Print Version|Feedback
The Skripal poisoning: What lies behind UK-US ultimatums against Russia?
ஸ்கிரிபால் நஞ்சூட்டல்: ரஷ்யாவுக்கு எதிரான ஐக்கிய இராஜ்ஜியம்-அமெரிக்காவின் இறுதிக்கெடு விதிப்பிற்கு காரணமாக இருப்பது என்ன?
Alex Lantier
14 March 2018
பிரிட்டனில் உள்ள சாலிஸ்பரியில் ரஷ்யாவின் முன்னாள் உளவு முகவரும் பிரிட்டிஷ் உளவாளியுமான சேர்ஜி ஸ்கிர்பால் மற்றும் அவரது மகள் யூலியாவுக்கு மார்ச் 4 அன்று மர்மமான முறையில் நஞ்சூட்டப்பட்டிருந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கும் சற்றே அதிகமான காலத்திற்குள்ளாக, நேட்டோ கூட்டணியின் ஆளும் வட்டாரங்களில் நஞ்சூட்டியதற்கான பழியை மாஸ்கோ மீது சுமத்துகின்ற ஒரு பிரச்சாரம் எழுந்திருக்கிறது. வாஷிங்டன் மற்றும் ஐரோப்பாவில் உள்ள உயர் அதிகாரிகளின் ஆதரவுடன், பிரிட்டிஷ் அரசாங்கமானது, இந்த நஞ்சூட்டல் சம்பவத்தை, மிக நீண்டகால பின்விளைவுகளைக் கொண்டிருக்கக் கூடிய ரஷ்யாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை இட்டுக்கட்டுவதற்காய் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.
திங்களன்று பிரதமர் தெரசா மே ஒரு கெடு விதித்திருந்தார், அது இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது, மாஸ்கோவிடம் இருந்து எந்த “நம்பகமான பதிலிறுப்பு”ம் இல்லாது போகுமானால், “ஐக்கிய இராஜ்ஜியத்துக்கு எதிராக ரஷ்ய அரசு சட்டவிரோதமாக படைவலிமையைப் பயன்படுத்தியதாக” தனது அரசாங்கம் முடிவுக்கு வரும் என்று அப்போது அவர் அறிவித்திருந்தார். “நேட்டோ உறுப்புநாடுகளில் ஒன்றின் பிராந்திய ஒருமைப்பாடு, அரசியல் சுதந்திரம் அல்லது பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு ஆளாகும்போது” கூட்டணி கைகொடுக்க நிர்ப்பந்திக்கும் நேட்டோ ஒப்பந்தத்தின் ஷரத்து 4 பயன்படுத்தப்படலாம் என நாடாளுமன்றத்தில் மே அறிவித்தார்.
இவையெல்லாம் அரசுகள் போருக்கு செல்லுவதற்கான பிரச்சினைகளாக இருப்பவையாகும், அத்துடன் நேட்டோவின் உயரதிகாரிகள் ஒரு பெரும் அணுஆயுத சக்தியான ரஷ்யாவுடன் போருக்குச் செல்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தை ஒன்றுபடுத்திக் கொண்டிருக்கின்றனர் என்பது தெளிவு. நேற்று, தெரசா மே நடவடிக்கை முன்மொழிவுகளுடன் இன்று நாடாளுமன்றத்திற்கு திரும்புவதற்கு தயாரிப்பு செய்து கொண்டிருந்த நிலையில், இலண்டனில் ஆளும் வட்டாரங்கள் நேட்டோ ஒப்பந்தத்தின் ஷரத்து 5 ஐயும் பயன்படுத்துவது பற்றி விவாதித்துக் கொண்டிருப்பதாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த ஷரத்து, நேட்டோ உறுப்பு நாடு ஒன்று தான் தாக்குதலுக்குள்ளாகி இருப்பதாக கூறும்போது அதற்கு “உதவுவதை”, “படை வலிமையைப் பயன்படுத்துவது உள்ளிட, அவசியமெனக் கருதும் நடவடிக்கைகளை எடுப்பதை” நேட்டோ நாடுகளுக்கு கட்டாயமாக்குகிறது.
அணு ஆயுதப் போரின் அபாயத்தை எழுப்புகின்ற இத்தகைய மிகப்பெரும் அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுக்கும் நிலையில், ஒருவர் கட்டாயம் கேட்கவேண்டிய கேள்வி: இப்போது மிக நோய்வாய்ப்பட்டிருக்கும் ஸ்கிர்பால் மற்றும் அவரது மகளுக்கு நஞ்சூட்டியது மாஸ்கோதான் என்ற குற்றச்சாட்டுகளுக்கு என்ன அடிப்படை இருக்கிறது?
1991 இல் சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் முதலாளித்துவம் மீட்சி செய்யப்பட்டதில் இருந்து எழுந்திருந்த கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் வர்த்தக நிதிய தன்னலக்குழுவிற்கு உலக சோசலிச வலைத் தளம் எந்த அனுதாபமும் காட்டவில்லை. ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்குத் தெரிந்தோ அல்லது தெரியாமலோ, ரஷ்ய உளவுப் பிரிவின் ஒரு கன்னை ஸ்கிர்பாலுக்கு நஞ்சூட்டியிருக்கலாம் என்பதை நிராகரித்து விட முடியாது.
ஆயினும் இலண்டனும் நேட்டோவும் கிரெம்ளின் சம்பந்தப்பட்டிருப்பது தொடர்பான கையில் வைக்கக்கூடிய ஆதாரம் எதனையும் காட்டவில்லை, அல்லது ரஷ்யத் தாக்குதலெனும் அனுமானத்திற்கான ஒரு நோக்கத்தையும் ஸ்தாபிக்கவில்லை. 1990களிலும் 2000களின் தொடக்கத்திலும் பிரிட்டனுக்கு உளவுபார்த்த காரணத்திற்காக ஸ்கிரிபால் சாக வேண்டும் என்று கிரெம்ளின் விரும்பியிருந்தால், 2006 இல் வேவுக் குற்றம் அவர் மீது உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் ஏன் அது அவரைத் தூக்கிலிடவில்லை, இதற்கு மாறாக 4 வருடங்களின் பின்னர் இலண்டனில் சிறையிலிருந்த ரஷ்ய உளவாளிகளை பரிமாற்றம் செய்து கொள்கையில் அவரை பிரிட்டனுக்கு அனுப்பியது.
பதிலாக, மாஸ்கோ மீது குற்றம்சாட்டுகின்ற ஒரு எளிமையான விவரிப்பு எழுந்திருக்கிறது: ஒரு குற்றம், ரஷ்ய அரசாங்கத்துக்குக் குரோதமான நாடுகள் அல்லது தனிநபர்களைக் குறிவைத்து நடந்திருப்பதாகக் கண்டால், நேட்டோ அரசாங்கங்களும் ஊடகங்களும் அடுத்த சில மணி நேரங்களுக்குள்ளாகவே கிரெம்ளின் தான் இதற்குப் பொறுப்பு என்பது வெட்டவெளிச்சமாயிருப்பதாக முடிவுக்கு வந்துவிடுகின்றன.
உண்மையில், சர்வதேச அரசியலில், இந்த எளிய மற்றும் வெளிப்படையான பதிலானது தவிர்க்கவியலாமல் ஒரு கொடுக்கப்பட்ட சம்பவமோ அல்லது கொள்கையோ உருவாக்குகின்ற அரசியல் மற்றும் பொருளாதார நலன்களின் சிக்கலான பின்னலை வெளிப்படுத்த கிட்டத்தட்ட தவறிவிடுகிறது. ஸ்கிரிபால் தாக்குதல் ஒரு Le Carré இனால் எழுதப்படும் துப்பறியும் நாவலாக இருக்குமானால், இதுவரையான குற்றச்சாட்டுகள் எல்லாம் புத்தகத்தின் முதல் 10 பக்கங்களையே பிடித்திருக்கும், அதன்பின் உண்மையான கதை அடுத்த 400 பக்கங்களில் கட்டவிழ்ந்திருக்கும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் முன்வைக்கப்பட வேண்டிய கேள்விகள் என்னவென்றால்: குற்றம்சாட்டுபவரின் நம்பகத்தன்மை என்ன, மற்றும், எல்லாவற்றுக்கும் மேல், cui bono (குற்றத்தினால் யார் ஆதாயமடைகிறார்கள்)?
ரஷ்யா தான் ஸ்கிரிபாலுக்கு நஞ்சூட்டியது என்பது வெளிப்படையாக தெரிவதாக கூறுவோரைப் பொறுத்தவரை, அவர்கள் அமெரிக்காவில் 2001 இல் நடந்த ஆந்த்ராக்ஸ் தாக்குதல்களை நினைவுகூர்வது நல்லது, அதில் வாஷிங்டனில் இருந்த பல அமெரிக்க அதிகாரிகளுக்கு ஆந்த்ராக்ஸின் ஒரு மரணம் விளைவிக்கும் பூச்சு அஞ்சலில் அனுப்பப்பட்டு, 5 பேர் கொல்லப்பட்டனர், இன்னும் 17 பேருக்கு தொற்றியது, செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கு சற்று பின்னர் இது நடந்தது. அப்போதும், ஊடகங்கள் அமெரிக்கா-ஐக்கிய இராஜ்ஜியத்தின் போர் அச்சுறுத்தல்களுக்கான வெளிப்படையான இலக்குகளின் மீது —ஈராக் ஆட்சியின் பேரழிவு ஆயுதங்கள் வேலைத்திட்டத்தின் மீதும் அல்-கெய்தாவுடன் அது கொண்டிருப்பதாக சொல்லப்பட்ட தொடர்புகளின் மீதும்— உடனடியாகக் குற்றம்சாட்டின. இவை எல்லாமே, ஈராக்குடன் போருக்குச் செல்ல முனைந்து கொண்டிருந்த அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை நலன்களுக்கு சேவை செய்த பொய்களாக நிரூபணமாயின.
அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்து அதனை ஆக்கிரமித்ததன் பின்னர், ஈராக்கிடம் எந்த பேரழிவு ஆயுதங்களும் இல்லை என்பதும் அது இத்தாக்குதல்களுக்குப் பொறுப்பானதில்லை என்பதும் தெளிவானதன் பின்னர், இத்தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட குறிப்பான ஆந்த்ராக்ஸ் மூலப்பொருள் உண்மையில் மேரிலாண்டின் ஃபோர்ட் டெட்ரிக்கில் (Fort Detrick) இருக்கும் வாஷிங்டனின் சொந்த பேரழிவுகரமான ஆயுத திட்டத்தில் உருவாக்கப்பட்டிருந்தன என்பது தெரியவந்தது. ஸ்டீவன் ஹாட்ஃபில் (Steven Hatfill) என்ற ஒரு அமெரிக்க விஞ்ஞானிதான் இதற்குப் பொறுப்பானவராக கிசுகிசுக்கப்பட்டது, அவர் விசாரிக்கப்பட்டு, இறுதியில் விடுவிக்கப்பட்டார்.
அந்த ஆந்த்ராக்ஸ் தாக்குதல்களில் சம்பந்தப்பட்ட அமெரிக்க அதிகாரிகள் யார் என்பது இன்றுவரையும் தெரியவில்லை. 2008 இல் தற்கொலை செய்து கொண்ட ப்ரூஸ் எட்வர்ட்ஸ் ஐவன்ஸ் (Bruce Edwards Ivins) என்ற இன்னொரு விஞ்ஞானி மீது பழி போட்டு விட்டு FBI 2010 இல் விசாரணையை மூடிவிட்டது. ஆயினும், தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட ஆந்த்ராக்ஸ், ஐவன்ஸ் இடம் இருந்து தான் வந்திருந்தது என்று திட்டவட்டமாக கூறுமளவுக்கு போதுமான எந்த விஞ்ஞானபூர்வ ஆதாரமும் அமெரிக்க அரசாங்கத்திடம் இருக்கவில்லை என்பதை 2011 இல் அமெரிக்க விஞ்ஞான தேசிய அகாதமி கண்டறிந்தது.
ஸ்கிரிபால் தாக்குதலில், மாஸ்கோ எப்படி இதில் பயனடையும் என்பது தெளிவற்றதாக இருக்கிறது. ரஷ்யாவில் இந்த வார இறுதியில் தேர்தல் நடக்கவிருப்பதற்கும், சிரியாவில் தோல்வியடைந்த ஆட்சி-மாற்றப் போர் —இது அமெரிக்கப் படைகள் சமீப வாரங்களில் ரஷ்ய இராணுவ ஒப்பந்தப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதையும் கொலை செய்வதையும் கண்டிருந்தது— தொடர்பாக நேட்டோ சக்திகள் ரஷ்யாவுடன் ஒரு மோதலுக்கு வரிந்து கட்டுவதற்கும் சற்று முன்பாக இந்தத் தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. ஸ்கிரிபால் மீதான தாக்குதலானது நேட்டோவிற்குள் இருக்கும் புட்டினின் எதிரிகளுக்கு, அவருக்கு எதிராகப் பயன்படுத்துவதற்கு ஒரு அருமையான இராஜதந்திர மற்றும் அரசியல் ஆயுதத்தைக் கையளிக்கிறது.
பதிலாக இதிலிருந்துவரும் ஆதாயங்கள், ரஷ்யாவுக்கு எதிரான போர் வெறிக்கூச்சலை தூண்டிவிட்டு வருகின்ற பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் பகுதிகளுக்கும், ட்ரம்ப்பை ரஷ்யாவின் ஒரு முகவர் என்பதாகச் சொல்லி மதிப்பிழக்கச் செய்வதற்காக அவற்றுடன் சேர்ந்து செயற்படும், அமெரிக்க ஆளும் உயரடுக்கின், குறிப்பாக, சிஐஏ மற்றும் ஜனநாயகக் கட்சியைச் சுற்றிய பகுதிகளையும் தான் சென்றடைகின்றன. ஸ்கிரிபால் தாக்குதலானது இந்தப் பிரிவுகள், அமெரிக்காவில் இருந்து சுயாதீனப்பட்ட ஒரு ஐரோப்பிய இராணுவக் கொள்கைக்கும் ரஷ்யாவுடன் நெருக்கமான உறவுகளுக்கும் அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்ற, குறிப்பாக பிரெஞ்சு மற்றும் ஜேர்மன் அரசாங்கங்களில் இருக்கின்ற, ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் போட்டிப் பிரிவுகளின் மீது பிரம்மாண்டமான அழுத்தத்தை பிரயோகிக்க அனுமதிக்கிறது.
இவ்வாறாக, திங்களன்று, பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட், பேர்லினுடன் நெருங்கி வேலை செய்து கொண்டிருக்கும், தனக்குப் பின் வந்த இம்மானுவல் மக்ரோன் மீது ஒரு கூர்மையான மற்றும் அதிக மறைப்பில்லாத ஒரு தாக்குதலைத் தொடுத்தார். இப்போதைய நேட்டோ கொள்கையானது மாஸ்கோவும் சிரிய அரசாங்கமும் “அதன் எதிர்க்கட்சிகளைக் கலைப்பதற்கும் அதன் சொந்த மக்களைப் படுகொலை செய்வதற்கும்” அனுமதிப்பதாக திட்டவட்டம் செய்த ஹாலண்ட், ரஷ்யாவுடன் ஒரு மோதலுக்கு அழைப்பு விடுத்தார்: “ரஷ்யா பல ஆண்டுகளாக மறுஆயுதபாணியாகிக் கொண்டிருக்கிறது, ரஷ்யா அச்சுறுத்துமானால், அது பதிலுக்கு அச்சுறுத்தப்பட வேண்டும்.”
நேற்று, அமெரிக்க வெளியுறவுச் செயலரான றெக்ஸ் டிலர்சன், தாக்குதல் குறித்த பிரிட்டிஷ் மதிப்பீட்டின் மீது அமெரிக்காவுக்கு “முழு நம்பிக்கை” இருப்பதாக தெரிவித்தார், அதன்பின் ரஷ்யா “அநேகமாக பொறுப்பானதாயிருக்கலாம்” என்பது மட்டுமே என்று அறிவித்து முந்தைய கூற்றுக்கு மறைமுகமாய் முரண்பட்டார். டிலர்சன் இந்த கூற்றுகளை வெளியிட்ட சற்று நேரத்திற்கெல்லாம் ட்ரம்ப் அவரை நீக்கி விட்டார் எனினும், ரஷ்ய உடந்தை குறித்த டிலர்சனது குற்றச்சாட்டை எதிரொலித்து பின்வருமாறு அறிவித்தார், “அவர்கள் கொண்டிருக்கக் கூடிய அத்தனை ஆதாரங்களின் அடிப்படையில், இது ரஷ்யாவாகத் தான் இருக்கும் என எனக்குப் படுகிறது.”
இந்த நிலைமைகளின் கீழும், ஆந்த்ராக்ஸ் தாக்குதல்களின் அனுபவத்தையும் கொண்டு பார்த்தோமென்றால், பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க அரசுகளின் கன்னைகள் தான் ஸ்கிரிபால் தாக்குதலின் பிரதான சந்தேகத்துக்குரியவர்களாக இருக்கிறார்கள் என்பதைக் கூறியாக வேண்டும்.
இலண்டன் ரஷ்யாவுக்கு எதிரான அதன் குற்றச்சாட்டுகளுக்கு, எதேச்சையாக சாலிஸ்பரிக்கு வெறும் 10 மைல்கள் தூரத்தில் அமைந்திருக்கும் போர்ட்டன் டவுன் உயிரிரசாயன போர் மையத்தின் (Porton Down biochemical warfare facility) மாறிக் கொண்டேயிருக்கும் ஆய்வுமுடிவுகளையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இலண்டன், ஸ்கிரிபால் ஃபென்டானில் (fentanyl) என்ற ஹெராயினை விட மிகவும் சக்திவாய்ந்த ஒரு செயற்கை வலிமருந்துக்கு இலக்காகியிருந்ததாகக் குற்றம்சாட்டியது. ஆயினும், மார்ச் 7 அன்று பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்த நஞ்சு சரின் அல்லது VX போன்றதொரு நரம்பு வாயு என குற்றம்சாட்டினர், பல தசாப்தங்களாக நரம்பு வாயுக்களை உருவாக்குவதில் தனித்திறம் பெற்றதாய் இருந்து வந்திருக்கும் போர்ட்டன் டவுன் மையம், நச்சுப் பொருள் என்ன என்பதை சரியாக அடையாளம் காண்பதில் எவ்வாறு தவறியது என்பதை அவர்கள் விளக்கவில்லை.
திங்களன்று, தெரசா மே, சம்பந்தப்பட்ட நரம்பு வாயு உண்மையில் ”நோவிசோக்” (novichok) என்ற ஆரம்பத்தில் சோவியத் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டதொரு தனித்துவமான இரசாயன ஆயுதம் என்று குற்றம் சாட்டினார். ஆனால், இரசாயன ஆயுதங்கள் உடன்படிக்கை (Chemical Weapons Convention - CWC) அவசியமாக்குவதன் படி, சாலிஸ்பரி தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட பொருளின் மாதிரிகளை ஆய்வுக்காக கொடுக்குமாறு மாஸ்கோவிடம் இருந்து வந்த கோரிக்கைகளை இலண்டன் மறுத்திருக்கிறது. குறைந்தபட்சம், இப்போதைக்கேனும், ரஷ்யாவுக்கு எதிரான முகாந்திரமானது போர்ட்டன் டவுன் மையத்தின் வாய்மொழியையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
ஆயினும், போர்ட்டன் டவுன் ஒரு நம்பத்தகுந்த ஆதாரம் கிடையாது. பிரிட்டிஷ் குடிமக்கள் மீது சட்டவிரோதமாக அல்லது இரகசியமாக உயிரியல் மற்றும் இரசாயன ஆயுதங்களை சோதனை செய்த நெடிய வரலாறு அதற்கு உண்டு. 1942 இல் குருய்னார்ட் தீவை (Gruinard Island) ஆந்த்ராக்ஸ் தூவல்களைக் கொண்டு மாசுபடுத்தியது —1986 இல் இந்த மாசை அகற்ற பிரிட்டிஷ் அரசாங்கம் நிர்ப்பந்தம் பெற்றது—; பிரிட்டிஷ் படைவீரர்கள் மீதான சரின் வாயு சோதனைகளின் போது 1953 இல் ரோனால்ட் மாடிசன் சட்டவிரோதமாக கொல்லப்பட்டமை; மற்றும் 1963-1975 இல் லைம் விரிகுடாவில் (Lyme Bay) உயிரியல் ஆயுதங்களை தூவியமை ஆகியவையும் இதில் அடங்கும். 2008 இல் பிரிட்டிஷ் அரசாங்கம் இத்தகைய சோதனைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கடமைப்பாட்டை ஒப்புக்கொள்ளாமல், 3 மில்லியன் பவுண்டுகள் இழப்பீடு அளித்தது.
இன்னும் தெளிவற்றதாகவே இருக்கின்ற ஸ்கிரிபால் நஞ்சூட்டல் விவகாரத்தில் இத்தகைய ஆதாரங்களில் இருந்து ஏவப்படுகின்ற குற்றச்சாட்டுகளில் எதுவும் கடுகளவும் நம்பகத்தன்மை கொண்டவையாக இல்லை. விசாரணை முன்னேறுகின்ற அதேசமயத்தில் கண்டறிவுகள் உடனுக்குடன் வெளியிடப்படுகிறதாக இருக்கின்ற ஒரு முழுமையான புறநிலையான சர்வதேச பொது விசாரணை மட்டுமே, என்ன நடந்தது என்ற உண்மையை வெளிக்கொண்டுவர முடியும். இதற்கு மத்தியில், ரஷ்யாவுக்கு எதிரான போர் வெறிக்கூச்சலையும், உலகின் பிரதான அணு-ஆயுத சக்திகளுக்கு இடையிலான ஒரு முழு-வீச்சிலான மோதலின் அபாயத்தையும் ஆளும் வர்க்கம் தூண்டி விடுவதை எதிர்ப்பது அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உலகெங்கிலுமான தொழிலாளர்களுக்கு ஒரு இன்றியமையாத சுய-பாதுகாப்பு நடவடிக்கையாக இருக்கிறது.