Print Version|Feedback
The historic significance of Trump’s trade war measures
ட்ரம்ப்பின் வர்த்தகப் போர் நடவடிக்கைகளின் வரலாற்று முக்கியத்துவம்
Nick Beams
5 March 2018
சென்ற வியாழனன்று ஜனாதிபதி டொனால்டுட் ட்ரம்ப் அறிவித்த உருக்கு மற்றும் அலுமினிய இறக்குமதிகள் மீதான பெருமளவிலான சுங்கவரிகள் 2018 மார்ச் 1 இனை பொருளாதார வரலாற்றில் எதிரொலிக்கின்ற ஒரு தேதியாக்கியிருக்கின்றது.
இதில் குறிப்பிடத்தக்கது வெறுமனே உருக்கு மீது 25 சதவீத சுங்கவரியும் அலுமினியம் மீது 10 சதவீத சுங்கவரிகளின்-யும் விதிக்கப்பட்டிருக்கிறது இந்த சுங்கவரிகளின்- அளவு மட்டுமல்ல மாறாக, இவை “தேசிய பாதுகாப்பு” முகாந்திரத்தின் அடிப்படையில் விதிக்கப்பட்டுள்ளதாகும். அதாவது போர்கள் அல்லது தேசிய அவசரநிலைகளின் சமயத்தில் மட்டுமே ஒதுக்கப்பட்ட ஒரு காரணநியாயமாக கருதப்பட்டு வந்திருக்கிற ஒன்றின் அடிப்படையில், திணிக்கப்படுகின்றன என்ற உண்மையும் மிக முக்கியமானதாகும்.
இந்த நடவடிக்கைகள் கனடா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் மற்ற அனுசரணையான கூட்டாளிகளிடம் இருந்தும், அத்துடன் சீனாவிடம் இருந்தும் ஒருதொடர் பதிலடி நடவடிக்கைகளை தொடக்கி விடுவதற்கு அச்சுறுத்துகின்றன.
ட்ரம்ப் இந்த சுங்கவரி நடவடிக்கைகளில் உண்மையில் கையெழுத்திடுவதற்கு முன்பாக -இந்த வாரத்தின் பின்பகுதியில் நடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது- விதிவிலக்கு வழங்கக்கோரி அமெரிக்க கூட்டாளிகளிடம் இருந்து ஒரு நெருக்குதல் நடக்கிறது. ஆயினும் வர்த்தகம் மற்றும் உற்பத்திக் கொள்கை அலுவலகத்தின் தலைவரான பீட்டர் நவரோ, வார இறுதியில் கூறுகையில், குறிப்பிட்ட வர்த்தகங்களுக்கு விதிவிலக்குகள் இருக்கலாமே தவிர தனிப்பட்ட நாடுகளுக்கு இருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்ததன் மூலம், அது நிராகரிக்கப்பட்டு விட்டதாகவே தோன்றுகிறது.
இந்த சூழ்ச்சிகளின் உடனடி விளைவு என்னவாயிருப்பினும், இந்த முடிவு ஒரு வரலாற்றுத் திருப்புமுனையானதாகும். ஃபைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டதைப் போல, “புதிய வர்த்தக தடைகளுக்கான முகாந்திரமாக தேசியப் பாதுகாப்பை முன்நிறுத்தியதன் மூலமாக, திரு.டிரம்ப் சர்வதேச வர்த்தக முறையில் எல்லைக்கோட்டை தாண்டியிருக்கிறார்.”
இந்த வர்த்தகப் போர் நடவடிக்கையானது, ஆழமான பொருளாதார வேர்களைக் கொண்டிருந்ததும் முதலாளித்துவ அமைப்புமுறையின் உயிர்வாழ்வையே அச்சுறுத்தியதுமான இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியைக் குறித்து நின்ற அழிவுகரமான உலக மோதல்கள் மறுபடியும் நிகழாமல் தடுப்பதற்காக இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்காவால் ஸ்தாபிக்கப்பட்டிருந்த பொருளாதார உறவுகளின் ஒரு அமைப்புமுறையை இல்லாதொழிப்பதில் ஒரு பாரிய அடியெடுப்பாக இருக்கிறது.
முதலாம் உலகப் போரின் வெடிப்பு குறித்து எழுதிய லியோன் ட்ரொட்ஸ்கி, அதன் புறநிலை முக்கியத்துவம் உலகப் பொருளாதாரத்துக்கும் தேசிய அரசின் பொருளாதார கட்டமைப்புக்கும் இடையிலான சமரசப்படுத்தப்படுத்த முடியாத மோதலில் தங்கியிருந்தது என்பதை விளக்கினார். “ஆனால் ஏகாதிபத்தியத்தின் இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கங்கள் முன்வைக்கும் வழி மனிதகுலத்தின் உற்பத்தியாளர்கள் அனைவரது புத்திசாலித்தனமான, ஒழுங்கமைந்த ஒத்துழைப்பின் மூலமானது அல்ல, மாறாக உலகின் பொருளாதார அமைப்புமுறை வெற்றிபெற்ற நாட்டின் முதலாளித்துவ வர்க்கத்தின் மூலமாக சுரண்டப்படுவதன் மூலமானதாகும். அந்த நாடு இந்தப் போரின் மூலமாக ஒரு வல்லரசு நாடாக இருப்பதில் இருந்து உலக மேலாதிக்க சக்தியாக உருமாற்றப்படுவதாகிறது.”
ட்ரொட்ஸ்கி சுட்டிக்காட்டிய உலகப் பொருளாதாரத்துக்கும் முதலாளித்துவ சொத்துடைமை வேரூன்றியிருந்த போட்டி தேசிய-அரசுகளின் அமைப்புமுறைக்கும் இடையிலான முரண்பாடானது போரினால் வெற்றிகாணப்படவில்லை. மாறாக, அது தொடர்ந்து ஆழமடைந்து பெருமந்தநிலையில் ஒவ்வொரு நாடும் மற்ற அனைத்துக்கும் எதிரான பொருளாதாரப் போரில் ஈடுபடுவதற்கு இட்டுச் சென்றது, முதலாம் உலகப் போர் முடிவடைந்து இரண்டு தசாப்தங்கள் மட்டுமே முடிந்திருந்த நிலையில் இரண்டாம் உலகப் போர் வெடிப்பதில் இது உச்சமடைந்தது.
உலகம் போருக்குத் தயாரிப்பு செய்துவந்த நிலையில், சர்வதேச உறவுகளின் நிலையை திறனாய்வு செய்த, அமெரிக்க வெளியுறவுச் செயலர் கோர்டெல் ஹல்லும் மற்றும் ரூஸ்வெல் நிர்வாகத்தில் இருந்த மற்றவர்களும் சர்வதேச வர்த்தக முறையிலான ஒரு பொறிவும் அத்துடன் போட்டி அணிகளது உருவாக்கமும் தவிர்க்கவியலாத ஒரு புதிய மோதல்களுக்கு உந்துதலளித்த முக்கிய காரணியாக இருந்தது என்ற முடிவுக்கு வந்தனர். போருக்குப் பிந்தைய காலத்தில் மீண்டும் போர் வெடிக்காமல் தடுக்கப்பட வேண்டுமாயின், விரிவடைந்து சென்ற சந்தைகள் மற்றும் ஒரு ஸ்திரமான சர்வதேச நாணய அமைப்புமுறையின் அடிப்படையில் ஒரு புதிய பொருளாதார ஒழுங்கு ஸ்தாபிக்கப்பட வேண்டியிருந்தது.
இதுவே அமெரிக்காவின் முன்முயற்சியில் 1944 இல் பிரெட்டன் வூட்ஸில் ஸ்தாபிக்கப்பட்ட சர்வதேச நாணய அமைப்புமுறை மற்றும் 1947 இல் ஸ்தாபிக்கப்பட்ட வரிகள் மற்றும் வர்த்தகத்திலான பொது உடன்படிக்கை ஆகியவற்றின் மூலமாக இருந்தது.
புதிய அமைப்புமுறையானது 1930களுக்குத் திரும்புவதை தடுத்து பலரும் பயந்தவாறாக சோசலிசப் புரட்சியில் முடிவடையும் சாத்தியத்தை தவிர்க்க உதவிய அதேநேரத்தில், ட்ரொட்ஸ்கி மிகத் தெளிவாக அடையாளம் காட்டியிருந்த உலகப் பொருளாதாரத்தின் அடிப்படை முரண்பாடுகளை தீர்த்து விடவில்லை.
போருக்குப் பிந்தைய ஒழுங்கானது அடிப்படையாக அமெரிக்கா முன்கூட்டியே உலகின் மிகப்பெரும் பொருளாதார சக்தியாக மேலாதிக்கம் செலுத்துவதை அடிப்படையாகக் கொண்டிருந்தது. ஆயினும், அது உருவாக்கிய அதே போருக்குப் பிந்தைய பொருளாதார ஒழுங்கும், அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் இரண்டு பிரதான எதிரிகளான ஜேர்மனியும் ஜப்பானும் மீண்டும் உயிர்பெற்றதும், போருக்குப் பிந்தைய ஒழுங்கு அடித்தளமாய் கொண்டிருந்த அமெரிக்க மேலாதிக்கத்தை பலவீனப்படுத்தியது.
1960களின் முடிவில், அதாவது புதிய ஒழுங்கு ஸ்தாபிக்கப்பட்டு அதிகப்பட்சம் இரண்டு தசாப்தங்கள் கழித்து, இந்த முரண்பாடுகள் அமெரிக்காவின் வரவுசெலவுப் பற்றாக்குறை மற்றும் வர்த்தகப் பற்றாக்குறைகள் விரிந்து செல்வதில் தமது வெளிப்பாட்டைக் கண்டன. ஜனாதிபதி நிக்சன் ஆகஸ்டு 15, 1971 அன்று அமெரிக்க டாலருக்கான பின்புலமாக இருப்பதில் இருந்து தங்கத்தை -1944 இல் ஸ்தாபிக்கப்பட்ட பண மதிப்புமுறையின் அடிப்படை- அகற்றுவதற்கும் இறக்குமதிகள் மீது மிகப்பெருமளவிலான சுங்கவரிகளை விதிப்பதற்கும் இட்டுச் சென்றன.
அடுத்துவந்த காலகட்டமானது இரண்டு இடைத்தொடர்புடைய நிகழ்முறைகளால் குணாம்சம் காட்டப்பட்டு வந்திருக்கிறது: ஒன்று கிட்டத்தட்ட அத்தனை உற்பத்தி நிகழ்முறைகளுமே உலகமயமாவதன் ஊடாக உலகப் பொருளாதாரமானது மேலும் மேலும் ஒருங்கிணைந்தமை, மற்றும் அமெரிக்காவின் வரலாற்றுவழி போட்டிநாடுகள் மற்றும் புதிதாக எழுந்தவை -எல்லாவற்றுக்கும் முதலில் சீனா- ஆகியவை தொடர்பாக அமெரிக்காவின் தொடர்ச்சியான வீழ்ச்சி.
1914 இல் ட்ரொட்ஸ்கியால் அடையாளம் காணப்பட்ட சமயத்தில் இருந்ததை விடவும் மிகத் தீவிரமானதொரு அளவில் உலகப் பொருளாதாரத்திற்கும் தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான இந்த முரண்பாட்டின் மீளெழுச்சியில் இருந்துதான் ட்ரம்ப் நிர்வாகத்தின் செயல்பாடுகள் எழுகின்றன.
வர்த்தகப் போரின் ஆரம்ப இலக்குகளான உருக்கு மற்று அலுமினியம் கொண்ட உற்பத்திப் பொருட்கள் அவற்றின் உற்பத்தியின்போது பலமுறையும் எல்லைகடந்து பயணிக்கின்றதான நிலைமைகளின் கீழ் திணிக்கப்பட்டிருக்கும் இந்த சுங்கவரி விதிப்பு நடவடிக்கைகள், டொனால்ட் ட்ரம்ப்பின் மற்றும் வெள்ளை மாளிகையில் இருக்கக் கூடிய அவரது “முதலில் அமெரிக்கா” அணியினரது கிறுக்குத்தனத்தின் விளைபொருள் அல்ல.
மாறாக, அவை “மனிதகுலத்தின் உற்பத்தியாளர்கள் அனைவரது புத்திசாலித்தனமான, ஒழுங்கமைந்த ஒத்துழைப்பினை” அடிப்படையாகக் கொள்ளாமல் மாறாக சந்தைகளுக்கும் தனியார் இலாபங்களுக்குமான முடிவில்லாத போராட்டத்திற்கு முழுமையாக கீழ்ப்படிந்ததாய் இருக்கின்ற ஒரு பொருளாதார அமைப்புமுறையின் வரலாற்றுரீதியான பகுத்தறிவற்ற நிலையில் இருந்து பாய்கின்றன.
வர்த்தகப் போர் நடவடிக்கைகள் ட்ரம்ப்பில் இருந்து தொடங்கவில்லை. இரண்டாம் உலகப் போரின் முடிவில் அமெரிக்காவால் ஸ்தாபிக்கப்பட்ட அதே பொருளாதார ஒழுங்கு இப்போது அமெரிக்க முதலாளித்துவத்தின் நலன்களுக்கு எதிராக வேலை செய்து கொண்டிருந்தது என்ற முடிவுக்கு வந்த ஒபாமா நிர்வாகத்தினாலும் கணிசமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
ஒபாமாவின் கீழான இரண்டு முக்கியமான முன்முயற்சிகளான, ஆசியாவை மையமாகக் கொண்ட பசிபிக் கடந்த கூட்டு (சீனா இல்லாமல்) மற்றும் ஐரோப்பாவைக் குறிவைத்து அட்லாண்டிக் கடந்த வர்த்தக மற்றும் முதலீட்டுக் கூட்டு, அமெரிக்க மேலாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய அமைப்புமுறையை கொண்டுவருகின்ற நோக்கமுடையதாய் இருந்தன.
இரண்டுமே கிட்டத்தட்ட ஓரங்கட்டப்பட்டு விட்டன, ஆனால் அடிப்படையான இலட்சியம், ஒரு செழுமைக் காலகட்டத்தை விடவும் நெருக்கடியின் ஒரு காலகட்டத்தில் அமெரிக்க மேலாதிக்கமானது “மிக வெளிப்படையாகவும் மிக மூர்க்கமானதாகவும்” செயல்படும் என்று கிட்டத்தட்ட 90 ஆண்டுகளுக்கு முன்பான ட்ரொட்ஸ்கியின் அவதானிப்பை நினைவுக்குக் கொண்டுவரத்தக்க ஒரு வடிவத்தில், ட்ரம்ப்பின் கீழும் தொடர்கிறது, ஏனென்றால் அமெரிக்கா அதன் போட்டியாளர்களின் இழப்பில் தனது துன்பங்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயன்று கொண்டிருக்கிறது.
ட்ரம்ப்பின் நடவடிக்கைகள் அமெரிக்காவிற்குள்ளாக, குறிப்பாக உருக்கு மற்றும் அலுமினியத்தின் பயன்பாட்டாளர்களாக இந்த நடவடிக்கைகளின் மூலம் சந்தைகளுக்கான போராட்டத்தில் அவர்கள் அனுகூலமிழப்பார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகின்ற தொழிற்துறை குழுக்களிடம் இருந்து, எதிர்ப்பைக் கொண்டுவந்திருக்கிறது. அமெரிக்க சுங்கவரிகள் ஐரோப்பா, ஜப்பான் மற்றும் பிற அமெரிக்க “கூட்டாளிகளிடம்” இருந்து பதிலடியைக் கொண்டுவரும் என்பதான அச்சங்களும் வெளியிடப்பட்டு வருகின்றன.
“பெருமந்தநிலைக்குப் பின்னர் உலகம் கண்டிராத வகையான பரந்த ஒரு வர்த்தகப் போர் மாதிரியான ஒன்றிற்குள்” அமெரிக்காவை தள்ளுகின்ற இத்தகைய நடவடிக்கைகளின் வரிசையில் ட்ரம்ப்பின் நடவடிக்கைகள் முதலாவதாய் இருக்கக் கூடும் என்று நியூ யோர்க் டைம்ஸ் நேற்று ஒரு தலையங்கத்தில் எச்சரித்தது.
ஆயினும் டைம்ஸ் உள்ளபடியே வர்த்தகப் போரை எதிர்த்து விடவில்லை. குறிவைப்பு இன்னும் மேம்பட்டவகையில் இருந்திருக்க வேண்டும் என்பதையே அது விரும்புகிறது, ட்ரம்ப் “உண்மையிலேயே சீனா அதன் அதீத உற்பத்தியைக் குறைக்கும்படி செய்ய வேண்டும் என்று உண்மையாக விரும்பியிருந்தார் என்றால், பெய்ஜிங் மீது நெருக்குதலளிப்பதற்கு அவர் ஐரோப்பிய ஒன்றியம், கனடா, ஜப்பான், தென் கொரியா மற்றும் பிற நாடுகளுடன் சேர்ந்து வேலை செய்திருக்க வேண்டும்.”
வேறுவார்த்தைகளில் சொல்வதானால், தப்புத்தப்பான நடவடிக்கைகளைப் பயன்படுத்துவதை விட, பொருளாதாரரீதியாக ஒரு தொலைதூர ஏவுகணைக்கு சமானமான நடவடிக்கைகளை ட்ரம்ப் நிலைநிறுத்தியிருக்க வேண்டும்.
ஆயினும் ட்ரம்ப்பின் நடவடிக்கைகளுக்கு ஆளும் வர்க்கத்திற்குள்ளாக இருக்கக்கூடிய இத்தகைய எதிர்ப்பு, ஏதோவொருவகையில் காரண அறிவும் பகுத்தறிவும் வெற்றிபெற்று விடும் என்பதான பொய்யான நம்பிக்கைகளுக்கு வழிவகுத்து விடக் கூடாது. 1930 ஜூன் ஸ்மூத்-ஹாவ்லி சுங்கவரி விதிப்பு நடவடிக்கைகளும் கூட அச்சமயத்தில் கண்டனம் செய்யப்பட்டவையே என்பதை ஞாபகத்தில் கொள்ள வேண்டும். ஆயினும் அதனால், அவை நிறைவேற்றப்படுவதையும், இரண்டாம் உலகப் போரின் வெடிப்புக்கான நிலைமைகளை உருவாக்குவதில் தீவிரமானதொரு பாத்திரம் வகித்த ஒரு முழு-வீச்சிலான வர்த்தகப் போரைத் தூண்டுவதையும் தடுத்து விட முடியவில்லை.
ட்ரம்ப் நிர்வாகமும் அதுபோன்று, அதனையொத்த ஒரு உலகளாவிய மோதலுக்கு தொடக்கமளித்துக் கொண்டிருக்கிறது என்பதான எச்சரிக்கைகளைக் கொண்டு தயங்கப் போவது கிடையாது. வர்த்தகப் போர் சில காலமாகவே நடந்து வருகிறது, இப்போது அமெரிக்கா அதன் கோட்டைமதிலின் உயரத்தை அதிகப்படுத்த மட்டுமே செய்கிறது என்பதே நிர்வாகத்தின் நிலைப்பாடாக இருக்கிறது.
இப்போதைய மோதலின் உடனடி விளைவு என்னவாக இருந்தாலும், அதன் கீழமைந்திருக்கும் முனைப்பு தொடரவே போகிறது, ஏனென்றால் ட்ரம்ப்பின் நடவடிக்கைகள் வெள்ளை மாளிகையில் இப்போது இருப்பவர்களின் மனோநிலையில் வேரூன்றியவை அல்ல, மாறாக முதலாளித்துவ உற்பத்தி முறையின் தீர்க்கவியலாத, புறநிலை முரண்பாடுகளில் வேரூன்றியவையாகும்.
முதலாம் உலகப் போர் வெடித்தபோது ட்ரொட்ஸ்கி விளக்கியவாறாக, உலக சோசலிசப் புரட்சிக்கான போராட்டமானது “நாளின் நடைமுறை வேலைத்திட்டமாக” முன்னெடுக்கப்பட்டாக வேண்டும் என்பதே இதன் பொருளாகும். இதுவே சர்வதேச முதலாளித்துவத்தின் போர் மற்றும் சர்வாதிகாரத்தின் வேலைத்திட்டத்திற்கு சர்வதேச தொழிலாள வர்க்கம் முன்வைக்கக்கூடிய பதிலாகும்.