Print Version|Feedback
The arrest of Catalan President Carles Puigdemont: Another step toward a police state in Europe
கட்டலான் தலைவர் கார்லஸ் புய்க்டெமொன்ட் கைது: ஐரோப்பாவில் போலிஸ் அரசை நோக்கிய இன்னொரு நடவடிக்கை
Peter Schwarz
27 March 2018
முன்னாள் கட்டலான் முதல்வர் கார்லஸ் புய்க்டெமொன்ட் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டிருப்பது ஐரோப்பாவில் ஒரு போலிஸ் அரசு அபிவிருத்தி காண்பதை நோக்கிய ஒரு முக்கிய நடவடிக்கை ஆகும். பயங்கரவாதத்தை எதிர்த்து போரிடுவதான சாக்கிலும் அகதிகள் மீதான ஒடுக்குமுறையின் சாக்கிலும் எழுந்திருந்த ஐரோப்பிய அளவிலான போலிஸ்-அரசு நடவடிக்கைகள் இப்போது அரசியல் எதிரிகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
புய்க்டெமொன்ட்டின் கைது ஒரு ஐரோப்பிய கைது ஆணையின் அடிப்படையில் நடத்தப்பட்டது. இந்த ஆணைகள் 2004 இல், ஐரோப்பிய உறுப்பு நாடுகளிடையே உள்முகமான எல்லைக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றுக்கிடையில் குற்றவாளிகளை பிடித்து ஒப்படைக்கும் நிகழ்முறையை எளிதாக்கும் பொருட்டு அறிமுகம் செய்யப்பட்டன. பயங்கரவாதம், ரவுடி கும்பல்கள், ஆள் கடத்தல்கள், போதைமருந்து கடத்தல் மற்றும் பிற தீவிரமான குற்றங்களை எதிர்த்துப் போராடுவதே அவற்றின் நோக்கமாக சொல்லப்பட்டது.
அப்போதிருந்தே, ஐரோப்பிய உறுப்பு நாடுகளிடையே போலிஸ், உளவு சேவைகள் மற்றும் நீதித் துறைகள் தமது ஒத்துழைப்பை தீவிரப்படுத்தி வந்திருக்கின்றன. புய்க்டெமொன்ட்டின் கைது ஸ்பானிய உளவுத் துறையால் திட்டமிடப்பட்டிருந்தது, அது அவரை ஐரோப்பாவெங்கிலும் 10 முதல் 12 முகவர்கள் கொண்டு பின்தொடர்ந்து கொண்டிருந்தது. புய்க்டெமொன்ட்டின் கார் மற்றும் பயணப்பாதை குறித்தெல்லாம் முன்கூட்டியே ஸ்பானிய உளவுத்துறையால் ஜேர்மனியின் கூட்டரசாங்க குற்றவியல் புலனாய்வு போலிஸ் அலுவலகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்களுடன் நெருக்கமான கலந்தாலோசனைக்குப் பின்னர் இந்த கைது ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
புய்க்டெமொன்ட்டுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எத்தனை மோசடியானவையோ அந்த அளவுக்கு கபடத்தனமானவையுமாகும். அவரது ”குற்ற”த்தில் ஸ்பெயினில் இருந்து கட்டலோனியாவைப் பிரிப்பதற்கான கோரிக்கையை —இதற்கு ஒரு நெடிய அரசியல் வரலாறு உள்ளது— முன்னெடுத்ததற்கு மேலான வேறெதுவொன்றும் இல்லை. இந்த இலக்கை சாதிப்பதற்கு அவர் வன்முறைக்கு அழைப்பு விடவோ அல்லது அச்சுறுத்தவோ இல்லை. தேர்தல், நாடாளுமன்றத் தீர்மானங்கள், மற்றும் ஆர்ப்பாட்டங்கள் ஆகிய அமைதியானதும் ஜனநாயகரீதியானதுமான வழிமுறைகளையே கட்டலான் பிரிவினைவாதிகள் நம்பியிருந்து வந்துள்ளனர்.
பிரிவினைவாதத்தை ஆலோசனையளிப்பது ஒரு குற்றம் என மாட்ரிட்டின் வலது-சாரி ஆட்சி கூறுவதை ஜேர்மன் அரசு ஏற்றுக் கொள்கிறது. ஆனால் யூகோஸ்லாவியா விடயத்தில், 1990களில் பெருந்துயரகரமான விளைவுகளுடன் அந்த அரசை உடைப்பதற்கு ஜேர்மனி தாட்சண்யமற்று நடவடிக்கைகள் எடுத்தது. எப்போதும் போலவே, ஜேர்மன் ஆளும் வர்க்கத்தின் கொள்கைகள் அதன் புவியரசியல் மற்றும் பொருளாதார நலன்களாலேயே தீர்மானிக்கப்படுகின்றன.
புய்க்டெமொன்ட்டும் இன்னும் 24 கட்டலான் அரசியல்வாதிகளும் “கிளர்ச்சி” குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுக்கின்றனர், இது அதிகபட்சமாய் 30 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அளிக்கத்தக்க குற்றச்சாட்டு ஆகும். ஜேர்மனியின் குற்றவியல் சட்டத்தில் இதற்கு நிகரான குற்றமானது, —புயுக்டெமோண்ட் கைதுசெய்யப்பட்டு ஒப்படைக்கப்படுவதற்கு அடிப்படையான காரணமாய் இதுவே சேவை செய்யக் கூடும்— “கூட்டரசாங்கத்திற்கு எதிரான உயரிய தேசத்துரோக”த்திற்கு 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை தண்டனையளிக்கிறது.
இந்த இரண்டு குற்றங்களுமே வன்முறையைப் பயன்படுத்தியதை முன்னனுமானம் செய்கின்றன, ஸ்பானிய நீதிபதி பப்லோ லரினா, முற்றிலும் நியாயவானாகக் காட்டிக்கொள்கின்ற வாதங்களில் இறங்கி, கட்டலோனியத் தலைவர் வன்முறை நடவடிக்கைகள் குற்றத்தை ஒப்புக்கொண்டவர் என்பதாய் கூறினார். கட்டலான் அமைச்சரவைகளுக்கு எதிராக ஸ்பானிய பாதுகாப்புப் படைகள் நடத்திய சோதனைகளை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டங்களின் போது வன்முறையின் ஆபத்து இருந்ததை ஒப்புக்கொண்டதாக, புய்க்டெமொன்ட்மீது, அபத்தமான விதத்தில், அவர் குற்றம்சாட்டினார்.
தன்னிச்சையான நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக ரஷ்யா, துருக்கி மற்றும் மற்ற நாடுகள் மீது வாய் ஓயாமல் கண்டனம் செய்வதில் ஒருபோதும் களைப்படைந்திராத ஜேர்மன் அரசாங்கம், புய்க்டெமொன்ட் கைதுசெய்து ஒப்படைக்கப்படுவது என்ற சட்டரீதியான கபடநாடகத்தை ஆதரிக்கிறது. ஐரோப்பிய கைது ஆணை தொடர்பான ஜேர்மன் சட்டம் மற்றும் நெறிமுறைகளின் அடிப்படையில் இந்த கைது நடைபெற்றதாக ஜேர்மன் அரசாங்கத்தின் செய்தித்தொடர்பாளர் ஸ்ரெபான் ஸைய்பேர்ட் தெரிவித்தார். ஸ்பெயின் ஒரு ஜனநாயக, அரசியல்சட்ட அரசு, என்று அவர் கூறினார்.
ஜேர்மன் சட்டப் பேராசிரியர் ஒருவர் விரைந்து வந்து ஸைய்பேர்ட்டை பாதுகாத்துப் பேசினார். பேர்லினின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் ஐரோப்பிய குற்றவியல் சட்டப் பிரிவின் தலைவராக இருக்கின்ற மார்ட்டின் ஹேகர் Spiegel Online இடம் கூறினார், “கோட்பாட்டின் அடிப்படையில், சட்ட நிலை ஒளிவுமறைவற்றது: ஐரோப்பிய கைது ஆணை ஒன்று கொடுக்கப்படும்போது, அதற்கான நிபந்தனைகள் பூர்த்தியாகின்ற பட்சத்தில், அது மேற்கொள்ளப்படும்... ஆகவே இது தெளிவானது: ஜேர்மனி புய்க்டெமொன்ட்டை கைது செய்து ஒப்படைக்க வேண்டியிருக்கிறது.”
புய்க்டெமொன்ட் ஒரு முதலாளித்துவ-ஆதரவு அரசியல்வாதி ஆவார், அவரது கட்டலான் ஐரோப்பிய ஜனநாயகக் கட்சி (PDECat) ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தாராளவாத நாடாளுமன்றக் குழுவின் ஒரு அங்கத்தவராக இருக்கிறது. ஒரு முதலாளித்துவ-ஆதரவு, ஜனநாயகரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதி ஐரோப்பிய ஒன்றியத்தில் உயர்மட்ட தேசத் துரோகத்திற்காக வேட்டையாடப்படுகிறார் என்றால், முதலாளித்துவ ஆட்சியையே கேள்விக்குள்ளாக்கக் கூடிய வெகுஜன ஆர்ப்பாட்டங்களின் அல்லது ஒரு பொது வேலைநிறுத்தத்தின் தலைவர்கள் எவ்வாறு நடத்தப்படுவார்கள் என்பதை கற்பனை செய்து பார்ப்பது கடினமில்லை.
இதுவே ஒரு ஐரோப்பிய போலிஸ் அரசு நிலைநிறுத்தப்படுவதற்கும், பேர்லின் மற்றும் மாட்ரிட் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்புக்குமான மிக அடிப்படையான காரணமாகும். எதிர்ப்பு, தடுப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் அத்தனையையும் அச்சுறுத்துவதும் அடித்து நொருக்குவதுமே இலக்காக இருக்கிறது.
ஐரோப்பா கடுமையான வர்க்க மோதல்களின் விளிம்பில் இருக்கிறது. சமூக உறவுகள் உடையும் முனையில் நிற்கின்றன. கிட்டத்தட்ட எந்த ஐரோப்பிய நாட்டிலுமே ஒரு ஸ்திரமான அரசாங்கம் இருக்கவில்லை. ஸ்பானிய பிரதமர் மரியானோ ரஹோய் ஒரு சிறுபான்மை அரசாங்கத்துக்குத் தலைமையிலிருக்கிறார், அது பாரிய சமூக ஆர்ப்பாட்டங்களுக்கு முகம்கொடுத்து நிற்கிறது. சென்ற சனிக்கிழமை மட்டும் நூறாயிரக்கணக்கில் ஓய்வூதியதாரர்கள் வீதிகளில் இறங்கினர். அதேநாளில், பிரான்சில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் தொழிலாளர் சந்தை சீர்திருத்தங்களுக்கு எதிராக நடந்த பரவலான ஆர்ப்பாட்டங்களால் பிரான்ஸ் உலுக்கப்பட்டது. ஜேர்மனியில், ஆறு மாத நெருக்கடிக்குப் பின்னரே அதிகாரத்துக்கு வந்திருக்கக் கூடிய மாபெரும் கூட்டணியின் புதிய தவணைக்கு, இனியும் எந்த வாக்குப் பெரும்பான்மையும் கிடையாது.
ஐக்கிய இராஜ்ஜியத்தில், பத்தாயிரக்கணக்கான பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஒப்பந்தங்கள் தொடர்பான ஒரு கடும் சண்டையில் ஈடுபட்டிருக்கின்றனர். அமெரிக்கா, நாடெங்கிலும் ஆசிரியர்களின் ஒரு வேலைநிறுத்த அலையின் மத்தியில் இருக்கிறது, அமெரிக்க சமூகத்தில் மேலாதிக்கம் செய்கின்ற வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்ற வாரத்தில் மில்லியன் கணக்கான மாணவர்கள் வீதிகளில் இறங்கினர்.
சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பு இவ்வாறு வளர்ந்து செல்வதற்கு, முன்னெப்போதையும் விட பகிரங்கமாக எதேச்சாதிகார மற்றும் சர்வாதிகார ஆட்சி வடிவங்களை நோக்கி நகர்வதன் மூலமாக ஐரோப்பாவின் ஆட்சியாளர்கள் பதிலிறுத்துக் கொண்டிருக்கின்றனர்.
உன்மையில், அரசியல் எதிர்ப்பின் மீதான அடக்குமுறையானது அதன் மிக நேரடியான வடிவத்தை இணையத் தணிக்கையை நோக்கிய அதன் முனைப்பில் —தொழில்நுட்ப நிறுவனங்களது சேவைகளில் “வன்முறை”யான மற்றும் “தீவிரவாத” உள்ளடக்கம் பதிவிடப்படுவதற்கு அந்த நிறுவனங்களை குற்றவியல்ரீதியாகப் பொறுப்பாக்குகின்ற வரிசையான சட்டங்கள் ஐரோப்பா மற்றும் அதன் உறுப்பு நாடுகள் முழுமையிலும் முன்தள்ளப்பட்டு வருகின்றன— எடுக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியம் அதிகமான அளவில் உடையும் நிலைக்கு சென்றுகொண்டிருகையில், அதன் உறுப்பு அரசாங்கங்கள் ஒரு போலிஸ் அரசை கட்டியெழுப்புவதான பிரச்சினையில் முன்னெப்போதினும் நெருங்கி ஒத்துழைத்து வருகின்றன.
சென்ற வெள்ளிக்கிழமையன்று, ஜேர்மனியின் உள்துறை அமைச்சரான ஹோர்ஸ்ட் ஸீஹோஃபர், பதவிக்கு வந்த பின்னர் நாடாளுமன்றத்தில் அவர் பேசிய முதல் பேச்சில், போலிஸ்-அரசு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கு வாக்குறுதியளித்தார். “ஐரோப்பிய மட்டத்தில், பல்வேறு தரவுத்தளங்களையும் ஒருங்கிணைப்பதற்கு நம்மால் இயன்ற அனைத்தையும் நாம் செய்தாக வேண்டும், அப்போது தான் நமது உளவு முகமைகள் மிகத் துரிதமாக செயல்பட்டு தங்கள் இலக்குகளை சாதிக்க முடியும்” என்று அவர் தெரிவித்தார். ஸீஹோஃபர் சொன்னதன் அர்த்தமென்ன என்பதை இரண்டு நாட்களுக்குப் பிந்தைய புய்க்டெமொன்ட்டின் கைது காட்டுகிறது.
புய்க்டெமொன்ட் விடயத்தில் பேர்லினுக்கும் மாட்ரிட்டுக்கும் இடையிலான ஒத்துழைப்பு ஐரோப்பிய வரலாற்றில் மிக இருண்டதொரு காலகட்டத்தை நினைவுக்குக் கொண்டுவருகிறது. ஜேர்மன் அதிகாரிகள் இதற்கு முன்பும் ஒருமுறை, 1940 இல், கட்டலான் பிரதமர் ஒருவரை கைதுசெய்திருக்கின்றனர். ஜெனரல் பிராங்கோ ஜேர்மன் ஆதரவுடன் ஸ்பானியப் புரட்சியை நசுக்கி விட்டு தனது இரத்தக்களரியான சர்வாதிகாரத்தை ஸ்தாபித்ததன் பின்னர் பிரான்சுக்கு 1936 இல் தப்பியோடியிருந்த லூயிஸ் கொம்பானிஸ் ஐ ஹிட்லரின் இரகசிய போலிசான கெஸ்டபோ கைதுசெய்தது. கொம்பானிஸ் மாட்ரிட்டிடம் ஒப்படைக்கப்பட்டார், அங்கு அவர் சித்தரவதை செய்யப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத் தளமும் புய்க்டெமொன்ட்டின் கைதை கண்டனம் செய்வதோடு அவரை உடனடியாக விடுதலை செய்வதற்கும் கோருகின்றன. ஜேர்மன் அதிகாரிகளால் அவர் குறிவைக்கப்படுவது ஒரு எச்சரிக்கையாகும். ஒரு போலிஸ் அரசு நிலைநாட்டப்படுவதையும், இராணுவவாதமும் போரும் மீண்டும் மேலோங்குவதையும் தடுப்பதற்கு இருக்கக் கூடிய ஒரே வழி, சமூக சமத்துவமின்மை, சர்வாதிகாரம் மற்றும் போர் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஐரோப்பிய மற்றும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கு ஒரு சோசலிச இயக்கத்தை அபிவிருத்தி செய்வது மட்டுமே ஆகும்.