Print Version|Feedback
Oppose Sinhala racist violence against Muslim community in Sri Lanka
இலங்கையில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான சிங்கள இனவாத வன்முறையை எதிர்ப்போம்
By the Socialist Equality Party
10 March 2018
இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), நாட்டில் முஸ்லீம்களுக்கு எதிராக சிங்கள-பௌத்த இனவாத கும்பல்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரமான வன்முறையை கண்டனம் செய்கின்றது.
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையின் ஆளும் உயரடுக்கு நாட்டின் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான 26 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. தமிழர்-விரோத பிரச்சாரத்தை தொடரும் அதேவேளை, இப்போது அது இன்னொரு சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக இரத்தக் களரிக்கு தயார் செய்கின்றது.
சோ.ச.க. தொழிலாளர்கள், இளைஞர்கள், கிராமப்புற ஏழைகள் மற்றும் முற்போக்கு புத்திஜீவிகளை, இந்த வன்முறைகளை எதிர்க்குமாறும் அதிலிருந்து கடுமையான எச்சரிக்கைகளை பெறுமாறும் கேட்டுக்கொள்கின்றது. குவிந்து வரும் சமூக எதிர்ப்புக்கு முகங்கொடுக்கும் அரசாங்மும் ஆளும் வர்க்கமும் சர்வாதிகார ஆட்சிக்கு தயாராகி வரும் நிலையில், உழைக்கும் மக்களை திசைதிருப்பவும் பிளவுபடுத்தவும் முஸ்லீம்-எதிர்ப்பு வகுப்புவாதத்தை பயன்படுத்துகின்றன.
இந்த வன்முறையின் ஏற்பாட்டாளர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தினாலும், அதேபோல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) உட்பட எதிர்க்கட்சிகளாலும் பலப்படுத்தப்பட்டு ஆதரிக்கப்படுகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை, மத்திய கண்டி மாவட்டத்தின் தெல்தெனிய-திகன பிரதேசத்தில் தொடங்கிய அண்மைய வன்முறை, உடனடியாக அருகிலுள்ள சிறிய நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் பரவியது. அன்றைய தினம், மார்ச் 3 அன்று நடந்த ஒரு சாதாரண வீதி விபத்தின் பின்னர் ஏற்பட்ட கைகலப்பில் காயமடைந்து உயிரிழந்த ஒரு சிங்கள லாரி சாரதியின் மரணச் சடங்குகள் இடம்பெற்றிருந்தன. சிங்கள-பௌத்த அதிதீவிரவாதக் குழுக்கள், முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளைத் தொடங்குவதற்கு இந்த சம்பவத்தை சுரண்டிக்கொண்டன.
பாசிச குழுவான பொதுபல சேனாவின் தலைவர்கள், வன்முறைகள் தொடங்குவதற்கு முன் அந்த மரண வீட்டுக்கு வந்திருந்தமை, அரசாங்கம் மற்றும் எதிர்க் கட்சிகளின் ஆசீர்வாதத்தைப் பெற்ற அதிதீவிரவாத கும்பல்களின் தலையீட்டை குறித்துக் காட்டுகின்றன.
ஒப்பீட்டளவில் ஒரு சிறிய பகுதிக்கு அரசாங்கம் அவசரகால நிலையை பிரகடனம் செய்து, ஊரடங்கு சட்டங்களை அமுல்படுத்தி மற்றும் சுமார் 7,000 இராணுவ மற்றும் பொலிஸ் சிப்பாய்களை நிலைநிறுத்தியிருந்த போதும், முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் குறையாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்தக் கும்பல்களின் நன்கு திட்டமிடப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த செயற்பாடுகளை, பாதுகாப்பு படைகள், பொலிஸ் மற்றும் ஆளும் தட்டின் பிரிவுகளின் உடந்தை இல்லாமல் முன்னெடுக்கப்பட முடியாது.
திங்கட்கிழமை மாலை முதல் கண்டி மாவட்டத்தில் மீண்டும் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடைகள் மூடப்பட்டு, கண்டி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் வாகன போக்குவரத்துகள் குறைக்கப்பட்டுவிட்டன அல்லது நிறுத்தப்பட்டுள்ளன. மக்கள், வன்முறை நாட்டின் பிற பகுதிகளுக்கு பரவக்கூடும் என்ற அச்சத்தில் உள்ளனர்.
சமீபத்திய தாக்குதல்கள், இராஜபக்ஷவின் கீழ் தொடங்கி தற்போதுள்ள அரசாங்கத்தின் கீழும் தொடரும் முஸ்லிம்களுக்கு எதிரான உக்கிரமடைந்து வரும் பிரச்சாரங்கள், ஆத்திரமூட்டல்கள் மற்றும் வன்முறைத் தாக்குதல்களின் ஒரு பகுதியாகும்.
புதன்கிழமையன்று, சிரேஷ்ட அரசாங்க அமைச்சர் சரத் அமுனுகம, குண்டர்கள் ஏனைய பிரதேசங்களில் இருந்து அழைத்து வரப்பட்டார்கள் என்றும், ஓய்வுபெற்ற மற்றும் சேவையில் உள்ள பாதுகாப்புப் படையினரின் இந்த வன்முறைகளில் ஈடுபட்டுள்ளதற்கான சான்றுகள் உள்ளன என்றும் ஒப்புக்கொள்ளத் தள்ளப்பட்டார். குண்டர் கும்பல்களால் கடைகள் மற்றும் வீடுகள் தாக்கப்படும் போது, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (எஸ்.டி.எஃப்) அதைப் பார்த்துக்கொண்டிருப்பதை காட்டும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைத் தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. கண்கண்ட சாட்சிகள் இதை உறுதிப்படுத்தியுள்ளன.
செவ்வாயன்று ஜனாதிபதி சிறிசேன பிரகடனம் செய்த அவசரகால நிலைமையின் கீழ், கைது ஆணை இல்லாமல் கைது செய்து தடுத்து வைப்பது உட்பட பரந்த அளவிலான ஒடுக்குமுறை அதிகாரங்கள் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் 20 வருட சிறைத் தண்டனை அல்லது ஆயுட்கால தண்டனைக்கு உள்ளாகலாம். அரசாங்கம் செவ்வாய் கிழமையிலிருந்து முகநூல், வட்ஸ்அப், வைபர் போன்ற சமூக ஊடகங்கள் மீது கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படைகள் 146 பேரைக் கைது செய்துள்ளன, அவர்களில் சிலர், தாக்குதல்களைத் திட்டமிட்ட தலைவர்கள் எனக் கூறப்படுகின்றது. கைது செய்யப்பட்ட சில தலைவர்கள் பெளத்த கோவில்களில் மறைந்து இருந்ததாக கூறப்படுகிறது. "நிலைமை சாதாரணமாகி விட்டது" என்று கூறுவதற்கு அரசாங்கம் அவசரப்படுகின்றது.
அரசாங்க தலைவர்கள், எதிர்க்கட்சி மற்றும் ஊடகங்களும், அதேபோல் ஐ.நா.வும் அமெரிக்காவும் "வன்முறையிலிருந்து விலகி", "அமைதியாக இருக்க வேண்டும்" என்று மக்களை வலியுறுத்தியுள்ளன. இந்த அறிக்கைகளில் பாசாங்குத்தனத்தின் துர்நாற்றம் வீசுகிறது. இது, இந்த குற்றங்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாளிகள் அல்லாத, உண்மையில், இனவாத படுகொலை சம்பந்தமாக தமது கோபத்தை வெளிப்படுத்துகின்ற தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகளுக்கு ஒரு அவமதிப்பு ஆகும்.
அவசரகால நிலையை பிரகடனப்படுத்திய பின்னர் ஒரு "விசேட அறிக்கையில்", "இதில் சம்பந்தப்பட்டவர்கள் கடுமையாக நடத்தப்படுவார்கள்," என சிறிசேன கூறினார். எவ்வாறெனினும் அவர், சிங்கள-பௌத்த அதிதீவிரவாத குழுக்களை முன்நின்று ஆதரிக்கும் பௌத்த உயர் பீடத்தை சந்திப்பதற்காக புதனன்று கண்டிக்குப் பறந்தார்.
அதே போல், அரசாங்கம் "அனைத்து இனவாத மற்றும் வன்முறை நடவடிக்கைகளை கண்டனம் செய்கின்றது" என்று விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் பிரகடனம் செய்தார். பல "நாசவேலை நடவடிக்கைகளை" திட்டமிடும் "அதிகார பேராசை" கொண்ட "பிரிவுகளை" அவர் குற்றம் சாட்டினார். எனினும் அவர் பெயர் குறிப்பிடவில்லை.
வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்துவதாகவும், "நல்லிணக்கம்" மற்றும் ஜனநாயக உரிமைகளை ஸ்தாபிப்பதாகவும் வாக்குறுதியளித்தே 2015ல் சிறிசேனவும் விக்கிரமசிங்கவும் பதவிக்கு வந்தனர். அவர்கள் இராஜபக்ஷவின் ஒடுக்குமுறை ஆட்சி மீதான வெகுஜனங்களின் கோபத்தை சுரண்டிக் கொண்டனர். ஆயினும், கடந்த மூன்று ஆண்டுகளில், வாழ்க்கை நிலைமைகள் மீதான அரசாங்கத்தின் தொடர்ச்சியான தாக்குதல்களும், சர்வதேச நாணய நிதியம் ஆணையிடும் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தியதும், உழைக்கும் மக்களிடையே ஆழமான விரோதத்தை தூண்டியுள்ளது.
ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் மீதான கொடூரமான பொலிஸ் தாக்குதல்களுடன் சேர்த்து, அரசாங்கமானது திட்டமிட்டு முஸ்லிம்-விரோத மற்றும் தமிழர்-விரோத ஆத்திரமூட்டல்களை நடத்தி வருகின்ற பொதுபல சேனா, சிஹல ரவய, ராவண பலகாய போன்ற அதிதீவிரவாத குழுக்களை சுதந்திரமாக செயற்பட விட்டுள்ளது. இந்த குழுக்கள் மசூதிகள், முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகள் மற்றும் வீடுகள் மீதான தாக்குதலுக்குப் பிறகும் விதிவிலக்கு பெற்றிருக்கின்றன. பொதுபல சேனா தலைவர்கள் உட்பட இத்தகைய அதிதீவிரவாதிகளை சாந்தப்படுத்துவதற்காக அவர்களை சிறிசேனவே சந்தித்துள்ளார். சிறிசேனவும் விக்ரமசிங்கவும் பலமுறையும் நாட்டின் சிங்கள பௌத்த பண்பை பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாக அறிவித்துள்ளனர். இதன் மூலம் பேரினவாத சக்திகளுக்கு ஊக்கமளித்துள்ளனர்.
ஆழமான அரசியல் நெருக்கடி
அரசாங்கம் மற்றும் ஆளும் வர்க்கத்தினதும் மிகத் தீவிர நெருக்கடியின் மத்தியில் முஸ்லிம்-விரோத வன்முறைகள் தூண்டிவிடப்பட்டுள்ளது தற்செயலானது அல்ல. அரசாங்கம் அதன் சிக்கன நடவடிக்கைகளுக்கு பாரிய வெகுஜன எதிர்ப்பை முகங்கொடுக்கின்றது. கடந்த மாதங்களில் கிட்டத்தட்ட அனைத்து அரசாங்கத்துறை ஊழியர்களும் சம்பள உயர்வு மற்றும் சிறந்த வேலை நிலைமைகளுக்கான போராட்டத்தில் ஈடுபட்டனர். சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம்களுமாக அனைத்து சமூகங்களின் விவசாயிகளும் மாணவர்களும் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைக் கோரி ஆர்ப்பாட்டங்களில் இணைந்துகொண்டனர்.
உக்கிரமடைந்து வரும் வெகுஜன எதிர்ப்பின் விளைவாக, ஆளும் பங்காளிக் கட்சிகளான சிறிசேனவின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) மற்றும் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியும் (ஐ.தே.க.) கடந்த மாதம் நடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெரும் தோல்வியைக் கண்டன. அநேகமானவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக தங்கள் கோபத்தை வெளிப்படுத்த இராஜபக்ஷவின் ஸ்ரீ.ல.பொ.ஜ.முன்னணிக்கு வாக்களித்தார்களே அன்றி, அதை ஆதரிப்பதால் வாக்களிக்கவில்லை.
இந்த அரசியல் பேரழிவுக்கு ஆளும் கட்சிகள் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டிக்கொள்வதுடன், இந்த தோல்வி அரசாங்கம் கவிழும் நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளது. அமெரிக்க மற்றும் இந்திய இராஜதந்திர தலையீட்டின் விளைவாக அரசாங்கம் தற்காலிகமாக ஒட்டுப் போடப்பட்டுள்ளது. சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் புவிசார் மூலோபாயத்துடன் தன்னை அடிமைத்தனமாக இணைத்துக் கொண்டுள்ள அமெரிக்க-சார்பு அரசாங்கம் கவிழ்வதைத் தவிர்க்க இந்த இராஜத்திரிகள் முயன்றனர்.
இலங்கையில் அரசியல் எழுச்சிகள் மற்றும் ஆழமடைந்து வரும் பொருளாதாரப் பிரச்சினைகள், உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியினால் உக்கிமடைந்துள்ளன. மத்திய வங்கி தலைவர் இந்திரஜித் குமாரசுவாமி, பொருளாதார வளர்ச்சி சரிவு, கடன் திருப்பிச் செலுத்தல் அதிகரிப்பு மற்றும் சர்வதேச நிதி கொந்தளிப்பின் காரணமாக, நாடு "விளிம்பில்" உள்ளது என அறிவித்துள்ளார்.
இராஜபக்ஷ, வன்முறைக்கு "பொறுப்பானவர்கள் மீது சட்டத்தை முழு கடுமையுடன்" பயன்படுத்த பொலிசுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இருப்பினும், முஸ்லீம்கள் "இனவாத அரசியல் கட்சிகளை நோக்கி ஈர்க்கப்படுவதாக" அவர் வஞ்சத்தனமாக குற்றம் சாட்டினார். இது சிங்கள மற்றும் முஸ்லீம்களுக்கு இடையே மோதல்களை உருவாக்குவதற்காக "ஆத்திரமூட்டல் முகவர்களைப்" பயன்படுத்துவதற்கு "உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சதிகாரர்களுக்கு" வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது என்று அவர் கூறினார்.
சிங்கள மற்றும் பௌத்த அதிதீவிரவாத குழுக்கள், "முஸ்லிம் இனவாதத்திற்கு" பிரதிபலிப்பாகவே தோன்றின என இராஜபக்ஷ கூறிக்கொள்கின்றார். உண்மையில், பொதுபல சேனா அவரது ஆட்சியின் வெளிப்படையான ஆசீர்வாதத்துடனேயே 2012ல் உருவானது. இந்த சக்திகளை பாதுகாத்து ஆதரிப்பதன் மூலம், இராஜபக்ஷ அதிகாரத்திற்கு வருவதற்கு வலதுசாரி இயக்கத்தை கட்டியெழுப்பவும், தொழிலாள வர்க்க எதிர்ப்பை நசுக்கவும் முயற்சிக்கின்றார்.
பாராளுமன்றத்தில் பேசிய மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுர குமார திசாநாயக்க, ஆட்சியை தொடர இனவாதத்தை தூண்டி விடுவதாக அரசாங்கத்தையும் எதிர்க் கட்சியையும் குற்றஞ்சாட்டினார். ஜே.வி.பி.யின் தலைவர்கள் சிங்கள பேரினவாதத்திற்கு எதிரான போராளிகளாக போலித்தனமாக காட்டிக்கொள்கின்றனர். ஜே.வி.பி., அதன் ஆரம்பத்திலிருந்தே சிங்கள தேசபக்திவாத்தை ஆதரித்ததோடு, தமிழர்களுக்கு எதிரான இனவாத யுத்தத்திற்கு ஆதரவளித்ததுடன், அரசியலமைப்பில் பெளத்தம் அரச மதமாக ஸ்தாபித்திருப்பதையும் ஏற்றுக்கொண்டது.
திஸ்ஸநாயக்க புதனன்று, மல்வத்த பீடத்தின் முன்னணி பௌத்த மதகுருவைக் காணச் சென்று, நெருக்கடி சம்பந்தமாக ஆலோசனை பெற்று, தனது கட்சியின் இனவாத நம்பகத்தன்மையை நிர்வாணமாகக் காட்டினார். ஜே.வி.பி., அரசாங்கம் "இனவாதத்திற்கு எதிராக சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்" என்று கோருகிறது. இது அரசாங்கத்தின் கைகளையும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக பயன்படுத்தப்படும் அரச இயந்திரங்களையும் மட்டுமே பலப்படுத்தும்.
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உட்பட முஸ்லீம் முதலாளித்துவக் கட்சிகளும், "முஸ்லீம்களை பாதுகாப்பதற்காக", "கண்ட இடத்தில் சுடுவது" உட்பட பொலிஸ் அரச அதிகாரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. இந்த கட்சிகள், சாதாரண தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் ஜனநாயக உரிமைகளை அன்றி, முஸ்லிம் முதலாளித்துவ தட்டுக்களின் நலன்களை பாதுகாப்பதற்கு ஆட்சியில் உள்ள அரசாங்கங்களுடன் கொண்டுள்ள அழுகிப்போன கூட்டணிகள் அம்பலத்துக்கு வந்துவிடும் என்பதைப் பற்றி பீதியடைந்துள்ளன.
1948ல் சுதந்திரம் எனப்படுவது கிடைத்த உடனேயே, ஐ.தே.க. அரசாங்கம் தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமையை அபகரித்தது. அப்போதிலிருந்து, முதலாளித்துவ ஆட்சியின் ஒவ்வொரு நெருக்கடியிலும், உழைக்கும் மக்களை பலவீனப்படுத்தி அடக்குவதற்கும் பிளவுபடுத்துவதற்கும் இனவாதத்தை பயன்படுத்தி வருகின்றன.
சிங்களத்தை மட்டும் அரச மொழியாகவும் பௌத்த மதத்தை அரச மதமாகவும் ஆக்கி, தமிழர்-விரோத பாரபட்சங்கள் தீவிரமாக்கப்பட்டமை, 1983ல் இருந்து பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஒரு முழுமையான இனவாத யுத்தம் வெடிப்பதற்கான நிலைமையை உருவாக்கியது. அப்போதைய தொழிலாள வர்க்க கட்சியான லங்கா சமசமாஜக் கட்சி, 1964ல் முதலாளித்துவ கூட்டணி அரசாங்கத்திற்குள் நுழைந்ததன் மூலம் செய்த காட்டிக் கொடுப்பு, இந்த பிற்போக்கு போக்குக்கு வசதியளித்தது.
தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்கான போராட்டத்தின் பாகமாக சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் இனப் பிளவுகளுக்கு குறுக்காக, தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துகின்றன ஒரு ஐக்கிய சோசலிச இயக்கத்தை கட்டமைப்பதன் மூலம் மட்டுமே, ஆளும் வர்க்கத்தின் மற்றும் அரசாங்கத்தின் தாக்குதல்களை தோற்கடிக்க முடியும். இனவாதம், பாகுபாடு மற்றும் ஒடுக்குமுறையின் தோற்றுவாயான முதலாளித்துவத்தை தூக்கி வீசும் போராட்டத்தில் மட்டுமே அனைத்து மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை அடைய முடியும்.
இந்த போராட்டத்திற்காக, சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), தொழிலாள வர்க்கத்தை ஒரு சோசலிச வேலைத்திட்டத்தில் ஐக்கியப்படுத்தவும், கிராமப்புற ஏழைகள் மற்றும் இளைஞர்களின் ஆதரவைப் பெறவும் நடவடிக்கை குழுக்களை அமைக்க அழைப்பு விடுகிறது.
அண்மையில் நடந்த சம்பவங்கள், எந்தவொரு சமூகத்தின் உழைக்கும் மக்களும் தங்கள் பாதுகாப்பிற்காக முதலாளித்துவ அரசின் படைகளை நம்பியிருக்க முடியாது என்பதை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளன. அவர்கள், உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தில் தங்களைக் காப்பாற்ற ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட இத்தகைய குழுக்களை ஸ்தாபிக்க வேண்டும்.
இந்த போராட்டத்தின் மூலம், சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக, சோசலிசக் கொள்கைகளை செயல்படுத்த தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டுவர உழைக்கும் மக்கள் ஐக்கியப்பட வேண்டும். தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் முற்போக்கான புத்திஜீவிகளை எங்கள் கட்சியில் சேரவும் இந்த வேலைத்திட்டத்திற்காக போராடவும் சோ.ச.க. வலியுறுத்துகிறது.