Print Version|Feedback
London, NATO step up war threats against Russia over Skripal poisoning
ஸ்கிரிபால் நஞ்சூட்டல் தொடர்பாக ரஷ்யாவுக்கு எதிராக லண்டனும், நேட்டோவும் போர் அச்சுறுத்தல்களை முடுக்கிவிடுகின்றன
By Alex Lantier
19 March 2018
பிரிட்டிஷ் உளவாளி சேர்ஜி ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யூலியாவுக்கு மாஸ்கோ தான் நஞ்சூட்டியது என ஐக்கிய இராஜ்ஜியம் அதன் மீதான குற்றச்சாட்டுக்களை தீவிரமாக அதிகரித்த நிலையில், கடந்த வார இறுதியில், ஐரோப்பாவில் போர் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்தன. ஐக்கிய இராஜ்ஜிய மற்றும் நேட்டோ அதிகாரிகள் அவர்களது குற்றச்சாட்டுக்களுக்கு நிரூபிக்க உறுதியான துளியளவு ஆதாரத்தைக் கூட வழங்காமல், ஒரு பெரும் அணுவாயுத சக்தியான ரஷ்யாவின் மீது ஒரு தொகை அரசியல் மற்றும் இராணுவ அச்சுறுத்தல்களை முன்வைத்தன.
சனியன்று, பிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரசா மே, “ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் ரஷ்ய கூட்டமைப்பு ஆகியவற்றிற்கு இடையிலான அனைத்து திட்டமிடப்பட்ட உயர்மட்ட தொடர்புகளையும் பிரிட்டன் இடைநிறுத்தம் செய்ததற்கு” மாஸ்கோவின் பதிலிறுப்பு என்னவாகயிருந்தது என குறிப்பிட்டார்.
பிரிட்டனில் இருந்து 23 ரஷ்ய தூதர்களை பிரிட்டன் வெளியேற்றியதற்கும், மேலும் ரஷ்ய ஊடகத்தை வெளியேற்றவும் மற்றும் ரஷ்ய சொத்துக்களை முடக்கவும் அது விடுத்த அச்சுறுத்தல்களுக்கும் மாஸ்கோ தனது பிரதிபலிப்பை காட்டியது. அதாவது, 23 பிரிட்டிஷ் தூதர்களை ரஷ்யா வெளியேற்றியதோடு, அங்கு உள்ள பிரிட்டிஷ் கலாச்சார நிறுவனங்களின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்கவும் அச்சுறுத்தியது. லண்டனில் உள்ள ரஷ்ய தூதரகம், பிரிட்டிஷ் கொள்கை “முற்றிலும் ஏற்கமுடியாதது, நியாயமற்றது மற்றும் குறும்பார்வை கொண்டது. … ரஷ்ய-ஐக்கிய இராஜ்ஜிய உறவின் சீரழிவுக்கான அனைத்து பொறுப்பும் , பிரிட்டனின் தற்போதைய அரசியல் தலைமையையே சார்ந்ததாகும்” என ஒரு அறிக்கையை வெளியிட்டது.
இருப்பினும், மே, மாஸ்கோவின் கவலைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, ஸ்கிரிபால் விவகாரத்தில் “ரஷ்ய அரசு தான் குற்றவாளி என்பதை தவிர அங்கு வேறு மாற்று முடிவுக்கு வழியில்லை. சர்வதேச சட்டம் மற்றும் இராசயன ஆயுதங்கள் உடன்படிக்கை ஆகியவற்றை அப்பட்டமாக மீறுவதாகவே ரஷ்யாவின் செயல்பாடு உள்ளது” என்றும் கூறினார்.
இது ஒரு மோசடியாகும்: மாஸ்கோவுக்கு எதிராக ஒரு பொறுப்பற்ற, ஆக்கிரோஷமான குற்றச்சாட்டை சுமத்துவதில் பிரிட்டனும் நேட்டோவும் முன்னணி வகிக்கின்றன. பிரிட்டன் தனது குற்றச்சாட்டுக்களுக்கு ஆதரவாக எந்தவித ஆதாரங்களையும் வழங்க மறுத்துள்ளது. குறிப்பிட்டு சொல்வதானால், ஸ்கிரிபாலுக்கு நஞ்சூட்டப்பட்டதாக கூறப்பட்டு இரண்டு வாரங்களுக்கு பின்னரும், அவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட நஞ்சின் மாதிரியை, இரசாயன ஆயுதங்கள் உடன்படிக்கைக்கு (Chemical Weapons Convention-CWC) தேவைப்படுகின்றபடி ரஷ்யாவுக்கும், அல்லது இரசாயன ஆயுதங்களைத் தடுப்பதற்கான (OPWC) ஐ.நா. அமைப்பிற்கும் ஐக்கிய இராஜ்ஜிய அதிகாரிகள் இதுவரை வழங்கவில்லை.
இருப்பினும், ஐக்கிய இராஜ்ஜிய வெளியுறவு செயலர் பொறிஸ் ஜோன்சன் நேற்று, ஸ்கிரிபாலுக்கு நஞ்சூட்டப்பட்ட சம்பவம் குறித்த இந்த வழக்கின் போக்கு “தவிர்க்கவியலாமல் கிரெம்ளினுக்கு தான் இட்டுச்செல்கிறது” என்று மீண்டும் குற்றம்சாட்டினார். ஸ்கிரிபால் மீது இலக்குவைத்து தாக்குவதற்கு மாஸ்கோ பயன்படுத்தியதாக லண்டன் கூறிய “நோவிசோக்” நரம்பு வாயுக்களின் பெரும் கையிருப்புக்களை ரஷ்யா வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார். ஜோன்சன் BBC யிடம், “கடந்த 10 ஆண்டுகளில், படுகொலைக்கான நோக்கத்திற்காக நரம்பு வாயுக்களை விநியோகிக்கப்படுவதை மட்டும் ரஷ்யா ஆய்வு செய்யவில்லை, மாறாக அது நோவிசோக்கை உருவாக்கியும் சேகரித்தும் வைத்தும் வருகின்றது என்பதற்கு நாங்கள் உண்மையிலேயே ஆதாரங்களை வைத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
இருப்பினும், அந்த ஆதாரங்கள் என்ன என்பது பற்றி ஜோன்சன் தெளிவுபடுத்தவில்லை. அதேபோல, ஸ்கிரிபாலுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் “நோவிசோக்” இன் மாதிரிகளை லண்டன் வழங்க தவறியது குறித்தும் எந்தவொரு விளக்கத்தையும் அவர் அளிக்கவில்லை. எதிர்காலத்தில் ரஷ்ய மற்றும் OPWC அதிகாரிகளுக்கு லண்டன் மாதிரிகளை வழங்கும் என்றும், மேலும் நஞ்சூட்டல் விவகாரத்தை விசாரணை செய்ய OPWC அதிகாரிகள் இன்று வருவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
ரஷ்யாவிற்கு எதிரான பிரிட்டிஷ் மற்றும் நேட்டோவின் தொடர்ச்சியான நடவடிக்கைகளுக்கான ஒரு அட்டவணையை ஜோன்சன் தயார் செய்தார். பிரிட்டன் “அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கைகளை” எடுக்கும் என்பதை தீர்மானிக்க ஐக்கிய இராஜ்ஜிய தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் இந்த வாரம் சந்திப்பார்கள் என்றவர் கூறியதோடு, இந்த விவகாரத்தை ஒரு இராணுவ ரீதியான விடயமாகவே பிரிட்டன் கருதுகிறது என்பதை மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார். ஸ்கிரிபால் விவகாரம் குறித்து ரஷ்யாவை கண்டிக்கும் ஐரோப்பிய ஒன்றிய வரைவு அறிக்கை ஒன்றுக்கு ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள் இன்றைய கூட்டத்தில் ஆதரவளிப்பார்கள் என்றும் அவர் முன்கூட்டியே கூறினார்.
பிரிட்டனின் பிரதான உளவுத்துறை முகமைகளில் ஒன்றான பொது தகவல்தொடர்பு தலைமையகம் (General Communications Headquarters-GCHQ), ரஷ்யா உடனான இணைய போருக்கு தயாரிப்பு செய்து வருவதாக அறிவித்தது, மேலும் ஐக்கிய இராஜ்ஜிய உள்கட்டமைப்பை கணினி வைரஸ்கள் மற்றும் தீயமென்பொருள்கள் கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதாகவும் கூறியது. GCHQ இன் தேசிய இணைய பாதுகாப்பு மையம் வங்கிகள், ஆற்றல் நிறுவனங்கள் மற்றும் பயன்பாடுகள் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுவதாகவும், இணைய தாக்குதல்களுக்குள்ளாகும் “மிகப் பெரிய தொகுதிகளை” கண்காணித்து வருவதாகவும் GCHQ இன் முன்னாள் இயக்குநர் ரோபர்ட் ஹன்னிகன் Observer பத்திரிகைக்கு தெரிவித்தார்.
மேலும் ஜேர்மனியின் Die Welt am Sonntag செய்தித்தாளில், நேட்டோ பொதுச் செயலர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க், ரஷ்யாவிற்கு எதிராக நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு ஜேர்மனியில் பதவிக்குவரவிருக்கும் பழமைவாத/சமூக-ஜனநாயக பெரும் கூட்டணி அரசாங்கம் தயாராக வேண்டுமென கோரிக்கை விடுத்தார். ரஷ்யா தற்போது “மிகவும் ஆக்கிரோஷமாக” இருக்கிறது என்பதையே ஸ்கிரிபால் விவகாரம் காட்டுகிறது என்பதை வலியுறுத்தி, ஸ்டோல்டென்பெர்க் Die Welt இடம் பின்வருமாறு தெரிவித்தார்: “சான்சலர் மேர்க்கெலும் அவரது சக அமைச்சர்களும் ப்ரூசெல்ஸ்ஸில் ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் நேட்டோ உச்சி மாநாட்டில் புதிய முடிவுகளை எதிர்கொள்வார்கள் என்றே நான் நினைக்கிறேன். ஆகவே, இது தொடர்பாக நாம் எச்சரிக்கையாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும்.
ஸ்டோல்டென்பெர்க் மேலும், “ரஷ்ய அரசாங்கம் வழமையான தாக்குதல்களில் இருந்து அணுவாயுத தாக்குதல்களின் திசைக்கு படிப்படியாக நகரும் அபாயத்தை” இது அதிகரிப்பதாக கொழுந்துவிட்டு எரியச் செய்யும் வகையிலான கூற்றையும் வெளிப்படுத்தினார்.
ரஷ்யாவை இலக்குவைக்கும் மிக ஆக்கிரோஷமான நேட்டோ அணுவாயுத நிலைப்பாட்டை அடிப்படையாக வைத்து ஸ்டோல்டென்பெர்க் ஆத்திரமூட்டும் வகையில் வாதிட்டார். ரஷ்யாவை குறிப்பிடுகையில், சீனாவும் வட கொரியாவும் “குறிப்பிடத்தக்க அளவு அணு ஆயுதங்களை” கொண்டிருக்கின்றன என்றும் “உலகில் அணு ஆயுதங்கள் இருக்கும் வரை, அணு ஆயுதங்கள் உடனான ஒரு கூட்டணியாக நேட்டோ தொடர்ந்து இருக்க வேண்டும்” என்றும் தெரிவித்தார். ஐரோப்பாவில் தனது B-61 ரக அணு குண்டுகளின் படைக்கலத்தை நவீனப்படுத்துவது தொடர்பான வாஷிங்டனின் திட்டங்களை அவர் ஆதரித்து, “இந்த ஆயுதங்கள் பாதுகாப்பானதாக உள்ளனவா அல்லது பயனுள்ளவையா என்பதை உறுதிப்படுத்துவது அவசியமானது” என்றும் கூறுகிறார்.
ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் சக்தி வாய்ந்த பிரிவுகள், ஒரு பெரும் போர் உந்துதலை தொடக்கிவைக்க சாலிஸ்பரி நகரின் மர்மமான சம்பவங்களை பற்றிக் கொள்வதை இந்த குறிப்புகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. ரஷ்யாவிற்கு எதிராக எந்தவொரு தீவிரமான ஆதாரத்தையும் வழங்க தவறிய நேட்டோ மற்றும் லண்டனின் பதில், ஸ்கிரிபால் தாக்குதல் குறித்த தீவிரமான விசாரணை என்பது அவர்களது முன்னுரிமை பட்டியல்களில் மிக மிக குறைந்த முக்கியத்துவத்தைக் கொண்டிருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
போர்வெறிக்கூச்சல் நிரம்பிய காலநிலையை கிளறிவிடுவதற்கும், அரசியல் சூழ்நிலையை வலதிற்கு மாற்றவும் அவர்கள் முக்கிய நோக்கம் கொண்டிருக்கும் அதேவேளையில், ஐரோப்பாவில் அமெரிக்கா அணு குண்டுகளை நிலைநிறுத்தி வைப்பது போன்ற வெடிப்புறும் பிரச்சினைகளை அல்லது ரஷ்யா, சீனா மற்றும் வட கொரியா உடனான, அல்லது சிரியா போன்ற ரஷ்ய ஆதரவிலான மத்திய கிழக்கு நாடுகளில் நிகழும் அமெரிக்க தலைமையிலான மோதல்களை மிக மூர்க்கமான அடித்தளத்தில் தீர்க்க முனைகின்றனர்.
பிரிட்டனிலும், அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தின் பெரும்பகுதியிலும் அதிகரித்து வரும் ரஷ்ய எதிர்ப்பு பிரச்சாரத்தின் பின்னால் அணிவகுத்து நிற்கின்ற ஐரோப்பிய ஒன்றிய (European Union -EU) நாடுகளை முடுக்கிவிடுவதன் மூலமாக நேட்டோவின் ஐக்கியத்தை பராமரிப்பது என்பதும் லண்டன் மற்றும் வாஷிங்டனில் உள்ள மற்றொரு பிரதான அக்கறையாக உள்ளது.
கடந்த மாதம், மூனீச் பாதுகாப்பு மாநாட்டில், ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு அதிகாரிகள், வாஷிங்டனில் இருந்து ஒரு சுயாதீனமான இராணுவ தயாரிப்பை அபிவிருத்தி செய்வதற்கு நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களை செலவழித்து ஒரு பெரும் இராணுவ கட்டமைப்பை உருவாக்கப் போவதாக அவர்கள் அறிவித்தனர். பாரிஸ் உள்ளிட்ட பல ஐரோப்பிய ஒன்றிய சக்திகள், ரஷ்யாவுடன் பொருளாதார உறவுகளை அபிவிருத்தி செய்வதற்கும், அமெரிக்க பொருளாதாரக் கட்டுப்பாட்டிற்குள் ரஷ்யா மீது சுமத்தப்பட்ட பொருளாதாரத் தடைகளை மறுஅளவீடு செய்வதற்கும் அவர்கள் நோக்கம் கொண்டிருப்பது குறித்து சமிக்ஞை செய்தனர். மாஸ்கோவிற்கு நெருக்கமாக செல்வதற்கான பேர்லின்-பாரிஸ் அச்சின் முயற்சிகள் அனைத்தையும் குறைக்கும் ஒரு முயற்சியாகவே ஸ்கிரிபால் விவகாரம் குறித்த நேட்டோ - ஐக்கிய இராஜ்ஜிய கையாளுகையின் முக்கியம்சம் உள்ளது.
லண்டன் மற்றும் வாஷிங்டன் உடன் பேர்லினும் பாரிசும் இணைந்து வியாழனன்று தாக்குதல்களுக்காக மாஸ்கோவை குற்றம்சாட்டும் ஒரு அறிவிப்பில் கையெழுத்திட்டமை, ரஷ்யாவிற்கு எதிரான ஏகாதிபத்திய பிரச்சாரத்தில் அவர்களது உடந்தையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. இருப்பினும், பிரிட்டிஷ் மற்றும் நேட்டோ அதிகாரிகள், ரஷ்யாவிற்கு எதிராக இன்னும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஐரோப்பிய அதிகாரிகளை வலியுறுத்தி, ஒரு பெரும் இராஜதந்திர பிரச்சாரத்தில் இதுவரை ஈடுபட்டுள்ளனர்.
தாக்குதல் நடந்தவுடன், Financial Times பத்திரிகை, “இமானுவல் மக்ரோனின் பிரெஞ்சு நிர்வாகமும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட இராஜதந்திரி ஃபெடெரிகா மொகெரினியும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர், ஆனால் ரஷ்யா பற்றிய (ஐக்கிய இராஜ்ஜியத்தின்) கவலைகளை எதிரொலிக்கவில்லை” என்று பிரிட்டிஷ் அதிகாரிகள் கவலை அடைந்ததாகக் குறிப்பிட்டது.
இன்றைய ஐரோப்பிய ஒன்றிய கூட்டத்திற்கு முன்னதாக, பிரிட்டிஷின் Guardian பத்திரிகை நேற்று, “பிரெஞ்சில் இருந்தும் மற்றும் பால்க்கன் உட்பட வடக்கு ஐரோப்பாவில் உள்ள கூட்டணிகளின் ஐக்கிய இராஜ்ஜியத்தின் பாரம்பரிய குழுமத்தில் இருந்தும் ஆரம்பகட்ட ஐரோப்பிய ஒன்றிய வரைவை உறுதிப்படுத்துக்கொள்ள கடந்த சில நாட்களில் பிரிட்டிஷ் அதிகாரிகள் வலுவான ஆதரவைப் பெற்றுள்ளனர்” என்று எழுதியது. தாக்குதலை எதிர்ப்பதில் ஐரோப்பிய ஒன்றிய அரசியல்வாதிகள் ஒன்றுப்பட்டுள்ளனர், ஆனால், ஜேர்மனியில் AfD மற்றும் இத்தாலியில் La Lega போன்ற சில வலது-சாரி ஜனரஞ்சகவாதிகள், (ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்) புட்டின் மீது குற்றம்சாட்டுவதை ஒரேயடியாக மறுத்தனர்.”
ஸ்கிரிபால் வழக்கில் மாஸ்கோவிற்கு எதிரான லண்டன் குற்றச்சாட்டுக்களின் ஆதாரமற்ற, ஜோடிக்கப்பட்ட குணாம்சம், அதேபோல் ரஷ்ய எதிர்ப்பு பிரச்சாரத்தின் அடிப்படையிலான ஆழ்ந்த உள்நாட்டு-ஏகாதிபத்திய பதட்டங்கள் ஆகிய இரண்டும், Die Welt பத்திரிகையில் கடந்த வாரம் சிக்மார் காப்ரியேலின் அசாதாரண கருத்துக்களில் வெளிப்பட்டன. புதிய பெரும் கூட்டணி அரசாங்கம் ஒன்றுகூடிய போது வெளியுறவு அமைச்சர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டவுடன், ஸ்கிரிபால் வழக்கு குறித்த லண்டனின் கையாளுகைக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவிக்கத் தொடங்கினார்.
“முரண்பாடு நிரூபிக்கப்படும் வரை எவரும் குற்றமற்றவரே,” என்று காப்ரியேல் தெரிவித்தார். ரஷ்யாவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை “இழிவான குற்றச்சாட்டுக்கள்” மற்றும் “சதி கோட்பாடுகள்” என்றார். ஒரு சில நாட்களுக்கு முன்பு வரை ஜேர்மன் இராஜதந்திரத்திற்கு தலைமைவகித்த ஒரு மனிதர், ஸ்கிரிபால் வழக்கு குறித்து ஐரோப்பாவில் நிலவும் சூழ்நிலை, “உண்மையாக ஒரு மோசமான ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தை தான் உங்களுக்கு நினைபடுத்துகின்றது” என்று தெரிவித்தார்.