Print Version|Feedback
German Socialist Equality Party demands immediate release of Carles Puigdemont
கார்லஸ் புய்க்டெமொன்ட்டை உடனடியாக விடுதலை செய்ய ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி கோருகிறது
By the Sozialistische Gleichheitspartei
26 March 2018
கார்லெஸ் புய்க்டெமொன்ட் ஐ ஜேர்மன் அதிகாரிகள் கைது செய்ததை சோசலிச சமத்துவக் கட்சி (The Sozialistische Gleichheitspartei - SGP) கண்டனம் செய்வதோடு அவரை உடனடியாக விடுதலை செய்யக் கோருகிறது. கட்டலோனியாவின் முன்னாள் பிராந்திய முதல்வரான இவர் ஞாயிறன்று காலை ஷிலிஸ்விக்-ஹோல்ஸ்ரைன் (Schleswig-Holstein) மாநிலத்தின் அதிவேக நெடுஞ்சாலையில் ஜேர்மன் கூட்டரசாங்க போலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நொயுமுன்ஸ்ரர் (Neumünster) நகரின் ஒரு இடத்தில் தடுத்து வைக்கப்பட்டார்.
புய்க்டெமொன்ட் ஜேர்மன் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டது ஒரு எதேச்சாதிகார ஆட்சியின் குணாம்சமான, ஒரு தன்னிச்சையான நீதித்துறை செயலாகும். கட்டலான் சுதந்திர இயக்கத்தின் மீது ஒரு கொடூரமான ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் மாட்ரிட் ஆட்சியின் அமலாக்க அதிகாரிகளாக ஜேர்மன் அரசாங்கமும் நீதித்துறையும் சேவை செய்து கொண்டிருக்கின்றன.
புய்க்டெமொன்ட் எந்தக் குற்றமும் இழைக்காத நிலையில், முழுக்க அரசியல் காரணங்களுக்காக பின்தொடரப்படுகிறார். ஸ்பானிய உச்ச நீதிமன்றம், வெள்ளியன்று, கட்டலான் உயர்-நிலை அரசியல்வாதிகள் 12 பேருடன் சேர்த்து, இவர் மீதும், கலகக் குற்றம்சாட்டியது. முந்தைய தேர்தலில் அவர்கள் பிரச்சாரம் செய்த ஒரு வாக்குறுதியான கட்டலான் சுதந்திரத்திற்கான ஒரு கருத்துக்கணிப்பை அவர்கள் நடத்தியதில் இருந்து இந்த குற்றச்சாட்டு எழுந்திருந்தது. இன்று வரையிலும், 25 கட்டலான் அரசியல்வாதிகள் தலா 30 ஆண்டு கால சிறையை எதிர்நோக்கியிருக்கின்றனர்.
புய்க்டெமொன்ட்டின் கைது கடந்த காலத்தின் ஒரு துயரகரமான அத்தியாயத்தை நினைவுக்குக் கொண்டுவருகிறது. கட்டலான் பிரதமர் ஒருவரை ஜேர்மன் அதிகாரிகள் கைதுசெய்வது இது முதன்முறையல்ல. 1940 ஆகஸ்டில், பிரான்சில், உள்நாட்டுப் போரின் போது ஹிட்லரின் கூட்டு பிராங்கோவிற்கு எதிராகப் போராடிய லூயிஸ் கொம்பானிஸ் ஐ நாஜி ஆட்சியின் கீழ் இருந்த ஜேர்மன் இரகசிய பொலிஸ் கெஸ்டப்போ கைதுசெய்தது. அவர் மாட்ரிட் இடம் ஒப்படைக்கப்பட்டு, அங்கு அவர் சித்தரவதை செய்யப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
புய்க்டெமொன்ட்டும் கூட தீவிர பின்விளைவுகளுக்கு முகம்கொடுக்கின்ற ஒரு அரசியல் கைதியாக இருக்கிறார் என்ற உண்மை சந்தேகத்திற்கு இடமற்றதாகும். “ஜேர்மனி அதன் முதல் அரசியல் கைதியைக் கொண்டிருக்கிறது” என்ற தலைப்பில் Süddeutsche Zeitung இல் வெளியான ஒரு கருத்துரை, மாட்ரிட், “சிறைகள் மற்றும் அபராதங்களைக் கொண்டு ஒரு ஜனநாயக வெகுஜன இயக்கத்தை ஒன்றுமில்லாது செய்வதற்கு” முயற்சி செய்கிறது என்பதை ஒப்புக்கொண்டது. “ஸ்பானிய நீதித்துறையின் கடுமையான நிலைப்பாடு, கட்டலான் செயல்பாட்டாளர்களின் சமூக மற்றும் பொருளாதார இருப்பை அழிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது என்பது வெளிப்படை”.
பதவிக்கு வந்து பத்து நாட்களே முடிந்திருக்கும் நிலையில், ஜேர்மன் அரசாங்கம் இந்த ஜனநாயக-விரோதக் கொள்கைக்கு புய்க்டெமொன்ட் கைது மூலமாக தனது முழு ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கிறது. உயர் அரசியல் மட்ட ஒப்புதல் இல்லாமல் கட்டலான் அரசியல்வாதியின் கைது நடந்திருக்க முடியும் என்பது கற்பனை பண்ணிப் பார்க்க முடியாததாகும். சென்ற அக்டோபரில், மரியானோ ரஹோயின் ஸ்பானிய அரசாங்கம் கட்டலான் சுதந்திரத்திற்கான கருத்துக்கணிப்பை கொடூரமான வன்முறையைக் கொண்டு ஒடுக்கியபோது, ஜேர்மன் அரசாங்கம் மாட்ரிட்டின் நடவடிக்கைகளை முழுமையாக வழிமொழிந்தது.
Focus இதழ் குறிப்பிடுவதைப் போல, ஸ்பானிய உளவுத்துறை எப்போதும் புய்க்டெமொன்ட்டை கண்காணிப்பின் கீழ் கொண்டிருந்தது. அவர்கள் ஜேர்மனியின் உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஜேர்மன் கூட்டரசாங்க குற்றப் புலனாய்வு அமைப்புக்கு (Federal Criminal Bureau) தகவல் தெரிவித்திருந்தனர். பின்லாந்தில் ஒரு மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு ஸ்வீடன் மற்றும் டென்மார்க் வழியாக பெல்ஜியத்திற்கு காரில் திரும்பிக் கொண்டிருந்த புய்க்டெமொன்ட் ஜேர்மன் எல்லையைத் தாண்டி வந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டார்.
ஜேர்மனியின் மாபெரும் கூட்டணியானது ஸ்பானிய அரசாங்கத்தை ஆதரிக்கிறது என்றால் அதன் காரணம் அத்தனை சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பையும் ஒடுக்கும் அதன் நோக்கத்தில் இது முழு உடன்பாடு கொண்டிருக்கிறது என்பதாலாகும். போலிஸை வலுப்படுத்துவது, உளவு முகமைகளை விரிவுபடுத்துவது மற்றும் ஐரோப்பாவை ஒரு பெரும் ஆயுதபாணியான கோட்டையாக மாற்றுவது ஆகியவை ஜேர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சியினருக்கும் பழமைவாதக் கட்சிகளுக்கும் இடையில் எட்டப்பட்டிருக்கும் கூட்டணி உடன்பாட்டின் ஒரு கணிசமான பகுதியாக இருக்கிறது.
ஒடுக்குமுறை அரசு எந்திரத்தை இவ்வாறு வலுப்படுத்துவது கட்டலான் பிரிவினைவாதிகள் -மாட்ரிட்டுடன் அவர்களது மோதல்கள் இருப்பினும் அவர்களும் முற்றிலும் ஒரு முதலாளித்துவ வேலைத்திட்டத்தையே முன்னெடுக்கின்றனர்- போன்ற இயக்கங்களுக்கு மட்டும் செலுத்தப்படுவதற்காக அல்ல. அவர்களது பிரதான இலக்கு தொழிலாள வர்க்கமாகும். ஐரோப்பா முழுமையாகவும் மற்றும் அமெரிக்காவிலும் சமூக மோதல்களும் வர்க்கப் போராட்டங்களும் பெருகிச் செல்கின்ற சூழலில் தான் புய்க்டெமொன்ட்டின் கைது நடந்தேறியுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பாக, பார்சிலோனாவில் 45,000 பேர் கட்டலான் சுதந்திரத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினர், ஞாயிறன்று மாலை, புய்க்டெமொன்ட் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து 55,000 பேர் வீதிகளில் இறங்கினர். பிரான்சில், இரயில்வே தொழிலாளர்களும் பொதுச்சேவைத் துறை தொழிலாளர்களும் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் தொழிலாளர் சந்தை சீர்திருத்தங்களுக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்து கொண்டிருக்கின்றனர். ஜேர்மனியில், தொழிற்துறையில் நடைபெற்ற வேலைநிறுத்தங்களைத் தொடர்ந்து, பத்தாயிரக்கணக்கான பொதுச்சேவைத் துறை தொழிலாளர்கள் எச்சரிக்கை வேலைநிறுத்தங்களில் இப்போது பங்குபெற்று வருகின்றனர். அமெரிக்காவில், வியட்நாம் போருக்குப் பிந்தைய மிகப்பெரும் மாணவர் ஆர்ப்பாட்டங்கள் வார இறுதியில் நடைபெற்றன. அமெரிக்காவுடன் ஒரு வர்த்தகப் போர் அபிவிருத்தியடைகிறதான நிலைமைகள், பெருகும் போர் அபாயம் மற்றும் அதன் தொடர்பிலான இராணுவப் பெருக்கம் ஆகிய நிலைமைகளின் கீழ், இந்த மோதல்கள் தீவிரமடைய இருக்கின்றன.
அதனால்தான் ஜேர்மன் அரசாங்கம் மரியானோ ரஹோயின் மக்கள் கட்சி (PP) அரசாங்கத்திற்கு -இதன் மூலங்கள் 1936 முதல் 1975 வரை ஸ்பெயினை ஆண்ட பிராங்கோ சர்வாதிகாரத்தில் அமைந்துள்ளன- தனது முழு ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த காலத்தில் போலவே, ஐரோப்பாவெங்கிலும் இருக்கும் அதி-வலது அரசாங்கங்கள் எதிர்ப்பின் அத்தனை வடிவங்களையும் கொடூரமாக ஒடுக்குவதற்காக பயங்கரத்தை அடிப்படையாகக் கொண்ட போலிஸ் அரசுகளை எழுப்புவதற்கு தொழிற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
சென்ற அக்டோபரில் நடந்த கருத்துவாக்கெடுப்பின் போது, ரஹோயின் சிறுபான்மை அரசாங்கம் அத்தனை திசைகளில் இருந்துமான அழுத்தத்திற்கு முகம்கொடுத்த நிலையில் அவர், வெறுக்கப்பட்ட சிவில் காவலர் (Guardia Civil) இராணுவ-போலிஸ் அதிகாரிகளை ஆயிரக்கணக்கில் கட்டலோனியாவுக்கு அனுப்பி ஒரு ஒடுக்குமுறையை நடத்தினார். மாட்ரிட்டால் திணிக்கப்பட்ட புதிய தேர்தலில் பிரிவினைவாதிகள் வெற்றிபெற்ற பின்னர், ஒரு புதிய பிராந்திய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவதை தடுப்பதற்காக, சாத்தியமான வேட்பாளர்களை அடுத்தடுத்து கைது செய்வதற்கு ரஹோய் உத்தரவிட்டார்.
இந்த ஒடுக்குமுறைக்கு பேர்லினின் முழு ஆதரவும் இருக்கிறது, ஏனென்றால் ஆளும் வர்க்கமானது அதன் பிற்போக்குத்தனமான கொள்கைகளுக்கு எழுகின்ற அத்தனை சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பையும் ஒடுக்குவதற்கு விரும்புகிறது. புய்க்டெமொன்ட்டின் கைது ஜேர்மனியிலும் மற்றும் ஐரோப்பாவெங்கிலும் போலிஸ் அரசு நடவடிக்கைகள் அமலாக்கப்படுவதுடன் நேரடியாக தொடர்புடையதாகும்.
கார்லஸ் புய்க்டெமொன்ட் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி மீண்டும் வலியுறுத்திக் கோருவதோடு, ஒரு எதேச்சாதிகார ஆட்சி ஸ்தாபிக்கப்படுவதை துணிச்சலுடன் எதிர்ப்பதற்கு தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் உண்மையான அக்கறையுடைய புத்திஜீவிகளை முன்வருமாறு அது அழைப்பு விடுக்கிறது.