Print Version|Feedback
The growing threat of an Israeli war against Iran
ஈரானுக்கு எதிராக அதிகரித்து வரும் இஸ்ரேலிய போர் அச்சுறுத்தல்
Bill Van Auken
26 April 2018
உலக ஊடகங்கள், ஈரானிய அணுசக்தி உடன்படிக்கை தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவர் பிரெஞ்சு சமதரப்பினர் இமானுவல் மக்ரோனுக்கு இடையே வாஷிங்டனில் நடந்த விவாதங்கள் மீது ஒருங்குவிந்துள்ள நிலையில், இஸ்ரேலிய அரசாங்கமோ ஈரானை நோக்கி அதிகரித்தளவில் ஓர் ஆத்திரமூட்டும் தோரணையை ஏற்றுள்ளதுடன், அதேவேளையில் ஓர் இராணுவ மோதலுக்கான தயாரிப்பில் அதன் வடக்கு எல்லையில் இராணுவ ஆயத்தப்பாடுகளைச் செய்து வருகிறது.
ஈரானின் அணுசக்தி திட்டங்களை மட்டுமல்ல, மாறாக அதன் அணுசக்தி அல்லாத ஆயுதங்களையும் அதிகளவில் குறைக்கும் நோக்கில் மற்றும் மத்திய கிழக்கு எங்கிலும் அதன் செல்வாக்கை திரும்ப பெறச் செய்யும் நோக்கில், ஓர் ஆக்ரோஷ கொள்கைக்கான ட்ரம்பின் கோரிக்கைக்கு மக்ரோன் அடிபணிந்தார். இருப்பினும், பிராங்கோ-அமெரிக்க சந்திப்புக்கு டெல் அவிவ் இன் எதிர்வினை பெரிதும் எதிர்மறையாக இருந்தது.
2015 இல் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய ஆறு பிரதான சக்திகளுக்கும் மற்றும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்ட அணுசக்தி உடன்படிக்கையான விரிவான கூட்டு நடவடிக்கை திட்டத்தை (JCPOA) அமெரிக்க ஜனாதிபதி முற்றிலுமாக கைவிட்டு பின்வாங்கச் செய்யும் ஓர் உடன்படிக்கையைப் பேரம்பேசுவதில் மக்ரோன் வெற்றி அடைந்து விடுவார் என்பதே இஸ்ரேலின் முன்அனுமானமாக உள்ளது. அந்த உடன்படிக்கையைக் கிடப்பில் போட்டு விட்டு, ஈரானுக்கு எதிராக ஒருதலைபட்சமான அமெரிக்க தடையாணைகளை மீண்டும் திணிக்க முடிவெடுப்பதற்கு ட்ரம்ப் மே 12 ஐ இறுதிகெடுவாக முகங்கொடுக்கிறார். இத்தகைய நடவடிக்கைகள், வாஷிங்டனை நேரடியாக ஈரானுடனான போரை நோக்கிய போக்கில் கொண்டு வந்து நிறுத்தும், இந்த விளைவைத்தான் இஸ்ரேலிய அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
இஸ்ரேலிய உளவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் புதனன்று வானொலிப் பேட்டியில் கூறுகையில், ஈரானிய அணுசக்தி உடன்படிக்கையை "இரத்து செய்யவில்லை என்றாலும், அடிப்படையையே திருத்த" வேண்டும் என்றார். “ஈரானுக்கு அழுத்தமளிப்பது இன்றைய வன்முறையை, மற்றும் அனேகமாக நாளைய போரைக் கூட தடுக்கக்கூடும்” என்பதை மக்ரோனும் பிற ஐரோப்பிய தலைவர்களும் புரிந்து கொள்ள வேண்டுமென அவர் எச்சரித்தார்.
இஸ்ரேலிய அமைச்சரால் கூறப்பட்ட ஒரு சாத்தியமான போர் குறித்த எச்சரிக்கை எவ்விதத்திலும் ஒரு அனுமான கருத்தல்ல. இஸ்ரேல் ஈரானுடன் முற்றுமுதலான ஓர் இராணுவ மோதல் அபாயத்தைக் கூர்மையாக தீவிரப்படுத்தி உள்ளது.
இரசாயன ஆயுத தாக்குதல் என்ற பொய் சாக்குப்போக்கில் ஏப்ரல் 14 இல் சிரியாவுக்கு எதிராக நடத்தப்பட்ட அமெரிக்கா-பிரிட்டன்-பிரெஞ்சு ஏவுகணை தாக்குதல்களால் பெரிதும் பின்னுக்கு தள்ளப்பட்டது என்னவென்றால், அதற்கு ஆறு நாட்களுக்கு முன்னதாக அதை விட நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியளவுக்கு சிரியாவுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திய ஒரு தாக்குதலாகும்.
நேரடியாக சர்வதேச சட்டத்தை மற்றும் அவ்விரு நாடுகளின் இறையாண்மையை மீறிய ஏப்ரல் 8 தாக்குதல், அமெரிக்கா வினியோகித்த F-15 போர் விமானங்களால் ஹோம்ஸ் மத்திய மாகாணத்தில் சிரியாவின் T4 விமானத் தளத்திற்கு எதிராக லெபனான் மீது பறந்து சென்றவாறு நடத்தப்பட்டது. ஏழு ஈரானிய இராணுவ ஆலோசகர்கள் உட்பட, வெளிப்படையாகவே இவர்கள் தான் இலக்கில் வைக்கப்பட்டிருப்பார்கள், ஒரு டஜன் கணக்கான இராணுவ சிப்பாய்கள் இஸ்ரேலிய ஏவுகணைகளுக்கு பலியானவர்களில் உள்ளடங்குவர்.
சிஐஏ மற்றும் வாஷிங்டனின் அப்பிராந்திய கூட்டாளிகள் முடுக்கிவிட்ட ஏழாண்டு கால இரத்தந்தோய்ந்த ஆட்சி மாற்ற போருக்கு எதிராக, அரபு உலகில் தெஹ்ரானின் மிக நெருங்கிய கூட்டாளியான ஜனாதிபதி பஷர் அல்-அசாத் அரசாங்கத்திற்கு ஒத்துழைக்க ஈரானிய சிப்பாய்கள் சிரியாவில் உள்ளனர். பதிலடி கொடுக்கப்படுமென ஒரு மறைமுக அச்சுறுத்தலைக் கொண்டு தெஹ்ரான் இஸ்ரேலிய தாக்குதலுக்கு விடையிறுத்தது. “ஒரு திட்டமிட்ட நகர்வில் ஒரு ஆட்சி மற்றொரு நாட்டின் வான்வெளி எல்லையை மீறும் உரிமையை ஏற்கும் போதும், மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக சண்டையிட்டு வரும் படைகளை இலக்கில் வைக்கும்போதும், அது அதன் விளைவுகளையும் பதில் நடவடிக்கைகளையும் நிச்சயமாக பரிசீலிக்க வேண்டும்,” என்று ஈரானின் உயர்மட்ட தேசிய பாதுகாப்பு குழு (SNSC) செயலாளர் அலி ஷம்கானி செவ்வாயன்று செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார்.
இஸ்ரேலிய அரசாங்கமோ அது போருக்கு தயாராக இருப்பதாக அறிவித்து தெஹ்ரானுக்கு பதிலளித்துள்ளது. “இஸ்ரேலிய இராணுவ படைகளும் (IDF) மற்றும் பாதுகாப்பு படைகளும் எந்தவொரு நிலைநிறுத்தலுக்கும் தயாராக உள்ளன,” என்று பிரதம மந்திரி பென்ஜமின் நெத்தனியாகு சமீபத்தில் அறிவித்தார். “எங்களுக்கு தீங்கிழைக்க முயற்சிக்கும் எவரொருவருக்கு எதிராகவும் நாங்கள் போரிடுவோம். விலை கொடுக்க வேண்டியதை எண்ணி பின்வாங்க மாட்டோம், எங்களுக்கு தீங்கிழைக்க விரும்பவர்களை அதற்கான விலை கொடுக்க செய்வோம்,” என்றார்.
இஸ்ரேலிய ஆயுதப்படைகள் சிரிய மற்றும் லெபானின் எல்லைகளை ஒட்டி பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டின் விமானப்படை உயர் எச்சரிக்கையில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன.
மேற்கத்திய ஊடகங்களோ தீவிரமடைந்து வரும் இந்த மோதலை, ஏதோ ஈரான் தான் இஸ்ரேலை ஆக்ரோஷமாக நெருக்குவதாக காட்டி சித்தரிக்கின்றன. இது அபத்தமானது. ஈரான் அதன் அமைதிக்கான அணுசக்தி திட்டத்தை மட்டுப்படுத்துமாறு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அழுத்தத்திற்கு வளைந்து கொடுத்துள்ள நிலையில், இஸ்ரேலோ 200 இல் இருந்து 400 மதிப்பிடப்பட்ட குண்டுகளுடன், அப்பிராந்தியத்தின் ஒரே அணுசக்தி நாடாக உள்ளது. வாஷிங்டன் மற்றும் அதன் கூட்டாளிகளின் ஆதரவுடன், டெல் அவிவ் அணுஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் (Nuclear Non-Proliferation Treaty) கையெழுத்திட உறுதியாக மறுத்துள்ளது.
இதற்கிடையே, அமைதிக்கான ஸ்டாக்ஹோம் சர்வதேச ஆய்வு மைய தகவல்படி, சவூதி அரேபியா, இது ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய அச்சில் முக்கிய பிராந்திய கூட்டாளியாக மேலெழுந்துள்ள நிலையில், 2016 இல் இராணுவ தளவாடங்களுக்காக தெஹ்ரானை விட ஐந்து மடங்கு அதிகமாக செலவிட்டுள்ளது.
அது ஒரு பிராந்திய சக்தியாக, எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கில் சவாலுக்கு இடமற்ற மேலாதிக்கத்தைப் பேணுவதற்கான அமெரிக்க முனைவுக்கு ஒரு தடையாக நிற்பதால், ஈரான் இலக்கில் வைக்கப்பட்டுள்ளது. அப்பிராந்தியத்தில் ஒரு கால்-நூற்றாண்டு அமெரிக்க போர்களின் பேரழிவுகரமான விளைவுகளால், ஈராக், சிரியா மற்றும் லெபனானிலும் உள்ளடங்கலாக, அப்பிராந்தியத்தில் ஈரானிய செல்வாக்கு பலமடைந்துள்ளது.
ஈரானுக்கு எதிரான ஓர் இஸ்ரேலிய போர் அச்சுறுத்தல் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இராணுவ ஸ்தாபகங்களுக்கு இடையிலான ஆரவாரமான சந்திப்புகளால் அடிக்கோடிடப்படுகிறது. மத்திய கிழக்கில் இராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் தலைவர் ஜெனரல் ஜோசப் வொட்டெல் திங்களன்று இஸ்ரேலுக்கு ஒரு விஜயம் மேற்கொண்டார், இது மத்திய கட்டளையக தளபதி ஒருவரின் முன்பில்லாத முதல் பயணமாகும். சிரியாவிலிருந்து அமெரிக்க படைகளைத் திரும்ப பெறுவதற்கு ட்ரம்பின் சமீபத்திய வாக்குறுதிகளை அமெரிக்கா நிறைவேற்றாது என்பதை நெத்தனியாகு அரசாங்கத்திற்கு உத்தரவாதமளிப்பதே வெளிப்படையாக அவர் திட்டமாக இருந்தது.
பின்னர் புதனன்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் Avigdor Lieberman, அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் ஜேம்ஸ் மாட்டீஸ் மற்றும் தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் ஜோன் போல்டன் உட்பட அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்த வாஷிங்டனுக்குப் பறந்தார். இஸ்ரேலிய அரசு தகவல்களின்படி, மத்திய கிழக்கில், முக்கியமாக சிரியாவில் ஈரானின் "விரிவாக்கத்தை" எதிர்கொள்வதே திட்டநிரலாக இருந்தது.
ஈரானை நோக்கிய இஸ்ரேலின் போர் முனைவு மீது, வாஷிங்டனிலும் சரி ஐரோப்பாவிலும் சரி ஆளும் ஸ்தாபகத்தினுள் ஐயத்திற்கிடமின்றி பிளவுகள் உள்ளன. வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டதைப் போல, “வாஷிங்டனில் உள்ள [சில] வெளியுறவு கொள்கை பிரமுகர்கள், இஸ்ரேல் ஈரானியர்களுக்கு எதிரான அதன் ஒளிவுமறைவான நடவடிக்கைகளை தொடர்வதை விரும்புகின்றனர். திரு. ட்ரம்ப் சிரிய மோதலில் இருந்து விலகிக் கொள்ள விரும்புகின்ற ஒரு சமயத்தில் இஸ்ரேலிய தாக்குதல்களை அவசியமானதாக அவர்கள் பார்க்கிறார்கள்...”
புதனன்று, நாளிதழ் Telegraph இல், பிரிட்டிஷ் இராணுவ தலைமை தளபதி ஜெனரல் ரிச்சார்ட் டன்னாட் எழுதிய, “ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் வருகிறது — முன்னாளின் பயங்கரவாத பினாமிகளுக்கு எதிராக பிரிட்டன் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்,” என்று தலைப்பிட்டு, கட்டுரை ஒன்றை பிரசுரித்தது.
“ஈரான், கவனிக்காமல் விடப்பட்டால், அப்பிராந்தியத்தில் இஸ்ரேலுடன் நாசகரமான புதிய போருக்கு காரணமாகி விடும் ஒரு சூழலை இப்போது நாம் முகங்கொடுக்கிறோம்,” என்று ஜெனரல் டன்னாட் வாதிடுகிறார்.
அந்த முன்னாள் பிரிட்டிஷ் தளபதி லெபனானின் முதலாளித்துவ இஸ்லாமியவாத ஹெஸ்புல்லா இயக்கத்தின் மீது சீறுவதில் ஒருமுனைப்பட்டிருந்ததுடன், அதன் அங்கத்துவ அமைப்புகளும் போராளிகளும் “அப்பாவி மக்களிடையே" ஒன்று கலந்திருப்பதாக மீண்டும் மீண்டும் குற்றஞ்சாட்டி, சிரியா மற்றும் லெபனானில் இஸ்ரேல் "பொறுத்துக் கொள்ளவியலாத அச்சுறுத்தலை" முகங்கொடுப்பதாக ஒரு விடயத்தை உருவாக்குகிறார், இது எதிர்வரும் காலத்தில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளால் அப்பாவி லெபனான் மக்கள் கொல்லப்படுவதற்கு ஒரு முன்கூட்டிய காரணத்தை வழங்குகிறது.
“இஸ்ரேல் அதன் அத்தியாவசிய பாதுகாப்பு நலன்களை முழுப் பலத்துடன் பாதுகாப்பதை எதிர்நோக்கி நாம் தயாராக இருக்க வேண்டும்,” என்று அந்த பிரிட்டிஷ் தளபதி எழுதுகிறார். “இஸ்ரேலிய இராணுவப் படை பலமான பிடியை வைத்திருப்பதாக பலரும் விமர்சிக்கின்றனர், ஆனால் அவர்கள் இராணுவத் தளபதிகளை தனிப்பட்டரீதியில் குடைந்தெடுக்கின்ற நிலையில், அவர்கள் ஏற்கத்தக்க சட்டபூர்வ மற்றும் தார்மீக வழிமுறைகளில் நடவடிக்கை எடுக்கக்கூடுமென நான் நம்புகிறேன்,” என்றார். இந்த "வழிமுறைகள்" தான் சமீபத்தில் இஸ்ரேலிய எல்லையை ஒட்டிய காசாவில் இஸ்ரேலிய இராணுவப் படைகள் நிராயுதபாணியான ஆர்ப்பாட்டக்காரர்களை கொன்றதில் வெளிப்பாட்டைக் கண்டது, அதில் குறைந்தபட்சம் 40 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பல ஆயிரக் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.
ஈரானுக்கு எதிரான போரை நோக்கி டெல் அவிவ் தீவிரப்படுவதை உந்துகின்ற ஒரு முக்கிய காரணி, இஸ்ரேலுக்குள் அதிகரிக்கின்ற சமூக பதட்டங்களாகும். முன்னேறிய நாடுகள் என்றழைக்கப்படும் நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்து சமூகரீதியில் மிகவும் சமநிலையற்று இருக்கும் இஸ்ரேல், முடிவில்லா ஊழல் மோசடிகளில் சிக்கியுள்ளது. இந்த நிலைமைகளின் கீழ், இஸ்ரேலிய அரசாங்கம் உள்நாட்டு பதட்டங்களைப் போரின் வடிவில் வெளியே திருப்பி விடுவதற்கான பெரும் உள்நோக்கத்தில் உள்ளது.
இதுபோன்ற உள்நோக்கங்கள், வாஷிங்டனிடம் இருந்தும் மற்றும் ஏனைய பிரதான ஏகாதிபத்திய சக்திகளிடம் இருந்தும், மத்திய கிழக்கில் இஸ்ரேலின் ஆக்ரோஷமான மற்றும் விரிந்து பரந்த ஒரு போருக்கு ஆதரவு அடித்தளத்தைப் பெறுகின்றன.
இஸ்ரேலும் மற்றும் வாஷிங்டன், இலண்டன் மற்றும் ஏனைய இடங்களில் உள்ள அதன் ஆதரவாளர்களும் பின்பற்றி வரும் பொறுப்பற்ற கொள்கைகள் அப்பிராந்தியம்-தழுவிய ஒரு மோதலைத் தூண்டிவிட அச்சுறுத்துவதுடன், அது உலகின் மிகப் பெரிய அணுஆயுத சக்திகளான அமெரிக்கா மற்றும் ரஷ்யா உட்பட பிரதான சக்திகள் அனைத்தையும் விரைவிலேயே உள்ளீர்த்து விடக்கூடும். அதுபோன்றவொரு பேரழிவைத் தடுப்பதற்கான ஒரே வழிவகையாக இருப்பது, போர் மற்றும் அதை தோற்றுவிக்கும் இந்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய இயக்கத்தை அபிவிருத்தி செய்வதாகும்.