Print Version|Feedback
Form rank-and-file committees to expand the strike!
The way forward for West Virginia teachers
வேலைநிறுத்தத்தை விரிவாக்க சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குங்கள்!
மேற்கு வேர்ஜினிய ஆசிரியர்களுக்கு முன்னோக்கி செல்லும் பாதை
By the Socialist Equality Party
5 March 2018
மேற்கு வேர்ஜினிய ஆசிரியர்கள் மற்றும் அரசு பள்ளி பணியாளர்களின் வேலைநிறுத்தம் ஒரு முக்கியமான முடிவு எடுக்கப்பட வேண்டிய ஒரு கட்டத்தில் உள்ளது. பெருநிறுவன நலன்களுக்காக முன்நிற்கும் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி அரசியல்வாதிகள், ஆசிரியர்களுக்கு முன்னால் இரண்டு ஏற்கவியலாத மாற்றீடுகளுக்கு இடையே ஒன்றை "தேர்ந்தெடுக்குமாறு" முன்வைக்கிறார்கள்.
வாரயிறுதிவாக்கில், குடியரசுக் கட்சியின் மிட்ச் கார்மைக்கல் தலைமையிலான மாநில செனட், பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டதும் குடியரசுக் கட்சி ஆளுநர் ஜஸ்டிஸ் ஆதரித்ததுமான ஐந்து சதவீதமாக முன்மொழியப்பட்ட சம்பள உயர்வை நான்கு சதவீதமாக குறைத்து ஒரு சட்டமசோதாவை நிறைவேற்றியது. DuPont, Dow Patriot Coal மற்றும் பிற எரிசக்தித்துறை, இரசாயனத்துறை மற்றும் மருத்துவத்துறை பெருநிறுவனங்களுக்கான ஒரு பிரதிநிதியாக பேசிய கார்மைக்கல், ஆசிரியர்களுக்கு சவால்விடுத்து, ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் ஒரு முன்னுதாரணத்தை அமைக்கும் வகையில், வேலைநிறுத்தத்தை பலவந்தமாக ஒடுக்க தயாராகி வருகிறார்.
இது மேற்கு வேர்ஜினிய கல்வித்துறை வாரியம் (WVEA), மேற்கு வேர்ஜினிய ஆசிரியர்களுக்கான அமெரிக்க சம்மேளனம் (AFT-WV) மற்றும் மேற்கு வேர்ஜினிய பள்ளி சேவை பணியாளர்களின் அமைப்பு (WVSSPA) ஆகியவற்றின் திவால்நிலையை அம்பலப்படுத்துகிறது. இந்த தொழிற்சங்கங்கள், பெருவணிகங்களுக்காக கூலிக்கு மாரடிக்கும் மாநில ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியுனருடனான திரைமறைவு சூழ்ச்சிகளில் நம்பிக்கை வைக்குமாறு தொழிலாளர்களுக்கு கூறுகின்றன.
“நான்கு சதவீதம் இல்லை, ஐந்து சதவீதம் வேண்டும்!” என்பது தான் கார்மைக்கலுக்கு, ஜஸ்டிஸ், ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற்சங்க தலைவர்களின் விடையிறுப்பாக உள்ளது. ஏதோ இதுவொரு பெரிய வித்தியாசம் என்பதைப் போல! ஒரு சதவீத கூடுதல் சம்பளத்திற்காக "சண்டையிடும்" தந்திரத்துடன் —அதேவேளையில் மருத்துவக் காப்பீட்டு செலவுகள் தொடர்பான ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கைகளைக் கண்டு கொள்ளாமல்— தொழிற்சங்கங்களும் அவற்றின் ஜனநாயகக் கட்சி கூட்டாளிகளும் சாமானிய தொழிலாளர்களின் முன்முயற்சியை பின்வாங்க செய்யவும், அப்போராட்டத்தை மாநில செனட்டில் உள்ள குடியரசுக் கட்சி தலைமைக்கு எதிரான பயனற்ற போராட்டங்களுக்குப் பின்னால் திருப்பிவிடவும் முயன்று வருகின்றனர்.
இது, ஒரு விற்றுத் தள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் வேலைநிறுத்தத்தை அடக்கி வைத்து, தனிமைப்படுத்தி, வீணடித்து, முடிவுக்குக் கொண்டு வருவதற்கான மூலோபாயமாகும். அனைத்திற்கும் மேலாக, ஜஸ்டிஸ், தொழிற்சங்கங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்ற அதேவேளையில், ஆசிரியர்கள் அடிபணியாவிட்டால், "DEFCON 15 க்கு செல்ல" —அதாவது ஆசிரியர்களுக்கு எதிராக முழு அளவில் போர் தொடுக்க— அச்சுறுத்தி உள்ளார்.
கடந்த வாரம், ஆசிரியர்கள் ஒரு தைரியமான நிலைப்பாட்டை எடுத்தனர். ஜஸ்டீஸ் மற்றும் தொழிற்சங்கங்களால் ஆதரிக்கப்பட்டு கொண்டு வரப்பட்ட உடன்படிக்கையைப் பெருவாரியாக நிராகரித்ததன் மூலமாக, அவர்கள் அவர்களின் சொந்த நலன்களுக்காக மட்டுமல்ல, மாறாக ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்காகவும் போராட-சண்டையிட- தீர்மானகரமாக இருப்பதை எடுத்துக்காட்டினர். முன்னோக்கி இருக்கும் பாதை என்ன? என்பதே இப்போதைய கேள்வி.
ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தையும் அணிதிரட்டுவோம்! வேலைநிறுத்தம் மீது கட்டுப்பாட்டை எடுக்க சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குவோம்!
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கும் அரசு பள்ளி பணியாளர்களுக்கும் மக்களிடையே பெரும் ஆதரவு உள்ளது. உலகெங்கிலுமான தொழிலாளர்கள் ஆசிரியர்களின் கோரிக்கைகளில் அவர்களின் சொந்த கோரிக்கைகளைக் காண்கிறார்கள், ஆகவே இதில்தான் இந்த வேலைநிறுத்தத்தின் அளப்பரிய பலத்தின் சாத்தியக்கூறு தங்கியுள்ளது. தொழிலாள-வர்க்கத்தின் ஆதரவு வெறுமனே மேற்கு வேர்ஜினியாவுக்குள் மட்டுமே இல்லை. ஓக்லஹோமா, பீட்ஸ்பேர்க், நியூ ஜேர்சி, மினெயாபொலிஸ், அரிசோனா மற்றும் பிற நகரங்களிலும் மற்றும் மாநிலங்களிலும், ஆசிரியர்களும் அரசு பள்ளி பணியாளர்களும் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு அழுத்தமளிக்க தூண்டுதலைப் பெற்றுள்ளனர்.
ஃப்ரொன்டியர் தொலைதொடர்பு (Frontier telecommunication) தொழிலாளர்கள் வேலை வெட்டுகளுக்கு எதிராக ஞாயிறன்று காலை வெளிநடப்பு செய்தனர். பிரிட்டனில் இருந்து கானா வரையில் தொழிலாளர்கள் மேற்கு வேர்ஜினிய ஆசிரியர்களுக்கு தங்களின் ஆதரவை வெளிப்படுத்தி உள்ளனர்.
இந்த ஆதரவு அணிதிரட்டப்பட வேண்டும் மற்றும் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். நீதித்துறை தடை உத்தரவாணைகள் மற்றும் வேலைநீக்கங்கள் குறித்த அச்சுறுத்தல்களுக்கு, தொழிலாள வர்க்கம் ஒரு மாநிலந்தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கான தயாரிப்புகளைக் கொண்டு விடையிறுக்க வேண்டும்.
WVEA, AFT-WV மற்றும் WVSSPA மீது எந்த நம்பிக்கையும் வைக்க முடியாது! ஒவ்வொரு திருப்பத்திலும், வேலைநிறுத்தத்தை அடக்கி முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தொழிற்சங்கங்களின் முயற்சிகளுக்கு எதிராக அது தொடுக்கப்பட வேண்டும். பரவி வரும் உள்ளூர் வேலைநிறுத்த அலை மற்றும் மக்களின் கோபத்தை முகங்கொடுத்துள்ள தொழிற்சங்கங்கள், இரண்டு நாள் வெளிநடப்புகளுக்கு அழைப்பு விடுத்தன. பின்னர் அவை ஓர் அழுகிய உடன்படிக்கையை மிகப் பெரிய வெற்றியாக கொண்டாடி, ஆசிரியர்களை வேலைக்குத் திரும்ப உத்தரவிட்டன. அந்த உடன்படிக்கை பெருவாரியாக நிராகரிக்கப்பட்டு ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தைத் தொடர ஒழுங்கமைந்த போது, தொழிற்சங்க நிர்வாகிகள் ஏதேனும் ஒரு வழியில் மீண்டும் ஒரு விற்றுத்தள்ளலுக்கு அழுத்தமளித்து வருகின்றனர்.
சோசலிச சமத்துவக் கட்சி (SEP), அவசர கூட்டங்களை ஏற்பாடு செய்யுமாறும், தொழிலாளர்களை உள்ளடக்கிய மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான, தங்களின் சாமானிய குழுக்களைத் தேர்ந்தெடுக்க அணிதிரளுமாறு, வேலைநிறுத்தம் செய்து வரும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி பணியாளர்களை வலியுறுத்துகிறது. இந்த குழுக்கள் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் அவசர அழைப்பினை விடவேண்டும் என்பதோடு, எல்லா மிகப் பெரிய வேலையிடங்களுக்கும் சென்று இந்த போராட்டத்தில் இணையுமாறு தொழிலாளர்களை ஊக்குவிக்க, வேலைநிறுத்தக்காரர்களின் மற்றும் மாணவர் இளைஞர்களின் பிரதிநிதி குழுக்களை ஒழுங்கமைக்க வேண்டும்.
இத்தகைய குழுக்கள், ஆசிரியர்கள் மற்றும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான கோரிக்கைகளை முன்னெடுக்கும் கட்டமைப்பை உருவாக்கும். நல்ல சம்பளத்தில் வேலை, மருத்துவக் காப்பீடு, பொதுக்கல்வி, பாதுகாப்பான ஓய்வூக்காலம் ஆகியவை ஒவ்வொரு தொழிலாளரின் உரிமையாகும். ஓபியோய்ட் போதை நோய்க்கு சிகிச்சை வழங்கவும், நுரையீரல் மாசுபடும் நோய் வளர்வதைத் தடுப்பதற்கும், மாநிலத்தின் உள்கட்டமைப்பை மீளகட்டமைக்கவும் அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஓர் அரசியல் போராட்டம்
அரசியல்வாதிகளும், ஜனநாயகக் கட்சியினரும், குடியரசு கட்சியினரும், நிச்சயமாக இதுபோன்ற அடிப்படை உரிமைகளுக்கு "பணமில்லை" என்று அறிவிப்பார்கள். இது அவர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் வர்க்க நலன்களை மட்டுமே எடுத்துக்காட்டுகிறது, ஆகவே ஆசிரியர்கள் இந்த ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்திற்கும் எதிரான ஒரு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வேலைநிறுத்தம் அரசியல்ரீதியானது இல்லை என்றும், இப்போராட்டத்திலிருந்து "அரசியல்" விலக்கி வைக்கப்பட வேண்டுமென்றும் கூறுபவர்கள், பெருநிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்தின் விருப்பங்களுக்கு துணை போகிறார்கள். “அரசியல் வேண்டாம்" என்ற பெயரில், அவர்கள் ஆளும் வர்க்கத்தின் அரசியலை ஊக்குவிக்கிறார்கள்.
அரசை நிர்வகித்து வரும் பெருநிறுவனங்களின் இலாப நலன்களுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையையும் எதிர்க்கின்ற ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி அரசியல்வாதிகள், ஆசிரியர்களுக்கு எதிராக அணிதிரண்டுள்ளனர். ஜஸ்டிஸ், கார்மைக்கல், ஓஜெடா மற்றும் அந்த கூட்டத்திற்குப் பின்னால் வாஷிங்டனின் பெருவணிக அரசியல்வாதிகள் உள்ளனர், இவர்கள் அனைவரும் பெருநிறுவன மற்றும் நிதியியல் உயரடுக்கிற்குள் முடிவில்லாமல் செல்வத்தைப் பாய்ச்ச, தொழிலாள வர்க்கத்தை விலை கொடுக்க நிர்பந்திக்க வேண்டும் என்பதில் உடன்பட்டுள்ளனர்.
இந்த வேலைநிறுத்தம் எல்லாவற்றையும் விட மிகவும் அடிப்படையான அரசியல் கேள்வியை மேலெழுப்புகிறது: அதாவது, யாருடைய நலன்கள் சமூக, பொருளாதார கொள்கையை தீர்மானிக்கும்? இரண்டு பெருவணிக கட்சிகளைக் கட்டுப்படுத்துகின்ற பெருநிறுவன மற்றும் நிதியியல் உயரடுக்கின் நலன்களா அல்லது சமூகத்தின் அனைத்து செல்வவளங்களையும் உருவாக்கின்ற ஆனால் ஒவ்வொரு இடத்திலும் சுரண்டப்பட்டு ஒடுக்கப்படுகின்ற தொழிலாளர்களின் நலன்களா?
அமெரிக்காவில் உள்ள மூன்று பில்லியனர்கள் மக்கள் தொகையின் அடிமட்டத்தில் உள்ள பாதிப்பேரை விட அதிக செல்வ வளத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர். ஆண்டுதோறும் 700 பில்லியன் டாலருக்கும் அதிகமாக அமெரிக்க இராணுவத்திற்கு செலவிடப்படுகிறது. பங்குச்சந்தை குமிழிகளை ஊதிப்பெரிதாக்கவும், பணக்காரர்களின் சொத்துக்களை அதிகரிக்கவும் ட்ரில்லியன் கணக்கான பணம் வங்கிகளுக்கு கை மாற்றப்பட்டுள்ளன. ஆளும் வர்க்கம் பெருநிறுவனங்களுக்கும் செல்வந்தர்களுக்கும் 1.5 ட்ரில்லியன் டாலர் வரிக்குறைப்பை சமீபத்தில் நடைமுறைப்படுத்தி உள்ளது. ஆனால் அவர்கள் பணமில்லை என்று கூறுகிறார்கள்!
ஆதாரவளங்கள் இருக்கின்றன, ஆனால் அவை செல்வந்தர்களால் ஏகபோகமாக்கப்பட்டுள்ளன. தலைமுறை தலைமுறையாக தொழிலாளர்களின் உழைப்பால் உருவாக்கப்பட்ட பாரிய செல்வவளம், இந்த தனிச்சலுகை அனுபவிக்கும் ஒரு சிலரின் கரங்களில் இருந்து பறிக்கப்பட்டு, ஒட்டுமொத்தமாக மக்களுக்காக செலவிடப்பட வேண்டும். செல்வந்தர்களுக்கு அதிக வரிவிதிப்பு உட்பட, செல்வ வளத்தைத் தீவிரமாக மறுவினியோகம் செய்ய சோசலிச சமத்துவக் கட்சி அழைப்புவிடுக்கிறது. மிகப் பெரிய வங்கிகளும், பெருநிறுவனங்களும் பொதுவுடைமையாக ஆக்கப்பட்டு, இலாப நோக்கத்திற்காக அல்லாமல், சமூக தேவையின் அடிப்படையில் செயல்படும், ஜனநாயகரீதியில் கட்டுப்படுத்தப்படும் பயன்பாடுகளாக மாற்றப்பட வேண்டும்.
இதன் அர்த்தம், பாரிய பெரும்பான்மையினரின் உழைப்பை இலாபத்திற்காகவும் ஒரு சிலரின் செல்வச் செழிப்புக்காகவும் சுரண்டும் இந்த அமைப்புமுறையான, முதலாளித்துவத்தை, போர், ஒடுக்குமுறை மற்றும் தேவைகளிலிருந்து மனிதயினத்தை சடரீதியிலும் சிந்தனாரீதியாகவும் விடுதலைசெய்யும் சமத்துவத்தை அடித்தளமாகக்கொண்ட ஒரு சமூகமான, சோசலிசத்தைக் கொண்டு பிரதியீடு செய்ய போராடுவதாகும்.