Print Version|Feedback
Oppose Internet censorship! Defend freedom of speech!
இணைய தணிக்கையை எதிர்ப்போம்! பேச்சு சுதந்திரத்தை பாதுகாப்போம்!
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர்கள் குழு
3 ஏப்ரல் 2018
இந்தியாவிலுள்ள நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) ஆதரவாளர்கள் குழு, ஏப்ரல் 8 ம் தேதி இணைய தணிக்கைக்கு எதிராக ஒரு பொதுக் கூட்டத்தை சென்னையில் நடத்துகிறது.
உலக சோசலிச வலைத் தளத்தையும் மற்றும் பிற சோசலிச, போர் எதிர்ப்பு, முற்போக்கான வலைத் தளங்களையும் இலக்காகக் கொண்டு அதன் தேடல் வழிமுறைகளை கூகிள் மாற்றியுள்ளது. அதிகாரபூர்வமான செய்திகள் என்று அது குறிப்பிடுவனவற்றை தவிர இதர செய்திகளை கட்டுப்பாட்டுடன் வழங்குவது தொடர்பாக, முகநூல் மாற்றங்களை செய்துள்ளது.
இணைய தணிக்கை ஆபத்தான வகையில் மேலும் முன்னேறி சென்றுள்ளது என்பதற்கான மற்றொரு அறிகுறி என்னவென்றால், அமெரிக்க பணம் செலுத்தும்-செயலாக்க நிறுவனமான PayPal, உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS இன்) சிற்றறிக்கையான - ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமும் ஈரானில் தொழிலாளர் ஆட்சிக்காகவும் – என்பதன் இணையவழி விற்பனையை தடை செய்ய எடுத்த முடிவாகும்.
இணைய பயன்பாட்டின் மீதான தாக்குதல் பூகோளரீதியானது. "வெறுப்பூட்டும் பேச்சு” மற்றும் "தேசிய பாதுகாப்பை" காக்கும் முகமூடியின் கீழ், பிரதமர் நரேந்திர மோடியின் வலதுசாரி இந்திய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட வலைத் தளங்கள் மற்றும் சமூக ஊடக கணக்குகளை தணிக்கை செய்ய பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் மற்றும் இணைய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
சமீபத்திய தரவுகளின்படி, 2017 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் முகநூல், ஆயிரம் சமூக ஊடக URL களை தடைசெய்தது. இது "ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கம்” பற்றி கையாளும் இந்திய அரசாங்கக் குழுவின் பரிந்துரையின் பேரில் செய்யப்பட்டது. தடைசெய்யப்பட்ட கணக்குகளில் அரசியல் விமர்சனங்கள் மற்றும் காஷ்மீரில் நடப்பது போன்ற மனித உரிமைகள் மீறல்கள் பற்றிய வீடியோக்களும் உள்ளடங்கும்.
மோடி, அமெரிக்க அரசாங்கத்துடன் ஒரு நெருக்கமான மூலோபாய கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளார். அவரது அரசாங்கம் இந்தியாவை, சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் போர் உந்துதலின் முன்னிலை நாடாக மாற்றியள்ளது. சமூக உரிமைகள் மீதான தாக்குதலுக்கும், அமெரிக்க சார்பு மாற்றத்திற்கும் எதிராக எதிர்ப்பு வளர்ந்து வருகின்றபோது எதிர்ப்பு மற்றும் தடுக்கும் சக்தியை ஒழுங்கமைக்க முகநூல் மற்றும் சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று புது தில்லி அஞ்சுகிறது.
இணைய சுதந்திரத்தின் மீது இந்தியா உள்பட சர்வதேசரீதியாக தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருவது பற்றியும் தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களுக்கு அதன் அபாயகரமான அரசியல் தாக்கங்கள் பற்றியும் கூட்டத்தில் பேச்சாளர்கள் விவாதிப்பார்கள். ஜனநாயக உரிமைகள் மீது அக்கறை கொண்டுள்ள தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளை இந்த முக்கியமான கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறும் கலந்துரையாடலில் பங்கேற்குமாறும் அழைப்பு விடுக்கிறோம்.
இந்தக் கூட்டம் ஆங்கிலத்திலும், தமிழிலும் நடத்தப்பட்டும். கீழுள்ள முகநூல் இணைப்பின் மூலம் சர்வதேச ரீதியாக எமது நேரடி ஒளிபரப்பில் கலந்துகொள்ள முடியும்: https://www.facebook.com/wsws.supporters.india/.