Print Version|Feedback
The condition of working-class women on International Women’s Day
சர்வதேச மகளிர் தினத்தில் தொழிலாள வர்க்க பெண்களின் நிலைமை
Kate Randall
9 March 2018
அமெரிக்க மற்றும் உலகளாவிய ஊடகங்களில், அனேகமாக வரலாற்றிலேயே வேறு எப்போதையும் விட பாலினம் தொடர்பாக அதிகமாக பேசப்படுகிறது. அமெரிக்காவின் #MeToo பிரச்சாரம் முன்னெப்போதையும் விடவும் பெண்களின் நிலைமைகளை முன்னேற்றி இருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்க ஊடகங்களும் ஹாலிவுட்டும் வேறெதையும் விட இதனால் உயிரோட்டமானதாக ஆக்கப்பட்டுள்ளன.
ஆனால் இதுவொரு மோசடியாகும். ஏறக்குறைய எல்லா ஊடகங்களிலும் காட்டப்படும் பெண்கள், சமூகத்தின் உயர்மட்ட அடுக்கு, செல்வ செழிப்பான ஐந்து அல்லது பத்து சதவீத அடுக்கைச் சேர்ந்தவர்கள். சட்டதிட்டங்களுக்காக ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர, இவற்றில் எல்லாம் தொழிலாள வர்க்க பெண்களை எங்கும் காண முடிவதில்லை.
ஊடக காட்சிகளில் இந்த ஒருதலைபட்சமான வர்க்க போக்கு மிகப்பெரும் சமூக யதார்த்தத்தைப் பிரதிபலிக்கிறது: அதாவது, செல்வ செழிப்பான பெண்களுக்கும் தொழிலாள-வர்க்க பெண்களுக்கும் இடையிலான இடைவெளி கடந்த பல பத்தாண்டுகளில் வேகமாக விரிவடைந்துள்ளது. 2018 சர்வதேச மகளிர் தினத்தில், உலகில் பெரும் பெரும்பான்மை பெண்களின், ஊடகங்களால் புறக்கணிக்கப்படும் இவர்களின், மாலை நேர செய்திகளில் தங்களின் முகங்களைக் காட்ட முடியாமல், தங்களின் குறைகளைக் கூற முடியாமல் உள்ள இவர்களின், நிலைமைகள் தான் என்ன?
இன்று, Project Concern International அமைப்பின் தகவல்படி, 7.6 பில்லியன் பேர் வசிக்கும் இப்புவியில் 1.3 பில்லியன் பேர் அதிவறுமையில் வாழ்கின்றனர், அதில் 70 சதவீதம் பேர் பெண்கள் அல்லது பெண் குழந்தைகளாவர்.
போர், பஞ்சம் மற்றும் வன்முறையிலிருந்து தப்பி வருபவர்களாக மதிப்பிடப்படும் உலகின் 65.6 மில்லியன் அகதிகளில், சுமார் அரைவாசி பேர் பெண்கள். பெண்களில் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளவர்கள், வசிக்க இடமற்றவர்கள், கர்ப்பிணிகள், குடும்ப ஸ்திரீகள், ஊனமுற்றோர் மற்றும் முதியவர்களே குறிப்பாக பாதிக்கப்படுகின்றனர்.
ஒவ்வொரு நாளும், உலகெங்கிலும் தோராயமாக 830 பெண்கள் மகப்பேறு மற்றும் குழந்தை பிறப்பு சம்பந்தப்பட்ட தடுக்கக்கூடிய காரணங்களினாலேயே மரணிக்கின்றனர். பிரசவ கால மொத்த மரணங்களில் சுமார் 99 சதவீதம் வளரும் நாடுகள் என்றழைக்கப்படுபவைகளில் நிகழ்கின்றன. உலகளவில் பிரசவ இறப்பு விகிதம் 1990 மற்றும் 2015 க்கு இடையே சுமார் 30 சதவீதம் குறைந்துள்ள நிலையில், இந்த விடயத்தில் சிறிது முன்னேற்றம் உள்ளது.
ஆனால், அமெரிக்காவில், பிரசவ இறப்பு விகிதம் 1990 இல் 100,000 பேருக்கு 16.9 உயிரிழப்புகள் என்பதில் இருந்து 2015 இல் 24.7 உயிரிழப்புகளாக, 56 சதவீதம் உயர்ந்திருந்தது. இவ்விதத்தில், துணை-சஹாரா ஆபிரிக்காவில் உள்ள உலகின் மிக வறிய நாடுகள் சிலவற்றின் பட்டியலில் அமெரிக்காவும் உள்ளது. லுக்செம்பேர்க், கனடா மற்றும் கிரீஸ் ஆகியவை பிரசவ இறப்பு விகிதம் அதிகரித்துள்ள மற்ற வளர்ந்த நாடுகளாகும், ஆனாலும் அமெரிக்காவுடன் ஒப்பிட்டால் அவற்றின் மொத்த விகிதம் இரண்டிலிருந்து மூன்று மடங்கு குறைவே. உலகின் மிகப் பணக்கார நாட்டில் இந்த 2018 இல் இதை எவ்வாறு எடுத்துக் கொள்வது?
அமெரிக்காவில் தொழிலாள வர்க்க பெண்களின் அவலநிலை, பிரிக்கவியலாத விதத்தில் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் அவலநிலையோடு பிணைந்துள்ளது. வருவாய் சமத்துவமின்மை வரையறைகளில் அமெரிக்கா தொடர்ந்து மிகவும் சமநிலையற்ற நாடாக இடம் பெறுகிறது. அமெரிக்க பெண்கள் மத்தியில் பிரசவ இறப்பு விகிதம், வறுமை, கூலிகள் மற்றும் வேலைவாய்ப்பின்மை என இவற்றின் மீதான மோசடியான புள்ளிவிபரங்கள், தேசிய செல்வ வளத்தில் அமெரிக்க ஆளும் உயரடுக்குகள் அதிகரித்த பங்கை முன்பில்லாதளவில் அபகரித்திருப்பதின் ஒரு பிரபலிப்பாக, மற்றும் சமூக பாதுகாப்பு வலையத்தில் எஞ்சி இருப்பதை இரண்டு பெருவணிக கட்சிகளும் வெட்டி வருவதன் பிரதிபலிப்பாக உள்ளன.
ஜோன்சன் நிர்வாகம் "வறுமைக்கு எதிரான போர்" தொடங்கி ஒரு அரை-நூற்றாண்டுக்குப் பின்னர், உத்தியோகபூர்வ வறுமையில் வாழ்பவர்களாக கணக்கிடப்பட்ட 37 மில்லியன் அமெரிக்கர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் பெண்கள். 100 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் வறுமையின் விளிம்பில் வாழ்கிறார்கள் அல்லது வறுமைக்குள் உள்ளேயும் வெளியேயுமாக ஊசலாடிக் கொண்டிருக்கிறார்கள்; இவர்களில் அண்மித்து 70 சதவீதத்தினர் பெண்களும் குழந்தைகளும் ஆவர், என்று மற்றொரு புள்ளிவிபரம் குறிப்பிடுகிறது.
18 க்கு குறைந்த வயதுடைய குழந்தைகள் உள்ள மொத்த குடும்பங்களில் நாற்பது சதவீதம், வருவாயில் பிரதானமாகவோ அல்லது ஒரே ஆதாரமாகவோ அதன் தாய்மார்கள் உள்ளனர். அமெரிக்காவில் குறைவூதிய தொழிலாளர்களில் அண்மித்து மூன்றில் இரண்டு பங்கினரில் உழைக்கும் பெண்களாவர். முழு-நேர பெண் தொழிலாளர்களின் நடுத்தர ஊதியங்கள், இப்போதும் அவர்களின் ஆண் சமதரப்பினர் சம்பாதிக்கும் நடுத்தர சம்பளங்களை விட சுமார் நான்கில் மூன்று பங்காக தான் உள்ளது. 18-56 வயதிற்குட்பட்ட தொழிலாளர்களில் பெண்கள் 47 சதவீதம் தான் என்றாலும், உழைக்கும் ஏழைகளில் அவர்கள் 56 சதவீதமாக உள்ளனர்—இவர்கள் ஒரு வேலையை தக்கவைத்திருந்தபோதும் வறுமையிலிருந்து தப்பிக்க முடியவில்லை.
வறுமை, சுரண்டல், வேலைவாய்ப்பின்மை, மருத்துவக் காப்பீடு மீதான தாக்குதல், அரசு கல்வி மீதான தாக்குதல், ஏகாதிபத்திய போரால் தோற்றுவிக்கப்படும் பாலியல் பலாத்காரம் உட்பட அவமதிப்பு மற்றும் வன்முறை என தொழிலாள வர்க்க பெண்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள், ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கமும் முகங்கொடுக்கும் பிரச்சினைகளாகும். கருக்கலைப்புக்கான உரிமை உட்பட ஜனநாயக உரிமைகள் தொடர்பான அடிப்படை கேள்விகளும் தாக்குதலில் உள்ளன. போலந்து மிகவும் விதிவிலக்கான நிலைமைகள் தவிர ஏறத்தாழ முழுமையாக கருக்கலைப்புக்கு தடைவிதித்துள்ளது. பிரசவத்தைத் தவிர்க்க விரும்பும் பெண்களுக்கு, அமெரிக்கா முழுவதிலும் மாநிலங்கள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன, மிசிசிப்பி 15 வாரங்களுக்குப் பின்னர் கருக்கலைப்புகளுக்குத் தடைவிதிக்கும் விளிம்பில் உள்ளது.
இவ்வாறு இருக்கின்ற அதேநேரத்தில், அமெரிக்காவில் 2016 இல் அதிக சம்பளம் பெற்ற 10 தலைமை நிறைவேற்று அதிகாரிகளில் நான்கு பேர் பெண்களாவர், இவர்கள் அனைவரும் அந்தாண்டின் அதிக சம்பளம் பெற்ற 100 நிர்வாகிகளின் Equilar பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். அவர்களின் மொத்த வருமாய் தொகை:
ஆரக்கல் நிறுவனத்தின் சாஃப்ரா காட்ஸ் (Safra Catz): 40.9 மில்லியன் டாலர்
ஐபிஎம் நிறுவனத்தின் கின்னி ரோமெட்டி (Ginni Rometty): 33.3 மில்லியன் டாலர்
ஹெலெட் பேக்கெட் நிறுவனத்தின் மெக் விட்மன் (Meg Whitman): 32.9 மில்லியன் டாலர்
பெப்சிகோ நிறுவனத்தின் இந்திரா நூயி (Indra Nooyi): 25.1 மில்லியன் டாலர்
இந்த பெண் நிர்வாகிகளும் மற்றும் இலட்சாதிபதி பெண் மில்லயனர்களின் ஒரு சிறிய கூட்டமும், ஒவ்வொரு விதத்திலும் பெரும் பெரும்பான்மையிலான பெண் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களில் இருந்து பல ஒளிஆண்டு தொலைவில் உள்ளனர். அவர்களின் பங்கு பத்திர சொத்துக்கள் குறித்தும், பெருநிறுவன ஏணியில் இன்னும் உயர்ந்த இடத்திற்கு ஏறுவதற்கான தந்திரங்களை யோசிப்பதும் தான் அவர்களின் மிகப்பெரிய கவலை. குழந்தை பராமரிப்பு மையங்களுக்கு பணம் செலுத்தவே தொழிலாளர்கள் கஷ்டப்படும் போது, இவர்கள் குழந்தை பராமரிப்பாளர்களை ஏற்பாடு செய்து கொள்கிறார்கள்; மில்லியன் கணக்கான குடும்பங்கள் மேசையில் உணவைக் கொண்டு வரவே கஷ்டப்படும் வேளையில், இவர்கள் எந்த சிறந்த மதுபானத்தைப் பருகுவது, எந்த மிக பிரபலமான உணவகங்களுக்குச் செல்வது என்று விவாதிக்கிறார்கள்; வாடகை கொடுப்பதற்கு அல்லது பசியைப் போக்கவே தொழிலாளர்கள் கஷ்டப்படுகையில், இவர்கள் எந்த ஆடம்பர மாளிக்கைக்கு அல்லது விடுதிக்கு செல்வது என்று தேர்வுசெய்கிறார்கள்.
“பெண்ணுரிமைகள்" குறித்து பேசும் சுயநலமான, உயர்மட்ட-நடுத்தர-வர்க்க பாதுகாவலர்கள், பெருநிறுவன உலகின் உயர்ந்த பதவிகளுக்கு இந்த பெண்கள் உயர்ந்திருப்பதை மொத்த பெண்களின் முன்னேற்றமாக எம்மை நம்ப வைக்கக்கூடும். ஆனால் யதார்த்தம் வேறுவிதமானது.
பெண்ணியம் வட்டாரங்களில் பொதுவாக ஒரு சம்பிரதாய விடயமாக உள்ள சமூகவியல்வாதி (Sociologist) எனும் படைப்பில், CUNY பட்டதாரி மையத்தின் சமூகவியல் பேராசிரியர் ரூத் மில்க்மன் 2017 இல் குறிப்பிட்டதைப் போல, “பெண்கள் மத்தியில் வர்க்க சமத்துவமின்மைகள் முன்னெப்போதையும் விட அதிகரித்துள்ளது,” என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் இந்த உண்மை #MeToo இயக்க பாதுகாவலர்களால் மூடிமறைக்கப்படுகிறது, இவர்கள் பெண்ணுரிமைகள் என்ற பெயரில் பலரை, முக்கியமாக ஆண்களை, மதிப்பிழக்க செய்யவும் அசிங்கப்படுத்தவும், அவர்களுக்கு எதிரான தங்களின் சிலுவைப்போரில் விசாரணை வழிமுறைகள் மற்றும் சட்ட வழிமுறைகளைக் கைவிடுகின்றனர். இந்த கேலிக்கூத்து எல்லா "பெண்களுக்கும்" என்ற பெயரில் இட்டுக்கட்டப்படுகிறது, ஆனால் பெண்களின் பரந்த அடுக்குகளின் உரிமைகள் மற்றும் கவலைகளை முன்னெடுப்பதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
பெண்ணுரிமைகளுக்காக போராடுவது வர்க்க போராட்ட களத்தில் தீர்க்கப்பட வேண்டிய ஒரு சமூக பிரச்சினையாகும், அதை பெருநிறுவன இயக்குனர் குழு மற்றும் ஹாலிவுட் இன் ஒரு கூட்ட அறைகளில் தீர்க்க முடியாது. ரோசா லுக்செம்பேர்க் ஒருமுறை குறிப்பிட்டதைப் போல: “சொத்துடைமை வர்க்கத்தின் பெண்கள் வெறித்தனமாக எப்போதுமே சுரண்டலையும், உழைக்கும் மக்கள் அடிமைப்படுத்தப்படுவதையும் பாதுகாப்பார்கள், இதன் மூலம் அவர்கள் மறைமுகமாக சமூகரீதியில் தங்களின் பிரயோஜனமற்ற உயிர்வாழ்வுக்கு வழி தேடி கொள்கிறார்கள்.”
பெப்ரவரி 28, 1909 இல் நியூ யோர்க்கில் அமெரிக்க சோசலிச கட்சி தேசிய மகளிர் தினம் ஏற்பாடு செய்தபோது, அந்த தேதி தான் முதன்முதலில் சர்வதேச மகளிர் தினத் தேதியாக இருந்தது. அதே நகரில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மார்ச் 25, 1911 இல், ட்ரைஆங்கிள் சட்டை தைக்கும் ஆலை தீவிபத்தில் 146 ஆயத்த ஆடை நிறுவன தொழிலாளர்கள், நெருப்பிலும் புகைமூட்டத்திலும், கீழே தவறி விழுந்தும், தப்பிப்பதற்காக குதித்ததாலும் உயிரிழந்தனர். அதில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும் பெரும்பான்மையினர், 123 பேர், பெண்கள், அவர்களில் பலரும், 16 வயதில் இருந்து 23 வயதுக்கு உட்பட்ட, சமீபத்தில் அங்கு வந்திருந்த இத்தாலிய மற்றும் யூத புலம்பெயர்ந்தவர்கள் ஆவர்.
ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர், க்ரிகோரியன் நாட்காட்டியின்படி, மார்ச் 8, 1917 இல், ஜவுளித்துறை பெண் தொழிலாளர்கள் பெட்ரோகிராட்டில் ஓர் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கினர், இது ரஷ்ய புரட்சி தொடங்கியதைக் குறித்தது, இந்த நிகழ்வு தான் ரஷ்யாவிலும் உலகெங்கிலும் —பெண் அதேபோல ஆண்— தொழிலாளர்களுக்கான சமூக நிலைமைகள் மற்றும் உரிமைகளைத் தீவிரமாக முன்னேற்றுவதற்கு இட்டுச் சென்றது.
சமூக நலம், கண்ணியம், மற்றும் தொழிலாள வர்க்க பெண்ணுரிமைகளுக்கான போராட்டத்தை, இந்த மாபெரும் சோசலிச பாரம்பரியத்தின் அடித்தளத்தில், சோசலிச அடித்தளத்தில் சமூகத்தை மாற்றுவதற்கான ஒட்டுமொத்த சர்வதேச தொழிலாள வர்க்க போராட்டத்தின் பாகமாக மட்டுமே முன்னெடுக்க முடியும்.