Print Version|Feedback
Washington imposes sanctions against Russia
வாஷிங்டன் ரஷ்யா மீது புதிய தடைகளை விதிக்கிறது
By Bill Van Auken
16 March 2018
வியாழனன்று ட்ரம்ப் நிர்வாகம் ரஷ்யாவுக்கு எதிரான புதிய தொகுப்பு தண்டிப்புத் தடைகளை அறிவித்தது, 19 தனிநபர்கள் மற்றும் ஐந்து அமைப்புகள் இதில் குறிவைக்கப்பட்டுள்ளன, அந்நாட்டின் இரண்டு பிரதான உளவு முகமைகளான KGB இன் வாரிசு அமைப்பான ஃபெடரல் பாதுகாப்பு சேவை அல்லது FSB மற்றும் ரஷ்ய இராணுவத்தின் உளவு அங்கமான GRU ஆகியவையும் இதில் அடங்கும்.
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முன்னாள் ரஷ்ய உளவு அதிகாரி மற்றும் அவரது மகள் மீதான நரம்பு வாயுத் தாக்குதலுக்கு ரஷ்யா தான் பொறுப்பு எனக் குற்றம்சாட்டி கிட்டத்தட்ட முன்கண்டிராத வகையில் அமெரிக்க, பிரிட்டிஷ், ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் அரசாங்கத் தலைவர்களிடம் இருந்து ஒரு கூட்டான அறிக்கை வந்திருக்கிற அதேசமயத்தில் வருகின்ற இந்த தடைகள் உலகின் இரண்டு பெரும் அணு சக்திகளுக்கு இடையிலான பதட்டங்கள் இன்னும் முறுக்கிவிடப்படுவதைக் குறிக்கின்றன.
இந்த சமீபத்திய தடைகளுக்கான சாக்குகளில் 2016 ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா “தலையிட்டதாக” கூறப்படும் குற்றச்சாட்டுகளும் “தீங்கு விளைவிக்கும்” இணையத் தாக்குதல்களுக்கு மாஸ்கோ தான் பொறுப்பு என்பதான கூற்றுகளும் அடங்கும்.
“அமெரிக்க தேர்தல்களில் தலையிட முயற்சி, அழிவுகரமான இணைய தாக்குதல்கள், மற்றும் அதிமுக்கியமான உள்கட்டமைப்பைக் குறிவைத்தான ஊடுருவல்கள் ஆகியவை உள்ளிட்ட ரஷ்யாவின் தீங்கான இணைய நடவடிக்கைகளுக்கு நிர்வாகம் முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது, எதிர்த்து நிற்கிறது” என்று கருவூலச் செயலர் ஸ்டீவன் முனுசின் வியாழனன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தார், “இலக்குவைக்கப்பட்டிருக்கும் இந்தத் தடைகள் ரஷ்யாவில் இருந்து கிளம்பி வருகின்ற இப்போதைய தீய தாக்குதல்களுக்குத் தீர்வுகாண்பதற்கான ஒரு பரந்த முயற்சியின் பகுதியாகும்.”
“அமெரிக்க அரசாங்க அமைப்புகள் மற்றும் எரிசக்தி, அணுசக்தி, வணிக வசதிகள், நீர், வான்போக்குவரத்து மற்றும் முக்கிய உற்பத்தித் துறைகள் உள்ளிட்ட அமெரிக்காவின் பலவகையான முக்கிய உள்கட்டமைப்புகளை” இணைய தாக்குதல்களைக் கொண்டு குறிவைத்ததாக எந்த ஊர்ஜிதப்படுத்தும் ஆதாரமும் இன்றி ரஷ்ய அரசாங்கத்தின் மீது இந்த அறிக்கை குற்றம்சாட்டியது.
இந்தக் குற்றச்சாட்டுகள் திகிலூட்டக் கூடியவையாக இருக்கின்றன, ஏனென்றால் சமீபத்தில் வெளியிடப்பட்ட அமெரிக்க தேசியப் பாதுகாப்பு மற்றும் அணுசக்தி நிலை ஆவணங்களின் ஒரு வரிசையானது, அமெரிக்கா மீதான ஒரு குறிப்பிடத்தக்க இணையத்தாக்குதலானது அணுஆயுதங்களைக் கொண்டு பதிலடி தருவதற்கான நியாயமான காரணமாக முடியும் என்பதாகக் கூறுகின்ற ஒரு புதிய அணு மூலோபாயத்தை முன்வைத்திருக்கிறது.
கருவூலச் செயலர் முன்வைத்த விடயங்கள் பெரும்பாலும் சென்றமாதத்தில் சிறப்பு ஆலோசகர் ராபர்ட் முல்லர் இதே தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் பலவற்றின் மீது வாசித்த குற்றப்பத்திரிகையில் -அவரது விசாரணை முன்னதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால் “சூனிய வேட்டை” என்பதாகக் கூறி கண்டனம் செய்யப்பட்டிருந்தது- ஒட்டிச் சேர்க்கப்பட்டவையாக இருந்தன.
ஜனநாயகக் கட்சியானது அமெரிக்க உளவு எந்திரத்திலும் முக்கிய ஊடகங்களிலும் இருக்கின்ற மேலாதிக்கமான அடுக்குகளுடன் நெருக்கமாக வேலைசெய்து, அமெரிக்க தேர்தல்களில் ரஷ்யா “தலையீடு” செய்ததாக சொல்லப்படுவது மற்றும் அமெரிக்க சமூகத்தை உலுக்குகின்ற சமூகப் பிளவுகள் மற்றும் பதட்டங்களுக்கு மாஸ்கோவே பொறுப்பு என்பதாகக் கூறுவது ஆகியவற்றைச் சுற்றிய ஒரு இடைவிடாத பிரச்சாரத்தை நடத்தி வருகிறது.
மத்திய கிழக்கிலும், கிழக்கு ஐரோப்பாவிலும் மற்றும் ஒட்டுமொத்த ஐரோப்பிய-ஆசிய நிலப்பரப்பிலும் தனது செல்வாக்கை இராணுவரீதியாக திட்டவட்டம் செய்வதற்கு அமெரிக்கா கொண்டிருக்கும் முனைப்புக்கு பிரதான முட்டுக்கட்டையாக பார்க்கப்படுகின்ற ரஷ்யாவுக்கு எதிரான மூர்க்கத்தனத்தில் எந்த சளைப்பையும் காட்டுவதற்கு எதிராக அமெரிக்க ஆளும் ஸ்தாபத்திற்குள்ளாக இருக்கக் கூடிய எதிர்ப்பே இந்த பிரச்சாரத்தின் கீழமைந்திருப்பதாகும். அதேநேரத்தில், ரஷ்யாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் இணையத் தணிக்கையை நியாயப்படுத்துவதற்கும் உள்நாட்டு அரசியல் ஒடுக்குமுறைக்கு தயாரிப்பு செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஜனநாயகக் கட்சியின் முன்னணித் தலைவர்கள் புதிய தடைகளுக்கு ஆதரவாக குரல்கொடுத்த நிலையில், செனட் சிறுபான்மை தலைவரான சக் ஸூமர் அவை “போதுமானதல்ல” என்று அறிவித்தார். ட்ரம்ப் இன்னும் தண்டிப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை பகிரங்கமாக கண்டனம் செய்ய வேண்டும் என்றும் அவர் கோரினார்.
இதேபோன்று, செனட் உளவுக் கமிட்டியில் இருக்கும் ஜனநாயகக் கட்சிக்காரரான வேர்ஜினியாவின் செனட்டர் மார்க் வார்னர் இந்த நடவடிக்கைகள் “முதல்படி” என்று விவரித்தார், ஆயினும் “இந்தத் தடைகளை முன்னெடுப்பதற்கு நிர்வாகத்திற்கு ஏன் இவ்வளவு காலம் தேவைப்பட்டது” என தனக்குப் புரியவில்லை என்றார் அவர். ஒன்பது மாதங்களுக்கு முன்பாக தேர்தல்-தொடர்பான தடைகளுக்கு நாடாளுமன்றம் பெருவாரியாக வாக்களித்திருந்தது.
கருவூலத்துறையில் இருந்தான அறிக்கை “இரண்டு ஐக்கிய இராஜ்ஜிய குடிமக்களைக் கொலை செய்யும் முயற்சியில் ஒரு இராணுவ வகை நரம்பு வாயு சமீபத்தில் பயன்படுத்தப்பட்டிருந்ததை”யும் மேற்கோள் காட்டியது, ரஷ்ய அரசாங்கத்தின் “கடிவாளமற்ற மற்றும் பொறுப்பற்ற நடத்தையை இது மேலதிகமாய் விளங்கப்படுத்துகிறது” என்று அது கூறியது.
முன்னாள் ரஷ்ய GRU கர்னல் சேர்ஜி ஸ்கிரிபால் -இவர் பிரிட்டிஷ் உளவுத் துறையின் இரட்டை முகவராக பின் மாறினார்- மற்றும் அவரது மகள் இங்கிலாந்தின் தெற்கு நகரமான சாலிஸ்பரியில் இராணுவத்தில் பயன்படுத்தப்படுகிற ஒரு நஞ்சைக் கொண்டு நஞ்சூட்டப்பட்ட “தாக்குதல் தொடர்பான அத்தனை கேள்விகளுக்கும்” ரஷ்ய அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும் என்று கோருகின்ற ஒரு கூட்டுப் பிரகடனத்தில் பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே, ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்கெல் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் ஆகியோருடன் ட்ரம்ப்பும் வியாழனன்று கையெழுத்திட்டார்.
இந்தத் தாக்குதல் “நமது அனைவரது பாதுகாப்பையும் அச்சுறுத்தக் கூடிய” வகையில் “ஐக்கிய இராஜ்ஜியத்தின் இறையாண்மை மீது நடத்தப்பட்ட ஒரு தாக்குதல்” என்று அந்த அறிக்கை விவரித்தது.
முதன்முதலில் சோவியத் ஒன்றியத்தின் இராணுவத்தால் உருவாக்கப்பட்ட நோவிசோக் எனும் நரம்பு வாயுவைக் கொண்டு இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக பிரிட்டன் கூறியிருக்கிறது, ஆனால் தனது கூற்றுக்களை ஊர்ஜிதம் செய்யக் கூடிய எந்த ஆதாரத்தையும் அது வழங்கவில்லை.
ஏராளமான ரஷ்ய முகவர்களை பிரிட்டிஷ் உளவுத்துறையிடம் காட்டிக் கொடுத்ததற்காக கைதுசெய்யப்பட்டு 2006 இல் 13 ஆண்டு சிறைத்தண்டனை பெற்று அதன்பின் அமெரிக்க-ரஷ்ய உளவாளிகள் பரிவர்த்தனை திட்டத்தின் கீழ் விடுவிக்கப்பட்டு பிரிட்டிஷ் குடியுரிமையும் அளிக்கப்பட்ட ஸ்கிரிபால் மீதான தாக்குதலில் தனக்கு எந்த பங்குமில்லை என்று மாஸ்கோ மறுத்திருக்கிறது.
“இந்தத் தாக்குதலுக்கு அநேகமாய் ரஷ்யாவே பொறுப்பாயிருக்கக் கூடும்” என்று அந்த அறிக்கை அறிவிக்கிறது. எந்த ஆதாரமும் வழங்காத அதேநேரத்தில், 23 ரஷ்ய தூதர்களை வெளியேற்றி ரஷ்யாவுக்கு எதிரான பதிலடி நடவடிக்கைகளை பிரிட்டிஷ் அரசாங்கம் எடுத்திருக்கிறது. மாஸ்கோ உரிய வகையில் பதிலளிக்க சூளுரைத்திருக்கிறது.
ஸ்கிரிபால் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படும் நரம்பு வாயுவின் ஒரு மாதிரியை தனக்குக் கொடுக்குமாறு ரஷ்ய அரசாங்கம் இலண்டனை தொடர்ந்து கேட்டு வந்திருக்கிறது -இரசாயன ஆயுதங்கள் ஒழிப்பு அமைப்பின் விதிகளின் படி இது அவசியமானதாகும்- ஆனால் மேயின் அரசாங்கம் இந்த கோரிக்கைகளை உதாசீனப்படுத்தி வந்திருக்கிறது.
ரஷ்ய ஜனாதிபதி புட்டின், மே அரசாங்கத்தின் குற்றச்சாட்டுகளுக்கு தனது முதல் பகிரங்கமான பதிலை வியாழனன்று வழங்கினார், “பிரிட்டிஷ் தரப்பினால் எடுக்கப்பட்டிருக்கும் அழிவுகரமான மற்றும் ஆத்திரமூட்டுகின்ற நிலைப்பாடு” குறித்து தான் “மிகவும் கவலை கொண்டிருப்பதாக” அவர் தெரிவித்தார்.
முன்னதாக, கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார், “ஐக்கிய இராஜ்ஜியத்தின் அதிகாரிகள் எடுத்திருக்கும் நிலைப்பாட்டை ரஷ்யா பெரும் அதிர்ச்சியானதாகவும் புரிந்துகொள்ள இயலாததாகவும் உணர்கிறது... இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. மேலும் பயன்படுத்தப்பட்ட பொருள் குறித்த எந்த தகவலும் வெளிவருகின்ற முன்பே இந்தக் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு விட்டன என்பது ரஷ்யாவுக்கு எதிரான ஒரு ஆத்திரமூட்டலின் அத்தனை அறிகுறிகளும் இதில் இருப்பதைக் காட்டுகிறது.”
மே அரசாங்கத்தினால் வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளது தொனியை பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சர் சுருங்க வெளிப்படுத்தினார், ரஷ்யா “விலகிச் செல்லட்டும் வாயை மூடட்டும்” என்று வியாழனன்று அவர் அறிவித்தார். ரஷ்யாவுடனான ஒரு இராணுவ மோதலுக்கு தயாரிப்பு செய்யும் பொருட்டு ஐக்கிய இராஜ்ஜியத்தின் ஆயுதச் செலவினத்தில் ஒரு பெரும் அதிகரிப்புக்கு அழைப்பு விடுக்கின்ற ஒரு முக்கியமான உரைக்குப் பின்னர் அவர் இந்த வசனத்தைக் கூறினார்.
பிரிட்டிஷ் போர்விமானங்கள், “ரஷ்யாவிடம் இருந்து மீண்டும் எழுந்து வருகின்ற அபாயத்திற்கு எதிராக கிழக்கு ஐரோப்பிய வானங்களை கண்காணித்துக் கொண்டிருக்கின்றன” என்று தனது பார்வையாளர்களிடம் கூறிய அவர், “இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொருட்டு நமது படைவீரர்கள் எஸ்தோனியா மற்றும் போலந்தில் இருக்கும் நமது நேட்டோ கூட்டாளிகளுடன் இணைந்து காவல் காத்து வருகின்றனர்” என்றார்.
நேட்டோ பொதுச் செயலரான ஜென்ஸ் ஸ்டோல்டென்பேர்க் இலண்டனுடன் மேற்கின் இராணுவம் “ஐக்கியப்பட்டு” நிற்பதாக அறிவித்தார், குற்றம்சாட்டப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் “பல ஆண்டுகளாக ரஷ்ய நடத்தையின் ஒரு பொறுப்பற்ற போக்காக இருந்து வருகின்ற ஒன்றின் பகுதியாகும்” என்றும் அவர் கூறினார். ஆயினும், நேட்டோவின் உறுப்பு நாடு ஒன்று, படைவலிமைப் பயன்பாட்டின் மூலமானதாய் உட்பட, தான் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பதாகக் கூறுகின்றபோது நேட்டோவின் உறுப்புநாடுகள் அத்தனையும் அதன் உதவிக்கு வருவதை அவசியமாக்கும் நேட்டோ உடன்பாட்டின் ஐந்தாவது ஷரத்தை செயல்படுத்துமாறு இலண்டன் கோரிக்கை விடுக்கவில்லை என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.
எப்படியிருப்பினும், மேயின் அரசாங்கமும் வாஷிங்டனில் இருக்கும் அதன் பிரதானக் கூட்டாளிகளும் ரஷ்யாவுடனான போருக்கு சந்தர்ப்பம் அமைக்கிறார்கள் என்பது தெளிவு.
பிரிட்டன், அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் விடுத்திருக்கும் கூட்டு அறிக்கையானது இந்த நான்கு சக்திகளையும் ரஷ்யாவுக்கு எதிரான எந்த குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்கும் உறுதிகொடுத்திருக்கவில்லை. ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் இரண்டுமே ரஷ்யாவுக்கு எதிராய் அமெரிக்கா முன்பு திணித்திருந்த தடைகளால் எரிச்சலடைந்திருந்தன, ஐரோப்பாவில் அமெரிக்க நலன்களை ஊக்குவிக்கும் நோக்குடன் -குறிப்பாக அமெரிக்க எரிசக்தி கூட்டுநிறுவனங்களின் விடயத்தில்- ரஷ்யாவுடனான அவற்றின் பொருளாதார உறவுகளைத் திட்டமிட்டு அச்சுறுத்துபவையாக அவற்றைக் கண்டன.
அதேபோல ஐரோப்பிய சக்திகள், ஈரானுடனான 2015 அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலமாக இலாபகரமான வணிக மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்த முனைந்து வந்திருக்கின்ற நிலையில், அதனைத் தலைகீழாக்குவதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் வெளிப்பட்ட நோக்கத்திற்கும் குரோதம் கொண்டிருக்கின்றன.
மக்ரோன் இந்த கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திடுவதற்கு முந்தைய தினத்தில், அவரது செய்தித்தொடர்பாளர் ஒரு செய்தியாளர் சந்திப்பில், ஊர்ஜிதமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலான ஐக்கிய இராஜ்ஜியத்தின் ரஷ்ய-விரோத முரசுகொட்டலில் இணைந்துகொள்வதற்கு பாரிஸ் தயாரிப்புடன் இல்லை என்பதை சுட்டிக்காட்டினார். “நாங்கள் கற்பனையுலக அரசியல் செய்வதில்லை” என்றார் அவர். “விடயங்கள் நிரூபிக்கப்படும்போதுதான் முடிவுகள் மேற்கொள்ளப்படுவதற்கான சமயம் வரும்”.
ரஷ்யாவை நோக்கி ஒரு கூடுதல் வம்பிழுப்பான கொள்கையை கையிலெடுப்பதற்கு கடும் அழுத்தம் அளிக்கப்படுகிறது என்பது தெளிவு. பகுதியாக இது, சிரியாவில் ஏழு ஆண்டுகளாக நடந்து வருகின்ற அமெரிக்க-ஏற்பாட்டிலான ஆட்சி மாற்றப் போர் முகம்கொடுக்கும் படுதோல்வியால் உந்தப்படுவதாக இருக்கின்றனது, அங்கு அசாத்தின் அரசாங்கம், ரஷ்ய ஆதரவுடன், மேற்கத்திய ஆதரவு இஸ்லாமிய “கிளர்ச்சியாளர்களின்” கடைசி முக்கிய கோட்டைகளில் ஒன்றாக இருந்த டமாஸ்கஸின் கிராமப்புற புறநகரான கிழக்கு கூத்தாவை மீண்டும் கைவசப்படுத்துவதின் விளிம்பில் இருக்கிறது.
வியாழனன்று வாஷிங்டன் போஸ்டில் வெளியான ஒரு கருத்துக்கட்டுரையில், பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சரான போரிஸ் ஜோன்சன், ஸ்கிரிபால் விவகாரத்தில் ரஷ்யாவின் பங்காக சொல்லப்படுவதுடன் சிரிய சம்பவங்களை நேரடியாக இணைப்பதற்கு முனைந்தார், “சிரியாவில் அசாத்தின் அட்டூழியங்களை புட்டின் செல்லம் கொஞ்சுவதற்கும் பிரிட்டிஷ் மண்ணில் ஒரு இரசாயன ஆயுதத்தைப் பயன்படுத்துவதற்கு ரஷ்ய அரசு கொண்டிருக்கும் வெளிப்படையான விருப்பத்திற்கும் இடையில் ஒரு நேரடியான தொடர்பு” இருப்பதாக அவர் வாதிட்டார்.
ஜோன்சனின் இந்த பத்தி வருவதற்கு முன்னதாக இந்த வார ஆரம்பத்தில், ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதரான நிக்கி ஹாலி, கூத்தாவில் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக சொல்லப்படும் விவகாரத்தில் அசாத்தின் அரசாங்கத்திற்கு எதிராக ஒருதரப்பான இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு அமெரிக்கா தயாரிப்புடன் இருப்பதாக மிரட்டியதும், அதற்கு எதிர்வினையாக, ரஷ்ய இராணுவப் படைத் தலைவரான ஜெனரல் வலெரி கெராசிமோவ், சிரியாவில் ரஷ்ய இராணுவப்படையை சேர்ந்த எவரது உயிருக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கக் கூடிய எந்தவொரு அமெரிக்கத் தாக்குதலும், ரஷ்ய பதிலடியால் பதிலளிக்கப்படும் என்று கூறியதும் நடந்தேறியிருந்தன.