Print Version|Feedback
UK prime minister delivers ultimatum to Russia, heightening war danger
போர் அபாயத்தை அதிகரிக்கும் விதமாக, ஐக்கிய இராஜ்ஜியத்தின் பிரதமர் ரஷ்யாவுக்கு கெடு விதிக்கிறார்
By Laura Tiernan
13 March 2018
இரட்டை முகவரான சேர்ஜி ஸ்கிரிபாலுக்கு எதிராக “ஒரு இராணுவத் தர நரம்புத் தாக்குதல் நச்சுப்பொருளை” பயன்படுத்தியதற்கு ரஷ்யா தான் “அநேகமாக” பொறுப்பாயிருக்கலாம் என பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே பாராளுமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட அவையில் தெரிவித்தார், இது “ஐக்கிய இராஜ்ஜியத்திற்கு எதிரான ஒரு கண்மூடித்தனமானதும் பொறுப்பற்றதுமான நடவடிக்கை” என்று அவர் அறிவித்தார்.
மேயின் உரையைத் தொடர்ந்து, வெறும் ஒரு வார காலத்திற்கு முன்பாக ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் ஜூலியாவுக்கு நஞ்சூட்டப்பட்டதற்கான பிரிட்டனின் பதிலிறுப்பைக் குறித்து விவாதிக்க தேசியப் பாதுகாப்பு சபையின் ஒரு கூட்டம் நடைபெற்றது.
“ஸ்கிரிபாலும் அவரது மகளும் ரஷ்யாவால் உருவாக்கப்பட்டிருந்த ஒரு வகையான இராணுவத் தர நரம்பு பாதிக்கும் பொருளைக் கொண்டு நஞ்சூட்டப்பட்டிருந்தது இப்போது தெளிவாகியிருக்கிறது. இது நோவிசோக் (Novichok) எனப்படுகின்ற நரம்பு விஷங்களின் ஒரு தொகுதியைச் சேர்ந்ததாகும்” என்று மே கூறினார்.
அவரது உரையைத் தொடர்ந்து ஊடக, அரசியல் மற்றும் இராணுவ ஸ்தாபகங்களின் மூலம் ரஷ்ய-விரோத வெறிக்கூச்சலின் ஒரு அலை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது, கத்தீட்ரால் நகரமான சாலிஸ்பரியில் 180 இராணுவத்தினர் அணிதிரட்டப்பட்டுள்ளதும் இதில் அடங்கும்.
சாலிஸ்பரியில் பயன்படுத்தப்பட்ட இரசாயனப் பொருளை ரஷ்யாதான் உருவாக்கியிருந்தது என்ற தனது கூற்றுகளுக்கு இம்மியளவிலான ஆதாரத்தையும் மே வழங்கவில்லை. ரஷ்யா இத்தகைய ஒரு இரசாயனத்தை தயாரிக்க முடியும் என்பதாலும் “ரஷ்யா அரசு-ஆதரவுடனான படுகொலைகளை நடத்துகின்ற செயல்வரலாறு கொண்டது என்ற காரணத்தாலும், சில விசுவாசம் தவறுபவர்களை படுகொலைகளுக்கான நியாயமான இலக்குகளாக ரஷ்யா பார்க்கிறது என்ற நமது மதிப்பீட்டின் படி... சேர்ஜி மற்றும் யூலியா ஸ்கிரிபாலுக்கு எதிரான செயலுக்கு ரஷ்யாதான் அநேகமாய் பொறுப்பாயிருந்திருக்கும் என்ற முடிவுக்கு அரசாங்கம் வந்திருக்கிறது” என்று வெறுமனே அவர் திட்டவட்டம் செய்தார்.
மே கூறினார், “ஆகவே மார்ச் 4 அன்று சாலிஸ்பரியில் நடந்ததற்கு புரிந்துகொள்ளத்தக்கவிதத்தில் இரண்டு விளக்கங்களே இருக்க முடியும். ஒன்று இது நமது நாட்டிற்கு எதிரான ரஷ்ய அரசின் நேரடியான நடவடிக்கையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் ரஷ்ய அரசாங்கம் இந்த பேரழிவு சாத்தியம் கொண்ட நரம்புத்தாக்குதல் இரசாயனத்தின் மீதான கட்டுப்பாட்டை இழந்து, அது மற்றவர்களின் கைகளில் கிடைப்பதற்கு அனுமதித்திருக்க வேண்டும்.”
வெளியுறவுச் செயலரான போரிஸ் ஜோன்சன் “ரஷ்யத் தூதரை வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகத்திற்கு அழைத்து இந்த இரண்டு சாத்தியங்களில் எது நடந்தது என்பதை விளக்குமாறு அவரிடம் கேட்டார்.”
ரஷ்யக் கூட்டமைப்பு, “நோவிசோக் குறித்த முழுமையான விவரங்களை இரசாயன ஆயுதங்கள் ஒழிப்பு அமைப்பிடம் வழங்குவதற்கு” இன்றிரவுடன் முடிவடைகின்ற 24 மணி நேரக் கெடுவை அரசாங்கம் விதித்திருக்கிறது.
மே அரசாங்கத்தின் பொறுப்பற்ற நடவடிக்கைகள், ஐக்கிய இராச்சியத்தை ரஷ்யாவுடனான போரின் விளிம்புக்கு இழுத்துச் செல்கின்றன.
ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு முழுமையிலும் “ரஷ்ய அரசு மூர்க்கத்தனத்தின் ஒரு நன்கு-ஸ்தாபகமான போக்கு”க்கான பதிலிறுப்பு என மே தனது நிலைப்பாட்டை முன்வைத்தார். “கிரிமியாவை ரஷ்யா சட்டவிரோதமாக இணைத்துக் கொண்டதானது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் முதன்முறையாக ஐரோப்பாவில் இறையாண்மையுடனான ஒரு நாடு, இன்னொரு நாட்டிடம் இருந்து பிராந்தியத்தை வலுக்கட்டாயமாக பறித்துக் கொண்டதாக இருந்தது” என்று அவர் அறிவித்தார். “டோன்பாஸில் மோதலுக்கு உரம்போடுகிறது” என்றும், “ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் தேசிய வான்பகுதிகளை தொடர்ச்சியாக மீறுகிறது” என்றும் அத்துடன் “தேர்தல்களில் தலையீடு செய்தமை, டேனிஷ் பாதுகாப்புத் துறை மற்றும் நாடாளுமன்றத்தின் வலைத் தளங்களை ஊடுருவியமை, இன்னும் பல உள்ளிட” “தொடர்ச்சியான இணைய வேவு மற்றும் இடைஞ்சல் பிரச்சாரம் செய்கிறது” என்றும் அவர் ரஷ்யா மீது குற்றம்சாட்டினார்.
மே தொடர்ந்தார், “ஜனாதிபதி புட்டின் சமீபத்தில் வழங்கிய நாடாளுமன்ற கூட்டுக்கூட்ட உரையின் போது ஏவுகணை ஏவல்கள், விமானப் பயணப் பாதைகள் மற்றும் வெடிப்புகளின் வரைபடக் காணொளியை காட்டினார், ஃபுளோரிடா வரை சென்று தாக்கும் வரிசையான வெடிப்புஏவுகணைகளுடன் அமெரிக்கா மீதான தாக்குதல்களுக்கான மாதிரியும் இதில் இடம்பெற்றிருந்தது.”
புதன்கிழமையன்று ”ரஷ்ய அரசிடம் இருந்தான பதிலை” தனது அரசாங்கம் விரிவாகப் பரிசீலனை செய்யும் என்று அவையில் கூறிய மே, “நம்பகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என்றால், இது ஐக்கிய இராஜ்ஜியத்திற்கு எதிராக ரஷ்ய அரசு சட்டவிரோதமாகப் படைவலிமையைப் பிரயோகித்ததற்கு நிகரானது என்ற முடிவுக்கு நாங்கள் வருவோம். அதன்பின் மறுபடியும் நான் இந்த அவைக்கு வந்து நாம் பதிலாக எடுக்கவிருக்கும் முழு வீச்சிலான நடவடிக்கைகளை விவாதிப்போம்” என்றார்.
மேயின் உரைக்கு சில மணி நேரங்கள் முன்பாக, ரியர் அட்மிரலும், ஐக்கிய இராஜ்ஜிய கடற்படைகளது முன்னாள் தளபதியும், நேட்டோவின் “உயர் ஆயத்தமிக்க” கடற்படைகளுக்கு தளபதியாக இருந்தவருமான அலெக்ஸ் பேர்ட்டன், பிரிட்டன் ஒரு “நம்பகமான இராணுவ சக்தியாக” அதன் அந்தஸ்தை தொலைக்கின்ற அச்சுறுத்தலில் இருந்ததாக தெரிவித்தார். ரஷ்யாவிடம் இருந்தான அச்சுறுத்தலை மேற்கோளிட்ட அவர், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதம் வரையாவது -ஆண்டுக்கு கூடுதலாக 7.7 பில்லியன் பவுண்டுகள்- இராணுவ செலவினத்திலான ஒரு பெரும் ஊக்குவிப்புக்கு அழைப்புவிடுத்தார்.
முன்நிறுத்தப்படுகின்ற அபாயங்கள் இலண்டனில் உள்ள ரஷ்ய தூதரகம் விடுத்த அறிக்கைகள் மூலம் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகின்றன, “நமது உறவுகளுக்கு மிகத் தீவிரமான நீண்ட-கால பின்விளைவுகளைக் கொண்டுவரக்கூடிய ஆபத்து கொண்ட” ஒரு “மிக அபாயகரமான விளையாட்டை” விளையாடுவதாக பிரிட்டிஷ் அரசாங்கத்தை அது குற்றம்சாட்டியது.
மேயின் கருத்துக்கள் அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியை மையமாகக் கொண்ட, அமெரிக்காவின் இராணுவ மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் சக்திவாய்ந்த பிரிவுகளுடன் —ட்ரம்ப் நிர்வாகத்தின் குறிப்பிட்ட மட்டத்திற்கான எதிர்ப்பையும் எதிர்த்து ரஷ்யாவுக்கு எதிரான ஒரு மோதலுக்கு இவர்கள் நெருக்குதலளித்து வருகின்றனர்— நெருக்கமாய் ஒத்துழைத்து வரைவு செய்யப்பட்டிருக்கக் கூடும்.
சென்ற வாரத்தில் அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குநரான டான் கோட்ஸ் செனட் ஆயுத சேவைகள் குழு விசாரணையில், 2018 இடைத் தேர்தல்களில் ரஷ்யா தலையீடு செய்ய முயலுகின்றதான எந்தவித ஆதாரத்தையும் தான் காணவில்லை என்றும், ஆனால் மாஸ்கோ அவ்வாறு செய்ய முயலுவதற்கான “அநேக வாய்ப்புகள்” உள்ளன எனவும் தெரிவித்தார். அமெரிக்க கருவூலத் துறை இந்த வாரத்திலேயே ரஷ்யா மீது தடைகளை அறிவிக்க அவர் எதிர்பார்த்தார். கருவூலச் செயலரான ஸ்டீவன் ம்னுசின் இதேபோன்றதொரு அறிவிப்பை செய்தார், ட்ரம்ப் இந்த நடவடிக்கைகளுக்கு “முழு ஆதரவாக” இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.
நேற்று வாஷிங்டன் டிசியில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலரான சாரா ஹக்கபீ சாண்டர்ஸிடம் சாலிஸ்பரி சம்பவம் குறித்து மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டது. ரஷ்யாவை காரணமாக மே கூறுவதுடன் அமெரிக்கா உடன்படுகிறதா என்பதைக் கூற அவர் மறுத்து விட்டார், ரஷ்யா என்ற பெயரையே அவர் குறிப்பிடவில்லை. பதிலில் திருப்திபெறாததை தெளிவுறக் காட்டிய அந்த பத்திரிகையாளர், அமெரிக்கா புட்டின் அரசாங்கத்தின் மீது கைகாட்டுகிறதா என்று கேட்க, சாண்டர்ஸ் பின்வருமாறு பதிலளித்தார்: “இன்னும் சில விபரங்களைப் பெறுவதில் அவர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நாங்களும் தொடர்ந்து ஐக்கிய இராஜ்ஜியத்துடன் இணைந்து செயற்படுவோம்.”
அதேநாளில், ஐரோப்பிய ஒன்றியம், கிரீமியாவை ரஷ்யாவுடன் இணைத்துக் கொண்டதைத் தொடர்ந்து ரஷ்யாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடைகளை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்திருப்பதாகத் தெரிவித்தது.
மேக்கு பதிலளித்த தொழிற்கட்சித் தலைவர் ஜெரிமி கோர்பின், சாலிஸ்பரியில் நடந்திருக்கும் “ஆழ்ந்த எச்சரிக்கைக்குரிய தாக்குதலை” ஒட்டுமொத்த அவையும் கண்டனம் செய்திருப்பதாகக் கூறினார், அத்துடன் ரஷ்ய அதிகாரிகளிடம் இருந்து முழுமையான விபரங்கள் பெற அவசியமிருப்பதாகவும் தெரிவித்தார்.
ஐக்கிய இராஜ்ஜியத்தில் தங்கள் பணத்தை மறைத்து வைத்திருக்கும் ரஷ்ய நிதிப்பிரபுக்கள் மீது கடுமையான தடைகளை கொண்டுவருவதற்கு மேயிடம் அவர் வலியுறுத்தினார், “ரஷ்ய நிதிப்பிரபுக்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புபட்டவர்களிடம் இருந்து” பழமைவாதக் கட்சிக்கு 800,000 பவுண்டுகள் பெறுமதியான நன்கொடையளிப்பு இருந்திருக்கிறது என்பதை அவர் குறிப்பிட்டுக் காட்டினார்.
மேயின் போர்க்கூச்சலிடும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த சவாலும் விடுக்காத கோர்பின், அரசாங்கத்தை பின்வருமாறு எச்சரித்தார்: “வெறுமனே தொடர்பைத் துண்டித்துக் கொண்டு பதட்டங்களையும் பிளவுகளையும் இன்னும் மோசமானதாக, மிக அபாயகர சாத்தியமானதாக ஆகும்படி விடுவதைக் காட்டிலும்—உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் நமது இரண்டு நாடுகளையும் பிளவுபடுத்துகின்ற அத்தனை பிரச்சினைகளிலும் ரஷ்யாவுடன் ஒரு செயலூக்கமான பேச்சுவார்த்தையை நாம் தொடர்ந்தும் எதிர்நோக்கியிருப்பதே அவசியமாகும்.”
அவரது இராஜதந்திர எச்சரிக்கையானது டோரிக்களிடம் இருந்து “அவமானம்!” மற்றும் “அவமரியாதை” என்று கூச்சல்களைக் கொண்டுவந்தது, அவரது சொந்தக் கட்சியில் இருந்த போர்வெறியர்களுக்கும் இது சகித்துக் கொள்ள முடியாததாக இருந்தது.
எவெட் கூப்பர், கிறிஸ் லெஸ்லி மற்றும் ஜோன் வூட்கோக் உள்ளிட்ட தொழிற்கட்சி எம்பிக்களின் ஒரு நீண்டவரிசையானது, “கட்சி அரசியலை முன்னெடுப்பதற்காக” கோர்பினை கண்டனம் செய்த அதேநேரத்தில் “சமாதானப்படுத்துபவர்களை” கண்டனம் செய்த டோரி இயன் டங்கன் ஸ்மித்தை எதிரொலித்து, ஒரு “ஒற்றுமையான பதிலை” கோரிய டோரிக்களுடன் இணைந்து கொண்டது.
“நமது நாடு தாக்குதலின் கீழ் இருப்பதாகக் கருதக்கூடிய” ஒருநேரத்தில் “கட்சி அரசியல் பேதங்களை” கையிலெடுப்பது “பொருத்தமற்றதாகும்” என்று தொழிற் கட்சியின் முன்னாள் நிழல் சான்சலர் கிறிஸ் லெஸ்லி வலியுறுத்தினார்.
அவரது சகாவான மைக் கேப்ஸ், சாலிஸ்பரி விஷமளிப்பு “ஒரு பயங்கரவாத நடவடிக்கை” என்று முத்திரையிட்டு “அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாய் நிற்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
கருவூலத்திற்கான தொழிற் கட்சியின் முன்னாள் தலைமைச் செயலரான லியாம் பைர்ன் தெரிவித்தார், “புதன்கிழமைக்குள்ளாக நாம் உண்மையிலேயே சண்டைக்கு இழுக்கப்பட்டிருப்பதாக பிரதமருக்குத் தெரியவருமேயானால், ஒரு பொதுவான அச்சுறுத்தலை முகம்கொடுக்கும் சமயத்தில் ஒற்றுமையையும் மன உறுதியையும் அவர் இந்த அவையில் காண்பார்.”
முன்னாள் நிழல் போக்குவரத்து அமைச்சரான ஜோன் வூட்கோக் -இவர் முன்னதாக கோர்பினை பிரதமராக ஆதரிக்க முடியாது என்று கூறியிருந்தவர்- 10வது எண்ணில் இருக்கும் தொழிற்கட்சித் தலைவர் ஐக்கிய இராஜ்ஜியத்தின் தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தலாக ஆகலாம் எனத் தெரிவித்தார்.
“இன்று அவையில் பிரதமர் குரல்கொடுத்த மீண்டெழும் உணர்ச்சியின் மட்டமானது பல ஆண்டுகள் காலத்தை எடுத்தபின் வந்திருக்கிறது, ஆயினும் இது பெரும் வரவேற்புக்குரியதாகும்” என்றார் அவர். “உண்மையில், ரஷ்யா இந்த நாட்டிற்கு முன்நிறுத்துகின்ற அச்சுறுத்தலின் வீரியத்தைப் புரிந்துகொள்ளாத எவரேனும் ஒருவரால், நாம் தலைமை கொடுக்கப்பட்டால் அது நமது தேசப் பாதுகாப்பை கணிசமான ஆபத்தில் நிறுத்தக் கூடியதாகும்.”
கார்டிஃப் சவுத் மற்றும் பெனார்த்திற்கான தொழிற் கட்சி எம்பியான ஸ்டீபன் டோட்டி கூறினார்: “ரஷ்யா ருடே [RT] இன் ஒளிபரப்பு உரிமத்தை மறுஆய்வு செய்வதை பரிசீலிப்பதற்கு கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுத் துறைக்கான அரசுச் செயலருடன் பேசுவதற்கு நான் பிரதமரை வலியுறுத்தலாமா? அத்துடன் அவர்களின் ஒளிபரப்பை இந்தக் கட்டிடத்திலும் தடைசெய்வது குறித்து அவை அதிகாரிகளுடன் பேசுவதற்கும் சேர்த்து.”
ரோஹ்ண்டா தொகுதி எம்பியும், தொழிற் கட்சியின் முன்னாள் அமைச்சருமான கிறிஸ் பிரையண்ட் கோரினார்: “ரஷ்யா ருடே இந்த நாட்டில் அதன் பிரச்சாரத்தை ஒளிபரப்புவதை நாம் நிறுத்தி விட்டால் என்ன?”