியா மீதான தாக்குதலுக்கு போலிக்காரணமாக சேவைசெய்கின்றன. பெரும்பாலும் இஸ்லாமியவாத அடிப்படையிலான போராளிப் படைகளுக்கு எதிராக அசாத் அரசாங்கம் ஏழு ஆண்டுகளாக நடத்தி வருகின்ற உள்நாட்டுப் போரில் அதற்கு உதவி செய்வதற்காக சிரியாவில் கணிசமான இராணுவ அணிகளைக் கொண்டிருக்கின்ற ரஷ்யா, அமெரிக்காவினதும் அதன் கூட்டாளிகளினதும் பிரச்சாரத்தை திட்டவட்டமாக நிராகரித்திருக்கிறது. ஒரு இரசாயன ஆயுதத் தாக்குதலில் பாதிப்படைந்ததாக மனிதர்களைக் காட்டுகின்ற ஒரு காணொளியை தயாரிப்பதற்கு சிரிய கிளர்ச்சி அமைப்புகளுக்கு பிரிட்டிஷ் உளவுத் துறை நெருக்குதலளித்ததாக அது பகிரங்கமாக குற்றம்சாட்டியிருக்கிறது.
இரசாயன ஆயுதங்கள் ஒழிப்புக்கான ஒரு வெளிப்படையான சுயாதீன அமைப்பான OPCW இல் இருந்து ஒரு குழு, சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்தில் ஒரு புலனாய்வை மேற்கொள்வதற்கு இந்த வார இறுதியில் டூமாவுக்கு வரத் திட்டமிடப்பட்டிருந்தது. OPCWவிடம் இருந்து அப்படியான ஒரு புலனாய்வு சோதனையும் சிரியா மீதான எந்தத் தாக்குதலுக்கான ஒட்டுமொத்த சாக்குப்போக்கும் பொய் என்ற ஒரு ஊர்ஜிதப்படுத்தலும் வந்துவிடுவதற்கு முன்பாக முந்திக் கொண்டு நடக்கின்ற விதமாய் கணக்குப் போடப்பட்டு தாக்குதல்களை தொடக்குவதற்கான ட்ரம்ப்பின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
ட்ரம்ப்பின் ஒளிபரப்பு முடிந்த சற்றுநேரத்திற்கெல்லாம், அடுத்து வந்த செய்தியாளர் சந்திப்பில் அவரது பாதுகாப்புச் செயலரான ஜெனரல் ஜிம் மாட்டிஸ் பேசியபோது, இந்தத் தாக்குதலுக்கான மோசடியான அடிப்படை வெளிச்சத்திற்கு வந்திருந்தது. அமெரிக்க குற்றச்சாட்டுகளுக்கு இசைவான எந்த விபரங்களையும் மாட்டிஸால் வழங்க முடியவில்லை. மேலும், சிரியாவுக்கு எதிராக ஒரு நீடித்த பிரச்சாரத்திற்கு ஜனாதிபதி சூளுரைத்ததற்கு முரண்பட்ட விதத்தில், ஏற்கனவே நடைபெற்று விட்டிருந்த ஏவுகணைத் தாக்குதல்கள் தவிர்த்து வேறெந்த நடவடிக்கையும் இருக்காது என்று ஜெனரல் சுட்டிக்காட்டுவதாகவே தென்பட்டது.
இவ்விடயம் உண்மையென நிரூபிக்கப்படுமானால், ட்ரம்ப்பினால் உத்தரவிடப்பட்ட நடவடிக்கையானது அமெரிக்க அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபத்தினால் கோரப்பட்டதற்கு மிகவும் நெருக்கமாக நிகழ்ந்துள்ளது.
பஷார் அல்-அசாத்திற்கு எதிராக தீவிரமான நடவடிக்கை தொடுக்கப்பட்டதைக் கொண்டு பார்த்தால், எந்தவொரு தாக்குதலும் சிரிய ஜனாதிபதியை படுகொலை செய்வதற்கான முயற்சியை உள்ளடக்கியதாக இருக்கும் என்றே ஒரு இராணுவத் தாக்குதலுக்கு ஆலோசனையளித்தவர்கள் எதிர்பார்த்திருந்தனர் என்பதில் சந்தேகமில்லை.
சர்வதேச அளவில் ஏகாதிபத்திய ஆளும் வர்க்கத்தின் பெரும் பிரிவுகள் சிரியாவுக்கு எதிராக கட்டவிழ்த்து விட விரும்புவதன் கொலைபாதகத் தன்மையின் ஒரு அறிகுறியை ஜேர்மன் இதழான Die Welt இல் பிரசுரமான ஒரு பத்தி வழங்கியது. அது அறிவித்தது: “அசாத்துக்கு எதிரான போர் ஒரேயொரு குறிக்கோளால் வழிநடத்தப்பட வேண்டும்.... அசாத் ஆட்சியானது ஒரு ஏவுகணைத் தாக்குதலைக் கொண்டு அழித்தொழிக்கப்பட (auslöschen) இயலுமா?” சிரிய ஜனாதிபதியைக் குறிப்பிட ”அழித்தொழித்தல்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதன் மூலம், இந்த ஜேர்மன் பத்திரிகையானது நாஜிக்களின் கீழ் யூதர்கள் கொல்லப்பட்டதுடன் தொடர்புடைய ஒரு வார்த்தையை ஏற்றுக் கொண்டிருந்தது, அதாவது ஹிட்லரின் Völkischer Beobachter பத்திரிகையில் காணப்பட்ட ஒரு மொழியைப் பயன்படுத்தியிருந்தது.
ஆயினும், சிரியாவுக்கு எதிரான தாக்குதலானது அசாத் அரசாங்கத்தை அழிப்பதற்கெல்லாம் வெகு தூரத்தில், மிகக் குறைந்த பாதிப்பையே ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. சிரியாவுக்குள் ஏவப்பட்ட பெரும்பான்மையான ஏவுகணைகளை சிரியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தி விட்டதாகவும், நாட்டில் அதன் உயிர்கள் அல்லது உடைமைகளுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் ரஷ்ய இராணுவம் பெருமையடித்திருக்கிறது. பஷார் அல்-அசாத் சனிக்கிழமையன்று காலை தனது அலுவலகத்துக்கு நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
இச்சமயத்தில், இந்த தாக்குதலானது சிரியாவில் ஆட்சி-மாற்றத்திற்கான அமெரிக்க-தலைமையிலான ஏகாதிபத்திய சூழ்ச்சிகள் எதிர்கொண்ட ஒரு படுதோல்வியை அடிக்கோடிட்டுக் காட்டுவதற்கே பிரதானமாக சேவைசெய்திருக்கிறது. அமெரிக்காவின் அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபகத்தின் பிரிவுகள், ட்ரம்ப்பை பின்வாங்கியதாகவும் விளாடிமிர் புட்டினிடம் சரணடைந்ததாகவும் குற்றம்சாட்டுவதற்கு நீண்டநேரம் பிடிக்கப் போவதில்லை. அவற்றால் இன்னும் கூடுதல் விரிவான, கூடுதல் கொலைபாதக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான கோரிக்கைகள் தவிர்க்கவியலாமல் முன்வைக்கப்படும்.
சிரியா மீதான தாக்குதலை நியாயப்படுத்துவதற்கான பிரச்சாரமானது ஒரேயொரு ஏவுகணைத் தாக்குதல்களுக்காக அல்ல, மாறாக ஒரு பாரிய இராணுவத் தாக்குதலுக்கான போலிக்காரணத்தை வழங்கும் பொருட்டு இட்டுக்கட்டப்பட்டதாகும்.
சிரிய அரசாங்கத்தை தூக்கிவீசுவதற்காக போராடுகின்ற இஸ்லாமிய பினாமிப் படைகள் இராணுவத்தால் முற்றிலுமாக முறியடிக்கப்படக் கூடிய ஒரு சாத்தியத்திற்கு முகம்கொடுக்கும் நிலையில், சண்டையை தீவிரப்படுத்துவதற்கான ஒரு முடிவு வாஷிங்டன் மற்றும் இலண்டனில் மேற்கொள்ளப்பட்டு, அதற்கு ஒரு போலிக்காரணத்தை உருவாக்குவதற்கான வேலை சிஐஏ, MI6 மற்றும் அவற்றின் சிரிய முகவர்களிடம் விடப்பட்டது.
அசாத் அரசாங்கம் அப்பாவி மக்களின் மீது ஒரு இரசாயன ஆயுதத் தாக்குதலை நடத்தியதாக மேற்கத்திய ஊடகங்கள் ஏகமனதாய் பிரகடனம் செய்த ஏப்ரல் 7 சம்பவத்தில், டூமாவில் என்ன நடந்தது என்பது குறித்த இதுவரையிலான மிக ஒத்திசைவான மற்றும் தர்க்கரீதியான விவரிப்பை வெள்ளிக்கிழமையன்று, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வழங்கியது.
“இது காட்சிக்காக அரங்கேற்றப்பட்ட இன்னுமொரு தாக்குதல் என்பதற்கு எங்களிடம் மறுக்கவியலாத ஆதாரம் இருக்கிறது, ரஷ்ய-வெறுப்பு பிரச்சாரத்தில் முன்னிலையில் இருக்கும் ஒரு அரசின் சிறப்பு சேவைகள் இதனை அரங்கேற்றுவதில் ஒரு கையைக் கொண்டிருந்தது” என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சரான சேர்ஜி லாவ்ரோவ் தெரிவித்தார்.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இரண்டு பேருடனான ஒரு நேர்காணல் காணொளியைக் காட்டியது, இந்த இருவரில் ஒருவர் டூமாவில் இயங்கும்நிலையில் இருக்கும் ஒரேயொரு மருத்துவமனையில் பணியாற்றும் ஒரு மருத்துவ மாணவராவார். சிரிய இராணுவத்தின் குண்டுவீச்சு ஒன்று ஒரு கட்டிடத்தைத் தாக்கியபோது, புகையை சுவாசித்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டதாக அந்த சாட்சிகள் தெரிவித்தனர். அதன்பின், அடையாளம்தெரியாத சிலர் —பின்னர் இவர்கள் சிஐஏ ஆதரவு கொண்ட சிரிய கிளர்ச்சிப் படை “வெள்ளை தலைக்கவசம்” (White Helmets) உடன் தொடர்புடையவர்கள் என்பது வெளிவந்தது— மருத்துவமனைக்குள் ஓடிவந்து, அங்கே ஒரு இரசாயன ஆயுதத் தாக்குதல் நடந்திருந்ததாகக் கூறி கூச்சலிட்டனர். பாதிக்கப்பட்டவர்களை நீருக்குள் மூழ்கி எழுமாறு வற்புறுத்திய அவர்கள், அதன்பின் அதனைப் படமெடுக்கச் சென்றனர்.
ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரான மேஜர்-ஜெனரல் இகோர் கோனாஷென்கோவ் தெரிவித்தார்: “ஏப்ரல் 3 க்கும் ஏப்ரல் 6க்கும் இடையில் வெள்ளை தலைக்கவசம் என்று சொல்லப்படுவோர் அவர்கள் தயாரித்துக் கொண்டிருந்த ஆத்திரமூட்டலை துரிதப்படுத்தும்படி இலண்டனில் இருந்து நெருக்குதலளிக்கப்பட்டார்கள் என்பது எங்களுக்கு நிச்சயமாகத் தெரியும்.”
RT.com செய்தியளித்தது: “கோனாஷென்கோவ் கூறுவதன்படி, இரசாயனத் தாக்குதலாக சொல்லப்படுவதன் புகைப்படங்கள் மற்றும் காணொளிக்கான பிரதான ஆதாரமாக கூறப்படும் குழுவுக்கு, அந்த சமயத்தில் டூமாவை கட்டுப்பாட்டில் கொண்டிருந்த இஸ்லாமியப் படை என்ற இஸ்லாமியக் குழு டமாஸ்கஸ் மீது ஒரு பெரும்-அளவிலான ஆட்டிலறித் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்ததைக் குறித்து, தகவலளிக்கப்பட்டது. இத்தாக்குதல் நிச்சயமாக இட்டுச் செல்லக் கூடிய சிரிய அரசாங்கப் படைகளின் பதிலடித் தாக்குதல்களுக்குப் பின்னர் ஆத்திரமூட்டலாய் காட்டுவதற்கான காட்சிகளை ஏற்பாடு செய்வதற்கு வெள்ளை தலைக்கவசத்தினர் உத்தரவிடப்பட்டனர் என்று அவர் கூறினார்.”
வாஷிங்டனோ அல்லது இலண்டனோ, ரஷ்யா கூறியதை ஆவேசமாக கண்டனம் செய்தனவே அன்றி, விவரங்களின் அடிப்படையில் அதனை மறுப்பதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை. காணொளிச் சான்று ஆதரவுடன் ரஷ்ய அரசாங்கம் திட்டவட்டமாக அறிக்கைகள் விடுத்திருப்பதற்கு நேர்எதிராக, தெரசா மே, சிரியா இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதற்கு “வாய்ப்பு அதிகம்” என்று மட்டுமே கூறியிருக்கிறார். ஆனால் அமெரிக்கா “உண்மையான ஆதாரத்தை இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறது” என அறிவித்த அமெரிக்க பாதுகாப்புச் செயலர் மாட்டிஸின் கூற்றுகளுடன் ஒப்பிட்டால் இது கூடுதல் திட்டவட்டமாய் தென்படலாம்.
சிரியா மீது தாக்குதல்களுக்கு தொடக்கமளித்திருப்பதன் மூலம், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும், போருக்கான நியாயமான காரணங்களை கண்டறிவது எல்லாம் சம்பந்தமில்லாத வேலை என்பதை சமிக்கையளித்திருக்கின்றன. அவற்றின் தாக்குதல் அவற்றை நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட பொய்களைக் காட்டிலும் மிக ஆழமான காரணங்களாலேயே உந்தப்படுவதாய் இருக்கிறது.
இப்போது நடந்து கொண்டிருப்பவை இருபதாம் நூற்றாண்டின் மகத்தான மார்க்சிஸ்டுகளான லெனினும் ட்ரொட்ஸ்கியும் ஏகாதிபத்தியம் குறித்து கூறிய பகுப்பாய்வை நேரடியாக அடியொற்றியிருக்கின்றன. உலக ஏகாதிபத்தியம் உலகின் ஒரு புதிய மறுபங்கீட்டை கையிலெடுத்துக் கொண்டிருக்கிறது. மத்திய கிழக்கின் புதிய பங்குபோடலிலும் அதன் உண்மையான மறுகாலனியாக்கத்திலும் முழு-வீச்சிலான பங்கேற்பாளர்களாய் தாங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று பிரிட்டனும் பிரான்சும் விரும்புகின்றன, கொள்ளையடிப்பில் அவற்றின் எண்ணெய் பெருநிறுவனங்கள் மட்டும் விடுபட்டுப் போக அவை விரும்பவில்லை.
இந்த புதிய தாக்குதலில் பங்கெடுக்கின்ற அத்தனை அரசாங்கங்களுமே நெருக்கடியால் நிரம்பியவையாகவும் தேர்தல் அங்கீகரிப்பு அற்றவையாகவும் இருக்கின்றன. இந்த அரசாங்கங்களில் எதுவொன்றுமே போருக்கான எந்த பரந்த அடிப்படையிலான ஆதரவையும் உருவாக்க முடியவில்லை என்ற உண்மையானது இவற்றுக்கும் இவற்றின் மக்களுக்கும் இடையிலமைந்திருக்கும் பரந்த பிளவை வெளிப்படுத்துவதாய் இருக்கிறது. பிரிட்டிஷ் மக்களில் வெறும் 22 சதவீதம் பேர் மட்டுமே சிரியா மீதான ஒரு இராணுவத் தாக்குதலை ஆதரிப்பதாக YouGov கருத்துக்கணிப்பு ஒன்று கூறுகிறது.
இதுதவிர, ஒரு புதிய பெரும் இராணுவப் பிரச்சாரத்தைத் தொடக்குவதானது, வெகுஜன எதிர்ப்பு பெருகிச் செல்வதற்கும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பெருகும் வேலைநிறுத்த இயக்கத்திற்கும் முகம்கொடுக்கும் நிலையில் தமது நெருக்கடி நிரம்பிய அரசாங்கங்களுக்கு முட்டுக் கொடுப்பதற்காக பாரிய தணிக்கை உள்ளிட்ட போலிஸ்-அரசு ஆட்சியை அமல்படுத்துவதற்கான ஒரு வழிவகையாக, இலண்டன், பாரிஸ் மற்றும் வாஷிங்டனில் பார்க்கப்படுகிறது.
ஈராக் படையெடுப்புடன் போர் விரிவாக்கம் நின்று விடாதது போலவே, சிரியா மீதான தாக்குதலுடன் இந்த புதிய மோதலானது நின்றுவிடப் போவதில்லை. ஈரான், ரஷ்யா மற்றும் இறுதியில் சீனாவுடனான ஒரு மோதலுக்கு மேடை அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏகாதிபத்தியக் கொள்கையானது, மேலும் மேலும் அதிகமாய் ஒரு முற்றிலும் பொறுப்பற்றதும் கட்டுப்பாட்டில் இல்லாததுமான ஒரு தன்மையைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.
போருக்கு எந்தவிதமான ஒழுங்கமைந்த எதிர்ப்பும் இல்லாதிருந்த நிலைமையையே ஆளும் வர்க்கம் இதுவரை தங்கியிருந்தது ஆயினும் பரந்த போர்-எதிர்ப்பு மனோநிலையானது தவிர்க்கவியலாமல் செயலூக்கமான வடிவங்களைப் பெறும்; சிக்கன நடவடிக்கைகளுக்கும் ஜனநாயக உரிமைகள் அழிக்கப்படுவதற்கும் எதிராய் அதிகரித்துச் செல்கின்ற எதிர்ப்புடன் அது ஒன்றுபடும்.