Print Version|Feedback
Political warfare in Washington enters new stage following firing of former FBI deputy director
மத்திய புலனாய்வுத்துறை முன்னாள் துணை இயக்குனர் பதவிநீக்கத்தைத் தொடர்ந்து வாஷிங்டனில் அரசியல் மோதல் புதிய கட்டத்தில் நுழைகிறது
Patrick Martin
19 March 2018
அமெரிக்க அரசு எந்திரத்திற்குள் நடந்து வரும் மூர்க்கமான அரசியல் மோதல்களின் கொந்தளிப்பு ஒரு புதிய முக்கிய கட்டத்தை எட்டி வருகிறது. ட்ரம்ப் நிர்வாகம், உளவுத்துறை எந்திரத்தின் குறிப்பிடத்தக்க பிரிவுகளுடன் பகிரங்கமாக மோதலில் ஈடுபட்டுள்ள அதேவேளையில், இந்த எந்திரத்தின் உயர்மட்ட பிரமுகர்கள் ஜனாதிபதியை பதவிநீக்கம் செய்ய முன்பினும் மிக நேரடியாக அழைப்பு விடுத்து வருகின்றனர்.
ட்ரம்பால் பல வாரங்களாக வலியுறுத்தப்பட்டு வந்த பின்னர், வெள்ளியன்று, அட்டர்னி ஜெனரல் ஜெஃப் செசன்ஸ் FBI இன் முன்னாள் துணை இயக்குனர் ஆண்ட்ரூ மக்கேப் ஐ பதவிநீக்கம் செய்தார். ட்ரம்ப் வெள்ளை மாளிகையின் பல மாதகால தாக்குதல்களுக்குப் பின்னர், ஜனவரியில் மக்கேப் துணை இயக்குனராக பதவி இறக்கப்பட்டிருந்தார், வரும் ஞாயிற்றுக்கிழமை 50 வயதை எட்டி, ஓய்வூ பெற தகுதியடையதாக இருந்த நிலையில், அதுவரையில் பெயரளவில் வேலையில் தொடர்வதற்காக அவர் கூடுதல் விடுப்பைப் பயன்படுத்தி வந்தார்.
ஆனால், FBI இன்ஸ்பெக்டர் ஜெனரலின் இன்னும் நிறைவு செய்யப்படாத ஓர் அறிக்கையிலிருந்து ஒரு பந்தியை செசன்ஸ் பயன்படுத்திக் கொண்டார், அது 2016 தேர்தல் பிரச்சாரத்தின் போது கிளிண்டன் அமைப்பு தொடர்பான FBI புலனாய்வு குறித்து, பத்திரிகைகளுக்கு தகவல்களைக் கசியவிட்டதன் மூலம் மக்கேப் முறைகேடு குற்றம் இழைத்துள்ளதாக குறிப்பிடுகிறது.
உளவுத்துறை எந்திரத்தின் பெரும்பான்மையினரது குரலாக, முன்னாள் சிஐஏ இயக்குனர் ஜோன் பிரென்னென், மக்கேப் பணிநீக்கத்திற்கு அசாதாரண சீற்றத்துடன் ஓர் அறிக்கையில் பதிலளித்தார். அவர் ட்ரம்புக்கு சனியன்று ட்வீட் செய்தார், “பணத்திற்கு விலைபோன உங்களின் தன்மை, தார்மீக ஒழுங்கீனம், மற்றும் அரசியல் மோசடி முழு அளவில் வெளியே தெரியவரும்போது, உங்களுக்குரிய சரியான இடத்தை ஒரு வெட்கக்கேடான வாய்வீச்சாளராக வரலாற்றின் குப்பையில் பெறுவீர்கள். நீங்கள் ஆண்டி மக்கேப் ஐ பலிக்கடா ஆக்கலாம், ஆனால் உங்களால் அமெரிக்காவை அழிக்க முடியாது… உங்களை அமெரிக்கா வெல்லும்,” என்றார்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இரகசிய நடவடிக்கைகளை திட்டமிடுவதில், ஒழுங்கமைப்பதில் மற்றும் செயல்படுத்துவதில் பிரென்னென் 30 க்கும் அதிகமான ஆண்டுகள் செலவிட்டுள்ளார் என்கின்ற நிலையில், ட்ரம்ப் க்கு எதிரான அவரது அச்சுறுத்தல்களை மிக அதிக முக்கியத்துவத்துடன் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. அமெரிக்க இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் பெரும் பிரிவால், என்னதான் நடைமுறை சிக்கல்கள் இருந்தாலும், ட்ரம்பை பதவியிலிருந்து நீக்குவதற்கு அழுத்தமளிப்பதை தவிர வேறெந்த மாற்றீடும் காண முடியவில்லை, மேலும் இதற்கு ஜனநாயகக் கட்சியின் ஆதரவும் உள்ளது.
ஜனநாயகக் கட்சியின் செனட் சபை தலைவர் சார்ல்ஸ் ஷ்சூமர் கடந்த ஆண்டு கூறுகையில், ஜனநாயகக் கட்சியாளராக இருக்கட்டும் அல்லது குடியரசுக் கட்சியாளர் ஆகட்டும் எந்த அரசியல்வாதியும் CIA மற்றும் FBI உடன் மோதலுக்கு செல்ல விரும்பவில்லை என்றார்: “உளவுத்துறை சமூகத்தை எடுத்துக் கொள்ளுங்கள் — ஞாயிற்றுக்கிழமையிலிருந்து உங்களுக்கு பதிலடி கொடுக்க அவர்களுக்கு ஆறு வழிகள் உள்ளன,” என்றார். ஒபாமாவின் முன்னாள் ஐ.நா. தூதர் சமந்தா பௌவர் சனியன்று இதே சிந்தனையை எதிரொலித்து, “ஜோன் பிரென்னனை உதாசீனம் செய்வது நல்ல யோசனையாக இருக்காது,” என்று ட்வீட் செய்தார்.
மிகவும் அவமானப்படுத்தக் கூடிய சூழலின் கீழ் மக்கேப் ஐ வெளியேற்ற செசன்ஸ் நகர்ந்த வேகம், அந்த முதலாளித்துவ அரசின் உயர்மட்ட அடுக்குகளுக்குள் நிலவும் கடுமையான பழி உணர்ச்சிக்கு சான்று பகிர்கிறது. மேலும் 2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா தலையிட்டது என்ற குற்றஞ்சாட்டு மீது, சிறப்பு விசாரணையாளர் ரோபர்ட் மியுலெர் நடத்தி வரும் புலனாய்வின் அதிகரித்த அழுத்தத்தால் ட்ரம்ப் முகாமில் நிலவும் பதட்டத்தையும் இது எடுத்துக்காட்டுகிறது.
ட்ரம்ப் அமைப்புகளின் ஆவணங்களையும், ரஷ்ய முதலீட்டாளர்களுடனான நிதி உறவுகள் மீது கவனம் செலுத்தி வருபவராக செய்திகளில் கூறப்படும் அவர் மகன்கள் டொனால்ட் ஜூனியர் மற்றும் எரிக்கின் இப்போதைய வழிகாட்டுதலின் கீழ், ட்ரம்பின் பில்லியன்-டாலர் மதிப்பிலான ரியல்எஸ்டேட் மற்றும் விளம்பர சாம்ராஜ்ஜியத்தை நிர்வகிக்கும் வணிக நிறுவனங்களின் ஆவணங்களையும் கடந்த வாரத்தில் தான், மியுலெர் ஆணை பிறப்பித்து கோரியிருந்தார். மியுலெர் ஜனாதிபதியை விசாரணைக்கு உட்படுத்தும் ஒரு முன்மொழிவை நோக்கிய மற்றொரு படியாக, வெள்ளை மாளிகைக்கே கேள்விகளின் ஒரு பட்டியலையும் அனுப்பி இருந்தார்.
ட்ரம்பின் தனிப்பட்ட வழக்கறிஞர்களில் ஒருவரான John Dowd, மக்கேப் பணிநீக்கத்திற்குப் பின்னர், உடனடியாக மியுலெர் புலனாய்வை முடிவுக்குக்கு கொண்டு வருமாறு செசன்ஸ் மற்றும் அவர் துணை அதிகாரி Rod Rosenstein ஐ வலியுறுத்தி ஓர் அறிக்கை விடுத்தார். முதல்முறையாக மியுலெரை கண்டிப்பதற்காக ட்ரம்ப் ஒரு ட்வீட் செய்தியில் ஒத்துப் பாடியதுடன், அவர் அந்த புலனாய்வை ஒரு "பழிவாங்கும் வேட்டை" என்று குறிப்பிட்டார், இது ஜனாதிபதியால் பணிநீக்கம் செய்யப்பட இருக்கின்ற அடுத்த உயர்மட்ட அதிகாரி மியுலெராக இருக்கலாம் என்று பத்திரிகைகள் ஊகிக்க இட்டுச் சென்றது.
கடந்த மூன்று நாட்களில் வந்துள்ள அறிக்கைகள் மற்றும் நடவடிக்கைகள் போல இதுமாதிரியானவற்றுக்கு சமீபத்தில் வரையில் எந்த சமாந்தரமும் இல்லை. இதற்கு சமாந்தரமான பதட்ட அளவுகளைக் காண வேண்டுமானால் ஒருவர் அமெரிக்க உள்நாட்டு போருக்கு முந்தைய காலத்திற்கு தான் பின்னோக்கி செல்ல வேண்டியிருக்கும், முழு அளவிலான இராணுவ மோதலாக வெடிப்பதற்கு முன்னர் 1850 களின் இறுதியில் காங்கிரஸ் சபைகளில் இது வன்முறையாக வெடித்தது.
ஆனால் உள்நாட்டு போருக்கு முந்தைய காலகட்டத்தைப் போலன்றி, இப்போது இந்த மோதல்களில் எந்த முற்போக்கான தரப்பும் இல்லை. ட்ரம்பும் சரி பிரென்னெனும் சரி, வெளியுறவு கொள்கை தொடர்பாக, குறிப்பாக சிரியாவின் உள்நாட்டு போர் விடயத்திலும், இன்னும் பொதுவாக கூறுவதானால் ரஷ்யாவை நோக்கியும் பிளவுபட்ட, ஆளும் வர்க்கத்தின் சமஅளவில் குற்றகரமான கன்னைகளைப் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள்.
பிரென்னென் மற்றும் ஜனநாயகக் கட்சியினரும், சிரியாவில் அமெரிக்க தலையீட்டின் தோல்வியாலும், ஈரானின் ஆதரவு பெற்ற ஜனாதிபதி பஷர் அல்-அசாத் அரசாங்கத்தையும் மற்றும் ரஷ்யாவையும் எதிர்த்து போராட சிஐஏ ஆல் ஆயுதமேந்த செய்யப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களை ட்ரம்ப் வெளிப்படையாக கைவிட்டிருப்பதாலும், கடுப்பாகி உள்ள இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் சக்தி வாய்ந்த பிரிவுகளுக்காக பேசுகிறார்கள். உலகின் இரண்டாவது மிக பலமான அணுஆயுத சக்தியான ரஷ்யாவுடன் ஏற்படக்கூடிய பகிரங்கமான இராணுவ மோதல் அபாயத்தைப் பொருட்படுத்தாமல், மேற்கொண்டும் சிரிய படுகொலைகளுக்கு அவர்கள் அழுத்தமளிக்க விரும்புகின்றனர்.
பிரிட்டனில் வசிக்கும் ரஷ்ய இரட்டை உளவாளிக்கு விஷமளிக்கப்பட்டதற்குப் பின்புலத்தில் ரஷ்யா இருப்பதாக கூறப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் மீது, பிரிட்டிஷ் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட, இட்டுக்கட்டுப்பட்ட சமீபத்திய ஆத்திரமூட்டல், இந்த போர் முனைவைப் பரந்தளவில் தீவிரப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ட்ரம்பும் சரி, குடியரசுக் கட்சியினரும் சரி உலகெங்கிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு சமஅளவில் பொறுப்பேற்றுள்ளனர், ஆனால் ஈரான் மற்றும் வட கொரியா (இதற்கு பின்னணியில், சீனா) மீது அதிகமாகவும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் உடனான முற்றுமுதலான மோதல் மீது குறைவாகவும் ஒருங்குவிந்துள்ளனர். உளவுத்துறை முகமைகளுக்குள் அவரின் சொந்த ஆதரவாளர்களின் கூட்டத்தைக் கொண்டுள்ள ட்ரம்ப், அவரைச் சுற்றி ஒரு தனிப்பட்ட கும்பலை ஒன்றுதிரட்ட முனைந்து வருகிறார், இது முன்னாள் இராணுவ அதிகாரியும் காங்கிரஸ் உறுப்பினருமான சிஐஏ இயக்குனர் மைக் பொம்பியோவை, றெக்ஸ் ரில்லர்சனுக்கு பதிலீடாக வெளியுறவுத்துறை செயலராக மேலுயர்த்தியதிலும், மற்றும் ஒரு சித்திரவதையாளராக முன்வரலாறு கொண்ட துணை சிஐஏ இயக்குனர் ஜினா ஹாஸ்பெல்லை உளவுத்துறை முகமைக்கு தலைமை கொடுக்க மேலுயர்த்தி இருப்பதிலும் ஆதாரபூர்வமாக வெளிப்படுகிறது.
அமெரிக்க ஆளும் உயரடுக்கிற்குள் தீவிரமடைந்து வரும் மோதல், பெருநிறுவன-நிதிய தன்னலக் குழுக்களின் எல்லா கன்னைகளது நலன்களையும் அச்சுறுத்துகின்ற, அதிகரித்து வரும், தொழிலாள வர்க்க இயக்கத்தின் பின்புலத்திற்கு எதிர்தரப்பில் வருகிறது. மேற்கு வேர்ஜினிய ஆசிரியர்களின் ஒன்பது நாள் வேலைநிறுத்தத்திற்குப் பின்னர், நாடெங்கிலுமான கல்வியாளர்கள் வெளிநடப்புகளுக்கு அழைப்பு விடுத்தும், ஒழுங்கமைத்தும் வருகின்றனர். தொழிற்சங்கங்களின் இரும்புபிடியிலிருந்து முறித்து கொண்டு சுதந்திரமடைவதில் வெற்றி பெறும் எந்தவொரு போராட்டமும், தொழிலாள வர்க்க கோபம் மற்றும் எதிர்ப்பை வெள்ளமென கட்டவிழ்த்துவிடும்.
அடிமட்டத்திலிருந்து வரும் ஓர் இயக்கமும், உயர்மட்டத்தில் கடுமையான மோதலும் ஒருசேர வந்திருப்பதுதான், அமெரிக்க அரசியல் நிலைமைக்கு இதுபோன்றவொரு வெடிப்பார்ந்த தன்மையை வழங்குகிறது.
எச்சரிக்கை வழங்க வேண்டியது அவசியமாகும்: தொழிலாள வர்க்கம் அதன் சொந்த சுயாதீனமான முன்னோக்கை முன்னிறுத்த வேண்டும். வாஷிங்டனின் எந்தவொரு கன்னையிலும் அதற்கு கூட்டாளிகள் கிடையாது. அடுத்து வரவிருக்கும் காலத்தில் இவற்றில் ஏதேனும் ஒரு கன்னை மேலோங்கும் சம்பவத்தில், அது ஜனநாயகத்தின் வெற்றியைப் பிரதிநிதித்துவப்படுத்தாது. 2018 காங்கிரஸ் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களாக "முன்னாள்" சிஐஏ மற்றும் இராணுவ உளவுத்துறை முகவர்கள் பலமான பாத்திரம் வகித்திருப்பதில் இருந்தே எடுத்துக்காட்டப்பட்டுள்ளதைப் போல, ஜனநாயகக் கட்சியினர் திரும்ப அதிகாரத்திற்கு வந்தாலும் அது சிஐஏ மற்றும் பென்டகனின் கட்சியாக அவர்கள் வகிக்கவிருக்கும் பாத்திரத்தை மட்டுமே உறுதிப்படுத்தும். (பார்க்கவும்: “சிஐஏ ஜனநாயகக் கட்சியினர்")
அனைத்திற்கும் மேலாக, தொழிலாள வர்க்கம் இந்த இலாபகர அமைப்புமுறை மற்றும் முதலாளித்துவ அரசாங்கத்திற்கு எதிராக பரந்த போராட்டங்களுக்குள் வருகையில், ஆளும் உயரடுக்கின் இரண்டு கன்னைகளும் அடிமட்டத்திலிருந்து எழும் அச்சுறுத்தலை நிதியியல் பிரபுத்துவம் முகங்கொடுக்கும் பிரதான அபாயமாக பார்க்கும். உளவுத்துறை முகமைகளுக்கு வழிகாட்டி வரும் ஜனநாயகக் கட்சிதான், இணையத்தைத் தணிக்கை செய்யவும் மற்றும் "வேறுபட்ட" கருத்துக்களை மற்றும் அரசியல் போக்குகளை ஒடுக்கவும் ஆக்ரோஷமான நடவடிக்கைகளைக் கோருவதில் முன்னணிப் பாத்திரம் வகிக்கிறது.
பெருவணிகங்கள், ஜனநாயகக் கட்சி அல்லது குடியரசுக் கட்சியின் அனைத்து பிரிவுகளிடமிருந்தும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை நிறுவுவதும் மற்றும் முதலாளித்துவ அரசின் அமைப்புகளை —அனைத்திற்கும் மேலாக ஒடுக்குமுறை இராணுவ-உளவுத்துறை எந்திரத்தை— உழைக்கும் மக்களின் ஜனநாயகக் உரிமைகளுக்கு மிக முக்கிய ஆபத்தாக உணர வைப்பதுமே முக்கிய பிரச்சினையாகும்.
கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:
மார்ச் மாத ஏழு நாட்கள்: ட்ரம்ப் நிர்வாகமும், அமெரிக்க ஜனநாயகக்த்தின் முறிவும்
[15 March 2018]
அரண்மனை சதியா அல்லது வர்க்கப் போராட்டமா: வாஷிங்டனின் அரசியல் நெருக்கடியும் தொழிலாள வர்க்கத்தின் மூலோபாயமும்
[13 June 2017]