Print Version|Feedback
West Virginia, the class struggle and the fight against Internet censorship
மேற்கு வேர்ஜினியாவும், வர்க்க போராட்டமும், இணைய தணிக்கைக்கு எதிரான போராட்டமும்
Jerry White
12 March 2018
அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க அமைதியின்மை அலை, அடிப்படை அரசியல் கேள்விகளை அம்பலப்படுத்தி, தெளிவுபடுத்தி வருகிறது. "போலி செய்திகள்" மற்றும் "ரஷ்ய ஊடுருவலை" எதிர்க்கிறோம் என்ற மோசடி சாக்குப்போக்கில், இணைய தணிக்கை செய்வதற்காக தொழில்நுட்ப பெருநிறுவனங்களும், அமெரிக்க அரசாங்கம் மற்றும் பரந்த ஊடகங்களும் நடத்தும் பிரச்சாரத்தின் மைய நோக்கமும் இவற்றில் ஒன்றாகும்.
இந்த வாரம், தொழிலாள வர்க்க போராட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதுடன் ஆரம்பமாகியுள்ளது. கடந்த வாரம் 30,000 மேற்கு வேர்ஜினிய ஆசிரியர்கள் மற்றும் பள்ளி பணியாளர்களின் ஒன்பது நாள் வேலைநிறுத்தத்தை தொழிற்சங்கங்களால் விற்றுத்தள்ளி முடிவுக்குக் கொண்டு வர முடிந்தது என்றபோதினும், அமெரிக்கா எங்கிலும் கல்வியாளர்களின் கிளர்ச்சி பரவி வருகிறது. கடந்த சில வாரங்களில் பிரதானமாக பத்தாயிரக் கணக்கான பயனர்கள் இணைந்துள்ள பேஸ்புக் குழுக்கள் மூலமாக ஒழுங்கமைக்கப்பட்டு, சம்பள உயர்வு மற்றும் பாதுகாப்பான ஓய்வூதியங்களுக்காக ஓக்லஹோமா, கென்டக்கி மற்றும் அரிசோனாவின் ஆசிரியர்கள், மேற்கு-வேர்ஜினியா போன்ற வேலைநிறுத்தங்களுக்கு அழுத்தமளித்து வருகின்றனர்.
இது, மேற்கு வேர்ஜினியாவிலும் மற்றும் வேர்ஜினியாவிலும் 1,400 ஃப்ரோண்டியர் தொலைதொடர்பு தொழிலாள்ளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் கலிபோர்னியாவில் மிகப் பெரிய மருத்துவமனையான Kaiser Permanente இன் 18,000 பதிவு செய்த செவிலியர்கள் ஒரு வேலைநிறுத்தத்திற்கு அதிகாரமளித்து வாக்களித்துள்ளனர் ஆகியவை உட்பட ஒரு பரந்த தொழிலாள வர்க்க இயக்கத்தின் பாகமாக உள்ளது. யுனெடெட் பார்சல் சேவையின் ஒரு மில்லியனில் கால்வாசி தொழிலாளர்களது ஒப்பந்தங்கள் கோடையின் மத்தியில் வரையில் முடிவுறாது என்றபோதும், அவர்களில் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு அழுத்தமளிக்க சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இங்கிலாந்தில், 40,000 க்கும் அதிகமான விரிவுரையாளர்கள் நாடெங்கிலுமான 65 பல்கலைக்கழகங்களில் நான்காவது வார வேலைநிறுத்தத்தில் உள்ளனர். டென்மார்க்கில், 80,000 பொதுத்துறை தொழிலாளர்கள் ஏப்ரல் 4 இல் வேலைநிறுத்தத்தில் இறங்க அச்சுறுத்தியதற்கு, இதை டானிஷ் ஊடகங்கள் "பல பத்தாண்டுகளில் மிக மோசமான தொழில்துறை இடையூறாக" இருக்குமென கூறிய நிலையில், மொத்தம் 400,000 அரசு பணியாளர்களுக்கும் கதவடைப்பு செய்யப்படுமென அறிவித்து அந்நாட்டின் வலதுசாரி அரசாங்கம் விடையிறுத்துள்ளது.
தொழிலாளர்கள் தங்களின் போராட்டங்களை ஒழுங்கமைக்கவும் மற்றும் பெருநிறுவன, தொழிலாள வர்க்க விரோத தொழிற்சங்கங்களின் இரும்புபிடியிலிருந்து தப்பிப்பதற்கும் அவர்கள் இணையத்தைப் பயன்படுத்தும் விதம் குறித்து ஆளும் வர்க்கத்திற்குள் எச்சரிக்கைகள் அதிகரித்து வருகின்றன.
தொழிற்சங்கங்களில் நான்கு தசாப்த கால தொடர்ச்சியான முடிவில்லா காட்டிக்கொடுப்புகளில், அவை விட்டுக்கொடுப்புகளுக்குத் தொழிலாளர்களை அடிபணிய வைக்கவும் மற்றும் பயமுறுத்தவும், அச்சுறுத்தவும், பொய்யுரைக்கவும், தகவல் ஏகபோகமயமாக்கல் மற்றும் தொழிலாளர்களைத் தனிமைப்படுத்துவதைச் சார்ந்திருந்துள்ளன. இது உடையத் தொடங்கி உள்ளது. குறிப்பாக வெவ்வேறு துறை மற்றும் வெவ்வேறு நாட்டு தொழிலாளர்களும் தங்களுக்குள் நேரடியாக தொடர்பு கொள்ளவும், போராட்டங்களை ஒழுங்கமைக்கவும் மற்றும் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும் சமூக ஊடக தளங்கள் அனுமதிக்கின்றன.
“மேற்கு வேர்ஜினிய வெளிநடப்புகள், தகவல்-பரிமாறிய வேலைநிறுத்தம் குறித்து பதவியிலிருப்பவர்களுக்கு ஒரு படிப்பினை" என்று மார்ச் 8 இல் பிரசுரித்த ஒரு கட்டுரையில் இல் நியூ யோர்க் டைம்ஸ் கவலை தொனிக்க கருத்துரைக்கையில், மேற்கு வேர்ஜினிய ஆசிரியர்கள் "பாரம்பரிய தொழிற்சங்கவாதத்தின் வழமையான வழிமுறைகளுக்கு வெளியே ஒழுங்கமைத்து கொள்ளவும் செயல்படவும் வழிகளைக் கண்டனர். அம்மாநிலம் எங்கிலும் ஆசிரியர்களும் சேவை பணியாளர்களும் ஒரு மிகப் பெரிய பேஸ்புக் குழுவில் அவர்களின் மனக்குறைகளை வெளியிட்டனர், இறுதியில் அவர்களது வெளிநடப்பில் மூன்று வெவ்வேறு தொழிற்சங்கங்களின் உறுப்பினர்களும், தொழிற்சங்கத்தைச் சேராத பலரும் கலந்து கொண்டனர்,” என்று எழுதியது.
வேலைக்குத் திரும்புமாறு தொழிற்சங்கங்களிடம் இருந்து வந்த உத்தரவுக்கு எதிரான ஆசிரியர்களின் கிளர்ச்சி, “ஒரு முக்கிய திருப்புமுனையாக, குறிப்பிடத்தக்க ஒன்றாக இருந்தது,” என்று டைம்ஸ் எழுதுகிறது. “முன்னெடுக்க வேண்டிய பணிகளுக்கு, தொழிற்சங்க தலைவர்கள் அல்ல, சாமானிய தொழிலாளர்கள் அழைப்புவிடுத்தனர்.”
“தொழிற்சங்கங்கள் அவற்றின் வரலாற்றின் பெரும்பகுதி நெடுகிலும் அமைதியின்மைக்கு அல்ல, ஸ்திரப்பாட்டுக்கு முயன்ற சக்திகளாக இருந்துள்ளன,” என்று டைம்ஸ் க்கு கூறிய ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் தொழிலாளர்துறை வரலாற்றாளர் ஒருவர், “அவை பலவீனமடைகையில், ஸ்திரமின்மை மற்றும் போர்குணத்தின் மீளெழுச்சியை, மேற்கு வேர்ஜினியாவில் நாம் கண்டு வருகின்ற மாதிரியானதை, நாம் காண வேண்டியிருக்கும்,” என்றார்.
பேஸ்புக், கூகுள் மற்றும் இதர இணைய நிறுவனங்களும் இணைய கருத்துக்களைத் தணிக்கை செய்ய ஆக்ரோஷமான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரும் அவர்களின் கோரிக்கைகளை நியாயப்படுத்துகையில், ஜனநாயகக் கட்சியினரும் உளவுத்துறை முகமைகளும், அமெரிக்காவுக்குள் "பிளவுகள்" மற்றும் "எதிர்கருத்துக்களை விதைக்க" ரஷ்யா "போலி செய்திகளை" பரப்பி வருவதாக வாதிடுகின்றனர். ஆனால் WSWS குறிப்பிட்டவாறும், நடந்து வரும் அபிவிருத்திகள் எடுத்துக்காட்டுவதை போலவும், “எதிர்கருத்து" “விதைக்க" வேண்டியிருக்கவில்லை; அது ஏற்கனவே இருக்கிறது, அது பகிரங்கமாக வெடித்து வருகிறது.
மக்களின் எதிர்ப்பை "ரஷ்ய தலையீடு" என்பதுடன் தொடர்புபடுத்துவதன் மூலமாக, ஆளும் வர்க்கம் அனைத்து அரசியல் அதிருப்தியையும் குற்றகரமாக்கவும் மற்றும் இணைய பேச்சு சுதந்திரத்தைத் தணிக்கை செய்யவும் முயன்று வருகிறது. வர்க்கப் போராட்டம் வளர்ச்சி அடைகின்ற வேளையில், இணைய தணிக்கை பிரச்சாரம் தீவிரமடைந்து, அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் இன்னும் அதிக பகிரங்கமான வடிவங்களை மட்டுமே எடுக்கும்.
ஊடகங்களில், “தீவிரவாதத்திற்கு" எதிரான பிரச்சாரத்தின் பாகமாக இடதுசாரி கண்ணோட்டங்கள் மீது வெளிப்படையான தடை விதிக்கும் கோரிக்கைகளுக்கு முயற்சிகள் அதிகரித்து வருகின்றன. "யூ-டியூப், மிகப்பெரிய தீவிரப்படுத்துபவர்" என்று நியூ யோர்க் டைம்ஸ் ஞாயிறன்று பிரசுரித்த ஒரு கட்டுரையில், யூ-டியூபின் மென்பொருள் வழிமுறைகள் மக்களை "இடதுசாரி சூழ்ச்சிகளுக்கு… இரகசிய அரசு முகமைகள் இருப்பது குறித்த வாதங்களுக்கு" கொண்டு செல்வதாக குறை கூறியது. ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் இணைய மற்றும் சமூகத்திற்கான பேர்க்மன் மையத்தைச் சேர்ந்த அதன் கட்டுரையாளர் Zeynep Tufekci, “[கூகுளுக்கு சொந்தமான] யூ-டியூப், 21 ஆம் நூற்றாண்டின் மிகவும் சக்தி வாய்ந்த தீவிரமயப்படுத்தும் கருவிகளில் ஒன்றாக இருக்கக்கூடும்,” என்று குறைகூறுகிறார்.
சர்க்கரை மற்றும் கொழுப்பு உணவுகளுடன் இடதுசாரி அரசியல் மீதான ஆர்வத்தைத் தொடர்புபடுத்தி, Tufekci எழுதுகிறார், “நவீன வாழ்வின் உள்ளடத்தில் மிகவும் கவனமாக கண்காணிக்க வேண்டிய பல இயற்கை குணங்களை மனிதயினங்கள் கொண்டிருக்கின்றன,” என்கிறார். “எத்தனை பேர், குறிப்பாக இளைஞர்கள், தகவல்களுக்காக யூ-டியூப்பை நோக்கி திரும்புகிறார்கள் என்பதை பொறுத்த வரையில், இன்றியமையாத விதத்தில் நிலைமை அபாயகரமாக உள்ளது,” என்கிறார்.
இணையத்தில் மக்கள் என்ன பார்க்கிறார்கள் என்பதன் மீது ஓர் எதேச்சதிகார கட்டுப்பாட்டுக்கு முறையிட்டு அப்பெண்மணி நிறைவு செய்கிறார்: “அரசின் விவகாரங்கள் ஏற்றுக் கொள்ளவியலாதவை தான் என்றாலும் தவிர்க்கவியலாது உள்ளது.” வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மிகப் பிரமாண்டமான தணிக்கை முறைகள் அவசியப்படுகின்றன.
"சமூக ஊடகங்களை அவை வடிவமைக்கப்பட்ட விதத்திலேயே தீய கதாபாத்திரங்கள் பயன்படுத்துகின்றன" என்று ஞாயிறன்று Wired இதழில் பிரசுரிக்கப்பட்ட ஒரு கருத்துரையில், ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழக சட்ட பேராசிரியரும் மற்றும் ஒபாமா நிர்வாகத்தின் கீழ் தேசிய பாதுகாப்பு கவுன்சில் பணியாளர்களின் முன்னாள் அங்கத்தவருமான Joshua Geltzer எழுதுகையில், ரஷ்ய போன்ற "தீய கதாபாத்திரங்கள்" பேஸ்புக், ட்வீட்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களைத் துஷ்பிரயோகம் செய்யவில்லை; "வேகமாகவும், உலகளவிலும் சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளும்" திறன் போன்ற அதன் "உள்ளார்ந்த அம்சங்களைப்" அவை பயன்படுத்திக் கொள்கின்றன என்கிறார்.
தொழில்துட்ப நிறுவனங்கள் "குறைந்தபட்சம் அவற்றின் சேவைகளை தீய கதாபாத்திரங்கள் அணுகுவதைத் தடுக்க துணிச்சலான அணுகுமுறைகளைப் பரிசோதிக்க" வேண்டியது அவசியமென Geltzer எழுதுகிறார். செயற்கை அறிவு மற்றும் எந்திர வாசிப்பைப் பயன்படுத்தும் முயற்சிகளை இது உள்ளடக்கி இருக்கும் என்பதோடு, “தவறான கதாபாத்திரங்கள் தீவிரமயப்படுத்தும் கருத்துக்களைப் பிரசுரிப்பதற்கும் அல்லது அவற்றின் தீர்க்கமான சேதிகள் சமூகரீதியில் பரவுவதை உறுதிப்படுத்துவதற்கு முன்னே அவர்களைக் கண்டுபிடித்து தடுப்பதற்கு அதிகரித்து வரும் கோரிக்கையை தீவிரமாக எடுத்துக் கொள்வதையும்" உள்ளடக்கி இருக்கும்.
ஆளும் வர்க்கம் அஞ்சுகின்ற அந்த மாபெரும் "தீர்க்கமான சமூக" சேதி, சோசலிசம் ஆகும். இந்த காரணத்தினால் தான், கடந்த ஏப்ரலில் கூகுளின் புதிய தேடல் மென்பொருள் வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து தணிக்கைக்கான நடவடிக்கைகளில் உலக சோசலிச வலைத் தளம் (WSWS) பிரதான இலக்கில் வைக்கப்பட்டுள்ளது.
மேற்கு வேர்ஜினியா வேலைநிறுத்தத்தின் போது, ஆயிரக் கணக்கான ஆசிரியர்களால் WSWS பின்தொடரப்பட்டது என்பதை ஆளும் வர்க்கம் மறந்துவிடாது. தொழிற்சங்கங்களின் கரங்களுக்கு வெளியே போராட்டத்தை நடத்துவதற்கும் மற்றும் ஒரு பொது வேலைநிறுத்தம் உட்பட ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கத்திற்குள் அதை வரிவாக்குவதற்கும் சாமானிய தொழிலாளர் குழுக்களைத் தேர்ந்தெடுக்குமாறு WSWS விடுத்த அழைப்பு, வர்க்க போராட்டத்தின் புறநிலை தர்க்கத்தையே வெளிப்படுத்துகிறது.
இணைய சுதந்திரத்தின் பாதுகாப்பும் மற்றும் எல்லா வடிவத்திலான தணிக்கைக்கு எதிர்ப்பும் ஒரு வர்க்க பிரச்சினையாகும். இணைய தகவல் தொடர்பு மற்றும் தகவல் பகிர்வு மீதான சுதந்திரத்தைப் பேணுவது தொழிலாள வர்க்கத்திற்கு இன்றியமையாததாகும். இந்த தணிக்கை நடவடிக்கைகளின் நீண்டகால பாதிப்புகளையும் மற்றும் அது சமூக சமத்துவமின்மை மற்றும் போருக்கு அதிகரித்து வரும் எதிர்ப்பை ஒடுக்குவதை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளது என்பதையும் தொழிலாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டு பெருவணிக கட்சிகள் மற்றும் அவற்றின் துணை அமைப்புகள், தொழிற்சங்க எந்திரம், வெகுஜன ஊடகங்கள் என தொழிலாளர்களுக்கு எதிராக அணி சேர்ந்துள்ள அனைத்து சக்திகளும், அவற்றின் செல்வ வளம் எதை சார்ந்துள்ளதோ, இந்த சமூக மற்றும் பொருளாதார அமைப்புமுறையைப் பேணுவதற்கு அவற்றால் ஆன அனைத்தையும் செய்யும்.
தொழிலாள வர்க்கத்திற்குள், அங்கே ஜனநாயக உரிமைகளுக்கு ஓர் ஆழ்ந்த பொறுப்புணர்வும், பேச்சு சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த முயலும் அரசு மற்றும் தொழில்நுட்ப பெருநிறுவனங்களது முயற்சிகளுக்கு உள்ளார்ந்த விரோதமும் உள்ளது. இந்த எதிர்ப்பானது, சிக்கன நடவடிக்கைகள், தணிக்கை மற்றும் போருக்கு மூலகாரணமாக விளங்கும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக நனவுபூர்வமாக ஒழுங்கமைக்கப்பட்டு, அரசியல்ரீதியில் திருப்பி விடப்பட வேண்டும்.
உலக சோசலிச வலைத் தளம் (WSWS), சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு (IYSSE), மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி (SEP), தணிக்கையை நோக்கி அதிகரித்து வரும் முனைவை அம்பலப்படுத்தி, எதிர்ப்பை ஒழுங்கமைக்க, அமெரிக்காவில் "இணைய தணிக்கைக்கு எதிர்ப்பை ஒழுங்கமைத்தல்" என்ற தொடர்ச்சியான கூட்டங்களை நடத்தி வருகின்றன. இந்த கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறும், அவற்றை சாத்தியமான அளவுக்கு பரவலாக கொண்டு செல்லுமாறும், உங்கள் பகுதியில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்ய WSWS ஐ தொடர்பு கொள்ளுமாறும் நாங்கள் எங்கள் வாசகர்கள் அனைவரையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.