ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The revolt of the West Virginia teachers

மேற்கு வேர்ஜீனிய ஆசிரியர்களின் கிளர்ச்சி

Joseph Kishore
2 March 2018

இப்போது அதன் ஏழாவது நாளில் நுழைந்துள்ள 30,000 மேற்கு வேர்ஜீனிய ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்திற்கு, ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் அவசரமான மற்றும் செயலூக்கமான ஆதரவு அவசியப்படுகிறது. குறைந்து வரும் சம்பளங்கள், சீரழிந்து வரும் சமூக உள்கட்டமைப்பு, பொதுக்கல்வி மீதான தாக்குதல், வளர்ந்து வரும் சமூக சமத்துவமின்மை மற்றும் அதிகரித்து வரும் மருத்துவக் காப்பீட்டுச் செலவுகள் என இந்த ஆசிரியர்கள் போராடி வரும் பிரச்சினைகள் அனைவருக்குமானது.

தொழிற்சங்கங்களாலும் அம்மாநில பில்லியனிய ஆளுநர் ஜிம் ஜஸ்டிஸ் ஆலும் மூடிய கதவுகளுக்குப் பின்னால் எழுதப்பட்ட உடன்படிக்கையை அந்த ஆசிரியர்கள் மறுத்தளித்திருப்பது, அமெரிக்க ஆசிரியர் கூட்டமைப்பு, தேசிய கல்வி ஆணையம் மற்றும் அவற்றில் பதிவு செய்துள்ள அம்மாநில அமைப்புகளுக்கு கொடுக்கப்பட்ட ஒரு அடியாகும். தொழிற்சங்கங்கள், அப்போராட்டம் தொடங்கியதில் இருந்தே, அந்த எதிர்ப்பை ஒடுக்கவும், மட்டுப்படுத்தவும் மற்றும் ஜனநாயக கட்சிக்குப் பின்னால் திசைதிருப்பவும், மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கனிவான முறையீடுகள் செய்வதை நோக்கி திசைதிருப்பவும் முனைந்துள்ளன. இந்த சூழ்ச்சிகள் ஜஸ்டிஸ் உடனான உடன்படிக்கையில் போய் முடிந்தது, அது ஆசிரியர்களின் எந்த அடிப்படை கோரிக்கைகளையும் பூர்த்தி செய்யவில்லை என்பதோடு, வேலைக்குத் திரும்புமாறு ஓர் உத்தரவையும் அதனுடன் கொண்டிருந்தது.

புதனன்று, ஆசிரியர்கள் அவசரகதியில் அம்மாநில தலைநகரில் கூட்டங்களை கூட்டியதுடன், அவர்களின் போராட்டத்தை முடித்துக் கொள்வதற்கான அந்த அழைப்பை நிராகரித்தனர். ஒவ்வொரு பள்ளித்துறை மாவட்டத்திலும் ஒரு உள்ளாட்சி மாற்றி மற்றொரு உள்ளாட்சியின் வாக்குகள் அதே முடிவை ஏற்றிருந்தன: அதாவது, வேலைநிறுத்தத்தைத் தொடர்வது; பள்ளிகளைத் தொடர்ந்து மூடி வைப்பது.


வேலைநிறுத்த வாக்குகளின் காரணமாக வியாழனன்று மூடப்பட்டிருந்த பள்ளிகளைக் காட்டும் வரைபடம்

ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களின் மருத்துவக் காப்பீட்டு செலவை நிர்வகிக்கும் அரசு பணியாளர் காப்பீட்டு ஆணையத்திற்கு (Public Employees Insurance Agency - PEIA) முழு நிதியுதவி வழங்கப்பட வேண்டும் என்பதே ஆசிரியர்களின் மத்திய கோரிக்கையாகும். முன்பில்லாதளவில் மருத்துவச் செலவுகளின் பெரும் பங்கை தொழிலாளர்களின் முதுகில் சுமத்துவதற்கான முயற்சியானது, ஜனநாயக மற்றும் குடியரசு கட்சி ஆகிய இரண்டு கட்சிகளாலும் ஆதரிக்கப்படும் ஒரு தேசிய கொள்கையின் பாகமாக உள்ளது. மருத்துவக் காப்பீட்டை அணுகுவதைத் தடுப்பதன் மூலமாக தொழிலாள வர்க்கத்தின் ஆயுள் காலத்தைக் குறைப்பதற்கான திட்டநோக்குடன் முயற்சிக்கப்படுகிறது — இந்த பிரச்சாரம், குறிப்பாக சமூக நெருக்கடியால் எரியூட்டப்பட்டு ஓபியோய்ட் போதைப்பொருள் (opioid) நோயின் மையமாக உள்ள அப்பாலாசியா (Appalachia) பிராந்தியத்தில் ஒரு நாசகரமான வடிவத்தை எடுத்துள்ளது.

ஆசிரியர்கள் மீது பெரும் அழுத்தம் திணிக்கப்பட்டு வருகிறது. வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அம்மாநில சட்டமன்றத்தின் கூடுதலான சூழ்ச்சிகளுடன் சேர்ந்து, தொழிற்சங்க அதிகாரத்துவம் அபராதங்கள் விதிக்கும் அச்சுறுத்தல்களையும் மற்றும் அரசின் தடை அதிகார ஆணைகளையும் கணக்கில் கொண்டுள்ளது. ஆனால் இந்த வேலைநிறுத்தத்தின் உடனடி விளைவு என்னவாக இருந்தாலும், இது அமெரிக்காவில் வர்க்க போராட்ட மேலெழுச்சியின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

மேற்கு வேர்ஜீனியா சம்பவங்கள், அமெரிக்காவில் தொழிலாள வர்க்க போர்குணம் அதிகரித்து வருவதற்கான பல அறிகுறிகளுடன் பொருந்தி உள்ளன. அங்கே அரிசோனா, ஒக்லஹோமா, டல்லாஸ், பிட்ஸ்பேர்க் மற்றும் மினெயாபொலிஸ் ஆசிரியர்களிடையே வேலைநிறுத்தத்திற்கான அழைப்புகள் விடப்பட்டுள்ளன, இவர்களுடன் ஒக்லஹோமா பேருந்து ஓட்டுனர்களும் உள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ் பள்ளி உணவக தொழிலாளர்கள், பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் பாதுகாப்பு பொறுப்பாளர்களிடையே திங்களன்று வேலைநிறுத்த ஒப்புதல் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. மேற்கு வேர்ஜீனியாவில் உள்ள நூற்றுக் கணக்கான ஃப்ராண்டியர் (Frontier) தொலைதொடர்பு தொழிலாளர்கள் சனியன்று அவர்களின் ஒப்பந்தம் காலாவதி ஆனதும் வேலைநிறுத்தத்தில் இறங்கக்கூடும். நிறுவன நிர்வாகிகளிடம் கையூட்டு பெற்று தொழிற்சங்க நிர்வாகிகளால் நிர்பந்திக்கப்பட்ட ஒப்பந்தங்களை இரத்து செய்யுமாறு வாகனத்துறை தொழிலாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

அமெரிக்க எல்லைகளுக்கு வெளியே, இந்தாண்டு ஜேர்மனி மற்றும் துருக்கியின் உலோகத்துறை தொழிலாளர்களது வேலைநிறுத்தங்கள், பிரான்சில் விமானத்துறை தொழிலாளர்கள் மற்றும் இங்கிலாந்தில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் வேலைநிறுத்தங்கள் நடந்துள்ளன. செக் குடியரசின் ஸ்கோடா வாகனத்துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்திற்கு அச்சுறுத்தி வருகின்றனர். ஈரான், துனிசியா, மொராக்கோ, கிரீஸ் மற்றும் பிற நாடுகளிலும் தொழிலாளர் போராட்டங்கள் வெடித்திருந்தன.

வர்க்கப் போராட்டத்தின் மேலெழுச்சி, அடிப்படையான அரசியல் பிரச்சினைகளை மேலுயர்த்துகிறது. முதலாவதாக, சமூகம் அடிப்படையில் இனம் மற்றும் பாலினத்தின் அடிப்படையிலேயே பிளவுபட்டுள்ளதாக ஜனநாயகக் கட்சி மற்றும் அதைச் சுற்றி உள்ள நடுத்தர வர்க்க அமைப்புகளாலும் ஊக்குவிக்கப்படும் வாதத்தை மறுத்துரைக்கிறது.

ஜனநாயகக் கட்சியால் “வருந்தத்தக்கவர்களின் கூடாரம்" என்று கூறப்படும் மற்றும் இனவாதிகளாக மற்றும் பிற்போக்குவாதிகளாக அவமதிக்கப்படும் அப்பாலாசியா தொழிலாளர்கள், மற்ற எல்லா பிளவுகளையும் கடந்து வர்க்க பிரச்சினைக்காக போராடி வருகின்றனர். தொழிலாளர்களின் கூட்டு போராட்டங்களானது, உள்ளார்ந்து அதற்கு விரோதமாக உள்ள போலி-இடது அமைப்புகளது அரசியலின் இன-பாலியல்-பாலின கட்டமைப்புடன் முரண்படுவதால், ஆச்சரியத்திற்கிடமின்றி, அவை நடைமுறையளவில் இந்த வேலைநிறுத்தத்தைப் புறக்கணித்துள்ளன.

இரண்டாவதாக, எதிர்ப்பின் அதிகரிப்பானது, பல தசாப்தங்களாக சுரண்டலுக்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பையும் ஒடுக்க செயற்பட்ட தொழிற்சங்க எந்திரத்துடன் நேரடியாக தொழிலாளர்களை மோதலில் நிறுத்துகிறது.

மேற்கு வேர்ஜீனிய ஆசிரியர்களது கிளர்ச்சிக்கு வெறும் ஒரு நாளுக்கு முன்னர் தான், மாநிலம், உள்ளாட்சி மற்றும் நகராட்சி பணியாளர்களுக்கான அமெரிக்க சம்மேளனத்தின் ஒரு வழங்கறிஞர், தொழிற்சங்கங்கள் என்ன கோட்பாட்டில் செயல்படுகின்றன என்பதை ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்தினார். Janus v. AFSCME இன் வழக்கில் டேவிட் பிடரெக் உச்சநீதிமன்றத்தில் வாதாடுகையில், “தொழிற்சங்க பாதுகாப்பு, வேலைநிறுத்தங்கள் இல்லாமல் சமநிலைப்படுத்தும்,” என்று அறிவித்தார். தொழிற்சங்கங்களின் ஸ்திரப்பாட்டிற்கு உத்தரவாதமளிக்கும் நிதி இயங்குமுறைகள் இல்லையென்றால், அங்கே “நாடெங்கிலும் கூற முடியாதளவுக்கு தொழிலாளர் அமைதியின்மையின் பேராபத்து" இருக்கும் என்றார்.

தொழிற்சங்கங்கள், “தொழிலாளர்களின் அமைப்புகள்" என்பதிலிருந்து வெகுதூரம் விலகி, வர்க்க போராட்டத்தை ஒடுக்குவதற்கான முக்கிய இயங்குமுறைகளாக உள்ளன. தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் ஒரு இயக்கத்திற்கு புதிய அமைப்புகளை —அதாவது தொழிற்சாலைகள், வேலையிடங்கள் மற்றும் அண்டைஅயலிடங்களில் ஜனநாயகரீதியில் கட்டுப்பாட்டைக் கொண்டதும் மற்றும் தொழிலாளர்களாலேயே வழிநடத்தப்படுவதுமான சாமானிய குழுக்களை—அமைப்பது அவசியமாகும்.

மூன்றாவதாக, ஒவ்வொரு தனித்தனி போராட்டமும், தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளை உள்ளடக்கி அதன் ஆதரவு அடித்தளத்தை விரிவாக்குவதற்கான தவிர்க்கவியலாத நிர்பந்தங்களை எழுப்புகின்றன. மேற்கு வேர்ஜீனியாவில், அபராதங்கள் மற்றும் தடை அதிகார ஆணைகளைக் காட்டி விடுக்கப்படும் அச்சுறுத்தலானது நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள், அரசு பணியாளர்கள், ஆலை தொழிலாளர்கள், மருத்துவத்துறை தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களைக் கொண்டு எதிர்க்கப்பட வேண்டும். ஆளும் வர்க்கம் மற்றும் அதன் முகமைகளை எதிர்க்க வேண்டிய தேவையானது, தவிர்க்கவியலாமல் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கான கோரிக்கையை எழுப்புகிறது.

நான்காவதாக, தொழிலாளர்களின் போராட்டங்களானது ஒன்று மாற்றி ஒன்றாக முதலாளிமார்களுக்கு எதிரான நேரடி மோதலில் மட்டும் அவர்களை நிறுத்தவில்லை, மாறாக ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகளுடனும் மற்றும் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் அரசியல் கருவிகளாக விளங்கும் ஒட்டுமொத்த அரசு எந்திரத்துடனும் மோதலில் நிறுத்துகிறது. இந்த மோதல் மேற்கு வேர்ஜீனியாவில் உடனடியானதாக உள்ளது, இங்கே ஆசிரியர்களின் சம்பளங்கள் மற்றும் சலுகைகள் ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் இருந்து அல்ல, மாறாக சட்ட நடவடிக்கைகளால் தீர்மானிக்கப்பட்டுள்ளன.

தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளது போராட்டங்களும் பின்வரும் ஒரேமாதிரியான அடிப்படை பிரச்சினையையே உயர்த்துகிறது: யார் ஆட்சி செய்வது? சமூக, பொருளாதாரக் கொள்கையில் யாருடைய நலன்கள் தீர்மானகரமானதாக இருக்கும்? இரு பெருவணிக கட்சிகளையும் கட்டுப்படுத்துகின்ற பெருநிறுவன மற்றும் நிதியியல் உயரடுக்கினரின் நலன்களா, அல்லது சமூகத்தின் செல்வ வளத்தை உருவாக்குகின்ற ஆனால் ஒவ்வொரு இடத்திலும் சுரண்டப்பட்டு ஒடுக்கப்படுகின்ற, மக்கள் தொகையில் பாரிய பெரும்பான்மையாக உள்ள தொழிலாளர்களின் நலன்களா? ஒவ்வொரு வர்க்கப் போராட்டத்தின் தர்க்கத்திலும் உள்ளடங்கி உள்ளவாறு, முதலாளித்துவ இலாபநோக்கு அமைப்புமுறையை தூக்கியெறிந்து தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது அவசியமாகிறது.

அரண்மனை சதியா அல்லது வர்க்க போராட்டமா,” என்ற கடந்த ஆண்டு அறிக்கையில், உலக சோசலிச வலைத் தளம் (WSWS) குறிப்பிடுகையில், வெளியுறவு கொள்கை பிரச்சினைகள் மீது மையமிட்டு, முதலாளித்துவ ஆளும் உயரடுக்கிற்குள் அதிகரித்து வருகின்ற கடுமையான மோதல்களின் பக்கவாட்டில், “ஆளும் வர்க்கத்திற்கும் சமூகத் துன்பத்தின் பல்வேறு வடிவங்களால் பாதிக்கப்பட்டு வருகின்றதும் மற்றும் அரசியல் வாழ்க்கையில் இருந்து முற்றிலும் அந்நியப்படுத்தப்பட்டிருக்கின்றதுமான பரந்த பெருந்திரளான மக்களான தொழிலாள வர்க்கத்துக்கும் இடையே முற்றிலும் மாறுபட்ட மோதல் உருவாகிக் கொண்டிருக்கிறது.”

இந்த மோதல் இப்போது பகிரங்கமாகவே வெடிக்கத் தொடங்கி உள்ளது. உலக முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்தியத்தின் மையமான அமெரிக்காவில் எழுந்துள்ள தொழிலாள வர்க்க போராட்டத்தின் எழுச்சி, சர்வதேச அளவில் அரசியலை அதிர்வுக்குள்ளாக்கும். அது முதலாளித்து ஆளும் உயரடுக்கின் அனைத்து கணக்கீடுகளையும் திட்டங்களையும் தகர்க்கும். அது தேசிய பேரினவாதத்தின் செல்வாக்கை ஆழமாக பலவீனப்படுத்தும் என்பதோடு, சர்வதேச வர்க்க ஐக்கியத்தின் உணர்வைப் பலப்படுத்தும். அது சமத்துவமின்மை, ஒடுக்குமுறை, ஏகாதிபத்திய போர் மற்றும் எதேச்சதிகாரத்திற்கு எதிராக போராடுவதற்காக ஒரு வழியை எதிர்நோக்கி வரும் பெருந்திரளான தொழிலாளர்களின் ஒரு புதிய ஈர்ப்பு துருவத்தை உருவாக்கும்.

அரசாங்கம் மற்றும் பெருநிறுவன தணிக்கைகளுக்கு இடையிலும், உலக சோசலிச வலைத் தளம் மேற்கு வேர்ஜீனிய ஆசிரியர்களிடையே ஒரு பாரிய வாசகர்களை வென்றுள்ளது. மேற்கு வேர்ஜீனியாவில் விற்றுத் தள்ளப்பட்ட உடன்படிக்கையை மறுத்தளிக்குமாறு நாம் விடுத்த அழைப்பு அம்மாநிலம் எங்கிலும் ஆயிரக் கணக்கான ஆசிரியர்களை எட்டியுள்ளது. ஆசிரியர்களுக்கான ஆதரவை தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளிடையேயும் பரந்தளவில் விரிவாக்குவதும், வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களின் வர்க்க நனவை உயர்த்துவதும், போராட்டத்தால் முன் வந்திருக்கும் அரசியல் பிரச்சினைகளைத் தெளிவுபடுத்துவதும், மற்றும் அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் முதலாளித்துவத்திற்கு எதிரான சோசலிசத்திற்கான போராட்டத்திற்கும் இந்த வேலைநிறுத்தத்திற்கும் இடையிலான தொடர்பை விளங்கப்படுத்தவும் செய்வதே சோசலிச சமத்துவக் கட்சி (SEP) மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் (IYSSE) பணியாகும்.