Print Version|Feedback
Sri Lankan workers’ inquiry meeting to announce findings on garbage disaster
இலங்கையில் குப்பை மேட்டு பேரழிவு பற்றிய விசாரணை முடிவுகளை அறிவிப்பதற்காக தொழிலாளர் விசாரணைக் கூட்டம்
By the Independent Workers Inquiry Committee
17 March 2018
சுயாதீன தொழிலாளர் விசாரணைக் குழு (சு.தொ.வி.கு.), மீதொடமுல்லவில் கடந்த ஆண்டு குப்பைமேடு சரிந்ததில் ஏற்பட்ட பேரழிவு சம்பந்தமான அதன் விசாரணை முடிவுகளை அறிவிப்பதற்காக, கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் ஏப்ரல் 1 அன்று பிற்பகல் 2 மணிக்கு கூட்டமொன்றை நடத்தவுள்ளது. கொழும்பின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள மிகப் பிரமாண்டமான குப்பைமேடு ஏப்ரல் 14 அன்று சரிந்து வீழ்ந்ததில், குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டனர். 146 வீடுகள் கிட்டத்தட்ட முழுமையாக அல்லது பகுதியாக அழிக்கப்பட்டுவிட்டன. சுமார் 200 ஏழை குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.
இந்த சமூகக் குற்றங்களுக்கான காரணங்களை விசாரிக்க, சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) முன்முயற்சியில் இந்த சுயாதீன தொழிலாளர் விசாரணைக் குழு கடந்த மே மாதம் ஸ்தாபிக்கப்பட்டது. ஒரு தசாப்தத்திற்கு முன்னர் கொழும்பு நகராட்சி பகுதியில் இருந்து கழிவுப்பொருட்களை கொண்டுவந்து கொட்டத்தொடங்கியதில் இருந்தே மீதொடமுல்லவில் இந்த குப்பைக் குவியல் உருவானது.
உள்ளூர் மக்கள் ஆரம்பத்தில் இருந்தே இந்த குப்பைமேட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்கள் சுகாதார அபாயங்கள் மற்றும் பிற ஆபத்துக்கள் பற்றி எச்சரிக்கை செய்தனர். ஆட்சியில் இருந்த இலங்கை அரசாங்கங்கள் இந்த வேண்டுகோளை அலட்சியம் செய்தது மட்டுமன்றி, ஆர்ப்பாட்டம் செய்த பிரதேசவாசிகளை தாக்குவதற்கு பொலிசை அணிதிரட்டின.
கடந்த ஆண்டு நடந்த இந்த துன்பியலான சம்பவத்தைத் தொடர்ந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த பரந்த வெகுஜன எதிர்ப்பை சிதறடிக்கும் முயற்சியில், இந்த பேரழிவைப் பற்றி "விசாரிக்க" ஒரு விசேட ஆணைக் குழுவை நியமித்தார். கடந்த மாதம் சிறிசேனவுக்கு இந்த ஆணைக் குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. ஆனால் அதன் கண்டுபிடிப்புகள் வெளியிடப்படவில்லை.
அரசாங்கம் தனது குற்றவியல் அலட்சியத்தை மூடி மறைப்பதிலேயே அக்கறை கொண்டுள்ளது. ஊடகங்கள் மற்றும் ஆணைக்குழு அறிக்கையை தயாரித்தவர்களும் இந்த பேரழிவிற்கான அடிப்படை சமூக மற்றும் அரசியல் காரணங்களை புறக்கணித்துள்ளனர்.
மீதொடமுல்ல துயரமானது சர்வதேச ரீதியில் உழைக்கும் மக்களுக்கு எதிரான பல சமூக குற்றங்களில் ஒன்றாகும்.
கடந்த மார்ச் மாதம் எத்தியோப்பியாவில் அடிஸ் அபாபாவில் ஒரு குப்பைமேடு சரிந்து வீழ்ந்ததில் 115 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 80 பேரை இன்னமும் காணவில்லை.
கடந்த ஜூன் மாதம், லண்டனில் உள்ள கிறீன்ஃபெல் மாடிக் குடியிருப்புக்கு வெளியில் தீப்பற்றக்கூடிய சுவர்காப்பில் நெருப்பு பற்றியதால், குறைந்த பட்சம் 79 பேர் கொல்லப்பட்டனர். ஆபத்தான சுவர்க்காப்பகத்தை பயன்படுத்தியமை உள்ளூராட்சி சபையின் செலவு வெட்டின் ஒரு பாகமாகும்.
அதேபோல், அமெரிக்காவின் மிச்சிகனில் ஃபிளின்ட் நகரத்தில், உள்ளூர் குடிநீர் விநியோகத்தில் மாசுபட்ட ஆற்று நீரை பயன்படுத்துவதன் மூலம் நகர அதிகாரிகள் பல்லாயிரக்கணக்கான மக்களின் ஆரோக்கியத்தை ஆபத்துக்குள்ளாக்கியுள்ளன.
செலவு குறைப்பு மற்றும் உழைக்கும் மக்களதும் ஏழைகளதும் தலைவிதி பற்றிய அலட்சியமும் இந்த துயரங்களை உருவாக்கியுள்ளன. எதிர்ப்புக்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு வேண்டுகோள் விடுப்பதும் இந்த நிலைமையை மாற்றாது.
மீதொடமுல்ல பேரழிவு பற்றிய சுயாதீன தொழிலாளர் விசாரணைக் குழு முழுமையான விசாரணையை நடத்தியது. விபத்தில் இருந்து தப்பியவர்களிடமிருந்து விரிவான தகவலை சேகரித்தல்; அதேபோல் கொழும்பில் குப்பைத்தொட்டி பிரச்சினைகள், சுகாதார பிரச்சினைகள் சுற்றுச் சூழல் பிரச்சினைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சர்வதேச அபிவிருத்திகளையும் ஆய்வு செய்தல்; ஆட்சியில் இருந்த இலங்கை அரசாங்கங்களின் பிரதிபலிப்புகள்; மற்றும் இந்த அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆளும் வர்க்கம் இலாயக்கற்றிருப்பது ஏன், என்பது போன்ற விடயங்களை தேடுவது இந்த விசாரணைக் குழுவின் வேலைகளில் அடங்கியிருந்தது.
சுயாதீன தொழிலாளர் விசாரணைக் குழு ஏப்ரல் 1 நடத்தவுள்ள கூட்டத்தில், அதன் விசாரணைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்து விரிவாக விளக்கமளிப்பதும் உள்ளடங்கியுள்ளது. இதன் பின்னர் ஒரு நீண்ட கேள்வி மற்றும் பதில் அமர்வு தொடரும். நாம் தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் அக்கறை கொண்ட அனைவரையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும், இந்த முக்கியமான கலந்துரையாடலில் பங்கேற்குமாறும் அழைக்கின்றோம்.
இடம்: கொழும்பு பொது நூலக கேட்போர் கூடம்
திகதி: 1 ஏப்ரல் 2018
நேரம்: பி.ப.2.00 மணி