ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The CIA Democrats vs. Julian Assange

சிஐஏ ஜனநாயகக் கட்சியினர் எதிர் ஜூலியன் அசாஞ்ச்

Patrick Martin
23 April 2018

2016 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலை திருடுகின்ற ஒரு குற்றவியல் முயற்சியில் ரஷ்யா மற்றும் ட்ரம்ப் பிரச்சார அணியுடன் இணைந்து கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக விக்கிலீக்ஸ் மற்றும் அதன் ஸ்தாபகர் ஜூலியான் அசாஞ்சின் பெயரைக் குறிப்பிட்டு ஜனநாயகக் கட்சியின் தேசிய தேர்வுசபை (DNC) தொடுத்திருக்கும் வழக்கு ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு கூர்மையான தாக்குதலாகும். ஊடக உரிமையையும் பேச்சுரிமையையும் அடிப்படை உரிமைகளாக ஸ்தாபிக்கின்ற அமெரிக்க அரசியல்சட்டத்தின் முதலாவது திருத்தத்தை இது காலில் போட்டு நசுக்குகிறது.

விக்கிலீக்ஸ் ஈடுபட்டிருப்பது பத்திரிகைத் துறையே அன்றி வேவுபார்ப்பு அல்ல என்பதையும்; அரசாங்கங்கள், பகாசுர பெருநிறுவனங்கள் மற்றும் பிற சக்திவாய்ந்த அமைப்புகளின் குற்றங்களை அம்பலப்படுத்த முனைகின்ற விழிப்பூட்டுநர்களால் அதற்கு வழங்கப்படுகின்ற ஆவணங்களைப் பிரசுரிப்பதுதான் அதன் வேலையில் அடங்கியிருக்கிறது என்பதையும்; அத்துடன் இந்த துணிச்சலான அம்பலப்படுத்தலானது இந்த வலைத் தளத்தையும் அதன் ஸ்தாபகர் மற்றும் வெளியீட்டாளரையும் உலகெங்கிலும் அரசு ஒடுக்குமுறையின் இலக்குகளாக ஆக்கியிருக்கிறது என்பதையும் ஜனநாயகக் கட்சியின் வழக்கு ஆவணமோ அல்லது அது குறித்த ஊடக விவரணைகளோ ஒப்புக்கொள்ளவில்லை.

அசாஞ்ச் கடந்த ஆறு வருடங்களாக இலண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் கிட்டத்தட்ட சிறைப்பட்டவராய் இருக்கிறார், அமெரிக்காவில் இரகசிய நீதிக் குழு மரணதண்டனை விதிக்கத்தக்க வேவு மற்றும் தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளில் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்திருந்ததாக கூறப்பட்ட நிலையில், அவரை அமெரிக்காவுக்கு அனுப்புவதற்கு பிரிட்டிஷ், ஸ்வீடன் மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள் செய்த முயற்சிகளில் இருந்து தப்பி அவர் அங்கு தஞ்சம் புகுந்திருந்தார். மார்ச் இறுதி முதலாக, ஈக்வடார் அரசாங்கம், அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கொடுத்த அதிகமான அழுத்தத்திற்கான பதிலிறுப்பில், அவருக்கு வெளியுலகத் தகவல்தொடர்பு அனைத்தையும் துண்டித்து விட்டது.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா இழைத்த போர்க் குற்றங்களைக் காட்டுகின்ற, விழிப்பூட்டுநர் செல்சியா மேனிங் அளித்த இரகசிய இராணுவ ஆவணங்களையும் உலகெங்கிலும் அரசாங்கங்களை கையாள்வதற்கும் கவிழ்ப்பதற்கும் அமெரிக்கா செய்த முயற்சிகளை விவரித்து அமெரிக்க வெளியுறவுத் துறையை சங்கடத்தில் நிறுத்துகின்ற இராஜதந்திர கேபிள்களையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டது என்பதுதான் அசாஞ்ச் மீது சுமத்தப்படுகின்ற குற்றத்திற்கும் நடத்தப்படுகின்ற வழக்கிற்கும் காரணமாய் இருக்கிறது.

ஜனநாயகக் கட்சியின் தேசிய தெரிவு சபை (DNC) வெள்ளிக்கிழமையன்று மெக்கார்த்தியிசத்தால் நிரம்பிய 66 பக்க புகார் ஒன்றை தாக்கல் செய்தது, அந்த விஸ்கான்சின் செனட்டர் 70க்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்பாக கம்யூனிச விரோத சூழ்ச்சி வேட்டைக்கு அவர் முன்னிலை கொடுத்துக் கொண்டிருந்த சமயத்தில் “மிக விரிந்தவொரு சதி” குறித்து அளித்த வாய்வீச்சுக்கும் அதிகமாய் அந்த புகாரில் இருந்தது. ரஷ்ய அரசாங்கம் மற்றும் அதன் இராணுவ உளவு முகமையான GRU தொடங்கி ட்ரம்ப் பிரச்சார அணி மற்றும் ஜூலியான் அசாஞ்ச் வரையிலும் சதிகாரர்களாய் ஒரு நீண்டதொரு பட்டியலை வைத்த பின்னர் இந்த புகார் இவ்வாறு அறிவிக்கிறது: “இந்த சதி முன்பு கற்பனை செய்யப்பட்டிராத ஒரு துரோக நடவடிக்கையைக் கொண்டிருந்தது: ஒரு பெரும் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரின் பிரச்சார அணியானது ஜனாதிபதி பதவியில் வெல்லும் வாய்ப்பை வலுப்படுத்திக் கொள்வதற்காக ஒரு விரோதமான வெளிநாட்டு சக்தியுடன் கைகோர்த்திருந்தது.” 

வலது-சாரி அரசியல் தாதாவாக இருந்த மெக்கார்த்தி 1950களின் பிற்பகுதியில் காட்சியை விட்டு விலகியதன் பிந்தைய காலத்தில் உத்தியோகபூர்வ அமெரிக்க பொது வாழ்க்கையில் இத்தகையதொரு மொழிக்கு ஒருபோதும் இடமிருந்திருக்கவில்லை. ஒட்டிவந்த தசாப்தங்களில் John Birch Society போன்ற அதி-வலது குழுக்கள் இத்தகைய அவதூறு தந்திரத்தை உயிர்ப்புடன் வைத்திருந்தன, என்றபோதும் அவை அரசியல் அமைப்புமுறையின் விளிம்புகளுக்குத் தள்ளப்பட்டிருந்தன. இப்போது ஜனநாயகக் கட்சி 2018 தேர்தலில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அதன் முயற்சியின் மையப் புள்ளியாக இந்த வழிமுறைகளுக்கு மீண்டும் உயிரூட்ட முனைந்து கொண்டிருக்கிறது.

விக்கிலீக்ஸ் குறிவைக்கப்படுவதில், இந்தப் பிரச்சாரத்தின் ஜனநாயகவிரோத உள்ளடக்கம் அதன் நாற்றமிக்க வெளிப்பாட்டைக் காண்கிறது. கொஞ்சமும் ஆதாரமின்றி DNC வழக்கு ஆவணமானது இவ்வாறு திட்டவட்டம் செய்கிறது: “இந்த நடத்தையில் ஈடுபடுவதற்கு மற்றும்/அல்லது விக்கிலீக்ஸ் மற்றும் அசாஞ்ச்சுக்கு DNCயின் வணிக இரகசியங்களை வழங்குவதற்கு விக்கிலீக்ஸும் அசாஞ்சும் ரஷ்யா மற்றும் GRUவை வழிநடத்தினர், தூண்டினர், வலியுறுத்தினர், மற்றும்/அல்லது ஊக்கப்படுத்தினர், அந்த இரகசியங்களை அகழ்ந்து பார்த்து ட்ரம்ப் பிரச்சாரத்தின் தேர்தல் வெற்றி வாய்ப்பை அதிகரிப்பது அவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.”

ஆனால், அசாஞ்ச் மற்றும் விக்கிலீக்ஸ் கூற்றுப்படி, 2016 இல் விக்கிலீக்ஸ் பகிரங்கப்படுத்திய DNCயிடம் இருந்தான தகவல்கள் மற்றும் கிளின்டன் பிரச்சாரத்தின் தலைவரான ஜோன் போடெஸ்டாவிடம் இருந்தான தகவல்கள், விக்கிலீக்ஸ் அதன் தகவல்ஆதாரங்களது இரகசியத்தைக் காப்பாற்றி பாதுகாக்கும் அதன் வழக்கமான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றிய காரணத்தால், விக்கிலீக்ஸுக்கே தெரியாத ஒரு பெயர்கூறாத விழிப்பூட்டுநரால் வழங்கப்பட்டதாக இருந்தது. அவ்வாறில்லை என்பதை நிரூபிக்க இம்மியளவு ஆதாரமும் வழங்கப்படவில்லை.

DNC இன் சட்டரீதியான புகார் விக்கிலீக்ஸ் வெளியீடுகளின் எதிர்மறை பின்விளைவுகளாகக் கூறும் பத்திகள் மேற்கோளிடத் தகுந்தவையாகும்:

135. இந்த சட்டவிரோத சதி DNCக்கு ஆழமான சேதத்தை விளைவித்தது. திருடப்பட்ட விடயங்கள் தேர்ந்தெடுத்து நேரம்பார்த்து வெளியிடப்பட்டதானது வாக்காளர்களுக்கு DNC இன் சொந்த தரப்பில் இருந்து விவரங்களை தெரிவிப்பதில் இருந்து DNC ஐத் தடுத்துவிட்டது. இந்த திருடப்பட்ட விடயங்களின் தேர்ந்தெடுத்த வெளியீடுகள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் தெரிவுக்கு உடனடி முந்தைய காலத்தில் உச்சம்பெற்று பொதுத் தேர்தல் வரையிலும் தொடர்ந்தது.

136. திருடப்பட்ட விடயங்கள் தெரிந்தெடுத்து சமயம் பார்த்து வெளியிடப்பட்டதானது DNCக்கும் ஜனநாயகக் கட்சியின் வாக்காளர்களுக்கும் இடையில் ஒரு பிளவைச் செருகுகின்ற நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டிருந்தன, அந்த விளைவைக் கொண்டிருந்தன. திருடப்பட்ட விடயங்களின் வெளியீடானது பொதுத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு உதவும் DNCயின் திறனையும் குறைத்துவிட்டது.

ஆனால் விக்கிலீக்ஸ் அளித்த தகவல்கள் மிகவும் சேதாரமளிப்பதாய் ஆனது எப்படி என்பதை DNCயின் வழக்குஆவணம் விளக்கவில்லை. இதற்கு நேரெதிராக, அதில் “வணிக இரகசியங்கள்” மற்றும் ஜனநாயகக் கட்சியின் தலைமை குறித்த மற்ற உரிமையாளர் உடைமையான தகவல்கள் இருந்ததாக கூறியதைத் தவிர, கசிந்ததில் இருந்த உண்மையான உள்ளடக்கம் குறித்த எதனையும் அது பேசவில்லை.

ஜனநாயகக் கட்சி தொடர்பாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட விவரங்களை இரண்டு முக்கிய வகைகளாய் பிரிக்கலாம். முதலாவதாய், DNC தலைவரான டெப்பி வாஸர்மேன் ஸ்கல்ட்ஸ் மற்றும் அவரது தலைமை உதவியாளர்கள் ஹிலாரி கிளிண்டனை எதிர்த்துப் போட்டியிட்ட பேர்னி சாண்டர்ஸ் வெற்றிபெற்று விடாமல் தடுக்கின்ற மற்றும் ஹிலாரி கிளிண்டன் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகத் தேர்வுசெய்யப்படுவதை உறுதிசெய்கின்ற ஒரு திட்டமிட்ட முயற்சியில் ஈடுபட்டிருந்தனர் என்பதைக் காட்டும் உள்முக மின்னஞ்சல்கள் மற்றும் DNCயின் ஆவணங்கள். வேறு வார்த்தைகளில் சொன்னால், 2016 தேர்தல் பிரச்சாரத்தில் ரஷ்யா முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் கூறிக் கொண்டிருந்த அதேநேரத்தில், DNC ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் தேர்தல் முடிவுகளில் முறைகேட்டுக்கு முனைந்து கொண்டிருந்தது.

இரண்டாவது தொகுதி ஆவணங்கள் கிளிண்டன் பிரச்சாரத் தலைவரான ஜோன் போடெஸ்டாவிடம் இருந்து வந்தவையாகும், ஹிலாரி கிளிண்டன் நிதித் துறை குழுக்களுக்கு ஒரு தடவைக்கு 300,000 டாலர்கள் என மிக உயர்ந்த கட்டணம் வசூலித்து வழங்கிய உரைகளின் எழுத்துவடிவங்களும் அதில் இருந்தன. வங்கியாளர்கள், 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவைத் தூண்டி மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களின் வேலைகளையும் வாழ்க்கைத் தரங்களையும் அழித்த நிதித்துறை தில்லுமுல்லுகளுக்காக அவர்களைத் தண்டிப்பது குறித்த எந்த பிரச்சார வாய்வீச்சையும் குறித்து அச்சப்படத் தேவையில்லை என்பதாக இந்த பேச்சுகளின் போது, அவர் மீண்டும் உறுதியளித்திருந்தார்.

DNC வழக்கு ஒட்டுமொத்தமாக சிஐஏ மற்றும் இராணுவ-உளவு எந்திரத்தின் ஆஸ்தானக் கட்சியாக ஆவதற்கு ஜனநாயகக் கட்சி செய்கின்ற முயற்சியின் ஆழமடைவு ஆகும். விக்கிலீக்ஸ் மற்றும் அசாஞ்சை குறிவைப்பதன் மூலமாக, ஜனநாயகக் கட்சியினர், விக்கிலீக்ஸ் மாஸ்கோவுடன் தொடர்பிருப்பதான சந்தேகத்துடன் ஒரு “அரசு-அல்லாத குரோத உளவு சேவை” என்ற, சிஐஏ இயக்குநரான மைக் பொம்பியோவின் -வெளியுறவுச் செயலாளர் பதவிக்கு ட்ரம்ப்பின் இப்போதைய தெரிவு- அவதூறைத் தழுவிக் கொள்கின்றனர்.

மேலும், அமெரிக்க அரசாங்கத்தின் பொய்களையும் குற்றங்களையும் அம்பலப்படுத்துவதற்காக அசாஞ்ச் ஒரு துரோகி என்றால், அதன்படி, அவரைப் பாதுகாத்துப் பேசுகின்ற அத்துடன் பெருநிறுவன ஊடகங்களால் உமிழப்படுகின்ற அரசாங்கப் பரப்புரையை சவால் செய்கின்ற பிரசுரங்கள், வலைத் தளங்கள் மற்றும் தனிநபர்கள் அனைவருமே இந்த துரோகத்தில் உடந்தையாக இருப்பவர்களாக கூறப்பட்டு அதற்கேற்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட கோரப்படுவர்.

உலக சோசலிச வலைத் தளம் முன்னர் விளக்கியதைப் போல, ஜனநாயகக் கட்சியினர் முன்தள்ளுகின்ற ரஷ்ய-விரோதப் பிரச்சாரம் எந்த உண்மை ஆதாரத்தின் அடிப்படையும் இல்லாத ஒரு பிற்போக்குத்தனமான இட்டுக்கட்டலாகும், சிரியாவில் போரை கூர்மையாகத் தீவிரப்படுத்துவதற்கும் ரஷ்யாவுக்கு எதிராக ஒரு கூடுதல் மூர்க்கமான நிலைப்பாட்டை எடுப்பதற்கும் ட்ரம்ப் நிர்வாகத்தை நெருக்குகின்ற நோக்கம் கொண்டதாகும் இது. அதே நேரத்தில், இணையத்தை தணிக்கை செய்வதற்கான ஒரு பாரிய மற்றும் ஒருங்கிணைந்த பிரச்சாரத்திற்கான நியாயப்படுத்தலாகவும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. கூகுள் மற்றும் ஃபேஸ்புக் ஆகியவை அவற்றின் தேடல் மற்றும் செய்தி ஊட்ட அல்காரிதங்களில் புரட்டு வேலைகள் செய்ததைத் தொடர்ந்து இனி இடது-சாரி, போர்-விரோத மற்றும் சோசலிசப் பிரசுரங்களை ஒடுக்குவதற்கான மிக நேரடியான முயற்சிகள் பின்தொடரவிருக்கின்றன.

ட்ரம்ப்பின் வெள்ளை மாளிகையுடனான மோதலில் “உளவு சமூகத்தின்” பக்கம் நிற்கின்ற கட்சியாக ஜனநாயகக் கட்சி அதனை நிலைப்படுத்திக் கொள்வதற்கும் இந்தப் பிரச்சாரம் சேவை செய்திருக்கிறது. நவம்பர் இடைத் தேர்தல்கள் வருவதற்கு முன்பே, போட்டிமிகுந்த பகுதிகளில் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்றப் பிரதிநிதிகளுக்கான பரிந்துரைகள், சிஐஏ, இராணுவம், தேசியப் பாதுகாப்பு கவுன்சில் மற்றும் வெளியுறவுத் துறை ஆகியவற்றில் இருந்து நிறைய பெறப்படுவதன் மூலம் (காணவும்: ”சிஐஏ ஜனநாயகக் கட்சியினர்”) இது இப்போது துணையளிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

DNC இன் நடத்தையானது, ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டிலான ஒரு நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதே ட்ரம்ப்பையும் குடியரசுக் கட்சியையும் எதிர்த்துப் போராடுவதற்கான வழியாகும் என்பதான தாராளவாத மற்றும் போலி-இடது குழுக்களின் -இவை அனைத்துமே அசாஞ்ச் தனிமைப்படுத்தப்பட்டமை மற்றும் துன்புறுத்தப்பட்டமை குறித்து முழுமையான மவுனத்தைப் பராமரித்து வந்திருக்கின்றன- கூற்றுக்களது பிற்போக்குத்தனமான மற்றும் திவாலான தன்மையை விளங்கப்படுத்துகிறது. போர், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஒடுக்குமுறைக்கு உறுதிபூண்ட இரண்டு சமரசத்திற்கிடமற்ற அரசியல் எதிரிகளையே இந்தக் கட்சிகளில் தொழிலாள வர்க்கம் முகம்கொடுக்கிறது என்பதே உண்மையாகும்.