Print Version|Feedback
European Union joins UK in ratcheting up anti-Russia campaign
ரஷ்ய-விரோத பிரச்சாரத்தை முடுக்கி விடுவதில் ஐரோப்பிய ஒன்றியம் பிரிட்டனுடன் இணைகிறது
By Chris Marsden
20 March 2018
மார்ச் 4 அன்று சாலிஸ்பரில் இரட்டை உளவாளியான சேர்ஜி ஸ்கிர்பாலுக்கும் அவர் மகள் யூலியாவுக்கும் "ஈவிரக்கமின்றி சட்டவிரோதமாக" நஞ்சூட்டியதைக் கண்டிப்பதில் பிரிட்டனுடன் "அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்படாத கூட்ரொருமைப்பாட்டிற்கு", ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 வெளியுறவு அமைச்சர்களின் நேற்றைய கூட்டம் உறுதியளித்தது.
சாலிஸ்பரி தாக்குதலுக்கு கிரெம்ளினும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுமே "பெரிதும், அனேகமாக" பொறுப்பானவர்களென பிரிட்டன் அறிவித்துள்ளது. ஸ்கிரிபாலும் மகளும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் "அபிவிருத்தி செய்யப்பட்ட" “நோவிசோக்" எனும் நரம்புகளைத் தாக்கும் விஷ மருந்துக்கு இலக்காக்கப்பட்டிருந்ததாக, அவர்களைக் குறித்த ஒட்டுமொத்த விடயமும் நிரூபிக்கப்படாத வலியுறுத்தலின் மீது தொங்கி கொண்டிருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் அந்த 28 வெளியுறவு அமைச்சர்கள் வெளியிட்ட ஓர் அறிக்கை, பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகம் அறிமுகப்படுத்திய, அதே கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தை வரிகளைப் பயன்படுத்தியதுடன், ஒட்டுமொத்த ஊடகங்களும் அரசியல் ஸ்தாபகமும் அதையே சலிப்பூட்டும் அளவுக்கு மீண்டும் மீண்டும் விளம்பரப்படுத்தின. “ரஷ்யா அபிவிருத்திசெய்த ஒரு வகையான" நரம்புகளைத் தாக்கும் விஷ மருந்தைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதில் "பெரிதும், அனேகமாக" ரஷ்யா தான் குற்றவாளி என்ற "ஐக்கிய இராஜ்ஜிய அரசின் மதிப்பீட்டையே" அவர்கள் "மிகுந்த கவனத்தோடு" ஏற்றுக் கொண்டார்கள்.
அதுபோன்றவொரு திட்டத்தின் இருப்பையே கூட ரஷ்யா மறுக்கின்ற நிலையில், அத்திட்டம் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஒப்புக் கொண்டார்கள். கிரெம்ளின் "அதன் நோவிசோக் திட்டத்தை உடனடியாக, முழுமையாக மற்றும் முற்றிலுமாக" இரசாயன ஆயுத தடுப்பு அமைப்புக்கு (OPCW) “வழங்க வேண்டுமென" அவர்கள் வலியுறுத்தினார்கள்.
ஆனால், இங்கிலாந்தின் நிலைப்பாட்டை ஆதரிக்கின்ற அதேவேளையில், அந்த அறிக்கை ரஷ்யாவை ஒருவிதமாக நேரடியாக குற்றம்சாட்டுவதை நிறுத்தி இருந்தது, இது ரஷ்யா உடனான உறவுகள் மீது ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நிலவும் பிளவுகளைப் பிரதிபலிக்கிறது.
ஐரோப்பிய ஒன்றிய கூட்டத்திற்கு முன்னதாக, வலதுசாரி ஆஸ்திரிய மக்கள் கட்சி/சுதந்திர கட்சி கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆஸ்திரிய வெளியுறவுத்துறை அமைச்சர் Karin Kneissl கூறுகையில், ஒரு விசாரணை முற்றுப்பெறாத நிலையில் மாஸ்கோவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் காலத்திற்கு முந்தியவை என்றார். “எங்களின் பார்வையில், எந்தவொரு குற்றச்சாட்டுக்களுக்கோ, சிந்தனைகளுக்கோ மற்றும் கருத்துரைகளுக்கோ குரல் கொடுப்பதற்கு முன்னதாக அச்சம்பவங்களின் முழுமையான விபரத்தை ஸ்தாபிக்க நிபுணத்துவம் மிக்க விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமாகும்,” என்று Kneissl தெரிவித்தார்.
ஸ்கிரிபால் நஞ்சூட்டலில் ஐக்கிய இராஜ்ஜிய பிரதம மந்திரி தெரேசா மே ரஷ்யாவை "குற்றவாளியாக" அடையாளம் கண்டதை முழுமையாக ஆதரிப்பதற்கு, பதினொரு நாட்களும் பலத்த அழுத்தமும் இத்தாலிய பிரதம மந்திரி பாவுலோ ஜென்ரிலோனிக்கு தேவைப்பட்டது. அனைத்திற்கும் மேலாக, அந்த ஜனநாயகக் கட்சி அரசாங்கம், 5 நட்சத்திர இயக்கம் மற்றும் முன்னர் வடக்கு கழகம் (Northern League) என்றிருந்த லிகா (Liga) ஆகியவற்றை உள்ளடக்கி இருக்கக்கூடிய ஒரு கூட்டணிக்கு வழிவிட பார்த்து வருகிறது—அவ்விரு கட்சிகளும் புட்டின் நிர்வாகத்தை நோக்கி நேசமாக உள்ளன.
ஐக்கிய இராஜ்ஜியத்துக்கு பெரிதும் வார்த்தையளவில் ஆதரவாளர்களாக இருப்பவர்களும் கூட, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ், அவற்றின் ரஷ்ய-விரோத தாக்குதலை இங்கிலாந்து விரும்பும் அந்தளவுக்குச் செல்ல விரும்பவில்லை.
ஸ்கிரிபால் விவகாரமானது, ஐக்கிய இராஜ்ஜியத்தினாலும் மற்றும் அமெரிக்க அரசியல் மற்றும் இராணுவ ஸ்தாபகத்தினுள் பலமாக குரல் கொடுக்கக் கூடியவர்களாலும், ரஷ்யாவிடமிருந்து அவ்விரு பிரதான ஐரோப்பிய நாடுகளையும் தூர விலக்க அழுத்தமளிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறிருந்தாலும் கூட, இப்போதுதான் புட்டின் மற்றொரு ஆறு ஆண்டு கால பதவிகாலத்தை வென்றுள்ளார் என்கின்ற நிலையில், மாஸ்கோ உடன் உறவுகளை உடைத்துக் கொள்வது, பிரதான அரசியல் மற்றும் வர்த்தக நலன்களை குறுக்கே வெட்டுவதாக இருக்கும்.
ஐரோப்பிய ஒன்றிய கூட்டத்தில், போலாந்து துணை வெளியுறவுத்துறை அமைச்சர் Konrad Szymanski, ரஷ்ய எரிவாயுவை ஜேர்மனிக்கும் ஐரோப்பாவுக்கும் கொண்டு செல்லும் Nord Stream 2 குழாய்வழி தடம் கட்டமைக்கப்பட்டு வருவதைக் கைவிடுமாறு ஜேர்மனிக்கு அழைப்புவிடுத்தார். ஜேர்மனியோ அந்த 11 பில்லியன் டாலர் தனியார் திட்டத்தை இரத்து செய்வது குறித்து கலந்துரையாடவே மறுத்துவிட்டது.
ரஷ்யாவுக்கு எவ்வாறு விடையிறுப்பது என்பது மீதிருக்கும் பிளவுகள், ஜேர்மனியின் எண்ணற்ற முரண்பாடான அறிக்கைகளில் வெளிப்படையாக உள்ளன.
சமூக ஜனநாயகக் கட்சியின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஹைக்கோ மாஸ், “ரஷ்ய தரப்பில் கூட்டுப்-பொறுப்பு உள்ளது என்பதை காட்டிலும் வேறெந்த நம்பத்தகுந்த விளக்கமும் தேவையில்லை,” என்று குறிப்பிட்டு, இங்கிலாந்திற்கான ஆதரவை வலியுறுத்தினார். ஆனால் மாஸ் யாரை பதிலீடு செய்தாரோ, SPD இன் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சிக்மார் காப்ரியேல், ரஷ்யாவுக்கு எதிரான தடையாணைகளை நீக்குவதை நேற்று ஆதரித்ததுடன், உக்ரேனுக்குள் ஐ.நா. சமாதான காப்பாளர்களை அனுமதிக்க புட்டின் முன்மொழிந்ததைக் கையிலெடுத்தார். ஸ்கிரிபால் நஞ்சூட்டல் குறித்து கடந்த வாரம் அவர் கூறுகையில், “அந்த எதிர்தரப்பு விவகாரம் நிரூபிக்கப்படாத வரையில் எவரொருவரும் குற்றமற்றவர் தான்,” என்று அறிவித்து, ரஷ்யாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் "மோசடியான குற்றச்சாட்டுக்கள்" மற்றும் "சூழ்ச்சி தத்துவங்கள்" என்றார்.
மாஸ், அவரோ இப்போதும் ரஷ்யாவை ஒரு "சிக்கலான பங்காளியாக” வர்ணித்தார்.
புட்டின் தேர்வான பின்னர், சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் அவரை பாராட்டிய அதேவேளையில், சர்வதேச சவால்களுக்கான "நிலையான தீர்வுகளுக்கு" மேலோட்டமாக அழைப்புவிடுத்தார்.
இதற்கு முரண்பட்ட விதத்தில், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனோ, சாலிஸ்பரியில் "ஏற்றுக் கொள்ளவியலாத தாக்குதலுக்கான பொறுப்புகள் குறித்து தெளிவுபடுத்துமாறு" புட்டினுக்கு அழைப்பு விடுத்ததுடன், OPCW க்கு "அறிவிக்கப்படாத எந்தவொரு திட்டங்கள் மீதும் உறுதியாக மீள்கட்டுப்பாடு கொண்டிருக்குமாறு" மாஸ்கோவை வலியுறுத்தினார்.
எவ்வாறிருந்த போதினும் மே மாதம் மக்ரோன் ஒரு மிகப்பெரிய வணிக பிரதிநிதிகள் குழுவுடன் மாஸ்கோ சென்று, புட்டினுடன் சந்திப்புகளை நடத்த உள்ளார்.
ஐரோப்பிய நாடுகளுக்கு இடையியேயும் அத்தோடு ஐரோப்பிய நாடுகளுக்கு உள்ளேயே நிலவும், இந்த கருத்து முரண்பாடுகளுக்கு இடையே, சம்பவங்களின் பொதுவான போக்கோ, முன்னரிலும் அதிகமாக போர்வெறி கொண்ட ரஷ்ய-விரோத நிலைப்பாடாக உள்ளது.
ஞாயிறன்று நடந்த தேர்தல்களுக்குப் பின்னர் பதவிக்கு வந்துள்ள புட்டின் செய்தியாளர்களிடம் கூறுகையில், நோவிசோக் போன்ற ஆயுதம் "எதுவும்" ரஷ்யாவிடம் "இல்லை" என்றார். “ரஷ்யாவில் உள்ள யாரேனும் ஒருவர், தேர்தல்களுக்கு மற்றும் உலக கோப்பைக்கு முன்னதாக இதுபோன்றவொரு விடயங்களைச் செய்ய அனுமதித்திருப்பர் என்பது முற்றிலும் பிதற்றல், அர்த்தமற்றவை, முட்டாள்தனமானவை” எனக் கூறிய அவர், “சர்வதேச கண்காணிப்பாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் நாங்கள் எங்களது அனைத்து இரசாயன தளவாடங்களையும் அழித்துவிட்டோம்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.
பயன்படுத்திய விஷ மருந்து "இராணுவ தரத்திலான" தாக இருந்தால், “அவர்கள் உடனடியாக இறந்திருப்பார்கள்… நாங்கள் ஒத்துழைக்க தயாராக உள்ளோம், இதை உடனடியாகவே தெரிவித்தோம்… ஆனால் மறுதரப்பின் விருப்பமும் அதற்கு அவசியப்படுகிறது. இதுவரையில், நாங்கள் எதையும் காணவில்லை,” என்றார்.
ஐரோப்பிய ஒன்றிய கூட்டத்தின் வேளையில் வந்திருந்த ஜனாதிபதி செய்தி தொடர்பாளர் Dmitry Peskov இன் ஓர் அறிக்கை, “விரைவிலோ அல்லது தாமதமாகவோ இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள், ஒன்று உரிய ஆதாரங்களுடனோ அல்லது மன்னிப்பு கோரியோ, பதிலளிக்கப்பட வேண்டும்,” என தெரிவித்தது.
தனது வாய்வீச்சை முடுக்கி விடுவதும், தனது முந்தைய வாதங்களை அலங்கரிப்பதுமே, ஐக்கிய இராஜ்ஜிய அரசாங்கத்தின் சார்பாக, ஜோன்சனின் விடையிறுப்பாக உள்ளது.
ஜோன்சன் ஞாயிறன்று பிபிசி இன் ஆண்ட்ரூ மார் நிகழ்ச்சியில் (Andrew Marr Show) தோன்றிய பின்னர், அதையடுத்து வெளியிட்ட ஓர் அறிக்கையில், “கடந்த தசாப்தத்தில், ரஷ்யா படுகொலைக்காக பயன்படுத்துவதற்காக இருக்கலாம் நரம்புகளைத் தாக்கும் விஷ மருந்துகளை வினியோகிக்கும் வழிகள் குறித்து விசாரித்து வந்துள்ளதைக் காட்டும் தகவல் எங்களிடம் உள்ளன. மேலும் இத்திட்டத்தின் பாகமாக நோவிசோக்கை உருவாக்குவதும் மற்றும் குறிப்பிட்டளவில் சேமித்து வைப்பதும் உள்ளடங்கும். இது இரசாயன ஆயுதங்கள் உடன்படிக்கையை மீறுவதாகும்,” என்றார்.
முன்னாள் பிரிட்டிஷ் தூதர் கிரெய்க் மர்ரி, ஜோன்சனை ஒரு பொய்யராக குறிப்பிட்டார். பிரிட்டிஷ் அரசாங்கம் MI5, MI6 அல்லது GCHQ ஆகியவற்றிடம் இருந்து அதுபோன்ற எந்த தகவலையாவது பெற்றிருந்தால், அவற்றை OPCW க்கு தெரியப்படுத்த அவை சட்டபூர்வ கடமைப்பாட்டைக் கொண்டுள்ளன. ஆகவே இந்த ஆதாரம் நம்புவதற்குரியதல்ல என்றார்.
"கடந்த தசாப்தத்தில்" என்று குறிப்பிடும் ஜோன்சனின் வாதமும் குறிப்பிட்டு காட்டாத ஒரு காலத்தைச் சம்பந்தப்படுத்தி இருந்தது, “உண்மையில் எந்த காலப்பகுதி என்று அந்த அறிக்கை குறிப்பிடாமல், ஒரு தசாப்தமாக எங்களுக்கு தெரியும் என்று கருத்தைப் பதிய வைப்பதற்காக வார்த்தைகளைத் திரிப்பதை" கிரெய்க் மர்ரி சுட்டிக்காட்டினார்.
“ரஷ்யா [அதன்] அறிவிக்கப்படாத அல்லது இரகசிய கையிருப்புகளை வைத்திருக்கலாம் என்பதற்கு ஒரேயொரு குறிப்போ அல்லது ஆட்சேபணையோ இல்லாமல், ரஷ்யாவின் இரசாயன ஆயுத கையிருப்புகளை அழித்து முடித்ததற்காக, இங்கிலாந்து தூதர் சர் ஜியோஃப்ரி ஆடம்ஸ் கடந்த ஆண்டு போதுமானளவுக்கு OPCW ஐ பாராட்டி இருந்தார்,” என்ற நிலையில், “போரிஸ் ஜோன்சன் முட்டாள்தனமாக உருவாக்கி உள்ள இந்த திடீர் புதிய தகவல் குறித்து நாம் முற்றிலும் சந்தேகிக்க வேண்டும்,” என்று மர்ரி எழுதினார்.
ஒரு பொய்யானது, அனைத்து வகையிலும் அம்பலப்படுகையில், ஊடகங்களோ, மேலும் அதிக ஆதாரமற்ற வாதங்களைக் கொண்டு விடையிறுக்கின்றன.
ரூபேர்ட் முர்டோக்கின் Sky News நேற்று அறிவிக்கையில், சேர்ஜி ஸ்கிரிபாலுக்கு காரின் காற்றோட்ட வழியில் ஒரு விஷவாயுவாக நரம்புகளைத் தாக்கும் அந்த விஷமருந்து செலுத்தப்பட்டதை இப்போது குறிப்பிடுகின்ற ஒரு "சிறப்பு" செய்தியை அறிவித்தது — இது யூலியா ஸ்கிரிபால் அவரை அறியாமலேயே அந்நாட்டிற்கு கொண்டு வந்த "வெள்ளைநிறப் பொடி" ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்ட முந்தைய செய்திகளோடு அப்பட்டமாக முரண்படுகிறது.
மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் வேலை செய்து கொண்டிருந்த போதே, யூலியா, “விளாடிமீர் புட்டினின் உளவுத்துறை வலையமைப்பைச் சேர்ந்ததாக கூறப்படும்" அடையாளம் தெரியாத "உயர்மட்ட" ரஷ்ய பாதுகாப்பு சேவை உளவாளியுடன் உறவில் இருந்தார் என்று முர்டோக்கின் Sun பத்திரிகை குற்றஞ்சாட்டியது. அந்த உளவாளியின் தாயார் இன்னும் பெரிய "உயர்மட்ட பதவி" வகிக்கும் உளவாளி என்றும், இவர் "நோவிசோக் விஷவாயு தாக்குதலைத் திட்டமிட்டிருக்கலாம்" என்றும் கூறப்படுகிறது.
இந்தளவில் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடான வாதங்கள், சதித்திட்ட திருப்பங்கள் மற்றும் பொய்கள் தொடர்ச்சியாக குவிந்து வருகின்ற நிலையில், நேற்று பைனான்சியல் டைம்ஸ், “சேர்ஜி ஸ்கிரிபால் நஞ்சூட்டல் மீது பதிலளிக்கப்படாத கேள்விகள்" என்று இரவு-நேர கட்டுரை ஒன்றை பிரசுரிக்க கடமைப்பட்டதாக உணர்ந்தது.
அதன் குறிப்பு வாசகம் குறிப்பிட்டது, “அத்தாக்குதலுக்கு இரண்டு வாரங்களுக்குப் பின்னர், விசாரணையின் வெகு சில விபரங்களே வெளி வந்துள்ளன.”
இது குறைத்துக் காட்டும் ஒரு வாசகம். ஸ்கிரிபால் விவகார விசாரணைகள் தொடர தொடர, என்ன நடந்தது என்று கூறப்பட்டுள்ளதோ உண்மையில் அது தேய்ந்து கொண்டே செல்வதாக தெரிகிறது. இங்கிலாந்து அரசால் ரஷ்யாவுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் மட்டுமே வெளியிடப்பட்டு, ஊடகங்களாலும் அமெரிக்க மற்றும் ஐரோப்பாவில் உள்ள பிரிட்டனின் ஏகாதிபத்திய கூட்டாளிகளாலும் விமர்சன அணுகுமுறையுமின்றி ஊதிப் பெரிதாக்கி பரப்பப்படுகின்றன.
இருப்பினும் ஒவ்வொரு நாளும் ரஷ்யாவுக்கு எதிரான "தீர்க்கமான" நடவடிக்கைக்கு அதிக மூர்க்கத்தனமான கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன. இராஜாங்க நடவடிக்கைகள், தடையாணைகள் மற்றும் அதுபோன்றவற்றிற்கான அழைப்புகள், தவிர்க்கவியலாமல் ரஷ்யாவுடன் —அனைத்திற்கும் மேலாக சிரியாவில்— இராணுவ மோதலுக்கான விவாதமாக மாறக்கூடிய சாத்தியமுள்ளது.